கொஞ்சம் அதிகம் இனிப்பு

1
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 19, 2016
பார்வையிட்டோர்: 32,039 
 

அருள்செல்வத்தின் போன் நம்பரை ஸ்டீபன் அனுப்பியிருந்தான்.

கன்னையா அதைத் தனது செல்போனில் பதிவுபண்ணி வைத்துக்கொண்டான். காலையில் மீன் மார்க்கெட் அருகில் ஸ்டீபனைப் பார்த்தபோது, அருள்செல்வத்தைப் பற்றி அவன்தான் சொன்னான்.

பூந்தண்டலத்தில் மூன்றரை வருடங்களாக விற்க முடியாமல் கிடந்த நிலம். எப்படியாவது ஒரு பார்ட்டியைப் பிடித்து விற்றுக்கொடுத்தால், கமிஷன் மட்டும் இரண்டரை லட்சம் தருவதாக ஷெட்டி சொல்லியிருக்கிறான். அருள்செல்வத்தை எப்படியாவது பேசி மடக்கிவிட வேண்டும்.

இந்த இரண்டு ஆண்டுகளில் எத்தனையோ நபர்களை அழைத்துக்கொண்டு போய் இடத்தைக் காட்டிவிட்டான் கன்னையா. கோர்ட் கேஸ் காரணமாக வில்லங்கம் இருக்கிறது என யாருமே வாங்க முன்வரவில்லை; கேஸும் முடிந்தபாடு இல்லை.

ஆனால் ஷெட்டியோ, அந்த இடத்தை விற்றாக வேண்டும் என விடாப்பிடியாக நச்சரித்தான். கன்னையாவைப் போல நான்கைந்து புரோக்கர்கள் அதை விற்க முயன்று தோற்றுவிட்டனர். இடையில் செங்கல்பட்டு பார்ட்டிக்கு முடித்துவிடுவதுபோல இருந்தது. ஆனால் கடைசி நிமிடத்தில் உண்மை அறிந்து, கொடுத்த அட்வான்ஸ் பணத்தோடு பின்வாங்கிவிட்டனர். இத்தனைக்கும் ரெக்கார்டுகளை மாற்றி, டாக்குமென்ட்ஸ் பக்காவாகத் தயார்செய்து கொண்டுபோயிருந்தான். ஆனாலும் திட்டம் பலிக்கவில்லை.

ரியல் எஸ்டேட் தொழிலில், கன்னையாவுக்கு ஏழு வருட அனுபவம். இப்படியான சில பிளாட்டுகள் வகையாக மாட்டிக்கொள்வதும் உண்டு. விற்கவும் முடியாது; கைமாற்றிவிடவும் முடியாது. ஷெட்டி மரக்காணத்தை ஒட்டி பெரிய அளவில் நிலத்தை வாங்கிப் போட்டுவிட்டார். ஆகவே, அவரது கவனம் முழுவதும் அதை விற்பதிலேயே இருந்தது. இந்த ஒரு கிரவுண்டு இடத்தை விற்று முடித்துவிட்டால் அப்புறம் பூந்தண்டலம் பக்கம் போகவேண்டிய அவசியம் இல்லை. கன்னையாவைத் தூண்டிக்கொண்டே இருந்தான்.

வாடகைக்கு வீடு பிடித்துக்கொடுக்கும் ஸ்டீபன், இப்படி சில பார்ட்டிகளை அனுப்பி வைப்பான். அப்படித்தான் இன்று காலை, அருள்செல்வத்தைப் பற்றி சொன்னான்.

”நல்ல பார்ட்டி ஒண்ணு இருக்குண்ணே.

இருபது லட்சத்துக்குள்ளே ஒரு கிரவுண்டு இடம் வேணும்னு கேக்கிறாங்க.”

”லோன் பார்ட்டியா… கேஷா?” எனக் கேட்டான் கன்னையா.

”கையில ரொக்கமா வெச்சிருக்காங்க… பேசினா மடங்கிரும். அந்தப் பூந்தண்டலம் இடத்தை முடிச்சிரலாமா?”

”பார்ட்டி என்ன வேலை பார்க்குது?”

”காலேஜ்ல வாத்தியார். அந்த அம்மாவும் வேலை பாக்கிறாங்க. டபுள் சம்பளம்.”

”நம்பர் குடு… பேசிப் பார்க்கிறேன்.”

”முடிச்சிவுட்டா எனக்கு பத்து ரூவாயாவது குடுக்கணும்ணே.”

”அதெல்லாம் செஞ்சிரலாம். நீ நம்பரைக் குடு” என்றான் கன்னையா.

அப்படித்தான் அருள்செல்வத்தின் போன் நம்பரை ஸ்டீபன் அனுப்பியிருந்தான்.

கன்னையா போன் செய்தபோது, ‘இந்த எண் தற்போது உபயோகத்தில் இல்லை’ என்றது மறுமுனை. ‘இந்த ஸ்டீபன் எப்பவுமே இப்படித்தான், ஏதாவது தப்பான நம்பரைக் குடுத்துடுவான்’ என எரிச்சலாக வந்தது.

ஸ்டீபனுக்கு போன் செய்தால் மணியடித்துக் கொண்டே இருந்தது. இரண்டு போன் வைத்திருப்பவன் என்பதால், வேறு போனில் பேசிக்கொண்டிருக்கக்கூடும். கன்னையாவும் மூன்று செல்போன்கள் வைத்திருப்பவன்தான். ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்கிறவர்களுக்குச் செல்போன்தானே முதலீடு. கன்னையா ஒரு நாளைக்கு எப்படியும் 200 பேரிடமாவது பேசிவிடுவான். சில நாட்கள் உறக்கத்தில்கூட போன் அடிப்பதுபோல அவனுக்குச் சத்தம் கேட்கும்.

கொஞ்சம் அதிகம் இனிப்பு

ஸ்டீபன் தானே திரும்ப அழைத்து, இன்னொரு போன் நம்பரைக் கொடுத்தான். இந்த முறை போன் ரிங் போனது. மறுமுனையில் ”யார் வேணும்?” – மிருதுவான குரல் கேட்டது.

தனது குரலையும் மிருதுவாக்கிக்கொண்டு, ”அருள்செல்வம் சார் இருக்காங்களா?” எனக் கேட்டான் கன்னையா.

”நான்தான் அருள்செல்வம்… நீங்க யாரு?”

”நான் ரியல் எஸ்டேட் புரோக்கர் சார். ‘லேண்டு வாங்கணும்’னு சொன்னீங்களாமே… ஸ்டீபன் சொன்னார்.”

”உங்க பேரைத் தெரிஞ்சுக்கலாமா?”

”கன்னையா.”

”நாங்க நிறைய இடங்கள் பார்த்துட்டோம், எங்களுக்கு எதுவுமே பிடிக்கலை. நீங்க சொல்ற இடம் எங்க இருக்கு?”

”தாம்பரம்கிட்ட சார்.”

”அதான் எங்க?”

”வெஸ்ட் தாம்பரம்.”

”அந்தப் பக்கம் எனக்கு அதிகப் பழக்கம் இல்லை. நாங்க இருக்கிறது சாலிகிராமம்.”

”பக்கா லேண்டு சார். ஒரு கிரவுண்டு இருக்கு. எந்த வில்லங்கமும் கிடையாது. கிளீன் பேப்பர்ஸ் இருக்கு. நம்பி வாங்கலாம்.”

”ஓனர் எங்க இருக்காங்க?”

”மரக்காணத்துல… அவசரத்துக்காக இடத்தை விக்கிறாங்க. இந்த சான்ஸ் விட்டா, அப்புறம் கிடைக்காது சார். ஸ்டீபன் சொன்னானேனு தான் முதல்ல உங்களுக்கு போன் போட்டேன்.”

”ரொம்ப தேங்ஸ். நாங்க எப்போ இடத்தைப் பார்க்கலாம்?”

”நாளைக்கே பார்த்துடலாம் சார். நானே கார் ஏற்பாடு பண்றேன்.”

”நாளைக்கு என் வொய்ஃப்புக்கு ஆபீஸ், சனிக்கிழமை உங்களுக்கு ஓ.கே-யா? அதுக்கு முன்னாடி இடத்தோட டாக்குமென்ட்ஸைப் பார்க்கலாமா?”

”நாளைக்கு ஸ்டீபன்கிட்ட குடுத்துவுடுறேன் சார். சனிக்கிழமை காலையில 8 மணிக்கு உங்க வீட்டு வாசல்ல காரோட வந்து நிக்கிறேன். ஓ.கே-யா?”

”ரொம்ப தேங்ஸ் கன்னையா.”

”இதுக்கு எதுக்கு சார் தேங்ஸ்? உங்க வீட்டு அட்ரஸ் சொல்லுங்க. எழுதிக்கிறேன்.”

அருள்செல்வம் ஒரு குழந்தைக்குச் சொல்வதுபோல நிதானமாகத் தனது முகவரியை சொன்னார். எழுதிக்கொண்டதை திரும்பச் சொல்லவைத்து சரிபார்த்துக்கொண்டார்.

‘இப்படி ஓர் ஏமாளி நம்மிடம் வந்து சிக்கினானே’ என நினைத்துக்கொண்டான் கன்னையா. தான் தயாரித்த டூப்ளிகேட் டாக்குமென்ட்களை மறுநாள் ஸ்டீபனிடம் கொடுத்து அனுப்பினான். இதை யார் சரிபார்த்தாலும் கோர்ட்டில் கேஸ் உள்ள விஷயம் தெரியாது எனத் தைரியமாக இருந்தான்.

சனிக்கிழமை காலையில், அருள்செல்வம் சொன்ன லட்சுமி அப்பார்ட்மென்ட் வாசலில் காரோடு போய் நின்றான். சுமார் 20 வருடங்களுக்கு முன்பு கட்டிய பழைய காலக் கட்டடம்.12 வீடுகள் இருந்தன. வீட்டை ஒட்டிய குப்பைத்தொட்டி அருகே காரை நிறுத்திவிட்டு, அருள்செல்வத்துக்குப் போன் செய்தான் கன்னையா.

”அஞ்சு நிமிஷத்துல கீழே வந்துருவோம். நீங்க எங்க நிக்கிறீங்க?” எனக் கேட்டார் அருள்செல்வம்.

”வாசல்லயேதான்” என்றான் கன்னையா.

ஊதா நிற சட்டையும் வெள்ளை பேன்ட்டும் அணிந்த ஒருவர், கண்களில் கறுப்புக் கண்ணாடி அணிந்தபடி வாசலை நோக்கி படிகளில் இறங்கி வந்தார். அவர் பின்னால் ரோஸ் கலர் காட்டன் சேலை கட்டிய ஒரு பெண்.

‘இவர்தானோ?’ என்ற யோசனையோடு கன்னையா அவரைப் பார்த்தான். படியைவிட்டு இறங்கியதும், மடக்கிவைத்திருந்த ஊன்றுகோலை விரித்துத் தரையில் தட்டியபடியே நடந்து வரத் தொடங்கினார்.

‘அட, இவரு கண்ணு தெரியாத ஆளா… இவரோடவா நான் போன்ல பேசினேன்?’ எனத் திகைப்போடு கன்னையா அவரைப் பார்த்தான். வாசலை நோக்கி நடந்துவந்த அருள்செல்வம் மெல்லிய குரலில், ”கன்னையா… நீங்க எங்க நிக்கிறீங்க?” எனக் கேட்டார். அவரது கைகள் காற்றில் தேடின.

வாசல் கேட்டைப் பிடித்தபடி நின்றிருந்த கன்னையா சுதாரித்துக்கொண்டு, ”கிட்டத்தான் சார் நிக்கிறேன். ஆமா, உங்களுக்குக் கண்ணு தெரியாதா?” எனக் கேட்டான்.

”பிறவியிலே பார்வை போயிருச்சுப்பா. இவங்க என் வொய்ஃப், பேர் சியாமளா. அவங்களும் என்னைப்போலத்தான். நாங்க லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டோம். இன்ஸ்ஷூரன்ஸ் கம்பெனியில வேலை பாக்கிறாங்க” என்று மனைவியை அறிமுகம் செய்துவைத்தார்.

சியாமளாவுக்கு 35 வயது இருக்கும். புடைவையை நேர்த்தியாகக் கட்டியிருந்தார். இடது கையில் ஒற்றைத் தங்க வளையல். கண் தெரியாதவர் எனச் சொன்னால் மட்டுமே தெரியும்படியான திருத்தமான முகம். மெல்லிய புன்னகையோடு, ”நீங்க சாப்பிட்டீங்களா?” என அவள் கன்னையாவைப் பார்த்துக் கேட்டார்.

”சாப்பிட்டாச்சும்மா, டாக்குமென்ட்ஸ் எல்லாம் பார்த்துட்டீங்களா, திருப்தியா… நாம போலாமா?” என்றான் கன்னையா.

அருள்செல்வமும் சியாமளாவும் பின் ஸீட்டில் ஏறிக்கொண்டனர்; கன்னையா முன் ஸீட்டில் ஏறிக்கொண்டான். அசோக் பில்லரை தாண்டிய பின்பு, அருள்செல்வம்தான் பேச்சைத் தொடங்கினார்.

”நான் ஆர்பனேஜ்ல வளர்ந்தவன். இவளும் அப்படித்தான். காலேஜ் படிக்கிறப்ப ஹாஸ்டல்ல இருந்தேன். எங்க ரெண்டு பேருக்குமே வீடுனு ஒண்ணு கிடைக்கவே இல்லை. அதனாலயே சொந்தமா ஒரு வீடு கட்டணும்கிறது, எங்களுக்கு ரொம்ப வருஷக் கனவு. நிறைய இடங்கள் பார்த்துட்டோம். ஒண்ணும் சரியா அமையலை. பிடிச்ச இடமா இருந்தா, விலை ரொம்ப ஜாஸ்தியா இருக்கு. எங்களால இருபது லட்சத்துக்கு மேல தர முடியாது. வீடு கட்ட லோன் போடலாம்னு நினைச்சிருக்கோம். இந்த லேண்டு என்ன விலை சொல்றாங்க?”

”இருபத்தைந்து லட்சம். உங்களுக்குப் பிடிச்சிருந்தா, குறைச்சுப் பேசி முடிச்சிரலாம்” என்றான் கன்னையா.

”பிரச்னையான இடம் இல்லையே?” எனக் கேட்டார் சியாமளா.

”ஒரு பிரச்னையும் இல்லம்மா. லேண்ட் ஓனரோட வொய்ஃப்பை ஹாஸ்பிட்டல்ல சேத்திருக்காங்க. கிட்னி ஆபரேஷன் பண்ண, உடனே பணம் தேவைப்படுது. அதான் இடத்தை விக்கிறதுக்கு அவசரப்படுறாங்க” என ஒரு பொய்யை அள்ளிவிட்டான் கன்னையா.

”எங்க கல்யாணத்துக்கு அப்புறம் ஆறு வீடு மாறிட்டோம். வாடகைக்குக்கூட எங்களுக்கு நல்ல வீடு கிடைக்கலை. பேருக்குத்தான் நான் காலேஜ் வாத்தியார். ஆனா, எங்க காலேஜ் பிரைவேட். சம்பளம், பதினெட்டு ஆயிரம்தான். இவ என்னைவிட நாலாயிரம் கூட சம்பாதிக்கிறா. ஒன்பது வருஷமா ரெண்டு பேரும் வேலை பார்த்து, சிறுகச்சிறுகச் சேர்த்து பேங்க்ல போட்டுவெச்சிருக்கோம். இவ அண்ணன் கொஞ்சம் ஹெல்ப் பண்றேன்னு சொல்லியிருக்கார். நல்ல இடமா அமையணும்… அதான் கவலையா இருக்கு” என்றார் அருள்செல்வம்.

”இது சூப்பர் இடம் சார்… உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். இந்த இடத்துல நீங்க நிச்சயம் வீடு கட்டுறீங்க” என்றான் கன்னையா.

”உங்ககூடப் பேசும்போது ரொம்ப நாள் பழகின ஃப்ரெண்டுகூடப் பேசுற மாதிரி இருக்கு” என்றார் அருள்செல்வம்.

கன்னையா சிரித்துக்கொண்டே, ”மனசு சுத்தமா இருக்கு சார். அதான் நான் பேசுறது உங்களுக்குப் பிடிச்சிருக்கு” என்றான்.

கார் வாகன நெருக்கடிகளுக்குள் மெதுவாகப் போய்க்கொண்டே இருந்தது. சியாமளா ஏதோ யோசனையோடு வந்தார். என்ன யோசிக்கிறார் எனப் புரியாத கன்னையா, அவர் கவனத்தைத் திருப்புவதற்காகவே பேச்சுக் கொடுத்தான்.

”நல்ல தண்ணி, ஜிலுஜிலுனு காத்து. என்கிட்ட பணம் இருந்தா, நானே இந்த இடத்தை வாங்கி வீடு கட்டிக்கிட்டு வந்துருவேன்மா.”

சியாமளா சிரித்தபடியே, ”உங்களுக்கு எத்தனை குழந்தைங்க… வொய்ஃப் என்ன செய்றாங்க?” எனக் கேட்டார்.

”வொய்ஃப் மீன் விக்கிறா. ரெண்டு பொட்டைப் புள்ள, ஒரு பையன். வீடு ராமாவரம். வாடகை வூட்லதான்மா இருக்கேன்” என்றான் கன்னையா.

”இத்தனை பேருக்கு இடம் முடிச்சுவிடுறீங்க, உங்களுக்கு ஒரு இடம் கிடைக்கலையா?” எனக் கேட்டார்.

”நானும் ட்ரை பண்ணிக்கிட்டேதான்மா இருக்கேன். அதுக்கெல்லாம் நேரம், காலம் அமையணும்ல” எனச் சலித்துக்கொண்டான் கன்னையா.

அவன் நான்கு வீடுகளை வாடகைக்கு விட்டிருப்பதும், சோளிங்கரில் இரண்டு கிரவுண்டில் இடம் வைத்திருப்பதும் அவர்களுக்குத் தெரியுமா என்ன!

பூந்தண்டலம் போய் கார் நின்றபோது, அவர்கள் களைத்துப்போன முகத்துடன் ‘இன்னைக்கு வெயில் ரொம்ப ஜாஸ்தி’ என அலுத்துக்கொண்டனர்.

”அடைமழையில ரோடு கொஞ்சம் டேமேஜ் ஆகியிருக்கு. என்கூட வாங்க சார்” என அருள்செல்வத்தின் கையைப் பிடித்துக்கொண்டு இடத்தைப் பார்வையிட அழைத்துப்போனான் கன்னையா. சியாமளா, அருள்செல்வத்தின் மறு கையைப் பிடித்தபடியே, உடன் நடந்து வந்தார்.

நிலம் இருந்த இடத்துக்கு அவர்களை அழைத்துவந்து நின்றான் கன்னையா. இருவரும் தனித்தனியாக அந்த இடத்தினுள் நடந்தனர். குனிந்து மண்ணை எடுத்து முகர்ந்து பார்த்தாள் சியாமளா. பிறகு ”பக்கத்துல ஏதாவது ஃபேக்டரி இருக்கா?” எனக் கேட்டார்.

”ஆமாம்மா, சேமியா கம்பெனி ஒண்ணு இருக்கு” என்றான் கன்னையா.

”அதான் மெஷின் ஓடுற சத்தம் கேட்குது” என்றபடியே, அந்த நிலத்தில் அங்கும் இங்கும் நடந்தபடியே இருந்தார் சியாமளா.

அருள்செல்வம் குனிந்து தரையில் எதையோ தேடி எடுத்தவரைப்போல கேட்டார், ”இந்த இடம் குப்பைமேடா இருந்துச்சா?”

”ஆமா சார்… பக்கத்துல ஒரு ஹாஸ்பிட்டல் இருக்கு. அந்தக் குப்பைங்களை இங்கேதான் கொட்டிவெச்சிருந்தாங்க. நாங்க சண்டைபோட்டு கிளீன் பண்ண வெச்சிட்டோம்.”

”அதான் உடைஞ்ச கண்ணாடி கிடக்குது” என ஒரு கண்ணாடிச் சில்லைக் காட்டினார் அருள்செல்வம்.

சியாமளா தனது கைகளை அகல விரித்தபடியே நின்றிருந்தார். காற்று, அவர் தலையைக் கோதியபடியே இருந்தது. ஊன்றுகோலை ஊன்றியபடி அருள்செல்வம் அவர் அருகில் சென்று மென்குரலில் சொன்னார், ”நல்லா காத்து வருது. பக்கத்துல வீடு எதுவும் இல்லைபோல.”

”நாம வீடு கட்டினா, இந்தப் பக்கம் நாலு வாழை மரம் வைக்கணும்; காம்பவுண்டு சுவர் எல்லாம் வைக்கக் கூடாது, மூங்கில் வெச்சு தடுப்பு அமைச்சிரலாம்” என்றார் சியாமளா.

”மண்ணைத் தொட்டுப் பார்த்தியா? எவ்வளவு நைஸா இருக்கு. அடியில பாறை இருந்தா மண் இவ்வளவு சாஃப்ட்டா இருக்காது” என்றார் அருள்செல்வம்.

”மெயின் ரோட்ல இருந்து கொஞ்சம் தூரம். ஆனா, கிழக்கு பார்த்த பிளாட். நல்ல வெளிச்சம் வரும்” என்றாள் சியாமளா.

”எனக்கு இடம் பிடிச்சிருக்கு. விலைதான் படியணும்” என்றார் அருள்செல்வம்.

”எப்படியாவது கன்னையாகிட்ட பேசுங்க. இதுதான் நம்ம வீடுனு மனசு சொல்லுது” என்றார் சியாமளா.

கன்னையா எதுவும் அறியாதவன்போல ஓரமாக நின்றிருந்தான். அருள்செல்வம் கைகளால் காற்றில் தடவியபடியே, ”இடம் எங்களுக்குப் பிடிச்சிருக்கு கன்னையா” என்றார்

” ‘இது உங்களுக்கு’னு எழுதியிருக்கு சார். இல்லைனா நான் ஏன் உங்களைத் தேடி வரணும்… ஏன் நாலு பார்ட்டிங்க வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தாலும் உங்களுக்காகக் காத்துக்கிட்டு இருக்கணும்” என்றான் கன்னையா.

”விலைதான் எங்க பட்ஜெட்ல இல்லை. கொஞ்சம் பேசிப் பாருங்களேன்.”

”சார்… உங்களுக்குக் கண் இல்லை; அம்மாவுக்கும் இல்லை. என்னாலே முடிஞ்ச உபகாரமா இதைச் செய்றதா நினைச்சுக்கிட்டு பேசிப் பார்க்கிறேன்” எனத் தனியே கொஞ்ச தூரம் தள்ளி நடந்துபோய், ஷெட்டிக்கு போன் செய்து பேசினான்.

”எப்படியாவது இடத்தை முடிச்சிவுடு” எனக் கெஞ்சினான் ஷெட்டி.

”கமிஷன் மூணு லட்சம்னா முடிச்சிவுடுறேன் ஷெட்டி…” என இழுத்தான் கன்னையா.

”இருபத்திரண்டுனு முடி. உனக்கு மூணு லட்சம் கமிஷன் தர்றேன்” என்றான் ஷெட்டி.

கன்னையா சந்தோஷமான குரலில் சொன்னான், ”அருள்செல்வம் சார், உங்க அதிர்ஷ்டம்… விலை படிஞ்சிருச்சு. ‘இருபத்தி மூணுக்கு முடிச்சிரலாம்’னு பார்ட்டி சொல்லிட்டாங்க.”

”அய்யோ அந்த மூணு லட்சத்துக்கு நாங்க எங்கே போறது?” என்றார் அருள்செல்வம்.

”இப்படிச் சொன்னா எப்படி சார்? இடத்தோட ரேட் உங்களுக்குத் தெரியாததா? அவசரத்துக்கு விக்கிறதாலே பேரம் பேச முடியுது. நீங்களே ஒரு வார்த்தை ஓனர்கிட்ட பேசுங்க” எனச் சொல்லிவிட்டு ஷெட்டிக்கு போன் போட்டுக் கொடுத்தான் கன்னையா.

ஷெட்டி ”இருபத்திரண்டுக்கு முடிச்சுடலாம்” என உறுதியாகச் சொன்னான். வேறு வழி இல்லாமல், அருள்செல்வம் அதற்குச் சம்மதம் சொல்லிவிட்டார்.

சியாமளாவுக்கு ரொம்ப சந்தோஷம். கன்னையாவிடம் ”ரொம்பத் தேங்ஸ்” என்றார். அவர்கள் காரில் திரும்பி வரும்போது கட்டப்போகும் வீட்டைப் பற்றியே பேசிக்கொண்டு வந்தார்கள்.

கன்னையாவும் நிறைய யோசனைகள் சொன்னான். தென்னைமரங்களும், மகிழமரமும் கொண்ட அழகிய வீடு சியாமளாவின் கற்பனையில் வளர்ந்துகொண்டே இருந்தது. காசி தியேட்டர் அருகில் வந்தபோது கன்னையா சொன்னான், ”ஒரிஜினல் டாக்குமென்ட்ஸ் பார்க்கணும்னா, ரெண்டு லட்சம் ரூபாய் அட்வான்ஸ் கேட்பாங்க.”

”டாக்குமென்ட் செக் பண்ணிட்டேன். ஒண்ணும் பிரச்னை இல்லை” என்றார் அருள்செல்வம்.

”சார்… நீங்க வேணும்னா எதுக்கும் வில்லங்கம் போட்டுப் பார்த்துக்கிடலாம். சிங்கிள் ஓனர்” என்றான் கன்னையா.

”இடத்தையே நாலு நாள்ல முடிச்சிரலாம். நான் பேங்க்ல இருந்து பணத்தை எடுத்து, ரெடி பண்ணிடுறேன்.”

”புதன்கிழமை ரெஜிஸ்ட்ரேஷன் வெச்சுக்கிடலாமா?” எனக் கேட்டான் கன்னையா.

”எனக்கு ஓ.கே நீங்க நாளைக்கு வீட்டுக்கு வந்தா அட்வான்ஸ் தந்துடுறேன். மூணு நாள்ல மிச்சப் பணத்தையும் ரெடி பண்ணிடுவேன்” என்றார் அருள்செல்வம்.

”சந்தோஷம் சார். நீங்க ஆசைப்பட்டது போலவே இடம் அமைஞ்சிருச்சு. மேடம் முகம் இப்போதான் பிரகாசமா இருக்கு. பொம்பளைங்களுக்கு வீடுதானே சார் எல்லாம்.”

”இந்த இடத்தைக் காட்டினதுக்காக உங்களுக்கு நான் எவ்வளவு கமிஷன் குடுக்கணும்” எனக் கேட்டார் அருள்செல்வம்.

”உங்ககிட்ட எப்படி சார் வாங்குறது..? சும்மா ஆயிரம் ரூபாய் மட்டும் குடுங்க. அது போதும்.”

”நிஜமாவா?” எனக் கேட்டார் சியாமளா.

”ஆமா சிஸ்டர்… என்னதான் தொழில் பண்ணினாலும் எனக்கும் மனசு இருக்கு. ஏதோ என்னால் ஆன உதவி” என்றான் கன்னையா.

தனது சட்டை பாக்கெட்டில் இருந்து ஆயிரம் ரூபாயை எடுத்து நீட்டினார் அருள்செல்வம். அதை வாங்கிக்கொண்டான் கன்னையா. அதன் பிறகு அவர்கள் வீடு வந்து சேரும் வரை பேசிக்கொள்ளவே இல்லை.

கொஞ்சம் அதிகம் இனிப்பு2

அன்றிரவு ஸ்டீபனைச் சந்தித்தபோது கன்னையா கேலியாகச் சொன்னான். ”சரியான அப்பாவிங்க. ரெண்டுக்கும் கண்ணு அவுட். கண்ணு இருக்கிறவனே இந்தக் காலத்துல இடம் வாங்க முடியாது. இவங்க எம்மாத்திரம். இருபது லட்சமும் கோ…விந்தா. நமக்கு என்ன, ஷெட்டி மூணு லட்சம் கமிஷன் குடுக்கிறேன்னு சொல்லிட்டான். நம்ம தொழில்ல யாரா இருந்தாலும் பாவம் பார்க்கக் கூடாது. ஆடு தானா வந்து தலையைக் கொடுத்தா, வெட்டிட்டுப் போய்க்கிட்டே இருக்கணும்.”

ஸ்டீபன் சிரித்தபடியே ”என் கமிஷன் வந்துரும்ல?” எனக் கேட்டான்.

அருள்செல்வம் கொடுத்த ஆயிரம் ரூபாயில் இருவரும் ஒன்றாகக் குடிக்கப்போனார்கள். பியர் பாட்டிலைத் திறந்துவைத்தபடி ‘ரொம்பத் தேங்க்ஸ்’ எனச் சியாமளா சொன்னதைச் சொல்லிச் சொல்லிச் சிரித்தான் கன்னையா.

ஞாயிற்றுக்கிழமை காலையில் கன்னையாவுக்கு போன் வந்தது. அருள்செல்வம் தான் பணத்தைத் தயார்செய்து வைத்திருப்பதாகவும், காலை எட்டு மணிக்கு வந்து பெற்றுக்கொள்ளும்படியும் சொன்னார்.

‘பார்ட்டின்னா இப்படி இருக்கணும். முழுசா நம்பி ஏமாறாங்க பார்’ என நினைத்தபடியே ”வந்துடுறேன் சார்” என்றான் கன்னையா.

சொன்னதுபோல லட்சுமி அப்பார்ட்மென்ட் வாசலில் போய் நின்று, போன் பேசியபோது மாடியில் உள்ள ‘சி2’ வீட்டுக்கு வரச் சொன்னார் அருள்செல்வம். கன்னையா படியேறிப் போனபோது வாசலில் நின்றபடியே வரவேற்றார்.

சிறிய டபுள் பெட்ரூம் வீடு. உள்ளே பிரம்பு நாற்காலி போட்டிருந்தார்கள். கன்னையா உட்கார்ந்தபடியே வீட்டை கண்களால் துழாவினான். குழந்தைகள் இல்லாத வீடு, சுவரில் ஒரேயொரு காலண்டர் தொங்கிக்கொண்டிருந்தது. பழைய காலத்து கலர் டி.வி. சியாமளா சமையல் அறையில் எதையோ செய்துகொண்டிருந்தார்.

அருள்செல்வம் நாற்காலியில் உட்கார்ந்தபடியே கேட்டார், ”நாம சாப்பிடலாமா?”

”இல்லை சார்… நான் இன்னும் குளிக்கக்கூட இல்லை” என்றான் கன்னையா.

”அதெல்லாம் இல்லை, எங்களுக்காக இவ்வளவு உதவி செஞ்சிருக்கீங்க. எங்க வீட்ல கட்டாயம் சாப்பிடணும்” என அவனை வற்புறுத்தி உட்காரவைத்தார்.

டைனிங் டேபிளில் நறுக்கிய வாழை இலையைப் போட்டு, அதில் உளுந்த வடைகளைக் கொண்டுவந்து வைத்தார் சியாமளா. பிறகு சூடான கேசரியை ஒரு கிண்ணத்தில் கொண்டுவந்து, இலையில் பரிமாறினார்.

”சூடா கேசரி சாப்பிட்டா ருசியா இருக்கும். சாப்பிடுங்க…”

அவன் கேசரியைக் கிள்ளி வாயில் வைத்தான். ஒரே தித்திப்பாக இருந்தது. நாக்கு இனித்தது.

சியாமளா சிரித்தபடியே கேட்டார்… ”இனிப்பு ஜாஸ்தியா இருக்கா?”

”ஆமா” என்றான் கன்னையா.

”நான்தான் வேணும்னே நாலு கரண்டி சர்க்கரையை கூடப் போட்டேன். அப்போதான் நீங்க எங்களை மறக்க மாட்டீங்க.”

சட்டென சாப்பிட எடுத்த கேசரியை கையில் வைத்தபடியே அவரைப் பார்த்தான் கன்னையா. இதே வாசகத்தைத்தான் கன்னையாவின் அம்மாவும் சொல்வாள்… ‘நமக்கு யாராவது பிடிச்சவங்களா இருந்தா சர்க்கரையை கூடப் போட்டுக் கொடுக்கணும். அப்போதான் நம்மளை ஞாபகம் வெச்சுக்கிட்டே இருப்பாங்க.’ அம்மா சொன்ன அதே சொற்கள்.

இறந்துபோன அம்மாவின் ஞாபகம் வந்தவுடன் கன்னையாவுக்கு கேசரியைச் சாப்பிடுவது கஷ்டமாக இருந்தது. ‘ச்சே… இவங்களைப் போய் நாம ஏமாத்த நினைச்சோமே!’ என நினைத்தபடியே அவன் இலையை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.

”எங்களுக்குக் கண்ணு தெரியாது… ஈஸியா ஏமாத்திடலாம்னு நினைக்கிறாங்க. கண்ணுதான் தெரியாது; மனசுக்குத் தெரியும்தானே. உங்களை நாங்க முழுசா நம்புறோம். நீங்க ரொம்ப நல்லவர். இல்லேன்னா என்னை ‘சிஸ்டர்’னு சொல்வீங்களா?” எனக் கேட்டார் சியாமளா.

”ஆமா கன்னையா… ஏன்னு தெரியலை, உங்க மேல நம்பிக்கை வந்துருச்சு. யார்கிட்டயும் ஒரு வார்த்தை கேட்கலை. இடத்தைப் பார்த்துட்டு வந்தவுடனே மதியமே பேங்க்ல போய்ப் பணத்தை எடுத்துட்டு வந்துட்டேன். சியாமளாதான் உங்களை வீட்டுக்குக் கூப்பிட்டு சாப்பாடு போட்டு பணம் குடுக்கலாம்னு சொன்னா” என்றார் அருள்செல்வம்.

குற்றவுணர்வோடு தலை தாழ்த்தியபடியே அவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தான் கன்னையா. சியாமளா ஆர்வமாகக் கேட்டார்.

”கேசரி எப்படி இருந்துச்சு… பிடிச்சிருக்காண்ணே?”

அவனுக்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியவில்லை. அப்போது ஷெட்டியிடம் இருந்து போன் வந்தது.

அவன் சாப்பாட்டை அப்படியே வைத்துவிட்டு வெளியே எழுந்துபோய் மறைவாக நின்று சொன்னான்…

”ஷெட்டி… பார்ட்டி ‘இடம் வேணாம்’னு சொல்லிட்டாங்க.”

”என்னய்யா சொல்ற… இன்னைக்கு அட்வான்ஸ் தர்றேன்னு சொன்னாங்களே.”

”கேஸ் இருக்குனு எவனோ போட்டுக் குடுத்துட்டான். வேற பார்ட்டி பிடிச்சுக்கலாம் விடு.”

ஷெட்டி கன்னையாவைக் கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டினான். உள்ளே வந்த கன்னையா தணிவான குரலில் சொன்னான், ”அருள்செல்வம் சார் என்னை மன்னிக்கணும்.”

”ஏன்… என்ன ஆச்சு?”

”உங்களுக்குப் பேசிவெச்ச இடத்தை ஓனர், முப்பது லட்சம்னு இன்னொரு பார்ட்டிக்குப் பேசி முடிச்சிட்டாராம். உங்களுக்கு வேற நல்ல இடம் நான் பார்த்துத் தர்றேன் சார். என்னை மன்னிச்சுருங்க.”

”என்ன இப்படிச் சொல்றீங்க” எனச் சியாமளா ஆதங்கப்பட்டார்.

”நான் தப்பு பண்ணலே சிஸ்டர்” என்றான் கன்னையா.

அவர்கள் இருவரும் சமையல் அறைக்குள் போய் ரகசியமான குரலில் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். பிறகு, வெளியே வந்த அருள்செல்வம் ஆதங்கமான குரலில் சொன்னார்.

”ரொம்ப தேங்க்ஸ் கன்னையா. வேற இடம் ஏதாவது இருந்தா நிச்சயம் சொல்லுங்க.”

கன்னையா கிளம்பும்போது ஏதோ நினைவுக்கு வந்தவன்போல திரும்பி நின்று சொன்னான், ”இனிமே எங்க கேசரி சாப்பிட்டாலும் சிஸ்டரைத்தான் நினைச்சிக்குவேன்!”

– ஜனவரி 2015

Print Friendly, PDF & Email

1 thought on “கொஞ்சம் அதிகம் இனிப்பு

  1. `ஐயோ, ஏமாற்றுகிறானே!’ என்று பரிதவிப்பாக இருந்தது இறுதிவரை. உண்மையைச் சொல்லாமலேயே அவர்களைக் காப்பாற்றிவிட்ட முடிவு நன்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *