பொன்கொன்றை பூக்கும்போது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 7, 2020
பார்வையிட்டோர்: 2,803 
 
 

(1968ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

அதோ, என் எதிரே, அந்த மரம் மீண்டும் பூத்துக் குலுங்குகிறது. முகமெல்லாம் சிரிப்பேயாகி, சிரிப்பினால் முழு உருவமும் தனியொரு எழிலேயாகி நிற்கும் அழகுப் பெண் போல, அது முழுவதும் சிரிக்கும் மலர்களாகவே விளங்குகிறது. சரம் சரமாகத் தொங்கும் மஞ்சள் பூக்கள். பெயருக்குக்கூட மரத்தில் ஒரு இலையைக் காணோம். அதற்கு ஏன் இத்தனை உள்ளக் கிளர்ச்சி? ஏதுக்கு இத்தனை சிலிர்ப்பு? மங்கையின் உள்ளத்தில் கிளுகிளுக்கும் பருவகாலக் கனவுகள் அவள் முகத்திலும் அங்கங்களிலும் – அவள் மேனி முழுவதிலுமே பூத்துப் பொங்கி வனப்பாய்த் திகழ்வதுபோல், அதற்கும் ஏதேனும் கனவுகள், கிளர்வுகள் உள்ளுற இருந்து, புறத்தில் பொன்னிற மலர்களாய் மொய்த்துக் கிடக்கின்றனவோ?

நான் இந்த ஊருக்கு வந்த புதிதில், முதன் முதலாக இவ்வித எழிற்கோலத்தில் அம்மரத்தைப் பார்த்தபோது, அது என்ன மரம் என்று அறிந்திருந்தேனில்லை. கண்ணைக் கருத்தைக் கவரும் மோகனத் தோற்றமாய் நின்ற அதை அறிமுகம் செய்து கொள்ளும் அவாவோடு ஒரு பெரியவரிடம் விசாரித்தபோது, “பொன் கொன்னை” என்றார் அவர். “சரக்கொன்றை என்றும் சொல்லுவார்கள்.”

“கொங்கைகளும் கொன்றைகளும் பூச் சொரியும் காலம்” – என்று நந்திக் கலம்பகத்தில் வருவது, இந்த இனத்து மரமாகத் தான் இருக்க வேண்டும்” என்று நான் எண்ணிக்-கொண்டேன்.

இந்த மரம் குறிப்பிட்ட ஒரு காலத்தில் தான் “பொன் சொரிவது” எனப் பூக்களைக் கொத்துக் கொத்தாய், சரம் சரமாய், தொங்க விட்டுக்கொண்டிருக்கும்; இதர காலங்களில் லைகளோடு வெறும் மரமாய் நிற்கும் என்பதையும் நான் புரிந்துகொண்டேன்.

இந்த மரம் என் உள்ளத்தில் ஒரு நிலையான இடம் பெற்றுவிட்டதற்கு இதனுடைய இந்தத் தனித் தன்மை மட்டுமே காரணம அல்ல.

நாகரிக நகரங்களிலும், பேரூர்களிலும், சில சிற்றுார்களிலும் சிறிது சிறிது காலம் தங்கி, அலுப்புற்று, அமைதியற்று. சும்மா சுற்றிக் கொண்டிருந்த எனக்கு இந்த ஊர் மிகுதியும் பிடித்து விட்டது. இது “பட்டிக்காடு மில்லை; “பட்டணக்கரை”யும் இல்லை. அமைதியாய்நாளோட்ட ஆசைப்படுகிறவர்களுக்கு ஏற்ற அழகான ஊர். இங்கேயே தங்கிவிடலாமே என்றது என் மனம்.

வசதியான ஒருவீடும் கிடைத்தது. “சிறுகுடில்” என்றுதான் அதைச் சொல்ல வேண்டும். பலவித மரங்களும் குளுமை தந்து கொண்டிருந்த சூழ்நிலையில் அது ஒரு ஆசிரமம் போல் இனிமையும் இதமும் தருவதாய் அமைந்துள்ளது. அதை ஒட்டி ஒரு பங்களா”. அதைச் சுற்றிலும் பெரிய தோட்டம். அங்குதான் இந்தப் பொன்கொன்றை மரம் நிற்கிறது.

சிறு வீடும் சூழ்நிலையும் எனக்குப் பிடித்து விட்டதால் அதையே என் இருப்பிடமாகக் கொண்டேன் நான்.

பக்கத்துப் பெரிய வீடு எப்போதும் பூட்டியே கிடந்தது. அந்த வீட்டில் ஆட்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எனக்கு ஒன்றுபோல் தான். ஆகவே அதைப் பற்றி அறிந்துகொள்ள நான் அக்கறை காட்டவில்லை.

பொதுவாக யாரைக் குறித்தும் தெரிந்து கொள்ள நான் சிரத்தை கொள்வது இல்லை. என்னையும் எனது புத்தகங்களையும் எனது விந்தைக் குணங்களையும் விசித்திரப் போக்குகளையும் தனிமையாக விட்டு விட்டு மற்றவர்கள் அவரவர் அலுவல்களைக் கவனித்துக் கொண்டிருந்தால் நல்லது என்று எண்ணி ஒதுங்கி வாழும் பிராணி நான்.

அநேகமாக யாரும் என் வழிக்கு வருவதில்லை. சதா புத்தகங்களைக் ”கட்டி மாரடித்துக்கொண்டு”, எதிலும் கலந்து கொள்ளாமலும் எவரிடமும் பேசிப் பழகாமலும் எப்படியோ நாளோட்டுகிற ஒரு நபரிடத்தில் மற்றவர்கள் என்ன சுவாரசியத்தைக் கண்டுவிட முடியும்? முதலில், யாரோ என்னவோ என்று அறியும் அவாவுடன் திரிவார்கள். அறிய வேண்டியவற்றை அறிந்துகொண்டதும், தத்தம் இஷ்டம் போல் அபிப்பிராயங்களை உருவாக்கிக்கொண்டு விலகிப் போவார்கள்.

இந்த ஊரிலும் அப்படித்தான் நடந்தது. இதன் மூலமும் எனக் குப் பிடித்தமான அமைதியான சுற்றுச் சார்பு படிந்துவிட்டது.

இப்படி மனசுக்குப் பிடித்தமான முறையில் நாட்கள் ஒடிக் கொண்டிருந்தபோதுதான் “திடீர் விபத்து” மாதிரி நிகழ்ச்சிகள் குறுக்கிட்டன.

பக்கத்து பங்களாக்காரர்கள் வந்துவிட்டார்கள். ஆட்கள் வருவதும் போவதுமாய்ச் சதா ஒரே பரபரப்பு. கூச்சல், குதிப்பு, சிரிப்பாணி எப்போது எழும் என்று சொல்லமுடியாத நிலை.

ஒரு நாள் மத்தியானம் பன்னிரண்டு மணி இருக்கும். தோட்டத்தில் பாட்டுக் குரல் கேட்டது.

“ஐயா சிறுபெண், ஏழை என்பால்,
இரக்கம் வராதா – தெய்வம்
தின்னச் சோறு தராதா?”
என்று பழங்கால சினிமாப் பாடல் ஒன்றை இனிமையாக இசைத்தது ஒரு குரல்.

அது என்னை வெளியே இழுத்தது.

பெரிய பெண் ஒருத்தி பாடிக்கொண்டிருந்தாள். சிறுமி ஒருத்தி உரிய முறையில் ஆடிக்கொண்டிருந்தாள்.

எனக்குச் சிரிப்பு வந்தது.

தற்செயலாக அக்காள் என்னைக் கவனித்து விட்டாள். “ஏட்டி, போதும் நிறுத்து, அந்த வீட்டுக்காரர் பார்க்கிறார்” என்று எச்சரித்தாள்.

“பார்த்தால் பார்க்கட்டுமே!” என்று அலட்சியமாகக் கூறித் திரும்பிய சின்னப் பெண் என்னைக் கூர்மையாகக் கவனித்தாள். “ஏன் சிரிக்கிறீங்க?” என்று கேட்டாள்.

“சிரிப்பு வந்தது. சிரித்தேன்.”

அவள் வெடுக்கென்று கேட்டாள்: “ஏன் சிரிப்பு வருதுன்னு கேட்டேன்?”

“சிரிக்கக் கூடாதா?” என்றேன்.

“இல்லை. கேலியாச் சிரிக்கும்படி என் ஆட்டத்திலே என்ன கண்டீங்கன்னு கேட்கேன்!”

அவள் இடுப்பில் கைகளை ஊன்றிக்கொண்டு தலை நிமிர்ந்து நின்று, கண்டிப்பான விசாரணையில் ஈடுபட்டது ரசிக்க வேண்டி யது காட்சியாக இருந்தது.

“அதில்லே.”

“அதில்லேன்னா பின்னே எது இருக்கு?”

அவள் கேள்வி எனக்கு மேலும் சிரிப்பைத் தூண்டியது.

அவள் மூஞ்சியை உர்ரென்றாக்கிக்கொண்டு, “இப்ப என்ன சிரிப்பு வாழுது? முதல் சிரிப்புக்கே காரணம் சொல்லியாகலே இன்னும்!” என்றாள்.

“ஏ வாயாடி, இங்கே வா” என்றாள் அக்கா, வீட்டுப் பக்கம் நகர்ந்தவளாய்.

“நீ போ அக்கா. சரி, நீங்க சொல்லுங்க. ஏன் சிரிப்பு வந்தது?” என்று தங்கச்சி விசாரணையைத் தொடர்ந்தாள்.

“பாட்டும் பொருளும் ஒத்து வரலே! அதாவது, நீ ஏழை, உனக்குத் தெய்வம் சோறு தரணும்னுதானே ஆடுறே? ஏழை என்ற சொல்லின் எடுத்துக்காட்டு நீதான் என்றால், உலகத்தில் உன் போன்ற ஏழைகள் நிறைய நிறைய இருக்கலாமே என்று தோன்றியது…”

நான் ஒரு சிறு பெண்ணிடம் ’புத்தகத்தனமாய்’ பேசுகின்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. என் பேச்சு நின்று விட்டது.

“வவ்வவ்வே” என்று கீழ் உதட்டை மடித்து, பல்லால் கடித்து, “வலிப்பு காட்டினாள் அவள்.

“ஏட்டி என்ன கொழுப்பு? இங்கே வா!” என்று அதட்டிய அக்காள். என் பக்கம் பகைமைப் பார்வை எறிந்துவிட்டு வீடு விடென்று நடந்தாள்.

அந்த வீட்டில் இதுபோல் இன்னும் எத்தனை குரங்குகள் வந்திருக்கின்றனவோ தெரியவில்லை!” என்று நான் எண்ணிக் கொண்டேன்.

அப்படி அதிகமாக ஒன்றுமில்லை என்று பின்னர் தெரிந்தது. அந்தச் சிறு பெண், அவள் அக்காள், அம்மா, தாத்தா ஒருவர், ஒரு வேலைக்காரி. அப்பா டவுனில் இருக்கிறார். இவர்கள் வருஷத்துக்கு ஒரு முறை இங்கு வந்து, இரண்டு மூன்று மாதங்கள் தங்கிவிட்டுப் போவார்கள். அப்பா எப்பவாவது வந்தாலும் வருவார்; வராமலும் இருப்பார். தாத்தாதான் அடிக்கடி இந்த ஊருக்கு வந்து போவார். இதெல்லாம் அந்தப் பெண் மூலம் பிறகு எனக்குக் கிடைத்த விவரங்கள்.

அவளுக்குப் பன்னிரண்டு அல்லது பதின்மூன்று வயசிருக் கும். இந்த வயசுப் பெண்கள் எந்த ஊரில் எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும் சரி, ரொம்பவும் ’இன்ட்டரஸ்டிங்’ கான விஷயங்கள்! இந்த பருவத்தில் பெண் பெரியமனுஷியும் இல்லை; சின்னப்பிள்ளையும் இல்லை. என்றாலும் பெரிய மனுவழிக்கு உரிய தோரணைகளும் எண்ணங்களும் ஆசைகளும் அவளிடம் தோன்றி விடுகின்றன. அதே சமயம், சிறுபிள்ளைத் தனமும் அறியாச் சுபாவமும் அவள் செயலில் வெளிப்படு கின்றன. தெரியாத்தனத்தோடும், அனைத்தையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற துடிப்போடும் நடந்து கொள்கிற அவளிடம் நாம் பெரியவள், நமக்கு எல்லாம் தெரியும்” என்கிற ஒரு பெரியதனம் படிந்து, அவள் பேச்சில் சதா ஒலி செய்து கொண்டிருக்கும்.

இந்தப் பெண்ணும் அப்படித்தான் விளங்கினாள். அவள் இஷ்டத்துக்கு என் அறைக்குள் வந்தாள். சாமான்களைத் துழாவினாள். புத்தகங்களை உலைத்து, தாறுமாறாகப் போட்டாள். பெரிய தொல்லையாகவும், தொந்தரவாகவும் மாறிவிட்டாள் சில நாட்களிலே, அவள் மீது எனக்கு எரிச்சலும், சிறு வெறுப்பும் ஏற்பட்டது என்றாலும் அவளது புத்திசாலித் தனமான பேச்சும், குறும்புத்தனமும், விளையாட்டு சுபாவமும் எனக்கு பிடித்தனவாகி விட்டன.

ஒரு சமயம். “உன் பேர் என்ன?” என்று அவளிடம் கேட்டேன்.

“இன்னும் உங்களுக்குத் தெரியாது? ஐயே!” என்றாள். “என்பேரு நெடுக முழங்குதே!” என்று பெருமையோடு சொன்னாள். “இந்தத் தெருக் குரங்குக வாய்வலிக்க ஒரு பாட்டுப் பாடுதே, அது என்னைப் பத்திதான்”

“என் காதில் விழவில்லையே!”

“நீங்க என்ன செவிடா?”

“இல்லை. நான் படிக்கிறபோது, வேறு எதையும் கவனிப்ப தில்லை” என்றேன்.

“நீங்க ஏன் படித்துக்கொண்டே இருக்கீங்க?” என்று உடனே கேட்டாள் அவள். எத்தனையோ பேர் கேட்டுவிட்ட வழக்கமான கேள்வி.

“சும்மாதான்” என்று சொல்லிவைத்தேன்.

“சுமந்துக்கிட்டே படிக்கப்படாது? … சும்மாதானாம்!”

“ஹூம்! மக்கிப்போன ஹாஸ்யம்!” என்றேன்.

“உங்க மூஞ்சி!” என்று கத்தினாள் அவள்.

“அது எப்படியும் இருக்கட்டும். உன் பேரு என்ன, அதைச் சொல்லலியே?”

“தெருப் பிள்ளைகள் கூப்பாடு போடுதே –

பிஸ்கட் பிஸ்கட்!

என்ன பிஸ்கட்?

ஜம் பிஸ்கட்!

என்ன ஜம்?

ராஜம்னு,

அது என்னைப் பத்திதான்.”

“ஒகோ!. உன் பேரு ராஜம்கிறதை நேரடியாகவே சொல்லியிருக்கலாம்!”

“என் அக்கா பேரு என்ன தெரியுமா? த்ரீஸைட் பியூட்டி!” என்று அவளாகச் சொல்ல தொடங்கியதும் நான் வியப்புற்றேன்.

“என்னது? என்ன பேரு?”

“உங்களுக்கு ஒரு மண்ணும் தெரியாது. அதை நான் என்னைக்கோ புரிஞ்சுக்கிட்டேன். எங்க அக்கா பேரு திரிபுர சுந்தரி. அவள் படித்த பள்ளிக்கூடத்திலே சில வால்கள் இருந்தாங்க. எந்தப் பெயரையும் இஷ்டம்போல் ஆங்கிலப் படுத்தி, கேலியாச் சொல்லுவாங்க. அக்கா த்ரீ ஸைட் பியூட்டியாக மாறிவிட்டா. அப்படி இருக்க விரும்பாத அக்கா தன் பெயரை சுந்தரின்னு சுருக்கிக் கொண்டாள்…. “

வெளியே தோட்டத்திலிருந்து அக்காளின் குரல் வெடித்தது: “ஏ தடிக்குரங்கு! இங்கே வா. உன் மண்டையைக் குழைச்சு மாவிளக்கு ஏத்துறேன்.”

தங்கச்சி தன் குறையை உணரவில்லை. பதிலுக்குக் கத்தினாள்: “நான் ஆயிரம் வாட்டி சொல்லியாச்சு – ஒட்டுக் கேட்காதே, ஒட்டுக் கேட்காதேன்னு. எனக்கென்ன! நீ அடுத்த சென்மத்திலே பல்லியாத்தான் பொறக்கப் போறே!”

நான் சிரிக்காமல் எப்படி இருக்க முடியும்? இதனாலும் அக்காளின் கோபம் அதிகரித்துத் தான் இருக்கும்.

அவளுக்குக் கோபம் ஏற்பட்டு வளர எத்தனையோ காரணங்கள் சேர்ந்திருந்தன.

ஒரு சமயம், ராஜம் “அக்கா படிக்கிறதுக்கு புத்தகம் வேணுமாம். ஏதாவது புக் கொடுங்களேன்” என்று கேட்டாள்.

“இங்கே இருக்கிற புத்தகம் எதுவும் உன் அக்காளுக்குப் பிடிக்காது. உன் அக்காளுக்குப் பிடிக்கும்படியான கதைகள், புத்தகங்களை நான் படிப்பதுமில்லை; வாங்குவதுமில்லை” என்றேன்.

“அவளுக்கு எது பிடிக்கும், பிடிக்காது என்று உங்களுக்கு எப்படித் தெரியுமாம்?”

“இந்த நாட்டு வாசகப் பெருமக்களில் ஒரு நபர் தானே உன் அக்காளும்! இந்நாட்டில் உள்ள வாசமணிகளும் ரசிகப் பெருமக் களும் எந்தவிதமான பத்திரிகைகள் புத்தகங்கள் எழுத்துக்களை ஆசையோடு படிக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாதா, என்ன?”

“சரியான போர்! ஒரு சின்னப்பெண்ணிடம் எப்படிப் பேசனும்னுகூடத் தெரியாத மண்டு!” என்று “சர்டிபிகேட்” கொடுத்தாள் அவள்.

இந்த விஷயத்தை அவள் அக்காளும் அறிந்துதானிருந்தாள். ஒரு சந்தர்ப்பத்தில் ராஜம் அங்குமிங்கும் தீவிரமாகத் தேடினாள். “என்ன தேடுகிறாய்?” என்று கேட்கவும், “தின்கிற துக்கு ஏதாவது பிஸ்கட், மிட்டாய், சாக்லேட்னு வாங்கி வைக்கப்படாது?” என்றாள்.

“உனக்குப் பிடிக்கக்கூடியதாக எதுவும் இந்த அறையில் இருக்காது. நான் வாங்கி வைத்திருக்கிற மிட்டாய் உனக்குப் பிடிக்கவும் பிடிக்காது!”

“அது உங்களுக்கு எப்படித் தெரியும்? அது என்ன மிட்டாய்?” என்று ஆர்வத்தோடு கேட்டாள் அவள்.

“பாரியின் ஜிஞ்சர் கேப்ஸ். சரியான இஞ்சி மிட்டாய்!”

“இஞ்சியா? அதை நீங்களே துன்னுங்க!” என்று எரிச்சலுடன் கூறி, வாயைச் சுளித்துப் பழிப்புக் காட்டினாள் அச்சிறுமி.

“வலிச்ச மோறையும் சுழிச்சுப்போம்!” என்று நான் கேலியாகச் சொல்லவும், “போனாப் போகட்டும். உங்க மோறை நல்லாயிருந்தால் சரிதான்!” என்று எரிந்து விழுந்துவிட்டு வெளியே ஒடினாள்.

சில தினங்களுக்குப் பிறகு, அவள் நாளைக்கு நாங்க ஊருக்குப் போகப்போறோம்” என்று அறிவித்தபோது, “கெட்ட கழிசடையின் நல்ல நீக்கம்!” என்று சொல்லத் துடித்தது என் நா.

அதை நான் சொல்லியிருந்தால், “good riddance of bad rubbish என ஆங்கிலத்தில் எண்ணியதை எப்படியோ தமிழில் சொன்னதாகத்தான் அமையும். அவள் “உங்களுக்கு சரியாக, புரியும்படியாகப் பேசவே தெரியலே. இதை நூறுவாட்டி நான் சொல்லியாச்சு!” என்று தான் பதில் கூறுவாள். என் மெளனத்துக்கு அது மட்டும் காரணமல்ல. உயிர்த்துடிப்பு மிகுந்த – துள்ளலும் குறுகுறுப்பும் நிறைந்த – கவிதை போன்ற அச்சிறுமியைக் “கெட்ட கழிசடை” என்று குறிப்பிடுவதற்கு என் மனசுக்கே இஷ்டமில்லை.

அவள் போவதற்கு முன்பு என்னிடம் சொல்லிக் கொண்டாள். “இனி எப்போ பார்க்க முடியுமோ?” என்றேன்.

“ஒரு வருஷம் கழிச்சுத்தான்” என்று ராஜம் சொன்னபோது, அவள் அக்கா என்னவோ முணுமுணுத்தாள்.

“ஆமாம். அடுத்த வருஷம் பொன்கொன்றை பூத்துக் குலுங்குமே, அப்போதான். ஒவ்வொரு வருஷமும் இந்த மரம் பூத்து ஜில் என்று இருக்கிற சமயத்திலேதான் நாங்க வருவோம். அது ஓய்ந்து போகிறபோது, நாங்கள் போய்விடுவோம்” என்று தங்கச்சி உரக்கப் பேசினாள். அக்காள் அதற்கு அடி எடுத்து”க் கொடுத்தாள் போலும்!

மறு வருஷம், கொன்றை சொரிந்து சிரித்த போதும் அவர்கள் வந்தார்கள். அதற்கு அடுத்த வருஷமும் வந்தார்கள்.

இரண்டாவது வருஷம் ராஜம் பழைய சிறு பெண்ணாகத் தான் இருந்தாள். துடுக்குத்தனமாகப் பேசினாள்.

“நீங்க ஏன் கல்யாணம் செய்துகொள்ளாமலே இருக்கீங்க?” என்று திடீரென்று கேட்டாள் ஒருநாள்.

“அதைப் பற்றி நீ ஏன் கவலைப்படனும்?” என்றேன்.

“எங்க அக்கா கவலைப்படுகிற மாதிரித் தெரிஞ்சுது, அதுதான்” என்று சிரிப்புடன் சொன்னாள் அவள்.

“அவள் தான் ஏன் கவலைப்படனும்?”

“அவளுக்கு இன்னும் கல்யாணம் ஆகலே யில்லா! அதனாலேதான்” என்று கூறி, குறும்புச் சிரிப்பு சிந்தினாள்.

அவள் தாத்தா சிலசமயங்களில் என்னிடம் பேசியது உண்டு. சும்மா பொதுவாக அதையும் இதையும் பற்றி ஏதாவது சொல்லுவார். அந்த வருஷம் அவர் எனக்குச் சில போதனைகள் புரிய முன்வந்தார்.

“நீங்கள் சும்மா புத்தகங்களைப் படித்துக் கொண்டிருப்பது வீண்வேலை. புத்தகங்களைவிட வாழ்க்கையும், மனிதர்களும் சுவாரஸ்யமான விஷயங்கள்” என்று ஒருநாள் அவர் சொன்னார்.

“சரிதான்” என்றேன்.

“வாழ்க்கையிலிருந்து தப்பி ஓடுகிற – ஒட விரும்புகிற – போக்குத்தான் வெறுமனே புத்தகங்களைப் படித்துக்கொண்டிருப்பது என்ற எனக்குப் படுகிறது. வாழ்க்கையின் பொறுப்பு களையும் சுமைகளையும் சோதனைகளையும் ஏற்று, சகித்து, போராடி, அனுபவித்து, அவற்றின் இன்ப துன்பங்களை இயல் பாக ரசிக்க மனமோ, பக்குவமோ இல்லாத – அல்லது சோம் பலோ, பயமோ கொண்ட – பலவீனர்களின் பற்றுக்கோல்தான் இப்படிப் புத்தகங்களை மட்டுமே படித்துக்கொண்டிருப்பது. இதுவும் ஒருவகை எஸ்கேப்பிசம்தான்” என்று அழுத்தமாகச் சொன்னார் பெரியவர்.

“இருக்கட்டுமே! இது எனக்குப் பிடித்திருக்கிறது. அப்படி ஆராயப்போனால், ஆத்ம உயர்வுக்கு என்றும், ஞானத்தைத் தேடி என்றும் தனி இடங்களையும் வனங்களையும் மலைகளையும் தேடிச்சென்ற பழங்கால முனிவர்களும், தவம் மேற்கொண்ட ஞானிகளும்கூட எஸ்கேபிஸ்ட்கள்தான். நானாவது ஜனங்கள் மத்தியிலேயே வசிக்கிறேனே” என்றேன்.

அடுத்த வருஷம்தான் அவர் கேட்டார், “நீங்கள் கல்யாணம் செய்துகொண்டால் என்ன?” என்று/

“எனக்குப் பிடிக்காத காரியங்களில் நான் அக்கறை காட்டுவதில்லை. எனக்குப் பிடிக்காத விஷயங்களில் கல்யாணமும் ஒன்று….”

“ஒரு பெண் உங்களை விரும்புகிறாள். அவளைச் சேர்ந்த வர்களும் மறுக்கவில்லை. வசதியாக வாழ்க்கை நடத்துவதற்கும் வழிகள் செய்ய முடியும். இந்த நிலையில் நீங்கள் என்ன சொல்வீர்கள்?” என்று கேட்டு, அவர் என் முகத்தையே பார்த்தார்.

“எனக்குப் பிடிக்காத விஷயங்களைப் பற்றி நான் எண்ணுவதுமில்லை; பேச விரும்புவது மில்லை.”

அவர் பெருமூச்செறிந்தார்.

“மனிதர்கள் புத்தகங்களைவிட சுவாரஸ்யமானவர்கள் என்று மறுபடியும் சொல்கிறேன். அதிலும், பெண்கள் மிகமிக இன்டரஸ்டிங் ஆனவர்கள். அவர்களை – பலரையோ ஒருத்தி யையோ – படித்து அறிந்து ரசித்து மகிழ்வதற்கு சான்ஸ் கிடைப்பது அபூர்வமானது. அப்படிக் கிடைக்கிறபோதே படித்து ரசிக்க முற்படாமல் போனால், அது பெரும் நஷ்டம் தான்” என்றார்.

“நன்றி!” என்று கூறி அவருக்கு ஒரு கும்பிடு போட்டேன்.

அதன் பிறகு அவர் என்னிடம் உரையாடுவதில் ஆர்வம் காட்டவில்லை.

அந்த வருஷம், ராஜம் வளர்ந்திருந்தாள். உள்ளத்திலும் உணர்வுகளிலும் மாறுதல்கள் பெற்றிருந்தாள். நாணம், கூச்சம், சங்கோஜம் எல்லாம் அவளை வந்தடைந்திருந்தன. அவள் முன்புபோல் அறைக்குள் அடிக்கடி வரவில்லை. ஆனால், “ஆயிரம் தடவைகள்” அப்படியும் இப்படியும் அலைந்து தன்னை எக்ஸிபிஷன் ஆக்கிக் கொள்வதில் அவள் ஆர்வம் அதிகம் உடையவளாக இருந்தாள்.

“பழைய ராஜமாக இனி இவள் விளங்க முடியாது. அது நஷ்டம்தான்!” என்று என்மனம் வருத்தப்பட்டது.

அக்காள் சுந்தரியும் மாறித்தானிருந்தாள். அவள் கண்களில் சோகமும் மாறித் தானிருந்தாள். அவள் கண்களில் சோகமும் ஏக்கமும் குடிகொண்டிருந்தன. வாழ்க்கை ஒவ்வொருவரையும் என்னென்ன சோதனைகளுக்கெல்லாம் தான் ஆளாக்குகிறது!

நாலாம் வருஷம் பொன் கொன்றைகள் வழக்கம்போல் பூத்துக் குலுங்கின. ஆனால் பக்கத்து வீட்டில் யாருமே வரவில்லை. எவரும் வரமாட்டார்கள் என்று உணரவைக்கும் சேதிகள் முன்னதாகவே கிடைத்திருந்தன.

பதினாறு வயசு ராஜம் திடீரென்று செத்துப் போனாள். மரணம் விவஸ்தையின்றி உயிர்க்கேளாடு விளையாடுவது ஏன், எதற்காக நடை பெறுகிறது என்று யாருக்குப் புரிகிறது? சிறு பெண் செத்துப்போய்விட்டாள். என்னைப் பொறுத்தவரையில், எனக்குப் பிடித்திருந்த விளையாட்டுப்பெண் ராஜம் மறைந்து போய் இரண்டு வருஷங்களாகியிருந்தன. எனக்கு இது ஒரு நஷ்டமாகத் தோன்றவில்லை.

என் இதயத்தை உறுத்தியது இன்னொரு செய்தி – சுந்தரி பித்தி மாதிரி நடந்துகொள்கிறாள். தன்னினைவற்றுக் கிடக்கிறாள் சில சமயம், உணர்வுபெற்று எழுந்ததும், காரணமற்றுச் சிரிக்கிறாள், “பொன்கொன்றை பூக்கும் பூக்கும்” என்கிறாள். “பூத்ததுதான் வாடிப் போச்சே” என்கிறாள். “நரம்புநோய்” என்கிறார் ஒரு டாக்டர். “ஹிஸ்டீரியா” என்கிறார்கள். வாழ்வின் வெறுமையும் ஏக்கமும் சேர்ந்து, ஆசைகளும் கனவுகளும் தோல்வியுற்று விட்டதும், அவள் உணர்வுகளையும் உள்ளத் தையும் வெகுவாக பாதித்துள்ளன என்றும் சிலர் சொல்கிறார்கள்.

இருக்கலாம். எல்லாம் சரியாகவே இருக்கலாம்.

அவள் தாத்தா சொன்னாரே, அதுவும் சரிதான். அவளை மனசில் நினைத்துக் கொண்டுதான் அவர் சொன்னார்:

அவள் புத்தகத்தைவிட – கவிதை நூலைவிட சவாரஸ்ய மானவள். அவளை உணர்ந்து புரிந்து கொள்வதற்கு உரிய வாய்ப்பு வருகிறபோது ஏற்றுக்கொண்டால் நல்லது. அதற்கு உரிய “மூட்” இல்லை, நேரமில்லை என்று அதை ஒதுக்கி விடுவதனாலும், அவசரத்தினாலோ வேறு எதனாலோ அலட்சியப்படுத்துவதனாலும் நஷ்டமே ஏற்படும். உமக்கு மட்டுமல்ல. நுண்ணிய உணர்வுகளைத் தன்னுள்கொண்ட கவிதை நூலுக்கும்தான்… !.

என் உள்ளத்தில் சிறு வேதனை ஏற்படுகிறது. அந்தப் புத்தகம்” எனக்குப் புரிய வைத்திருக்கக் கூடிய எத்தனையோ உண்மைகளை, அனுபவங்களை, நான் புறக்கணித்து விட்டேன். பாவம், அந்த “உணர்வுப் புத்தகம்!”தன் வாழ்க்கை யையே பாழாய், பயனற்றதாய், ஆக்கிக்கொண்டிருக்கிறது!

இதோ, இவ்வருஷமும் பொன்கொன்றை பூத்துக் குலுங்கு கிறது. ஆண்டுதோறும் அது பூத்துக்கொண்டேதான் இருக்கும்.

இதைப் பார்க்கும்போதெல்லாம், அனுதாபத்துக்கு உரிய அந்தப் பெண்ணின் சோக சித்திரமும் என் உள்ளத்தில் மலர்கிறது.

– தீபம் 1968

– வல்லிக்கண்ணன் கதைகள், முதற் பதிப்பு: 2000, ராஜராஜன் பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *