கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 4, 2016
பார்வையிட்டோர்: 14,197 
 
 

(கதையில் வரும் சில பகுதிகள் வயது வந்தோர்க்கு மட்டும்)

‘ஹாவ் எ நைஸ் வீக் என்ட் ராம்’ ஆபிஸ் டைபிஸ்ட் பார்பரா சொன்னாள்.

‘ யு டு ஹாவ் எ நைஸ் வீக் என்ட் பார்பரா’ ராமநாதன் முணுமுணுத்து முடிய முதல் பார்பராவின் உயர்ந்த காலணிகளின் ஓசை வாசலைக்கடந்து விட்டது.

அவளின் டைப்ரைட்டர் அந்த மூலையில் தனிமையாகிக்கிடக்கிறது. அவனும்தான் தனிமையாகிவிட்டான்.அந்த ஆபிஸின் மவுனம் அவனை என்னவோ செய்கிறது. ஆபிஸில் கடைசியாளாக இருந்து வேலைசெய்யுமளவுக்கு அவன் எப்போது மாறினான் என்று அவனுக்கு ஞாபகமில்லை.

மிக நீண்டகாலமாக,அவன் அப்படியான நிலைக்குத் தள்ளப்பட்டது போன்ற அவனது உணர்வு உண்மையானதல்ல என்று அவனுக்குத் தெரியும்.அவன் ஆபிஸ் நேரத்தைக் கவனிக்காமல் பின்னேரம் ஐந்து மணிவரைக்கும் வேலை செய்யத் தொடங்கியது ஒரு சில மாதங்கள்தான்.ஆனால் அது ஏனோ மிக நீண்ட காலமான பழக்கமாக அவனுக்குப் படுகிறது.

ஓருசில மாதங்களுக்கு முன், பின்னேரம் நான்கு மணிக்கே அவன் நேரத்தைப் பார்க்கத் தொடங்கிவிடுவான்.ஆபிஸ் செக்ரட்டரி பார்பரா, சாடையாகத் தனது லிப்ஸ்டிக்கைச் சரிசெய்வது அவனையும் அவசரப்படுத்தும். எப்போது ஐந்து மணிவரும் என்ற ஒவ்வொரு நிமிடத்தையும் அளவிடமுடியாத அவசரத்துடன் அடிக்கடி பார்ப்பான்.

அதுவும் வெள்ளிக்கிழமை பின்னேரம் நான்கு மணியென்றால்,எப்போது ஆபிஸை விட்டு வெளியேறலாம்; என்ற அவசரம் அவனாற் தாங்கமுடியாததாகவிருக்கும். தனது வேலையை முடிக்க அவசரப்படுவான். சரியாக,ஐந்து மணிக்குத் தன் ஜக்கெட்டைத் தூக்கிக்கொண்டு,’சீ யு பார்பரா’ என்று அவன் சொல்வதன் கடைசிச் சொற்களை முடிக்க முதல் அவன் கால்கள் கார் பார்க்கை எட்டிவிடும்.

அந்தக்காலம் அவன் மனதைக் குதுகலப்படுத்தம் இளமைக்கனவுகளுடன் கலந்தது.அவன் அப்போது மிகவம் ஆழமான காதலில் மூழ்கியிருந்தான். அவனை அப்படியாக்கியவள், அடுத்து ஆபிசில் வேலை செய்த ஐரிஷ் பேரழகி றேச்சல் மேர்பி என்பவள்.அவள் இவனுக்காக,அந்தத் தெருமூலையிற் காத்திருப்பாள்.

அவள் அழகை இவனால் மட்டுமல்ல, யாராலும் வர்ணிக்கமுடியாது. பெரும்பாலான ஐரிஷ்பெண்கள் மிகவும் அழகானவர்கள் ஆங்கிலப் பெண்களிடமில்லாத ஒரு கபடமற்ற தன்மையுடையவர்கள் ஐரிஷ் பெண்கள். அதற்குப் பலகாரணங்கள் இருக்கலாம் ஐரிஷ் மண்ணின் மனதைக் கொள்ளைகொள்ளும் இயற்கையழகும், நெருக்கமான குடும்பப் பிணப்புக்களும், மிகவும் கட்டுப்பாடாக வளர்க்கப்படும் சூழ்நிலையும் அவர்கள் அழகாக இருப்பதன் பலகாரணங்களில் சிலவாகவிருக்கலாம்.

றேச்சல் ஒரு நவநாகரிகப் பெண்ணானாலும் அவளிடமுள்ள கள்ளங்கபடமற்ற முகபாவம் அவனைக் கவர்ந்தது. ஆனாலும் அந்தத் தோற்றத்தைத தாண்டி அவளிடையே ஆழ்ந்துகிடந்த ஏதோ ஒரு ஒரு கவர்ச்சி இவனைப் பாடாய்ப்படுத்தியது. இருபதைத்தாண்டி இரண்டு மூன்றவயது கூடிய அவள் வயதில் இவனை அவள் சந்தித்துக்கொண்டாள்.

லண்டன் பல்கலைக்கழகத்தில் பல பெண்களுடன் சகமாணவிகள் என்ற உறவுடன் சகஜமாகப் பழகியவனின் முதலாவது’காதலி’றேச்சல் மேர்பி. ராம் என்று மற்றவர்களால் அழைக்கப் பட்ட இராமநாதன்,இலங்கையில் மிகவும் கட்டுப்பாடான குடும்பத்திலிருந்து தாய், தமக்கை, தங்கைகள் அல்லது நெருங்கிய ஆன்டிமார்,ஆச்சிகள் தவிர வேறுயாருடனும் தேவையில்லாமல்லாமல் பழகாதவன்.

காதலிக்கத் தெரியாதவன். அதற்கு அவசியமில்லை.காலமும் நேரமும் வந்ததும் அம்மா,அப்பா பார்க்கும்,அந்தஸ்தும்,பொருளாதார தகுதியுமுள்ள பெண்ணைக் கட்டிக்கொள்ளக் காத்திருந்தவன்.

ஆனால் றேச்சலைக்கண்டதும் அவனின் இறந்தகாலம் மறந்து விட்டது. ஏதிர்காலம் அக்கறைபடத் தேவையற்றதானது. அவளுடன் சேரும் காலம் மட்டும் யதார்த்தமாகப்பட்டது. அவள் அவனின் வாழக்கையையே தலைகீழாக மாற்றி விட்டதாக நினைத்தான்;.அவன் மிகவும் சாதாணமான ஒரு தமிழ்வாலிபன். சாதாரணமான மாணவ வாழ்க்கை,அதைத்தொடர்ந்து உத்தியோக வாழ்க்கை. அவளைக்கண்டதும், அவன் தன்னைவிட அதிர்ஷ்சாலி யாரும் உலகத்தில் இல்லை என்று நினைத்துக்கொண்டான்.ஆனால் பேரழின றேச்சல் மேர்பி போன்ற பெண்களாலும் ராம் போன்ற -மிகவும் இறுக்கமான கலாச்சாரத்திலுpருந்து வந்தவர்களை ஒருபடிக்குமேல் மாற்ற முடியவில்லை.

அவன் இன்று பெருமூச்சுவிட்டபடி தனது காரை நோக்கி நடந்தான்.

அவளால் அவன் இதயத்தைத்தாக்கிய வலி அவனால்த் தாங்கமுடியாததாகவிருக்கிறது.

காரைத் திறந்ததும் அவள் நினைவு அலையாக அவன் மனதில் குமுறுகிறது.

‘றேச்சல்.ஓ றேச்சல்’ அவள் பெயரைச் சொல்லி அவன் தனக்குள் முணுமுணுத்துக் கொள்கிறான்.ஒருகாலத்தில் அவளுக்காக அவனது கார் மிகவும் அழகாகத் துப்பரவாக வைத்திருந்தது ஞாபகம் வருகிறது. காரைச் ஸ்ரார்ட பண்ணுகிறான் கார் முன் செல்கிறது அவன் நினைவுகள் பின்னால்ப் பறக்கிறது.

அவர்கள் சந்தித்துக்கொண்டகாலத்தில் அவன் காரில் இறைந்து கிடக்கும் பத்திரிகைகளைப் பார்த்து அவள்,’பெரும்பாலான ஆண்கள் தங்கள் கார்களைத் தங்கள் விளையாட்டு மைதானம் மாதிரிப் பல சாமான்களைத் திணித்து வைத்திருப்பார்கள்’என்று அவனைக் கிண்டல் செய்வாள்.

காரில் ஏறியதும் அவள் நெருங்கிவந்து முத்தம் கொடுத்தவுடன் அவன் பிரயாணத்தைத் தொடங்குவான்.அந்த இனிய ஞாபகங்கள் தந்த அளவிடமுடியாத குமறல்கள் அவன் மனதில் வந்ததும் அவன் கார் மிகவும் வேகமாகப் போவதைக் கண்ட அடுத்த கார்க்காரன் ஹோர்ன் அடுத்து எச்சரிக்கை செய்கிறான். அந்த இடம் முப்பது மைல்வேகத்தில் போக வேண்டிய இடம்.அவன் ஞாபகங்கள் எங்கேயோ இருந்ததால் அவன் அதைக் கவனிக்கவில்லை.

காதலும் காதலைப் பற்றிய நினைவுகளும் ஒரு சாதாரண மனிதனை அசாதாரணமானவனாக நடக்கத் தூண்டுகிறதா?

காதல் என்பதே ஒரு போதையா? அவளுடன் பழகிய காலத்தில் பார்க்கும் இடமெல்லாம் அவள் முகம் தெரிவதாகப் படும்.

கேட்கும் தொனியெல்லாம் அவள் இனிய குரலாகவிருக்கும்.கனவுக்கும் நனவுக்கும் வித்தியாசமில்லாத என்ன விந்தையான அனுபவங்கள் அவை?

எத்தனையோ தரம் அவளின் முத்தங்களுடன் அவன் கன்னத்தில் பதிந்த லிப்ஸ்டிக் அடையாளங்களுடன் வீட்டுக்குப்போய்ச் சனேகிதர்களின் வேடிக்கைக்கு ஆளாகியிருக்கிறான்.அதை நினைத்ததும் தனது உதடுகளை நாவாற் தடவிக்கொள்கிறான். நேற்று சாப்பிட்ட இனிப்பு இன்று இனிக்காது என்ற அவனுக்குத் தெரியும்.

ஓரு கொஞ்சகாலம் அவன் எங்கேயோ அவளுடன் கற்பனையுலகில் வாழ்ந்ததுபோலிருக்கிறது.அந்த உலகம் யாதார்த்தத்துக்கு அப்பாற்பட்டது.

அவனுடைய கார் ட்ரவிக் லைட்டில் நிற்கிறது.அதற்கு அப்பால் அவள் வேலை செய்த ஆபிஸ் கட்டிடம் தெரிகிறது.

அவள் இப்போது எங்கு சென்றிருப்பாள?

அவன் இலங்கைக்குப் போவதாகச் சொன்னபோது அவள் அதுபற்றி ஒருசில நிமிடங்கள் அவனிடம் ஒன்றும் கேட்கவில்லை. கொஞ்ச நேர மௌனத்தின் பின்னர், தானும் லண்டனை விட்டுக் கொஞ்ச காலம் வெளியே போய் வேலை செய்ய உத்தேசித்திருப்பதாகச் சொன்னாள்.

அவளுடைய அந்த யோசனை,இவன் இலங்கைக்குப் போவதால் வந்த வேதனையின் பிரதிபலிப்பு என்பதை அவள் காட்டிக்கொள்ளவில்லை.

இப்போது எங்கேயிருப்பாள்?

இவனை முத்தமிட்டமாதிரி இன்னொருத்தனை முத்தமிட்டுக்கொண்டிருப்பாளா?

இன்னொருத்தனிடம்; ‘ஐ லவ் யு’ என்று சொல்லிக் கொண்டிருப்பாளா?

அந்த நினைவு வந்ததும் அவன் இதயத்தை ஏதோ செய்கிறது.அந்த நினைவைத்தாண்டி எங்கேயோ ஓடவேண்டும்போலிருக்கிறது. நினைவோடு சேர்ந்து அவனது காரும் விரைவாக ஓடுகிறது.

இன்னொருத்தன் இவன் காரின் வேகத்தைக் கண்டு ஹோர்ன் அடித்துவிட்டுப் போகிறான்.

‘உம், நான் ஏன் அது பற்றி இப்போது அலட்டிக்கொள்ளவேண்டும்?’ தனக்குத் தானே முணுமுணுத்துக் கொள்கிறான்.இப்போதெல்லாம் அந்தப் பழைய நினைவுகள் வரும்போது சிலவேளை அந்த நினைவுகள் பற்றி சட்டை செய்யத் தேவைதானா என்று தன்னையே கேட்டுக் கொள்வான். அவனின் காதலியாயிருந்த றேச்சல் பற்றிய சில நினைவுகள் மிக மிக அழகானவை,அற்புதமானவை, சிலமனிதர்கள்; மட்டும் அனுபவிக்கும் அருமையான காதலனுபவங்கள் என்று அவனுக்குத் தெரியும்.

அவளைப் பிரிந்த சில அனுபவங்கள் மிகவும் துன்பமானவை. தனது எதிரியும் அந்தமாதிரி வேதனைப் படக்கூடாது என்று அவன்; நினைக்கிறான்.

அவளுடைய ஆபிசிலிருந்து வெளியேவரும் யாரோ இவனுக்கு கையசைக்கிறார்கள்.அவனை அடையாளம் கண்டுகொண்ட றேச்சலின் சினேகிதிகளில் ஒருத்தியாகவிருக்கலாம்.

சட்டென்று தனது காரை நிறுத்தி,’றேச்சல் எங்கே போனாள்?’ என்று றேச்சலின் ஆபிசிலிருந்து வந்தவளிடம் கேட்க வேண்டும்போலிருக்கிறது.

அதே நேரம், றேச்சல் அவனிடம் கேட்ட பல கேள்விகளில் ஒன்று ஞாபகம் வருகிறது.

‘நீ திருமணம் செய்யப் போகும் பெண் உனக்கு நிறைய விலை தருவாளா?’

அவள் குரலில் உண்மையாகவே இவனது வரதட்சணை பற்றியறிய ஆவற்படுகிறாளா அல்லது ‘எவ்வளவு விலைக்கு உன்னை விற்றுக்கொள்ளப் போகிறாய்?’ என்ற கிண்டலான கேள்வி தொக்கி நின்றதா இவனுக்குத் தெரியாது.

அந்த ஞாபகம் வந்ததும் இவனது காரின் வேகம் இன்னொருதரம் கூடுகிறது.கார் கண்டபாட்டுக்கு விரைகிறது.

றேச்சல் அவனின் நினைவுகளில் நிலைத்தாட அவன் தனது வீட்டைத் திறந்தபோது கோழிக்கறியின் வாடை மூக்கில் அடிக்கிறது.

அவன் மனைவி சாந்தி சமையலறையில் வேலையாக நிற்பது தெரிகிறது. அவன் அவள் பின்னால் சென்று அவளையணைத்து அவள் கழுத்தில் முத்தமிடுகிறான்.

அவள் திரும்பிப் பார்க்கவில்லை.

‘வந்து விட்டீர்களா’ என்று ஆசையுடன் கேட்கவில்லை.அவன் அணைப்பில் அவள் திமிறவில்லை.

‘நீங்கள் என்ன குழந்தைப் பிள்ளைமாதிரிக் கொஞ்சி விளையாடுறயள்’ என்று சொல்;கிறாள்.

அவர்களின் திருமணம் சில மாதங்களுக்கு முன் இலங்கையில் நடந்தது.

சாந்தியை,அவன் முதலில் கண்டதும் அவள் அவனை நேரிற்பார்த்துப் பேசவில்லை,கடைக்கண்ணால்ச் சாடையாகப் பார்த்தாள். அவள் கொஞ்சம் வெட்கம் பிடித்தவள் அத்துடன் கொஞ்சம் மந்தமாகவும் இருப்பதாக அவன் அப்போது நினைத்தான். லண்டன் மாப்பிள்ளையான அவனுக்குப் பெண்வீட்டார் கொடுத்த சீதனத் தொகை,மணப்பெண்ணின் குறைநிறையைப் பொருட்படுத்தவில்லை.சாந்தியின், குணபாவங்கள்,இருவரும் ஒன்றாக வாழத் தொடங்கியதும் தன்னால்ப் புரிந்துகொள்ளப்படும் என்று அவன் நினைத்தான்.

‘கொஞ்சம் வெண்காயம் வெட்டித் தரமுடியுமா?’

சாந்தி கணவனைத் திரும்பிப் பாராமற் கேட்கிறாள்.

அவளுக்கும் அவனுக்கும் உள்ள பெரும்பாலான சம்பாஷணைகள் சமையல் விடயத்தை மட்டும் ஒட்டியிருப்பதை அவன் அறிவான்.அது அவனுக்குப் பிடிக்காது. அவள் வேறு விடயங்கள் பற்றிப் பேசமாட்டாளா என்று அவன் ஏங்கத் தொடங்கியது அவனுக்குத் தெரியும்.

‘ஏன் இத்தனை சாப்பாட்டு வகைகள் செய்யவேணும்? சிம்பிளா ஏதும் செய்வதற்கென்ன’ அவன் குரலில் எரிச்சல் சாடையாக வெளிப்படுகிறது.அவன் வீட்டுக்கு வரும்போது ஒரு ‘சமையற்காரி’யாக இல்லாமல் ஒரு புது மனைவியாக அவனை அவள் வரவேற்கவேண்டும் என்ற அவனது ஆவலை அவள் புரியாதது அவனுக்குத் தர்மசங்கடமாகவிருக்கிறது.

புதுமனைவியைப் பார்க்கும் வேகத்தில ஓடி வந்தவன் வெண்காயம் வெட்டித்தரட்டாம்!

‘வெண்காயம் வெட்டித்தரமுடியாவிட்டா பேசாமலிருங்கோ’அவள் குரலில் கடுமையான தொனி வெளிப்பட்டது.

அவனுக்கு எதுவும் பேசமுடியவில்லை.

புதிதாகக் கல்யாணம் செய்தவர்கள் இப்படித்தானிருப்பார்களா?

அந்த வீட்டில் அவர்கள் இருவரும் வேறு அபிலாசைகளையுடைய இரு அந்நியர்களாக அவனுக்குப் பட்டது.

‘நீங்கள் மட்டும்தான் வேலைக்குப் போய்வருவதாக நினைக்கிறீயளோ? என்னுடைய வாழ்க்கை இப்படித்தான் இருக்குமென்டு தெரிந்தால் நான் உங்களைச் செயதுபோட்டு லண்டனுக்கு வந்திருக்கமாட்டன்’ அவள் குரலில் கடினம் அவனைத் திகைக்கப் பண்ணுகிறது.

அவன் அவளால் விலைக்கு வாங்கப்பட்டவன்,அதன்படி அவன் நடந்து கொள்ள வேண்டும் என்று அவள் நினைப்பது அவளின் பேச்சில் வெளிப்படுவது அவனுக்குத் தெரியும்.

சாந்தி, இலங்கையின் தலைநகரான கொழும்பு மாநகரில் மிகவும் வசதிபடைத்த ஒரு வியாபாரியின் மகள். வேலைக்காரர்களால் மிகவும் பவ்யமாக பணிவிடை செய்யப்பட்டு வளர்ந்தவள். லண்டனில் அப்படி வாழமுடியாது என்பதைப் புரிந்துகொண்டதும் கணவரில் தனது வார்த்தை அம்புகளை ஏற்றுகிறாள்.

அவர்களுக்குப் பொதுவான விடயமான சமையல் வேலைகளை அவள் தனது ஆத்திரத்தைத் தீர்த்துக்கொள்ளப் பாவிக்கிறாள் என்று அவனுக்குப் புரியத் தொடங்கி விட்டது.

அவனுடையவளாக ஒருகாலத்தில் அவனுடன் இணைந்திருந்த றேச்சல் அப்படிச் சொல்ல மாட்டாள்!.

அவளுக்கு இலங்கை,இந்தியச் சாப்பாடுகள் மிகவும் பிடிக்கும். வாரவிடுமுறை காலத்தில் அவன் அவளுக்குப் பிடித்த ஏதும் செய்ய முனைந்தால்,

‘ ஓ,டார்லிங்,களைத்துப் போய் வந்திருக்கிறோம் பிளிஸ் டோன்ட் குக் எனிதிங்க்’ என்று சொல்லி விடுவாள்.

அதுவும் வெள்ளிக்கிழமை என்றால், றேச்சலும் அவனும் வெளியில் சாப்பிடப் போவார்கள். அல்லது இலகுவாக ஏதோ சாப்பாட்டைச் செய்து கொண்டு டி.விக்கு முன்னால் ஒருத்தரின் அணைப்பில் இன்னொருத்தர் தங்களைப் புதைத்துக் கொண்டு தங்களுக்குப் பிடித்த புரொக்கிராம் பார்ப்பார்கள்.

அல்லது அவர்களுக்குப் பிடித்த பியானோ, (முக்கியமாக மோஷார்ட்டின் பியானோ கொன்சேர்ட்டோ) அல்லது ஜாஸ் ஒலியின் பின்னணியில்,இந்த உலகத்தை மறந்த காதல் உலகத்துக்குள் தங்களை இழந்து விடுவார்கள். மனதைக் கவரும் இசையுடன் அவளுடன் இணைவது அற்புதமான அனுபவங்களாகஅவன் உணர்ந்தான். அந்த இரு ஆத்மாக்களின் களங்கமற்ற காதல் சங்கமத்தின் இன்பத்தை எந்தக் கவிஞர்களால்,கலைஞர்களாலும் தங்கள் படைப்புக்களில் பிரதிபலிப்பிக்க முடியாது என்று அவன் அவனுக்குள் பெருமைப்பட்டுக்கொள்வான்.

இராமநாதன்,றேச்சல் மேர்பியின் உடலைக் காதலிக்கவில்லை. தனது உடலையும் உள்ளத்தையும் பரிபூரணமாக அவனுக்குக் கொடுத்த ஒரு காதற் தேவதையைக் காதலித்தான்.

றேச்சலின் நினைவு அவனைப் பெருமூச்சு விடப்பண்ணுகிறது.

‘றேச்சல் கடைசி வரைக்கும் வெண்காயம் வெட்டித்தரச் சொல்லிக் கேட்கமாட்டாள்! அவன் தனக்குத்தானே சொல்லிக் கொள்கிறான்.

சாந்தி சமைலறையில் இன்னும் ஏதோ செய்து கொண்டிருக்கிறாள்.அவன் தனக்கு அதே வீட்டில்,அடுத்த அறையில் இருப்பது பற்றி எந்த பிரக்ஞையும் அவளிடத்தில் இல்லை.

‘எங்கள் வாழ்க்கை முழுதும் இப்படியே இருக்கப் போகிறதா?

அவள் அவன் எதிர்பார்த்த ‘மனைவியாக’ இல்லை என்பதையுணர்ந்தபோது அவனுக்குத் தன்னில் பரிதாபம் வருகிறது. அவன் லண்டனில் படித்தவன்.பலருடனும் சகஜமாகப் பழகுபவன். வெளியில் சென்று இசை, இயல் நாடகம் என்பதில் சந்தோசமடைபவன். லண்டனுக்குப் படிக்கவரும் ‘ஒருசில’ வெளிநாட்டு மத்தியதரக் குடும்ப மாணவர்கள்போல ஒரு வெள்ளைக்காரக் காதலியுடன் திரிந்தவன். பெரிதாக பண ஆசை என்று கிடையாது. ஆனால் அவனின் குடும்பத்தை வருத்தப் படுத்தக் கூடாது என்பதற்காக அவர்கள் பேசிய சாந்தியைப் பிரமாண்டமான வரதட்சணையுடன்; செய்து கொண்டவன்.

பலசரக்கு வியாபாரம் செய்யும் பணக்காரக் குடும்பத்திலிருந்து வந்த அவள் மிக மிகச் சிக்கனமானவள் இன்னும் லண்டன் கடைகளில் வாங்கும் சாமானுக்கு,இலங்கையின் பணத்தில் கணக்குப்பார்த்து திகைத்து நிற்பவள்.இசை,இயல்,இசை என்பதற்கு என்ன விலை என்று கேட்கக்கூடிய ‘கலை அறிவுள்ளவள்’! என்பதை அவள் லண்டனுக்கு வந்த சில நாட்களில.; அவன் புரிந்து கொண்டான்.

‘ நாங்கள் கண்டபாட்டுக்குச் செலவளிக்க முடியாது.எங்களுக்குப் பெண்குழந்தை பிறந்தால் ஒரு நல்ல மாப்பிள்ளையெடுக்க எவ்வளவு செலவளிக்கவேணுமோ’ என்று லண்டனுக்கு வந்த அடுத்த கிழமையே அவன் மனைவி சாந்தி அவனுக்குச் சொல்லிவிட்டாள்.

அவன் அவளை அழைத்துக் கொண்டுபோய் அவள் விரும்பிய உடுப்புக்கள் வாங்க முற்பட்டபோது அவள் சொன்ன விளக்கம் ‘லண்டனில் நடக்கும் மலிவு விற்பனையில் மலிவாக உடுப்பு வாங்கலாம் என்டு சொல்லிச்சினம்’.

.றேச்சல் ஒருநாளும் ‘மலிவு’ உடுப்புக்கள் போடமாட்டாள்.அவள் உழைக்கும்பெண். இளமையில் அனுபவிக்க வேண்டிய விடயங்களில் தனக்குப் பிடித்தவற்றை முடியுமானால் வாங்கி அனுபவிக்கவேண்டும். ‘நாங்கள் இந்த உலகத்துக்கு வரும்போது எதையும் கொண்டு வரவில்லை. போகும்போதும் எதையும் கொண்டு போகப்போவதில்லை.’ என்று சிலவேளை ‘தத்துவ’ விளக்கங்களைக் குறும்புத்தனத்துடன் அவனுடன் பகிர்ந்து கொள்பவள்..

றேச்சல்; மேற்குலகத்துப்பெண். தனது ஒரு வாழக்கைத் துணைக்கு’விலை’ கொடுத்து வாங்க அவசியமற்றவள்.அவள் அவன் வேலை செய்யும் பிரமாண்டமான சர்வதேச கம்பனி ஒன்றில் வேலையாயிருந்தவள். சாதாரண ஆபிஸ் காரியதரிசியாகத்தான் இருந்தாள் ஆனாலும் மிக மிக அழகாக ஆடையணிவாள். ‘மலிவு விற்பனை’ என்பது அவளைப் பொறுத்தவரையில் அவசியமற்றது. எனது உழைப்பில் எனது மனது சந்தோசப்பட வாழ்கிறேன் என்று சொல்வாள்.

‘ஓ மை காட், ஷி வாஸ் பியுட்டிபுல்,அவளின் காதல் கிடைத்தது எனது அதிர்ஷ்டம், நானும்தான் மிக மிக ஆழமாக,உண்மையாக,மனப்பூர்வமாகக் காதலித்தேன்’

தன்னையறியாமல் அவன் மனம் எங்கேயெல்லாமோ தாவுகிறது.

டெலிவிஷனில் பி.பி.சியின் ஆறுமணிச் செய்தி தொடங்குகிறது.

சாந்தி சாப்பாடுகளை மேசையில் வைக்கிறாள்.இருவரும் மௌனமாகச் சாப்பாடுகிறார்கள்.வெளியில் மழைபெய்கிறது.ஜன்னலில் விழும் மழைத்துளிகள் மிகவும் ஒழுங்கான தாளத்துடன் விழுந்துகொண்டிருக்கின்றன.அந்த தாளம் அலைமோதும் அவனின் மனதுக்கு இதமாக இருக்கிறது.

என்ன நாடு இது. அடிக்கடி மழை,இல்லையென்றால் குளிர், அதுவும் இல்லையென்றால் பொல்லாத காற்று’ சாந்தி அலுப்புடன் சொல்லிக்கொள்கிறாள்.அவன் ஒன்றும் பேசாமல் கேட்டுக் கொண்டிருக்கிறான்.

‘ போன சம்மர் சரியான வெப்பமாக இருந்ததாகச் சொன்னார்கள்’ சாந்தி வாயிலடைத்த உணவுக்குள்ளால் வசனங்களை வெளியில் கொட்டுகிறாள்.

போன வருடத்து வசந்த காலம்!

‘ஓ யெஸ் இங்கிலாந்தின் காலநிலை வரலாற்றில் மிக மிகச் சூடான வசந்தம் வந்த வருடம் என்று காலநிலை அறிவிப்பாளர்கள் உஷ்ணம் தாங்காமற் புலம்பிக் கொண்டார்கள்’.அவன் சாந்திக்குச் சொல்கிறான்.

அவனுடைய ஞாபகம் போனவருட வசந்த காலத்தை றேச்சலுடன் கழித்த இனிய நினைவுகளுக்கு இழுத்துச் செல்கிறது.

வசந்தத்தின் தேவதையாய் அவள் தந்த இன்பங்களை இவனுக்கு முன்னாலிருக்கும் புது மனைவியையும் மறந்து நினைக்கும்போதும் அவன் தன்னையே மறந்து விடுகிறான்.

அவனும் றேச்சலும் இங்கிலாந்தின் அழகிய கடற்கரைகளில் ஒன்றான கார்ன்வெல் பக்கம் வாரவிடுமுறையைக் கழிக்கச் சென்றிருந்தார்கள். மனித நடமாற்றம் குறைவாக உள்ள ஒரு மூலையைத் தங்கள் பிக்னிக்குக்கு’த் தேர்ந்தெடுத்தார்கள்.

அவள் கடற்கரையில் ‘பிக்னிக்’உடையுடன் பெரும்பாலான மேற்கத்தியப் பெண்கள் மாதிரி,அரைகுறை அம்மணமாய்ச் சூரிய ஒளியில் தக தக்க, அவன் அவளின் பளிங்கு போன்ற அழகிய உடம்புக்குக் ‘கிறிம்’ பூசிக்கொண்டிருந்தான்.

இயற்கையின் அற்புதமான அழகிய சூழ்நிலையுடன் இணைந்த அவளின் மென்மையான உடலின் ஒவ்வொரு மேடுபள்ளங்களுக்கும் அவன் கரத்தில் உள்ள ‘சன் கிறிமிமைத் தடவும்போது,அவன் தன் சூழ்நிலை தாண்டிய மோகத்தின் முத்தி நிலைக்குத் தாவிவிட்டான்.

‘ஐ வான்ட் டு மேக் லவ் ரு யு..நவ்’ அவன் தாங்கமுடியாத காதல் போதையில் கிசுகிசுத்தான்.அவன் கண்கள் அவளின் அழகிய நீலவிழிகளில் நீந்தின. அவன் ஆவலின் வேகத்தை அவள் உணர்ந்து கொண்டாள்.அவர்களின் கண்கள் இணைந்துகொண்டன.

அவர்கள் எந்த வேகத்தில் தங்கள் இருப்பிடத்துக்கு வந்து சேர்ந்தார்கள் என்று அவனுக்கு ஞாபகமில்லை. அவள் அவனின் தோளில் சாய்ந்திருக்க,வசந்தத்தின் படைப்பான பல்லாயிரம் மலர்கள் அவர்கள் வந்த வழியில் மலர்ந்திருந்து அவர்கள் காதலை ஆசிர்வதிக்க,ஜாஸ் இசை காரில் முழங்க அவன் காரை ஓட்டிக்கொண்டு வந்தான்.

அந்த வாரவிடுமுறை எந்த ஆணும் பொறாமைப் படக்கூடிய தேனிலவு காலத்தின் சொர்க்கம் என்று மட்டும் அவன் அடிமனம் சொல்லிக் கொண்டது.

‘இந்த நிமிடம் இப்படியே நீடிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்’ அவன் இன்பத்தின் உச்சியில் முனகினான்.

றேச்சல் பதில் சொல்லவில்லை.அவனைத் தன்னோடு இணைத்துத் தன் இனிய முத்தங்களைச் சொரிந்தாள். அவள் இதழ்களில் அமுதத்தைக் கொட்டி வைத்திருக்கிறாளா? அவன் இன்பத்தில் அமிழ்ந்தான்.

அவன் இன்னும் கொஞ்ச நாளில் இலங்கைக்குப் போகப்போகிறான் என்று றேச்சலுக்குத் தெரியும்.அவனது தாய் அவனை அவசரமாக இலங்கைக்கு வரச்சொல்லிக் கடிதம் எழுதியது பற்றி அவன் றேச்சலுக்குச் சொல்லியிருந்தான்.

அவனுக்குத் தெரிந்த இலங்கைத் தமிழர்கள்,அவன், ஐரிஷ் பியுட்டியான றேச்சலுடன் சுற்றுவதைப் பற்றி அவனின் தாய்தகப்பனுக்கு எழுதி விட்டார்கள் என்ற விடயம் அவனுக்குத் தெரியும்.

அவன் அவளை இறுக அணைத்துக் கொண்டான். மிக விரைவில் அவளைப் பிரிவதை உணர்ந்த அவனுக்கு அழவேண்டும்போலிருந்தது.அதைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமான விடயமாகவிருந்தது.

‘இலங்கையில நல்ல மழையில்ல என்டு சொல்லிச்சினம்’ சாந்தி அவனுக்கு முன்னிருந்து சொல்லிக் கொண்டிருக்கிறாள். அவள் சொல்வது அவனின் கனவுலகத்தில் யாரோ சொல்வது பொலிருக்கிறது.

அவனுக்கு றேச்சலின் நினைவுலகிலிருந்து விடுபட விருப்பமில்லை. அவன் நினைவு தொடர்கிறது.

தனது அன்பு ,ஆசை அத்தனையையும் எப்படியும் றேச்சலுக்கு வார்த்தைகளால் விளங்கப்படுத்த முடியாது என்பதைப் புரிந்துகொண்ட அவன் அவளை முத்தமிட்டபடி,’ நான் ஊருக்குத் திரும்பவேண்டும்’ எனறு மெல்லமாக முணுமுணுக்கிறான்;.

‘ அங்கு போனதும்,உங்களுக்குப் பேசி வைத்திருக்கும் முன்பின் தெரியாத பெண்ணைக் கல்யாணமும் செய்து கொள்ளவேண்டும்’ றேச்சல் அவனை ஆழமாகப் பார்த்தபடி சொல்கிறாள். அவள் குரலில் என்ன உணர்ச்சி இழையோடுகிறது என்று அவனால்ப் புரிந்து கொள்ள முடியவில்லை.

‘ஐ ஆம் சாரி றேச்சல்…என்தாயை மன வருத்தப்பட வைக்க எனக்கு விருப்பமில்லை’

றேச்சல் பதில் பேசவில்லை.

‘ஐ ஆம் றியலி சாரி றேச்சல்’.அவன் முணுமுணுக்கிறான்.

‘எதற்காகச் சாரி?’அவள் அவனைத் தன்னுடன் பிணைத்துக்கொண்டு முத்தமிடுகிறாள்.அவன் பதில் சொல்லாததால் அவள் தொடர்கிறாள்

‘ராம்..நீ என்னைத் திருமணம் செய்வாய் என்று நான் ஒருநாளும் உன்னிடம் எதிர்பார்க்கவில்லை’அவள் அமைதியாகச் சொல்கிறாள்.

அவன் சட்டென்று, தன்னை அவள் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்கிறான்.

ஏதோ ஒரு விதத்தில் றேச்சல் தன்னை அவமானப் படுத்திவிட்டதாக நினைக்கிறான். தனது திருமணம், தனது பிரிவு அவளை வதைக்கும், அவள் புலம்பித் தவிப்;பாள் என்று அவள் உள்மனம் எதிர்பார்த்ததா?

அவன் அவளை உற்றுப் பார்க்கிறான். அவள் முகத்தில், எந்தவிதமான சோக உணர்ச்சியும் தெரியவில்லை.

அவனுக்குத் தன்னையறியாத தாழ்வுணர்ச்சி அவனை ஆட்கொள்ளுகிறது.

‘நீ திருமணம் செய்யப் போகும் எதிர்கால மனைவியை உனக்குத் தெரியுமா?’

றேச்சல் கேள்விகளைத் தொடர்கிறாள்

‘ இல்லை…நாளடைவில் அவளைத் தெரிந்து கொள்வேன்..புரிந்து கொள்வேன்’தனது மறுமொழி முட்டாள்த் தனமானதா என்று ஒரு கணம் நினைக்கிறான்.

‘உன்னைத் திருப்தி செய்யும்; அளவுக்கு அவளை நீ தெரிந்துகொள்வாய் என்று நினைக்கிறேன்’.றேச்சல் சொல்வதற்கு அவன் பதில்

சொல்லவில்லை. றேச்சலின் குரலில் கிண்டலா?

றேச்சல்; அவனை நெருங்கி வந்தாள் அணைத்து முத்தம் தந்தாள். அவனுக்கு ஏனோ அந்த முத்தமும் நெருக்கமும் அந்நியமாகத் தெரிந்தது. சட்டென்று எதiயோ இழந்துபோன அந்நிய உலகத்தில் காலடி எடுத்து வைப்பதுபோலிருந்தது.

‘;என்ன நடந்தது உங்களுக்கு?’ சாந்தி கேட்கிறாள்.

அவன் மறுமொழி சொல்லவில்லை.

‘என்ன பகல்க் கனவு காணுறியளோ?’

அவன் மனைவி சாந்தி அவனை அதட்டுகிறாள்.

சாந்தியின் உரத்த குரல் அவனை யதார்த்த உலக உலகுக்கு இழுத்து வருகிறது.

ராம், சாந்தியை, அவனது மனைவியை உற்றுப் பார்க்கிறான்.

‘இதுதான் யதார்த்தம்’ அவன் மனச்சாட்சி; அவனை உலுக்குகிறது. அவன் அவனது பழைய வாழ்க்கையை மறக்கவேண்டும். அவனது உள்மனம் ஆணையிடுகிறது.

‘இவள் எனது மனைவி இவளை நான் புரிந்து கொள்ள வேண்டும்,அவள் என்னை ‘முழுக்க’உணர வேண்டும்’எங்கள் வாழ்க்கை சந்தோசமாக இனிமையாக இருக்கவேண்டும்’

. அவன் சிந்தனை தொடர்கிறது.அவன் தன்னை நீண்ட நேரமாக உற்றுப் பார்ப்பதை அவதானித்த சாந்தி,’ என்ன பார்க்கிறியள்’ அவள் குழப்பத்துடன் வினவுகிறாள்.

‘சாந்தி எனது பக்கத்தில் வந்து உட்காரேன்’ அவன் குரலில் கனிவு,காதல். அவள் சட்டென்று அவனை இடைமறிக்கிறாள்.

‘சும்மா போங்கோ, எனக்கு எவ்வளவு வேலையிருக்கு என்டு உங்களுக்குத் தெரியுமா? நாளைக்கு அண்ணா வீட்டுக்குப் போகவேணும்..உடுப்புகள அயர்ன் பண்ணவேணும். மச்சாள் எதையும் எப்பவம் விண்ணாணம் பார்க்கிறவ என்டு உங்களுக்குத் தெரியாதோ’ சாந்தி பெருமழையாய்ப் பல வசனங்களைக் கொட்டிவிட்டுப் போகிறாள்.

தனது புது மனைவி அவனை,அவனின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளவில்லை என்ற தனது, ஆத்திரத்தை, ஏமாற்றத்தைத் திசை திருப்ப, அவன் டி.விக்கு முன்னாலிருக்கிறான்.

இரவு ஒன்பது மணிச் செய்தி பி.பி.சியிற் தொடங்கிவிட்டது.

‘கெதியாய் மேல வாங்கோ…நாளைக்கு வெள்ளண்ண எழும்பவேணும்’ சாந்தி மேலேயிருந்து இரைகிறாள்..

டி.வியில் செய்தி வாசிக்கும் ஸ்காட்டிஸ் அழகிய பெண் அவனின் றேச்சலை ஞாபகப் படுத்துகிறாள்.

‘ஓ றேச்சல்..றேச்சல்’ அவன் கண்களை மூடிக்கொள்கிறான். அவன் நினைவுகளை அவனால் மூட முடியவில்லை.

றேச்சல்; அவனையுணர்ந்தவள், அவனின் உணர்வோடும் உயிரோடும் கலந்திருந்தவள். காதலைப் பகிர்ந்துகொண்டவள். அவர்களின் கலவியின் இணைவில் இரு உயிர்களின் சங்கமத்தின் மகிமையைப் புரிந்தவள்.

அவள் இனி அவனிடம் வரமாட்டாள்.அந்த வாழ்க்கை இப்போது கற்பனையான விடயம்.

டி.வியை ஓவ் பண்ணினான். ஜன்னலில் விழும் மழைத்துளியின் தாளங்கள் அவன் நினைவுகனைத் தாலாட்ட அவன் தன் மனைவியிடம் செல்கிறான்.

சாந்தி தூங்கிவிட்டாள் என்று தெரிகிறது. பெரிய கம்பளிப் போர்வையால் மூடப்பட்ட மூட்டைபோல அவள் படுத்திருக்கிறாள். அவன் தனது உடுப்பை மாற்றிவிட்டுப் படுக்கையில் நுழைந்தபோது,சாந்தியின் தூக்கம் கலைந்து அவனை அரைகுறை நித்திரையில் விழித்துப் பார்த்தாள்.

‘ஐ ஆம் சாரி சாந்தி’அவன் மனைவியிடம் நெருங்கிக் கொண்டு முணுமுணுத்தான்.

‘எதற்குச் சாரி?’ அரiகுறை நித்திரையில் அவள் கேள்வி கேட்டாள்.

‘ நான் கட்டாயம் உனது சமையல் வேலைகளுக்கு உதவி செய்யவேணும்.. வெண்காயம் வெட்டித்தராததற்கு மன்னித்துக்கொள்’ அவன் சொன்னான்.

சாந்திக்கு,அவளின் அரைகுறை நித்திரையில் ஏன் தன் கணவன் வெண்காயத்தைப் பற்றிப் பேசுகிறான் என்ற விளங்காமல்த் தடுமாறினாள்.

‘சாந்தி.. எங்களுக்குத் திருமணமாகி சில மாதங்கள்தானாகிறது. நாங்கள் சந்தோசமாக இருக்கவேணும்’ போர்வையை நகர்த்தி விடடுத் தன்மனைவியை ஆரத் தழுவி அணைத்தான் அவன்.

அவள் மறுமொழி சொல்லவில்லை.அவன் அணைப்பின் உணர்ச்சியில் விறைக்கும் அவளது மார்பகங்கள்; அவனைத் தடவியதும், அது அவனின்; காதல் உணர்வைத் தூண்டியது.அவனது காதல்; உணர்வு தணலாக எரிகிறது.

அவன் தன் மனைவியை இறுக அணைத்துக்கொண்டான்.

‘ஓ யேஸ் இது எனது மனைவி. எனது எதிர்காலம், எனது இறந்தகால நினைவுகள் தொலைந்து போகட்டும்’ அவன் தனக்குள்ச் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டான். அவனது புதிய மனைவியுடன் இருவரும் இணைந்து காதல் புரியவேணடும். இருவரும் ஒருத்தரை ஒருத்தர் ‘புரிந்து’கொள்ளவேண்டும்.

சாந்தி மெல்லமாக அவனிடமிருந்து நகர்ந்தாள்.

‘ என்ன சாந்தி’ அவன் காதல் போதையில் முணுமுணுத்தான்.

‘நான் ஒரு விசயத்தைப் பற்றி யோசிச்சன்’ சாந்தி கவனமான குரலிற் சொல்கிறாள்.

‘சொல் சாந்தி என்னிடம் ஒளிவு மறைவில்லாமல் எதையும் சொல்’காதல் போதையில் அவன் உடம்பு சூடாகி வார்த்தைகள் தடுமாறி அவன் முனகினான்.

‘அண்ணாவின்ர வீட்டுக்குப் பக்கத்தில இருக்கிற இந்தியப் பட்டேலின்ர கடையில மரக்கறி நல்ல மலிவாம்..’

சாந்தி கணவனின் காதல் தவிப்பைத் தெரியாமல் அல்லது புரியாமல் மலிவான மரக்கறி பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறாள்.

காதல் போதையில் கனலாக எரிந்த அவன் உடலும் உணர்வும் சட்டென்று கொடிய குளிரான பனியில் தான் விழுந்தமாதிரி அவன் உணர்கிறான் ராம்.அவனது உலகம் இருண்டமாதிரித் தெரிகிறது.

அவள் பேசிக் கொண்டிருக்கிறாள். அவன் அவள் பேசுவது என்னவென்றும் பொருட்படுத்தவில்லை.அது யாரோ எங்கோயோ இருந்து பேசுவதுபோலிருக்கிறது.

அவன் தான் தெரிவு செய்த வாழ்வின் நிலையை உணர்ந்து அலற வேண்டும்போலிக்கிறது.

அவனின் தாய் ஆசைப்பட்ட பெரிய சீதனத்துக்கு அவன் தனது வாழ்வை-சுயமையை-ஆண்மையை-ஆசைகளை விற்றுக் கொண்டதையுணர்ந்து அலற வேண்டும்போலிருக்கிறது.

– லண்டன் முரசு பிரசுரம் 1977

(English translation,’Silent scream’ published in London ‘Daskhat’-Spring/Summer 1993)

(இப்போது சில வசனங்கள் மாற்றுப் பட்டிருக்கின்றன)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *