உழைப்பும் மூளையும்

0
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 18, 2013
பார்வையிட்டோர்: 14,213 
 

உழைப்பும்விறகு வெட்டி ஒருவனுக்கு திடீரென்று ஒரு சந்தேகம் வந்துவிட்டது. தன்னுடைய தேசத்து ராஜாவிடம், “”மகாராஜா, தங்களுடைய ராஜ்யத்தில் எல்லாம் சரிதான். ஆனால் எனக்கு மாத்திரம் தினம் ரெண்டு ரூபாய் சம்பளம் கொடுக்கிறீர்கள். மந்திரிக்கோ மாசம் ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுக்கிறீர்கள். எல்லா மக்களையும் சமமாக நடத்தும் நீங்கள் சம்பள விஷயத்தில் மாத்திரம் ஏன் வித்தியாசம் காட்டுகிறீர்கள்?”

என்று கேட்டான்.

மகாராஜாவுக்கு சந்தோஷம் வந்துவிட்டது.

“”அப்படியா, பேஷ்… சரியான கேள்வி. உனக்கு இதைப்பற்றி சரியான பதில் சொல்கிறேன். முதலில் நீ ஒரு காரியம் செய்யவேண்டும். அதோ பார்! அங்கே ஒரு பாரவண்டி போகிறது. அதில் என்ன போகிறது என்று விசாரித்துவிட்டுவா…” என்றார்.

விறகு வெட்டி ஓடினான். கொஞ்சநேரத்தில் திரும்பிவந்து, “”மகாராஜா நெல் பாரம் வைத்துப் போகிறது…” என்று சொன்னான்.

“”அப்படியா எங்கே போகிறது..?” என்று கேட்டார் ராஜா.

“”அய்யோ.. அதைக் கேட்க மறந்துட்டேனே…” என்று ஓடினான்.

விறகு வெட்டி திரும்பிவந்து, “”அது பிரம்ம தேசம் போகிறதாம்!” என்றான்.

“”அப்படியா? எங்கிருந்து போகிறதாம்?” என்று கேட்டார் மகாராஜா.

“”அடடா அதைக்கேட்க மறந்துவிட்டேனே…” என்று விறகுவெட்டி மறுபடியும் ஓடினான்.

கேட்டுவிட்டு திரும்பிவந்த விறகுவெட்டி, “”மகாராஜா… அது, ரங்கசமுத்திரத்திலிருந்து பிரம்ம தேசம் போகிறதாம்…” என்று சொன்னான்.

“”அப்படியா அது என்ன நெல்?” என்றார் மகாராஜா.

மறுபடியும் விறகுவெட்டி ஓட ஆரம்பிக்கும்போது, அங்கே தற்செயலாய் மந்திரி வந்து சேர்ந்தார்.

மகாராஜா, விறகு வெட்டியை உட்காரச்சொல்லிவிட்டு மந்திரியிடம், “”இந்தப் பக்கமாக ஒரு பாரவண்டி கொஞ்ச நேரத்துக்கு முன்னால் போனது. அது எங்கே போகிறது என்று பார்த்துவிட்டு வாரும்…” என்று சொன்னார்.

மந்திரி நிதானமாகப் புறப்பட்டுப் போய் சிறிது நேரம் கழித்து வந்து, “”மகாராஜா, அந்த வண்டி ரங்கசமுத்திரத்திலிருந்து பிரம்மதேசம் போகிறது. நெல்பாரம். யானைக்கொம்பன் நெல் கோட்டை விலை ஏழரை ரூபாய். மழை காரணமாக பாதைகள் சரியில்லாததால், வண்டி இந்த வழியாகப் போகிறது. வண்டி ஓட்டிக்கொண்டு போகிறவனின் பெயர் வெள்ளையதேவன். தளவாய்த் தேவனின் மகன். சொந்த ஊரே ரங்கசமுத்திரம்தானாம். வயது இருபத்தைந்து இருக்கும்…”

– இப்படிப் பல விஷயங்களை சொல்லிக்கொண்டே போய், “”கடைசியாய் கவனித்ததில் அவனிடத்தில் வித்தியாசமாக ஒன்றும் தோன்றவில்லை எனக்கு. மேற்கொண்டு தங்கள் உத்தரவுக்குக் காத்திருக்கிறேன்…” என்றார் மந்திரி.

விறகு வெட்டிக்கு ஒரே ஆச்சர்யமாகப் போய்விட்டது. மந்திரி போனபின் மகாராஜாவிடம் அவன் சொன்னான், “”நம்முடைய மந்திரி எவ்வளவு கெட்டிக்காரராக இருக்கிறார்…” என்று தன்னுடைய ஆச்சர்யத்தையும் சந்தோஷத்தையும் வெளியிட்டான்.

“”இப்போது புரிகிறதா? உனக்கும் மந்திரிக்கும் உள்ள சம்பள வித்தியாசம்…” என்றார் ராஜா.

“‘ஹி..ஹி..” என்று சிரித்து, “சரிதான்’ என்ற பாவனையில் தலையை ஆட்டினான் விறகுவெட்டி.

மூளை உழைப்பின் நுண்மையை உடல் உழைப்பாளிகள் உணர்ந்துகொள்ள வேண்டும். உடல் உழைப்பின் அருமையை மூளை உழைப்பாளிகள் புரிந்துகொள்ள வேண்டும்.

– தேனி முருகேசன் (ஜூன் 2013)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *