பூலோகம் திரும்பி வந்தால்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 28, 2021
பார்வையிட்டோர்: 2,439 
 
 

“நீங்கள் இல்லாமல் உலகம் இல்லை” யாராவது சொன்னால் நம்பி விடாதீர்கள். உலகம் என்றில்லை, நம் குடும்பமே ஆகட்டுமே, இவனாலத்தான் இந்த குடும்பமே ஓடுது, சொல்லிவிட்டால், பெருமையாக நினைத்துக்கொள்கிறோம்.ஆனால் நாம் போய் விட்டால் எதுவும் நிற்பதுமில்லை, படுப்பதுமில்ல்லை. அதுபாட்டுக்கு தூக்கி போட்டுவிட்டு காலன் ஓடிக்கொண்டேதான் இருக்கிறான். அடடா நாம் இல்லாமல் குடும்பம் எப்படி இருக்கிறது என்று மீண்டும் பார்க்க வந்தால் அவ்வளவுதான்..!

இப்படி பேசிக்கொண்டிருப்பவன் யாருமில்லை, இந்த கதையின் நாயகன்தான்.. இவ்வளவு கவலையுடன் பேசிக்கொண்டிருக்கிறான். அவன் பேசிக்கொண்டிருக்கும் இடம் கேட்டால் ஆச்சர்யப்பட்டு விடுவீர்கள், மேலோகத்தில்தான் சக உடலை விட்டு பிரிந்து விட்ட ஆத்மாக்களோடு பேசிக்கொண்டிருக்கிறான்.

வாசகர்கள் பதட்டப்படவேண்டாம், அது என்ன மேலோகம்? ஆத்மா..என்று. உங்களுக்கு குழப்பமாக இருக்கலாம். நம் கதாநாயகனுக்கு நடந்து விட்ட சோகமான நிகழ்ச்சியை சொல்கிறேன். நம் கதாநாயகன் தலைக்கவசம் இல்லாமல் இரு சக்கர வாகனத்தை ஓட்டி சென்ற பொழுது எதிரில் வந்த லாரியில் மோதி இறந்து விட்டான்..

அந்த விபத்தால் அவன் உடலை விட்டு பிரிந்து விட்ட ஆத்மா உடலையே பார்த்துக்கொண்டு நின்றது. அந்த உடலை வீட்டுக்கு எடுத்து செல்லும்போது அந்த தெருவே, இல்லையில்லை, அந்த சுற்று வட்டாரமே அவனுக்காக கண்ணீர் விடுவதை ஆகாயத்தில் மிதந்தவாறு பார்த்துக்கொண்டிருந்தான்.

ஆஹா இத்தனை நாள் நம்மை பற்றி நாம் தெரிந்து கொள்ளாமல் இருந்திருக்கிறோம். பார் எத்தனை பேர் எனக்காக வருத்தப்படுகிறார்கள். இது தெரியாமல் இந்த இறைவன் இப்படி அநியாயமாக என்னை இறக்க வைத்து விட்டானே?

எப்படியோ தேற்றிக்கொண்டு புகை போன்ற உருவத்துடன் மேலோகம் சென்றான். அங்கு சென்ற பின்னால்தான் தெரிந்தது. அங்கும் இவனைப்போல் நிறைய பேர் இறைவனை திட்டிக்கொண்டு நாங்கள் பூலோகத்துக்க்கு செல்ல வேண்டும் என்று நெருக்கியடித்துக் கொண்டிருந்தார்கள். நம் கதாநாயகனும் அவனுக்காக அழுத அந்த மக்கள் கூட்டத்தை பற்றியே நினைத்துக்கொண்டிருந்ததால், பூலோகத்துக்கு மீண்டும் போயாகவேண்டும் என்று உறுதி கொண்டான்.

பக்கத்தில் இருந்த மற்றொரு ஆத்மாவிடம் நான் பூலோகம் செல்ல வேண்டும் என்றால் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான்.

அந்த ஆத்மா அவனை மேலும் கீழுமாக பார்த்தது. அப்படி என்ன அவசரம்? இப்பொழுதுதானே இங்கு வந்தாய்?

அங்கு என்னை இழந்து தவித்துக்கொண்டிருக்கிறார்கள், அதை பார்த்த பின்னால்தான் தெரியுது நான் எவ்வளவு பெரிய ஆள் என்று, அதற்க்காகத்தான் மீண்டும் அங்கு செல்ல ஆசைப்படுகிறேன்.

பக்கத்து ஆத்மா சிரித்தது, உனக்கு பூலோகத்தை பற்றி தெரியாமல் இருக்கிறாய். ஒரு முறை இங்கு வந்து விட்டால் அவ்வளவுதான், மீண்டும் நீ உயிரோடு போனாலும் “பேய்” என்று பட்டம் கட்டி எங்காவது உட்காரவைத்து விடுவார்கள்.

அப்படி எல்லாம் செய்ய மாட்டார்கள், நான் கண்டிப்பாய் பூலோகம் செல்லத்தான் வேண்டும்.

சரி அதற்கப்புறம் உன் இஷ்டம், அதோ அங்கு தெரிகிறது பார் அந்த நீண்ட வரிசை, அதில் போய் நில். அதுதான் பூலோகத்துக்கு செல்பவர்களின் வரிசை.

அவ்வளவு பெரிய வரிசையை பார்த்தவன் மலைத்து போனான். இவ்வளவு கூட்டமா? இத்தனை பேர் பூலோகத்துக்கு செல்ல வரிசையாக நிற்கிறார்களா?

ஆமாம், சீக்கிரம் போய் நில்லு, இல்லாவிட்டால் ஆட்கள் சேர்ந்து கொண்டே இருப்பார்கள்,

நம் கதாநாயகன் ஆத்மா வேகமாக ஓடி அந்த வரிசையில் நின்று கொண்டது.

வரிசை நகர்ந்து கொண்டே இருந்தது.

எப்படியோ ஒரு மாதத்துக்குள் அந்த வரிசையின் முதல் இடத்துக்கு அருகில் வந்து விட்டான். முன்னால் இருப்பவரிடம் கேட்டான், எப்படி பூலோகத்துக்கு நம்மை அனுப்பி வைப்பார்கள்?

பூளோகத்தில் பிறப்பு இறப்பு இரண்டையும் கணக்கிட்டு அதற்க்கு தகுந்தாற்போல உயிர்களை படைத்து நம்மை பூலோகத்துக்கு அனுப்பி அதற்கு உயிர் கொடுப்பார்கள்.

அப்படியானால் மனிதப்பிறவி கிடைக்குமா?

தெரியாது? அங்கு போனால்தான் தெரியும்…சொல்லிக்கொண்டே இருக்கும்போதே அந்த ஆத்மா மறைந்து விட்டது. அடுத்து இவன் ஆத்மா வரிசை முன் நிற்க நிற்க..அப்படியே அவன் ஆத்மாவும் பூலோகத்தை நோக்கி இழுக்கப்பட்டுவிட்டது.

ஏதோ வயிற்றுக்குள்ளிருந்து வெளியே வருவது தெரிகிறது. ஆஹா இந்த பூமியின் மண் மீண்டும் பட்டவுடன், அதற்கு ஏற்பட்ட ஆனந்தம். வார்த்தையில் வர்ணிக்க முடியவில்லை.

ஒரு வருடங்கள் ஓடி மறைந்து விட்டாலும், திடீரென தனக்குள் தன் குடும்பத்தை பார்க்கவேண்டும் என்ற எண்ணம் எப்படியோ வந்து விட்டது. இந்த ஒரு வருடத்துக்குள்,தானும் வளர்ந்து வாலிபம் ஆகி விட்டதால் உடனே தன் குடும்பத்தையும், சுற்றங்களையும் பார்க்க கிளம்பி விட்டது.

இது யார் அடடா நம் மனைவி அல்லவா? அட பையனும், பொண்ணும் பெரியதாகி விட்டார்களே, தூரத்தில் நின்று பெருமூச்சு விட்டு பார்த்து, அருகில் சென்று பார்க்க ஆசைப்பட்டது.

அவர்கள் மகிழ்ச்சியாகத்தானே இருக்கிறார்கள் !, தன் மனைவி கூட அங்குள்ள பெண்களுடன் ஏதோ சிரித்து பேசிக்கொண்டிருந்தது தெரிகிறது. சரி இங்கு எங்காவது ஒளிந்து கொண்டு அவர்களை பார்த்து மகிழ்வோம். பக்கத்தில் இருந்த சோபாவின் அடியில் பதுங்கியது.

இரவு நேரம் மூவரும் அயர்ந்து தூங்கி கொண்டிருக்கிறார்கள், அருகில் சென்று அவர்களை பார்ப்போம், சோபா அடியில் இருந்து மெல்ல வெளியே வர அப்பொழுது பையன் தூக்கம் கலைந்து எழுந்தான். அவன் எழுவதை பார்த்தவுடன் இது அவனை நன்றாக பார்க்க முயற்சிக்க அதற்குள் பையன் பார்த்து விட்டு கூச்சல் போட்டான். அவ்வளவுதான். எங்கிருந்துதான் அத்தனை ஆட்கள் வந்தார்களோ? அதற்கப்புறம் என்ன? ஒரே அடிதடிதான்…

நம் கதாநாய்கனின் உருவம் அடிதாங்காமல் உயிர் பிரிக்கப்பட்டு வெளி வந்து ஆத்மாவாக, மேலோகத்தில் கவலையுடன் உட்கார்ந்திருக்கிறது அருகில் ஒரு வருடத்துக்கு முன்பு பார்த்த அதே ஆத்மா அங்கு உட்கார்ந்திருந்தது.

என்னப்பா ஒரு வருசத்துக்குள்ள வந்துட்டே, இப்ப வேற மாதிரி வந்திருக்கே?

அதை ஏன் கேக்கறே? இந்த மனுசங்களை பார்க்க பூலோகத்துக்கு போனா ஒரு வருசத்துலயே, என்னை மறுபடி உயிரை பறிச்சு இங்க அனுப்பிச்சிட்டாங்க. நான் என் குடும்பத்தைதான பாக்கபோனேன், அதைக்கூட பொறுக்காம அதுவும் என் குடும்பமும் சேர்ந்து என் உயிரை பறிச்சுட்டாங்க.

அப்படி உன் குடும்பத்தை பார்க்க அவ்வளவு ஆர்வமா எந்த உருவத்துல போனே?

நாகப்பாம்பு உருவத்துலதான்!

இப்பொழுது நம் கதாநாயகனின் ஆத்மாவிடம் பூலோகம் போகிறாயா? கேட்டால் ஆளை விடு என்கிறது..

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *