புத்தாண்டுப் போட்டி

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 14,666 
 

“என்னங்க,ரொம்ப தீவிரமா என்ன யோசிச்சுக்கிட்டுருக்கேங்க? எனக்குத் தீபாவளிக்குத் தான் ஜோ கட்டியிருந்த அம்பதாயிரம் கலர்ஸ் வர்ற பட்டுப்புடவை வாங்கித் தரலே, பொங்கலுக்காச்சும் ஆறாயிரம் கலர்லே பட்டுப்புடவை எடுத்துத் தரத் தானே பிளான் பண்ணறேங்க?”

எதையோ சிந்தித்துக் கொண்டிருந்த கணவன் ராமனாதனிடம் கெளசல்யா பேச்சுக் கொடுத்தாள்.

ஆமா, அதைத் தவிர எனக்கு வேற வேலை இல்லை பாரு. இப்படித் தான் ஜோ ஜோனு அவ விளம்பரத்துலே காட்டின மாதிரி இதயம் நல்லெண்ணெய் கொட்டி சமைச்சே, என்னாச்சு? ஒரே நாள்லே எண்ணெய் தீர்ந்து போச்சு. உனக்கு ஜோ மேல அப்படி என்ன பாசமோ, தெரியலே”

“இல்லேங்க, எல்லாரும் அந்த மாதிரி தான் புடவை எடுக்கிறாங்க. ஜோ கட்டியிருந்த போட்டோ பார்த்தேங்களா? எவ்வளவு நல்லா இருந்தது, வாங்கித் தாங்களேன்”

“ஜோ தர மாட்டாளே”

“ஹ ஹ ஹா, ஜோக்குக்கு சிரிச்சாச்சு. முடிவா என்ன சொல்றேங்க? உங்களை நம்பி வந்தவளுக்கு ஒரு பட்டுப்புடவை எடுத்துத் தந்தா என்னவாம், இந்தக் குடும்பத்துக்கு மாடா உழைச்சு என்ன பிரயோசனம், அக்கம் பக்கத்துலே கேட்டுப் பாருங்க. வீட்டுலே கழுதைய விடக் கேவலமா வேலை பார்க்கிறேன். கடைக்குப் போய் மளிகை, காய்கறி வாங்குறதுலேர்ந்து எல்லா விஷயத்துக்கும் நாயா பேயா அலையறேன். குரங்கு மாதிரி என் மனசு அலை பாயுது”

கெளசல்யா சலித்துக் கொண்டாள்.

“கெளஷிம்மா, உனக்கு உன் பேமிலி ஞாபகம் வந்துடுச்சோ?”

கெளசல்யா புரியாத மாதிரி விழிக்க,

“இல்ல, நாய், பேய், மாடு, கழுதைங்கிறியே, அதான் கேட்டேன், ஊர்லே இருக்கிற உன் அப்பா, அம்மா நினப்பு வந்துச்சோ?னு கேட்டேன்” என்று சொல்லி விட்டு கடகடவென்று சிரித்தார் ராமனாதன்.

“இங்கே என்ன நையாண்டி தர்பாரா நடக்குது? தானே ஜோக் சொல்லி தானே சிரிக்கிறேங்க? எங்க வீட்டைப் பத்தி நக்கல் அடிக்கிற வேலை வேணாம், நாங்களாம் மாடு, கழுதைனா நீங்களும் அதானே”

“கோபப்படும் போது தான் நீ ஜோ மாதிரி இருக்கே”

“(கண்களைச் சிமிட்டியபடியே ஜோ மாதிரி முகத்தில் பலவித பாவங்களைக் கொண்டு வந்து) உண்மையாவா? இப்போவாச்சும் என் அருமை புரிஞ்சா சரி. என்ன பண்ணிக்கிட்டு இருக்கேங்க?”

“யார்க்கிட்டேயும் சொல்லாதே. நான் கதை எழுத முயற்சி பண்றேன்”

வைத்த கண் வாங்காமல் தன்னையே வியப்புடன் பார்த்த மனைவியைப் பார்த்துப் பெருமை பொங்க சிரிக்க,

“ரொம்ப ஆச்சர்யமா இருக்கோ?”

“ஆமாங்க, எனக்கு என்ன ஆச்சர்யம்னா நீங்க கல்யாணத்துக்கு முன்னாடி எனக்குப் போட்ட லெட்டர்லே அவ்வளவு எழுத்துப் பிழை, அதுலேயும் ‘குரிப்பு-எண்ணெய் பிடிச்சுறுக்கா என்பதற்கு வடை தருகனு’ நீங்க பின்குறிப்பு எழுதி இருந்தேங்களே, அதான், நீங்க எப்படி கதை சரி, சொல்லுங்க”

“அதாவது புத்தாண்டு வருதுலே, அதுக்கு எங்க ஆபீஸ்லே பல போட்டிகள் நடக்குது. அதுலே, நான் 2 போட்டியிலே பேர் கொடுத்துருக்கேன். ஒன்னு கதை, இன்னொன்னு கவிதை. இப்போ இப்படி கதை எழுத ஸ்டார்ட் பண்ணினா, நானும் ஹாரிபாட்டர் எழுதின ரெளலிங்கோ, பவுலிங்கோ, அவங்களை மாதிரி பிரபலமாகலாம்லே, பணத்துக்குப் பணம், புகழுக்குப் புகழ். அது மட்டுமில்லே, எனக்குச் சின்ன வயசிலேர்ந்து இப்போ வரை கதை, கவிதை எழுதி பேமஸ் ஆகணும், நிறைய சம்பாதிக்கணும்னு ஆசை, ஆனா என் ஆசை நடக்கலே. இப்போ நல்ல வாய்ப்பு வந்திருக்கு”

“என்ன எழுதலாம்னு இருக்கேங்க? என்ன மாதிரி கதை? என்ன தலைப்பு? குறுங்கதையா? நெடுங்கதையா? அப்புறம் பத்திரிகையிலும் போடுவாங்களா?”

அடுக்கடுக்காய் கேள்விகள் ராமனாதனைத் திருதிருவென முழிக்கச் செய்தது.

“இரு, கற்பனை ஆறு இப்போ தான் பொங்கி வருது. எழுதினோன்ன சொல்லறேன்”

“ஒரு நிமிஷம், நான் இப்போ வந்துடறேன்” என்றபடி வாசலுக்குப் போனாள்.

கெளசல்யா வருவதற்கு முன் இவர்கள் குடும்பத்தைப் பற்றிய சிறு அறிமுகம். ராமனாதன் – கெளசல்யா அன்னியோன்னியமான தம்பதிகள். கணவர் எள் என்றால் மனைவி
எண்ணெயுடன் நிற்பாள். ஆனால் கணவருக்கு எள் தான் தேவையாயிருந்திருக்கும் என்பது தனிக்கதை. நகைச்சுவைக் கதைகளில் வரும் தெனாலிராமன் வேடிக்கையாக ஏதாவது செய்யப் போக நல்ல விதமாக முடியும். ஆனால் கெளசல்யா ஏதாவது நல்ல விதமாக செய்யப் போக வேடிக்கையாக முடியும். இவர்களுக்கு அழகான இரு பெண்குழந்தைகள் ரம்யா, சுகன்யா. ராமனாதன் பார்ப்பதற்குச் சற்று உயரமாக, அழகாக இருப்பார். கெளஷி பார்ப்பதற்கு திரைப்பட நடிகை ஜோதிகா (இப்படி சொல்லவில்லையென்றால் கெளஷி கோபித்துக் கொள்வாள்)போல் அழகாக இருப்பாள்.

சிறிது நேரத்தில் கெளசல்யா சிறுபடையுடன் வந்தாள். ராமனாதன் திருவிழாவில் காணாமல் போன சிறுவனைப் போல விழிக்க, கெளசல்யா கண் ஜாடை காட்டினாள்.

“என்ன எல்லாரும் வந்துருக்கேங்க? நம்ம தெருவிலே ஏதாச்சும் விசேஷமா?”

“நீங்க கதை எழுதறேங்களாமே, அதான் பார்த்துட்டுப் போலாம்னு வந்தோம்” லெட்சுமணன் சொன்னார்.

“இல்லைங்க, இப்போ தான் எழுத உட்கார்ந்தேன். அதுக்குத் தான் வந்தேங்களா? சரி, எழுதி முடிச்சோன்ன கூப்பிட்டுக் காட்டறேன், அதாவது எல்லாரும் கூட்டமா இருந்தேங்கனா, எனக்குக் கற்பனை பொங்காது”

கூட்டத்தை அனுப்புவதற்குள் ராமனாதனுக்குப் போதும் போதும் என்றாகி விட்டது. எல்லாம் கெளஷியின் வேலை தான்.

“என்ன இதெல்லாம்?”

“இல்லைங்க, நான் நம்ம எழுத்தாளர் வேலுவை கூட்டியாரத் தான் போனேன். நான் பரபரனு ஓடிக்கிட்டு இருக்கிறதைப் பார்த்து, மாலதி அக்கா என்னனு கேட்டுச்சு. அதான் அதுக்கு மட்டும் யாருக்கும் சொல்லாதேங்க, ரகசியம்னு நீங்க கதை எழுதற விஷயத்தைச் சொன்னேன். அவங்க யார்கிட்டேயோ ரகசியமா சொல்லி இப்படி எல்லாரும் வந்துட்டாங்க. ஸாரிங்க….”என்று இழுக்க,

“பாருய்யா பாருய்யா இன்னும் புடவை கேக்கறதிலே இருக்கா”(வடிவேலு ஸ்டைலில் சொல்ல)

“அது இல்ல, மன்னிச்சுக்க சொன்னேன். சரி, எழுத்தாளர் வேலு வந்துக்கிட்டு இருக்கார், உங்களைத் தான் அவர் வீட்டுக்கு வரச் சொன்னார். நான் தான் சொன்னேன், அவருக்கு கற்பனை ஆறு ஊத்தெடுத்துப் பொங்கி வழியுதாம். நீங்களே வாங்கனு சொன்னேன், இப்போ வருவார்”

கெளசல்யா சொல்லி முடிக்கவும் எழுத்தாளர் வேலு உள்ளே வரவும் சரியாக இருந்தது.

“வாங்க சார், வணக்கம், எப்படி இருக்கேங்க? உட்காருங்க” நாற்காலியைக் காட்ட, உட்கார்ந்தவாறே உரையாடலைத் துவக்குகிறார்.

“என்னப்பா உன் பேரு ராமனாதனா? ராமசாமியா? ரெண்டு கையிலும் ஏதோ கிறுக்கி வச்சு கஜினி சஞ்சய் ராமசாமியா ஆயிட்டே. தெருவே உன்னைப் பத்தி தான் பேசிக்குது, பெரிய எழுத்தாளர் ஆகிட்டியாமே”

“சார், அது நோட்ஸ் எழுதியிருக்கேன். கதை விஷயம் கண்ணு, காது, மூக்கு, வாய் வச்சு உங்களுக்கு நியூஸ் வந்துருக்கு, இப்போ தான் எழுதவே ஆரம்பிச்சேன், அதாவது எங்க ஆபீஸ்லே ஒரு சிறுகதைப் போட்டி வச்சுருக்காங்க, அதுலே எப்படியும் முதல் பரிசு தட்டிரணும்னு ஒரு வெறி, கதை எழுதி பழக்கமில்லே,அதான், நீங்க என்ன நினைக்கிறேங்க?”

“அப்படியா? கதை எழுதறதுங்கிறது சுலபமானதில்லைனும் சொல்லலாம், சுலபம்னும் சொல்லலாம். கதைக்குக் கரு முக்கியம்னும் சொல்லலாம், கதை தான் முக்கியம்னும் சொல்லலாம்”

“சார் என்ன விசுவோட சொந்தக்காரரா? தெளிவா குழப்பறேங்களே”

தான் அடித்த ஜோக்கிற்கு மனைவி உட்பட எழுத்தாளரும் சேர்ந்து சிரித்ததில் ராமனாதனிற்குப் பரம மகிழ்ச்சி.

“குறும்பைப் பாரேன். கதை எழுத முதல்லே தேவை பேப்பரும் பேனாவும். கொஞ்சம் தனிமை. அப்புறம் புத்தியும் வேணும். யோசிச்சு யோசிச்சு எழுதணும்லே”

“நீங்க சொன்ன எல்லாமே கொஞ்சம் கொஞ்சம் இருக்கு. கதை தான் உதிக்க மாட்டேங்குது. பத்திரிகைகள்லே கதைகள்ளாம் படிக்கும் போது ஈஸியா இருக்கு. எழுதணும்னு உட்கார்ந்தா தான் எழுத்து தான் வார்த்தை முட்டுது” (இந்த முறை குணா பாடல் வசனம் மனதிற்குள் வந்து போக ராமனாதன் தனக்குத் தானே சிரித்துக் கொள்கிறார்)

சார், என்ன சாப்பிடறேங்க?”

“தண்ணி கொடுத்தாக் கூடப் போதும்”

“ஸாரிங்க, என் வீட்டுக்காரர் குடிக்க மாட்டார்.”

“என்ன ராமனாதன் தண்ணி குடிக்க மாட்டேங்களா? ஒரு நாளைக்கு 8 டம்ளர் தண்ணி குடிக்கணும்”

“இல்லை சார், கெளஷி தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க. (கெளஷியைப் பார்த்து), கெளஷி, சார் குடிக்கத் தண்ணி கேக்கிறார், நீ போடற காப்பியையே கொடு”

கெளஷி தன் கண்களாலேயே ராமனாதனை மிரட்டி விட்டு, காப்பி போட்டு எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தாள்.

“(காப்பியை உறிஞ்சிய படியே) சரிப்பா, நான் சில டிப்ஸ் தர்றேன். நோட் பண்ணிக்க. கதைக்கு ரொம்ப முக்கியம் கரு. எப்படி ஒரு தாய் வயித்துலே கரு வளர்ந்து பத்து மாசம் கழிச்சு குழந்தையா வெளியில வருதோ, அது மாதிரி எழுத்தாளர் மனசிலும் ஒரு கரு உருவாகி அதுக்கு ஒரு உயிர் கொடுக்க வேண்டியிருக்கும்”

“சார், அப்படினா என் வீட்டுக்காரர் பத்து மாசம் வெயிட் பண்ணனுமா?”

“ஒரு உதாரணத்துக்குச் சொன்னேன்மா. குழந்தைக்குத் தான் அப்படி. சரியா? நீயும் உன் வீட்டுக்காரரை கொஞ்ச நாளைக்கு டிஸ்டர்ப் பண்ணாதே. எழுத்தாளர்கள் உலகம் தனி உலகம். தனக்குள்ள பேசிப்பாங்க, சிரிச்சுப்பாங்க. புரியுதா?”

பூம்பூம் மாடு தலையாட்டுவதைப் போல கெளஷியும் தலையாட்டினாள்.

“சரி, ராமனாதா, நான் சொல்லறதைத் தெளிவா கேளு. இப்போ நானா எதுவும் சொல்லிக் கொடுத்து நீ எழுதறத விட, நீ எழுதிக்கிட்டு வந்து என்கிட்டே கொடு. ஏன்னா, ஒரு வேளை நீ ரொம்ப திறமைசாலியா இருந்து நான் அதைக் கெடுத்துடக் கூடாதுல்லே. இப்படித் தான் கதை எழுதணும்னு எந்த சட்டமும் இல்லை. நீ எழுது. எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு. நான் கிளம்பறேன். எழுதி முடிச்சோன்ன நான் கரெக்ட் பண்ணித் தாரேன்”

எழுத்தாளர் வேலு செல்ல மனைவியும் குழந்தைகளும் ராமனாதனைத் தொந்தரவு செய்யவில்லை.

ராமனாதனும் யோசித்து யோசித்து ஒரு கதையும் அகப்படவில்லை. கவிதைப் போட்டிக்கு மட்டும் தன் கவிதையைக் கொடுத்தார்.

புத்தாண்டு அன்று மனைவி, குழந்தைகளும் அலுவலகத்திற்கு வர அனுமதிக்கப்பட்டிருந்தனர். ராமனாதன் குடும்பமும் அலுவலகத்தில் நடக்கும் விழாவில் கலந்து கொண்டது. அனைத்துப் போட்டி முடிவுகளும் அறிவிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் விழாவின் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். கவிதைப்போட்டியில் வென்றவர்கள் பெயர்களைப் பறைசாற்றும் போது ராமனாதன் தேர்வின் முடிவிற்குக் காத்திருக்கும் மாணவனைப் போல இறைவனை வேண்டிக்கொண்டும் பரபரவென்றும் இருந்தார். சோதனைக்கு ஆறுதல் பரிசு, மூன்று, இரண்டு, முதல் என்று இறங்குமுகமாகப் பரிசுகள் அறிவிக்கப்பட்டன.

“நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த முதல் பரிசிற்குச் சொந்தக்காரர் மிஸ்டர் ராமனாதன்” மேடையில் குயில் போன்ற குரலுடன் வர்ணனையாளர் கூவ ராமனாதன் போய் பரிசு வாங்கிக் கொண்டார்.

“ஒரு நிமிஷம் மிஸ்டர் ராமனாதன் எழுதின கவிதையை அவர் வாயாலேயே கேட்போமா? பிளீஸ்” மேனேஜர் கேட்க,கூச்சப்பட்டாலும் எவ்வளவு உயர்ந்த வாய்ப்பு என்று பயன்படுத்திக் கொள்கிறார்.

மைக்கில், குரலைச் சரி செய்தவாறே

“என் கவிதைக்குச் சிறு பொழிப்புரை,என்னுடைய கவிதைத் தலைப்பு அரிப்பு. அதாவது காதலன் காதலியின் காதலுக்கு-அன்புக்கு ஏங்கியிருக்கிறான். அவள் நினைவு அவனை வாட்டி எடுக்கும் போது ஒரு கவியாக உருவெடுக்கிறான். அவனைப் பாதித்த விஷயத்தைக் கவிதையாகப் பெயர்க்கிறான்.

“கண்ணே!
சொரிய சொரிய சுகம்
சொரிந்த பின் ரணம்
உன் பார்வையும்
உன் நினைவுகளும்”

காதலன் சொல்கிறான். ” அன்பே! உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது எப்படி அரிப்பு ஏற்படும் போது சொரிந்து கொள்வதால் ஒரு சுகம் கிடைக்குமோ, அப்படி ஒரு சுகமாக இருக்கிறது. ஆனால் உன் பார்வை தந்த காயங்கள், நினைவுகள் தந்த சுமையோ சொரிந்த பின் ஏற்படும் வலியைக் கொடுக்கும் வடுவாக-ரணமாக இருக்கிறது, இது தாங்க என்னோட கவிதை”

மேடையிலிருந்தும் கீழே பார்வையாளர்களிடமிருந்தும் கரவொலி. கெளஷி நடப்பதெல்லாம் கனவா? நனவா? என்று கிள்ளிப் பார்த்துக் கொண்டாள். குழந்தைகளும் கைதட்டி ஆரவாரம் செய்து கொண்டிருந்தனர்.

மேடையில் இவர் கவிதையைக் கேட்ட பிரபலத் தயாரிப்பாளர் ராமனாதனின் மேனேஜரிடன் ஏதோ ரகசியம் பேச, மேனேஜரே இன்னொரு தகவலையும் தெரிவித்தார்.

“எல்லாருக்கும் வணக்கம். ஒரு சந்தோஷமான செய்தியை இந்த வேளையில் உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படறேன். மேடையில் அமர்ந்திருக்கும் தயாரிப்பாளர் நாகு தனது அடுத்தப் படம் காதலைப் பற்றியது என்றும், அதன் கதாநாயகன் கவிதை எழுதுபவன் என்றும், அந்தப் படத்திற்குக் கவிதை எழுத, வசனம் எழுத நம் ராமனாதனையே தேர்ந்தெடுத்து இருக்கிறார் என்பதையும் மகிழ்ச்சியான இந்த வேளையில் தெரிவித்துக் கொள்கிறேன், அதற்கு அட்வான்ஸ் இந்தப் புத்தாண்டு தினத்தில் உங்கள் முன்னாடியே ராமனாதனுக்கு வழங்கப்படுகிறது” என்று ராமனாதனுக்குத் தயாரிப்பாளர் காசோலை வழங்க ராமனாதன் ஒரு கணம் மெய்மறந்து போனார்.

மீண்டும் தன் மன உணர்வை வெளிப்படுத்த ராமனாதனுக்கு வாய்ப்பு கிடைக்க,

“உங்க எல்லாருக்கும் மீண்டும் என் பணிவான வணக்கங்கள். எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்த அலுவலத்திற்கும், என் மனைவி, குழந்தைகளுக்கும்,தயாரிப்பாளருக்கும் நான் இந்த வேளையில் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கேன். நினைவு தெரிஞ்ச நாள் முதலா நான் சிறுகதை எழுதணும், கவிதை எழுதணும்னு ஆசைப்பட்டுருக்கேன். அதுக்கு இப்போ தான் வேளை வந்துருக்கு. அலுவலகம் அறிவிச்ச சிறுகதைப் போட்டியிலே சேர முடியாமப் போச்சு. ஆனா அதைப் பத்தி நான் வருத்தப்படலே. இத்தனை நாளா எனக்குள்ள தூங்கிகிட்டுருந்த ஒரு கவிஞன் இப்போ வெளிப்பட்டுருக்கான். அதை நினைச்சு சந்தோஷப்படறேன். வாழ்க்கையிலே நம்மைச் சுத்தி எத்தனையோ சந்தோஷம் கொட்டிக் கிடக்கு. எத்தனையோ வாய்ப்பு பரவியிருக்கு. ஒரு கதவு மூடியிருக்கேனு கவலைப்படாம உங்க குறிக்கோள்லே நீங்க போயிக்கிட்டே இருந்தேங்கனா இன்னொரு கதவைத் தேவதை திறந்து நம்மை வரவேற்பா. ரொம்ப சந்தோஷமா இருக்கு. புதிய ஆண்டு, புதிய வாழ்க்கை. இப்போ புதிதாகப் பிறந்த மாதிரி இருக்கு. உங்க எல்லாருக்கும் எனக்கு இப்போ கிடைச்ச மாதிரி வாய்ப்பும் வெற்றியும் கிடைக்கணும். கிடைக்கும், நம்பிக்கையோட, வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியையும் ரசிச்சு அனுபவிச்சு வாழுங்க. அது தான் உங்களுக்கு நான் சொல்லும் புத்தாண்டுச் செய்தி. புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த அகிலத்தில் இருக்கும் ஜீவராசிகள் எல்லாவற்றிற்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்”

ராமனாதன் பேசி முடித்தார். அரங்கத்தின் கரவொலி விண்ணை எட்டியிருக்கும்.

–  காயத்ரி[gayathrivenkat2004@yahoo.com] – டிசம்பர் 2005

Print Friendly, PDF & Email

1 thought on “புத்தாண்டுப் போட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *