பாலர் பள்ளியிலிருந்து திரும்பி வந்தது முதல் மல்லி சோர்வாக இருந்தாள். சாப்பாடும் தயங்கித் தயங்கித்தான் இறங்கிற்று. பாதி முடிந்ததும் கொஞ்சம் “வேக்” என்று குமட்டினாள். “சரி, போதும் யாத்தி! விடு!” என்று சோறு ஊட்டிக்கொண்டிருந்த பணிப்பெண்ணைத் தடுத்தேன்.
எப்போதும் என்னிடம் கதையளப்பவள் இன்று அமைதியாகவே இருந்தாள். கொஞ்ச நேரம் தன்னுடைய வர்ணம் தீட்டும் புத்தகத்தை எடுத்து கிரேயோன்களால் வர்ணம் தீட்ட முயன்று, சோர்ந்து அவள் உட்கார்ந்த இடத்திலேயே படுத்துவிட்டாள்.
நான் மல்லியைத் தூக்கி படுக்கையில் கிடத்தினேன். தூக்கியபோது உடம்பு சுட்டதுபோல் இருந்தது. படுக்கையில் கிடத்தி நெற்றியில் கைவைத்துப்பார்த்தேன். இலேசான சூடு இருக்கத்தான் செய்தது. ஒரு பேச்சும் இல்லாமல் கண்ணை மூடிக்கொண்டாள். சரி தூங்கட்டும் பிறகு பார்ப்போம் என்று ஏர்கண்டிஷனைப் போட்டுவிட்டு லேசாகப் போத்திவிட்டு வெளியே வந்தேன்.
பாலர் பள்ளிப் போகும் பிள்ளைகள், வேறு பிள்ளைகளிடமிருந்து புதிய புதிய தொற்றுக் கிருமிகளையும் வைரஸ்களையும் பெற்று வந்து நோயுறுவது இயற்கைதான். ஓரிரு மாதங்களுக்கு ஒரு முறையாவது மல்லிக்கு உடல் சுடுவதும், சோர்வதும், சளிபிடிப்பதும், இருமுவதும் நடக்கும். இது சில நாட்களுக்கு இருந்து மறையும் என்பது மல்லியின் பெற்றோர்களுக்கும் அவளுடைய தாத்தாவான எனக்கும் தெரிந்த விஷயம்தான் என்றாலும் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் பிள்ளை சோர்ந்திருக்கும்போது மனம் பதட்டமடைவதைத் தடுக்க முடிவதில்லை.
ஒவ்வொரு முறையும் என் நண்பரான குழந்தை மருத்துவர் டாக்டர் மாதவனிடம்தான் தூக்கிக்கொண்டு ஓடுவோம். அவர் அக்கறையாகக் கவனிப்பார். நிதானமான மனிதர். அவருடைய நிதானத்தையும் புன்னகையையும் கண்டாலேயே எங்கள் பதட்டம் தணியும்.
“இது ஒண்ணும் சீரியசான விஷயம் இல்லப்பா! என்ன, இந்தக் காய்ச்சல் டிகிரி ரொம்ப அதிகமானாதான் ஆபத்து. அப்பதான் மருந்து மாத்திரைகள் தேவை. மருந்து இந்த தொற்றுக் கிருமிகளையோ வைரசையோ ஒன்ணும் பண்ணாது. சூட்டைத் தணிக்கும். அதனால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகளை குறைக்கும். அவ்வளவுதான். சாதாரணமா குழந்தையோட இயற்கையான எதிர்ப்புச் சக்தியே இந்தக் காய்ச்சல்ல இருந்து விடுபடப் போதுமானது. ஆகவே அதுக்கு நாம் ஒரு வாய்ப்பைக் கொடுக்கணும். குழந்தைக்கு நிறைய காய்கறி போட்டு நல்ல சூப் வச்சுக் குடுங்க. காய்ச்சலின்போது இன்னும் அதிக அன்பும் பரிவும் காட்டுங்க. மூணு நாலு நாள்ள குழந்தை சிரிச்சு விளையாட ஆரம்பிச்சிடும்!”
அதை நம்பியவாறுதான் மல்லியைத் தூங்கவிட்டு நான் அந்த மாதம் வந்திருந்த காலச்சுவட்டையும் யுகமாயினியையும் உயிர்மையையும் தூக்கிகொண்டு படித்துப் பாதியில் விட்ட கட்டுரைகளைப் படிக்கப்போனேன்.
ஒரு 15 நிமிடங்கள்கூட மனமொன்றிப் படிக்க முடியவில்லை. எப்போதும் சாப்பிட்டுவிட்டு என்னுடன் சளசளவென்று பேசி என் வாசிப்புக்கு இடையூறு செய்யும் மல்லி அருகில் இல்லாமல் என் கருத்து வாசிக்கும் விஷயத்தில் ஒன்றவில்லை.
மல்லியின் நினைவு தீவிரமானவுடன் இதழ்களைப் போட்டுவிட்டு எழுந்து அறைக்குள் சென்று பார்த்தேன். நெஞ்சின் இலேசான ஏற்றத்தாழ்வைத் தவிர வேறு அசைவுகளின்றிப் படுத்திருந்தாள். தூங்குகிறாளா என நிச்சயமாகத் தெரியவில்லை.
நெற்றியைத் தொட்டேன். காய்ச்சல் கொதி நிலையை அடைந்திருந்தது.
*** *** ***
இது அவளுடைய பெற்றோர்களுக்கு அவசரமாக அறிவிக்க வேண்டிய விஷயமா, அல்லது அவர்கள் மாலையில் திரும்பியவுடன் ஆறுதலாகச் சொல்லிக்கொள்ளலாமா என என்னால் தீர்மானிக்க முடியவில்லை. மிகுந்த நெருக்கடியுள்ள வேலைகளில் இருக்கும் அவர்களுக்கு இந்த விவரத்தைச் சொல்லி மனப்படபடப்பு ஏற்படுத்த நான் விரும்பவில்லை. ஆனால் இந்த விஷயம் விபரீதமாகப் போனால் உரிய நேரத்தில் சொல்லவில்லை என என் மேலும் பழி வரும் என்றும் பயமாக இருந்தது.
குழந்தைகளுக்கான திரவ ஆஸ்ப்பிரின் வீட்டில் இருந்தது. அளவு பார்த்து குப்பியில் ஊற்றி மல்லியைச் சிரமப்பட்டு எழுப்பிக் கொடுத்தேன். மல்லி ஒன்றும் முரண்டு பண்ணச் சத்தில்லாமல் குடித்துவிட்டுப் படுத்துக்கொண்டாள். இது காய்ச்சலின் தீவிரத்தைக் குறைக்கக் கூடும். ஒரு மணி நேரம் கழித்துப் பார்க்க வேண்டும். குறையாவிட்டால் நான்கு மணி நேர இடைவெளியில் இன்னொரு முறை கொடுக்கலாம். அதற்குள் அவளுடைய பெற்றோர்கள் வந்து விடுவார்கள். அப்புறம் அவர்கள் பாடு.
வாழ்க்கையை மிகுந்த தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்ட காலம் ஒன்று இருந்தது. வாழ்க்கையின் எல்லா நெருக்கடிகளையும் அலட்சியமாக எதிர்கொண்டு வென்றதும் உண்டு. அதெல்லாம் நான் முழுநேரப் பணியில் இருந்த காலத்தில். ஆனால் ஓய்வு பெற்று பத்து வருடம் ஆகிய நிலையில் உடல் தளர்வுற்று, கொஞ்சம் நோயுமுற்று இருக்கின்ற இன்றைய நிலையில் எதையும் முன்பு போலத் தைரியத்துடன் எதிர்கொள்ள முடியவில்லை. ஒவ்வொன்றையும் மகனிடமோ மருமகளிடமோ கேட்டுக் கேட்டே செய்ய வேண்டியிருந்தது.
ஆனால் அது என் உடல் தளர்ச்சியினால் மட்டுமல்ல. என்னைச் சுற்றியுள்ள உலகமும் தீவிரமான மாற்றங்களை அடைந்திருந்தது. மிகச் சாதாரணமான உதாரணம் சாலையில் காரோட்டிப் போவது. ஒரு வழக்கமான செயலாக இருந்த அது, இப்போது எத்தனை நெருக்கடியுள்ள செயலாகிவிட்டது? இத்தனை கார்கள் எங்கிருந்து வந்தன? நகர வாழ்வில் ஒரு குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களுக்குச் சமமாக வீடுகளில் கார்கள் இருந்தன. முன்பு சொகுசு வாழ்க்கையைக் குறித்த கார் இன்று இன்றியமையாததாக ஆகிவிட்டது.
சாலைகள் முன்பு போலவா இருக்கின்றன? இரண்டு கார்கள் போகும் சாலைகளாக இருந்தவை இன்று எட்டு கார்கள் முன்னும் பின்னும் போகும் சாலைகளாகிவிட்டன. ஒரு லேனை விட்டு இன்னொரு லேனுக்குப் போவது அபாயகரமாக இருக்கிறது. ஏராளமான சமிக்ஞை விளக்குகள். நின்று நின்று போக வேண்டும். மெதுவாகப் போனால் பின்னால் வரும் கார் பொறுமை இழந்து உறுமுகிறது. முன்னே உள்ள காருக்குப் பின்னால் கொஞ்சம் அதிகமாக இடைவெளி விட்டுப் போனால் அடுத்த லேனில் உள்ள கார் சீறிப் புகுந்துவிடுகிறது. அதற்குப் பயந்து பிரேக் போட்டால், பின்னால் வரும் கார் இடித்துவிடுமோ என்ற பயம்.
போய்ச் சேரும் இடத்தில் காரை நிறுத்த இடம் தேடுவது இரத்த அழுத்தத்தை மேலும் அதிகரிக்கும்.
புதிய தொழில் நுணுக்கங்களும் புரியவில்லை. பழைய, எளிய கைத்தொலைபேசி பழகிப்போயிருந்தது. பழகி முடிக்கும் முன் புதியதாக ஐபோனும் ஐபோடும் வந்துவிட்டன. வாழ்வின் செயற்பாடுகள் பெரும்பாலும் குறைந்துபோன வயதில் இந்தப் புதிய போன்களில் உள்ள வசதிகள் ஏதும் தேவைப்படுவதில்லை. பிள்ளைகள் வாங்கிக்கொடுக்கிறேன் என்கிறார்கள். நான்தான் தவிர்த்துக்கொண்டே இருக்கிறேன்.
காமெரா, மின்னஞ்சல், முகநூல், டுவிட்டர், யாருக்கு வேண்டும்? யாரிடம் நான் பேசப்போகிறேன்? என்னைப்பற்றிய விவரங்களை நூற்றுக் கணக்கான அந்நியர்களுடன் பகிர்ந்து கொள்வதிலோ, நூற்றுக் கணக்கான அந்நியர்களின் விவரங்களை நான் அறிந்து கொள்வதிலோ எனக்குச் சற்றும்
அக்கறையில்லை. கூடக்கூடப்போனால் என் பால்ய நண்பர் முருகேசனை என் வீட்டுப் போனில் கூப்பிட்டு முகமன் பரிமாறிக் கொள்வேன்.
“சௌக்கியமா முருகேசன்?”
“அடடே, நீயா? நான் இருக்கேன். வேளா வேளைக்கு மருந்து சாப்பிட்டா எல்லாம் நலமே! நீ எப்படி இருக்க?”
“நல்லா இருக்கேம்பா! அதான் நீ நலமான்னு கேட்டுக்கத்தான் அப்பப்ப இந்த தொலைபேசி அழைப்பு. அடுத்த வாரம் பார்க்கில சந்திப்போமா?”
“சந்திப்போமே! நமக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாத மலேசிய அரசியலையும் தமிழ்நாட்டு அரசியலையும் அக்கக்கா பிரிச்சி ஆராய்வோம்! அதோட அண்மையில நீ என்ன புத்தகம் படிச்சேன்னும் தெரிஞ்சிக்கலாம். நிச்சயம் சந்திப்போம்!”
இந்த உரையாடல்தான் கீறல் விழுந்த கிராமபோன் தட்டுப்போல (அடடே, இது கூட இப்போது இல்லை!) திரும்பத் திரும்ப நிகழும்.
*** *** ***
மாலையில் மல்லியின் பெற்றோர் வீடு வந்த நேரத்தில் மல்லிக்கு நான் இருமுறை திரவ ஆஸ்பிரின் கொடுத்திருந்தேன். அது காய்ச்சலைத் தணித்திருந்தாலும் மல்லியின் சோர்வு தணியவில்லை. படுத்தவாறே இருந்தாள். விளையாட்டும் பேச்சும் சாப்பாடும் முற்றாக நின்றிருந்தன.
நான் சொன்னவுடன் மல்லி பற்றிய கவலை பெற்றோர்களுக்கு உடனடியாகப் பற்றிக்கொண்டது. ஓடி வந்துபடுக்கையில் அவளைப் பார்த்தார்கள். நான் கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். இருந்தாலும் என் அன்புப் பேத்தி இப்படி நெடுஞ்சாலையில் காரில் அடிபட்ட புறா போல அசைவின்றிக் கிடப்பதில் என் மன அமைதி முற்றாகப் போய்விட்டது.
மல்லியின் பெற்றோர்களுக்கு அன்று இரவு நண்பர் வீட்டில் இரவுச் சாப்பாடு இருந்தது. சிறிது நேரம் விவாதித்த பின்னர் அதை ரத்துச் செய்ய முடிவு செய்தார்கள். அநேகமாக இன்று மாலையும் இரவும் அவர்களுக்கு வேறு சிந்தனை இருக்க வழியில்லை. அவர்கள் வாழ்வின் முக்கிய குவிமையம் அவர்கள் குழந்தை. ஆகவே வேறு எந்தச் செயலும் சிந்தனையும் அதனைக் கலைக்க அவர்கள் இடம் கொடுக்க மாட்டார்கள்.
மல்லியின் அம்மா கொஞ்சம் சூப் வைத்து மல்லியை எழுப்பிக் கொடுக்க முயன்றார். வற்புறுத்தலின் பேரில் மல்லி ஒரு கரண்டி விழுங்க முயன்றாலும் உடனே ‘வேக்’ என்று குமட்டினாள். உணவு முயற்சி அதோடு நின்றது.
டாக்டரிடம் அழைத்துச் செல்வதா இல்லையா என்னும் ஊசலாட்டம் அவர்களுக்கும் இருந்தது. என் மருமகளுக்கு குழந்தையை உடனடியாக அழைத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் என் மகன் கொஞ்சம் அறிவு பூர்வமாகச் சிந்தித்தார். “இல்ல விஜயா! ஒரு இரவு பொறுத்திருந்து பார்ப்போம். ஏதாவது வைரசாக இருக்கலாம். காய்ச்சல் விட்டு விட்டு அடிச்சி ஒண்ணு ரெண்டு நாள்ள ஓயும். டாக்டர்களும் அதைத்தான் சொல்லுவாங்க! மல்லிக்கு அடிக்கடி தண்ணீர் குடு. அப்பா குடுத்தது போல நாலு மணி நேரத்துக்கு ஒரு தடவ ஆஸ்பிரின் குடு. காலையில பார்ப்போம்!”
அப்படியே முடிவானது. பெற்றோர்கள் குழந்தையைத் தூங்கப் போட்டுவிட்டு மனமில்லாமல் கொஞ்சம் சாப்பிட்டு வெள்ளெனெப் படுக்கப் போனார்கள். நானும் படுக்கையறைக்குச் சென்றேன். ஏதோ மனதில் இருள் படரத் தூக்கமில்லாமல் தவித்தேன்.
எவ்வளவோ வாழ்க்கையில் பார்த்தாகிவிட்டது. எத்தனையோ துயரங்கள், நெருக்கடிகள். குழந்தைக்குக் காய்ச்சல் காய்வது அதில் சின்ன விஷயம். அற்ப விஷயம். அதற்கு இத்தனை கலவரமடைவது தேவையில்லை. இருந்தாலும் இந்த அறிவுரையை யார் என் மனதுக்குச் சொல்லி அமைதிப்படுத்துவது?
*** *** ***
அரைத்தூக்கத்தில் இருந்த நான் அறைக்கு வெளியே சத்தம் கேட்பது கேட்டு விழித்தேன். கடிகாரத்தைப் பார்த்தேன். இரவு ஒன்றரை மணி. கைலியைத் திருத்திக் கட்டிக்கொண்டு வெளியே வந்தேன்.
மகனும் மருமகளும் உடை மாற்றிக் கொண்டு பணிப்பெண்ணையும் கூட்டிக் கொண்டு வெளியே கிளம்பத் தயாராக இருந்தார்கள். என்னைப் பார்த்ததும் மகன் சொன்னார். “மல்லிக்குக் காய்ச்சல் ரொம்ப அதிகமாகிட்டது அப்பா! 39 டிக்ரில இருக்கு. அவள ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போறாம்!” என்றார்.
பகீரென்றது. அவ்வளவு மோசமா?
“நானும் வரட்டுமா சேகர்?” என்று கேட்டேன்.
“வேண்டாம்பா. நாங்க பாத்துக்கிறோம். நான் ஆஸ்பத்திரியிலிருந்து உங்களுக்கு விவரம் சொல்றேன்!”
ஆம். நான் கூட இருந்தும் ஒன்றும் புண்ணியமில்லை. காரில் இடத்தை அடைத்துக்கொண்டிருப்பேன்; அவ்வளவுதான். பணிப் பெண்ணாவது குழந்தையைத் தூக்க, உடை மாற்ற உதவியாக இருப்பாள்.
துவண்டு கிடந்த மல்லியைத் தலையைத் தாங்கியவாறு அவள் அப்பா தூக்கிக் கொள்ள அவர்கள் அனைவரும் வெளியே போனார்கள். நான் சென்று கதவைச் சாத்தினேன். அந்த அரையிருளில் நாற்காலியில் துவண்டு கிடந்தேன். விடிவதற்குக் காத்திருந்தேன்.
இரண்டு மணி நேரம் காத்திருந்தும் அவர்களிடமிருந்து தகவல் ஒன்றும் வரவில்லை. பரபரப்பாக ஓடிக்கொண்டிருப்பார்கள். போன் பேச நேரம் கிடைத்திருக்காது.
அற்ப விஷயம்தான். இந்தப் பரந்த உலகில் கோடிக் கணக்கான குழந்தைகளுக்கு கோடிக் கணக்கான முறை காய்ச்சல் வந்திருக்கிறது. அவர்கள் எல்லாம் குணப்பட்டு வளர்ந்து பெரியவர்களாகி வாழ்வில் செழித்திருக்கிறார்கள். மல்லி ஒன்றும் விதிவிலக்கில்லை. இதற்காகவா மனம் அவஸ்த்தைப்படுவது? தேவையில்லை. இருந்தாலும் இந்த அறிவுரையை யார் என் மனதுக்குச் சொல்லி அமைதிப்படுத்துவது?
*** *** ***
இரவில் உறங்காமல் கிடந்த நேரங்களில் மகனின் கைதொலைபேசிக்குத் தொடர்பு கொண்டு மல்லி எப்படி இருக்கிறாள் என்று கேட்க வேண்டும் என்று மனது துடித்துக்கொண்டே இருந்தது. ஆனாலும் நச்சு நச்சு என்று அவர்களைத் தொந்திரவு செய்ய வேண்டாமென்று தள்ளிப்போட்டேன்.
மல்லி அவளின் அன்பான அக்கறையான பெற்றோர்களின் கைகளில் இருக்கிறாள். குழந்தை மருத்துவ மனையின் நிபுணத்துவ டாக்டர்கள் அவளை இன்னேரம் பரிசோதித்திருப்பார்கள். மருந்து கொடுத்திருப்பர்கள். ஆகவே என்னுடைய தலையீடு ஒன்றும் தேவையில்லை.
இருந்தும் சும்மாக இருக்க முடியாமல் காலை 5 மணிக்கு என் நண்பர் டாக்டர் மாதவனுக்குப் போன் பண்ணினேன். தூக்கம் தெளியாத காலையில் நான் சொல்வதை பொறுமையாகக் கேட்டுக்கொண்டார்.
“ஆமா! காய்ச்சல் 39 டிக்ரிக்கு போயிட்டா ஆஸ்பத்திரியில சேக்கிறதுதான் நல்லது. நான் 10 மணி மாதிரி போய்ப் பாக்கிறேன். கவலப்படாதேயப்பா! இந்தக் காலத்தில இல்லாத மருந்தா? அதெல்லாம் ஆஸ்பத்திரியில கவனமா பாத்துக்குவாங்க. நானும் போய் விசாரிக்கிறேன்!” என்றார்.
ஏதோ என் பங்குக்கு ராமர் பாலத்துக்கு ஒரு பிடி மண் போட்டேன் என்று மனதுக்குள் ஆறுதல் அடைந்தேன்.
காலை 7 மணி போல மகன் அவசரம் அவசரமாக வீட்டுக்கு வந்தார். அவருக்கு அன்றைக்கு அலுவலகத்தில் முக்கியமான மீட்டிங் இருந்தது. ஆகவே வீட்டுக்கு வந்து உடை மாற்றிப் போக வந்திருந்தார்.
“மல்லிய வார்ட்ல சேத்திட்டாங்க அப்பா! டிரிப் போட்டிருக்காங்க! உடம்புல தண்ணி குறைவா இருக்காம். இன்னும் காய்ச்சல் வந்து போய்க்கிட்டுத்தான் இருக்கு. நீங்க ஒரு பத்து மணி மாதிரி ஆஸ்பத்திரிக்குப் போய் மல்லியோட கொஞ்ச நேரம் இருங்க. விஜயா வீட்டுக்கு வந்து குளிக்கட்டும். அது திரும்ப வந்தவுடனே நீங்க திரும்பிடலாம். நான் ஒரேயடியா சாயந்திரம்தான் வருவேன்!” என்றார்.
மல்லியைச் சென்று காண நான் அவசரம் அவசரமாகத் தயாரானேன்.
*** *** ***
ஆஸ்பத்திரிப் படுக்கையில் மல்லி துவண்டு கிடந்தாள். இந்த ஒரு நாளில் அவள் உடல் கடுமையாக இளைத்துவிட்டதைப் போல இருந்தது. அவளுடைய கையின் மேல் தோலில் புதிதாகச் சிவப்பு ரணங்கள் தோன்றியிருந்தன. தலைக்கு மேல் தொங்கிய மருந்தும் நீரும் கலந்த பையிலிருந்து நீண்ட பிளாஸ்டிக் குழாய் அவள் கையில் பிணைக்கப்பட்டு இரத்த நாளத்துக்குள் செலுத்தப்பட்டிருந்தது. அவள் உயிரே அந்தக் குழாயினால்தான் பிடித்து வைக்கப்பட்டிருப்பது போல இருந்தது.
மல்லியின் தாய் பக்கத்தில் உட்கார்ந்திருந்தார். என்றும் பளிச்சென்று தோன்றும் முகம் சோபையிழந்திருந்தது. கண்களில் மருட்சி இருந்தது. தலை முடி கலைந்திருந்தது. சாதாரணமாக வீட்டுக்கு வெளியே போகையில் இந்த விஷயங்களில் அதீத கவனம் செலுத்தும் விஜயா அது பற்றிய பிரக்ஞையே இல்லாதது போல் இருந்தது.
எனக்கு முன்பே டாக்டர் மாதவன் அங்கு வந்திருந்தார். கடமையில் இருந்த ஆஸ்பத்திரி டாக்டருடன் பேசிக்கொண்டிருந்தார். பேசி முடிக்கட்டுமென்று காத்திருந்தோம்.
கடமை டாக்டர் போனவுடன் மாதவன் எங்களை நோக்கிக் கூறினார்: “காய்ச்சல் ரொம்பக் கடுமையாகத்தான் இருக்கு. மருந்தால கொஞ்சம் கொறைஞ்சாலும் மீண்டும் உடல் சூடு ஏறிடுது. ஏதோ கடுமையான வைரஸ்னுதான் நெனைக்கிறோம். மல்லியோட ரத்தத்த பரிசோதனைக்கு அனுப்பியிருக்காங்க! இன்னும் கொஞ்ச நேரத்தில முடிவு வரலாம். பாப்போம்!”
நான் கேட்டேன்: “இது என்ன மாதவன், தோல்ல ஏதோ சிவப்பு சிவப்பா…?”
“ஆமாம். ரணங்கள் வந்திருக்கு. அதோட மல்லியோட ரத்த அழுத்தமும் ரொம்பக் கொறஞ்சிருக்கு. இமையத் திறந்து பார்த்திங்கன்னா கண்களும் சிவந்திருக்கு!”
அதிர்ந்திருந்தேன்.
விஜயா கேட்டார்: “இதுக்கெல்லாம் என்ன அர்த்தம் டாக்டர்?”
“உடனே சொல்ல முடியாதம்மா! ஆனா வைரஸால வரக்கூடிய சில நோய்கள்ள ஒண்ணா இருக்கலாம்னுதான் ஆஸ்பத்திரியில யூகிக்கிறாங்க?”
“என்ன நோய்?”
“இப்ப இந்தப் பிரதேசத்தில டெங்கி பரவியிருக்கில்லியா? ஆகவே டெங்கியாகவும் இருக்க வாய்ப்புண்டு. ஆனா ரத்தப் பரிசோதனை முடிவு வந்தவொண்ணதான் சொல்ல முடியும்!”
இருவருமே பேச்சிழந்திருந்தோம்.
பிறகு விஜயா கேட்டார்: “அப்ப டெங்கின்னு தெரிஞ்சிட்டா அதுக்குள்ள மருந்து குடுப்பாங்கதான…?”
“அதுக்கு மருந்து ஒண்ணும் கிடையாதம்மா! எந்த வைரஸ் காய்ச்சலுக்கும் மருந்து கிடையாது. ஆனா அதினால ஏற்பட்ர பக்க விளைவுகளத் தடுக்க மருந்து குடுப்பாங்க. உடல்ல தொற்றுக்கள் வராம இருக்க ஆண்டிபயோட்டிக் குடுப்பாங்க. ஆனா டெங்கி ஒரு வாரம் போல உலுக்கிட்டுதான ஆள விடும்!” என்றார் மாதவன்.
விஜயா தலையைக் குனிந்து கொண்டிருந்தார். உள்ளங்கை கண்களுக்குச் சென்று மறைத்தது. தேம்புவது கேட்டது. நான் சென்று தோளை அழுத்தி ஆறுதல் சொன்னேன்.
மாதவன் “அடடே! இது என்ன விஜயா? எதுக்கு இத்தனை கவலை?” என்றார்.
“என் பிள்ளை பிழைப்பாளா டாக்டர்?” தேம்பலுக்கிடையில் விஜயாவின் கேள்வி. தேம்பல் இல்லாவிட்டாலும் அந்தக் கேள்விதான் என் உள்ளத்திலும் இருந்தது.
பட்டப் படிப்பு படித்த, ஒரு நிறுவனத்தில் பல பணியாளர்களுக்கு மேலாளராகப் பதவி வகிக்கும் ஒரு நவீனப் பெண்மணியை, மகளின் நோய் பதவியிறக்கி புலம்பும் சாதாரணத் தாயாக்கிவிட்டது, அன்பின் விந்தைதான்.
“நோ, நோ! நிறுத்து விஜயா. இந்தக் கேள்விக்குத் தேவையே இல்ல. இது டெங்கிதானான்னு இன்னும் நிச்சயமில்ல. அப்படியே இருந்தாலும் நம்ப நாட்டில உள்ள மருத்துவ கவனிப்பில டெங்கியிலிருந்து 99 சதவிகிதம் நோயாளிகள் பிழைச்சி வந்தர்ராங்க! கவலப் படாதீங்க. இன்னும் ஒரு வாரத்தில பிள்ளை உங்களோடு சிரிச்சி விளையாடுவா!” என்றார் மாதவன்.
நல்ல மருத்துவரின் அறிவார்ந்த வார்த்தைகள்தான். உண்மையும் கூட. மூளைக்கு விளங்குகிறது. இருந்தாலும் இந்த அறிவுரையை யார் எங்கள் மனதுக்குச் சொல்லி அமைதிப்படுத்துவது?
*** *** ***
மல்லிக்குக் கண்டிருப்பது டெங்கி என உறுதியாயிற்று. மல்லியை சிறப்புக் கண்காணிப்பு வார்டுக்கு மாற்றினார்கள். சுகாதாரத் துறையிலிருந்து அதிகாரிகள் எங்கள் வீட்டுக்கு வந்து சோதித்தார்கள். எங்கள் சுத்தமான அடுக்குமாடி வீட்டில் எங்கும் ஏடிஸ் கொசுக்கள் உயிர் வாழ இடமில்லை என அறிந்து மன்னிப்புக் கோரிப் போனார்கள். ஆனாலும் வீட்டுக்குள் மருந்துப் புகை பாய்ச்சினார்கள். அந்த வட்டாரம் முழுதும் சோதனையிட்டார்கள். கொசுக்களுக்கு எதிரான மருந்துப் புகையை அந்தப் பிரதேசம் முழுவதும் பாய்ச்சினார்கள்.
இதையெல்லாம் வேடிக்கை கூடப் பார்க்க முடியாமல் மல்லி வேரோடு பிடுங்கி வெயிலில் போட்ட இளங்குருத்து போல வாடிக் கிடந்தாள். சத்துணவு கொண்ட சலைன் சொட்டுச் சொட்டாக தொடர்ந்து இறங்கிக் கொண்டிருந்தது.
ஆறு நாட்கள் நாங்கள் அனைவரும் வேதனையில் வெந்து கொண்டிருந்தோம். 99 சதவிகிதம் நோயாளிகளைக் காப்பாற்றும் மலேசிய மருத்துவத் துறையால், மல்லி அந்த 99 சதவிகிதத்தில் இருக்கிறாளா அல்லது காப்பாற்ற முடியாத அந்த ஒரு சதவிகிதத்தில் இருக்கிறாளா என்பதை உத்திரவாதமாகச் சொல்ல முடியவில்லை. டெங்கி வைரஸ் அவளைச் சாவுப் பிணையாகப் பிடித்து வைத்திருந்தது.
மல்லியின் அம்மாவுக்கும் அலுவலகத்தில் கவனிக்க வேண்டிய வேலைகள் இருந்தன. ஆகவே மல்லியின் பக்கத்தை விட்டு நகர வேண்டி இருந்தது. அந்த வேளைகளில் நான்தான் மல்லியின் படுக்கைக்குப் பக்கத்தில் சாய்வு நாற்காலி போட்டுக் கொண்டு தூங்கினேன்.
முழுதாகத் தூங்கினேன் என்று சொல்ல முடியாது. மனம் கலங்கி இருளடைந்து கிடந்தது. மல்லிக்காக ஒன்றும் செய்ய முடியாத நிலைமையில் காத்துக் கிடப்பது ஒன்றுதான் முடிந்தது. கால் மணி நேரத்துக்கு ஒரு முறையும் அரை மணி நேரத்துக்கு ஒரு முறையும் எழுந்து, அவள் நெஞ்சின் ஏற்ற இறக்கத்தைக் கவனித்து விட்டுத்தான் படுப்பேன். நர்சுகள் வரும்போதெல்லாம் எழுந்துவிடுவேன். முனகல் சத்தம் கேட்டாலும் விம்மல் சத்தம் கேட்டாலும் தூக்கம் பட்டென்று போய்விடும். சாய்வு நாற்காலியில் நீண்ட நேரம் இருந்ததில் கழுத்திலும் முதுகிலும் வலி வந்தது. யாரிடமும் சொல்லவில்லை. சொன்னால் ‘ஆஸ்பத்திரிக்கு வரவேண்டாம் ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள்’ என்று தடுத்து விடுவார்கள்என்ற பயம்.
அந்த ஏழாம் நாள் இரவு மருத்துவ மனை இரவு ட்யூட்டி மகனிடமிருந்து எனக்குத்தான் வந்தது. அதே சாய்வு நாற்காலியில் படுத்தேன். முன்னிரவில் எதையெல்லாமோ படிக்க முயற்சி பண்ணி விட்டுவிட்டுப் படித்து, பின்னிரவில் தூங்கிப் போனேன்.
ஏதோ தேவதைகள் பேசும் சத்தம் கேட்டது. “தாத்தா!” என்பது போல் ஒலித்தது. திடுக்கிட்டு விழித்தேன். வெள்ளை உடையும் தலையில் விசிறியும் அணிந்த தேவதைகள் மல்லியின் படுக்கையைச் சுற்றி இருந்தார்கள். ஒரு டாக்டரம்மாவும் இருந்தார். மனதில் படீர் என்று இருள் சூழ்ந்தது. என் மல்லிக்கு என்ன ஆயிற்று?
எழுந்து அவர்களை அவசரமாக ஒதுக்கிப் படுக்கையில் எட்டிப்பார்த்தேன்.
மல்லி என்னை விழித்துப் பார்த்தாள். “ஏன் தாத்தா, விடிஞ்சுப் போச்சே! ஏன் இன்னும் தூங்கிறீங்க?” என்று கேட்டாள்.
வைகறை வெளிச்சத்தில் மலர்கள் குலுங்கி, வண்டுகள் ரீங்கரிக்கும், பறவைகள் சிறகடித்துப் பறக்கும், புத்தம் புது பிரகாசமான உலகில் என் உயிர் மீண்டும் சிலிர்த்தெழுந்தது.