மகிழ்ச்சி எனும் லாபம்!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 24, 2013
பார்வையிட்டோர்: 17,668 
 
 

சுவர் கடிகாரத்தில் நேரம் பார்த்தாள் கமலா.

மணி இரண்டு.

வாசலுக்கு வந்து தெருவைப் பார்த்தாள்.

கணவன் பெருமாள் வரும் சுவடே தெரியவில்லை.

அவளுக்கு எரிச்சலாக வந்தது.

“சோறு தண்ணி கூட வேளைக்கு சாப்பிடாம ஏன் தான், இந்த மனுஷன் ஊராருக்காக அலையறாரோ…’ என்று கோபம் குமிழிட்டது.

மகிழ்ச்சி எனும் லாபம்அதை அதிகப்படுத்துவது போல் பக்கத்துவீட்டு அலமு, “”என்ன அக்கா… மாமா, இன்னும் வரலையா? ரிடையரான பிறகு தான், அவர் ரொம்ப பிசியாயிட்டார் போல. நீங்க… இப்படி சாப்பாட்டு வேளைக்கு, அவரை எதிர்பார்த்து காத்துகிட்டு இருக்கிறதுக்கு, பேசாம அவர் காலையில், வீட்டை விட்டுக் கிளம்பும் போதே, சாப்பாடு கட்டிக் கொடுத்துடுங்களேன். அவரும் நேரத்துக்கு சாப்பிடுவார். நீங்களும் டென்ஷன் இல்லாம இருக்கலாம். அப்படியே, ஒரு வாட்டர் கேனும், ஒரு பிளாஸ்க்குல காபியும் ஊத்திக் கொடுத்துட்டால், இன்னும் சவுகர்யம் இல்லையா,” என்றாள்.

“”இனிமேல் அப்படித்தான் செய்யணும் போலிருக்கு.”

“”நீங்களாவது சாப்பிட்டீங்களா?”

“”எப்படி சாப்பிட முடியும்!”

“”அடடா… அவர் சாப்பாட்டைத் தள்ளிபோட்டு, இந்த வயசான காலத்துல உடம்பைக் கெடுத்துக்கறதுமில்லாம, உங்களையும் படுத்தறாரே… அப்படி ஓடி ஓடி என்னத்த சாதிக்கப் போறார்,” என்று கிளறி விட்டாள்.

“”சாதிக்கிற வயசை எல்லாம் போக விட்டுட்டு… இப்ப ஓடறார் பொது சேவைக்கு. ஒரே பிள்ளை… அவனும் கல்யாணமாகி, அமெரிக்காவுல செட்டிலாயிட்டான். இங்கே எங்களுக்கு சொந்த வீடு, நிலத்திலிருந்து வருமானம், பென்ஷனும் குறைவில்லாமல் இருந்தும், மாதாமாதம் பணம் அனுப்பறான், அப்பா, அம்மா வசதியா சவுக்கியமா இருக்கணுமேன்னு. அதை வச்சிக்கிட்டு, வீட்டோட இருந்து அனுபவிக்கறத விட்டுட்டு, வெளியே அலையறார். இது, மகனுக்கு தெரிஞ்சால் வருத்தப்படுவான்.”

“”மாமாவுக்கு ஏதோ கிரகக் கோளாறு அக்கா. இல்லைன்னா, திடு திப்புன்னு இப்படி சுத்த ஆரம்பிப்பாரா? அவர் அந்தஸ்து என்னங்கறதை மறந்து, சாமான்யமானவர்களோடு சேர்ந்து திரிவாரா? யாருக்கு பட்டா இல்லேன்னா இவருக்கு என்ன? யார் வீட்டுப் பிள்ளைக்கோ ஜாதி சான்று கிடைக்கலைனா இவருக்கென்ன? முந்தா நாள் பாருங்க… கோடி வீட்டு வேலைக்காரி மகனுக்கு, டிரைவிங் லைசென்ஸ் எடுக்க, அவனை அழைச்சிக்கிட்டு ஆர்.டி.ஓ., ஆபீசுக்கு போயிருக்கார்ன்னு என் வீட்டுக்காரர் சொன்னார்,” என்று அலமு சொல்லிக் கொண்டு போக…
கமலா காதுகளைப் பொத்திக் கொண்டாள்.

“”போதும்டி அலமு. ஏற்கனவே மனசு புகைஞ்சுகிட்டு இருக்கு. நீ வேற ஊதிவிடாதே,” என்றாள்.

“”இருக்காதா பின்னே. அவர் என் வீட்டு நபராக இருந்திருந்தால், இந்நேரம், அவர் கால்களை தூணோடு சேர்த்துக் கட்டி, வீட்டோடு வச்சிருப்பேன். நீங்களோ, அப்பிராணி. மாமாவை எதிர்த்து, ஒரு சொல் பேசுவிங்களா, மனசுக்குள் போட்டு புழுங்குவதைத் தவிர ,வேறு வழியிருக்கா உங்களுக்கு,” என்று கூறி, மறைந்தாள்.

கடும் வெயிலில் மூன்று மணிக்கு வேர்வை சொட்டச் சொட்ட, கசகச என்று நடந்து வந்து, வீட்டை அடைந்தார் பெருமாள்.

“”என்னா வெயில்… என்னா வெயில். மனுஷனைக் கருக்கி எடுத்துடுது,” என்று சலித்துக் கொண்டு, “” சாப்பிட்டியா கமலா. பையன் கிட்டருந்து போன் வந்ததா?” என்று கேட்டுக் கொண்டே, சட்டையைக் கழற்றி மாட்டிவிட்டு முகம், கை, கால் கழுவி வந்தார்.

சாப்பாட்டு மேஜை மீது தட்டு வைத்து, அமைதியாக பரிமாற, “”என்ன பதிலைக் காணோம்,” என்ற படி, நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தார்.

“”என்ன பதில் சொல்லணும்.”

“”சாப்பிட்டியான்னு கேட்டேனே!”

“”அதுவா முக்கியம். நான் எப்படிப் போனால் என்ன, வீடு எப்படி போனால் என்ன, நீங்கள் போன காரியம் நல்லபடி முடிஞ்சுதில்லையா?”

“”எங்கே கமலா… அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைன்னா, அத்தனை லேசில் முடிஞ்சிடுமா? ஒரு சர்வேயர், என்னமா அலட்டிக்கறார். ஒரு வேலையும் இல்லே. ஆனால், ஆயிரம் வேலைகளை இழுத்துப் போட்டு செய்வது போல பாவனை. எதிரில் நிக்கிறவரை, ஏறிட்டுப் பார்க்க கூட நேரமில்லாதவர் மாதிரி காமிச்சுக்கறார். கோபமாகவும் வருது, சிரிப்பாகவும் வருது. எல்லாம், “கட்டிங்’குக்கு போடற நாடகம். எந்த ஒரு சின்ன வேலைக்கும், கீழ் மட்டம் முதல், மேல் மட்டம் வரை கமிஷன். கடமையைச் செய்யக் கையூட்டு. எங்கும், எதிலும் லாபம் தான் நோக்கம்.”

“”எல்லாரும் உங்களைப் போல் இருப்பாங்களா; கைக்காசை செலவு செய்துக்கிட்டு, ஊராருக்காக மெனக்கெடுவார்களா என்ன? நஷ்டத்துக்கு வியாபாரம் பண்றவராச்சே நீங்க. அதில், ஒரு அற்ப பெருமை உங்களுக்கு. இல்லையா.”

சிரித்தார் பெருமாள்.

“”கோபமா கமலா?”

“”இல்லை. மனசு குளுகுளுன்னு இருக்கு. சாப்பிடும் போது பேசவேண்டாமேன்னு பார்க்கறேன்,” என்று முறைத்தாள்.

“”இத்தனை வருஷம் என்னோடு குடும்பம் நடத்தியும், என்னைப் பற்றி நீ தெரிஞ்சுகிட்டது இவ்வளவுதானா! நான் முட்டாளா, இல்ல… மூளை மழுங்கியவனா, பயனில்லா காரியத்தை எப்போதாவது செய்தது உண்டா? நெருங்கிய வட்டாரத்தில், எனக்கு கஞ்சப் பிரபுன்னு, ஒரு பேர் இருக்கிறது தெரியாதா உனக்கு.”

“”வேலையில் இருந்த வரை, அப்படித்தான் இருத்தீங்க. ரிடையரான பிறகு தான், உங்களை பிசாசு பிடிச்சுருச்சு. தெருவுல போறவங்களையெல்லாம் கூப்பிட்டு, உதவிங்கற பேர்ல பணத்தையும், நேரத்தையும், உழைப்பையும் அள்ளி விடறீங்க.”

“”இது அபாண்டம். நான் எங்கயும், வலியப் போய் விழறதில்லை. தேடி வந்தவங்களுக்கு தான், என்னால் முடிஞ்ச உதவி பண்றேன். அதனால், எனக்கு பல மடங்கு லாபம் கிடைக்குது.”

“”லாபமா… அது எங்கிருந்து வந்திச்சு… எனக்கு தெரியாம எத்தனை ஆயிரம் வந்திருக்கும். எந்த பேங்கில் போட்டு வச்சிருக்கிங்க சொல்லுங்க…”

“”லாபம்ன்னா… அது பணமாகத்தான் வரணுமா. வேற மாதிரி வரக் கூடாதா?”

“”பொருளா கொடுத்தாங்களா. அதை எங்க வச்சிருக்கீங்க?”

“”இங்க…” என்று, தன் இதயத்தை சுட்டிக்காட்டினார்.

“”வக்கனையா பேசக் கத்துக்கிட்டிங்க.”

“”வெறும் பேச்சில்லை கமலா, நிஜம். பணமோ, பொருளோ வரும் போது, மனசுக்கு சந்தோஷம் வருதில்ல. அது தானே உண்மையான லாபம், பலன் எல்லாம். அந்த சந்தோஷம், மத்தவங்களுக்கு உதவும் போது, கிடைக்குதுன்னா, அதுலாபகரமான வேலைதானே. இப்பதான் கமலா, எனக்கு வெளியுலகமே தெரியுது. வேலையில் இருக்கும் போது, வீடு, ஆபீஸ் தவிர, ஒண்ணும் தெரியாது. வீட்டு வரி கட்டவும், நீ தான் நகராட்சி அலுவலகத்துக்கு ஓடுவே. இங்கே, வி.ஏ.ஓ., ஆபீஸ் எங்கேன்னு யாராவது கேட்டால் கூட விழிப்பேன். ஆனால், இப்ப எனக்கு நகராட்சி அலுவலகம் முதல், வி.ஏ.ஓ., ஆபீஸ் வரை அரசு அலுவலகங்கள் எல்லாம் தெரியுது.

“”எந்த எந்த காரியத்துக்கு எங்கே போகணும், யாரைப் பார்க்கணும். அங்கே நடைமுறை என்ன… எல்லாம் தெரிஞ்சிகிட்டேன். விவரம் தெரியாம அலையறவங்களுக்கு, என்னால் முடிஞ்ச உதவியாக, சின்னச் சின்ன வேலைகளை முடிச்சுக் கொடுக்கறேன். கவுன்சிலர் முதல் மினிஸ்டர் வரை, இந்த பெருமாளை தெரியாதவங்க இல்லை…. தெரியுமா?”

“”ஆயிரம் தான் சொல்லுங்க. அதெல்லாம் சப்பைக் கட்டுதான். நம்ம அந்தஸ்துக்கு, கவுரவத்துக்கு ஏத்தாப்ல நடந்துக்காம, ஒரு கூலிக்காரர் போல திரியறதோட இல்லாம, அதை நியாயப்படுத்தப் பார்க்கறீங்க. நம்மை பற்றி, சுற்றி இருக்கிறவங்க என்ன பேசறாங்கன்னு யோசிக்கறதில்லை. பக்கத்து வீட்டு அலமுவே, நாக்கைப் பிடுங்கிற மாதிரி கேக்கறாள். ஏன் அக்கா… மாமாவுக்கு உங்க முகம் போரடிச்சுப் போச்சா. நாள் முழுக்கப் பார்க்க சகிக்காம தான், வெளியில் ஓடிடறாரான்னு.”

“”அட…” என்றார் பெருமாள். வாயில் இருந்த உணவை விழுங்கிவிட்டு, “”என்னமோன்னு நினைச்சேன். கெட்டிக்காரப் பெண்ணா இருக்காளே… சட்டுன்னு கண்டுபிடிச்சுட்டாளே…” என்று வியந்தார்.

கமலா பாத்திரத்தில் இருந்த மொத்தக் குழம்பையும் தட்டில் கவிழ்த்து விட்டு போக, சப்தமாகச் சிரித்தார் பெருமாள்.

சிறிது நாட்கள் கழித்து…

அலமு அவரை தேடிக் கொண்டு வந்தாள்.

“”வாடிம்மா… நலமா இருக்கியா?”

“”ஒரு சிக்கல்…”

“”அப்படி ஏதும் வந்தால் தானே, இந்த மாமனைத் தெரியுது. இல்லைன்னா… உன் வேலையெல்லாம், அக்காவோடு தானே… சொல்லு…”

“”பையனுக்கு ஒரு பர்த் சர்ட்டிபிகேட் வாங்கணும்.”

“”வாங்கிட்டாப் போச்சு.”

“”அவரானால் வேலை வேலைன்னு அலையறார். வீட்டு விவகாரம் ஒண்ணும் கண்டுக்கறதில்லை.”

“”உன் புருஷனையா சொல்ற. விடு… அவனும் என்னைப் போல நல்லவன். வேலையில் இருந்த போது, நானும் அப்படித்தான் இருந்தேன். இப்ப ஊருக்கு நல்லவன். வீட்டுக்கு உதவாதவனாயிட்டான். விடு, விஷயத்துக்கு வா… பையன் வீட்ல பொறந்தானா, மருத்துவமனையில் பொறந்தானா? மருத்துவமனையில் பொறந்திருந்தால், அதற்கான சான்று வச்சிருக்கியா? இருந்தால் கொடு. இல்லைன்னா… பையனோட டி.சி., இருந்தால் போதும். நகராட்சி அலுவலகத்துல, அதுக்குன்னு தனிப்பிரிவு இருக்கு. ரெண்டு ரூபாய் கொடுத்து, ஒரு விண்ணப்ப பாரம் வாங்கணும். அதுல விவரம் நிரப்பி, அதே ரெண்டு ரூபாய் கோர்ட் ஸ்டாம்ப் ஒட்டி… ஆண்டிற்கு தகுந்தாற்போல், 20 ரூபாயிலிருந்து, 60 ரூபாய் வரை, கட்டணம் கட்டிட்டு வந்தால், ஒரு வாரத்தில் சர்ட்டிபிகேட் கைக்கு வந்து விடும்.

“”அதை எடுத்துக் கொடுக்கிற ஊழியர் கையில், பத்தோ, இருபதோ கொடுத்தால், உடனே கொடுத்து விடுவார். இல்லைன்னா… அதை ஆபீஸ் முழுக்கத் தேடி பார்த்துட்டு… ஒரு ரெண்டு நாள் கழிச்சு வாங்க. பார்த்து வைக்கிறேன்னு இழுத்தடிப்பார். ஒரு ஆதாரமும் இல்லைன்னா… கோர்ட் மூலம் தான் வாங்கணும். அதுக்கு சில பார்மாலிடிஸ் இருக்கு. அது தெரிஞ்ச வக்கீல் ஒருவரை எனக்கு தெரியும். 500 வரை கேட்பார்.”

“”பையனோட டி.சி., இருக்கு.”

“”அது போதுமே. போய் சீக்கிரம் கொண்டு வா.”

அவள் தயங்கினாள்.

“”என்ன?”

“”உங்ககிட்ட உதவி கேட்கிற யோக்கிதை, எனக்கு இல்லை மாமா.”

“”ஏம்மா அப்படிச் சொல்ற. முன்ன, பின்ன தெரியாதவங்களுக்கெல்லாம் செய்து கொடுக்கறேன். பல வருஷமா பக்கத்து வீட்டில் வசிச்சுகிட்டு, எங்களுக்கு உறவுக்காரிபோல இருக்கிற உனக்கு செய்யக்கூடாதா நான்…”

“”ஊருக்கெல்லாம் அனாவசியமா உழைச்சுக் கொட்றீங்கன்னு விமர்சனம் செய்தவள் நான். இப்ப நானே உங்க உதவியை நாடிவர்றேன்னால்…”

“”அதாம்மா இயற்கை. எதை அதிகமா நேசிக்கிறோமோ, அதை வெறுக்க வேண்டி வருவதும், எதை அதிகமா வெறுக்கிறோமோ, அதை விரும்பறதும் இயல்பு. இதில், சங்கடப்பட ஒன்றுமில்லை.

“”மத்தவங்களுக்கு செய்தால் எனக்கு சந்தோஷம். என்னை வெறுப்பவர்களுக்கு, உதவி செய்ய வாய்ப்பு கிடைத்தால், அது எனக்கு ரொம்ப சந்தோஷம். அதனால், நீ கூச்சப்படாம போய் சர்டிபிகேட் கொண்டு வா… நான் இப்பவே கிளம்பிப் போய், வேலையை முடிச்சுட்டு வந்திடறேன்,” என்று கிளம்பினார்.

கோபமாகப் பார்த்தாள் கமலா.

கணவனை அல்ல… அலமுவை!

– ஜனவரி 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *