மாம்பழப் புளிசேரி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 26, 2022
பார்வையிட்டோர்: 4,140 
 
 

(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பார்கவி மகிழ்ந்து மகிழ்ந்து பரிமாறினாள். மனசெல்லாம் அப்படி மலர்ந்து கிடந்தது. நுனி வாழை இலையில் ஆவி பறக்கும் சிவந்த நாடன் அரிசிச்சோறு, தொடுகறிக்கு பயிற்றங்காய்துவரன், முட்டைக்கோசு துவரன், நெய்மணக்கும் அவியல், எரிசேரி, ஓலன், காளன், பச்சடி, கிச்சடி, இஞ்சிப்புளி, கடு மாங்க, நாரங்க, என பரிமாறுவதற்குள் இலை நிறைந்து வழிய, ஓரத்தில் பப்படம், வாழைக்காய் வறுவல், சர்க்கரை உப்பேரி, சக்க வற்றல், என பரிமாறிவிட்டு, சம்பாரமாய் குடிக்க பச்சைமிளகாயும் கடுகும் கறிவேப்பிலையுமாய் மணக்கும் மோர்நீர் ஒரு டம்ளரில் வைத்துவிட்டு, நிமிர்ந்த நிமிடத்திலிருந்து கண்கொட்டாமல் பார்க்கிறாள்.

இருவருமே இளைஞர்கள்.

ஒருவர் ரஹீம். இன்னொருவர் ராமன்குட்டி. கேரளத்திலிருந்து சிங்கை வந்து ஒன்பது மாதங்களே ஆகியிருந்தது. ரஹீமுக்கு கப்பல் பட்டறையில் வெல்டர் பணி.

ராமன்குட்டிக்கு கட்டுமானத்தொழிலில் சூப்பர்வைசராக பணி.

ராகவன் நாயரின் அண்மைய காலத்து இலக்கிய சகாக்கள் போலும் என்பதற்குமேல் பார்கவிக்கு சிந்திக்க நேரமில்லை.

பொதுவாகவே சைவ உணவு என்பதால், பிறமொழி இனத்தவரை உணவுக்கு அழைக்கும் பழக்கம் ராகவன் நாயரிடம் இல்லை. சிங்கப்பூரில் அசைவம் இல்லாமல், ஏன் கடிச்சிக்க ஒரு துண்டு மீன் கூட இல்லாமல், எப்படி சாப்பிட, என்று சிக்கன் ரைஸுக்கு ஓடும் தோழிகள் இவளுக்கே கூட உண்டுதான்?

அப்படியிருக்க கேரளத்தின் அப்பட்டமான நாட்டுப்புறத்திலிருந்து வந்த இந்த இளைஞர்கள் நாடன் உணவை இப்படி ரசித்து ரசித்து உண்பது கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது.

பார்கவி விழுந்து விழுந்து உபசரித்தாள். மகிழ்ந்து மகிழ்ந்து பரிமாறினாள். பார்த்துப் பார்த்து இலை நிறையப் பரிமாறினாள்.

மணக்க மணக்க சமைத்த உணவை ரசித்து ருசித்து அவர்கள் உண்ட அழகைப் பார்க்க கண்கள் போதவில்லை. பொல பொல சுடு சோற்றில் பொன்மணலாய் வெள்ளிக்கரண்டியில் விட்ட நெய் விழுதை, பருப்புடன் பிசைந்து உருண்டை பிடித்து ஒரு உருளை.

அடுத்து கஷ்ணங்கள் பிசைந்து தொடுகறிகளில் ஒரு விள்ளல், அத்தோடு ருஜிக்கு பப்படத்தை எடுத்துக்கொண்டு மளுக்கென்று ஒரு கடி, மொரமொர வென்று சப்தத்தோடு அவியலில் ஒரு தொடுகை, எரிசேரியில் ஒரு இம்மிணி, துவரனில் ஒரு விள்ளல், பச்சடி கிச்சடியில் ஒரு சர்ர்ர் என பதனமாய் அவர்கள் சாப்பிட, பட்டுப் பட்டாய் கவளங்கள் அவர்கள் வாய்க்குள் போகும் அழகை பார்க்கப்பார்க்க நெஞ்சில் பால் சுரந்தது. பார்கவிக்கு வயிறெல்லாம் நிறைந்து குளிர்ந்து போனது.

அடுத்து “சாம்பார் சேச்சி,” என்று கேட்டபோதுதான் உணர்வே வந்தது. ஓடி ஓடிப் பரிமாறினாள்.

எரிசேரியில் தேங்காய் இன்னும் கொஞ்சம் வறுபட்டிருக்கலாம், என்றார்கள்.

“சாம்பாரில் காயம் மணம் சுண்டியிழுக்கிறதே சேச்சி,” அவியல் உக்கிரன்(அருமை), பச்சடியை விட கிச்சடி அள்ளிக்கொண்டு போகிறது நாவை, ஆஹா!”

அப்படியே துளும்பி ததும்பிப் போனாள் பார்கவி.

இப்பொழுது இஞ்சிக்கூட்டான், நாரங்கக்கறி, கடுமாங்க, காளன், ஓலன் என தொடுகறிகளை தொட்டுக்கொண்டு சப்பு கொட்டிக்கொண்டு சுவைக்கத் தொடங்கினார்கள்.

அடுத்து அடைப்பிரதமன்(பாயசம்).

சேச்சி, நாங்கள் இந்துக்கள் வீட்டு திருமணத்துக்குப்போவதே பிரதமன் (பாயசம்) குடிக்கத்தான் தெரியுமா?

“பருப்பு பிரதமன், சக்க (பலாப்பழ]பிரதமன், அடைப்பிரதமன் என எதையும் விட்டு வைப்பதில்லை. எனக்கு அவ்வளவு இஷ்டம் சேச்சி,” என்று ரஹீம் சொல்லச்சொல்ல பிரதமனை கரண்டியோடு கவிழ்த்தாள் பார்கவி.

பப்படத்தை நொறுக்கிப்போட்டு, மதுரக் கதலிப்பழத்தை பிசைந்து, குமித்துக்கூட்டி விரலொழுக ஒழுக பிரதமனைக் குடித்தார்கள்.

இனி “புளிசேரி சேச்சி,” என கேட்கு முன்னரே பார்கவி சுடு சாதத்தில் புளிசேரி விளம்பினாள். மூன்று வாய்க்குமேல், அவர்கள் நிமிர்ந்து பார்க்க, தனி மோர் வெண் பாலாய் இலையில் விட மோர்க் கலவையில் ஒரு இரண்டுவாய், பப்படத்தைக் கடித்துக்கொண்டு, ஓலனை, காளனை, பச்சடி, கிச்சடியை சுவைக்கத் தொடங்கினார்கள்.

அடுத்து பரங்கிக்காய் எரிசேரியில் சிறு விழுதைத்தொட்டு நாக்கில் இழுத்துவிட்டு, இரண்டு பெரிய டம்ளர் நிறைய தண்ணீர் குடித்தார்கள்.

சர்க்கரை உப்பேரியை மீண்டும் ஒரு கடி கடித்தார்கள். வாழைக்காய் வறுவலில் ஒரு விள்ளல் வாயில் அள்ளிப்போட்டுக்கொண்டார்கள்.

இன்னுமொரு கதலிப்பழம் பிய்த்து சாப்பிட்டார்கள். பாலும் சர்க்கரையிலும் வேவித்த (நேந்திரப்பழம்] செண்டப்பழம் ருசியாய் சுவைத்தார்கள்.

“ஆவ்” என்று அவர்கள் ஏப்பம் விடவில்லையே தவிர உச்சசுகம் கண்டாற்போல் அப்படி ஒரு திருப்தியில் அவர்கள் எழுந்த நிமிடம், பரவசத்தில் கண்கள் நிறைந்து விட்டது பார்கவிக்கு.

இவர்கள் வெறும் உணவுப்பிரியர்கள் அல்ல. உணவின் சுவை அறிந்த பரம ரசிகர்கள்.

பெண் எனும் அன்னபூரணியின் பூரணத்துவமே இப்படிப்பட்ட தேவதூதர்களின் முன் படையலை நிவேதனம் செய்வதில்தானே? பின் எதற்கு சமைப்பது?

பார்கவிக்கு அவர்களை மிகவும் பிடித்துப்போனது. பூமிக்கு வந்த அவதார மகன்களாய் அன்பொழுக கை துடைக்க டவலை எடுத்து வைத்துக்கொண்டு நின்றாள்.

அப்பொழுதும் ராகவன் நாயர் எழவில்லை. பார்கவிக்கு கோபம் தாங்கவில்லை. இன்னும் கூட்டானில் பாதிக்குமேல் அப்படியே இலையில் கிடந்தது.

“சாப்பிடும்போதும் கூட அப்படி என்ன யோசனை?” என்று பார்கவி கடுகடுத்ததைக்கூட உணரும் நிலையில் அவர் இல்லை. எங்கோ யோசனையில் சோற்றை இன்னமும் அளைந்து கொண்டிருந்தார். இலைக்கு முன்னால் அமரும்போது கூட இது என்ன அசமஞ்சம்?

அதற்குள் அதிதிகள் இருவரும் கைகழுவிக்கொண்டு வந்துவிடவே பார்கவியின் கோபம் அப்பொழுதுதான் உறைத்தது. ரசித்து சாப்பிடவேண்டும் அல்லது ருசித்து சாப்பிட வேண்டும். பின் எதற்கு பெண்ணாகப்பட்டவள் மாய்ந்து மாய்ந்து சமைப்பதாம்? இதுதான் பார்கவியின் சித்தாந்தம்!

ராகவன் நாயருக்கு சிரிப்பு வந்தது. ஈற்றடியில் எதுகையை வைக்க முடியாமல் போன கவிஞனின் இம்சையோடு மனைவியை ஏறிட்டார். இவள் சமையலில் தேவதைதான். இல்லையென்று யார் சொன்னது? அதற்காக சமைப்பதையெல்லாம் சாப்பிட்டு விட வேண்டும் என்று அடம் பிடிப்பது என்ன நியாயம்? வயது, உடல் உபாதை எதுவுமே இவளுக்கு ஞாபகம் வராதா? உடனே முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்வதாக்கும் ?

“சரி, சாயைக்கு இலையப்பம் செய் என்ன? உன்னுடைய இலையப்பத்துக்கு ஈடேது? என்று பரிவோடு கூற, பார்கவி ஒன்றும் மயங்கவில்லை.

ஹ்ம்ம்…. அப்புறம் என்று ராகவன் நாயர் பேச்சைத் தொடங்கினார். இளைஞர்கள் இருவரும் தெளிவாக இருந்தார்கள். கடந்த இரண்டு வாரங்களாக அவர்கள் விண்ணப்பித்த அதே வேண்டுகோள்தான்! திரும்பவும் அதையேதான் பேசினார்கள்.

மாம்பழப் புளிசேரி சிராங்கூன் சாலையில் உள்ள அவரது நாடக வகுப்பு வாரத்தில் மூன்று நாட்களுக்கு உண்டு. ஒருநாள் அவரைக் காண எதேச்சையாக அவர்கள் வந்தார்களா? இல்லை, இவரைப் பார்க்கவே மெனக்கெட்டு வந்தார்களா என்றெல்லாம் குசலம் கேட்கக் கூடத் தோன்றவில்லை.

அப்படி ஒரு ஆச்சரியத்தை பார்த்த மாத்திரத்தில் அவர்கள் அவருக்குத் தருவார்கள் என்பதை அவரே எதிர்பார்க்கவில்லை.

“சேட்டா, ஒரு அபேக்ஷ–[வேண்டுகோள்] ! என்று அவர்கள் இறுதியாக வேண்டுகோளை முன்வைத்தபோதும் மெய்ம்மறந்து அவர்களில் லயித்துப்போயிருந்த நிஷ்டையிலிருந்து விடுபடமுடியவில்லை .

நாடக இலக்கியத்தில் இந்த இளைஞர்களுக்கிருந்த அறிவு பிரமிப்பூட்டியது. ஸ்தானிஸ்லாவஸ்கி தொட்டு அல்காசி வரை அக்குவேறு ஆணிவேறாக அலசினார்கள்.

பனுவல் வகைமை உறவுச்சங்கேதத்தில் நாடகப்பனுவலுக்கும் அரங்கப்பனுவலுக்குமான பண்புக்கூறுகளாகட்டும். இசையில் தோற்கருவிகள், நரம்புக்கருவிகள், துளைக்கருவிகள், பெட்டிக்கருவிகள் போன்ற இசைக்கருவிகளாகட்டும். இல்லை நாடகமொழிச் சங்கேதமாகட்டும் அப்படி பிட்டுப்பிட்டு வைத்தார்கள். பரதநாட்டியம், கதகளி, யக்ஞகானம் போன்ற நிகழ்கலையின் வடிவபாவங்களிலும் அவர்களுக்குப் பரந்த அறிவு இருந்தது.

அதைவிட அதிசயம் அரங்கக் குறியீடின் கூறு இலக்கணம் இன்றும் கூட பலருக்குப் புதிராக இருக்க, சசூரின் மொழியியல், ரஷ்ய உருவவியல், லேவிஸ்ட்ராஸ், ரோலன் பார்த்தினின் இலக்கிய அமைப்பியல், கிழக்கு ஐரொப்பிய நாடக நிலைகள், ப்ரெஹ்டின் நாடககொள்கை, அம்பர்ட்டோ ஈக்கோவின் குறியியல், ஜி. சங்கரப்பிள்ளையின் நாடகமொழி, என அவர்கள் பேசப்பேச, ஒத்த அலைவரிசையில் பேச, இப்படி ஒரு ஆத்மாவுக்காக இவர்தான் எப்படி ஏங்கிப்போயிருக்கிறார், என்று பார்கவியே நெகிழ்ந்து போனாள். சமகால இலக்கியம் பற்றி பேசினால் கூட ஊடக பிரபலங்களைக் கருத்தில் கொண்டு அலட்டும் துக்கடாக்களைக் கண்டு கசந்துபோனவர் ராகவன்நாயர்.

இலக்கிய கபோதிகளே சிம்மாசன பம்மாத்தில் ஊறுகாயாக இலக்கியத்தை அடகு வைக்கும் அவலத்தில் இந்த பாமர இளைஞர்களின் தகவல் பெட்டகம் பிரும்மாண்டமாயிருந்தது.

ரஹீமும் ராமன்குட்டியும் சினிமாவில் அவர்கள் லட்சிய குறும்படம் எடுக்கும் ஆசையில் அசோசியட் டைரக்டராக சேர்ந்தவர்கள். சினிமா எனும் மிகப்பெரும் இமயத்தில் ஒரு துகளாகக்கூட அவர்களால் பிரகாசிக்கமுடியவில்லை. அசோசியட் டைரக்டர் என்ற ஹோதாவில் புறாவுக்கு கலர் அடிப்பதிலிருந்து, நடிகைகளுக்கு சமயத்தில் கூர் ஊக்கு சரிபார்த்து, மார்க்கச்சு செறிவாக்கி, சாப்பாட்டுத் தூக்கு சுமப்பதிலிருந்து, கூட்டுவதுவரை செய்தும், இவர்களை நம்பி ஒரு ஜீவியும் ஃபைனான்ஸ் செய்யத் தயாராயில்லை.

ரஹீமின் நிலை இதுவென்றால் ராமன்குட்டி எக்ஸ்ட்ரா சப்ளையர் பதவி கூட கூசாமல் செய்தவன் என்று சொல்லும் போதே தொண்டை கரகரத்தது.

என்ன இரவானால்தான் பிரச்சினை.

கோரஸ் நடனத்துக்கு வரும் பெண்குட்டிகளிலிருந்து இரவுக்கும் சப்ளை செய்வதிலிருந்து, அந்த பெண்களின் அட்டவணைக்குப் பின்னால் அலைய வேண்டியதைக்கூட புறங்கையால் தட்டிவிட்ட சோகமாய் அவனால் தொடரமுடிந்தது. ஆனால் அந்த கும்பலில் அவன் மிகவும் நேசித்த ஒரு பெண்ணையே காமிராமேனுக்கும் ஒரு இரவுக்கு தேவைப்பட்டபோது, அன்றே வெறுத்துப்போய் கிராமத்துக்கு ரயிலேறினான்.

ரஹீமும் இதற்காகவே காத்திருந்தாற்போல் கிராமத்துக்கே ஓடிவந்து விட்டான். பிறகுதான் இருவருக்குமே சினிமா “ஹராம்” ஆனது.

என்ன? ஆரம்பத்தில் கொஞ்சம் இழுத்துப் பிடிக்க வேண்டியிருக்கும். அதற்கென்ன? கஷ்டப்பாடாமல் வழுக்குமரம் ஏறமுடியுமா?

செங்கனாசேரியிலேயே ஒரு நாடகப்பள்ளி தொடங்கினாலென்ன? நாடகக்கலை இன்னும் மடிந்து விடவில்லையே?

இரவென்ன, பகலென்ன? சதா இதே மூச்சாய்ப் பேசினார்கள். சாப்பாடு தூக்கம் கூட மறந்துபோய் அவர்கள் கனவுகளில் அலைந்தார்கள்.

உரமாய் விதை பாய்ச்ச ஒரு இடம் தேவை.

நாடகம் மட்டுமே லட்சியமாய் மாறிப் போனது. மிகச்சிறந்த ஒரு நாடகப்பள்ளியை அவர்கள் உருவாக்கியே ஆக வேண்டும்.

அதற்கு , பணத்தேவைமிகப்பெரும் சவாலாக இருந்தது. இவர்கள் கண்ணில் உயிருமாய், நெஞ்சில் ஏக்கமுமாய் ரத்தம் வழிய உக்கி உருகுவதைக் காணச் சகியாமல் வேறுவழியின்றி கடன் உடன் வாங்கி, வீட்டாரே சிங்கப்பூருக்கு அனுப்பிவைத்துவிட்டார்கள். கலைஞன் எங்குமே கலைஞன் தானே? இங்கும் கலைஞர்களின் ஏக்கம் விடவில்லை.

ராகவன் நாயர் வாய் திறந்தார்.

“முதலில் ஸ்க்ரிப்டைரெடி பண்ணுங்கள், படித்துப்பார்த்துவிட்டு, தியேட்டெர் ஏற்பாடுக்கு நான் முயல்கிறேன். நடிகர் தேர்வு பிறகு வைத்துக்கொள்வோம். என்னுடைய கலைஞர்களில் கூட சிலரை நீங்கள் தெரிவு செய்யலாம். கதைத்தேர்வுதான் இங்கு முக்கியம்”

சாஷ்டாங்கமாய் பாதத்தில் விழவில்லையே தவிர, அப்படி பரவசப்பட்டு நெகிழ்ந்து போய் நின்றார்கள்.

“சேட்டா, இந்த உபகாரம் ஒருபோதும் மறக்கமாட்டோம்,” என்று அவர்கள் உணர்ச்சிவசப்பட்டாலும், ராகவன் நாயர் இன்னும் பிரமிப்பில் தான் இருந்தார்.

அதற்குள் “சேச்சி, அடுத்த முறை வரும்போது மாம்பழப்புளிசேரி வைத்துவிடுங்கள், அல்லது என்று மாம்பழப்புளிசேரி வைத்தாலும் எங்களுக்கு ஒரு போன் மட்டும் போதும். ஓடி வந்துவிடுகிறோம்” என்று உரிமையோடு பார்கவியிடம் அவர்கள் சொந்தம் கொண்டாடியது இன்னும் ரசகரமான சம்பவம்.

இரண்டே வாரத்தில் கதை தயாராகிவிட்டது. திருத்த வேண்டிய அவசியமே இல்லை. ஆச்சரியமான ஆச்சரியம் முழுக்க முழுக்க சிங்கப்பூர் வாழ்வியலை அக்கரைவாழ் இளைஞனின் பார்வையில் கொண்டு வரும் தூர்வாரும் இலக்கியமல்ல.

மண்வாசனை கமழக்கமழ எழுதினால் மட்டுமே இலக்கியம் எனும் கிளிப்பிள்ளை வசனகர்த்தாக்கள் எதிர்பார்க்கும் கிண்ணாரமுமல்ல. ஆனால் வரலாற்றில் சிங்கப்பூரின் நிலையது செம்மை பொலியப்பொலிய அரங்கவியலில் காண்பிக்க எழுதிய அற்புதமான செவ்விலக்கியம். மரபிலக்கணம் வழுவாது சொல்வதென்றால், அவர்கள் ஆற்றலை எழுதுவதே தனி இலக்கியமாகிவிடும். சிங்கப்பூரின் ஒவ்வொரு துளித்துணுக்கும் கூட பன்மொழிப்பார்வையில் அவர்கள் கணிப்பில் தவறவில்லை.

இலக்கியத்துக்கு பாஷை உண்டா சார்? மொழிச்சங்கேதம் எம்மொழியிலானால் என்ன? உயிர்த்தத்துவம் நினைவு, நினைவுள், நினைவிலி எனும் நிலையையும் கடந்து, தொன்ம படிமம் தோற்றுப்போகாமல் கிட்டும் அகதரிசனத்தில் பார்வையாளன் விக்கித்துப்போய் நிற்பானே, அங்குதானே படைப்பின் வெற்றிக்கலசம் மினுமினுக்கும் ?

அவையில் பொன்னால் எழுதப்படும், இந்த அங்கீகாரத்துக்கு வெறும் “சும்மாக்காச்சும்” அலட்டல்களால் உறை போடமுடியுமா? “தெனாவெட்டு எழுத்தை வைத்து குதிரை ஓட்டும்” டகால்பாஜிகளுக்கு, கலைவடிவம் என்றால் என்ன? கச்சித கட்டுக்கோப்பு என்றால் என்ன?

ராகவன் நாயருக்கு இப்பொழுதெல்லாம் வீட்டுக்கு வந்து போக நேரமிருப்பதில்லை. அலுவலகத்திலிருந்து நேராக ஒத்திகைக்கே போய்விடுவார்.

ராமன்குட்டிக்கு ஓவர் டைம் உள்ள போது ரஹீம் சமாளித்தான். ரஹீம் வர இயலாத நாட்களில் ராமன்குட்டி நிறைவு செய்தான். நாடகத்தில் கதைப்பகுதி மட்டுமன்றி, அவர்களே ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவும் செய்தார்கள், அவர்கள் உடல்மொழி பாவம் அப்படி அசத்தியது. ப்ரெக்டின் அந்நியமாதல் உத்தியை அப்படியே காப்பியடிக்காமல், சற்றே மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து, அதுவும் பிழையே என தூக்கிப்போட்டுவிட்டார்கள். ராகவன்நாயர் இங்குதான் உதவினார்.

உருவக்குறி, சுட்டுக்குறி, குறியீடு மூன்றுமே காட்சிஜோடனையில் ஒன்றோடொன்று கலந்தே வருமாறு காட்சியை மாற்றினார். தெருக்கூத்தில் கட்டியங்காரனின் உருமால், ராணிக்கு சேடியாகப்போகும் போது மாராப்புத்துணியாவதுபோல், சிலச்சில இணைமுரண், முரண் தகிப்பு என பாத்திர முரண்களில் விண்ணோட்டம் விட்டுப்பார்த்தார்,

இளைஞர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

இதற்கிடையே மாம்பழப்புளிசேரிக்கு நல்ல கிளிச்சுண்டன் மாம்பழமாய் பார்கவி தேடிக்கொண்டிருந்தாள். தேக்காவில் கூட நல்ல மாம்பழம் கிடைப்பது அரிதாக இருக்கிறதே என்று அவள் அலமலந்ததை பொறுமையாக கேட்கக்கூட அவருக்கு நேரமிருக்கவில்லை.

இடையில் ஒருநாள் அவர்களுக்கு சக்கபழம், கதலிப்பழம், என செய்த இரண்டு வகை இலையப்பம், பெரிய டப்பர்வேரில் போட்டு, ஒத்திகை இடத்துக்கே கொண்டு வந்து பரிமாறினாள் பார்கவி.

வியர்க்க விறுவிறுக்க ஒத்திகை நிகழ்ந்த அந்த வேகத்திலும், “சேச்சி, எவ்வளவு நாட்களாயிற்று இலையப்பம் சாப்பிட்டு, என்று அவர்கள் பரவசப்பட பார்கவி விம்மி அழாத குறைதான். அவள் உலகம் அவளுக்கு நாடக ஒத்திகை கனகம்பீரமாக போய்க்கொண்டிருந்த நேரத்தில் திடீரென்று ராமன்குட்டி வரவில்லை. வரவில்லையென்றால் ஒரு தொலைபேசியில் தகவல் சொல்வான். அல்லது பத்து முறையாவது மன்னிப்பு, என குறுந்தகவல் வரும். எதுவுமே இல்லை . அன்று ரஹீமும் வரவில்லை .

ராகவன் நாயர் திகைத்துப்போனார். அவருக்கு கோபம் கோபமாய் வந்தது. “என்ன ஆச்சு இவன்களுக்கு?” என்று உறுமிக் கொண்டிருந்த நேரம் கதவு லேசாகத் தட்டப்பட்டது.

ரஹீம்.

அவன் நீட்டிய கடிதத்தை வாங்கிப்படித்தார்.

சேட்டா, க்ஷமிக்கணும். (மன்னிக்கவும்] வேறு வழியில்லை . இன்று காலை விமானத்தில் புறப்படுகிறேன். விபரங்கள் ரஹீம் சொல்வான்.

உங்களை நேரிடும் துணிச்சல் எனக்கில்லை. எல்லாமெ என்டெ லட்சியமான நாடகப்பள்ளி உருவாக்கத்தான் என்பதை மட்டும் புரிந்து கொள்ளுங்கள்.

என்னைப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். சேச்சிக்கு என்டெ பிரியத்தை சொல்லவும்

மாப்பு, மாப்பு[மன்னிக்க, மன்னிக்க)

மாறா அன்புடன் ராமன்குட்டி

ஹ்ம்ம். நீண்ட பெருமூச்சுடன் வீடு திரும்பினார் ராகவன் நாயர். கேரளத்தில் 10 லட்சம் கொடுத்து பெண் கொடுக்க முன்வந்த ராமன்குட்டியின் மாமனாரை நினைப்பதா?

ஒரு கால் ஊனமே என்றாலும் படித்த புத்திசாலியான ஒருபெண்ணுக்குஸ்ரீதனமாய்காரும் பணமும் கொடுத்து, வாழ்க்கை முன்னே நிற்கும் போது, உண்மையான கலைஞன். வேறென்ன செய்வான். திருமணமானவுடனேயே ஸ்ரீதனப்பணத்தில் நாடகப்பள்ளி உருவாகிவிடும். செங்கனாசேரியில் இந்த இரண்டு கலைஞர்களும் வரலாறு காண்பார்கள்.

வாழ்த்தாமல் என்ன செய்ய?

“என்ன இது, போன் செய்தால் யாருமே போன் எடுக்க மாட்டேன்கிறார்களே? நல்ல கிளிச்சுண்டன் மாம்பழம் இன்றுதான் கிட்டியது. மாம்பழப்புளிசேரி செய்திருக்கிறேன், அவர்களை நீங்களாவது உடனே கூப்பிடுங்களேன்” என்றவாறே கதவைத் திறந்த பார்கவியின் முகத்தில் களிநடம் அப்படி பூரித்துக் கிடந்தது.

இப்போதைக்கு இந்த அன்னபூரணியின் தோள்தான் அவருக்குத் தேவை. ராகவன் நாயர் பட்டப்பகலில் இப்படி அணைத்துக்கொண்டதும் பார்கவிக்கு வெட்கமாகப்போய் விட்டது.

பேரன்போடு ராகவன் நாயர் கூறினார். “பசிக்கிறது. சீக்கிரம் எனக்குப் பரிமாறு உன் மாம்பழப்புளிசேரியை.”

– சூரிய கிரஹணத்தெரு, முதற் பதிப்பு: 2012, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *