மறுபடியும்…

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 18, 2020
பார்வையிட்டோர்: 5,336 
 

“ப்ளீஸ் டாக்டர், நான் சாகிறதுக்கு முன்னால ஒரேயொரு தடவை என் மனைவியையும், மகளையும் பார்த்துப் பேசிவிட வேண்டும்… எனக்கு எப்படியாவது ஒரு வீடியோ கால் ஏற்பாடு பண்ணிக் கொடுங்கள் டாக்டர்.”

“கண்டிப்பா ராகவன்… ஆனா கொரோனா வைரஸால் நீங்க சாகக்கூடாது என்பதற்காகத்தான் நாங்க இவ்வளவு தூரம் போராடிக்கிட்டு இருக்கோம். நீங்க சீக்கிரமே குணமடைஞ்சு வீடு திரும்புவீங்க ராகவன்…”

அந்த டாக்டர் உயரமாக வாட்டசாட்டமாக இருந்தார். உடம்பு முழுவதையும் மூடியிருந்தாலும், அவரது கண்களில் ஏராளமான கருணை வழிந்தது. ரொம்ப நல்லவர் போலும். அன்று மதியமே ராகவன் மனைவி, மகளுடன் பேசிக்கொள்ள வீடியோ கால் ஏற்பாடு செய்தார். அதன்பின் ராகவனை பேசச் செய்துவிட்டு அறையை விட்டு அகன்றார்.

மனைவி ஜானகியை வீடியோவில் பார்த்ததும் ராகவன் வெடித்து அழுதார்.

“என்னை மன்னிச்சுடு ஜானு. நான் நம்முடைய முப்பத்தைந்து வருட மண வாழ்க்கையில் உன்னை ரொம்பக் கொடுமை படுத்தியிருக்கேன்…. பண்பில்லாமல் எதற்கெடுத்தாலும் உன்மீது எரிந்து விழுந்து அசிங்க அசிங்கமாய் திட்டியிருக்கேன். நீயோ பொறுமையின் திலகம். என்னுடைய அகம்பாவத்திற்கும் ஆணவத்திற்கும் பகவான் எனக்கு நல்ல தண்டனை கொடுத்து விட்டார். நம்முடைய சுகுணாவை நீதான் ஒரு நல்ல இடத்தில் கல்யாணம் பண்ணிக் கொடுக்கணும். நான் ஒரு பாவி. என்னுடைய கடமைகளை முடிக்காமல் செல்கிறேன்…”

“அப்படியெல்லாம் பேசாதேங்கோ… உங்களுக்கு ஒண்ணும் ஆகாது… என்னோட தாலி பாக்கியம் ரொம்பக் கெட்டி. மனசப்போட்டு குழப்பிக்காம டாக்டர் சொல்படி கேட்டு நடங்கோ… இந்தாங்கோ சுகுணாகிட்ட பேசுங்கோ…” தாலிக்கொடியை எடுத்து கண்களில் ஒத்திக் கொண்டாள். மொபைல் போனை மகளிடம் கொடுத்தாள்.

“அப்பா எப்டிப்பா இருக்கீங்க?” சுகுணாவின் குரல் உடைந்தது.

மகள் குரலைக் கேட்டதும் ராகவன் பாசத்தால் துடித்தார்.

“அவ்வளவுதான், இனி நான் அவ்வளவுதான். உனக்குத்தான் ஒரு கல்யாணம் பண்ணிப் பாக்க என்னால முடியல…”

“அப்பா ப்ளீஸ் என்னை நீங்க நல்லா படிக்க வச்சீங்க, அதனால இன்னிக்கி ஒரு நல்ல பாங்க்ல வேலை செய்கிறேன். என்னோட கல்யாணத்தையும் நீங்கதான் முன்னின்று நடத்திக் கொடுப்பீங்க.. கவலையே படாதீங்கப்பா…”

“இப்பதாம்மா என்னைப்பற்றி எனக்கே புரியுது. எனக்கு எல்லாம் தெரியும் என்கிற திமிரும், தலைக்கனமும், மற்றவர்களைத் தூக்கி எறிந்து பேசிய அலட்சியமும், குறிப்பாக உன் அம்மைவை அமில வார்த்தைகளால் குத்திப் பேசிய பேச்சும்….எனக்கு கடவுள் சரியான தண்டனைதான் கொடுத்திருக்காரு சுகுணா. நன்றாக வாழும் காலங்களில் நம் வாழ்க்கை நிரந்தரம் என்று எண்ணுகிறோம்; மரணத்திற்கு முன் நம்முடைய தவறுகளை எல்லாம் நினைத்து வருந்துகிறோம்.”

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. ரெகுலர் டாக்டர் வரவில்லை. அவருக்குப் பதிலாக குள்ளமாக ஒரு டாக்டர் வந்து ராகவனை பரிசோதித்தார். “வெரி குட் ராகவன். நல்ல இம்ப்ரூவ்மென்ட்” என்றார்.

சண்டே என்பதால் ரெகுலர் டாக்டர் இன்று வரலில்லை போலும் என்று நினைத்துக் கொண்டார்.

திங்கட்கிழமையும் அதே குள்ள டாக்டர் வந்தார்.

“டாக்டர், வாட் ஹாப்பண்ட் டு மை ரெகுலர் டாக்டர்?”

“சென்ற சனிக்கிழமை மாலை அவருக்கு கொரோனா பாஸிடிவ் என்று தெரிந்ததும் உடனே ஐசியூவில் அட்மிட் ஆனார்… நாங்கள் எவ்வளவோ போராடியும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை ராகவன். நேற்று இரவு அவர் திடீரென இறந்துவிட்டார்.”

ராகவன் அதிர்ந்து போனார். மரணபயம் அவரை முற்றிலுமாக ஆட்கொண்டது. ‘பகவானே, என்னை இந்த ஒருமுறை மட்டும் காப்பாற்றி விடு; நான் நல்லவனாக மாறி அனைவரிடமும் அன்பை மட்டுமே செலுத்துவேன்.. ப்ளீஸ்.’ கண்கள் கலங்கின.

நல்ல வேளையாக, ராகவனின் உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு, கொரோனாவின் பிடியில் இருந்து தப்பித்தார். உடனே அவரை மருத்துவமனை நிர்வாகம் உற்சாகமாக வீட்டிற்கு அனுப்பி வைத்தது. அன்றைய டிவி நியூஸ் க்ளிப்பிங்கில் கூட அவரைக் காண்பித்தார்கள்.

மனைவியும், மகளும் சந்தோஷத்தில் மிதந்தார்கள்.

“அப்பா நான்தான் சொன்னேனே…” சுகுணா அவரைக் கட்டிக்கொண்டு அழுதாள். “ஆமாம்மா, அம்மாவின் தாலி பாக்கியம், நான் இப்போது உயிருடன் மீண்டு வந்திருக்கிறேன்..” நன்றியுடன் ஜானகியைப் பார்த்தார்.

அன்றிலிருந்து ராகவன் வீட்டை விட்டு எங்குமே வெளியில் செல்லவில்லை. நேரத்திற்குச் சாப்பிட்டார். காய்கறிகளைக்கூட பக்கத்து வீட்டுப் பையன் அவர்களுக்காக வாங்கி தடுப்புச் சுவரின் வழியாக கொடுத்தான். அவற்றை வாங்கி நன்கு வெதுவெதுப்பான உப்புத் தண்ணீரில் கழுவி ஜானகி சமையல் செய்தாள்.

வேளா வேளைக்கு நன்றாகச் சாப்பிட்டு ராகவன் தன் உடம்பை நன்றாக தேற்றிக் கொண்டார். புதிய ரத்தம் ஊறி சற்றுக் குண்டாகக் காணப்பட்டார். பழைய கம்பீரமும், குரலும் வெளிப்பட்டன.

“இது உங்களோட மறுபிறவி அப்பா…”

“ஆமாம்மா… ஹாஸ்பிடலில் என்னை நன்றாகக் கவனித்துக் கொண்டார்கள். அடையாறு ஆனந்த பவனில் இருந்து தினமும் டிபன், சாப்பாடு வரவழைத்துக் கொடுத்தார்கள். ஆனால் பாவம் என்னை நன்கு கவனித்துக்கொண்ட டாக்டர் ஒருவர்தான் கொரோனாவுக்கு பலியாகிவிட்டார்… எல்லாம் பகவத் சங்கல்பம்.”

“அதெப்படிப்பா ஒரு டாக்டருக்கே இந்தக் கதி?”

“எனக்குப் பல விஷயங்கள் பிடிபடவே மாட்டேங்குதும்மா. யோகா யோகான்னு நம் பாரதப் பிரதமர் ஜூன் இருபத்தியோராம் தேதி இந்த உலகையே யோகா செய்ய வைத்துவிட்டார். ஆனால் கொரோனாவுக்கு மட்டும் நம்மை ஏன் ஆங்கில மருத்துவத்தை நோக்கி ஓட வைத்துவிட்டார்? நாம் நம்முடைய பாரம்பரியமான ஆயூர்வேதாவையும், சித்த மருத்துவத்தையும் நோக்கி முதலிலேயே பயணித்திருந்தால் இந்தியாவில் இவ்வளவு மரணங்கள் கண்டிப்பாக ஏற்பட்டிருக்காது சுகுணா. இது ஏன் யாருக்கும் புரியவில்லை? நம் சாலிக்கிராமத்தில் ஒரு சித்த மருத்துவமனையில் அட்மிட்டான அனைவரும் ஐந்தே நாட்களில் ஆரோக்கியத்துடன் வெளியே வந்துவிட்டார்கள். அதில் பல சிறைக் கைதிகளும் அடக்கம் சுகுணா.”

“ஒருவேளை நம்முடைய மத்திய, மாநில அரசுகளின் ஹெல்த் மினிஸ்டர்ஸ் அனைவருமே ஆங்கில மருத்துவம் படித்தவர்கள் என்பதனால் நம்முடைய சித்தாவையும், ஆயூர்வேதாவையும் அலட்சியமாகப் பார்க்கிறார்களோ என்னவோ? யானையைப் பார்த்த ஐந்து குருடர்களைப் போல், தினமும் ஆளாளுக்கு இஷ்டத்திற்கு ஏதேதோ சொல்கிறார்கள்… வேதனைதான் மிஞ்சுகிறது.”

“ஆமாம்மா… பச்சைக் காய்கறிகள், நம்ம பூண்டு, இஞ்சி, மிளகு, நெல்லிக்காய், தேன், அதிமதுரம், தூதுவளை, பிரண்டை, கற்பூரவள்ளி, பசலை, துளசி, மஞ்சள், கண்டந்திப்பிலி, வேப்பம்பூ, சித்தரத்தை இதிலெல்லாம் இல்லாத நோய் எதிர்ப்புச் சக்தியா வேறு எதிலும் கிடைத்துவிடப் போகிறது? சூரிய ஒளி நம் உடம்பில் படுவது எவ்வளவு நல்லது?”

“அப்படீன்னா நாம நிழலோடு யுத்தம் செய்து கொண்டிருக்கிறோமா?”

“கண்டிப்பாக ஆமாம். நாம உடனடியா நம்முடைய இந்தியத் தாத்பரியமான சித்தா, ஆயூர்வேதா முறைக்கு மாறவில்லை எனில், கொரோனாவை அடியோடு ஒழிக்கவே முடியாது. இது இங்கிருக்கிற மர மண்டைகளுக்கு ஏனோ புரியவில்லை… மாறாக கையைக் கழுவு, குண்டியைக் கழுவு என பிதற்றுகிறார்கள்.”

“……………………”

“ஒன்று கேட்கிறேன்… நாம் பிறந்ததிலிருந்தே ஆங்கில டாக்டர் படிப்பு படித்த பெரிய பெரிய பிஸ்தாக்கள் உலகம் முழுவதும் இன்றும் நிரம்பியிருக்கிறார்கள். அதில் ஏன் ஒருவருக்கு கூட இன்னமும் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கத் துப்பு இல்லை? ஆங்கில மருத்துவம் ஒரு ஹம்பக். ஹாஸ்பிடல் போனால், இன்ஷூரன்ஸ் இருக்கிறதா? எங்கு வேலை செய்கிறாய் என்றுதான் முதலில் ஆரம்பிப்பார்கள்… ஏனெனில் அவர்களுக்குப் பணம் ஒன்றே குறி. பணம் கட்டாமல் சிகிச்சையை ஆரம்பிக்க மாட்டார்கள். ஒரு எமர்ஜென்ஸிக்கு மட்டுமே நாம் ஆங்கில மருத்துவத்தை யூஸ் பண்ணிக்கலாம்… ஆனால் கொரோனா போன்ற ஒரு தொடர் தொல்லைக்கு, நம்முடைய பாரம்பரிய மருத்துவமே சிறந்த பதில்… இதைப் புரிந்து கொண்டால்தான் நாம் உருப்படுவோம்.”

இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன.

ராகவன் பழைய ராகவனாக முற்றிலும் மாறிப்போனார்.

அன்று இரவு ராகவன் சாப்பாட்டை மறந்து தன்னுடைய லாப்டாப்பில் மூழ்கியிருந்தார். திடீரென நினைவு வந்தவராக கடிகாரத்தில் நேரம் பார்த்தபோது மணி 8.25. அட, எட்டு மணிக்கே தான் சாப்பிட்டிருக்க வேண்டுமே! உடனே அவருக்குப் பசித்தது.

ஹாலில் போய்ப் பார்த்தால் ஜானகி டிவி சீரியல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“எனக்கு உடனே தட்டுவை. பசிக்கிறது.”

“தோ வரேன்… எட்டரைக்கு இந்தச் சீரியல் முடிஞ்சிடும்…”

மேலும் இரண்டு நிமிடங்கள் சென்றன…

ராகவன் பொறுமை இழந்தார்.

“ரெண்டுகால் நாயே டிவில அப்படி என்னத்தடிப் புடுங்கற? உடனே சோத்தைப் போடுடி முண்டை..” அமில வார்த்தைகள்.

ஜானகி பதில் பேசாது உடனே டிவியை அணைத்துவிட்டு, சமையல் அறைக்குச் சென்று தட்டு வைத்தாள்.

மறுபடியும் வேதாளம் முருங்கை மரத்தில்… என்று தன்னுள் நினைத்துக்கொண்டு இது திருந்தாத ஜென்மம் என்று வேதனையடைந்தாள்.

Print Friendly, PDF & Email

2 thoughts on “மறுபடியும்…

  1. உண்மைதான். மத்திய மாநில அரசுகள் நம்முடைய பாரம்பரியமான வைத்தியத்தை கொரோனாவுக்கு எதிராக முன்னெடுக்க வேண்டும். அதனால் உடனே இறப்பு விகிதம் குறையும். கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் வேண்டாம். லாவண்யா, மேட்டூர்அணை, சேலம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *