(இதற்கு முந்தைய ‘முடிவிற்கான ஆரம்பம்’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது)
சபரிநாதன் இயல்புக்கு மாறாக மதிய வெயிலில் இரண்டுமணி நேரங்கள் குளித்துக் கொண்டிருந்ததின் மனப் பின்னணி தெரியாமல் போனது போலவே; அன்றே மாலை அவரின் இயல்புக்கு எல்லா விதத்திலும் மாறாக; ஏழை மாடசாமியின் கூரை வீட்டுத் தரையில் உட்கார்ந்துகொண்டு சுப்பையாவால் காப்பாற்றப்பட்ட புவனாவுடன் ரொம்ப இதமாகப் பேசிக் கொண்டிருந்ததின் உள்மனப் பிளவையும் ராஜலக்ஷ்மியால் புரிந்துகொள்ள முடியவில்லை. முரண்பாட்டுத் தன்மையுடன் சபரிநாதன் புவனாவுடன் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்.
திம்மராஜபுரம் ஜனங்கள் மூக்கின்மேல் விரலை வைத்தார்கள். எந்தத் தெருப்பக்கம் போவதைக்கூட அந்தஸ்து குறைவானதாக எண்ணி வைத்திருந்தாரோ, அந்தத் தெருவில் இருந்த மாடசாமியின் வீட்டிற்குள்ளேயே புகுந்துவிட்டிருந்தார் அவர். அந்தஸ்தை நினைத்தே பார்க்காமல், ஊரில் இல்லாத பாசாங்கு எல்லாம் செய்து புவனாவுடன் பேசிப் பார்த்ததில், அவருக்கு ஒரு உண்மை நன்கு புரிந்துவிட்டது.
ராஜலக்ஷ்மியை தாமிரபரணி ஆற்றுக்கு குளிக்கக் கூப்பிட்டது புவனாதான். ராஜலக்ஷ்மி ஆற்றில் குளிப்பது தெரிந்து சுப்பையா அங்கு போகவில்லை. அவன் ஆற்றில் குளிப்பது தெரிந்து ராஜலக்ஷ்மியும் அங்கு போகவில்லை. இருவருக்கும் எந்த சம்பந்தமுமில்லை. ஆனால் இந்த உண்மை சபரிநாதனுக்குப் பிடிக்கவில்லை!
அவர் எதிர்பார்த்தது அவர்களிடையே ஏதாவது ஏடாகூடமாக இருக்க வேண்டும்! அதை வைத்துக்கொண்டு இருவரையும் அவர் ஏதாவது ஏடாகூடமாகச் செய்துவிட வேண்டும். இந்த வன்மமான உணர்வில் சுப்பையாவும் ராஜலக்ஷ்மியும் உடலுறவு கொள்வது போன்ற கற்பனையை மனதில் ஒரே ஒரு நிமிஷம் சபரிநாதன் கொண்டுவந்து பார்த்தார். ஆக்ரோஷம் அதிகப்பட அவருக்கு இந்த ஒரு நிமிடக் கற்பனையே போதுமானதாக இருந்தது…! மனச்சிதைவு…
இதற்கு நேர்மாறான வேறொரு கபடமான செயலிலும் அதேநேரம் அவர் இயங்கிக் கொண்டிருந்தார். புவனாவை சுப்பையா காப்பாற்றியது அவள் செய்த புண்ணியம் என்றார். சுப்பையா இளைய பெருமாள் மாதிரி என்று புகழ்ந்தார். புவனா நேரில் போய்க் கட்டாயம் அவனுக்கு நன்றி சொல்லிவிட்டு வருவதுதான் மரியாதை என்று சொல்லி அவளை கல்மிஷத்துடன் ஏவிவிட்டார். புவனா சுப்பையாவின் மேல் காதலாகி கசிந்துருக வேண்டும். அந்த வம்பில் மாட்டவைத்து சுப்பையாவை கேவலப்படுத்திவிட வேண்டும். இதனால் சபரிநாதனுக்கு தலைகுனிவு எதுவும் ஏற்பட வழி கிடையாது. ராஜலக்ஷ்மியுடன் சுப்பையாவுக்கு ஏதாவது தொடர்பு ஏற்பட்டு அதில் சுப்பையாவை விரட்டியடித்தால்தான் அவரின் குடும்பப் பெயர் நாறிப் போய்விடும்…
அதனால் புவனாவின் மூலம் சுப்பையாவை விரட்டுவதுதான் சரியாக இருக்கும்! சாவில் இருந்து தன்னைக் காப்பாற்றியவன் மேல் காதல் கொள்ளும் பெண்களை சின்ன வயதில் சபரிநாதன் நிறைய தமிழ் சினிமாக்களில் பார்த்திருக்கிறார். அவருடைய மனதிற்குள் வரைந்து கொண்டிருந்த இந்த தமிழ் சினிமாவின் காதல் கதைக்கு நிறைய ஒற்றுமை கொண்ட மற்றொரு கதை அவருடைய வீட்டுச் சமையல் அறையின் ஜன்னல் அருகே யாருக்கும் தெரியாமல் படமாகிக் கொண்டிருந்தது…!
“ஐயோ, என்னங்க ராஜலக்ஷ்மி? உங்களோட ரெண்டு கன்னமும் இவ்வளவு மோசமா வீங்கிப் போயிருக்கு? ஓ காட் இப்படியா போட்டு ஒருத்தன் அடிப்பான்? எனக்கு மாமனாரா அவன்?” சுப்பையா வருத்தத்துடன் கேட்டான்.
“அவங்களுக்குத் தெரியாம ஆத்துல குளிச்சதுக்கு ஒரு கன்னத்ல அடி; நீங்க பாக்குற மாதிரி குளிச்சதுக்கு இன்னொரு கன்னத்ல அடி…” சிரித்துக்கொண்டே சொன்னாள்.
“உங்களை ரொம்ப நாளைக்கு இங்கே விட்டு வைத்திருக்கக் கூடாது. அவர் சரியில்லை…”
“இன்னிக்கி அவங்க முகமே வேறமாதிரிதான் இருந்திச்சி. தப்புப் பண்ணிட்ட சின்னப்பிள்ளை மாதிரி பேந்தப் பேந்த முழிச்சி முழிச்சி பார்த்தார்.”
“பேசினபடி, நாளைக்கு காலையில அந்த நாவல் பழ மரத்தடிக்கு வந்துருங்க, நாம பேசி முடிவு பண்ணிடலாம்…”
“நாளைக்கு வேண்டவே வேண்டாம். இந்த மூஞ்சி வீக்கத்தோட வாசலுக்குப் போகக்கூட விடமாட்டாரு.”
“எப்படி உங்களை இந்த ஜெயில்ல இருந்து மீட்டுக் கொண்டுபோகப் போறேனோ என்ற யோசனையிலேயேதான் என் மனசு பூராவும் இருக்கு. அது மட்டுமில்லை, உங்களை நிறைய படிக்க வைக்கணும் என்பது என்னோட முதல் ஆசை.”
“இந்த ஜென்மத்துக்கும், அது ஒண்ணு போதும்.”
“எனக்கு யாரையாவது ரொம்பப் பிடிச்சுப் போயிடுத்துன்னா அவங்களை நிறைய படிக்க வைக்கணும் போல இருக்கும்.”
“அந்த அளவுக்கா என்னை பிடிச்சி போயிருச்சு?”
“ஏன் பிடிக்கக்கூடாதா?”
“ஆச்சர்யந்தான்.”
“பிடிக்காமப் போயிருந்தாத்தான் எனக்கு ஆச்சரியம்.”
“நெஜமாவே எனக்கு இதெல்லாம் ஆச்சர்யந்தான்…”
“ராஜலக்ஷ்மிக்கு இன்னும் பெரிய ஆச்சர்யமெல்லாம் காத்திருக்கு.”
“தாங்குவாளா ராஜலக்ஷ்மி?”
“இப்பவே அதையும் நான் சொல்லணுமா?”
“அந்த சந்தோஷத்தையும் இப்பவே குடுத்திட வேண்டியதுதானே?”
“ஐ யாம் இன் டீப் லவ் வித் யூ ராஜலக்ஷ்மி.”
சுப்பையா சொன்னது ஜிலீர் என்று மனசுக்குப் புரிந்தாலும் “தமிழ்…தமிழ்ல சொல்லுங்க” ராஜலக்ஷ்மியின் குரல் ஒரு மாதிரியாகப் பெருக்கெடுத்தது.
“இதுக்கு மொழியே தேவை கிடையாது ராஜலக்ஷ்மி. ஐ லவ்யு வெரி மச்.”
“எனக்கு சொல்றதுக்கு வார்த்தையே தெரியலை.”
“வார்த்தைகள் தேவை கிடையாது ராஜலக்ஷ்மி… மனசு தெரிஞ்சா போதும். உங்களோட மனசு உங்களோட கண்ல தெரியுதே…”
“நெஜம்மாவே இதெல்லாம் நெஜந்தானே சுப்பு?”
“நிஜமாவே நிஜம்தான்.”
“ஆனா நம்மோட காதல் பொருந்தாக் காதல். உங்களுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிருச்சி. ஒரு குழந்தைவேறு. எனக்கும் ஏற்கனவே கல்யாணம் ஆயிருச்சி. நான் உங்களுக்கு மாமியார்… மாமியாரை எப்படிக் காதலிக்கலாம்?”
“போர், காதல் இரண்டிலும் தர்ம அதர்மங்களைப் பற்றிச் சிந்திக்கக்கூடாது. காதலுக்குத் தேவை ஒரு ஆண்; ஒரு பெண். அவர்களிடையே நல்ல புரிதல்… அவ்வளவுதான்.”
“உங்க மனசு நாளைக்குப் பயந்து போயிடாதே?”
“உங்க மனசு பயப்படுமா?”
“இனிமே பயப்படவே மாட்டேன்.”
“வெரிகுட். நான் பொறுமையா உக்காந்து யோசனை பண்றேன். என்னிக்கி உங்களால முடியுதோ அன்னிக்கி நாவற்பழ மரத்தடியில மீட் பண்ணுவோம். இப்ப திருநெல்வேலி போறேன். அன்னிக்கி கோயில்ல உங்களை போட்டோ எடுத்தேனே, அந்த பிரிண்டை வாங்கிட்டு வரப்போறேன்.”
“பிரிண்ட் யார் கண்ணிலும் பட்டுடக்கூடாது…”
“படவே படாது.”
“கடைசி வரைக்கும் நம்முடைய காதல் யாருக்குமே தெரிஞ்சிடக் கூடாது. தெரிஞ்சா அவ்வளவுதான்… நம்ம உயிர் நம்மதில்லை.”
“தெரியும் இது வில்லேஜ். கவனமா இருப்பேன், போதுமா?”
சபரிநாதன் உசுப்பேத்திவிட்ட வேகத்தில், புவனா உயிரைக் காப்பாற்றிய சுப்பையாவைப் பார்த்து நன்றி சொல்லிவிட்டு வர ஆசைப்பட்டாள். சபரிநாதனின் கபடம் அவள் அறிவில் துளிக்கூட எட்டவில்லை. தன் தம்பியைக் கூட்டிக்கொண்டு சுப்பையாவின் வீட்டுக்கு விரைந்தாள். வாசலில் நின்றுகொண்டு “அண்ணாச்சி” என்று மரியாதையுடன் அழைத்தாள்.
ஜன்னல் வழியாக ராஜலக்ஷ்மியுடன் பேசிக்கொண்டிருந்த சுப்பையா உடனே வாசலுக்கு வந்தான். புவனா, அழுகை வர வர அடக்கிக்கொண்டு வார்த்தைக்கு வார்த்தை அண்ணாச்சி என்று சொல்லி வாய் நிறைய நன்றி தெரிவித்தாள். சபரிநாதனின் கபடம் பலிக்கவில்லை.
இதைப் பார்த்த சபரிநாதனின் மனம் மீண்டும் வேகமாகிவிட்டது. அவருடைய வீட்டுத் திண்ணையில் ஏறி உட்கார்ந்தார். விட்டிற்குள் நுழைய ஒருவித பயமாக இருந்தது. சுப்பையா ஊர் மக்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துவிட்டான்… அவன் புகழப்பட புகழப்பட சபரிநாதனின் மன வேகமும் உச்சத்திற்கு ஏறியது. மாப்பிள்ளையா அவன்.. அயோக்கிய ராஸ்கல். ஒரு வன்மப் பல்சக்கரம் அவருள் சுழன்று கொண்டேயிருந்தது.
தெரிந்தோ தெரியாமலோ அவர் ராஜலக்ஷ்மியிடம் தோற்றுப் போய்விட்டார். அந்தத் தோல்வியை எப்படியாவது சுப்பையாவிடம் ஈடுகட்டி விடவேண்டும் என்று மனதால் துடித்தார். அவனுடைய புகழ் மேலும் மேலும் அதிகமாகிக்கொண்டே போவதை அவரால் ஒன்றும் செய்ய முடியாதென்று தோன்றியது. சுப்பையாவை எப்படிப் பழி வாங்கலாம் என்று விடாமல் யோசித்தார். என்ன செய்து அவனை உடனே ஊரைவிட்டு ஓடச்செய்யலாம் என்று சிந்தித்தார்.
கூலிக்குக் கொலை செய்யும் குண்டர்களில் யாரையாவது ஏற்பாடு செய்யலாம். ஆனால் எவனாவது ஒருத்தன் போலீஸில் மாட்டினால் கூடப் போதும். உண்மை உடனே வெளிவந்து விடும். அப்புறம் அவரால் கம்பி எண்ண முடியாது. அதனால் கூலிப்படை விஷயம் வேலைக்கு ஆகாது!
தனி ஆளாக தான் மட்டும் நின்று அவனை எப்படி ஊரைவிட்டு பயந்து ஓட வைக்கலாம் என்று தீவிரமாகச் சிந்தித்தார். மனம் எப்படியெல்லாமோ தடுமாறியது. உடம்பும் மனமும் வேறு வேறாகி விட்டாற்போல் ஊசலாடியத்தில் ஒருவித அச்சமும் சபரிநாதனின் மேட்டு விழிகளில் புடைத்துக்கொண்டது. தெருவில் அப்போது போய்க்கொண்டிருந்த ஒருவன் பீடி பற்ற வைத்துக்கொண்ட காட்சி அவர் முன்னே தோன்றியது. ஒரு தீப்பொறியாக அது அவர் மனதில் தெறித்தது. வாசலில் நின்ற சுப்பையாவின் மோட்டார் பைக்கின்மேல் அவருடைய மொத்த மன வேகமும் பாய்ந்து குவிந்தது.
இந்த பைக்கிற்கு முதலில் ஒரு மரண அடி கொடுத்தால் என்ன? இதற்குக் கொடுக்கிற அடியிலேயே அவன் கதிகலங்கி ஓட்டம் பிடிக்கவேண்டும். சபரிநாதனின் அழிவு வெறிக்கு வழி கிடைத்து விட்டது. ஊரே உறங்கிக் கொண்டிருக்கும் ஒரு நடுச்சாமத்தில் ராஜலக்ஷ்மிக்குக் கூடத் தெரியாமல் சப்தமே இல்லாமல் எழுந்து போய் சுப்பையாவின் மோட்டார் பைக்கிற்குத் தீ வைத்துவிட்டால் என்ன? அவரின் மனம் வன்முறையில் புடைத்து விண் விண் என்று தெறித்தது.
குரூரமான மகிழ்ச்சி அவரின் கண்களில் உடனே கசியவும் தொடங்கி விட்டது. தீ வைத்தது யார் என்ற ரகசியமும் ஒருத்தருக்கும் தெரியப் போவதில்லை. சுப்பையாவும் அதற்குப் பிறகு துணிச்சலாக ஊரில் இருக்கப் போவதில்லை. அவன் ஓடிப்போய்விட்டால் அந்தச் சிறுக்கி முண்டை காந்திமதிக்கும் கள்ள ஓட்டுப் போட ஆளில்லை! அப்புறம் ஒருநாள் சாவகாசமாக ராஜலக்ஷ்மியையும் தீ வைத்துக் கொளுத்திவிட்டு, அவள்தான் தற்கொலை செய்துகொண்டாள் என்று கதை கட்டி விட்டால் முடிந்தது கதை….
பிறகு சபரிநாதனைக் கேட்பதற்கு ஆள் கிடையாது. கால்மேல் கால் போட்டுக்கொண்டு நிஜ பண்ணையார் மாதிரியே இருக்கலாம்! தேவைப்பட்டால் அப்புறம் கோட்டைசாமியைக் கேட்டு ‘கொணட்டி’ காந்திமதியைத் தனக்கு சமைத்துப் போடுகிற சமையல்காரியாக சம்பளத்திற்கு வைத்துக் கொள்ளலாம். அதற்கும் மேல் தேவைப்பட்டால் ‘கொண்டட்டி’யை ‘அதற்கும்’ சேர்த்தே வைத்துக் கொள்ளலாம்…! சபரிநாதன் எல்லாவற்றிக்குமே தயாராகிக் கொண்டிருந்தார்.
மனதுள் தீர்மானித்திருந்த வன்முறை அவருடைய கண்களில் இப்போதே வந்து இறங்கியிருந்ததில், காணுகிற காட்சிக்கும் பார்க்கிற தோரணைக்கும் ஒருங்கிணைப்பு இல்லாமல் பிளவு பட்ட கதியிலேயே அவரின் எல்லா செயல்களும் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
ராத்திரி சாப்பாட்டின் போது குழம்பு ஊற்றிச் சாப்பிட மறந்து, சாப்பாட்டை மோரில் அவர் ஆரம்பித்துக் கொண்டதை ராஜலக்ஷ்மி மெளனமாக அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். நடுநிசியில் தூக்கம் வராமல் கடிகாரத்தில் மணி அடித்த போதெல்லாம் அதிர்வுடன் பக்கத்தில் படுத்திருக்கும் ராஜலக்ஷ்மியை தலையை லேசாக உயர்த்தி நோட்டம் விட்டார். அவருடைய இந்த அத்தனை ஓய்வின்மையையும் உணர்ந்தபடி ராஜலக்ஷ்மியும் உறங்காமல் வெறுமனே கண்களை மூடியபடி கிடந்தாள். அவளுக்கு அவரின் ஓய்வின்மை கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது.
அன்று கடிகாரத்தில் இரண்டு மணி அடித்த ஒருசில நிமிடங்களில் சபரிநாதன் சின்ன அரவம்கூட ஏற்படுத்தாமல் படுக்கையில் இருந்து எழுந்து உட்கார்ந்தார். ராஜலக்ஷ்மியை உற்றுப் பார்த்தார். உறங்குபவள் போலத் தெரிந்தாள். மெல்லக் கட்டிலைவிட்டு இறங்கிய சபரிநாதன் ஓசையில்லாமல் நடந்து சமையல் அறைக்குப் போனார். தீப்பெட்டியைத் தேடி எடுத்துக்கொண்டார். மார்பு சற்று வேகமாகத் துடித்தது. பயத்தில் திரும்பிப் பார்த்தபடியே பூனை போல நடந்து வாசல் கதவை அடைந்தார். உடம்பில் வியர்வை பெருகி வழிந்தது. ரொம்பக் கவனமாக இழை இழையாக வாசல் கதவைத் திறந்தார்.
மனித நடமாட்டமே இல்லாமல் வழக்கத்திற்கு மாறான அகலத்தில் தெரு காட்சியளித்தது. எல்லா வீடுகளும் மங்கலாக இருளில் கரைந்து தெரிந்தன. தன் வீட்டின் உட்புறத்தை மறுபடியும் ஒருமுறை திரும்பிப் பார்த்துக்கொண்ட பின், தெருவில் இறங்கினார். சுப்பையாவின் மோட்டார் பைக் அங்கு கம்பீரமாக நின்றிருந்தது. அவருக்குள் இருந்த வன்முறை வன விலங்கு வாலைச் சுழற்றியபடியே அதை நோக்கி நகர்ந்தது…
வயசுக்கு தகுந்த பெண் மனைவியா இல்லனா இப்படித்தான் வயசுக்கு மீறின செயல்களை செய்யவேண்டும் சபரிநாதனை போல