கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: September 2, 2016
பார்வையிட்டோர்: 8,510 
 

சிவநாயகத்திற்குப் பசி வயிற்றைக் குடைந்தது. இரவுச் சாப்பாடு முடிவடைந்துவிட்டதா என அறிவதற்காக, மகள் வெண்ணிலாவைக் கூப்பிட்டார். வெண்ணிலா கிணற்றடியில் தொட்டிக்குள் தண்ணீர் நிரப்பிக் கொண்டிருந்தாள். இதுவரை காலமும் தண்ணீர் அள்ளுவதற்கு துலாக்கொடியை நம்பி இருந்த அவளுக்கு, அன்றுதான் ‘உவாட்டர் பம்ப்’ பூட்டியிருந்தது மகிழ்ச்சியைக் கொடுத்தது. பலாலி இராணுவ முகாமிலிருந்து இரவு வேளைகளில் முற்றத்து தென்னை மரங்களுக்கு மேலால் மாவிட்டபுரம் விரையும் ‘ஷெல்’லைப் போல சீறிக்கொண்டு தொட்டிக்குள் பாய்ந்தது நீர்.

“அம்மா அப்பாவைக் குளிக்க வார்க்க, தோட்டத்திற்கு நீரிறைக்க எல்லாத்திற்கும் சுகம். சுகந்தன் அண்ணாவிற்கு எவ்வளவு நல்ல மனசு.”

வேலை கிடைத்த முதல் மூன்று மாதங்களிலேயே கடனை அடைத்துவிட்டான். பிறகு வந்த சம்பளக்காசில் அம்மாவிற்கும் வெண்ணிலாவிற்கும் உடுப்பு எடுத்துக் கொடுத்திருந்தான். இப்ப ‘பம்ப்’ ஒன்றும் வாங்கிவிட்டான்.

“தம்பி பரதன்! வெண்ணிலா கிணற்றடியிலை உடுப்புத் தோச்சுக் கொண்டிருப்பாள். அப்பா கூப்பிடுகிறார். ஒருக்கால் வந்திட்டுப் போகச் சொல்லு” – அம்மா.

வேலிக்கு அப்பால் நின்ற ஒருவருடன் கதைத்துக் கொண்டிருந்த பரதன், தாயாரின் குரல் கேட்டவுடன் பாய்ந்து ஓடி மாமரமொன்றிற்குப் பின்னால் ஒளிந்து கொண்டதை வெண்ணிலா கண்டுகொண்டாள். பின் மாமரத்தினின்றும் வெளிப்பட்டு அருகே இருந்த தூர்ந்து போன பதுங்கு குழிக்குள் இறங்கிக் கொண்டான். கடந்த ஆறேழு மாதமாகப் பதுங்கு குழிகள் கவனிப்பாரற்றுக் கிடந்தன.

கொஞ்ச நாட்களாகப் பரதனின் போக்கு, தங்கை வெண்ணிலாவுக்கு விசித்திரமாகவே தெரிந்தது.

சிவநாயகம் குடும்பத்தினரது இரவுச் சாப்பாடு அரங்கேறத் தொடங்கியது. ஏறக்குறைய குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் மேசையில் இருந்தார்கள். சிவநாயகத்தின் மனைவி சாரதா, இரண்டாவது மகன் – பரதன், இளையவன் – சுகந்தன். இவர்களுக்கெல்லாம் உணவு பரிமாறிக் கொண்டிருந்தாள் சுட்டித்தங்கை வெண்ணிலா. தவிர சிவநாயகத்தின் இரண்டு ஊன்றுகோல்களும் மேசைமீது சரித்து வைக்கப்பட்டிருந்தன.

“அம்மா! எங்கே அம்மா பெரியண்ணா… ஒருநாளும் சாப்பாட்டு நேரத்திற்கு வரமாட்டார்” – இப்படி வெண்ணிலா சொல்லிக்கொண்டிருக்கும் போதே சைக்கிளையும் தள்ளிக் கொண்டு வந்தான் தருமன். சாரதா அவனைக் காணாத படியால், சொல்ல நினைத்ததை சொல்லி முடித்தாள்.

“மூத்தவன் இப்ப வரமாட்டான். நாள் முழுக்கப் படிப்பித்துக் களைச்சு வந்தவன், ஓய்வெடுக்காமல் அரசியல் பேசிப் பொழுதைப் போக்கப் போயிட்டான்.”

“உனக்கு எப்பவும் அவனைக் கரிச்சுக் கொட்டுறதுதான் வேலை. ஆபத்து வாற நேரம் தான் அவன்ரை அருமை பெருமை தெரியவரும்” – சிவநாயகம்.

“என்ன சாப்பாட்டுக்கு ஆயத்தம் போலக் கிடக்கு. சைக்கிள் காத்துப் போட்டுது. அதுதான் பிந்திப் போச்சு. நீங்கள் தொடங்குங்கோ. நான் குளிச்சுப் போட்டு வாறன்.”

”தருமன், ‘உவாட்டர் பம்ப்’ போட்டாச்சு. சுறுக்கெண்டு குளிச்சிட்டு வா. தம்பி சுகந்தன் நீ சாப்பிடடா முதலிலை. சீமென்ற் ஃபக்டரி வேலைக்குப் போய் களைச்சுப்போய் வந்திருப்பாய்.”

பரதனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. அங்குமிங்கும் பார்த்தான். பிறகு பேச்சை ஆரம்பித்தான்.

“தங்கைச்சி! மூத்தண்ணா அப்பாவுக்குக் கொள்ளி வைப்பாரெண்டு, அப்பாவுக்கு தருமண்ணா மேலை விருப்பம். தம்பி சுகந்தன் அம்மாவுக்கு காரியங்கள் செய்வானெண்டு, அம்மாவுக்கு தம்பி மேலை விருப்பம். என்னிலையும் உன்னிலையும் ஒருத்தருக்குமே விருப்பமில்லை.”

“பரதன் அண்ணா! நீ வேணுமெண்டால் உனக்கு நீ கொள்ளி வை” என்று வெண்ணிலா பகடிக்குச் சொன்னாள். ஆயினும் பரதன் ஒருகணம் திடுக்கிட்டு திகைத்துப் போனான்.

“உதை விட்டால் வேறை நல்ல விஷயங்களே இல்லையா கதைப்பதற்கு? வெண்ணிலாவுக்கு ஒரு கலியாணம் பேசிச் செய்யிற அலுவலைப் பாக்கவேணும். எனக்கும் ‘அட்டாக்’ வந்து நடக்கேலாமல் ஆக்கிப் போட்டுது. எப்ப என்ன நடக்குமோ தெரியாது” இயலாமையை வெளிக்காட்டினார் சிவநாயகம்.

“அப்பா! இப்ப எனக்கென்ன வயசாகுது? நான் இப்ப கலியாணம் செய்ய மாட்டன்” சிணுங்கினாள் வெண்ணிலா.

“அம்மா ஃபக்டரியிலை வேலை செய்யிற கன ஆக்கள் வெளிநாடு எண்டு போகினம். நாட்டுநிலமை நல்லா இருக்கேக்கை போய்விட வேண்டும் எண்டு கதைக்கினம். எனக்கும் எங்கையாவது காசு மாறித் தந்தியள் எண்டால் நல்லா இருக்கும்” சுகந்தன் தன் கருத்தை வெளியிட்டான்.

“சாப்பிடேக்கை உதுகளைக் கதையாதை சுகந்தன். நீ வெளிநாடு போறது எனக்குத் துண்டற இருப்பமில்லை.”

அவர்கள் சாப்பாட்டைத் தொடங்கிக் கொண்டிருக்கும்போதே நரகத்தின் வாசலும் திறக்கப்பட்டது. வானத்திலே ஏதோ தீச்சுவாலையைக் கிழப்பிக் கொண்டு தூரத்தே போய் விழுந்து வெடித்தது.

சனீஷ்வர பகவான் அடிக்கடி வடக்குக் கிழக்கிற்கு வந்து போவது ஒன்றும் அப்படிப் புதுமை அல்ல. பலாலி விமானத்தளத்திலிருந்து அசுரகதியில் புறப்பட்டுக் கிழக்குப்புறமா நகர்ந்து ஏதோ ஓர் எல்லைக்கிராமத்தில் விழுந்து வெடித்தது சனியன்.

இந்த நேரத்தில் இப்படிப் பேய் பூதங்கள் கிழம்புமென்று யார் நினைத்திருப்பார்கள்? சிவநாயகம் அரையும் குறையுமாகச் சாப்பாட்டை நிறுத்திவிட்டுக் கட்டிலில் போய் இருந்து கொண்டார். பாரிசவாதம் என்று ஆரம்பித்தது, இப்ப வாழ்க்கையே அந்தக் கட்டில் என்று ஆகிப் போய்விட்டது. மனனம் செய்து வைத்திருந்த பக்திப்பாடல்கள் எல்லாம் வரி வரியாக வந்தன.

இரவு ‘ஷெல்’ அடிக்கும் சத்தம் தொடர்ந்து கேட்டது. ஆங்காங்கே சிறுசிறு துப்பாக்கிச்சத்தங்களும் தொடர்ந்த வண்ணம் இருந்தன. சாரதா கிணற்றடியில் முகம் அலம்பி விட்டு குடுகுடுவென்று வீட்டிற்குள் புகுந்தாள். முக்கியமான பொருட்களை எடுத்து ஒரு பொட்டலம் கட்டிக் கொண்டாள். சிவநாயகம் எழுந்து சுவரைப் பிடித்தபடி இருளிற்குள் எதையோ தேடினார். முகிலிற்குள் இரு வெளிச்சவட்டங்கள் மின்னிக்கொண்டு நகர்ந்தன. முந்திய காலங்களிலெல்லாம் ஒன்றிரண்டு ‘ஷெல்’ விழும் முன்னே தனது பால்யநண்பன் கதிரவேலு வீட்டில் தஞ்சம் புகுந்து விடுவார் சிவநாயகம். இப்ப எந்தச் சின்ன விஷயத்திற்கும் பிள்ளைகளையே எதிர்பார்க்க வேண்டிய பலவீனமான நிலைமை.

தெருவீதியில் நின்று யாரோ குசுகுசுத்துக் கதைத்துக் கொண்டு நின்றார்கள். வானவிளையாட்டுப் போலத் தீப்பந்தங்கள் எல்லா மூலைகளிற்குள்ளும் விழுந்து வெடித்தன. கட்டியிருந்த பசுமாடு நிலைமை உணர்ந்து அவலக்குரல் எழுப்பியது.

“தம்பி சுகந்தன், வாயில்லாப்பிராணி பயந்து கத்துது. கட்டை அவிட்டுவிடு, எங்கேனும் ஓடிப்போகட்டும்” என்றாள் சாரதா.

நேரம் நள்ளிரவை நெருக்கச் சத்தம் சந்தடி மெதுவாக அடங்கிற்று. தேவாரம் பாடிக்கொண்டும் புறுபுறுத்துக் கொண்டும் இருந்த சிவநாயகம் உறங்கிவிட்டார்.

வெண்ணிலா உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தாள். அடுத்த வளவின் மரவள்ளித்தோட்டத்தில் யாரோ இரகசியம் கதைப்பது கேட்டது. எழுந்து நேரம் பார்ப்பதற்காக லைற்றைப் போட்டாள். மின்சாரம் நின்று போயிருந்தது. ரோச்லைற் எடுப்பதற்காக பரதனின் அறைக்குள் நுழைந்தவளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பரதனை அங்கு படுக்கையில் காணவில்லை. சட்டென மூளையில் மின்னலென ஒளிவெள்ளம் தாக்கிற்று.

ரோச்லைற்றை நிறுத்திவிட்டுப் பதுங்கு குழி நோக்கி மெதுவாக அடியெடுத்து வைத்தாள். மாமரம் நோக்கிச் செல்ல பேச்சுக்குரல் அதிகமாகக் கேட்டது. பரதனின் குரல் தெளிவாகக் கேட்டது. மற்றவ்ர்களின் குரல்கள் புரிந்தமாதிரி இருக்கவில்லை. மெதுவாகப் பதுங்குகுழிக்குள் இறங்கினாள் வெண்ணிலா. ஒன்றிரண்டு அடிகள் தாண்டியதும் பாம்பு பூச்சிகளுக்குப் பயந்து ரோச்சைப் போட்டாள். என்ன ஆச்சரியம்! பதுங்குகுழி சுத்தம் செய்யப்பட்டு அழகாக இருந்தது. பரதனிற்கு பிரச்சனை வரப்போவது ஏற்கனவே தெரிந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் அவளுள் எழுந்தது. மேலே ஏறி வரும்போது, சடுதியாக இரண்டு முரட்டுக்கரங்கள் அவளது வாயைப் பொத்தி அழுத்தின. வெண்ணிலா கத்த முயன்றாள். சுகந்தன் நிற்பது தெரிந்ததும் குரல் அமுங்கி மெதுவாக எழுந்தது. இந்த அரவத்தினால் தோட்டத்தில் இருந்தவர்கள் மெதுவாக நழுவிவிட்டார்கள்.

”தங்கைச்சி! எனக்கும் எல்லாம் தெரியும். பரதன் அண்ணா விடிய வந்திடுவார். எல்லாத்தையும் விடிஞ்சாப்போல பார்ப்பம்” என்று வெண்ணிலாவுக்குச் சமாதானம் செய்து வைத்தான் சுகந்தன்.
ஒவ்வொருநாளும் விடியற்காலையில் பரதன் எழுந்து உடற்பயிற்சி செய்வதன் நோக்கம் புரிந்தது. முடிவாக வீட்டிற்குத் திரும்பி அவரவர்கள் இடங்களில் படுத்துக் கொண்டனர்.

இனியும் உறக்கம் வருமா?

விடிய அவர்கள் எழும்பவில்லை, எழுப்பப்பட்டார்கள்.

”சாரதா… ரீ போடேல்லையா?” என்றார் சிவநாயகம்.

“பிள்ளை வெண்ணிலா, கரண்ட் போட்டுது போல கிடக்கு. அடுப்பிலை தண்ணியைக் கொதிக்க வைச்சிட்டு, தொட்டியைக் கழுவி தண்ணியை நிரப்பிவிடு. இண்டைக்குச் செவ்வாய்க்கிழமை வடிவாக் குளிக்க வேணும்” என்றாள் சாரதா.

“சின்னண்ணா ஓடி வா” என்று முற்றத்தில் நின்றபடியே வெண்ணிலா கூச்சலிட்டாள். வெண்ணிலா வீதியைப் பார்த்தபடி திகைத்து நிற்பதைக் கண்டான் சுகந்தன்.

வீதியில் மக்கள் அவசரப்பட்டு, உடுத்த உடுப்புகளுடன் கிடைத்தவற்றை எடுத்துக் கொண்டு விரைந்தார்கள். பானைகள், சட்டிகள், ஆடு, மாடு, கோழிகள் எல்லாம் போய்க்கொண்டிருந்தன. ஒவ்வொருவரும் தமது தகுதிக்கேற்ப எவை எவை முக்கியமானதெனப் பட்டதோ அவற்றையெல்லாம் சுருட்டிக் கொண்டு பதட்டத்துடன் போய்க் கொண்டிருந்தார்கள்.

சுகந்தன் வீதிக்கு ஓடினான். வெண்ணிலா வீட்டிற்குள் ஓடினாள். வயது முதிர்ந்த ஒருவரை இடைமறித்து விஷயம் அறிந்து கொண்டிருந்தான் சுகந்தன். அதிகாலையில் வெளியான முதல் குண்டு அவர்களின் தலைக்கு மேலால் பறந்துபோய் விழுந்து வெடித்தது. வீதியில் வந்து கொண்டிருந்த விலங்குகள் மூர்க்கம் கொண்டு விரண்டு ஓடின. கதை சொல்வதை நிறுத்திவிட்டு நடையைக் கட்டினார் கிழவர்.

”மிஞ்சிமிஞ்சிப் போனா, ஒரு மணித்தியாலமோ இரண்டு மணித்தியாலமோ அதுக்கிடையிலை வந்து விடுவான்கள். கையிலை கிடைக்குறதை எடுத்துக் கொண்டு ஓடுங்கோ.”

“சுகந்தன்! அப்பாவைத் தங்க வைக்கிறதுக்குத் தக்கமாதிரி எங்கையாவது வீடு சரிவருமா எண்டு பாத்து வாறன். நீ எல்லாத்தையும் ஆயத்தம் பண்ணு” சொல்லிவிட்டு தருமன் சைக்கிளை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.

”அண்ணா! கெதியிலை வரப் பாருங்கோ. வீட்டிலை பரதன் அண்ணையும் இல்லை. வரேக்கை கார் ஒண்டையும் ஒழுங்குபண்ணிக் கொண்டு வாங்கோ. அப்பாவைக் கூட்டிக் கொண்டு போகச் சுகமாக இருக்கும்” சொல்லிக் கொண்டே என்ன செய்வதென்று தெரியாமல் வீட்டிற்குள் ஓடினான் சுகந்தன்.

உள்ளே வெண்ணிலா தந்தைக்கு உடுப்பு மாற்றுவதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டிருந்தாள்.

”அப்பா பரதன் அண்ணையை இன்னும் காணேல்ல.”

“வழமையா காலமை எழும்பி ஓடப்போறவன் தானே . வந்திடுவான் பிள்ளை.”

ஏதோ சொல்வதற்காக வாய் எடுத்தாள் வெண்ணிலா. சுகந்தன் கையால் ஜாடை செய்து ஒன்றும் இப்போது சொல்லவேண்டாம் என்று தடுத்தான்.

“அம்மா கெதியிலை எடுக்கிற எல்லாத்தையும் எடுத்துக் கொண்டு வெளிக்கிடுங்கோ.”

“அண்ணா, அப்பாவை வெளிக்கிடுத்த கொஞ்சம் உதவி செய்யேன்.”

“அப்பாவைச் சைக்கிளிலை இருத்தி நீயும் வெண்ணிலாவுமா மெதுவாக உருட்டிக் கொண்டு போங்கோ. நான் பின்னாலை வாறன்.”

“இல்லை அம்மா, தருமன் அண்ணை கார் பிடிக்க எண்டு போனவர், வந்திடுவார்.”

சுகந்தன் முற்றத்திலே ஒரு கதிரையைத் தூக்கிப் போட்டான். வெண்ணிலா தந்தையை மெதுவாக நடத்திச் சென்று கதிரையில் அமர்த்தினாள். பழைய சாதத்தில் கொஞ்சம் பிசைந்து இரண்டு கவளம் சோறு சிவநாயகத்திற்குக் கொடுத்தாள் சாரதா.

நேரம் செல்லச் செல்ல பிரச்சினை கூடி வருவது தெரிந்தது. ஊர் மக்கள் சுறுசுறுப்படையத் தொடங்கினார்கள்.

“பிள்ளை சுகந்தன். இண்டைக்கெண்டு பாத்து பரதனையும் காணேல்லை. தருமன் இப்ப வந்திடுவான் எண்டு நான் நினைக்கேல்லை. நீயும் வெண்ணிலாவும் சேர்ந்து அப்பாவை சைக்கிளிலை வைச்சுத் தள்ளிக் கொண்டு போங்கோ. நானும் ஒரு கரையிலை பிடிக்கிறன். துர்க்கைஅம்மன் கோயில் மட்டுமாவது முதலிலை போவம்.”

சுகந்தனுக்கும் வெண்ணிலாவுக்கும் அம்மா சொல்வதுதான் சரியென்று பட்டது. வெண்ணிலா சிவநாயகத்தை மெதுவாக நடத்திப் படலை வரையும் கொண்டு சென்றாள்.

“என்னடி பிள்ளை! நடக்கக் கஷ்டமாக இருக்கு. ஒவ்வொருமுறையும் போறதும், பிறகு ஆறேழு மாதத்திலை திரும்பி வாறதுமே பிழைப்பாய்ப் போச்சு” என்று புறுபுறுத்தபடியே சிவநாயகம் சலித்தார்.

“ஆரது கதிரவேலுவா? சைக்கிளிலை போவம் எண்டு யோசிக்கிறன். பிறகு பிந்தினால் கஷ்டமாப் போயிடும். கொஞ்சம் சைக்கிளிலை ஏறி இருக்க உதவி செய்யப்பா… வெண்ணிலா நீ சைக்கிளை இறுக்கிப் பிடி.”

“அம்மா, நீ முன்னுக்குப் போ. கொஞ்சம் உதவி செய்துவிட்டு வாறன்” என்று தனது தாயாரைப் பார்த்துச் சொன்னார் கதிரவேலு.

வெண்ணிலா சைக்கிளைப் பிடிக்க, சுகந்தனும் கதிரவேலுவும் சிவநாயகத்தை மெதுவாகத் தூக்கி சைக்கிள் சட்டம் வரையும் உயர்த்தினார்கள். அவர்கள் சிரமப்படுவதைப் பார்த்து வீதியால் போய்க் கொண்டிருந்தவர்களும் கிட்ட வந்து உதவி செய்தார்கள். வெண்ணிலாவால் சைக்கிளை கெட்டியாகப் பிடிக்க முடியவில்லை. சைக்கிள் சரிந்து விழுந்தது. சிவநாயகம் விழுந்து புழுபோலத் துடித்தார். நிலத்தில் விழுந்ததால் அவருக்கு முதுகுப்புறமாக நல்ல அடி பட்டுவிட்டது. இயலாமையால் கத்தத் தொடங்கினார். வெண்ணிலா கூனிக்குறுகி அழுதாள்.

வீதியின் வளைவில் மக்கள் ஒரு கும்பல்போல வேகமாக ஓடி வந்தனர்.

“மாவிட்டபுரம் கோயில் வரைக்கும் வந்திட்டான்கள். கெதியிலை ஓடுங்கோ.” எல்லாரும் ஓடத்தொடங்கினார்கள்.

“அப்பாவாலை இனிச் சைக்கிளிலை இருக்க முடியாது. தூக்கிக் கொண்டு போய் இனிக் கட்டிலிலை கிடத்துவம். என்னப்பா உங்களாலை நடக்க முடியுமாப்பா?”

”ஐயோ! என்னாலை இனி ஒண்டுமே செய்யேலாது. என்னை வீட்டிலை இருக்க விடுங்கோ.”

ஓடிவந்த கும்பலில் இருந்து இரண்டுபேர் காலைப் பிடிக்க, வெண்ணிலாவும் சுகந்தனும் தலையில் பிடித்துக் கொண்டு சிவநாயகத்தை உள்ளே தூக்கிச் சென்றார்கள். மறுகணம் பலத்த சத்தத்துடன் ‘ஷெல்’ ஒன்று வந்து சிவநாயகம் வீட்டுப்படலைக்கு முன்பாக விழுந்தது. நெருப்பும் புகையும் எழுந்து எங்கும் வியாபித்தது. சிதைந்துபோன உடம்பொன்றின் பாகம் ஒன்று எங்கிருந்தோ பறந்து வந்து சிவநாயகத்தின் மேல் விழுந்தது.

‘ஐயோ’ என்று கூக்குரலிட்டபடி சாரதா வீட்டிற்குள்ளிருந்து வெளியே வந்தாள்.

சிவநாயகத்தைத் தாழ்வாரத்தினுள் இருத்திவிட்டு மீண்டும் படலைக்கு ஓடினார்கள். ஒரு உடல் சிதைந்து சின்னாபின்னமாகி எல்லாம் அடங்கி இருந்தது. பக்கத்தில் கதிரவேலு கையும் காலும் சிதைந்த நிலையில் முனகிக் கொண்டு இருந்தார். நிணமும் சதையும் சிதறிக் கிடந்தன. சுகந்தனின் சைக்கிள் சக்கரம் கதிரவேலுவிற்கு மேல் வளையமிட்டுக் கிடந்தது. கதிரவேலுவைத் தூக்கி வாசலில் கிடத்த முற்பட்டார்கள். உடம்பு எல்லாம் துண்டு துண்டாகி விழுந்தது. தலையின் பின்புறம் வெடித்து சாம்பல் நிறத்தில் மூளை தள்ளிக் கொண்டு தெரிந்தது.

“தயவுசெய்து ஒருத்தரும் இந்தக் கிராமத்தில் இருக்க வேண்டாம். பத்துநிமிஷத்திலை எல்லாரும் வெளிக்கிட்டிடுங்கோ” என்றபடி துப்பாக்கி ஏந்திய நான்கு இளைஞர்கள் அங்கே வந்தார்கள். அவர்கள் சொன்னவுடன் எல்லாரும் அவ்விடத்தை விட்டு விரைவாக நழுவினார்கள்.

”அம்மா உடனடியா எல்லாரையும் வீட்டை விட்டுப் போகட்டாம்” என்றபடி வெண்ணிலா வந்து சிவநாயகத்திற்குப் பக்கத்தில் நின்றாள்.

வந்தவர்களில் இருவர் கதிரவேலுவிற்கு உதவி செய்ய, மற்ற இருவரும் சிவநாயகத்தின் வீட்டிற்குள் நுழைந்தார்கள்.

”அண்ணை முதலிலை அம்மாவையும் அக்காவையும் வெளிக்கிடச் சொல்லுங்கோ”

“என்ரை புருஷனை விட்டிட்டு நான் வரமாட்டேன்.”

”அம்மா ஒண்டுக்கும் பயப்பிடாதையுங்கோ. அப்பாவை கூட்டிக்கொண்டு வாறதுக்கு நாங்கள் வழிபண்ணுவம். நீங்கள் முதலிலை கெதியிலை வெளிக்கிடுங்கோ. அண்ணை நீங்கள் வீட்டிலை நில்லுங்கோ. எங்கடை வாகனம் இப்ப வரும். அப்பாவை ஏத்த உதவியா இருக்கும்.”

சாரதா தயங்கித் தயங்கி இரண்டு அடி வெளியே எட்டி வைத்தாள். எங்கிருந்தோ இருந்து வந்த அவர்களின் பசுமாடு சாரதாவின் கால்களை நக்கிவிட்டு சிவநாயகத்திற்குப் பக்கத்தில் படுத்துக் கொண்டது. வெண்ணிலா தாயாரின் கைகளைப் பற்றிக் கொண்டாள். திரும்பவும் ‘ஷெல்’ அடிக்கும் சத்தம் கேட்டது.

”டேய்…. தாஸ், சீனு…. திரும்பவும் அடிக்கிறான்களடா. உள்ளுக்கு ஓடிவாங்கோ. அடிச்ச இடத்துக்குத்தான் அடுத்த ஷெல்லும் அடிப்பான்கள்.”

மற்ற இருவரும் உள்ளே ஓடிவர, சொல்லிவைத்தால் போல் திரும்பவும் அதே இடத்தில் ஷெல் விழுந்தது. விழுந்ததுதான் விழுந்தது, சும்மா கிடந்த நிலத்தில் விழுந்திருக்கப்படாதா? கதிரவேலுவின் மேல் விழுந்து ஊசலாடிக் கொண்டிருந்த உயிரையும் அடக்கி உடலைக் கோதாக்கி சக்கையாக்கிவிட்டுப் போனது.

கதிரவேல், சிவநாயகத்திற்கு உதவி செய்யாமல் வெறுமனே பச்சோந்தியாகப் போய் இருந்திருப்பாரேயானால், அவருக்கு இந்தக் கதி ஏற்பட்டிருக்காது. மனிதநேயத்தை விழுங்குகின்ற இந்த ரத்த தாகங்கள் எல்லாம் எப்போது அடங்கும்? மனிதத்தன்மைகள் சுயநலத்தால் சுருங்குகின்ற வேளையில் நல்ல மனங்கள் வாழ முடியாதுதான்.

”சாரதா நீ பயப்பிடாமல் போ. நான் பின்னாலை வந்திடுவன். சுகந்தனும் நிக்கிறான் தானே. எங்கை தருமனும் பரதனும்?”

“தருமன் கார் பிடிக்கவெண்டு போனவன். பரதனை விடிஞ்சதிலை இருந்து காணேல்லை. என்ன பிள்ளையளோ?”

சாரதா வீட்டையும் கணவனையும் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி நடந்தாள். அவளின் காலுக்குக் கீழே எதுவோ வழுக்கியது. கிடுகு வேலி எல்லாம் சதைத் துண்டங்கள் தொங்கின. காக எச்சமோ கோழி எச்சமோ கொஞ்சம் பிரண்டுவிட்டால் முப்பதுதரம் காலைத் தேய்த்துக் கழுவுவாள் சாரதா. இப்போது இதை எதனால் கழுவுவாள் அவள்? மறுபடியும் வீட்டிற்குள் ஓட எத்தனித்தாள் சாரதா. அவளை வெண்ணிலா அழுங்குப் பிடியாகப் பிடித்து, அந்த சிதைந்துபோன உருவங்களுக்கு மேலால் இழுத்துச் சென்றாள்.

சாரதாவால் தொடர்ந்து நெடும்தூரம் நடக்க முடியவில்லை.

“தங்கைச்சி கொஞ்சம் கெதியாய்ப் போங்கோ. ஆமி பலாலியிலை இருந்து வெளிக்கிட்டு தெல்லிப்பழைச்சந்திக்கு வருகுதாம் எண்டு கேள்வி” சைக்கிளில் ஒருவர் சொல்லிக் கொண்டே பறந்தார். சாரதா திரும்பித் திரும்பி புருஷனும் பிள்ளையும் வருகின்றார்களா எனப் பார்த்தபடியே நடந்தாள். ஒவ்வொரு வாகனமும் அவர்களைக் கடக்கையில், சாரதா நடப்பதை நிறுத்தி வாகனங்களை நிதானமாக நின்று உற்றுப் பார்த்தாள்.

கார் ஒன்று அவர்களைக் விரைவாகக் கடந்து சென்றது. உள்ளுக்குள் இருந்தவர்கள் பலத்து அழுதபடி போனார்கள். கார் போன பாதை வழியே குருதி வழிந்து ஒழுகிக் கிடந்தது.

தெல்லிப்பழையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கையில், தபால்கந்தோர் வளைவில் தருமன் மாட்டு வண்டிலொன்றில் வந்து கொண்டிருந்தான். இவர்களைக் கண்டதும் குதித்து இறங்கி ஓடி வந்தான். தருமனைக் கண்டதும் சாரதா கத்தி அழத் தொடங்கினாள்.

”அம்மா இதிலை நிண்டு அழுதுகொண்டு நில்லாதையுங்கோ. அண்ணா கார் ஒண்டும் சரிவரேல்லையா?”

”கார் எல்லாம் நிக்குது. ஆனா ஒருத்தரும் பிரச்சினை எண்டு விடுறாங்கள் இல்லை.”

அவர்கள் கதைத்துக் கொண்டிருக்கும்போது, அவர்களின் வீட்டுப்பக்கமாக துப்பாக்கிச்சத்தங்கள் கேட்கத் தொடங்கியிருந்தன. வண்டில்காரன் தெருவால் போன ஒருவருடன் கதைத்துவிட்டு, வண்டிலை அரைவட்ட வடிவில் திருப்பி வந்தவழியாகப் போகத் தொடங்கினான்.

“ஓய்… ஓய்… “ என்றபடியே பின்னாலே தருமன் கலைத்தான். வண்டில் பறந்து போனது.

”தங்கைச்சி! நீ அம்மாவைக் கூட்டிக் கொண்டு போ, நான் பாத்திட்டு வாறன். துர்க்கை அம்மன் கோயிலடியிலை போய் நில்லுங்கோ. சங்கானையிலை என்னோட ‘ரீச்’ பண்ணுற குணத்தின்ரை வீட்டிலே இடமிருக்கு. அங்கைதான் போக வேணும்.”

”அண்ணா, சுகந்தன் அண்ணையும் அப்பாவோடைதான் நிக்கிறார். வரேக்கை எல்லாற்றை படிச்ச சேர்ட்பிக்கேற்றையும் எடுத்துக் கொண்டு வரச் சொல்லுங்கோ.”

அவர்கள் பயணம் தொடர்ந்தது. தெல்லிப்பழைச்சந்திக்கு அப்பாலே எல்லாம் வழமை போல நடந்து கொண்டிருந்தது. பனந்தோப்பிற்குள் மக்கள் கூட்டம் கூட்டமாக இருந்தார்கள். துர்க்கை அம்மன் கோவிலிற்கு அண்மையில் வயதுபோன மூதாட்டி ஒருத்தி சிறுவர்களை இடைமறித்துக் கதை கேட்டாள்.

”உதாரெண்டு பார் வெண்ணிலா. கதிரவேலுவின்ரை அம்மா அன்னம்மா போலக் கிடக்கு.”

“ஓம் அம்மா, அன்னம்மா ஆச்சிதான்.”

“அப்ப கொஞ்சம் எட்டி நட பிள்ளை. கிழவிக்கு மகன் செத்த விஷயமே தெரியாது போல.”

”அம்மா! நீங்கள் ஒண்டும் சொல்ல வேண்டாம். தெரியவாற நேரம் அது தெரிய வரட்டும். உங்களுக்குத் தெரியும்தானே! கிழவிக்கு மகன் மேலே எவ்வளவு பிரியம் எண்டு. பிறகு கிழவிக்கு ஏதேனுமொண்டு நடந்தால்…”

”ஆச்சி எங்கை உந்தப் பக்கமா நடக்கிறியள்?”

“இல்லைப் பிள்ளை… என்ரை மகன் கதிரவேலு என்னை முன்னாலை போ, நான் பின்னாலை வாறன் எண்டு சொன்னான். அதுதான் நானும் இப்படியே நடந்துகொண்டு போறன். என்ரை மகளிட்டை சாவகச்சேரிக்குப் போவம் எண்டு வெளிக்கிட்டனாங்கள்.”

“ஆச்சி! அம்மாவும் நீங்களும் கோயிலடியிலை இருங்கோ. நான் முன்னாலை தேத்தண்ணிக் கடையிலை ஏதாவது வாங்கி வாறன்” என்று சொல்லிவிட்டு எதிர்ப்புறமாக வீதியைக் கடந்து ஓடினாள் வெண்ணிலா.

சாரதாவும் கிழவியும் கொஞ்சநேரம் ஆளை ஆள் மாறிமாறிப் பார்த்தார்கள். சாரதா தலையைக் குனிந்து கொண்டாள். கிழவியே பேச்சைத் தொடங்கினாள்.

”சாரதா ஒண்டுக்கும் கவலைப்படாதை. பெத்த மனம் கேளாதுதான். கொஞ்சநாளிலை பரதன் திரும்பி வந்திடுவான். நாட்டுக்காகப் போராடுகிறதையிட்டு நீ பெருமைப்பட வேணும்.”

சாரதாவுக்கு தலை சுற்றியது. வாய் துடிதுடித்து உளறியது.

“ஆச்சி உன்ரை மகன் கதிரவேல் காலமை ஷெல் விழுந்து செத்துப்…”

கடைக்குப் போயிருந்த வெண்ணிலா திரும்பி வரும்போது, சாரதாவும் கிழவியும் கட்டிப்பிடித்து குழறிக் கொண்டிருந்தார்கள். இரண்டுபேரும் என்ரை மகனே என்று கத்திக்கொண்டு நிலத்து மண்ணைப் பிராண்டி அள்ளி வீசிக்கொண்டிருந்தார்கள். வெண்ணிலாவின் கையிலிருந்த சாப்பாட்டுப் பார்சல் தானாக நழுவிக் கீழே விழுந்தது.

சாரதாவும் கிழவியும் ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கும்போது தருமனும் சுகந்தனும் ஒரு சைக்கிளில் வந்து இறங்கினார்கள்.

“எங்கை அண்ணா அப்பா?” பதட்டத்துடன் வெண்ணிலா சுகந்தனைப் பார்த்துக் கேட்டாள். சுகந்தன் ஒன்றும் கூறாமல் நிலத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். உடம்பு முழுவதும் சிறுசிறு காயங்களுடன், உடுப்புகள் கிழிந்த நிலையில் நின்றான் அவன். வெண்ணிலாவுக்குக் கோபம் வந்தது. அவனின் தோளைப் பிடித்துக் குலுக்கி உலுப்பினாள்.

“எங்கை அண்ணா அப்பா?” மறுபடியும் பலத்துக் கத்தினாள் வெண்ணிலா.

“ஊரைச் சுத்தி ஆமி வந்திட்டுது. அப்பா தனக்கு வயது போட்டுது எண்டும், தனக்கு ஆமி ஒண்டும் செய்யமாட்டான்கள் எண்டும் சொல்லி சுகந்தனை ஓடித் தப்பச் சொல்லிக் கலைச்சுப் போட்டார். சுகந்தன் வந்ததே பெரும்பாடு” தருமன் எங்கையோ பார்த்தபடி சொன்னான்.

”நீ பெட்டை அண்ணா. உன்னை நம்பி அப்பாவை விட்டிட்டு வந்தது பெரிய பிழை” வெண்ணிலா கண்ணீர் விடத் தொடங்கினாள். சாரதாவிற்கு இவையெல்லாம் கேட்டவுடன் ஒப்பாரியின் உரப்புக் கூடியது. உடல் சோர்ந்து மயங்கிக் கீழே சரிந்தாள் சாரதா.

சாரதாவிற்கு நினைவு திரும்பியபோது புதிதாக ஒரு வீட்டுத் திண்ணையில் படுத்திருப்பது தெரிந்தது. வெண்ணிலா பனை ஓலை விசிறியால் காற்று வீசிக் கொண்டிருந்தாள். தருமன் ஒரு மூலையில் தன்னுடன் படிப்பிக்கும் சக ஆசிரியரான குணத்துடன் கதைத்துக் கொண்டிருந்தான். குணத்தின் மனைவி மலரும், பிள்ளைகளும் வெண்ணிலாவிற்குப் பக்கத்தில் இருந்தனர்.

“அம்மா! நாங்கள் இப்ப சங்கானையிலை இருக்கிறம். சுகந்தன் அண்ணா சந்தி வரைக்கும் போயிருக்கிறார். பிரச்சினை குறைஞ்சதும் அப்பாவைப் போய்க் கூட்டி வருவார்” வெண்ணிலா தாயாருக்கு சமாதானம் கூறினாள். குணைத்தின் மனைவி எல்லாருக்கும் தேநீர் போட்டுக் கொடுத்தாள். சாரதா பிரமை பிடித்தவள் போல் ஒன்றும் குடியாமல் இருந்தாள்.

இரவு பத்து மணி மட்டில் சுகந்தன் வெறுமனே திரும்பி வந்தான்.

வெடிச்சத்தங்கள் எல்லாம் ஓய்ந்து போயிருந்தன. தருமன் சைக்கிளிற்கு காற்று எல்லாம் சரிபார்த்து முற்றத்திற்குக் கொண்டு வந்தான். அரைக்காற்சட்டை அணிந்து, ‘ரோச் லைற்’ ஒன்றை அதற்குள் திணித்துக் கொண்டான்.

”சுகந்தன், அப்பாவை நான் ஒருக்காப் பாத்து வரப்போறன். உன்ரை ‘வாச்’சை ஒருக்காத் தா. என்ரை காலமைக் கலாட்டாவுக்குள்ளை துலைஞ்சு போச்சுது.”

“தருமன் இப்ப போக வேண்டாம். விடியப் பாப்பம். நிலமை அவ்வளவு சரியில்லை” என்றான் குணம்.

“இல்லைக் குணம். எனக்குக் குறுக்குப் பாதையள், குச்சொழுங்கையள் எல்லாம் தெரியும். ஏலுமெண்டால்தான் போவன். இல்லாட்டித் திரும்பி வந்திடுவன். அப்பாவுக்கு குடிக்க கொஞ்சம் தேத்தண்ணியும், சோறும் கொஞ்சம் சொதியும் பார்சல் கட்டித் தரமுடியுமா?”

மலர் கேட்ட எல்லாவற்றையும் கொண்டு வந்து கொடுத்தாள்.

“அண்ணா! போக வேண்டாம் அண்ணா! காலமை போகலாம்” தருமனின் கையைப் பிடித்துத் தடுத்தாள் வெண்ணிலா.

“ஏதோ அண்ணா, பாத்துப் போங்கோ” என்றான் சுகந்தன்.

சாரதாவிற்கு விஷயம் எட்டுமுன்பதாக தருமன் கிளம்பினான். சுகந்தனும் குணமும் வாசல்வரை சென்று திரும்பினார்கள்.

இரவு சிவராத்திரி ஆரம்பமானது.

தருமன் புறப்படுப் போய் நான்கு மணித்தியாலங்கள் கடந்து விட்டன. அதிகாலை மூன்று மணியளவில் சுகந்தனும் குணமும் சைக்கிளில் புறப்பட்டு ஒரு சுற்றுச் சுற்றிவிட்டுத் திரும்பினார்கள்.

தந்தையைப் பார்க்கவென்று புறப்பட்டுச் சென்ற தருமன் விடிந்தும் திரும்பவில்லை.

அதன் பின்பும் தருமன் திரும்பவேயில்லை.

– ஈழம் தமிழ்ச்சங்கம் விக்டோரியா, அவுஸ்திரேலியா நடாத்திய சர்வதேச சிறுகதைப் போட்டியில் 4வது பரிசு பெற்றது 1999;

– ஈழவரின் இருபத்தேழு சிறுகதைகள் 2002

– எங்கே போகிறோம் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: மார்கழி 2007, அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச் சங்கம், அவுஸ்திரேலியா

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *