பொண்ணு அடக்க ஒடுக்கமா அழகாக இருந்தது, ஆனால் கௌதம் `வேண்டாம்’ என்று பிடிவாதமாக நின்றான்.
ஒருவேளை அமெரிக்காவில் `காதல்’ `கீதல்’ ஏதாவது?நேராக மகனிடம் கேட்டேன்.
“அவங்க அக்கா யாருடனோ ரெண்டு வருஷம் முன்னாடி ஓடிப்போயிட்டாளாம்.” இழுத்தான்.
அவனை காம்பவுண்ட் சுவர் பக்கத்திற்கு அழைத்துச் சென்றேன்
“தென்னைமரத்தை நல்லா பாரு… மேலே ஒரு மட்டையை வெட்டியிருக்காங்க பாத்தியா?”
“ஆமா…”
“அந்த மட்டை பக்கத்து வீட்டுக்குள்ளே நுழைஞ்சிருக்கு. அவங்க இடைஞ்சல்னு சொன்னதாலே அதை மட்டும் வெட்டிட்டோம். மரத்தை வெட்டச் சொல்லலே. நமக்கு
வேர்தான் முக்கியம்.”
`சரிம்மா’ என்றான் ஒரே வரியில்.