புதிய பாதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 2, 2023
பார்வையிட்டோர்: 2,057 
 
 

கனத்த மௌனம்!

இரண்டு மகன்கள், அவர்கள் மனைவிகள், குழந்தைகள், மைத்துனன் சிவா, அண்ணன் முருகையன் என வீடு நிறைய உறவுகள் இருந்தும் மௌனம். மெல்ல மச்சினன் சிவாதான் பேச்சை ஆரம்பித்தான்.

‘அத்தான் நீங்க செய்யுறது உங்களுக்கே நியாமாப்படுதா?’

‘என்ன பெரிய நியாயத்தைக் கண்டுட்ட’ சீறினார் ஆறுமுகம்.

‘அது இல்ல வந்து.. வந்து இந்த வயசுக்கு மேல இப்படி ஒரு காரியத்தைச் செஞ்சா ஊரு உலகம் என்ன சொல்லும்?’

‘அவுங்களப் பத்தியும்தான் ஊரும் உலகமும் காறித் துப்பிச்சுது. அதுக்காக யாரும் முடிவை மாத்திக்கலிய. அதையெல்லாம் கேட்டியாநீ?’

‘இல்ல.. அதுக சிறிசுகள் ஏதோத் தெரியாத்தனமா நடந்துகிட்டுதுங்க. இனிமே அப்படி விட்டேத்தியா நடக்கமாட்டாங்க’

‘இப்ப வக்காலத்து வாங்க வர்றிய, அப்ப எங்க போச்சு உன் புத்தி.’

‘அத்தான் நடந்தது நடத்ததா இருக்கட்டும். இனிமே நடக்கப் போறது நல்லதாவே இருக்கும்.’

‘அதைத்தான் நானும் சொல்றேன். இனிமே நடக்கப் போவது நல்லாவே நடக்கும். அதுல எந்த மாற்றமும் இல்லை’ உறுமினார் ஆறுமுகம்.

இதுவரை மாமாவை முன்னே களம் இறக்கிப் பின்னே பதுங்கி இருந்து கவனித்த மகன்கள் இருவரும் நேருக்கு நேர் மோத ஆரம்பித்தனர்.

‘கிழவனுக்கு மீசை நரைத்தாலும் ஆசை நரைக்கலன்னு காறித் துப்புறாங்க. வெளில தலைக்காட்ட முடியல.’

‘அம்மா போன ரெண்டு வருஷமா அடுத்தத் தெருவுலதான இருக்கீங்க ரெண்டு பேரும். என்னை சோத்துக்கு ஆலாப் பறக்க விட்டுட்டு வாடகை வீட்டுக்கு மாறினீங்க. ஆபிஸ் கிட்ட இருக்கு, பள்ளிக்கூடம் கிட்ட இருக்குன்னு சாக்கு. அம்மா இருக்கும்போது இருந்த அதே ஆபிஸ், அதே பள்ளிக்கூடந்தானே. அப்போ அம்மா உங்க பெண்டாட்டிகளை உட்கார வச்சு விதம் விதமா ஆக்கிப் போட்டா. அவங்களும் ஒரு கையில டிவி. ரிமோட்டும், மறுகையில செல்போனுமாப் பொழுதைப் போக்கினாங்க. போதாக்குறைக்கு அவளைப் பத்தி போட்டுக் குடுப்பாங்க. நீங்களும் அதைக் கேட்டுக்கிட்டு ஆடினீங்க. பொறுத்தது போதும்னு பொசுக்குன்னு போய் சேர்ந்துட்டா, என்னை நட்டாத்துல விட்டுட்டு. விதம் விதமா கிழத்துக்கு ஆக்கிப் போட முடியாதுன்னு கிளம்பிட்டீங்க. உங்க அத்தனை பேரையும் உக்கார வச்சு அந்தக் கிழம்தானே விதம் விதமா ஆக்கிப் போட்டுச்சு? சோறு போட்டா பணம் குடுக்காமலாப் போயிடுவேன்?’

‘ஓட்டல் சாப்பாடு ஒத்துக்கல முதியோர் இல்லத்துல சேரவும் இஷ்டம் இல்ல, நான் வளர்ந்து வாழ்ந்த இடத்துலேயே கடைசி காலத்தைக் கழிக்க ஆசைப்படுகிறேன். இது தப்பா?’

‘நல்லா ஆசைப்படுங்க, யார் வேண்டாங்கறது. அதுக்கும், இப்ப நீங்க எடுத்து இருக்கற முடிவுக்கும் என்ன சம்பந்தம்?’

பாத்ரூம்ல வழுக்கி விழுந்து, படுத்த படுக்கையாக் கிடந்தப்போ கூட என்ன, ஏதுன்னு எட்டிப் பார்க்கல ஒருத்தரும். இப்ப ஒட்டு மொத்தமா வந்து இருக்கீங்க எல்லாரும். அடுத்த வீட்டு பார்வதிதான் என்னை கவனிச்சுக்கிட்டா. அவளும் என்னைப் போலத்தான், தனிக்கட்டை. புருஷன் போய்ச் சேர்ந்து 10 வருஷம் ஆச்சு. புள்ள குட்டியும் கிடையாது. அண்ணன் வீட்டுல தங்கிக்கிட்டு நாலுவூட்ல பத்துப் பாத்திரம் தேய்ச்சு வயிறு வளர்க்கிறா. அவ மனிதாபிமானத்தோட எனக்கு ஒத்தாசை செஞ்சத ஊதி ஊதிப் பெருசாக்கி அவளை அவமானப்படுத்திட்டீங்க. அவளுக்கும் அம்பது வயசாயிட்டுது. நாதியில்ல. அதனால நீங்க செஞ்ச அவமானத்தைத் தொடைக்கிறதுக்கு எனக்கு வேற வழி தெரில. அதனாலதான் அவளைக் கல்யாணம் செஞ்சுக்கப் போறேன். நாங்க ஒண்ணும் உடல் சுகத்துக்காக இந்த முடிவுக்க வரல. தம்பதிகள் என்ற போர்வையில் நண்பரகளாகத் தான் இருக்கப் போகிறோம். யார் என்ன சொன்னாலும் அதைப் பத்திக் கவலை இல்ல.

நீங்க பதட்டப்படுவது எதுக்குன்னு நல்லாவேத் தெரியும். சொத்துப் பார்வதிக்குத் போயிடுமேங்கிறது தானே உங்க பயம்?’ அனைவரும் தர்மசங்கடத்தில் நெளிந்தனர். தொடர்ந்தார் ஆறுமுகம்.

‘நேற்றே உயில் எழுதிட்டேன். நிலத்தை உங்க பேருக்கு எழுதி வச்சுட்டேன். இந்த வீடு எனக்கும், பார்வதிக்கும். பிறகு உங்களுக்கே. என் சேமிப்பு பணத்துல வரவட்டி அவ வயித்துக்குப் போதும். அவளுக்குப் பிறகு அந்தப் பணத்துக்கும் நீங்கதான் வாரிசு. பொறந்த கடமையை நீங்க ஒழுங்காச் செய்யலன்னாலும் பெத்தக் கடன ஒழுங்காச் செய்யாட்டி ஊருலகம் காறித் துப்புவாங்கல்ல, என்ன’ என்று நிறுத்தினார்.

‘என் மேல இருக்குற கோவத்துல பார்வதியை மெரட்டினிங்கன்னா எல்லா சொத்தும் அனாதை இல்லத்துக்குப் போயிடும் ஜாக்கிரதை. அதை தடுக்க எந்தக் கட்டாயப் பஞ்சாயத்துக்கும் அதிகாரம் இல்லை. எல்லாம் நானே சுயமா வாங்கியது’ என்றவரை இடைமறித்தார் அண்ணன் முருகையன். ‘ஆயிரம்தான் இருந்தாலும் நாளைக்குக் கொள்ளி போட்டுத் திவசம் திங்கள்னு செய்யப் போறது அவுங்கதானே?’

‘அந்தச் சிரமமும் அவுங்களுக்கு வேணாம்னுதான் ‘உடல்தானம்’ செய்ய முடிவு செஞ்சு இருக்கோம் இரண்டு பேரும்’ மிரண்டு போனார் முருகையன்.

அதுமட்டுமல்ல, ரெண்டு அனாதைக் குழந்தைகளைத் தத்து எடுத்து படிக்க வைக்கப் போறோம். பெத்த புள்ளங்கதான் என்னை அனாதையா உட்டுட்டீங்க. அதனால அனாதைப் புள்ளங்களப் பெத்தப் புள்ளங்களா வளர்க்க முடிவு எடுத்த இருக்கோம். அதுக்கெல்லாம் பணம் வேணும்ல, அதனால நான் ஜவுளிக்கடையில கணக்கு எழுதப் போறேன். பார்வதி பத்து பேருக்கு மெஸ் மாதிரி சமைச்சுக் கொடுக்கப் போறா. அதனால கிழவன் எப்ப நம்மகிட்ட வந்து ஒட்டி விடுவானோன்னு பயப்படாம இருங்க. ஆங், சொல்ல மறந்துட்டேன். நான் ‘ரிஜிட்டிரார்’ ஆபிஸ் போறேன். வருவதற்குள் உங்களுக்கு என்ன சாமான்கள் வேணுமோ அத்தனையும் எடுத்துக்கிட்டு இடத்தைக் காலி பண்ணுங்க. அப்புறம் அண்டாவைக் கொண்டா, குண்டானைக் கொண்டான்னு கட்டப் பஞ்சாயத்துக்கு வராதீங்க’ கம்பீரமாகப் புறப்பட்டார் ஆறுமுகம். எதிர்வீட்டு எஃப்.எம்மில் கர்ஜித்துக் கொண்டு இருந்தார் டி.எம்.எஸ்.

“யாரை நம்பி நான் பொறந்தேன்
போங்கடாப் போங்க – என்
காலம் வெல்லும் வென்ற பின்னே
வாங்கடா வாங்க”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *