விதியின் சதி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 9, 2019
பார்வையிட்டோர்: 8,002 
 

அப்பா என்ன வியர்வை ,குளித்து உடை மாற்றுவதற்குள் இப்படி வியர்த்துக் கொட்டுகிறதே , இதே வீட்டில்தானே பிறந்து வளர்ந்தோம் ,அப்போதெல்லாம் இப்படி வியர்ப்பதில்லையே ,மனிதர்களைப்போலவேகாலநிலையும் மாறிவிட்ட்து ,என மனத்திற்குள்சொல்லிக்கொண்டான் .முன்னர் ஒரு வீடு இருந்த வளவிற்குள் ,மரங்களை தறித்து இரண்டு மூன்று வீடுகள் எழும்பியிருப்பதும் ,சுற்றிவர மாடிவீடுகள் அமைந்திருப்பதும் காற்றோட்டமற்று இப்படி புழுங்குவதற்கு முக்கியகாரணமென எண்ணியபடி ,உடைமாற்றி வெளியே வந்தான் மதன் ,தங்கை காலைச் சாப்பாட்டுடன் காத்திருந்தாள் .இன்று எத்தனை பிரச்சனைகளுக்கு முகங்கொடுக்க வேண்டுமோவென எண்ணும்போதே சலிப்பாயிருந்தது மதனுக்கு ,தலையை சிலுப்பி உணர்வுகளுக்கு தடைபோட்டு மேசை முன் அமர்ந்தான் .தங்கை உணவைப் பரிமாறினாள் ,ரசித்து உண்ணும் மனநிலை இருவருக்குமே இருக்கவில்லை . தங்கை அவன் முகத்தையே ஆவலோடு பார்த்தபடி காத்திருந்தாள் ,எதுவும் பேசாமலே உண்டுமுடித்து வெளியேறினான் மதன் ,அவனுக்கே அடுத்து என்ன நடக்கப் போகிறதென தெரியாதபோது ,யாருக்கு எதைக் கூறுவது விரைந்து நடந்து வாகனத்தில் ஏறினான் .மதன் இருபத்தி ஏழு வருடங்களிற்கு பின் தாய்நாட்டிற்கு வந்திருக்கிறான் ,குடும்பத்தின் முத்த மகனானதால் கடமைகளுக்காகவும் ,இருக்கும் ஒரே ஆண்வாரிசை யூத்தத்தில் இருந்து காப்பாற்றி விடவேண்டும் என்ற பெற்றோரின் பெரும் முயற்சியினாலும் ,பத்தொன்பது வயதிலேயே அந்நியநாட்டில் அடைக்கலமானான் மதன் . நாட்டுநிலைமை கொஞ்சம் சீரடைந்தபோது ஒருமுறை வந்துவிட்டுப்போ எனப் பெற்றோர் பலமுறை கெஞ்சியபோதும் ,சகோதரிகளை ,கரைசேர்க்கும் பொறுப்பின் கடன்சுமையால் வரமுடியாது தவித்தான் . ஒருமுறைவந்து தான் சுற்றித்திரிந்த இடங்கள் படித்த பாடசாலை ,நண்பர்கள், உறவுகள் ,எல்லாம் பார்க்க வேண்டுமென்ற ஆவல் அவனுக்குள் இருந்தபோதும் ,அதைவிடவும் மேலான சுமை வரவிடாமல் தடுத்துவிட்டது ..அதனால் அவன் இழந்தவைகள் ஏராளம் ,இறுதியாக தந்தையின் முகத்தைக் கூட அவனால் தரிசிக்க முடியவில்லை . ஒரு கூட்டுப் பறவைகளாய் இருந்த குடும்பத்தினர் இப்போது பிரிந்து ,சொத்து சுகமென சுயநலப் போர்வைக்குள் வாழ்கிறார்கள் ,எப்படி இப்படியானது ,ஒருவர்மேல் ஒருவர் உயிராய் இருந்தார்கள் .அடுத்தவர்கள் யாரும் யாரையும் குறை கூறமுடியாது .உடுப்புக்களைத் தோய்த்து அயன் செய்து ,அழகாய் அனுப்ப ஒரு அக்கா ,விதவிதமாய் சிற்றுண்டிகளைச் செய்துதர இன்னுமொரு அக்கா ,வீடடை அலங்கரிப்பதென்ன ,தோட்டத்தை அழகுபடுத்துவதென்ன ,,அம்மாவும் அப்பாவும் ,மிக நிம்மதியாக இருந்தார்கள் .அவ்வளவு ஒற்றுமையான சகோதரர்கள்,அயலவர்களும் எல்லாவற்றிற்கும் இவர்களையே உதாரணம் கூறும்படி நடந்து கொண்டார்கள், இன்று தன்வீடு குடும்பமென குறுக்கிய வட்டத்துள் எப்படி ஒதுங்கினார்கள் ,நினைக்கவே மதனுக்கு வேதனையாக இருந்தது .அம்மாவுடன் இருக்கும் தங்கை உமாவே ,அண்ணா கெதியாக ஒருமுறை வாருங்கள் ,அம்மாவின் உடல்நிலை சரியில்லை,அடிக்கடி காச்சல் வருகிறது ,மிகப் பலவீனமாக இருக்கிறாள் ,நன்றாக மெலிந்துவிட்டா என அடிக்கடி ,கூறியதாலும் ,அம்மாவும் மதன் நீ ,அப்பாவை பார்க்காமல் அனுப்பியது

போலவே ,என்னையும் பார்க்காமல் வழிஅனுப்பப் போகிறாயா ?எனக்கூறி வேதனைப்பட்டதும், மதனின் திருமணம் ஊரிலே நடக்க வேண்டுமென்பது அம்மாவின் தீராத ஆசையென்பதாலும்,எல்லாவற்றையும் மூட்டைக்கட்டி வைத்து நாட்டுக்கு வந்திருக்கிறான் மதன்.

மதனைக்கண்ட அம்மா குழந்தையாகத் தேம்பினாள்,மகிழ்ந்தாள்.அவனுக்குத் தன்னால் எதுவும் செய்துதர முடியவில்லையென அரற்றினாள் ,இப்படி ஒருவாரம் முடிந்தது .அம்மாவை இதய சத்திர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்க எண்ணினான் மதன் ,சகோதரிகள் தனியார் மருத்துவமனையே சிறந்தது அங்கு அனுமதிப்போம் என்றபோதும் ,பொது மருத்துவமனையிலேயே அனுமதிக்க விரும்பினான் மதன் ,காரணம் தனியார் மருத்துவ மனைகள் முடியாது என்றநிலையில் பொதுமருத்துவமனைக்கே அனுப்புவார்கள் ,அத்தோடு அங்கே எந்த நேரமும் மருத்துவர்கள் ,உதவி கிடைக்கும் என்பதும் அவனது நம்பிக்கையாகஇருந்தது .அதன்படி முதற்கட்ட பரிசோதனைக்காக அம்மா அனுமதிக்கப்பட்டிருந்தார் ,எல்லோரும் வெளியே காத்திருந்தார்கள் .பரிசோதனை முடித்த டாகடர் மதனை அழைத்து தன்அறைக்கு வரும்படி கூறினார் .

அம்மாவின் உடல்நிலைப்பற்றி என்ன கூறப் போகிறார்களோ ?எனப்பயந்தபடியே உள்நுழைந்தான் மதன் ,நாம் நினைத்தபடியும் விரும்பியபடியும் எல்லாம் நடந்தால் துன்பம் என்றவார்த்தையே தோன்றியிருக்காதே ,எங்கள் கையைக் கட்டிவிட்டு விதி தன் எண்ணப்படி அழைத்துச் செல்வதே நியதியாயிருக்கிறது .அறைக்குள் நுழைந்தமதனுக்கு டாக்டர் கூறிய செய்தியை உள்வாங்கவே முடியவில்லை ,கடவுளே இதென்ன கிணறு

வெட்ட பூதம் புறப்பட்ட கதையாக இருக்கிறதே,தலைசுற்றி மயக்கம் வருவதுபோல உணர்ந்தான் மதன் .கதிரையை இறுகப்பற்றி தன்னைத் திடப்படுத்திக்கொண்டான்.அவன் நிலையை உணர்ந்த டாகடர் அவன் தோள்களை ஆதரவாகப் பற்றி அணைத்தார் .

தம்பி ! நீங்கள் வெளிநாட்டில் இருந்து வந்திருக்கிறீர்கள் ;நிலைமையைப் புரிந்துகொள்ளுங்கள்.உங்களம்மாவுக்கு வயது இப்போ எழுபது,அவரின் இதயம் மிகப்பலவீனமாக இருக்கிறது. அவரின் இப்போதைய இந்த நிலைமைக்கு அவர்காரணமில்லை .பழி ஓரிடம் பாவமோரிடமாகிவிட்டது ,அவரின் வாழ்நாட்கள் இன்னும் கொஞ்சக்காலமே முடிந்தவரை அவரை மகிழ்வாக வைத்திருங்கள் எனக் கூறிவிட்டு அவர் வெளியேறினார் .

மதனால் எழுந்து நடக்க முடியவில்லை,பிரயத்தனப்பட்டு வெளியேவந்தான் .அவனைக்கண்ட சகோதரிகள் திகைத்துப்போனார்கள் ஏன் இப்படி வேர்த்து விறுவிறுத்து வருகிறான் ,பத்துவயது குடியதுபோல் வருகிறானே,என அருகில் ஓடிவந்து டாகடர் என்ன கூறினார் ?ஏனிப்படி வேர்க்கிறது எனப் பரிதவித்தார்கள் . மதனுக்கும் எப்படிக் கூறிப் புரியவைப்பதென்ற தவிப்பு, சகோதரிகளும் அம்மாவின் உடல்நிலை மோசமாகிவிட்டதென டாக்டர் கூறியிருக்கிறாரென எண்ணி அழுதவாறு மதனை தேற்றினார்கள் .அழாதே அம்மாவுக்கு வயது போய்விட்டது ,நெடுநாட்களாக நோயில் அவதிப்பட்டும் நீ வரும்வரை சத்திரசிகிச்சைக்கு சம்மதிக்கவில்லை ,எதோ இப்பவாவது சம்மதித்தாரே, கடவுள் இருக்கிறான், நீ ஒன்றுக்கும்கவலைப்படாதே, எனத் தேற்றினார்கள் ,

ஒருவாறு அமைதியடைந்த மதன், அம்மாவின் இரத்தப்பரிசோதனையில் அம்மாவுக்கு எயிட்ஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக டாக்டர் கூறியதை இவர்களிடம் தெருவித்தால், செய்தியைத் தாங்கும் மனநிலை இவர்களுக்கு இருக்குமா ?அதிர்ந்து போவார்களே, அவமானத்தில் துடிப்பர்களே, அப்பாவில் இருக்கும் மதிப்பும், அம்மாவில் இருக்கும் பாசமும் அழிந்துவிடும் .வேண்டாம் எதுவும் அவர்களுக்கு தெரியவேண்டாம் .அம்மாவைத் தீவிரசிகிசசைப் பிரிவில் வைத்திருப்பதால் யாரும் அதிகம் பார்க்கமுடியாது,இருக்கும்வரை அம்மா அதே மதிப்புடனும் பாசத்துடனும் இருந்து, விடைபெறட்டும் ,அப்பாவும் இறந்தபின் மதிப்பிழந்து என்னப்பயன் ? அவரும் மோசமானவரல்ல குடும்பம் பிள்ளைகள் எனத் தனது கடமையைச் செய்தார்.எல்லோரும் மனிதர்கள் தானே, உத்தியோக நாட்களில் ஊர்விட்டு ஊர் வாழ்ந்தபோதே இந்த விபரீதம் ஏற்பட்டிருக்கிறது, அதனாலேயே அவர் இறுதிக் காலத்தில் வீட்டோடு வரும்படி கேட்டும் வராது வேலையென வேறிடத்திலேயே உயிரை விட்டிருக்கிறார் .என எண்ணிய மதன் நிலைமையைச் சமாளித்தான். அம்மாவுக்கு சத்திர சிகிச்சை செய்யும் அளவுக்கு உடல்நிலை இல்லையாம் .அதனால் அவர் இருக்கும் வரை அவரை இப்படியே வைத்திருக்கும் படி கூறுகிறார்கள் .அதை என்னால் தாங்க முடியவில்லை எனச் சமாளித்து அனுப்பிவைத்தான் மதன் .

,இப்போ இரண்டுநாட்கள் கழிந்துவிட்டது .நிலைமை என்னை மீறியதாக இருக்கிறதே ,இப்படி மெல்லவும் முடியாமல் ,விழுங்கவும் முடியாத வேதனையில் எத்தனை நாட்கள் பயித்தியம் பிடித்தது போல் அலைவதெனும் சிந்தனையின் ஊடே வைத்தியசாலையை வந்தடைந்த மதன் வாகனத்தை நிறுத்திவிட்டு, உள்ளேசென்று அம்மா இருக்கும் அறைக்குள் நுழைந்தான் ,இத்தனை காலமும் தன்னைத் தன்நலனைச் சிந்திக்காமல் ,குடும்பத்தினர் விருப்பு வெறுப்புகளுக்காக உழைத்தவள், தன் பொறுப்புக்களை மதனிடம் கையளித்த நிம்மதியில் மாசற்றமலராக கண்ணைமூடி தூங்கிக்கொண்டிருந்தாள். அவள் தூக்கத்தைக் கலைக்காது வெளியேவந்த மதன் அம்மா பரிசுத்தமானவள்,அவளுக்கு இழுக்கு வராமல் விரைவில் கடவுள் எடுத்துக்கொள்ளட்டும். அம்மாவை இருக்கும்வரை மாசுபடாமல் இறுதிவரை காப்பேன் என எண்ணியபடி அம்மா கண்விழிக்கக் காத்திருக்கிறான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *