காற்றை கிழித்துக் கொண்டு தன்னை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்த அந்த பொருளை பார்க்கும் பொழுது செத்தோம் என்று தான் நினைத்தான் சிவராமன். கிட்டத்தட்ட 2 வருட ப்ராக்டிஸ் என்றாலும் எல்லா முறையும் தப்பித்து விட முடியுமா என்ன? அப்பொருள் அருகே வந்த பொழுது தான் யூகிக்க முடிந்தது. அது மற்றைய நாட்களைப் போல் சாதாரண நெளியக்கூடிய பாத்திரம் அல்ல. வலிமையான தோசைக்கல் என்று. எதிர்பாராத தருணத்தில் காயத்திரியால் வீசப்பட்ட தோசைக்கல். வால் நட்சத்திரம் பூமியை உரசிக் செல்வது போல சிவராமனின் தலையை லேசாக உரசிச் சென்று விட்டது. அந்த லேசான அடி மயக்கத்தை தரக்கூடிய அளவிற்கு இல்லையென்றாலும் அதிர்ச்சியில் மயங்கினான்.
ஹிஸ்டீரியாவை பற்றி நான் படித்திருந்த உளவியல் விஷயங்கள் அனைத்தும் நல்லவேளை மண்டையில் அப்படியே இருந்தது. ஆரம்ப காலங்களில் காயத்ரி அமைதியாகத்தான் இருந்தாள். பின் போகப்போக அவளது கோபம் எல்லை மீற ஆரம்பித்தது. கண்களை வெறிக்க வைத்துக் கொண்டு பற்களை நற நறவென கடித்தபடி 3000 வாட்சில் குரல் வளை வெடிக்க கத்திக்கொண்டு அவள் போடும் சண்டை இருக்கிறதே. (இரவு நேரங்களில் அவள் தூங்கும் பொழுது அவளுக்குத் தெரியாமல் அவள் நகங்களை வெட்டி விட்டாலும்) பத்ரகாளிதான் கண்முன் தெறிவாள். நாம் ஏன் பிளாஸ்டிக் பாத்திரங்களை உபயோகிக்கக் கூடாது என்கிற முடிவிற்கு என்றோ வந்து விட்டேன். கணமான பாத்திரங்கள் ஏற்படுத்தும் காயங்கள் ஆற வெகு நாட்கள் பிடிக்கிறது. பாத்ருமில் வழுக்கி விழுந்த கதையையே 10 தடவைக்கு மேல் கூறினால் யார்தான் நம்புவார்கள்.
நந்தா. என் அதிபுத்திசாலியான நண்பன். என் காயங்களின் காரணத்தை என்றோ கண்டுபிடித்து விட்டான். துடிப்பு மிகுந்த துப்பறிவாளன். நான் வழுக்கி விழுந்ததாக கூறப்பட்ட பாத்ருமை பார்வையிட்டு. சில கேள்விகள் கேட்டான். பதில் கூறமுடியவில்லை. முழுக்க நனைந்தபின்……….ஒத்துக் கொண்டேன். கேலி செய்வான் என்று எதிர்பார்த்தேன். ஆறுதல் கூற ஆரம்பித்து விட்டான். தனக்குத் தெரிந்த சைக்காட்ரிஸ்ட் ஒருவரின் முகவரியை தந்து. காயத்திரியை அழைத்து செல்லுமாறு வற்புறுத்தினான். அவளிடம் உண்மையை கூறி கூட்டிச் செல்ல முடியுமா.? அதனால் தான். அந்த ஒரே கரணத்துக்காக மட்டும் தான். ஏதோ எனக்குத் தெரிந்த ஒன்றிரண்டு பொய்களைக் கூறி அழைத்துச் சென்றேன்.
அவளிடம் பொய்களை கூறும் பொழுது என் விரல்கள் நர்த்தனம் புரிந்தன. சாரி நடுங்கியது. ஏனென்றால் என் முன் அநுபவம் என் விரல்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது. காயத்திரியிடம் பொய் பேசி வாங்கிக் கட்டிக் கொண்ட முன் அநுபவம் விரல்களில் நடுக்கம் என்னும் செயல் மூலமாக அநிச்சையாக செயல்பட்டு கொண்டிருந்தது. ஆனால் இந்த பொய்க்கு தோசைக்கல் அடியை நான் எதிர்பார்க்கவில்லை. நல்ல வேளை தெய்வாதீனமாக பிழைத்துக் கொண்டேன்.
இவ்வளவிற்கும் நடுவில் என் மனதில் ஒரு சிறு குதூகலம். அந்த நந்தா இருக்கிறானே. என்னை அவமானப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு அவன் செய்த செயல். கடந்த 5 வருடங்களாக நான் ஒரு நல்ல மனநல மருத்துவராக காலம் தள்ளி வருகிறேன். அந்த வயிற்றெறிச்சல். ஏதொ எனக்கு உதவி செய்ததாக அவன் செய்த காரியங்கள். வெளியில் இவ்வாறு என்னைப்பற்றி தம்பட்டம் அடித்திருக்கிறான். டாக்டர் சிவராமன் தனது நோயாளி மனைவியை ஒரு நல்ல மருத்துவரிடம் காண்பிக்க சென்றிருக்கிறார்.
இதன் மூலம் அவர் தான் ஒரு நல்ல மருத்துவர் இல்லை என்பதை ஒப்புக் கொண்டிருக்கிறார். ஹா ஹா ஹா. என்னைத் தவிர வேறு யாராவது காயத்திரியை தாக்கு பிடிக்க முடியுமா? நீங்களே கூறுங்கள். அதுவும் நிரூபிக்கபட்டு விட்டது. நந்தாவின் அறிமுக டாக்டர். அன்று தனியறையில் அலறிய அலறல் இருக்கிறதே. அந்த தேவகானத்தை வெளியில் இருந்து 2 நிமிடம் ரசித்து விட்டுத் தான் உள்ளே சென்றேன். ஆள் உயிரோடு தான் இருந்தான் நல்லவேளை. ஒவ்வொரு முறையும் கோபத்தின் உச்ச கட்டத்தில் அவள் மயங்கி விடுவாள்.
அவள் நிலைமை மோசமாகிவிடுமுன் அவளை காப்பாற்ற வேண்டிய கடமை என் மனதை நாள் தோறும் அரித்துக் கொண்டுதானிருக்கிறது. இவ்வளவிற்கும் பிறகும் அவள் மேல் அன்பு மாறாமல் இருப்பதற்கு நிச்சயமாக காரணம் உண்டு.
கல்லூரியில் இளநிலை பட்டம் படிக்கும் காலத்திலிருந்தே அவள் பின் சுற்றிக்கொண்டிருந்தேன். அவள் வேறு மேஜர். நான் வேறு மேஜர். கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள். அவளை கவருவதற்காக பல்வேறு சாகசங்களை செய்து காண்பித்தேன். எனது மனோதத்துவ அறிவு அனைத்தையும் பிரயோகித்தேன்.
அவளுக்காக கொலைகாரனாக கூட மாறினேன். ஆம். அவள் முன் பைக் ஓட்டி காண்பிக்க வேண்டுமென்ற ஆவலில். (எனக்கு சைக்கிள் கூட ஓட்டத் தெரியாது) ஒரு ஓரமாக படுத்து தூங்கிக் கொண்டிருந்த நாயின் மேல் ஏற்றி கொன்று விட்டேன். ஆனால் ஒரு நாள் அவள் என்னை திரும்பிப் பார்த்தாள். படையப்பா படத்தின் முதல்நாள். முதல்ஷோ. முதல் டிக்கெட்டை கைப்பற்றி இரண்டு பவுன் தங்கச்சங்கிலியை வெற்றி மாலையாக சூட்டிக்கொண்ட பொழுது. 5வது வரிசையில் அமர்ந்து கொண்டு அவள் பார்த்து கொண்டிருந்தாள் அன்று மாலையே அவள் என்னிடம் பேசினாள் இவ்வாறு.
‘
சினிமா அது இதுன்னு சுத்துறத விட்டுட்டு ஒழுங்கா படிக்கலாம்ல. நீங்க நல்லா படிக்கக் கூடிய ஸ்டூடண்ட்னு நான் நெனைச்சுகிட்டு இருந்தேன்” சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்காமல் சென்றுவிட்டாள் எனக்கு லேசாக உறைத்துது. ஆனால் அடுத்து நான் கண்ட காட்சி மெய்மறக்கச் செய்தது. அவள் திரும்பி நடந்து செல்லும் பொழுது அந்த ஒற்றைச் சடை பின் புறம் அப்படியும் இப்படியுமாக ஆடிய ஆட்டம் எப்படி சொரணை வரும்.
என் வீரத்தை நிரூபிக்க மற்றுமொரு வாய்ப்பிற்காக ஏங்கிக் கொண்டிருந்த சமயத்தில்தான் அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது. எங்கள் கல்லூரியை சுற்றி நிறைய புதர்கள் உண்டு. அன்று காயத்ரியின் வகுப்பறைக்குள் பாம்பு ஒன்று புகுந்துவிட்டது. மாணவிகள் கத்திய கதறல் ஏஃசி அறைக்குள் அயர்ந்திருந்த கல்லூரி முதல்வரின் செவிப்பறையை கிழித்து விட்டது. அனைவரும் ஓடினோம். மிக நீண்ட பாம்பு நிச்சயமாக பயந்து தான் ஆக வேண்டும். எனக்கு ஒன்றும் பயமில்லை இருப்பினும் அருவெருப்பாக இருந்தது. மிரண்டு போயிருந்த பாம்பு தலையை உயர்த்தியபடி தன்னை நெருங்கவிடாமல் படம் எடுத்து கொண்டிருந்தது. யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் நான் அந்த காரியத்தை செய்து விட்டேன்.
பாம்பிற்கு என்ன தெரியும் என் காதல் வெறியைபற்றி. பிடித்தால் சும்மா இருந்து விட்டு போக வேண்டியது தானே. இப்படியா கொத்துவது கன்னாபின்னாவென கண்ட இடத்தில். வாயில் நுரைதள்ள அசிங்கமாக போய் விட்டது. சடாரென கண்கள் இருண்டு தலைசுற்றி கீழே விழுந்து விட்டேன். சினிமாவில் வருவது போல் கடிபட்ட இடத்தில் இரத்தத்தை உறிஞ்சி என் உயிரை காப்பாற்றியவள் காயத்திரிதானாம். பின்தான் அதிர்ச்சி தரும் மற்றொரு விஷயம் எனக்கு வலிப்பு நோய் இருப்பது. எனது மருத்துவ அறிக்கையை பார்த்த பின்தான் தெரிந்தது. காயத்ரிதான் அதை என்னிடம் தயங்கியபடி எடுத்து கூறினாள்.
அதன் பின் அவளை பார்ப்பதை சிறிது சிறிதாக தவிர்த்தேன். அவளது வாழ்க்கை ஒரு வலிப்பு நோயாளியுடன் முடிந்து விடக்கூடாது என்கிற நல்லெண்ணத்தில். இந்த சிம்பத்தி என்கிற உணர்வு நம் நாட்டு பெண்களை பீடித்திருக்கும் வலிமையான நோய். அப்பொழுதான் எனக்கே புரிந்தது. கண்டுகொள்ளுங்கள் பெண்கள் கரையும் நேரம் எதுவென்று.
எனது கல்லூரிபடிப்பை முடித்து விட்டு புகழ்பெற்ற மருத்துவமனை ஒன்றில் சிறந்த மருத்துவர் ஒருவரிடம் அஸிஸ்டெண்டாக வேலையில் அமர்ந்தேன். எதிர்பாராத விதமாக காயத்ரியும் அதே ஹாஸ்பிட்டலில் அக்கவுண்டட்டாக சேர்ந்தாள். திருமணத்திற்கு பின்தான் தெரிந்தது அவள் என்னை விரும்பியே அங்கு வந்து வேலையில் சேர்ந்தாள் என்று.
அவள் தன் வெட்கத்தைவிட்டு என்னிடம் தன் காதலை கூற நான் மறுக்க அவள் பழைய விஷயங்களை ஞாபகப்படுத்த, நான் மீண்டும் மறுக்க அப்பொழுதே கவனித்தேன் அவ்வப்பொழுது பொங்கி எழும் கோபக்கணலை. பின் கடைசியாக தோற்றது நான்தான். அவளுடைய அன்பு அதீதமானது. என்னை தன் அன்பில் திக்குமுக்காட செய்துவிட்டாள்.
எனது வலிப்பு நோய் அதன் பின் எனக்கு வரவேயில்லை. எனது மருத்துவ ரிப்போர்ட் கூட நார்மல் ஆகவே இருந்தது. ஆனால் சமீப காலங்களில்தான் தெரிந்தது. காயத்திரி ஹிஸ்டீரியாவின் உச்சகட்டத்தில் வலிப்பு நோய்க்கு ஆளாகிறாள் என்று. நீங்கள் எப்படி எடுத்து கொள்வீர்களோ எனக்கு தெரியாது. நான் இப்படித்தான் எடுத்துக் கொண்டேன். என் மீது கொண்ட அதீதமான அன்பால் எனது நோயை தனதாக்கிக் கொண்டாள். அவள் என்றென்றும் என் இதயத்து பூலான் தேவிதான். அவளுடனான கலவரமான தருணங்களும் காதலின் வெளிப்பாடாகவே உணர்கிறேன். எனது உண்மையான அன்பை கடவுள் புரிந்து கொள்ளும் பட்சத்தில் அவளது நோய் கண்டிப்பாக குணமாகி விடும் என்கிற நம்பிக்கை எனக்கு அதிகமாகவே உள்ளது.