மாடசாமியின் ஊர்வலம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 22, 2021
பார்வையிட்டோர்: 2,326 
 
 

குதிரைப் பந்தயம் நடக்கலாம் என்று உயர்நீதி மன்றம் அளித்தத் திர்ப்பை, எல்லா பத்திரிகைகளும், இரண்டாவது மூன்றாவது பக்கங்களில், நிதானத்துடன் பிரசுரித்திருந்தன. ஆனால் மாடசாமியின் கண்ணில்பட்ட பத்திரிகை மக்கள் பத்திரிகை, ஆகையால் குதிரைப் பந்தயம் நடக்கும் என்று கொட்டை எழுத்தில் பிரசுரித்திருந்தது.

மாடசாமி செய்த ஒரே பாவம் அந்தக் காலத்து திண்ணைப் பள்ளிக்கூடத்தில் எழுத்துக் கூட்டி’ வாசிக்குமளவுக்குப் படித்திருந்ததுதான்.

சாயாக் கடையில் தன்னிடம் ஒன்றுமில்லை என்று காட்டுவது போல், ரிக்ஷாக்காரர் இரண்டு கைகளையும் அகலமாக விரித்து வைத்துக் கொண்டு, அதற்குள் அந்த பத்திரிகையை வைத்துப் படித்துக் கொண்டிருந்தார். குதிரைப் பந்தயச் செய்தியை, அன்று நடந்த மிகப் பெரிய உலகச் செய்தியாக நினைத்து அவர் படித்தபோது. மாடசாமியும் பத்திரிகைக்குள் தலையை நீட்டி விட்டு, பிறகு நம்மிடம் கழுதைகட இல்லையே. குதிரை ஓடினால் என்ன… சாடினால் என்ன” என்று தனக்குத் தானே பேசிக் கொண்டே, வெளியே பாரத்தோடு இருந்த சைக்கிளை எடுத்துக் கொண்டு பறந்தான்.

சிலநாட்கள் சென்றிருக்கும்.

தமிழக மக்களின் கலாச்சாரத்தையும், தனித் தன்மையையும் காட்டுவதாகக் கூறப்படும் அந்த பத்திரிகை, மாடசாமியை விடுவதாக இல்லை.

மாடசாமி, வாடிக்கைக் கடை ஒன்றின் முன்னால், சைக்கிளை நிறுத்திவிட்டு. கேரியரில் கட்டியிருந்த மரப்பெட்டியைத் திறந்து பத்து பாக்கெட் கடலை மிட்டாய்களை கடைக்காரரிடம் நீட்டினார். அவர், நீட்டியதைக் கவனிக்காமலே, கடைக்காரர் மக்கள் பத்திரிகையை நீட்டி முழுக்கிப் படித்துக் கொண்டிருந்தார் மாடசாமி “அண்ணாச்சி பத்து பாக்கெட் போதுமா” என்று கேட்டார்.

பதிலில்லை.

‘உங்களைத்தான் அண்ணாச்சி. எத்தனை பாக்கெட் வேணும்”

கடைக்காரர், இந்த லோகத்தில் இல்லை. பொறுமை இழந்த மாடசாமி, கடைக்காரரின் தொடையைத் தட்டிக் கொண்டே சொல்லுங்க அண்ணாச்சி நேரமாவுது என்று உரக்கக் கூவியதால், அவருக்கு வாய் வலித்ததுதான் மிச்சம், அந்த ஆசாமி, வாயில் உமிழ்நீர் அருவியாய்க் கொட்ட, பத்திரிகையில் இருந்து வைத்த கண் வாங்கவில்லை. அப்படி என்ன அதிசயமாய் எழுதியிருக்கும்’ என்று ஒரு அட்வஞ்சர் மனோபாவத்தில், மாடசாமி தலையை நீட்டினார்.

மாடசாமியின் வாழ்க்கையிலேயே ஒரு மடத்தனமான அல்லது மகத்தான திருப்புமுனை, அப்படி தலையைத் திருப்புகையில் ஏற்பட்டது, மாடசாமிக்கே தெரியாது.

“நாளைக்கு குதிரைப் பந்தயம் துவங்குகிறது.”

இப்படிப் போட்டவுடனே, அது மக்கள் பத்திரிகைக்குரிய இலக்கணமாகி விடுமா? ஆகாது; ஆகையால், ஒரு குதிரைகசின் படமும், அதில் ஜாக்கி சவாரி செய்யும் நளினமும், அதே பத்திரிகையில் பிரசுரமாகி இருந்தது. மாடசாமி, கடலைப் பாக்கெட்டை மறந்தார்: சைக்கிளை மறந்தார். ஏன்? கடைக்காரர் பத்திரிகை படிக்கிறார் என்பதையே மறந்து, பத்திரிகைக்குள் தலையை அதிகமாக நீட்டிக் கொண்டே முண்டியடித்தார். படித்துக் கொண்டிருக்கும் தன் கண்களுக்கு எதிரே பூதாகரமான பொருள் ஒன்று தலைவிரித்துத் தாண்டவமாடுவதை காணச் சகிக்காத கடைக்காரர், எரிச்சலோடு, “அறிவு கெட்ட மடையன்… இப்படியாத் தலையை நீட்டுறது. ஒசியில படிக்கிறதுக்கும் ஒரு மட்டுமரியாத வேண்ட்ாமா” என்று சொல்லிக் கொண்டே கண்களை எடுத்தவர் “அடடே மாடசாமியா… நான் வேற யாரோன்னு நினைச்சேன்… நான் செத்த நேரத்துல படிச்சுட்டுத் தாரேன்… அப்புறமா நீ படி” என்று இழுத்துக் கூறிவிட்டு, பத்திரிகையை இரண்டாக மடித்து, மாடசாமி படிக்க முடியாது என்று நிச்சயப்படுத்திக் கொண்டு, அவர்பாட்டுக்குப் படித்துக் கொண்டிருந்தார். இது, மாடசாமியின் ஆர்வத்தை, ஜாக்கி, குதிரையை வேகப்படுத்துவது போல், வேகப்படுத்தியது.

கடைக்காரர் படித்துக் கொண்டே இருந்தார். மாடசாமி, நினைத்திருந்தால் பத்து பாக்கெட் கடலை மிட்டாயையும், வேறு கடையில் போட்டுவிட்டு, சைக்கிள் கம்பியை நீட்டியிருக்கலாம். அவருக்கு அதில் மனமில்லை. எப்படியாவது கடைக்காரர் சுவாரஸ்யமாகப் படிக்கும் அந்த உலகச் செய்தியை படித்துவிட்டே நகர்வது என்று வீரசபதம் வேண்டி நின்றவர் போல், வேறெதையும் கொள்ளாமல் நின்றார்.

கடைக்காரர், குதிரைச் செய்தியைப் படித்து, கவர்ச்சி நடிகையின் கட்டழகைப் பருகி, சினிமா உலகில் வட்டமடித்து அரசியல் தலைவர்களின் ஆசாபாசங்களை ரசித்து “நான் ஏன் திருமணம் செய்யவில்லை?” என்ற ஒரு நடிகையின் ஆராய்ச்சிக் கட்டுரையை அலசி, கடைசியில் நடிகர் நாயகனுக்கு காலில் முள் குத்திவிட்டது… படப்பிடிப்பில் பரபரப்பு” என்ற செய்தியை அனுதாபத்துடன், அச்சச்சோ போட்டுக் கொண்டே வாசித்தார். அன்றுகாலை, தன் மகனை, கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டிக் கொண்டே மயக்கம் வருமளவிற்கு அடித்து ரத்தத்தை வெளிப்படுத்திய வீர வரலாற்றை அடியோடு மறந்து, நடிகர் காலி ல் முள்பட்ட சங்கதியை கண்ணிரும் கம்பலையும் வருமளவிற்குப் படித்தார், பிறகு பிராணச் சிநேகிதனை பிரிய மனமில்லாமல் பிரிவதுபோல், பத்திரிகையை, மாடசாமியிடம் நீட்டினார்.

மாடசாமி, குதிரைச் செய்தியைப் படித்தார். அதிகமாகப் புரியவில்லை. இதரச் செய்திகளையும் பத்தே நிமிடத்தில் படித்து விட்டார். “நீங்க… ஒரு மணி நேரமா படிச்சிங்க… என்னால் அஞ்சி நிமிஷத்துக்குமேல் படிக்க முடியல’ என்று அவர் சொன்னபோது, கடைக்காரர், அவரது அறியாமையை, தன் குவாலிபிகேஷனாக நினைத்தவர்போல், பெருமிதத்துடன் சிரித்துக் கொண்டார். ‘நமக்கு விபரம் தெரியலியே’ என்ற மனோ பாவத்தைக் காட்டும் தாழ்வு மனப்பான்மையுடனும், விபரம் தெரியத் துடிப்பவர் என்ற உணர்வை பிரதிபலிக்கும் குரு பக்தியுடனும், மாடசாமி, அவரை நோக்கினார்.

கடைக்காரர், அவருக்கு ஞான ஸ்நானம் கொடுக்கத் திர்மானித்தவர்போல் “பேப்பர் படிக்கிறதுக்கு விவரம் தெரியணும்பா… உதாரணமா… நடிகை நந்தகுமாரி ஏன் கல்யாணம் பண்ணிக்கலன்னு எழுதி இருக்கு… பாரு… அதில் ஒரு மர்மம் இருக்கு” என்றார்.

“அதுல… அப்படி என்ன மர்மம் இருக்கு அண்ணாச்சி”

அது பெரிய கதை… இந்த நந்தகுமாரியும், நடிகர் நாயகமும் ஏடாகூடமாய் நடந்துக்கிறதாயும். ரகசியமாய் கல்யாணம் பண்ணிக்கிட்டதாயும் கிண்கிணிப் பத்திரிகையுல கிசுகிசுப் பகுதியில் போட்டிருந்தாங்க… அதை, இவள், இதுல மறுத்து எழுதியிருக்காள்… எதுக்கும் நாளைக்கு ஆந்தையின் கேள்வி பதிலப் படிச்சா மர்மம் தெரியும்.

“குதிரை ஓடுதுன்னு போட்டிருக்கே… அப்படின்னா… என்ன அண்ணாச்சி…?

“நல்ல ஆளுப்பா… நீ. குதிரை பந்தயத்தைப் பத்தி உனக்கு தெரியாதா… நீ போனதே இல்லியா”

“நீங்க சொல்றது புரியல”

“புரியுறதுக்கு மூளை வேணும்பா… எவ்வளவு நாளைக்கு பட்டிக்காட்டானாய் இருக்கப்போற…? மெட்ராஸுக்கு வந்து ஒரு வருஷமாயிட்டு என்கிறே… இன்னும் குதிரைப் பந்தயத்தைப் பத்தி தெரியாதுங்றியே…”

“நான் மூடன்தான்… ஒத்துக்கிறேன்… அதுக்காக… நீங்க இந்த விஷயத்த மூடி மறைக்கப் படாது…”

“கிண்டி இருக்குல்லா… அதுல பெரிய மைதானம் இருக்கு… அங்க, பலநாட்டு குதிரைங்க வரும். அதுல கில்லாடி ஆளுங்க ஜாக்கியா இருப்பாங்க… குதிரைங்கள ஓட்டப் பந்தயமா ஒட்டுவாங்க… எந்த குதிரை முதல்ல வருதுன்னு நாம பணம் கட்டணும். பத்து கட்டுன்னா நூறு. நூறு கட்டுன்னா பத்தாயிரம்”

“பத்தாயிரம் கட்டுனா… நூறும் வருமுல்லா”

“அதுலதான் அறிவு வேல செய்யணும்… இதப்பாரு… இந்த ரேஸ் டிப்ஸ்ஸ படிச்சு… இதுப்படி பணம் கட்டுனா… குறைஞ்சது… இரண்டு மடங்கு வருமானம் இருக்கும்… வாரீயா… வார ஞாயிற்றுக்கிழமை போவோம்….”

“நமக்கெதுக்கு வம்பு”

“பைத்தியக்கார ஆளுய்யா. நீ, ராப்பகலா சைக்கிள் மிதிச்சி என்னத்தக் கண்டே? ஒரே வாரத்துல லட்சம் சம்பாதிக்கலாம். ஒரு பெரிய கடலமிட்டாய் பாக்டெரியேகூட வைக்கலாம்… என்ன சொல்ற..?” வாரியா

“நாளைக்குச் சொல்றேன்”

‘இப்ப ரெண்டுல… ஒண்ணச் சொல்லிடு. இல்லன்னா… வேறே ஆள கூட்டிக் கிட்டு போவேன். ரெண்டுபேர்ல ஒருவனுக்காவது அதிர்ஷ்டம் இருந்து… அந்த அதிர்ஷ்டத்தில் அடிக்கும்…”

“பணம் போயிட்டுதுன்னா”

“அது எப்படிய்யா போவும்… இந்த பத்திரிகையில கொடுக்கிற டிப்ஸ்படி கட்டிப்பாரு… இது… ஏழை ஜனங்களோட பத்திரிகை

ஏழைங்களுக்கு நஷ்டம் வரும் படியா… எழுதுவாங்களா…? நேத்தைய பேப்பர் இது… நல்லாபாரு… ரிக்ஷாக்காரருக்கும்

முடிதிருத்துபவருக்கும் ஜாக்பாட் விழுந்திருக்கு… தினமுத்தி பத்திரிகை

கொடுத்த டிப்ஸ்படி ஆடுனவர்கள்… “ஐந்து லட்சம் அபேவு.”

“அடடா… அதிர்ஷ்டமுன்னா… இதுல்லா அதிர்ஷ்டம்.” “அதிர்ஷ்டமில்லையா… இந்த பத்திரிகையோட அறிவு வேல செய்திருக்கு. சரி, வரியா ஞாயித்துக்கிழம.”

“சரி. அண்ணாச்சி. வர்ற ஞாயித்துக்கிழம, என் மவனையும், மவளையும் உயிர் காலேஜ்க்கு (மிருக காட்சிச் சாலை) கூட்டிக்கிட்டுப் போறதா இருந்தேன். முதல்ல பிழைக்கிற வழிய பாப்போம். கிண்டிக்குப் போவோம். எனக்கும் இப்போதான் அறிவு வந்துருக்கு. விசேஷம் இல்லாட்டா, இந்த பேப்பர்ல இவ்வளவு துாரம் எழுதமாட்டாங்க.”

“எப்படியோ பிழைக்கத் தெரிஞ்சாச் சரி. ரேஸ் டிப்ஸ் மட்டும் படிக்க மறந்துடாதே. இது விசேஷமான பத்திரிகை. இல்லாமலா லட்சக்கணக்குல விக்கும்? தினமும் இத வாங்கிப்படி. உலக விஷயம் அத்தனையும் தெரிஞ்சிக்கலாம்.”

“சரி அண்ணாச்சி. ஞாயித்துக்கிழமை, நான் லேட்டாய் வந்தாலும் என்னை மறக்காம கூட்டிக்கிட்டுப் போகணும்”

“பணத்தோட வா. அப்புறம் இருபது பாக்கெட் மிட்டாய்க்கு உன் கணக்கு நோட்டுல பற்று எழுதிக்கோ. ஞாயித்துக்கிழம, கிண்டிக்கு நானே ஒனக்கும் சேர்த்து டிக்கட் எடுத்துடுறேன்.”

“எப்படி வேணுமுன்னாலும் வச்சுக்கலாம். இந்த பேப்பர நான் கொண்டு போகட்டுமா?”

“நான் பத்து எழுதிக்கிறேன். கொண்டு போ. பேப்பர நல்லாபடி, அப்புறம் தெரியும் விஷயம். நாளைக்கு டீ குடிக்கிறதுக்கு முன்னாடி, நீயே இத வாங்குவே. பீடியை புடிச்சிட்டு நிறுத்திடலாம். பட்ட சாராயத்த குடிச்சிட்டு நிறுத்திடலாம். ஆனால் இத மட்டும் படிச்சிட்டு நிறுத்த முடியாது. ஏழைங்களுக்கு குதிரைப் பந்தயத்தில் ஜெயிக்கிறதுக்கு வழிகாட்டுற மக்களோட பத்திரிகையாக்கும் இது”

மாடசாமிக்கு மேற்கொண்டு சைக்கிளை மிதிக்கவோ, கடலைமிட்டாய்களை விற்கவோ மனமில்லை. நேராக கம்பெனிக்குப் போய் “உடம்பு சரியில்ல. சைக்கிள் ஒட்ட முடியலுன்னு” ஒரு போடு போட்டுவிட்டு, சைக்கிளையும், சரக்கையும் ஒப்படைத்துவிட்டு, வீட்டுக்கு வந்தார். வழக்கத்துக்கு ‘.ரோதமாக, தந்தை வீட்டுக்கு வந்ததை கண்ட மகன் துரைராஜ் மூக்கில் விரலை வைத்தான். மகள் சினியம்மை, விரலில் மூக்கை வைத்தாள்.

மாடசாமிக்கு 45 வயதிருக்கும். கிராமத்தில் மூணு மரக்கால் விதப்பாட்டை வைத்து எப்படி எல்லாமோ சமாளித்துப் பார்த்தவர். மானம் பாத்த பூமி, இவரை மானத்தோடு வாழவிடவில்லை. மனைவிக்கு டி.பி… இவர் வயலுக்கருகே பரந்த பெரும் பரப்பைக் கொண்ட ஒரு பண்ணையார்… தனது வாக்கு சாதுரியதாலும், சில்லரை வீச்சாலும், கைவசப் படுத்திவிட்டார்.”

கம்மாவுக்கு ராக்காவலு போவதற்காக, பண்ணையார் ஆட்டுக்கறி கொடுப்பதாக மாடசாமி நினைத்தால், பண்ணையாரோ தன் மலைப்பாம்பு வயலுக்குள், அவனின் குட்டிப் பாம்பு நிலத்தை விழுங்கத் திட்டம் போட்டிருந்தார். இறுதியில் மனைவி இறக்க, அவளின் ஈமச்சடங்கிற்காக, நிலத்தையும், பண்ணையாரிடம் குழி தோண்டிப் புதைத்துவிட்டு, வயது வந்த மகள் சினியம்மையையும், மகன் துரைராசுவையும் கூட்டிக் கொண்டு, சென்னையில் வண்ணாரப்பேட்டையில் குடியேறினார்.

தலைநகருக்கு வந்த நான்கைந்து நாட்களில் கடலை மிட்டாய்க் கம்பெனி ஒன்றில், தெரிந்த ஒருவரின் சிபாரிசின் பேரில் முன்பணம் கட்டாமலே சரக்கெடுத்தார். கம்பெனியே அவருக்கு ஒரு சைக்கிளைக் கொடுத்து, அதற்கு ஒரு வாடகையும் வதுலித்தது. எப்படியோ மாடசாமி, ராப்பகலாக அலைந்து தினமும் பத்து, பன்னிரெண்டு ரூபாய்வரை சம்பாதித்தார். ஊரில் ஒன்பவதாவது வகுப்பு படித்த மகனை, பத்தாவதில் சேர்த்தார். கையில் இருநூறுரூபாய் வரை நடமாடியது. இந்த ரூபாயை ஆயிரமாக்கி சொந்தமாக கடலைக் கம்பெனி வைத்து, மகளை நல்ல இடத்தில் தள்ளிவிடலாம். மகனை ஆபீசராக்கி விடலாம் என்று அவர் நினைத்துக் கொண்டிருந்த சமயத்தில்தான், அவருக்கு அந்த மக்கள் பத்திரிகையின் பரிச்சயம் ஏற்பட்டது.

மாடசாமி, இப்போது படிப்பாளியாகி விட்டார். மக்கள் பத்திரிகை கொடுத்த டிப்ஸ்படி, கடைக்காரருடன் சேர்ந்து பத்து ரூபாய் கட்டினார். அவர் கெட்டகாலம், அன்று அவனுக்கு நூறு ரூபாய் கிடைத்தது. அடுத்த வாராம் கோவிந்தா. மறுவாராம் 50 ரூபாய்.

மாடசாமி ஒரு லட்சியவாதி. எடுத்த காரியத்தை கண்ணுங் கருத்துமாக முடிப்பவர். ஆகையால் கிண்டியில் லட்சம் ரூபாயாவது (குறைந்தபட்சம்) சம்பாதித்து, ஒரு சினிமாப்படம் எடுப்பது என்று திர்மானித்தார். மக்கள் பத்திரிகையின் சினிமாச் சங்கதிகளைப் படித்தபிறகு, தானே அதில் கதாநாயகனாக நடிக்கலாம் என்றும் யோசிக்கத் துவங்கினார்.

அப்பாவின் நடமாட்டத்தில், பெரிய மாறுதல் ஏற்பட்டிருப்பதை, மகள் சினியம்மை முதலில் அவ்வளவாகக் கவனிக்கவுமில்லை. கண்டு கொள்ளவும் இல்லை. தந்தை வாங்கிப் போட்ட மக்கள் பத்திரிகையை, அவள் விழுந்து விழுந்து படித்தாள். பக்கத்து வீட்டுப் பெண்களோடு (இப்போதைக்கு) அவள் பார்த்த சினிமாக்களையும், வாரப் பத்திரிகைகளையும், ருசிகரமான காதல் கதைகளையும், எட்டாப்பு தமிழ் அறிவின் உதவியோடு படித்துக் கொண்டும், பெரிது… பெரிது காதல் பெரிது… அதனினும் பெரிது ஒடிப்போவது என்ற ஜனரஞ்சகக் கவிஞரின் சினிமாப் பாட்டையும் முணுமுணுத்துக் கொண்டு, அவள் கனவுலகில் சஞ்சரித்தாள்.

மாடசாமியின் மகன் பத்தாவது வகுப்பு துரைராசுக்கு, அப்பா வாங்கி வந்த அந்த பத்திரிகை ஒரு அரும்பெரும் பொக்கிஷமாகத் தெரிந்தது. இதுவரைக்கும் அவன் முட்டாள். இனிமேல் அப்படி இல்லை. இதுவரை, பள்ளிக்கூடத்துப் பையன்கள் பேசிய “பாபி”, “கோபி” முதலிய வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியாமல், தனிமைப்பட்டு நின்றான். காதலே வா ரீலி ஸ்… “கவர்ச்சியே காதல் ரீலிஸ்” என்று சகமாணவர்கள் பேசும்போது, அவர்களின் ஜெனரல் நாலட்ஜை கண்டு வியந்து நின்றான். வாத்தியாரிடம் மாணவர்கள் “ஸ்ார்… நாயகம் நடித்த லேட்டஸ்ட் படத்தைப் பாத்திங்களா” என்று கேட்பதும், அதற்கு வாத்தியார் நீங்க பாத்துட்டு வாங்கடா. நல்லா இருந்தா, நான் போறேன்” என்று பதில் சொல்வதும், அவனுக்கு திகைப்பைக் கொடுத்து, ஒருவித தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தியது. அவன் இன்னும், பட்டிக்காட்டான் மாதிரி, அக்பரையும், சிவாஜியையும் நினைச்சுக்கிட்டு இருக்கானே! ஒரு மாணவன் கூட அவனிடம் பேசமாட்டாங்கானே! வாத்தியார் கூட அவனை பொருட்படுத்துவதில்லையே’

இந்தச் சமயத்தில்தான், அந்த மக்கள் பத்திரிகையின் தொடர்பு, தந்தையின் மூலம் அவனுக்குக் கிடைத்தது. அவன் நடிகை நந்தகுமாரி நடித்த திரைப்படங்களை பார்த்திருக்கிறான். அவள், அந்த பத்திரிகையில் கொடுத்த பேட்டியைப் பத்துதடவை படித்தான். அவள், அவனுக்காகப் பிறந்திருப்பதுபோல் ஒரு எண்ணம். ஏன் கூடாது? அவன் அக்காள் சினியம்ைைமகூட, அன்றைக்கு இந்தியாவிலேயே அதிகமாக விற்கும் அந்த வாரப் பத்திரிகையைப் படித்துக் காட்டினாளே. அதுல வந்த ஒரு கதையில… ஒரு பணக்காரப் பொண்ணு, ஒரு ஏழையின் கட்டழகுல… எப்படி மயங்குறாள்! நந்தகுமாரியோட சூட்டிங்ல… அன்னிக்கு, அவன், நந்தகுமாரியை பார்த்தபோது, அவள் அவனைப் பார்த்து சிரிக்கலியா?… நானும்… சினிமா நடிகர் மாதரி தானே இருக்கேன்… என்னை காதலிச்சுதான் அப்படி சிரித்திருக்கா… அவள் வீட்டுக்கு ஒரு நாளைக்குப் போகணும்.

இப்போது துரைராசுக்கு, அதிகமாக புத்தி வந்துவிட்டது. நூலகங்களுக்குப் போய், வாரப் பத்திரிகைகளையும் சினிமாப் பத்திரிகைகளையும் கரைத்துக் குடித்தான். எந்தப் போர் எந்த ஆண்டு நடந்தது என்ற சரித்திரம் அவனுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் எந்த நடிகை, எந்த நடிகரிடம் நெருக்கம் என்பது அவனுக்கு அத்துபடி. சோடியம் குளோரைடும், கால்சியம் நைட்ரேட்டும் சேர்ந்தால் என்ன கிடைக்கும் என்ற ரசாயன விதி தெரியாவிட்டால் என்ன… எந்தெந்த நடிகை, எந்தெந்த நடிகனோடு சேர்ந்தால், படம் எப்படியெப்படி ஒடும் என்பது தெரிந்தால் போதாதா… மீன் சுவாசிக்கும் முறை, தவளையின் “டைஜஸ்டிவ் சிஸ்டம் கரப்பான் பூச்சியின் ரி புரடக்டிவ் முறை” அவனுக்குத் தெரியாதுதான். ஆனால், பிரபல வாரப் பத்திரிகைகளைப் படித்து, எந்த நடிகை எப்படி மெலிந்தாள் எவள் சமீபத்தில் தடித்தாள் என்பது மட்டுமில்லாமல், ஒரு சினிமா பத்திரிகையைப் படித்தன் மூலம், அவனுக்கு ஒரு நடிகையின் அங்கங்கள் அனத்தையுமே நேரில் பார்த்ததுபோல் தோன்றியது.

இப்போது துரைராசுக்கு, தாழ்வு மனப்பான்மை போய்விட்டது. மாணவர்கள் மத்தியில், அவன் ஒரு குருப் லீடர். புடில்யன், ஒரு பிரபல வாரப் பத்திரிகையில் எழுதிய சரித்திரக் கதையில் “அவள் தோளில் இருந்த அவன் குறும்புக்கை, அதற்குக் கீழே சென்று விளையாடியது” என்ற வர்ணனையை, குறைந்தது இருபது தடவை படித்திருப்பான். நடிகை நந்தகுமாரியின் தோளில் அவன் கை இருப்பது போலவும், பிறகு எழுத்தாளர் புடில்யன் சொன்னபடி, நடப்பது போலவும். இருபத்தைந்து தடவை நினைத்திருப்பான்.

சினியம்மையும், சளைக்காமல் பத்திரிகைகளில் வரும் ஒரு கவர்ச்சிகரமான சினிமாப் பதிலை ரசித்துப் படிப்பாள்; அவளுக்கு, தான், நடிகை நந்தகுமாரி என்ற நினைப்பு. அக்காளுக்கும். தம்பிக்கும் உரையாடல் பெரும்பாலும் இப்படித்தான் இருக்கும்.

“நடிகை நந்தகுமாரி ஜம்முன்னு இருக்கா பாரேன்”

“நடிகர் வெண்சாமரனும் ஜம்முன்னு இருக்கார். அவனைக் கட்டிடுறவள் கொடுத்து வைச்சவள்”

துரதிருஷ்டம் என்னவென்றால் நடிகர், நடிகைகள் கொடுத்து வைத்ததுமாதிரி, சினியம்மைக்கும், துரைராசுக்கும் ஒரு காலம் வரும் என்று அவர்களே நினைத்துக் கொண்டதுதான்.

மாடசாமியும், இப்போது பிஸ்ஸி அந்த மக்கள் பத்திரிகையில் வெளியாகும் ‘டிப்ஸ்படி ஆடத் துவங்கினார். கடைக்காரர் உதவியில்லாமல், சுயேச்சையாக குதிரையை நடத்தும் அளவிற்கு முன்னேறி விட்டார். இதனால், வயது வந்த மகளை அவரால் சரிவர கவனிக்க முடியவில்லை. இதற்காக சினியம்மையும் கவலைப்படவில்லை. சொல்லப் போனால், சந்தோஷப் பட்டாள். அவளைக் கவனிக்க ஆளில்லாமலும் இல்லை. எதிர் வீட்டு இளைஞன் ஒருவன் வாரப்பத்திரிகைகளையும், சினிமாப் பத்திரிகைகளையும் அவளுக்குத் தாரளமாகக் கொடுத்தான். அவளும், சிலசமயம் வலி யப் போய் அவனிடம் பத்திரிகை வாங்குவாள். கவர்ச்சிக் கன்னிகளைத் தாங்கிய வாரப் பத்திரிகைகள், அவளுக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை, என்றாலும், உள்ளே அரை குறை ஆடையில் இருந்த பெண்களை அணைத்துக் கொண்டிருக்கும் ஆண்களின் படங்களைப் பார்த்து, அவள் மெய் மறந்தாள்.

சினியம்மையும் முன்னேறிவிட்டாள். விஷயங்களை விவாதிக்கும் அளவிற்கு முன்னேறி விட்டாள்.

ஒரு செடி மறைவில், ஸ்கர்ட் அணிந்த ஒரு பெண்ணை ஒரு வாலிபன் அணைத்துக் கொண்டே சில்மிஷம் செய்யும் படத்தைக் காட்டி, அவள் எதிர்வீட்டு வாலிபனிடம் விவாதிக்கும் அளவிற்கு, தனது பொது அறிவை வளர்த்துக் கொண்டாள். குமாரி எச்.எல்.கிதா, அவங்க பார்க்கில் நடந்துக்கிற விதத்தை நல்லா வர்ணிச்சிருக்கிறாள்’ என்று அவளும், புடில்யன் “அவள் முழங்காலில் இருந்து அவன் கை” என்ற இடம் பிரமாதம் என்று அந்த அண்ணலும் உரையாடிக் கொள்வார்கள்.

ஒவ்வொரு நாளும் ஒரு வாரப்பத்திரிகை! விதவிதமான கவர்ச்சிக் கதைகள்! சமுதாயத்தில் அந்தஸ்துள்ள எழுத்தாளர்கள் படைக்கும் புரட்சிகரமான காதல் கதைகள் ஆஹா… காதலுக்கு எத்தனை சக்தி! எழுத்தாளர் சாந்தா கிருபாகரன், சின்னச்சிறிசுகள்

கொட்டமடிக்கிறதை எப்படி வர்ணிக்கிறாள்!

மாடசாமியும் முன்னேறிக் கொண்டே இருந்தார். இப்போதெல்லாம், தொழில் விஷயமாக அடிக்கடி கேம்ப் போய்விடுவார். பெங்களூருக்கும், ஹைதராபாத்துக்கும், குதிரைகள் அவரை இழுத்தன.

என்றாலும், துரை ராசுக்கு வாழ்க்கை கசக்கத் துவங்கியது போல் தெரிந்தது. அவன் அப்பா வீ ட்டைச் சரியாக கவனிக்காததாலும், முன்போல் காசு கொடுக்காததாலும், ஒரு சினிமாவை ஒரு தடவைக்கு மேல் அவனால் பார்க்க முடியவில்லை. இதனால், ஆசிரியர்களின் ஜெனரல் நாலேஜ் கேள்விகளுக்கு அவனால் முன்மாதிரி பதிலளிக்க முடியவில்லை. அப்பாவிடம் “பூட்சுக்கு கேட்டால், அவர், எவனோ கழட்டிப் போட்ட, பழைய பூட்ஸை கொண்டுவந்து கொடுத்தார். துரைராசுக்கு அழுகை வந்தது, போதாக்குறைக்கு, நடிகை நந்தகுமாரி… அவனின் கனவுக் கன்னி ஒரு சேட்டை, கல்யாணம் பண்ணிக் கொண்டாளாம்…

துரைராசின் மீது இன்னொரு அடி விழுந்தது. ஒருநாள் மாடசாமியிடம்: ‘பரீட்சைக்கு பீஸ் கட்டணும்” என்று கேட்டான். (அன்று ஒரு புதுப்படம் ரிலீஸ் அருமையான பாபி பாணிக்கதை) கிண்டியில் காசை விட்டுவிட்டு, நொண்டிக் குதிரை மாதிரி வீட்டுக்கு வந்து சேர்ந்த மாடசாமிக்கு, இந்தக் கேள்வியை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பரீட்சைக்கு பீஸ் கட்டணுமாமே! ‘என்ன அக்கிரமம்! அந்த பணத்தில் ஒரு குதிரையை வைத்தால் ஜாக்பாட்டே விழலாம்! இவன் எதுக்குப் படிக்கனும்? வேலைக்குப் போனால் என்ன? வேலைக்குப் போயி ஒரு நூறு கொண்டு வந்தா, ஹைதராபாத்திலாவது ஜெயிக்கலாம்.

மாடசாமி உள்ளே நினைத்ததை வெளியே கத்தினார்.

“நீ படிச்சி கிழிச்சது போதும். நொண்டிக் குதிரை எப்படி ஒட முடியாதோ… அப்படி ஏழைங்க படிக்க முடியாது… பேசாம ஒரு வேலையைப் பாரு”

துரைராசு அழுதே விட்டான். ஏல ஒன்பது மணிகூட ஆகல… அதுகுள்ள தூக்கம் வருதா… பத்து மணிவரைக்கும் படிக்கலன்னா முதுகுத் தோலை உரிச்சிடுவேன்” என்று சொன்ன அந்த அப்பவா, இந்த அப்பா?

துரைராசு, “காதல் கசக்குமா” என்ற சினிமாப் படத்தில கதாநாயகன் கஷ்டம் தாங்காமல் அழுவதை நினைத்துக் கொண்டான். நந்தகுமாரி, கதாநாயகனுக்கு அனுதாபப்பட்டது மாதிரி, அவளின் சாயல் கொண்ட பக்கத்து வீட்டுப்பெண், தனக்கு அனுதாபப்படுவாள் என்று கற்பனை செய்து கொண்டான். அவள் கண்ணில் விழும்படியாக நின்று கொண்டு, முகத்தை ஒரு மாதிரியாய் வைத்துக் கொண்டான். இதற்காக, அப்பா தன்னை இன்னும் அதிகமாகக் கொடுமைப்படுத்தினால் கூட தேவலை என்று நினைத்தான். ஆனால் பக்கத்து வீட்டுப் பெண், இவனைப் பார்த்ததாகக் காட்டிக் கொள்ளவில்லை. “பார்த்தும் பார்க்காத பாவனையே காதல் என்று பத்மா கிருபாகரன் ஒரு பிரபல வாரப் பத்திரிகையில் எழுதியதை நெஞ்சில் நிறுத்திக் கொண்டான்.

என்ன அநியாயம்! அந்தப் பெண் தமிழ்நாட்டிலேயே அதிகமாகவிற்கும் அந்த பத்திரிகையில் எதையோ ஒன்றைக் காட்டி, இன்னொரு வாலிபனிடம் சிரித்துக் கொண்டும், உரசிக் கொண்டும் நின்றாள். துரைராசுக்கு வாழ்க்கை கசந்தது. பகலன் எழுதிய “இளமை அல்லது காதல்” என்ற காதல் கதையில், தோல்வியில், கதாநாயகன் தற்கொலை செய்யும் காட்சியையும், “இந்த உலகில் அணைக்கட்டுகள் நிலையல்ல; ஐந்தாண்டு திட்டங்கள் நிலையல்ல; நாட்டுப் பற்று நிலையல்ல; சந்திர மண்டலம் போவதுகூட நிலையல்ல; ஆனால் காதல் ஒன்றுதான் நிலையானது; சாகாத காதலுக்காகச் சாகிறேன்” என்ற புனித வர்ணனையை நினைத்துக் கொண்டான். வீட்டுக்குள் இருந்த நார்க்கட்டிலில் போய் தொப்பென்று குப்புற விழுந்தான்.

அந்தச் சமயத்தில், அவன் அக்காள் வந்து “இதோ இந்த கதையை படி… பிரமாதம்…” என்று சொல்லி, ஒரு வாரப் பத்திரிகையை நீட்டிவிட்டுப் போனாள். (அப்போதுதான், அவன் வெளியேவந்து, அவள் எதிர்வீட்டுப் பையனிடம் “இலக்கியச் சர்ச்சையில் ஈடுபடும்போது, குறுக்கிடாமல் இருப்பான்)

காலம் ஒரு கட்டத்திற்கு வந்தது.

மாடசாமி, மகளின் புடவைகளை அடகுவைத்து, கிண்டிக்குப் போகத் துவங்கினார். கடலைக் கம்பெனி, அவரை நீக்கிவிட்டது மட்டுமல்லாமல், அவர் ஆயிரத்து முந்நூறு பாக்கெட்டுகளுக்கு கணக்கு கொடுக்க வேண்டுமென்றும், சைக்கிளக் காணோம் என்றும், போலீஸுக்குப் போகப்போவதாகவும் மிரட்டியது.

துரைராசின், கண்கள் உள்நோக்கிப் போயின. கழுத்தெலும்புகள் துருத்தின. நெஞ்செலும்பு முன்னே வந்தது. கண்களுக்கு கீழே, கருமையான வட்டங்கள் விழுந்தன. அவனால் எழும்பக்கூட முடியவில்லை மனோ சபலத்தை தத்துவம் என்று சொல்லி எழுதும் ஒப்பாரிக் கவிஞர்களின் பாடல்கள் அவனுக்குப் பிடித்தன.

அவனுக்கு மட்டுமல்ல… அவன் அக்காள் சினியம்மைக்கும் தலை சுற்றியது. அதோடு வாந்தியும் வந்தது. (எதிர் LLIT657, இருப்பிடத்தை சொல்லாமல், கொள்ளாமல் மாற்றிக் கொண்டான்) அவள், இப்போது காதல் தோல்வி கதைகளை அழுதுகொண்டே படிக்கிறாள்.

மாடசாமிக்கு, கிண்டிக்குப்போக, பஸ்ஸுக்குக்கூட காசில்லை. ஒருநாள், முதன்முறையாக, வீட்டில் இருபத்து நாலு மணிநேரம் உட்கார்ந்தார். அப்போது, வீட்டுக்காரர் வந்து சாமான்களை வெளியே துக்கிப் போட்டார். வாடகைப் பாக்கி பத்துமாதத்தை தாண்டி விட்டதாம். சாமான்களைப் பொறுக்கிக் கொண்டு, அந்த குடும்பம் தெருவழியாக நடந்தபோது, கடலை மிட்டாய் கம்பெனிக்காரர், அவற்றைப் பறித்துக் கொண்டு போய்விட்டார்.

வயிற்றில் ஒரு பிள்ளையை வைத்துக் கொண்டிருந்த சினியம்மையை, ஒரு கையிலும், நடக்க முடியாமல் நடக்கும் துரைராசுவை ஒரு க்ையிலும் பிடித்துக் கொண்டு, மாடசாமி, சென்னை நகரின் பிரதான வீதி ஒன்றில் ஊர்வலம் போகிறார். அந்த வீதியின் இருமருங்கிலும் உள்ள கடைகளில், அந்த குடும்பத்தை நிலைக்கு கொண்டு வந்த அந்த மக்கள் பத்திரிகையும், பிரபல வாரப் பத்திரிகைகளும், ஆட்களை விழுங்கிவிட்டு அமைதியாகக் காட்சியளிக்கும் புதைமண்ணைப் போல, பல எலும்புக் கூடுகளை உள்ளடக்கிய அருமையான சமாதிகளைப்போல, அழகாகத்தொங்கிக் கொண்டிருக்கின்றன.

இன்னொரு பக்கம், கிண்டிரேஸ் கர்த்தர்கள் காக்டெயில் பார்ட்டியில் களிக்கிறார்கள்.

– தாமரை – பிப்ரவரி 1976 – சமுத்திரக் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர், 2001, ஏகலைவன் பதிப்பகம், சென்னை – 600 041

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *