கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 6, 2014
பார்வையிட்டோர்: 9,134 
 

புழுக்கமில்லாத ,மெல்லிய தென்றல் வீசிய கோடை காலமொன்றின் மாலைப் பொழுதில் Toronto வின் வீதியொன்றில் காரில் அவன் போய்க் கொண்டிருந்தான். கால நிலையும், காரில் ஒலித்த இசையும் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நேரம் வெகுவாக போய் விட்டிருந்த போதிலும் இப்பொழுது தான் இருட்டத் தொடங்கியிருக்கிறது. தெற்குப் புறமிருந்து வடக்கு நோக்கி வந்து கொண்டிருந்தவன் வலது புறமாக காரை திருப்பி கிழக்கு நோக்கி செலுத்தினான். தெரு நீண்டு கிடந்தது .கனடாவில் இப்படி நீளமான தெருக்கள் அதிகம். கோடை காலங்களில் மிக நீண்ட தூரத்திலுருக்கும் கட்டிடங்களும், வீதி விளக்குகளும் கூட தெளிவாக தெரியும். தெருவின் தொலைதூரத்தில் உருண்டை வடிவத்தில் ஏதோ ஒரு பொருளொன்று தெருவையே அடைத்துக் கொண்டிருப்பது போலிருந்தது. திடுக்குற்ற இவன் திடீரென brake ஐ அழுத்தியவன் ஒரு சில கணங்களுக்குள் அது நிலா என்று!
தெரிந்ததும் பரவசமானான். ஆம் பௌர்ணமி நிலவு.

பௌர்ணமி என்றாலே பரவசம் தான். அதனால் தான் கவிஞன் ஒருவன் பௌர்ணமி நிலவில்,பனி விழும் இரவில் கடற்கரை மணலில் காதலியுடன் இருக்க ஏங்கினான். காலிமுகத்திடலில் பௌர்ணமி நாட்களில் காதலர் கூட்டம் அலை மோதும். போயா தினங்களில் இலங்கையில் விடுமுறை நாள்.. உலகிலேயே விடுமுறை காலங்கள் கூடிய நாடாக இலங்கைதான் இருக்கும். புத்தரின் புண்ணியத்தில் பாடசாலைகளும் இருக்காது. இவனுடைய வீட்டில் அன்று விரத நாள் . இவனின் அப்பா சொல்லுவார்” இண்டைக்குப் பறுவம் . விரத நாள்” எண்டு. அறுசுவை கறிகளுடன் சமையல் அமளி துமளியாக இருக்கும். சித்ரா பௌர்ணமி காலங்களில் மாத்தனை கோவிலில் சித்திரைக் கஞ்சி ஊற்றுவார்கள். சிறுவர்கள் எல்லாம் அடிபட்டுக் குடிக்கும் இந்தக் கஞ்சியில் இவன் பெரிதாக ஈடுபாடு காட்டியதில்லை.

பௌர்ணமி காலங்களில் தான் சந்திர கிரகணம் நிகழும். கேது எண்ட பாம்பு சந்திரனை விழுங்கும் நாள் எண்டு அப்பா சொல்லுவார். விழுங்கினாப் பிறகு சந்திரன் எப்பிடி வெளியிலை வரும் எண்டு கேட்டதாக ஞாபகம். சந்திர கிரகணம் வரும்போது வேளைக்கே இரவு சாப்பாடு முடிக்கவேணும் எண்டு அப்பா சொல்லுவார். கிரகணத்திற்குப் பிறகு மிஞ்சியிருக்கும் சாப்பாட்டை கொட்டிவிட வேணும் . ஏனெண்டால் நஞ்சு ஊறியிருக்கும். இவங்கட வீட்டில எப்பவாவது சாப்பாடு மிஞ்சியிருந்ததாக இவனுக்கு ஞாபகமில்லை.
பௌர்ணமி காலங்களில் பக்கத்து வீட்டு பங்கஜமக்கா தலைவிரி கோலமாக நடந்து திரிவா. merry go round the mulberry bush எண்டு அவ பாடிக் கொண்டு திரயும் போது பயமாக இருக்கும். அம்மா சொல்லுவா அவளுக்கு விசர் கூடிட்டுது எண்டு. அந்த நேரம் பங்கஜமக்காவை பார்த்து யாரும் சிரிச்சால் கேளாத கேள்வி எல்லாம் கேட்பா. அதாலை அவ பாடும்போது நாங்கள் சீரியஸா கேட்பம்.

இவன் பிறந்ததிலிருந்து எத்தனை பௌர்ணமிகள் இவனைக் கடந்திருக்கும். எல்லாப் பௌர்ணமிகளும் இனிமையாக இருந்ததில்லை. நீண்ட தூரங்கள் சைக்கிள் மிதித்து அபாயங்கள் கடந்த பௌர்ணமிகளும் உண்டு. விளக்கு வெளிச்சத்தையும் மேவிக் கொண்டு வீட்டு விறாந்தைக்குள் ஊடுருவிய நிலவு வெளிச்சத்தை ரசித்ததுமுண்டு. நல்லூர் திருவிழாக் காலங்களில் கால் நடையாக களைப்பே இல்லாமல் கச்சானும் சாப்பிட்டுக் கொண்டு கும்மாளமடித்துக் கொண்டு திரிந்த பௌர்ணமிகள். தென்னை மர கீற்றுக்களையும் ,தேக்கு மர நிழல்களையும் தாண்டி ஒளி வீசும் அந்த பௌர்ணமிகள்.

canada வில், துருவம் என்பதால் நிலவு எப்பொழுதும் பெரிதாகவே இருக்கும். Toronto வின் வடக்கே 400 மைல் வரை பயணம் செய்து ஒரு கடற்கரையில் இரவு முழுதும் நண்பர்களுடன் tent அடித்து மறு நாள் சூரிய உதயத்தையும் ரசிக்கவென தூங்காமல் விழித்திருந்த அந்த பௌர்ணமி நாள். இவை எல்லாவற்றையும் தாண்டிய அந்த வலி தரும் பௌர்ணமிதான் எப்போதும் இவன் உடலில் ஒரு நடுக்கத்தை வரவழைக்கும்.

உற்சாகமாக இருந்த ஊர் களையிழந்த காலம். மனிதர்களின் முகங்களில் அச்சம் குடியேறிய நேரம். பதின்ம வயதுகளை இவன் கடந்த ஒரு காலம். நந்தாவிலில் ஒரு பௌர்ணமி நாள் . தெருவிலிருந்து இறங்கி தோட்ட வெளிகளுக்கூடாக நடந்து சென்றான். குரக்கன் வாசனை மூக்கை துளைத்தது. பாம்பின் கொட்டாவியாக இருக்கலாம். வரம்புகளின் ஊடாக நடந்து அந்தக் கோயிலை அடைந்தான். சுற்று முற்றும் கண்களை சுழட்டி அந்த வெளியை பார்த்தான். பால் நிலவு பகல் போல் ஒளி வீசியது. அச்சமாக இருந்தது. அதை விட அச்சம் கோவிலுக்குப் பின்னால் உள்ள மரத்தைப் பார்த்த போது இருந்தது. அங்கு தாடி,மீசையுடன் பெரிய தம்பிரான் படுத்துக் கிடப்பார் என நினைத்தான். கோவிலில் உள்ள படிக்கட்டில் இருந்து தலையை சுவர் ஓரமாக மெல்ல சாய்த்தான் . வானத்தைப் பார்த்தான். .முகில் கூட்டங்களுக்கிடையே மெல்ல நிலவு அசைந்து கொண்டிருந்தது. இன்று முழுவதும் நிலவுதான் துணை என்று நினைத்தான். இரவு முழுவதும் நித்திரை வரவில்லை . நினைவுகள் ஒவ்வொன்றையும் அசை போட்டபடி இருந்தான். குடும்பம்,உறவுகள்,நண்பர்கள் எல்லோரும் நினைவுகளில் வந்து சென்றனர். அச்சமின்றி நந்தாவிலை வலம் வந்த நாட்கள் வந்து போயின.

இடையிடையே தூங்கி விழுந்தான். சில் வண்டுகள் கீதமிசைக்க, நிலவின் துணையுடன் அன்றைய பொழுது அந்தக் கோவிலில் கடந்தது. எப்ப நினைத்தாலும் அவனது முதுகுத் தண்டு சில்லிடும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *