‘ஐயா இங்கயே இறக்கி வெச்சிரட்டுங்களா?’ என்று கேட்டவாறு அந்தப்பழைய கால ஃப்ரேம் போட்ட ஒரு தாத்தாவின் படத்தை இறக்கினார். நான் அதை முன்னால் நின்று பார்த்துக் கொண்டிருந்தேன். பழைய வீடு காலி பண்ணி சொந்தமாகக் கட்டிய வீட்டில் குடிபுக அன்று அனைத்து ஏற்பாடுகளும் நடந்துகொண்டிருந்தன. நல்ல வேலைப்பாடு கொண்ட ஃப்ரேம்… வளைவு வளைவுகளாக… அதில் யானைகள் துதிக்கையைத் தூக்கியவண்ணம் நடை போட்டுக்கொண்டிருந்தன. ஒரு புறம் சேடியர் புடை சூழ ராஜபவனி. நாலு இஞ்ச் ஃப்ரேமிற்குள் இத்தனை வேலைப்பாடுகளும். சில இடங்களில் பூச்சி அரித்துக் காணப்பட்டது. எங்கோ கலைப்பொக்கிஷ அரங்கில் அல்லது மியூசியத்திலிருக்க வேண்டிய படம் அது. தப்பித்தவறி எங்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்துவிட்டது, பழய காலத்து (அம்மா சொல்வது போல் பெல்ஜியம் கண்ணாடி!). கண்ணாடி முன்புறம், சரியாகத் துடைக்கப்படாததால் சில இடங்களில் மங்கிக்காணப்பட்டது, பழுப்பேறிய ஜீன்ஸும், கோஸ்ட் டிஷர்ட்டுமாக, நான் முன்னின்று அழகு பார்த்துக்கொண்டிருந்த போது, “இந்தப் படத்தையெல்லாம் மாட்றதுக்கு எடம் ஏது? பேசாமத் தூக்கி பரண் மேல போட்டுவைங்க”. மனைவியின் குரல் எனைக்கலைத்தது! வீடு ஒதுங்க வைத்துக்கொண்டிருந்ததால் சட்டையிலும் ஜீன்ஸிலும் அழுக்கு, அதோடு அந்தப்படத்தின் முன் நின்று கொண்டிருந்தேன். ஏதோ ஒன்று எனை ஈர்த்தது. பார்த்துக்கொண்டே இருக்க வேண்டுமெனத்தோன்றியது.
பிறகு வேலை வேலை, வீடு பூரா ஒதுங்கவைத்ததில் நேரம் போனதே தெரியவில்லை. தாத்தா பரண் மேல் அமர்ந்து கொண்டார். நன்கு துணியைச் சுற்றி மூடி வைத்துவிட்டேன். ஆனாலும் உள்மனம் ஏதோ ஒன்று சொல்லிக்கொண்டே இருந்தது. “நல்ல அங்க வஸ்திரமும், சில்க் ஜிப்பாவும், தங்க ஜரிகை வேஷ்டியும், வாக்கிங்க் ஸ்டிக்கின் கைப்பிடியில் கழுகுமுகம் வழுவழுவென இருந்த வெண்கலப்பூண்” இவை எல்லாம் மீண்டும் மீண்டும் நினைவிலேயே இருந்து கொண்டிருந்தது, ராத்திரிப் படுக்கப்போகும் போது மனைவியிடம் கேட்டேன். “அந்தப் படத்தில் இருக்கிறவர் யாருன்னு தெரியுதான்னு… அடடா இன்னும் அந்தப் படத்தைப் பத்திதான் சிந்தனையா? பேசாம லைட்டை அணைச்சிட்டுத் தூங்குங்க” என்றாள்.
காலையில் எழுந்து அலுவலகம் கிளம்பிச்சென்றேன்… வேலையில் மனம் லயிக்கவில்லை. வழக்கமான என்றைக்கும் உள்ள வேலைதான். இழுத்துக்கொண்டிருந்தது. எப்படா மணி ஐந்தாகும் என்று எதிர்பார்த்து பின் கிளம்பிவிட்டேன். நேரே வீட்டிற்கு வந்தால் “என்ன ஐயா இன்னிக்கு சீக்கிரமே வந்துட்டப்ல இருக்கு?” “ஆமா… வேலை முடிஞ்சிருச்சி… அதான்…” என்று கைத்துண்டை எடுத்துக்கொண்டு குளியலறைப்பக்கம் சென்றேன். தாரை தாரையாக நீர் ஊற்றியது. மேலிருந்து. நினைவில் இன்னும் தாத்தாவின் படம். யோசித்துப்பார்த்ததில் அது படமாகத் தோன்றவில்லை எனக்கு. ஏதோ பிம்பம் போலத் தோன்றியது. குளித்து முடித்து விட்டு வெளியே வந்து காப்பியை வாங்கிக்குடித்துக் கொண்டே கேட்டேன்… “அந்தத் தாத்தா படம் எத்தனை நாளா நம்ம வீட்டில இருக்கு? “…அது ரொம்ப நாளாவே இங்கதான் இருக்கு. அவர் வேற யாருமில்ல. எங்க தாத்தாதான். ரொம்ப படாடொபமா வாழ்ந்தவர், நிலக்கிழார், சொத்து ஏகப்பட்டது. ஆனா எல்லாத்தையும் தானதர்மம்னு தொலைச்சிட்டார். கடைசியில மிஞ்சினது இது ஒண்ணுதான். அதை மரச்சட்டமெல்லாம் போட்டு ஃப்ரேம் பண்ணி வெச்சிட்டோம்… அவர் போய் இப்போ ரொம்ப நாளாச்சு. ஆமா இதெல்லாம் ஏன் கேக்கறீங்க…” என்றாள்… “இல்ல சும்மாதான்னு” சொல்லி சமாளித்தேன். நான் மார்க்கெட் போய்ட்டு வர்றேன்னு சொல்லிட்டு கிளம்பி சென்று விட்டாள். உடனே பரணில் ஏறி துணியை விலக்கிவிட்டுப் பார்த்தேன். அதில் தாத்தா கொஞ்சம் கொஞ்சமாக மறையத்தொடங்கியிருந்தார். எனக்கு என்ன வென்று புரியவில்லை. கீழே இறங்கி விட்டேன் உடனே.
ஏன் அப்படித்தெரிய வேண்டும். ஒருவேளை சரியாகத்துடைக்காததினால் மரத்தூள்களும் தூசியும் பட்டு அதுபோல் தெரிகிறதா? மார்கெட் போனவள் திரும்பி வந்தாள். “என்ன மறுபடியும் உடம்பெல்லாம் தூசி… பரண்மேல ஏறினீங்களா? சும்மா கொஞ்ச நேரம் இருக்க மாட்டீங்களே…”ன்னு கத்திக்கொண்டே அடுக்களைக்குள் புகுந்து கொண்டாள். மேலும் அந்தப்படத்தின் மீது ஆர்வம் தொடர்ந்தது. இவளுக்கு இதுக்கு மேலே எதுவும் தெரியாது, சும்மா கேட்டதுக்கே இவ்வளவு எரிச்சல் படறப்ப மேலயும் கேட்டுப் பயனில்லங்கற முடிவுக்கு வந்திட்டேன். எனது இந்த நடவடிக்கை அவ்வப்போது தொடர்ந்தது. விடுமுறைநாட்களில்.
ரெண்டு மாசத்திற்கு பிறகு ஏறிப்பார்த்த போது தாத்தா முழுமையாக மறைந்துவிட்டிருந்தார். வெறும் மரச்சட்டங்கள் தான் தெரிந்தது. சில இடங்களில் காரை பெயர்ந்து காணப்பட்டது. எனக்கு என்னவென்றே புரியவில்லை. தாத்தா எங்கே காணாமற் போய்விட்டார். ஒரே யோசனை, குழப்பம். கீழே இறங்கி வந்து விட்டேன். யார்கிட்ட இதைப்பத்திக் கேட்கிறது…? யாருக்குத் தெரியும்…? ஒன்றும் விளங்கவில்லை.
பின்னர் வேலை விஷயமாக வெளியூர் சென்றுவிட்டேன்… தாத்தா… இல்ல! மரச்சட்டங்கள் கொண்ட கண்ணாடி இன்னும் பரணில் தூங்கிக்கொண்டிருந்தது. திரும்பி வருவதற்கு ஒரு மாதத்திற்கும் மேலேயே ஆகிவிட்டது… “என்ன என்ன வாங்கிட்டு வந்திருக்கீங்க… “ம்ம்… இங்க பாரு… என்று காட்டினேன்… “பரணில் உள்ள ஃப்ரேம் போட்ட படம் போல ஒரு சிறிய படமொன்று, ஃப்ரேமில் அதேபோல் யானை வேலைப்பாடுகள்… ஜப்பான் நகரத்தின் வீதி… “ம்… உங்களுக்கு வேறே எதுவுமே கெடைக்கலியா?.. இன்னும் அந்த தாத்தா படத்த மறக்கல போலிருக்கு.” என்றாள். மேலே ஏறிப்பார்க்க வேண்டும் என்று தோன்றினாலும் இவ இருக்கும் போது எதுவும் நடக்காது என்று நினைத்துக்கொண்டேன்.
என் பெட்டியைக் குடைந்து கொண்டிருந்தாள் மனைவி… “என்னங்க இது புதுசா வந்திருக்க நாவலா? என்று ஸ்டீஃபன் ஹாக்கிங்க் புத்தகத்தைக் காட்டினாள். இல்ல இது “ப்ரீஃப் ஹிஸ்ற்றி ஓஃப் டைம்” வானாராய்ச்சி சம்பந்தப்பட்டது. என்னோட நண்பனுக்கு கொடுக்கறதுக்காக வாங்கிட்டு வந்தேன். அத உள்ள வை” என்றேன். தாத்தா காணமற்போன விபரம் இன்னமும் புரிபடவில்லை. மறுபடியும் மனைவி இல்லாத நேரம் ஏறிப்பார்த்தேன். இன்னமும் மரச்சட்டங்கள் தான் தெரிந்து கொண்டிருந்தது, எரிச்சல் பட்டு கீழே இறங்கிட்டேன். தாத்தா தொலைந்த விவரத்தை மனைவியிடம் சொல்லவில்லை. அப்படியே சொன்னாலும் கேட்கக்கூடிய மன நிலையில் அவள் இல்லை.
புத்தகம் கேட்டவன் ஊரில் இல்லை. ஊர்ப்பக்கம் யாருக்கோ உடம்பு சரியில்லை என்று சென்றுவிட்டதாக செய்தி கிடைத்தது. இரண்டு மூன்று மாதங்களாகவே அந்தப்புத்தகம் என்னிடத்திலேயே இருந்தது. ஒரு நாள் பொழுது போகாமல் அதை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன். இலகுவான எளிதான ஆங்கிலத்தில் தான் எழுதப்பட்டிருந்தது. வழக்கமாக இந்தமாதிரி நூல்களில் காணப்படும் கணக்குகளோ சமன்பாடுகளோ இல்லாமலிருந்தது பெரிய ஆறுதலாக இருந்தது… கதை போல் சென்று கொண்டிருந்தது. என் நண்பனுக்கு வானாராய்ச்சியில் மிகவும் ஈடுபாடு. டெலஸ்கோப், பைனாகுலர் எல்லாம் வெச்சிக்கிட்டு மொட்டமாடியே தவம்னு கெடப்பான். அவ்வப்போது பக்கத்து வீட்டு சன்னலையும் ஃபொகஸ் பண்ணும் அவனது டெலஸ்கோப்…! ரொம்ப சிலாகித்துப் பேசுவான் ஹாக்கிங்க் பத்தி. ஒருவேளை அவனுக்கு இது ஒண்ணுமே இல்லாத விஷயமா இருக்குமோ என இருந்தது இந்தப் புத்தகம். ஆராய்ச்சிக் கட்டுரையை ஜனரஞ்சகமாக கொடுத்தது போலிருந்தது.
சுவாரசியமாகச்சென்று கொண்டிருந்தது, ஒளி ஆண்டு பற்றிய விளக்கம் என்னை வியப்பிலாழ்த்தியது. எப்போதும் நாம் பார்க்கும் வான்வெளி மாறாதிருப்பது, நட்சத்திரங்கள் எப்போதும் ஒரே இடத்தில் தோற்றமளிப்பது ஏன் என்பன போன்ற விளக்கங்கள் தெளிவாக இருந்தன. சூரியனை விட்டு வெளியேறும் ஒளி நம் பூமியை வந்தடைய 8 நிமிடங்கள் ஆகின்றன. இதேபோல் நம்மை விட்டு வெகு தூரத்திலிருக்கும் நட்சத்திரங்களின் ஒளி நம்மை வந்தடைய வெகு நாட்கள், வருஷங்கள் ஆகின்றன. அதனால்தான் அவை எப்போதும் ஒரே இடத்தில் இருப்பது போல் தோன்றுகிறது என்ற இன்ன பிற விளக்கங்களும் அதில் எழுதப்பட்டிருந்தது. பிறகு புத்தகத்தை மூடி வைத்துவிட்டேன். ஏன்னா அதற்குப் பிறகு அதிகமான தொழில் நுட்ப விஷயங்கள் எழுதப்பட்டிருந்தது. அதற்கு மேல் படிக்க மனமில்லை, அயர்ச்சி வந்து “எப்படா அவன் வருவான், அவங்கிட்ட அந்தப் புத்தகத்தை கொடுத்துத் தொலைக்கிறதுன்னு ஆயிருச்சு”. புத்தகம் பெட்டிக்குள் தூங்கியது. யானை ஃப்ரேம் பரணிலேயே தூங்கிக்கொண்டிருந்தது.
நாட்கள் ஓடின. தாத்தா படம் பற்றி மறந்தே விட்டேன். அதன் மேலிருந்த விருப்பமும், அதைப்பற்றித் தெரிந்துகொள்ளும் ஆர்வமும் குறையத்தொடங்கி, பரண் ஏறிப்பார்க்கவும் மனமின்றி, ஏறக்குறைய இல்லாமலே போனது. அதில் இப்போது மரச்சட்டங்கள் எல்லாம் மறைந்து போயிருந்தன. அவனது உருவம் லேசாக அலங்க மலங்கலாக தெரியத்தொடங்கியிருந்தது. அதில் அவனது டி-ஷர்ட்டில் இருந்த சிறிய முதலையின் உருவம் தெளிவாகத் தெரிந்தது.
– அக்டோபர் 2010