மஞ்சள் நிறப் பைத்தியங்கள

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 7, 2012
பார்வையிட்டோர்: 7,610 
 

அரசு மருத்துவமனையின் வெளி வராண்டாவில் நுழைந்தபோது எனக்குப் பதற்றம் குறையத் தொடங்கியிருந்தது. ஜன நெரிசலைக் கடந்துபோவது மனதிற்கு உவப்பானதாக இல்லையென்றாலும் சற்று நிம்மதியாகத்தான் இருந்தது. மருத்துவமனையின் கட்டடங்கள் முழுவதும் ஆரஞ்சு வண்ணம் தீட்டியிருந்தார்கள். விளம்பரங்களும் அறிக்கைகளும் எச்சரிக்கைகளும் எரிச்சலூட்டின. அன்று பிற்பகல் மதிய உணவு இடைவேளையின்போது லிங்கம் எலிமருந்தை உண்டு மயங்கி வாந்தியெடுத்திருந்தான். பிற்பாடு உடன் பணிபுரியும் அலுவலகச் சிப்பந்திகள் மருத்துவமனைக்குக் கொண்டுவந்து சேர்த்திருந்தார்கள்.

என் நண்பனின் பெயர் லிங்கேஸ் வரன். நாங்கள் இருவரும் ஒன்றாகப் படித்து வெவ்வேறு வேலைகளுக்குத் தேர்வு எழுதி அரசுப் பணியில் அமர்ந்திருக்கிறோம். குடும்பம், குழந்தைகள் என்றிருக்கும் எல்லோருக்குமான தனித்தனியான புறவுல கத்தை விட்டுவிட்டு நாங்கள் இரு வரும் இணையும் ஒரு புள்ளியைச் சொன்னால் எங்களது பழக்கவழக்கங்களும் பலவீனமான விபரங்களும் வெளியே தெரியவரும். தற்காப்பும் நட்பின் இலக்கணமும் கருதிச் சில விசயங்களைச் சொல்லாமல் தவிர்க்கத்தான் வேண்டும். லிங்கம் ஏற்கனவே ஒருமுறை எலிமருந்தைத் தின்று வாந்தியும் வயிற்றுப்போக்குமாகத் தனியார் மருத்துவமனையில் நான்கு நாட்கள் சிகிச்சை பெற்றிருந்தான். இது கடந்த மூன்று மாதங்களுக்கு முந்தைய கோடையில் நடந்தது. குளுகோஸ் பாட்டில் தலை கீழாகத் தொங்கியதை வேடிக்கையாகத் தன் மூத்த மகளிடம் காட்டிக்கொண்டிருந்தது இன்னமும் எனக்கு ஞாபகத்தில் உள்ளது. அதற்குப் பிறகு இப்போது அரசுப் பொது மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். அதே எலிமருந்து, அதே குடும்பச் சண்டை, அதே சலிப்புணர்ச்சி என்பதோடு, மஞ்சள் நிற உல்லன் பனியனைப் பற்றியும் ஜாஸ்மின் ரோஸி ஒரு தேவதைபோல வந்து தன்னை அழைத்துச்செல்வதையும் சொல்வான் என்று அவனைத் தேடி நடந்துகொண்டிருக்கிறேன்.

மருத்துவமனை வராண்டாவில் நவதானியங்களை முளைகட்டி விற்றுக்கொண்டிருந்த இளைஞன் என் தோளில் இடித்துவிட்டு வேகமாகக் கடந்து போனான். என்னைத் தாண்டிச் சென்ற இளவயது செவிலிக்கும் அவளுடன் சென்ற சீருடையணியாத ஊழியருக்கும் ஸ்ட்ரெச்சர் தள்ளிக்கொண்டு போன வயதான பெண்மணிக்கும் விலகி வழிவிட்டபடி நடந்து சென்றேன். பொதுப் படுக்கைப் பிரிவில் நோயாளிகளின் அருகில் அரை மனதாக அமர்ந்திருந்த அவர்களுடைய உறவினர்கள் எழுந்து சென்று விடுகிற அவசரத்திலிருந்தனர். காலை உணவைப் பற்றிய எதிர்பார்ப்புகளோடு நோயாளிகள் வெறுப்புடன் மருந்துகளை விழுங்கிவிட்டுப் படுத்திருந்ததைத் தெரிந்துகொள்ள முடிந்தது. அந்த இளைஞன் முளைகட்டிய நவதானியப் பொட்டலங்களை ஒவ்வொரு படுக்கையாகச் சென்று விற்றுக்கொண்டிருந்தான். சிவப்பு நிறக் காரெட்டின் வட்ட வடிவம் முளைவிட்ட தானியங்களுக்கு ஊடே தெரிந்தது. அதைவிடத் தானியங்களின் நிறங்களும் அவற்றின் முளைவிட்ட வெண்நரம்புகளும் தெளிவாகத் தெரிந்தன. பை நிறைய நவதானியப் பொட்டலங்கள் வைத்திருந்தான். தன்னிடம் வாடிக்கையாக வாங்கிக்கொள்ளும் நோயாளிகளின் படுக்கைக்குச் சென்றதும் அவர்கள் கேட்காமலேயே பொட்டலங்களைத் தந்தான். அவர்கள் மருந்துப் பொட்டலங்களைப் போல அவற்றை வாங்கிப் பிரித்தார்கள். எனக்கு ஜாஸ்மின் ரோஸியின் ஞாபகம்தான் வந்தது.

என்னைக் கடந்து சென்ற ஸ்ட்ரெச்சரைப் பார்த்தேன். வெள்ளைத்துணி போர்த்தப்பட்டிருந்த உடலில் தலையின் வடிவம் துல்லியமாகத் தெரிந்தது. குறிப்பாகக் கண்களின் குழிகள். முக்கோணமும் பாதி வட்டவடிவமும் கூடிய அம்முகம் எனக்கு லிங்கத்தை ஞாபகப்படுத்தியது. எதிரே வந்த செவிலியிடம் லிங்கத்தின் பெயரைச் சொல்லி அவனது படுக்கையிருந்த இடத்தையும் அவனது உடல் நலத்தைப் பற்றியும் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் எனத் தயங்கி நின்றேன். நான் தயங்கி நின்றதைத் தன் அவசரத்திற்கு வழிவிடுவதாக நினைத்து அவள் வேகமாகக் கடந்து சென்றாள். லிங்கம் தன் வீட்டாருக்குத் தெரியாமல் எதுவும் செய்வதில்லை என்பது அவன் மனைவியைவிட எனக்கு நன்கு தெரியும். அவன்மேல் எனக்கு இப்போதுகூட நம்பிக்கை இருந்தது. அவனை ஒரு மனநோய் மருத்துவரிடம் காண்பிக்கலாமா என அவன் மனைவி லட்சுமியிடம் கேட்டேன். அவள் “உன்னையும்தான் அங்கக் கூட்டிட்டுப் போகணும். இரண்டு பேரும் சேர்ந்து ஏன் இப்படி எங்க உயிரை எடுக்கீறிங்க?” என்று சத்தம் போட்டாள். அதற்குப் பிறகு டாக்டரிடம் செல்வதைப் பற்றி அவளிடம் எதுவும் பேசுவதில்லை.

லிங்கமும் நானும் மலைவாசஸ் தலத்திற்கு ஒருமுறை சென்றிருந்தோம். இந்த வருடத்தின் முதல் நாளில் அங்குதானிருந்தோம். நல்ல குளிர். இந்த மலையின் வாசனையைப் போல வேறெங்கும் உணர்ந்திருக்கவில்லை என்று லிங்கம் என்னிடம் சொன்னான். எனக்கும் அது உண்மையாகத்தான் பட்டது. மலையில் ஒவ்வொரு பொருளும் இயல்பிலேயே குளிர்ச்சியாகவும் வாசனையாகவும் இருந்தது. என்ன வாசம் என்று தெரிந்துகொள்ள முடியவில்லை. மருந்தின் வாசம்போலவும் செடிகளின் வாசம்போலவுமிருந்தது.

அந்த ஊரில் தற்செயலாகத்தான் அந்தப் பெண்ணைப் பார்த்தோம். அவள் பரிசுப் பொருட்களும் செயற்கைப் பூக்களும் விற்கும் கடையில் வேலைக்கு இருந்தாள். அவளது நீண்ட மூக்கும் குறுகிய கண்களும் வட்டமுகமும் குளிருக்கென்று அணிந்திருந்த உடைகளும் அவற்றின் நிறங்களும் என்னைப் போலவே லிங்கத்திற்கும் பிடித்துவிட்டன. அவள் நின்றிருந்த இடத்தில் பிளாஸ்டிக் பட்டாம்பூச்சிகளைக் கட்டித் தொங்கவிட்டிருந்தார்கள். அவளைச் சுற்றிப் பட்டாம் பூச்சிகள் பறப்பதும் சிறகசைப்பதுமாக இருந்தன. அங்கிருந்த நாட்களில் தினமும் அந்தக் கடைக்குச் சென்று அவளிடம் பொருட்களின் விலைகளைப் பற்றி விசாரிப்பதும் பொருட்களை எடுத்துக்காட்டச் சொல்வதுமாக சிறிது நேரமாவது இருந்துவிட்டு வருவோம். மாலைநேரத்தில் அந்த பிளாஸ்டிக் பட்டாம் பூச்சிகளுக்கு விளக்குகள் போட்டுவிடுவார்கள். அந்த வெளிச்சத்தில் அவற்றின் சிறகடிப்புக்கு அருகில் நின்ற அந்தப் பெண் உண்மையில் ஒரு தேவதையைப் போலத்தான் இருந்தாள். கனவுகளில் மட்டும் வரும் தேவதை.

இந்த மலை ஊரில் தன் அலுவலகம் இருந்தால் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இங்கேயே வந்திருக்கலாமென்று லிங்கம் சொன்னான். அவள்மீது அவன் அளவு கடந்து மோகங்கொண்டிருந்ததை உணர்ந்தேன். என்ன செய்வது என்றுதான் தெரியவில்லை. இரவில் வெகுநேரம் புகைபிடித்தபடி அவளது சிலிர்ப்பையும் ஆங்கிலமும் ஹிந்தியும் கலந்த பேச்சையும் அழகான உதடுகளையும் திரும்பத் திரும்ப நினைவுபடுத்தியவாறு இருப்போம். நான் மனதில் நினைத்திருந்ததைத்தான் லிங்கம் சொல்லிக்கொண்டிருந்தான். அதுவும் எனக்காகத்தான் சொல்லிக்கொண்டிருந்தான் என்று நினைத்துக்கொள்வேன்.

அவள் வேலைசெய்த கடையில் முளைகட்டிய நவதானியங்களை உலரவைத்துப் பிளாஸ்டிக் பைகளில் பேக்செய்து விற்றார்கள். சிவப்புநிறக் காரெட் வட்டவடிவமாக ஒவ்வொரு பையிலும் பார்ப்பதற்கு அழகாகத் தெரிந்தது. இப்போது இந்த மருத்துவமனையில் விற்கிறார்களே அதேபோல. குளிர்ப் பிரதேசத்தில் அந்தத் தானியங்களைச் சாப்பிடுவதற்குச் சுவையாக இருப்பதாக லிங்கம் சொன்னான். ஒவ்வொருமுறையும் அவளைச் சந்தித்துவிட்டு வந்த போதும் நவதானியப் பொட்டலத்தைத்தான் வாங்கிக்கொண்டு வருவோம். வட்டவடிவமான கேரட்டை அவன் தனது கன்னத்திலும் உதடுகளிலும் மாறிமாறி ஒற்றிக்கொண்டேயிருப்பான். சிவந்த கேரட்டின் நிறம் அவனது கன்னத்தில் ஒட்டிக்கொள்வதுபோல அவ்வளவு அழுத்தமாக வைத்தெடுப்பான். அவள் கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த அடையாள அட்டையில் ஜாஸ்மின் ரோஸி என்று எழுதப்பட்டிருந்ததை எனக்கு லிங்கம்தான் காட்டினான். இப்போது வட்டவடிவமான கேரட்டையும் முளைகட்டிய நவதானியங்களையும் பார்க்கும்போது ஜாஸ்மின் ரோஸி தொடர்பான ஞாபகங்கள்தாம் வருகின்றன. குறிப்பாக அந்த இரவும் அவளது மஞ்சள் நிற உல்லன் பனியனும்.

லிங்கத்தைத் தீவிர சிகிச்சைப் பிரிவில் மூன்றாவது படுக்கையில் படுக்கவைத்திருந்தார்கள். லிங்கம் முனகிக்கொண்டு படுத்திருந்தான். நினைத்ததுபோலவே என் மனைவியும் மகளும் வந்திருந்தார்கள். மகளின் பள்ளிச் சீருடையைப் பார்த்ததும் எனக்குப் புரிந்துவிட்டது. லெட்சுமி “காலையிலே கோவத்துல ஏதோ திட்டிட்டேன். திட்டுனது என்னான்னுகூட எனக்கு மறந்து போச்சு. எலிமருந்தை வாங்கிச் சாப்பிட்டு ஆபிஸிலேயே வாந்தி எடுத்து, மயங்கி விழுந்துட்டாரு. எலி மருந்தை எவன்தான் கண்டு பிடிச்சானோ? எல்லாம் என் தலை விதி” என்று தலையில் அடித்துக்கொண்டாள். பக்கத்திலிருந்த என் மகள் அவளது கைகளைப் பிடித்துக்கொண்டு “அழாதீங்க ஆன்ட்டி. அழாதீங்க ஆன்ட்டி” என்று சமாதானப்படுத்தினாள்.

“நானெல்லாம் சாகனுமின்னா எத்தனை தடவை சாகிறது? எத்தனை தடவை என்னையத் திட்டியிருப்பாரு? அதெல்லாம் வெளியிலே சொல்லியிருப்பேனா?”

“அழாதீங்க ஆன்ட்டி. அழாதீங்க ஆன்ட்டி.”

“ஸ்வெட்டரைக் கழட்டாதே ஜாஸ்மின். ஸ்வெட்டரைக் கழட்டாதே ஜாஸ்மின்னு ராத்திரியெல்லாம் புலம்புறாரு. சரி ஏதாவது கனவுகண்டிருப்பாருன்னு விட்டுட்டேன்.”

என் மனைவியிடமும் “எப்போதும் மலையில இருக்கிற மாதிரியே தோனுது. மலை வாசமாவே இருக்கு” என்று லிங்கம் ஒருமுறை சொல்லியிருக்கிறான். இவள் அதைப் பற்றி எந்த விவாதத்தையும் மேற்கொள்ள வில்லை. “கையெல்லாம் ஜில்லுன்னு இருக்கிற மாதிரி தோனுதா?” என்று பதிலுக்குக் கேட்டிருக்கிறாள். இவனும் “ஆமாம்” என்று சொல்லியிருக்கிறான்.

இவள் “உலகத்தில் உங்க இரண்டு பேருக்கும் மட்டும் ஏன்தான் இதெல்லாம் நடக்குதோ? நாங்களும் உங்ககூடத்தானே அண்ணே இருக்கோம். உங்களுக்கு மட்டும் எப்படி மலை வாசம் தெரியுது?” என்று தலையில் அடித்துக்கொண்டு லிங்கத்தின் மனைவியைக் கட்டிக்கொண்டு அழுதிருக்கிறாள். லிங்கத்தின் படுக்கைக்கு அருகில் நீலநிறப் புடவை அணிந்த நர்ஸ் வந்தாள். அவனது கீழ் இமைகளைத் தனது பெருவிரலால் இழுத்துப் பார்த்துவிட்டு நாக்கை நீட்டச் சொன்னாள். லிங்கம் மெதுவாக நாக்கை நீட்டினான். அவனது நாக்கு வெளுப்பாகயிருந்தது.

லிங்கம் வேலைக்குச் சேர்ந்தபோது சம்பளம் 500 ரூபாயாக இருந்தது. அந்தச் சம்பளத்தில் ஆறு நபர்கள் ஐந்து வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்திருக்கிறார்கள். அவனுக்கு வேலை கிடைத்ததும் அம்மா உடனடியாக அவன் திருமணத்தை முடித்துவிட்டார். லிங்கம் லட்சுமியைத் திருமணம் செய்துகொண்டபோது எல்லாரும் ஒரே வீட்டில்தான் இருந்தார்கள். லிங்கம் தான் அந்தக் குடும்பத்தின் மூத்த பையன். அவனுக்குப் பிறகு பிறந்த மற்றவர்கள் மூவருமே பெண் பிள்ளைகள். தங்கைகள் மூவரும் இவன் மேலும் லட்சுமியின் மேலும் பிரியமாக இருந்தார்கள். கல்யாணம் செய்துகொண்ட புதிதில் லிங்கம் என்னிடம் ஒருமுறை வந்து “லட்சுமியுடன் இரவில் தனியாக இருக்கும்போது தங்கைகள் மூவரும் விழித்துக்கொண்டிருக்கிறார்கள். அது எனக்குப் பெரும் மனநெருக்கடியைத் தருகிறது” என்று சொன்னான். “இது உனக்கு மட்டுமல்ல எல்லா வீட்டிலும் நடப்பதுதான். இதைப் பெரிதுபடுத்தாதே” என்று சொன்னேன். அவன் கேட்பதாக இல்லை. என் மனைவியை அழைத்து லட்சுமியிடம் சொல்லி ஏதாவது செய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொண்டான். அவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. லிங்கத்தின் தொந்தரவு தாங்க முடியாமல் ஒரு ஞாயிற்றுக்கிழமை லட்சுமியை அழைத்துவந்து என்ன விசயம் என்று விசாரித்தாள். லட்சுமி சிரித்துவிட்டாள். எனக்கும் என் மனைவிக்கும் வெட்கமாகயிருந்தது. லட்சுமி அதை உணர்ந்தவளாக எங்களைச் சமாதானப்படுத்தினாள். “தங்கைகளை வைத்துக்கொண்டு திருமணம் செய்யும்போது இதையெல்லாம் யோசித்திருக்க வேண்டும்” சிரித்துக்கொண்டே திட்டினாள்.

லிங்கம் எனக்குத் தெரிந்து முதல் சகோதரி திருமணத்திற்குப் பிறகு தான் எலிமருந்தைக் கையில் எடுக்கப் பழகியிருக்கிறான். அந்தச் சகோதரி சங்கரேஸ்வரியின் கணவனுக்கு விபத்து நடந்ததாகத் தகவல் வந்ததும் நாங்கள் பஸ்ஸில் புறப்பட்டுச் சென்றோம். பஸ்ஸில் லிங்கம் அழுதபடியிருந்தான். மாப்பிள்ளை இறந்துபோகக் கூடாது என்று புலம்பிக்கொண்டே வந்தான். சங்கரேஸ்வரியின் கணவனுக்குக் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. அறுவைச் சிகிச்சை செய்து பிளேட் வைத்து எலும்பைச் சேர்த்திருந்தார்கள். நாற் பதாயிரத்திற்கு மேல் செலவாகுமென்றும் முன்பணமாகப் பாதிக்கு மேல் கட்டச் சொல்லியிருந்தார்கள். லட்சுமி தன் கையில், காதில், கழுத்திலிருந்தவற்றை எல்லாம் கழற்றித்தந்து பணத்திற்கு ஏற்பாடு செய்தாள். வங்கியில் நகையை வைத்த ரசீதையும் வீட்டிலிருந்த இரண்டு சகோதரிகளையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டேயிருந்தவன் என்ன நினைத்தானோ எலிமருந்தை எடுத்துக்கொண்டான். லிங்கம் எலிமருந்தைத் தின்று படுத்தது அதுதான் முதல்தடவை. அவனைக் காப்பாற்றி வீட்டுக்குக் கொண்டுவந்தபோது ஜாஸ்மின் ரோஸி மஞ்சள் உல்லன் பனியன் அணிந்து தன் அருகில் இருந்தாள் என்றும் அவள் தன்னை ஒரு தேவதைபோலத் தூக்கிக்கொண்டு பறந்தாள் என்றும் என்னிடம் கூறினான். பயத்துடன் அவனைப் பார்த்தேன். அவன் ஆமாம் என்பதுபோல என் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தான்.

லிங்கம் மருத்துவமனையிலிருந்து வந்து விடுப்பிலிருந்த நாட்களில், அலுவலகம் முடிந்து அவனைப் பார்த்துவிட்டுத்தான் நான் வீட்டிற்குச் செல்வேன். ஒரு தேவதைபோல ஜாஸ்மின் ரோஸி பட்டாம்பூச்சிகளோடு வந்து தன்னைத் தூக்கிக்கொண்டு பறந்து சென்றதைப் பற்றி அவன் தினமும் என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தான். அவனைப் போல என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. இறந்து மீண்டவனுக்குத்தான் ஜாஸ்மின் ரோஸி ஒரு தேவதையைப் போலக் காட்சி தருவாள் போல. நானும் அவளை ஒரு தேவதையைப் போலப் பார்த்துவிட வேண்டுமென்றும் என்னையும் அவள் தூக்கிக்கொண்டு பறக்க வேண்டுமென்றும் நினைக்கத் தொடங்கினேன். அப்படி நினைப்பது தவறல்ல என்றுதான் சொல்ல வேண்டும். மஞ்சள் நிற உல்லன் பனியனை அவன் எனக்குத் தந்து அணிந்துகொள்ளச் சொன்னான். அன்றிரவு ஜாஸ்மின் ரோஸி ஒரு தேவதைபோல வந்தாள். என்னைத் தூக்கிக்கொண்டு பறந்தாள். வானத்தில் நானும் அவளுடன் பறந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். ஆச்சர்யமாக இருந்தது. கண்ணாடிப் பட்டாம்பூச்சிகள் எங்களைச் சுற்றிப் பறந்துகொண்டிருந்தன. லிங்கம் தன் அதிஷ்டத்தை மஞ்சள் நிற உல்லன் வடிவத்தில் கைவசப்படுத்தியிருந்தான். ஜாஸ்மின் ரோஸி என்னை “மஞ்சள் நிறப் பைத்தியம், மஞ்சள் நிறப் பைத்தியம்” என்று திட்டியபடி என்னைப் படுக்கையில் இறக்கிவிட்டாள். தொடர்ந்து நானும் அவனும் மாறிமாறி அவளது உல்லன் பனியனை அணிந்துகொண்டு உறங்கினோம். பறந்தோம். பிறகு ஜாஸ்மின் ரோஸிக்காக ஏங்கினோம். அவளோடு பேசினோம்.

“ஜாஸ்மின், நான் இறந்துபோனால் தான் நீ வருவாயா?”

“ஜாஸ்மின், நான் இறந்துவிடுவது போல நடித்துக்கொண்டிருப்பது உனக்குத் தெரியவில்லையா?”

“ஜாஸ்மின், நான் என்றாவது இறந்துபோவதற்கு முன் உன்னை முத்தமிடமாட்டேனா?”

“நீ என்னுடன் இருந்துவிடு. நீ என்னைவிட்டுச் செல்வதில் எனக்கு விருப்பமில்லை.”

“ஜாஸ்மின் என் உல்லன் பனியனைக் கழற்றாதே. மஞ்சள் நிற உல்லன் பனியன், எனக்குப் பறக்கும் மாயக்கம்பளத்தைப் போல.”

“மஞ்சள் நிறப் பைத்தியங்கள் என்று நீ கேலிசெய்கிறாயா? செய்து கொள். மஞ்சள்நிறத் தேவதையாக நீ இருக்கும்போது, பைத்தியமாக நான் இருப்பதற்குச் சம்மதம்தான் ஜாஸ்மின் ரோஸி.”

ஜாஸ்மின் ரோஸியின் கோதுமை நிறமும் அதற்குப் பொருத்த மாக அவள் அணிந்துவந்த உடைகளின் நிறமும் நினைவைவிட்டு நீங்காதவை. லிங்கத்திற்கும் எனக்கும் அவள்மேல் ஈர்ப்பு கூடியபடிதான் இருந்தது. ஏனென்று தெரியாத விருப்பமும் விட்டு விலக முடியாத குழப்பமும் அப்போது எங்களிடம் இருந்தன. என்ன செய்வது என்று தெரியவில்லை. ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் பொருட்களைப் பற்றிப் பேசுவது தவிர்த்து வேறு ஏதேனும் அவளுடன் உரையாட முடியுமா என்று தெரியவில்லை. ஊருக்குத் திரும்புவதற்கு முதல் நாள்தான் அவள் “தினமும் வந்து விசாரித்துவிட்டு ஏன் ஒரு பொருளும் வாங்காமல் செல்கிறீர்கள்? என்னுடன் பேசுவதற்கு உங்களுக்கு விருப்பமில் லையா? இந்தக் கண்ணாடிப் பட்டாம்பூச்சிகள் சொல்வதுபோல் நீங்கள் என்னைப் பார்ப்பதற்காக மட்டும் வருவது உண்மைதானா?” அவள் எங்களுடன் பேசத் தொடங்கியதும் எங்களுக்குள் அந்த மாலை வேளையில் அப்போதுதான் பறித்த மஞ்சள் பூக்களை அவற்றின் இதழ்களில் உருண்டபடியிருந்த பனித்துளிகளோடு சேர்த்து அவளுக்குப் பரிசாகத் தர ஆசைப்பட்டோம். அவளுடன் அப்போது தொடங்கிய உரையாடல், இரவு உணவு சாப்பிடும்வரை தொடர்ந்தது. அவளை நாங்கள் விட்டுச்செல்ல மனமில்லாமல் இருந்தோம் என்று சொன்னதும் சிரித்துக்கொண்டாள். அந்தப் பனியிலும் இருட்டிலும் அவளது சிரிப் பின் அழகு சொல்ல முடியாதது. இறக்கமான பாதையில் அவளுடன் நடந்து போனோம். எங்களுக்குப் பின்பாக அவளுடன் இருந்த பட்டாம் பூச்சிகளும் பறந்து வந்தபடியிருந்தன. கண்ணாடிப் பட்டாம் பூச்சிகள் வண்ண விளக்குகளோடு பறந்து வந்தது எங்களது கனவுகளை வளர்க்கத்தான் செய்தது. சாலையில் சோடியம் விளக்குகள் வரிசையாக இருந்தன. குல்லாய் அணிந்த சிறுவர்கள் சிலர் சைக்கிளில் எங்களுக்கு முன்பாகச் சென்றுகொண்டிருந்தார்கள்.

சோடியம் விளக்கடியில் அவள் நின்றபோது அனைத்துப் பட்டாம்பூச்சிகளும் அவளைச் சுற்றி வட்டமிட்டன. வழக்கமாக வரும் ஜீப், இன்று நேரம் கடந்தும் வரவில்லையென்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள். அவளுக்கு விருப்பமென்றால் நாங்கள் தங்கியிருந்த அறையில் வந்து தங்கிக்கொள்ளலாம் என்று லிங்கம் சொன்னான். ஜாஸ்மின் ரோஸி யோசிக்கவே இல்லை. சரி என்று சொல்லி எங்களுக்கு முன் நடந்து சென்றாள். அன்று இரவு அவள் எங்களுடன் தங்கினாள். இரட்டைக் கட்டிலின் மெத்தையில் அவள் நடுவில் படுத்துக்கொண்டாள். நானும் லிங்கமும் அவள் அழகில் மயங்கியவர்களாக நின்றிருந்தோம். அந்த இரவில் ஜாஸ்மின் ரோஸி எங்களுடன் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. நானும் லிங்கமும் அவளுக்கு வலதும் இடதுமாகப் படுத்துக்கொண்டோம். உறக்கம் ஒரு மாயத்தைப் போல எங்கள்மேல் கவிழ்ந்தது. கனவில்கூட அவளது உருவம் எனக்கு வந்திருக்கவில்லை. அதேபோலத்தான் லிங்கத்திற்கும் நடந்திருக்கும் என நினைக்கிறேன். அவள் எங்களுக்கு முன்பாக எழுந்து சென்றிருந்தாள். குளித்திருந்ததற்கான அடையாளங்கள் பாத்ரூமில் இருந்தன. படுக்கையில் அவளது மஞ்சள் நிற உல்லன் பனியனும் கூடவே ஒரு பெரிய பிளாஸ்டிக் பட்டாம் பூச்சியும் இருந்தன. கடையில்தானே இருப்பாள் என்று ஷாப்பிங் காம்ப்ளக்ஸிற்குச் சென்றோம்.

அவள் கடைக்கு இன்னும் வந்திருக்கவில்லை. யாரிடம் கேட்பது என்றும் தெரியவில்லை. மஞ்சள் நிற உல்லன் பனியனையும் அந்தப் பட்டாம்பூச்சியையும் என்ன செய்வது என்று தெரியாமல் கையில் வைத்தபடி காம்ப்ளக்ஸின் வாசல் முன்னால் நின்றிருந்தோம். பகல் பொழுதைத் தாண்டியும் இன்னமும் வரவில்லை என்றதும் கடைக்குள் சென்று கேட்டோம். அவள் வழக்கமாக நிற்கும் இடத்துக்கு அருகிலிருந்த பெண்ணிடம் கேட்டதற்கு, “ஜாஸ்மின் ரோஸி என்றொரு பெண்ணே எங்கள் கடையில் வேலைசெய்யவில்லை. நீங்கள் எந்த ஜாஸ்மினைத் தேடுகிறீர்கள்?” என்று எங்களிடம் கேட்டாள். நாங்கள் மஞ்சள் நிற உல்லன் பனியனைக் காட்டிப் பரிசுப்பொருட்கள் விற்கும் இடத்தில் நின்றிருக்கும் சற்று உயரமான நீளமான மூக்கும் கோதுமை நிறமுமாக இருக்கும் அவளது அடையாளங்களைச் சொன்னோம். அப்படியான பெண் யாரும் தங்கள் கடையில் பணிபுரியவில்லை என்று சொல்லிவிட்டார்கள். எங்களுக்குப் பதற்றமாகவும் பயமாகவுமிருந்தது. தொடர்ந்து நான்கு நாட்களுக்கும் மேலாகச் சந்தித்த பெண் மாயமாக மறைந்துவிடுவது எதன் பொருட்டு நடந்த சதி என்று தெரியவில்லை. பிறகு நாங்கள் ஊருக்குத் திரும்புவது என்று முடிவுசெய்து பேருந்து நிலையத்திற்கு வந்தோம்.

மஞ்சள் நிற உல்லன் பனியனை லிங்கம் தற்செயலாக முகர்ந்து பார்த்தபோது அவளது அருகாமையின் வாசத்தை உணர்ந்தான். அவனைப் போலத்தான் நானும் உணரத் தொடங்கினேன். வெளிச்சமற்ற அந்த மாலை வேளையில் பனியும் காற்றும் ஜனங்களின் நடமாட்டமும் கூடிய இடத்தில் அவள் அருகாமையில் இருந்தது போன்ற வாசத்தை வெகுநுட்பமாக எங்களிருவராலும் நுகர முடிந்தது. அவள் எங்கோ அருகில்தான் இருந்தாள் என்று பேருந்து நிலையம், அதன் அருகாமையில் இருந்த தேநீர்க்கடைகள், பேக்கரிகள் என்று சற்று நேரம் தேடினோம். எங்கும் அவள் தென்படவில்லை.

பிறகு அங்கிருந்து வீட்டிற்கு வரும்வரை அவள் எங்களுக்கு அண்மையிலிருந்ததைப் போன்ற உணர்வுதான் எழுந்தது. மஞ்சள்நிற உல்லன் பனியனைப் பார்த்ததும், லிங்கத்தின் மகள், “புதிதாக வாங்கிய உல்லன் பனியன் அப்பாவைத் தவிர வேறு யாருக்கும் பொருந்தாது” என்று சொன்னாள். அந்த மஞ்சள்நிற உல்லன் பனியனைக் கையில் எடுத்தபோதெல்லாம் மலையின் வாசமும் ஜாஸ்மின் ரோஸியின் வாசமும் ஒரு அதிஷ்டத்தைப் போல எங்களைத் தொடர்ந்தபடியிருந்தன. அதற்குப் பிறகுதான் அவன் தீவிரமாக ஜாஸ்மின் ரோஸியைக் காதலிக்கத் தொடங்கியிருந்தான். புரியாத குழப்பத்தில்தான் அவன் என்னைத் தவிர்த்துவிட்டுப் பல முறை அந்த மலைப் பிரதேசத்திற்குச் சென்று திரும்பியிருந்தான். அவன் என்னிடம் மறைத்ததுபோலத்தான் நானும் ஜாஸ்மின் ரோஸியைக் காதலிப்பதை அவனிடமிருந்து மறைத்துவைத்திருந்தேன். லிங்கம் என்னிடம் நான் அவளைக் காதலிப்பதைப் பற்றிக் கேட்டதேயில்லை. என்னிடம் தன் காதலைச் சொல்லவும் இல்லை. நாங்கள் ஏன் ஒருவரை ஒருவர் ஏமாற்றிக்கொண்டோம் என்றுதான் இப்போதுவரை தெரியவில்லை. ஜாஸ்மின் ரோஸியைத் தேடி மூன்று மாதங்களாக நாங்கள் ஒருவருக்குத் தெரியாமல் ஒருவராக மலைக்குச் சென்று திரும்பினோம். அந்த மலை நகரம் முழுக்கத் தேடியும் அவள் கிடைக்கவில்லை. ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் கண்ணாடிப் பட்டாம்பூச்சிகள் இருந்தன. ஆனால் அவள் இல்லை. கண்ணாடிப் பட்டாம்பூச்சிகள் பறந்து வரும். கூடவே அவளும் எங்களுடன் வருவாள் என்று மலைப் பிரதேசத்தின் ஒவ்வொரு செடியையும் மரத்தையும் சிறிய நீரோடையையும் கடந்து சென்று தேடிக்கொண்டிருந்தோம்.

ஒவ்வொருமுறை மலையை விட்டுக் கீழிறங்கியபோதும் புதிய மஞ்சள் உல்லன் பனியன் ஒன்றை மறக்காமல் வாங்கிக்கொண்டு வந்தோம். மஞ்சள் உல்லன் பனியன்கள் நிறையச் சேர்ந்துவிட்டன. வீடு நிறைய மஞ்சள் உல்லன் பனியன்களாக இருந்தன. என் பிள்ளைகள் அவற்றைக் குளிர்காலத்தில் பயன்படுத்திக்கொண்டார்கள்; மனைவி தன் உறவினர்களுக்கு அன்பளிப்பாகச் சிலவற்றைத் தந்தாள். மஞ்சள் உல்லனிலிருந்து மஞ்சள் ஆடை, மஞ்சள் நிறப்பூக்கள் என்று வீட்டிலிருக்கும் ஒவ்வொன்றையும் மஞ்சள் நிறமாக்கிவிட்டோம். அவள் உடுத்தியிருந்த மஞ்சள் நிற உல்லனை உடுத்திக்கொண்ட இரவில் ஒரு பூந்தோட்டத்தின் அத்தனை பூக்களும் என் அருகாமையில் மலர்ந்திருந்தது போன்ற வாசனையை உணர்ந்து லிங்கத்திடம் தந்தேன். அவன் “அதற்காகத்தான் அதைத் தந்தேன். பூந்தோட்டத்தில் நீ ஜாஸ்மின் ரோஸியைப் பார்ப்பாய். பிறகு அவள் உன்னை ஒரு தேவதை அழைத்துச் செல்வதுபோல வானத்திற்கு அழைத்துச் சென்று திரும்புவாள்” என்று சொன்னான். எனக்கு அன்றிலிருந்து இரவு நேரத்தில், ஏதேனும் பூந்தோட்டத்திற்கு மேல் பறந்து சென்றுகொண்டிருப்பது போன்றும் பிறகு அதிகாலையின் தொடக்கத்தில் கண்விழிப்பது என் படுக்கையிலிலுமாகயிருந்தது.

லிங்கம் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குத் திரும்பிய சில தினங்களுக்குப் பிறகு அவனைச் சந்திப்பதற்காகச் சென்றிருந்தேன். அப்போது அவன் என்னிடம், “ஜாஸ்மின் ரோஸி ஒருவேளை வடநாட்டில் இருக்கக்கூடும். அவளை ஒருமுறை பார்த்து விட்டு வந்துவிடலாமா?” என்று கேட்டான். என் மனதிலும் அவள் வட நாட்டில்தான் இருப்பாள் எனத் தோன்றியது. “சரி” என்று சொன்னேன். லிங்கம் சிரித்தபடி, “இன்று அவளிடம் நீ எங்கே இருக்கிறாய் என்று கேட்டுவிடுவேன்” என்று சொன்னான். “ஆமாம் கண்டிப்பாகக் கேட்டுவிடு” என்று சொல்லியபடி அவனுக்கு அருகில் அமர்ந்துகொண்டேன். ஒரு பறவையின் ஓசையும் காற்றில் இலைகள் அசையும் சப்தமும் கூடவே ஜாஸ்மின் ரோஸி எங்களுக்கு அருகில் அமர்ந்திருப்பது போன்ற வாசமும் அந்த இடத்தில் சூழ்ந்திருந்தன.

o

[செம்மை அமைப்பு 30, 31 ஜனவரி 2010 இருநாட்கள் ஏற்காட்டில் நடத்திய சிறுகதைச் செம்மையாக்க முகாமில் இறுதிசெய்யப்பட்ட கதை.]

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *