கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 5, 2022
பார்வையிட்டோர்: 1,336 
 

(1962 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தென்னை மரவாடி தொடக்கம் தேவுந்துறை முனைவரை அரசாங்கப் பாடசாலைகளில் ஆசிரியப் பணி புரிந்துவிட்டு ஓய்வு பெற்றுக்கொண்ட விசுவலிங்க வாத்தியார் ஊருக்கு வந்தார்.

அந்த நாட்களில் அவர் ஊரிலே பெரிய கிறுக்கு வாலிபனாக இருந்த அந்த நாட்களில் மனேஜர்மாரின் தகிடு தத்தங்களைத் தன்னந்தனியனாக எதிர்த்து நின்று, தன் உத்தியோகத்தை இராஜினாமாச் செய்துவிட்டுக் ‘குரங்கேற்றுக் கொள்ளாத கொம்புண்டோ’ என்று கேட்ட கவிஞனின் வாக்கில் அரசாங்கப் பாடசாலையில் உத்தியோகம் பார்க்கத் தெற்கே சென்றார்.

அப்படிச் சென்றவர் கடந்த முப்பத்திரண்டு ஆண்டு களில் ஐந்தோ , ஆறு தடவைகள் தான் ஊருக்கு வந்திருக் கிறார். தம் வருகையின் போதெல்லாம் ஊரை ஒரு கலக்குக் கலக்கிவிட்டுத்தான் போவார். போனபின்னர் ஊரும் சில நாட்களுக்கு அவரைப் பற்றிக் கதைத்துக் கொண்டிருக்கும் பின்னர் மறைந்துவிடும்.

இப்போது விசுவலிங்கவாத்தியார் நிரந்தரமாக ஊருக்கு வந்துவிட்டார். ஊருக்கெல்லாம் ‘வங்கணம்’ சொல்லும் கோணாமலைக்கிழவர், ஆயிரமடிக் கம்பத் திலே கூத்தாடினாலும் காசுவாங்கக் கீழேதானே இறங்க வேணும்’ அவர் வரவிற்குக் கட்டியங் கூறி னார்.

ஆனால் விசுவலிங்க வாத்தியாரிடம் அந்த நாளைய மிடுக்கு இல்லை. அமுசடக்காக இருந்தார். தன் ‘கொம் யூற்றட் பென்சனில்’ சீதன வீட்டைத் திருத்திக் கொண்டு வாழ்ந்தார்.

காலையில் எழுந்து, கடன்களை முடித்துக் கொண்டு இரண்டு மூன்று தேவாரங்களைத் துரித கதியிலோ மந்த கதியிலோ பாடித் திருச்சிற்றம்பலம் என்று முத்தாய்ப்பு வைத்துப் பிள்ளையார் கோயிலிலே சேவிப்பு. அதன்பின் கங்கைக்கரை நெடும் பிரம்பையும், தன் கரகரத்த தொண்டையையும் சாதனங்களாகக் கொண்டு அய லட்டையிலுள்ள ஊர்ச் சிறுவர்களுக்கு ஆனா, ஆவன்னா கற்பிப்பதான இலவசம் சேவகம். அதற்கும் பின்னர் ‘கறி’ வாங்கப் பையை எடுத்துக் கொண்டு புறப்பட்டாற் திரும்பி வரப் பதினோரு மணியாகும். மதியச் சாப்பாட் டின் பின்னர், ஒரு கோழித்தூக்கம் போட்டுவிட்டு எழுந் தாரென்றால் முகங் கழுவித் துடைத்துக் கொண்டு பிள்ளையார் கோயிலுக்கு முன்னாலிருக்கும் நிழல்வாகை யின் கீழே, அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமான பொருளைக் கண்டுவிட்டவர்போல ஊரவர்களோடு சல்லாபம்.

நிழல்வாகை மரக் கூட்டம் அவர் சொல்வதையெல் லாம் வேத உபநிடத வாக்கியங்களாகக் கேட்டது.

இதற்கான காரணம் அவரின் ஒரே மைந்தன்! பேராதனைச் சர்வகலாசாலையிற் பட்டப் படிப்புப் படிக்கிறான் என்பதை ஊரவர் அறிந்திருந்தது தான். இதனால் எல்லாந் தெரிந்தவராகக் கொள்ளப்பட்ட விசுவலிங்கத்தாரின் பேச்சையெல்லாம் ஊரவர் ரசித்துக் கேட்டார்கள். சிலர் ரசிப்பது போலக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

சிலர் அவரிடம் மகனைத் தட்டிப் பார்த்தபோது. “இந்தக் காலத்துப் பிள்ளை என்ன சொல்லுவானோ, எங்கங்க கண் போட்டிருக்கானோ. காலம் வரட்டும்” என்று அமுசடக்கமாகவே பதில் சொன்னார். ஊரிலே அவர் மதிப்பு உயர்ந்தது.

இப்படியிருக்கையில் சர்வகலாசாலையிற் படிக்கும் அவர் மகன் ஊருக்கு வந்தான். மலைநாட்டின் இதமான குளுமையில், ஒரே மகன் என்ற செழுமையோடு சிவப்பாய், அரும்பும் மீசையோடு நெடுநெடுவென்று வளர்ந்திருந்த அவன், ஊரிலே வாலைப் பெண்களின் கன வாய், லட்சியமாய்…. –

ஊரிலே அவர் மதிப்பு இன்னமும் உயர்ந்தது. ஆனாலும் “காலம் வரட்டும் பார்ப்போம்’ என்றுதான் கேட்டவர்களுக்கு விசுவலிங்கத்தார் சொன்னார்.

ஒரு வருடம் ஓடி மறைந்தது.

விசுவலிங்கவாத்தியார் மனைவியையும் கூட்டிக் கொண்டு வெளியே சென்றார். சர்வகலாசாலைப் படிப்பை முடித்துக் கொண்ட தன் மகனின் ‘சரவை’களை யெல்லாம் முடித்துக் கொண்டு அவனை ஊருக்கழைத்து வரத்தான் போயிருக்கிறார் என்று ஊர் நம்பிக்கொண்டு அவர் வருகைக்காகக் காத்திருந்தது.

இரண்டு வாரங்கள் ஓடிவிட்டன. வாத்தியார் ஊர் திரும்பவில்லை.

மூன்றாம் வாரமும் கழிந்தது. வாத்தியார் திரும்பவில்லை.

அவர் எங்கே போய்விட்டார் என்பதைப் பெண்ணைப் பெற்றவர்கள் சிரத்தையோடு விசாரித்தனர்.

‘அவர் மகன் படித்த இடத்திலேயே ஒரு யாழ்ப் பாணத்தாளைக் காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டான். கல்யாணத்திற்குத்தான் வாத்தியார் போயிருக்கிறார்’ என்பதைக் கடைசியாக ஊர் தெரிந்து கொண்டது.

‘அப்பன் ஊரை மறந்து இருந்தவன் தானே. அவனைப் போலத்தானே மகனும் இருப்பான்’ என்று காத்திருந்த சிலர் திராட்சைப் பழ நரிக்கதை பேசிக் கொண்டிருக்கையில் வாத்தியார் ஊருக்கு மீண்டார்.

இப்போது விசுவலிங்க வாத்தியார் எல்லாந் தெரிந்தவரல்ல. அவர் சொல்வதை வேத உபநிடதங்களாகக் கேட்டுக் கொண்டிருக்க ஊரிலே எவரும் இல்லை.

ஏனென்றால் ஒரு பொருளின் தேவையைப் பொறுத்துத்தான் அதன் மதிப்பு என்ற விலை-அல்லது. விலை என்ற மதிப்பு-இருக்கும் என்ற பொருளாதார அரிச்சுவடி, பொருளாதாரம் கற்காத ஊரவர்களுக்கெல் லாம் தெரிந்தே இருந்தது.

– தமிழின்பம் 1962

– ஒரு காவியம் நிறைவு பெறுகின்றது (ஐம்பது சிறுகதைகள்), முதற் பதிப்பு ஒக்டோபர் 1996, மித்ர வெளியீடு, சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *