எல்லாமே நீதான்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 20, 2022
பார்வையிட்டோர்: 2,662 
 

மூக்கையனுக்கு தலைச்சுமையை விட மனச்சுமை அதிகமாக அழுத்தியது.

தள்ளாத வயதிலும் இல்லாமை காரணமாக

காட்டிற்குள் சென்று விறகு வெட்டி வந்து கிராமத்தில் விற்று பிழைப்பை நடத்துகிறார்.

“ஒரே பையன்னு சொல்லி ஒழுங்கா வளர்த்தேன். படிக்க வச்சு வேலையும் வாங்கி கொடுத்து,கண்ணாலத்தையும் பண்ணி வச்சுப்போட்டேன். அவன் இன்னைக்கு கை நிறையா சம்பளம் வாங்கினாலும் கட்டின பொண்டாட்டி பேச்சக்கேட்டுட்டு என்னைக்கண்ணெடுத்தும் பார்க்கிறதில்லை. இதையெல்லாம் இருந்து கண்ணுல பார்க்கக்கூடாதுன்னு தானோ என்னமோ எம்பட ஊட்டுக்காரியும் உசுர உட்டுப்போட்டு நிரந்தரமா போயிட்டாள். எல்லாம் விதின்னு நினைச்சுட்டு நானும் வெறகு சொமந்து வேளைக்கு கஞ்சி குடிக்கிறேன்.”என்று விசனத்துடன் விறகு வாங்கிய விசாலத்திடம் கூறினார் மூக்கையன்.

“ஏங்க என்னோட அப்பாவும்,அம்மாவும் நாளைக்கு நம்ம வீட்டுக்கு வரப்போறதா போன் பண்ணினாங்க. நீங்க இப்பவே போய் மளிகை சாமானெல்லாம் வாங்கீட்டு,அப்படியே இரண்டு கிலோ மைசூர்பாகு வாங்கிட்டு வந்திடுங்க. மைசூர்பாகுன்னா என்னோட அப்பா ரொம்பவே விரும்பி சாப்பிடுவார்.” என்று கணவனை அவசரப்படுத்தினாள் மூக்கையனின் மகன் முத்துராமனின் மனைவி காயத்திரி.

தந்தை மூக்கையனை முத்துராமன் நினைக்காத நேரம் இல்லைதான் என்றாலும் மனைவியின் பிடிவாத குணத்தால் அடிக்கடி பிரளயமே நடக்கும்.

“உங்க அப்பா என்னத்தப்பெருசா சம்பாதிச்சு வச்சுட்டாருன்னு இப்படிக்கரிசனப்படறீங்க. இருக்கறதுக்கு சொந்தமா ஒரு வீடு கூட இல்லை. ஆள் கொஞ்சம் பார்க்கிறதுக்கு லட்சணமா இருந்தீங்கன்னு உங்களை கட்டிகிட்டு இன்னைக்கு சிரமப்படறேன். என் தங்கச்சிக்கு இருக்கிற வசதிக்கு நாம சுத்த பிச்சை. இதையெல்லாம் நினைச்சா அப்பப்ப செத்துப்போயிடலாம்னு கூடத்தோணும்.”என்று மனைவி பேசியது முத்துராமன் மனதில் முள்ளாக குத்தியது.

இவையனைத்தையும் அவன் சகித்துக்கொண்டு சத்தமில்லாமல் குடும்பம் நடத்துவதற்கும் சிறு காரணம் இருக்கிறது.

சொந்த வீடு இல்லை என்பதைக்காரணம் காட்டி யாரும் முத்துராமனுக்கு பெண் கொடுக்க முன் வரவில்லை. மனைவி காயத்திரியின் அப்பா கூட “எல்லாம் சரி. வீடு கூட இல்லாத வெறும் ஆளுக்கு பொண்ணுக்கொடுத்தா நாளைக்கு ஏடாகூடமா ஏதாவது ஒன்னு நடக்கக்கூடாதது நடந்திருச்சுன்னா என் மகள் வீதிலயா நிற்பாள்…?” என வசனம் பேசினார்.

முத்து ராமனை முதன் முதலாகப்பார்த்த காயத்திரி முடிவாக சொல்லி விட்டாள். “அவரை எனக்கு பிடிச்சிருக்கு. கட்டினா அவரைத்தான் கட்டுவேன். அதை என் அப்பா என்ன? ஆண்டவனே வந்தாலும் தடுத்து நிறுத்த முடியாது…!” என்று உறுதியாக கூறி விட்டாள்.

திருமணம் முடிந்து ஓராண்டு காலம் ஒற்றுமையாக குடும்பம் நடத்தியவர்கள் வாழ்வில் காயத்திரியின் தங்கையின் திருமணம் புதியதொரு புயலை உருவாக்கியது.

பெண் அழகாக இருக்கிறாள் என்பதற்க்காக பெரிய இடத்து சம்மந்தம் ஏற்பட்டு விட கார்,பங்களா என வசதியாக வாழும் தங்கையைக்கண்டு மனம் புழுங்கினாள். அதுவே நாளடைவில் பொறாமையாக உருமாறி பொறுமை இழக்கும் நிலைக்கு ஆளாக நேர்ந்தது.

“என் தங்கச்சியோட மாமனாரும்,மாமியாரும் கஷ்டப்பட்டு உழைச்சு தன் வாரிசுகளுக்கு எத்தனை சொத்துக்களை சேர்த்து வச்சிருக்காங்க தெரியுமா..? உங்க அப்பாவும் தான் இருக்காரே….. போனாப்போகுதுன்னு ஒரு வாரம் வம்புல வந்தாரேன்னு இருக்கறதுக்கு இடம் கொடுத்து வச்சா…அதுக்கெதுக்கு அத்தனை செலவு…?இதுக்கெதுக்கு இத்தனை செலவு…? ன்னு ஒரே ரோதனையாப்போச்சு….” என்றாள்.

நிம்மதியிழந்த முத்து ராமன் ஒரு முறை உணர்ச்சிவசப்பட்டு அறைந்தே விட்டான் ஆசை மனைவியை.

“ஆசை இருக்கலாம். ஆனா உன்னை மாதிரி பேராசை பேய் பிடிச்சு அலையக்கூடாது. குறுகிய வட்டத்துக்குள்ளேயே சிந்திச்சுப்பார்க்காதே…கொஞ்சமாவது உன்னை விட்டு வெளியே வா. எப்பப்பார்த்தாலும் பணம்,பணம்,பணம். பணத்தால மட்டுமே எல்லாத்தையும் விலை கொடுத்து வாங்கிட முடியாது.”என்று ஆவேசமாக பேசினான்.

கணவன் கோபமாக பேசினால் அழுது ஆர்பாட்டம் செய்வாள்.

“நீங்க ஆபீஸ் போயிட்டு வர்றதுக்குள்ளே கழுத்துல தூக்கு மாட்டிகிட்டுத்தொங்கலே…என் பேர மாத்தி வச்சுக்கிறேன்” என சொல்லி மிரட்டுவாள்.

அன்பாக அவளை பல முறை திருத்த முயன்றும் முடியவில்லை.

“இத பாரு காயத்திரி,நம்மை விட வசதி படைச்சவங்களை நினைக்கிறதை விட்டுட்டு ஏழைகளை நினைச்சுப்பாரு. உடல் ஊனமுற்றவங்களை நினைச்சுப்பாரு. அவங்களுக்கெல்லாம் ஆசையே இருக்காதா என்ன? வாழ்க்கைங்கிறது மனசுல இருக்கு. மத்தவங்களோட ஒப்பிடறதுல இல்லை.” என தன் பாணியில் தத்துவமாகப்பேசினான்.

ஆத்தா காரியத்த முடிச்சிட்டு போனவன் தான் தாயி. அதுக்கப்புறம் எட்டியும் பார்க்கலே,ஏன்னுங்கேட்கல. நாந்தான் மனசு கேட்காம ஒருவாரம் போயிருந்தேன். மருமகளுக்கு என்னக்கண்டாலே புடிக்கலேன்னு தெரிஞ்சதும் கெளம்பி வந்துட்டேன்” என்று பரிதாபமாச் சொன்ன மூக்கையனை விறகு வாங்க வந்த விசாலம் சமாதானப்படுத்தி விட்டுச்சென்றாள்.

தன் தாயும்,தந்தையும் அழுக்கு துணியுடன் அழுது கொண்டே தன் வீட்டிற்கு வந்திருப்பதைக்கண்ட காயத்திரி அதிர்ச்சியடைந்தாள்.

“உன் அண்ணன் பொண்டாட்டி,அந்த அரக்கி இருக்காளே…அவதான் எங்களை இந்தக்கதிக்கு ஆளாக்கிட்டா. பொண்டாட்டி பேச்சக்கேட்டுட்டு அவனும் எங்க பேர்ல இருந்த சொத்தெல்லாம் எழுதி வாங்கிட்டு அழுக்குத்துணியோட விரட்டியடிச்சுட்டான். இனி நீதாம்மா எங்களுங்கு எல்லாம்” என கதறி அழுதவாறு பெற்ற தாய் கூறிடக்கேட்ட காயத்திரி கோபத்தின் உச்சத்துக்கே சென்றாள்.

உடனே சென்று தன் அண்ணணையும்,அண்ணியையும் இரண்டில் ஒன்று கேட்டு விட வேண்டும் என்று தோன்ற, உடனே புறப்பட்டுச்சென்றாள் புகுந்த வீட்டிலிருந்து தன் அண்ணன் வசிக்கும் பிறந்த வீட்டிற்கு.

அங்கே கண்ட காட்சி அவளை நிலைகுலையச்செய்தது. கட்டிலில் படுத்தவாறு

தன் மாமனார் மூக்கையன் உறங்கிக்கொண்டிருப்பதைக்கண்டாள். காயத்திரிக்கு தம் பெற்றோர் போட்டது தன்னைத்திருந்தச்செய்வதற்க்கான அழுக்குத்துணியணிந்த அழுகை நாடகம் என்பதைப்புரிந்து கொண்டவள் உடனே தன் வீடு திரும்பினாள்.

அனைத்தையும் தெரிந்து கொண்டு வீடு திரும்பிய காயத்திரிக்கு காஃபி போட்டுக்கொடுத்து ஆசுவாசப்படுத்தியவாறு கட்டிலில் உட்கார்ந்து கச்சிதமாகப்பேசினாள் காயத்திரியின் தாய் மரகதம்.

“பக்கத்து வீட்டு பங்கஜத்தோட அம்மா விசாலம் வந்து நீ உன்னோட மாமனாரை கண்டுக்காம அனாதையா விட்டுட்டுதை சொன்னதும் உன் அண்ணன்,அண்ணி,அப்பா,அதோட நானும் ஆடிப்போயிட்டோம்.”

“…”

“பெத்தவங்களை ஒதுக்கி வச்சிட்டு எத்தனை கோவில் குளங்களுக்கு போனாலும் நிம்மதி கிடைக்காது. இன்னைக்கு நீ செஞ்சத நாளைக்கு உன் பையன் திருப்பி செஞ்சா உன் நிலமை என்னாகும்னு நினைச்சுப்பாரு. நல்லதுக்கு முன்னுதாரணமா நடந்துக்கனமே தவிர ,கெட்டதுக்கு முன்னுதாரணமா இருந்துடக்கூடாது காயத்திரி.”

“…”

“பணக்காரியா தங்கச்சி வாழறாங்கற காரணத்துக்காக உன் மாமனார் வயித்துக்கு ஊத்தற கஞ்சிய மிச்சம்பண்ணி பணக்காரி ஆயிடலாம்னு நினைக்கிறது எந்த ஜென்மத்திலும் முடியாத காரியம்.”

“…”

“திட்டம் போட்டு கடுமையா உழைக்கோணும். கணவனை மட்டம் தட்டிப்பேசாம அவங்க செய்யற காரியத்த தட்டிக்கொடுத்து ஊக்குவிக்கோணும். வெறும் பிடிவாத குணத்தால எதையும் சாதிக்க முடியாது. கடுமையான பேச்சால சாதிக்க முடியாததை கனிவான பேச்சால சாதிச்சிடலாம்.”

தன் தாயின் அன்பான பக்குவப்பட்ட பேச்சால் தன் மனம் தனக்குள் உள்ள விபரீத ஆசைகளை களையெடுப்பதைக்காயத்திரியால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

இது வரை மற்றவர்களிடம் மட்டுமே குறை கண்டு பிடித்து வந்த தன் மனம் தனக்குள் இருந்த குறைகளை கணக்குப்போட்ட போது வேதனைப்பட்டது.

வாழ்க்கை பணம் சம்மந்தப்பட்டது என்பது மாறி இன்று மனம் சம்மந்தப்பட்டது என்பதை உறுதியாக்கிக்கொண்டாள்.

விழுதுகளை நம்பி வேருக்கு தண்ணீர் ஊற்ற மறந்து விட்டதை எண்ணி வருந்தினாள்.

உடனே ஒரு முடிவுக்கு வந்தவளாய் தன் தாய், தந்தையுடன் கணவன் முத்துராமனையும் அழைத்துக்கொண்டு தன் மாமனார் மூக்கையனை தன் வீட்டிற்கு அழைத்து வர பிறந்த வீடு நோக்கி புறப்பட்டாள் காயத்திரி.

முத்துராமன் மகிழ்ச்சியோடு தன் மனைவியுடன் சென்றான்.

(21.11.1997ல் மாலை முரசு நாளிதழில் பரிசு கதை பகுதியில் வெளியான எனது சிறுகதை)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *