பிஞ்சுகளும் போரிடும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 5, 2022
பார்வையிட்டோர்: 5,933 
 
 

(2008ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வழக்கம் போல் அந்த நேரத்தில் தான் பரிமளம் பாட்டி விழித்துக்கெண்டாள். பக்கத்தில் ராஜி படுத்திருந்தான். வீடு பூராவும் ஈரமாகி சுவரெல்லாம் – தரையெல்லாம் குளிர்ந்து கிடந்ததால், கிழிந்த சாக்குகள் இரண்டை கீழே போட்டு, அதன் மேல் கால்களையும் கைகளையும் உள்ளுக்குள் மடக்கிக் கொண்டு சுருண்டு ஒடுங்கிப் படுத்திருந்தாள்.

வாயில் கோழை வடிய, குழந்தை போல் அமைதியாக உறங்கும் இவள்தான் – இந்தச் சிறுமிதான். தன்னைக் காப்பாற்றுகிறாள் என்பதை நினைத்து, ஒரு சோகப் பெருமூச்சுடன் எழுந்து நெட்டி முறித்துக் கொண்டாள் பாட்டி.

ரொம்பத் தொலை தூதரத்தில் ஊதப்படும் ஏதோ ஓர் ஆலையிள் சங்கு சப்தம் கேட்டது. மூன்று மணிச் சங்கு. கதவை இழுத்தான்.

வாடைக் காற்று ஓர் ஆளைப்போல வந்து மோதியது. உடலெல்லாம் குளிரால் ரோமாஞ்சலி செய்தது. இருள் கும்மென்றிருந்து மிரட்டுகிறது.

இன்னும் தூறல் விடுகிறது. இரவெல்லாம் மழை பாட்டம் பாட்டமாக வந்து பெய்தும்… அதன் ஆங்காரம் தீராமல் இன்னும் தூறுகிறது. இன்று மட்டுமா, மழை? இந்த இரு நாட்களாக விடாமல் பெய்கிறது. ஆறுகளில் வெள்ளம், ஓடைகளில் எல்லாம் மூழங்கிக் கொண்டு நீர்ப்பெருக்கு.

இந்த இழவெடுத்த மழை, எதுக்குத்தான் இப்படிப் பெஞ்சு தொலையுதோ …. எதை எதை பலி கொண்டு நிக்கப் போகுதோ…. என்று பரிமளம் பாட்டி, உள்ளார்ந்த பீதியுடன் முணுமுணுத்தாள்.

அவள் வயசில் பார்த்த மழையின் அனுபவங்கள் நினைவுக்கு வந்தன. இடிந்த குடிசைகள்…. இறந்த மனிதர்கள்… மனித உழைப்பால் செழிப்படைந்த எத்தனையோ நிலங்கள் வெள்ளத்தால் பிரட்டியடிக்கப்பட்டு, வெறும் மணல் காடாக மாறிப்போன கொடுமைகள்.

அட , மனுஷன் வம்பாடு பட்டு பூமியிலே எத்தனையோ ஆக்கிவைச்சாலும் வெள்ளமோ , நெருப்போ, வறட்சியோ வந்து அத்தனையையும் மொத்தமாய்ச் சீர்குலைத்து சின்னாபின்னப்படுத்தி சர்வ நாசப்படுத்தி விட்டுப் போய் விடுகிறதே. ஆனாலும் மனுஷன் ஓய்றதில்லை. சலிக்கிறதில்லை மறுபடியும் அத்தனையையும் உருவாக்குகிறான். அதைவிட அழகா – உயர்வா பரிமளம் பாட்டி நினைவுகளை உலுப்பி உதறிவிட்டு, நரைத்துப் போன குட்டை ரோமங்களை, அடித்து உதறி முடிந்து கொண்டு அடுப்பை மூட்டினாள் பாத்திரங்களை விளக்கினாள். பேத்திக்குத் தேவையான சாதத்தை அலுமினிய தூக்குச் சட்டியில் வைத்து மூடினாள்.

— இன்னும் கொஞ்ச நேரத்தில் பஸ் வந்து விடும். வந்தவுடன் ஹாரன் அடிப்பான். இப்பப்போற பேத்தி….. பெறகு சாயங்காலம் அஞ்சு மணிக்குத்தான் வந்து சேரும், பாவம் சின்னப்புள்ளை மகள் வவுத்துப் புள்ளை வர்ர மார்கழி வந்தா பதினொரு வயசாகப் போகுது. சின்னஞ் சிறுசு பூமொட்டுப் போல, ஆனா…. இந்த வயசுலேயும் இந்தப் புள்ளை உழைக்க வேண்டியிருக்கு. அதுவும் கோழி கூப்பிடப்போய்… கோழி அடையிற நேரத்துக்குத் திரும்பி வரணும். அவ்வளவு பொழுதும் உழைக்க வேண்டியிருக்கு.

நினைவுகள், நெஞ்சுக்குள் பின்னலாடிக் கொண்டிருந்தன. நேரமாயிடுச்சு என்ற நினைப்புடன், பேத்தியை உசுப்பினாள். எம்மா…. கண்ணு …. ஏய் கண்ணு … ராஜி மெல்ல நெளிந்தாள். சிணுங்கினாள்.

என்ன ஆச்சி ….. போ அங்கிட்டு என்று சிணுங்கி சீறிவிட்டு மறுபடியும் ஒடுங்கிக் கொண்டாள்.

கண்ணு நேரமாயிடுச்சும்மா….. எந்தி கண்ணு …. பஸ் வர்ரதுக்குள்ளே பல்லை விளக்கி சாப்பிட்டுக்கோம்மா…. எந்திம்மா கண்ணு ..

பரிமளம் பாட்டிக்கு இவள் என்றும் கண்ணுதான். குழந்தையாக இருந்த நாளில் கொஞ்சிய கொஞ்சல் வார்த்தைகளே, இன்றும் அவளுக்குப் பெயர் ஆகிவிட்டது. ராஜி என்ற வார்த்தை , பரிமளம் பாட்டியின் உதடுகளைத் தாண்டியதே கிடையாது

கண்ணு நீண்ட மறுப்புக்கள், சிணுங்கல்களுக்குப் பிறகு கண் விழித்தாள்.

என்ன ஆச்சி, நேரமாயிடுச்சா? அலங்க மலங்க விழித்துக் கொண்டு கேட்டாள்.

ஆமாண்டிக் கண்ணு. ரொம்ப கூதலடிக்குது ஆச்சி.

என்ன செய்றது? ஆண்டவன் நம்பள அப்படி வைச்சுட்டானே. கூதல்லேயும், மழைக் கொடுமையிலேயும் சின்னஞ்சிறு குருத்து நீ போய் உழைச்சு… நாமெ பொழைக்கணும்னு எத்தாணி பிடிச்சு எழுதிட்டானே…

சரி ஆச்சி… சாம்பலெடு பல்லை விளக்கி, முகம் கழுவினாள். தலைக்கு எண்ணெய் வைத்து சீவி, சடை போட்டுக்கொண்டாள். எண்ணெய் மின்னும் முகத்தைப் பாவாடையால் அழுந்தத் துடைத்துக்கொண்டாள்.

வேறு பாவாடையும், சட்டையும் போட்டுக்கொண்டாள். ஒரு மஞ்சள் நிறத்துணியை தாவணியாகப் போட்டுக்கொண்டாள். தாவணி தேவையில்லைதான். அதற்கான வயசோ, உடலோ இன்னும் வரவில்லைதான் – ஆயினும் அவளை விட சிறிய வயதுப் பிளைகளெல்லாம் தாவணி போடுவதால், இவளும் போட வேண்டியிருக்கிறது.

இவள் தாவணி சுற்றி ஆழகு பார்ப்பதைப் பார்க்கும் போதெல்லாம் பாட்டி பொக்கை வாயில் பூ பூத்தது போல குறுநகை வெடிக்கும்.

தாவணியும் இவளும் மரப்பொம்மைக்கு துணி சுத்தி வைச்சது மாதிரி என்று மனதுக்குள் நினைத்துக் கொள்வாள். என்னென்னவோ பழைய நினைவுகள்.

சோறு வை ஆச்சி.

வைச்சிருக்கேன் கண்ணு…. சாப்பிடு.

வட்டில் முன் ராஜி அமர்ந்தாள். அவள் சாப்பிடுவதையே பார்த்துக்கொண்டிருந்த பாட்டி, தனது மகளை நினைத்துக்கொண்டாள்.

அவளும் இப்படித்தான் ஆம்பளை மாதிரி சம்மணம் கூட்டி உட்கார்ந்துதான் சாப்பிடுவாள்… அடியே எல்லா பொம்பளைக மாதிரி உக்காந்து சாப்பிடு என்று எத்தனை தடவை கண்டித்துச் சொன்னாலும்…

ஊஹூம்….. எப்பவும் இப்படித்தான். ஒரு காலை மடக்கி உள்ளுக்குள் வைத்து, ஒரு காலை குத்துக்காலாக நிற்க வைத்துச் சாப்பிடச் சொன்னால்…… கால் வலிக்கும் என்பாள். சாப்பிட்டாப்புலேயேயில்லே என்பாள்.

அவளைப்போலவே இவளும்…. இவளை இருந்து பார்க்க குடுத்து வைக்காமெ நீ போய்ட்டயே….. எம் மகளே

நான் இன்னும் கிடக்கிறேன். அவள் வாழ்ந்து எல்லாவற்றையும் அனுபவித்து முடிச்சவள் போலப் போய்விட்டாள்.

புருஷன் செத்த பிறகும் – காட்டு வேலையா செய்து அவளை எப்படியெல்லாம் வளர்த்தேன். அருமையா பெருமையா வளர்த்தேன். ஊர்மெய்ச்ச ஒருத்தன் கையிலே பிடிச்சுக் குடுத்துடணும்னு எவ்வளவு அசைப்பட்டேன். என்ன அரும்பாடுபட்டு அரைக் காசும் முழுக்காசுமா சித்தெறும்பு சேர்த்தாப்புலே சேர்த்து வைச்சேன்….

அவளுக்குக் கொடுத்து வைக்கல. எவனோ ஒருத்தனோட ஒரு நா திடுதிப்புனு ஓடிப்போயிட்டாள். என்னதான் அவன் மேலே ஆசைப்பட்டாலும், பெத்து வளர்த்த ஒரு கிழவியை தவிக்க விட்டுட்டுப் போக, அவளுக்கு எப்படித்தான் மனசு வந்துச்சோ .

போனது போனாளே….. இருந்து வாழக்கூடாதா? என்னதான் எளிய சாதியாயிருக்கட்டுமே… அவனும் ஆம்பளைதானே. ஆசைப்படுறதுக்கு முந்தியில்லே அதைப்பத்தியெல்லாம் தெரிஞ்சிருக்கணும்.

அவனோட பழகும்ேெபாது, ஒரு ஆம்பளையா மட்டும் தோணிருக்கு, ஜாதி தோணலே. ஆசைப்பட்டா ஓடிப்போயிட்டா. ரெண்டு வருஷம் கழிச்சு அவன், கிராமத்திலேயிருக்கிற அம்மா வீட்டுக்குப் போனப்போ…

அங்கேதான் காலமெல்லாம் இருக்கணும்னு சொன்னப்போ அந்த அரிஜனச் சேரி… சுற்றிலும் பன்றிகளின் உறுமல்கள், அவர்களின் அடிமைத்தனம்… நாலாந்திர மனிதர்களாக நடத்தப்படும் நிலைமை.

அந்த மாதிரியான குடும்பத்தில், ஒரு மருகளாக இவளால் வாழ முடியவில்லை . மனமெல்லாம் அருவருப்பு, சண்டை …. கசகசப்பு…. அடி…. அழுகை…..

மூன்றாம் மாசமே ஓடி வந்து மடியில் விழுந்து அழுதாள். அப்போது அவளுக்கு வயிற்றில் மூன்று மாதம். சமாதானப்படுத்தி அழைத்துப்போக வந்த கணவனை…. சாதியைச் சொல்லி வைது அனுப்பிவிட்டாள்.

போனவன்… போன ஏழாம் மாதம், ஒரு விபத்தில் போயே போய்விட்டான்.

இவளும் குழந்தையைப் பெற்றுப் போட்டுவிட்டு, அத்தோடு தன் கடமை முடிந்த மாதிரி பொசுக்கென்று போய்விட்டாள்.

நாதியத்த கிழவியாய்க் கிடந்த என் கையிலே, என் பேத்தி ஒரு பூவைப்போல….. எனக்கொரு கடமையாக – எனக்கொரு பற்றுக்கோலாக…..

ஆச்சி….. என்ன தூங்குதியா?

ஆ…. ஆங் திடும்மென்று நினைவுகளிலிருந்து அறுபட்டு வெளிப்பட்டாள். இல்லேம்மா கண்ணு என்ற பாட்டி, காய்ந்த உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டாள். சுருக்கங்களுக்குள் இடுங்கிக் கிடந்த விழிகளில் நீர்க் கசிவு மனசின் சோகங்களை பெருமூச்சாக்கி வெளியிட்டாள்.

வெளியே வந்து எட்டிப் பார்த்தாள். மேலே இருண்டு கிடந்தது. மேகங்கள் பூதங்களாக அடர்ந்து நின்று ஒரு வெள்ளி யைக்கூட கண்ணில் காட்ட மறுத்தன. லேசாக ஒரு காற்று ஈரத்துடன் வீசியது.

சிவகாசி நாகத்தின் மின் விளக்குகள், நட்சத்திரங்களாகத் தெரிந்தன.

சற்று நேரத்திற்கெல்லாம் சடசட வென்று மழை பெய்ய ஆரம்பித்தது. பூமியின் மீது பழி தீர்ப்பது போல ஆக்ரோஷமாக மழை சடசடத்தது. ராத்திரி பூராவும் பெய்த மழை போதாதென்று…. இந்தப் பாட்டம் சற்று பெரிதாக நீண்டது.

மழை நிற்கவும், பஸ் வரவும் சரியாக இருந்தது. ஒரு ராட்ஸச தீப்பெட்டித் தொழிற்சாலைக்கு சொந்தமான பஸ்.

குழந்தைகளின் உழைப்பையெல்லாம் மலிவான விலைக்கு வாங்கி, லாபமடைவதற்காகப் பஸ்ஸை அனுப்பி வைப்பார்கள். குழந்தைகளைப் பிடிக்க.

பஸ் நிறைய குழந்தைகளை புளிச்சிப்பம் போல அடைத்துச் செல்வார்கள். மிருகங்களைப்போல வேலை வாங்குவார்கள். வாரச் சம்பளம் அற்பச் சம்பளம்.

காலை ஐந்து மணி முதல் மாலை நான்கு மணி வரை வேலை செய்தால் வாரத்திற்கு ஒரு குழந்தைக்கு 7 ரூபாய் 10 ரூபாய்…. அதிகபட்சம் 15 ரூபாய்தான்.

குழந்தை பிடிப்பவனைப்போலவே, பஸ் கிராமத்திற்குள் நுழைந்தது. சகதியை வாரியடித்தது. டிரைவர் ஹார்னை அழுத்தினார். ஊரெல்லாம் அலறியது.

குழந்தைகள் குதூகலமாக ஓடி வந்து ஏறினர். உட்கார இடம் பிடிக்க – ஜன்னலோரத்தில் இடம்பிடிக்கவென்று முண்டியடித்துக் கொண்டு ஏறினர்.

ஆச்சி நா வரட்டுமா…?

போய்ட்டுவா….. கண்ணு என்றாள். ராஜி தூக்குச் சட்டியுடன் விரைந்தாள். பாட்டியும் பின்னாலேயே சென்றாள்.

சாக்கிரதையா போய்ட்டு வாம்மா…. யார்கூடவும் சண்டை போடாதேம்மா… பத்திரமா போய்விட்டு வாம்மா. ஆளுக்கு முந்தி எங்கயும் ஓடாதம்மா…. நல்லபடியா போயிட்டு வாம்மா…. நா இருக்குறதே ஒன்னை நம்பித்தான் கண்ணு.. சாக்கிரதையா போய்ட்டு வாம்மா..

வாய் வலிக்காமல் ஓயாமல் சொல்லிக் கொண்டே, பின்னாலேயே வந்தாள். சரியாச்சி….. ஆட்டும் ஆச்சி என்று எந்திரமாக எதிரொலித்தவாறே முன்னே ஒரு முயலைப்போல் ஓடினாள்.

பஸ்சுக்குள் ஏறிக்கொண்டாள். பூமியைப் புண்ணாக்கிக் கொண்டு சகதியில் தடம் பதித்துக்கொண்டு பஸ் கிராமத்தைக் கடந்தது.

பாட்டி வீட்டுக்குத் திரும்பினாள். சகதி காலுக்கடியில் நெளிந்தது, குளிர்ந்தது. பேத்தியை அனுப்பிவிட்டு வீட்டுக்கு வரும்போது அவள் மனதில் ஒரு இழப்பின் சோகம் தோன்றியது. குற்ற உணர்வும் நெஞ்சில் முள்ளாக உறுத்தியது.

பேத்தி-சின்னஞ்சிறு….. படிச்சிக்கிட்டு கவலையறியாமல் வளர வேண்டிய வய….. இந்த வயசில் சூரியனைப் பாராத உழைப்பு உழைச்சு உயிர் வாழவேண்டிய அவலம்…..

வாழ்க்கைன்னாலே போராட்டம் தானே ஒவ்வொரு நாளும் பேராட்டம், வாழ்க்கைங்கிறது எவ்வளவு சிரமமா – போராட்டமா நமக்கு மட்டும் வாய்க்கிறதே….. இதென்ன கொடுமை….

பணமும், வசதியும் வாழ்கிற மகாராஜாமார்கள், எவ்வளவு சந்தோஷமாக – சாதாரணமாக வாழ்கிறார்கள். அவர்கள் வீட்டுக் குழந்தைகளெல்லாம், அன்றலர்ந்த ரோஜாக்களாகத் திரிகிறார்களே…. அவர்களின் பளபளப்பான உடைகளும், பள்ளிக்குச் செல்லும் அழகும்…. அவர்களின் குதூகலப் பேச்சின் இனிய குரல்களும்…. உல்லாசமும்…

நம்ம வீட்டுக் குழந்தைகளுக்கு மட்டும் ஏன் இப்படி? தள்ளித் திரிய வேண்டிய பிஞ்சுப் பருவத்தில் கூட வாழ்க்கைப் பிரச்சனைகளைத் சுமந்து திரிய வேண்டியர்வகளாக – மாடாக உழைக்க வேண்டியவர்களாக – வாழ்க்கையின் அற்ப சுகங்களைவிட அனுபவிக்க முடியாதவர்களாக, சே!

என்ன பொழப்பு இது. ஆண்டவனுக்கு எதுக்கு இந்த ஓரவஞ்சம்.

கிழவி சிந்தனைகள் நெஞ்சத்தை அழுத்த வீட்டுக்குள் நுழைந்த வளுக்கு, என்னவோ அழ வேண்டும் போல மனதெல்லாம் குமுறியது….

நொந்து போன இருதயத்திற்குள்ளிருந்து பதுங்கிக் கிடந்த நினைவுகள் புலம்பலாக – அழுகையாக வெளிப்பட்டது. அது, நெஞ்சைப் பிளக்கும் சோகத்துடன் கவிதையாக – இலக்கியமாக ஒலித்தது.

தம் வாழக்கையை – அதன் இயக்கத்தை – சிரமத்தை – துயரத்தை – இன்பத்தை நம்பிக்கையை எல்லாம் சுமந்த அர்த்தங்கள் பொதிந்த எளிய வாசகக் கோர்வைகளாக – இசையெடுத்து, குரலெடுத்துப் பாடும் போது, இயல்பாக, நேர்த்தியான கோர்வைகளாக – கவிதைகளாக – மாறிய அந்தப் புலம்பல் ஓய்ந்து – அவளும் ஓய்ந்து….

ஆண்டவனே எனக்கின்னு இருக்கிற ஒரே பாசத்தை – ஆதரவை – நீ தான் எந்தக் குறைவுமில்லாமெ காப்பாத்தணும் என்ற பிரார்த்தனையுடன் படுத்துக்கொண்டாள்.

கண்களின் ஓரத்தில் நீர் வழிந்தது.

அந்தப் பஸ் விரைந்தது. அதன் வெளிச்சம் ஈரமாகிக் கிடந்த தார்சாலையின் கறுப்பின் மினு மினுப்பைக் காட்டிக்கொண்டே சென்றது. ஈசல்கள் வெளிச்சத்தில் பறந்தன.

பஸ்ஸுக்குள் குழந்தைகள், சீட்டுகளில் நெரிசலாக அமர்ந்திருந்தனர். சீட்டுகளின் இடைவெளிகளிலும் குழந்தைகள் காற்று நுழைய இடமின்றி அடைக்கப்பட்டிருந்தனர். 10 வயதிலிருந்து 16,17 வயசு வரை முழுக்க சிறுவர் – சிறுமிகள்.

அந்த நகரத்தை நெருங்க, இன்னும் ஓரிரு மைல்கள் தான், இருட்டு கருப்பாக அப்பிக் கொண்டிருந்தது. மழை நின்றுவிட்டது. தார்ச்சாலையின் குண்டு குழிக்குள் பஸ் விழுந்து எழும்போதெல்லாம் ஏற்படும் குலுங்கலில், குழந்தைகள் அலறினர். சிரித்தனர், கூச்சலிட்டனர்.

ஓர் ஓடை குறுக்கிட்டது. அது ஒரு கிராமத்தின் கரையாக இருந்தது அந்த ஓடையில் வெள்ளம், பத்து இருபது நாட்களாக, அடை மழை பிடித்த நாளிலிருந்து அந்த ஓடையில் தண்ணீர் ஓடத்தான் செய்யும்.

ரொம்பக் கொஞ்சமாக வேகமின்றி ஓடும். ஆனால் இன்று – தண்ணீர் ரொம்பப் பெரிய வெள்ளமாக ஓடியது.

அக்கரைக்கும் – இக்கரைக்கும் கொள்ளாமல் – செம்மண்ணில் நனைந்த நீராக – பெருத்த சுழல்களும், வேகமும் கொண்ட பெரு வெள்ளமாக ஓடியது. குழந்தைகள் சிரித்தனர். கூச்சலிட்டனர். ஏதோ ஒரு புதிதைக் கண்ட அதிசயத்தில் குதூகலித்தனர்.

ராஜி பயந்தாள். அடேயப்பா, எம்புட்டு பெரிய வெள்ளம், டிரைவர். திகைத்தார். ஓடு பாலம்தான். இறங்கலாமா கூடாதா யோசித்தார்.

ராத்திரி பூராவும் பெய்த மழையைச் சுட்டிக்காட்டி இன்னிக்கு பஸ் எடுக்கவா என்று, தான் தயங்கிதையும் – ஆர்டர்களுக்கு சரக்கு அனுப்பியாகணும். என்ன ஆனாலும் சரி, எவ்வளவு சிரமப்பட்டாலும் சரி, வண்டியை எடுத்துப்போய் ஆள்களை கூட்டிவிட்டு வரணும். இது முதலாளியோட கடுமையான உத்தரவு என்று மேனேஜர் கடுமையுடன் அடித்துக் கூறியதையும் நினைத்துக் கொண்டார் டிரைவர்.

ஓடையில், எந்தக் காலமில்லாத அளவில் ஓடும் வெள்ளத்தின் நிலைமையைப் பார்க்க எழுந்த கிராமத்தினர் சிலர், டிரைவரிடம் எச்சரித்தனர்.

ரொம்ப ஆபத்து. இறங்க வேண்டாம், 150க்கு மேலே குழந்தை இருக்கு விளையாடக்கூடாது. என்று எச்சரித்தனர்.

ஆனால் டிரைவருக்கு மேனேஜரின் கண்டிப்பு மனசுக்குள் பெரிதாக ஒலித்தது. இப்ப தயங்கினா… வேலை போனாலும் போயிடுமே என்கிற உதைப்பு கண்டக்டருக்கு அதே நிலை.

பஸ்ஸை ஸ்டார்ட் செய்து விட்டார். ஓடைக்குள் ஒரு பாலத்தில் வண்டியை இறக்கினார். ஒரு தடவைக்கு மூன்று தடவை மாரியம்மாளை வணங்கிக்கொண்டார்.

ஹெட்லைட்டின் வெளிச்சம் வெள்ளத்தில் பாய்ந்தது. இழுப்பு அதிக வலுவுள்ளதாக இருந்தது. வெள்ளத்தின் இரைச்சலும், அச்சுறுத்தும்படி பெரிதாகி – மனசில் பீதி ஏற்படுத்தும்படி இருந்தது.

பஸ் உறுமலுடன் நீருக்குள் இறங்கியது. ஓடுபாலம் எது. ஒன்றும் புரியவில்லை. பத்து வருஷமாக இந்தப் பாலத்தில் போய் வந்த அனுபவத்தில் – ஒரு உத்தேசமாக ஓடினார். நீருக்குள், பாலத்தின் பாதையைத் தீர்மானிப்பது, கஷ்டமாகத்தான் இருந்தது.

வண்டி மெதுவாக நகர்ந்தது. நீருக்குள் சன்னஞ் சன்னமாக – குழந்தைகள் பயத்தில் உறைந்து போய் – மயான அமைதியை ஏற்படுத்தி இருந்தனர். வண்டிக்குள் தண்ணீர் புக ஆரம்பித்தது.

சக்கரம், தடக்கென்று ஏதோ ஒரு கிடங்குக்குள் விழுந்ததைப் போலிருந்தது.

டிரைவர் பதறிப்போய், பிரேக் போட்டார்.

வண்டியை பின்னுக்கு எடுக்க முயன்றார். ஊஹூம்…. முடியவில்லை . முதல் தடவை, 2வது 3வது தடவை, முடியவில்லை . டிரைவருக்கு உடலெல்லாம் வியர்த்துக் கொட்டியது.

என்னண்ணே …. என்ன ஆச்சு… முன்வீல் பாலத்தைக் கடந்து போய் நின்னுக்கிச்சு லெப்ட்டா, ரைட்டா?

ரைட்தான்.

பேக்லே எடேன்.

முடியலே. வீல் வசமாகப் போய் சிக்கிக்கிச்சு.

அய்யய்யோ, இப்ப என்ன செய்றது? பின்னாடியும், முன்னாடியும் வெள்ளம், பஸ்ஸை ஆழத்துலே கொண்ணாந்து நிப்பாட்டிட்டியே. பஸ்ஸுக்குள்ளேயெல்லாம் தண்ணி வர்ரதே….

நா என்ன செய்ய….? வண்டிக்குள்ளே தண்ணி ரொம்ப வருதே….

அடக்கடவுளே இப்ப என்ன செய்றது? சண்டாளனுங்க முதலாளிமார் அவுங்க பெண்டாட்டி புள்ளைகளோட ஏர்க்கண்டிஷன்லே படுத்துக்கிடப்பான். அவங்களுக்கு உழைச்ச நம்ம குடும்பங்கள் தான் தெருவிலே நிக்கும். அஞ்சு பைசாகூட குடுக்க மாட்டான். படுபாவி டிரைவரின் பயம், குருட்டுக் கோபமாக வெளிப்பட்டது.

குழந்தைகள், பயத்தால் நெஞ்சடைத்துக் கிடந்தார்கள், நீர் வண்டிக்குள் பெருகப் பெருக பயத்துடன் அழுக ஆரம்பித்தனர். அலறினர். ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்துக்கொண்டனர். மரண பீதி அவர்கள் முகத்தில் ஒரு கொடிய நிழலாகப் பதிந்தது.

ஓரிரு வெடிப்பான சிறுவர்கள், பஸ்ஸை விட்டு வெளியில் வெள்ளத்தில் பாய்ந்தனர். பஸ்ஸுக்குள் கிடந்து சாவதைவிட வெள்ளத்தில் போராடிச் சாகலாமே என்கிற அசுரத் துணிச்சல், மரண எல்லையில் எந்த உயிர்ப் பிராணிக்கும் ஏற்படும் பேராவேசம்.

டிரைவர், கண்டக்டரைத் திட்டினான். எலே….. எவனையும் வெளியே விடாதே. போக விடாதேடா, தடிமாடு

ஏன்

பஸ்ஸுக்குள்ளே லோடு குறைஞ்சா…. வெள்ளம் பஸ்ஸையும் இழுத்துட்டு ஓட ஆரம்பிக்கும்….. நாமும் அரோகராதான். முட்டாள் முண்டம்.

போகாதீங்க யாரும் போகாதீங்க. போனீங்கன்னா… வெள்ளத்திலே செத்து மிதந்து போவீ…

போகாதீக என்ற அபாயக் குரலே, அவர்கைைளப் போக வைத்தது. தடுத்த கண்டக்டரை அடித்துத் தள்ளிவிட்டு, ஒவ்வொரு குழந்தையும் சாவின் விளிம்பில் விளையும் அபாரத் துணிச்சலில் நீருக்குள் – உயிர்ப்பசி கொண்ட வெள்ளத்தில் பாய்ந்தனர்.

அவர்கள் இந்த வயதில் எத்தனை சண்டை போட வேண்டியிருக்கிறது. உயிர் வளர்க்க – வயிறு வளர்க்க – பிழைப்பு இடத்தில் சண்டைகள். வாழ்க்கையுடன் இந்தப் பிஞ்சுகளின் மல்லுக்கட்டு, இந்தச் சமுதாயத்தின் புல்லுருவிகளுடன் போர் நடத்த வேண்டிய நிலைமை.

இதோ… அதன் தொடர்ச்சியாக, உயிருக்காக வெள்ளத்துடன் மல்லுக்கட்டு, உக்ரமமான மல்லுக்கட்டு, மனித இனமே வெட்கப்பட்டுத் தலை கவிழச் செய்யும் மல்லுக்கட்டு.

ராஜியும் நீருக்குள் குதித்தாள். குதிக்கும்போது, பஸ் தலையில் அடித்துவிட்டது. யாருடைய கையையோ பற்றியிருந்தான். நீருக்குள் விழவும் அந்தக் கையும் ஒரு வேகத்துடன் உருவிக் கொண்டது.

மரணப் பயத்தில் குழந்தைகளின் அலறல், கூச்சல், ஐய்யோ ஐயய்யோ என்ற இரும்பையும் உருக்கும் இளசுகளின் சோகக் குரல்கள்.

ராஜி….ஏய் விஜயா…… ஏய் ரெட்டை வால்… ஏய் குட்டை ஏய் பாஸ்கர் ஏய் மாலக்கா.

ஒருவரையொருவர் உதவிக்கு அழைத்துக்கொள்ள யாருமே யாருக்கும் உதவ முடியாமல் – தன்னைத்தானே காப்பாற்றிக்கொள்ள தெரியமால் – இருட்டில் கூக்குரலிட…..

உயிர்ப்பசி கொண்ட வெறியடன், அசுர வேகத்தில் வெள்ளம் அவர்களை இழுத்துச் செல்ல.

ராஜிக்கு நீந்தத் தெரியும். ஆனால் நீந்த முடியவில்லை . வீசியெறியப்பட்ட வேகத்தில் வெள்ளம் இழுக்கிறது. எங்கோ புதை குழிக்குள் ஆழ்வதைப் போன்ற பீதியில் மனசு மருண்டு, நீந்திக் கரை வராமல் தவிக்கிறாள்.

ஏதோ ஒரு வேலி மரம் உருண்டு வரும் ராஜிவை தடுக்கிறது. ஆவலுடன் பிடித்துக் கொள்ள நீருக்குள் கைகளால் துளாவ வேலி முட்கள் கையைக் கீற – வெள்ளம் அதற்குள் வேறு எங்கோ உருட்டி எறிய…..

ஆச்சி ஐயய்யோ ஆச்சி என்று உரத்த குரலில் கூச்சலிடுகிறாள். பயத்தில் நனைந்துபோன மனது.

நீர் புரட்டும் போதெல்லாம் மடக் மடக்கென்று தண்ணீரைக் குடித்து விடுகிறாள்.

ஓடு பாலத்தை விட்டு, அவர்களை ரொம்பத் தூரம் வெள்ளம் இழுத்துக் கொண்டு வந்துவிட்டது.

ராஜியின் கண்களுக்கு தற்செயலாக அது தெரிந்துவிட்டது.

அதோ, ஓடையின் வடகரையில் ஓர் ஆலமரம்! அதன் ஒரு கிளை சற்று சாய்ந்து ஓடையின் மேல் நீண்டிருந்தது. நீரில்லாத காலங்களில் அந்தக் கிளை எட்டா உயரம் இன்று வெள்ளம் அதன் மட்டத்திற்குச் செல்கிறது. ராஜி பார்த்துக்கொண்டாள்.

எப்படியாவது அதைப் பிடித்துவிட வேண்டும். ஆனால் வெள்ளம் அந்த இடத்தில் எதற்கு சாய்த்து வளைவாக இழுக்கிறது.

ஒரு அசுர பலத்துடன் உடலை தெளித்தாள். கையையும், கலையும், தத்தக்கா புத்தக்கா வென்ற உதைக்கிறாள். நீருடன் மல்லுக்கட்டி நீந்தப் பார்க்கிறாள். மரணத்திலிருந்து தப்பித்து, வாழ்வைப் பற்றிக்கொள்ள கிடைக்கும் கடைசி வாய்ப்பைப் பற்றிக் கொள்ளும் பேராவலுடன் நீந்துகிறாள்.

நீருடன் மல்லுக்கட்டி சோர்ந்து போய்விட்ட உடல், ஒத்துழைக்க மறுக்கிறது. வாழத் துடிக்கும் மனம், வாழ்க்கையின் உயிரான அழைப்பு முயற்சிக்கிறாள் நீந்துகிறாள்.

ராஜி அந்தக் கிளையைப் பற்றி விட்டாள். எப்படியாவது கரைக்குப் போய்விடலாம். அங்கு ஏற்கனவே ஒருத்தியிருக்கிறாள். மாலக்கா…

ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளக்கூட முடியவில்லை. அத்தனைச் சோர்வு. மயங்கிக் கொண்டிருக்கும் நிலை.

ராஜி கிளையைப் பற்றி ஏறப்போனாள். மாலக்கா… ஹுனக் குரலில் சொன்னாள் போகாதே… மேலே பாம்பு இருக்கு…

ஐயோ அவள் மனசு அதிர்ந்தது.

விடியும் வரை இப்படியே கிளைகளைப் பிடித்துக்கொண்டே நீருக்குள் கிடக்கவா? முடியுமா? ஏற்கனவே சோர்ந்த கைகள். மரத்துப் போகாதா? மயங்கிவிட மாட்டோமா…? மனசுக்குள் பயத்தின் அலைகள்

ஆனாலும் வேறு வழியில்லை. விடியும் வனா ? விடியுமா? இவர்களுக்கு விடிவா? விடியத்தான் செய்யும்… விடிஞ்சுதான் ஆகணும்.

விடிந்தால் … ஆட்கள் வருவார்கள். குழந்தைகளைக் காப்பாற்றுவார்கள். செத்து ஒதுங்கிய உடல்களைத் தூக்குவார்கள். ஆட்கள் -டுமா வருவார்கள். நாடே இங்கு வரும். உலதக் குழந்தைகள் ஆண்டல்லவா உலகமே இதுபற்றி ரொம்பப் பேசும். வெட்கப்பட வேண்டும் என்றெல்லாம் விஸ்தாரமாகப் பேசும். ஆனால், குழந்தைகளையும் இரக்கமின்றிச் சுரண்டும் அரக்கத்தனம் மட்டும் இன்னும் கொஞ்ச காலம் வாழும்.

விடிந்தது. ஒரு பாலத்தின் கரையில் மனிதக் கூட்டம். நீருக்குள் பாயும் மனிதர்கள். குழந்தைகளை – சடலங்களை – தேடும் புனிதர்கள்.

கரையில் பெண்களின் ஒப்பாரிகள், அழுகைகள் வரிசையாகக் கிடத்தப்பட்டிருக்கும். பிரேதங்கள் – பிஞ்சுகளின் பிரேதங்கள்.

பார்த்த ஒவ்வொர் உள்ளமும் இந்தப் பரிதாபம் கண்டு கசந்து உருகுகிறது.

பரிமளம் பாட்டிக்கும் செய்தி தெரிந்தது. ஐயய்யோ பாதகத்தி, என்னை விட்டுவிட்டுப் போய்ட்டீயா? என்று நெஞ்சிலும், தலையிலும் அடித்துக்கொண்டே இந்தக் கிராமத்துக்கு அலையக்குலைய வந்தாள்.

நீருக்குள் புதையுண்டு கிடக்கும் பஸ்ஸைப் பார்த்தாள். கரையில் கிடக்கும் பிரேதங்களைப் பார்த்தாள். ஒரு ராட்சஸ வேகத்தில் அவள் விழிகள் பிரேதங்களைப் பார்த்தது. அவளுக்கு ஒன்றுமே பிடிக்கவில்லை. கண்கள் இருண்டன. இந்தக் கோரச் சம்பவத்தின் கொடூரப் பாதிப்பைத் தாங்கமுடியாமல் விழுந்துவிட்டாள். தனது பற்றுக்கோல் இற்றுவிட்டதாக எண்ணி… அவளும் செத்துப் போனாள்.

அங்கே, ஆலமரத்தைப் பற்றி நீருக்குள் அரைப்பிணமாக மிதக்கும் ராஜிக்கும் தனது வாழ்வின் ஆதாரப்பற்றுக்கோல் வெள்ளத்தில் போய்விட்டது இன்னும் தெரியாது. பாவம், அவள் இன்னும் வாழ்வுடன் மல்லுக்கட்டுவாள்.

– கதை இலக்கியமும் உரைநடையும், இளநிலை பட்டப்படிப்பு, முதற் பதிப்பு: 2008, மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *