பூவரச மரத்து நிழல் இதமாக இருந்தது . முத்தையா பனியனுக்கு மேல் போட்டிருந்த துண்டை உதறி முகத்தைத் துடைத்துக் கொண்டான் .
களத்து மேட்டு மூலையில் பூவரச மரத்தின் அடியில் இருந்த திண்டின் மீது துண்டை விரித்து உட்கார்ந்தான் .
“என்ன முத்தையா ! இந்த வருஷம் வெளைச்சல் எப்படி?“
மண் சுவருக்கு மறுபுறம் கந்தசாமி நின்று கொண்டிருந்தார் .
“நல்ல வெளைச்சல்தான் அண்ணாச்சி . எனக்கு வெவரம் தெரிஞ்சு இத்தனை மேனி போனதில்லை . இந்த வருஷம் தண்ணி நல்ல நேரத்தில விட்டான் . உரமும் நல்லா புடிச்சுகிச்சு“
“வெலையும் எக்கச்சக்கமா இருக்குதாம் . நல்ல பார்ட்டியா பார்த்துப் போடு . சவத்துப் பயலுவ ஏமாத்திடுவானுக . “
கந்தசாமி போய் விட்டார் . முத்தையாவுக்கு அப்பா ஞாபகம் வந்தது.
” முத்தையா ! மழை இல்லாம பூமியில வெளைச்சல் சரியில்லைன்னு வித்துடாதே . என்னைக்காவது ஒருநாள் அள்ளித் தரும்.“ அப்பா அடிக்கடி கூறுவார் .
அந்த வருடத்து அமோக விளைச்சலைப் பார்க்க அப்பா இல்லாமல் போய் விட்டாரே என்று நினைத்தான் . அப்பாவின் நினைவில் மனம் கனமாகிப் போனது .
முத்தையாவையும் தம்பி பழனியையும் உட்கார வைத்து பரிமாறினாள் லட்சுமி . சாப்பிட்டு விட்டு வாசலில் கட்டிலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த போது கண்ணம்மா ஆச்சி வந்தாள் . முதையாவின் தந்தை வழிப் பாட்டி .
“ஆச்சி , எங்க போயிட்டு வாறே ? “
“ கோவிலுக்குப் போனன்டா முத்தையா . கூட யாரு பழநியா ? மூதேவி , கீழே இறங்கி உட்காருலே . அண்ணாச்சிக்கு சமமா உட்காருவியோ ? “
“ இருக்கட்டும் ஆச்சி . நீ உட்காருபழநி . ஆச்சி ! இந்த வருஷம் நல்ல வெளைச்சல் . நாளைக்கு நெல்லை வித்ததும் முதல்ல ஒனக்கு தங்கத்துல ஒரு ஜோடி பாம்படம் செஞ்சுடலாம் . ”
“ அது கிடக்கட்டும் . முதல்ல லட்சுமிக்கு ஒரு சங்கிலி செஞ்சு போடு . எனக்கென்னா கெழவி.“ ஆச்சியின் வார்த்தைகளை மீறி அவளுடைய சந்தோஷம் வெளிப்பட்டது .
“அதையும் பண்ணிடலாம்.“
பாட்டி உள்ளே போய் விட்டாள் .
நெல் விற்ற பணத்தை முத்தையா எண்ணிப் பார்த்தான் . எட்டாயிரம் இருந்தது .
“பழநி ! நீ போய் ஆசாரியை வரச் சொல்லிடு . ஆச்சிக்கு பாம்படமும் லட்சுமிக்கு செயினும் செய்யணும் . டவுனுக்குப் போய் தங்கம் வாங்கியாந்திடலாம் . “
தனது ரொம்ப நாளைய ஆசை நிறைவேறப் போகிறது என்ற எண்ணத்தில் ஆச்சி ரொம்ப சந்தோஷமாக இருந்தாள் .
“ உங்க அப்பங்கிட்ட சொல்லி சொல்லி சலிச்சுப் போயிட்டேன். அவனைச் சொல்லியும் குத்தமில்லை . வந்த காசு வீட்டு செலவுக்கே சரியாப் போச்சு . மிஞ்சினாத்தானே தங்கத்தில பாம்படமும் ஒட்டியாணமும் . ஏதோ இப்பவாவது நேரம் வந்துச்சே . “
முதையாவிற்கும் சந்தோஷமாக இருந்தது . ஆச்சியின் வெகுநாளைய ஆசையை நிறைவேற்றி வைக்கப் போகும் சந்தோஷம் .
இரண்டு நாட்களும் ஆச்சியின் பேச்சு முழுவதும் தங்கப் பாம்படங்களைப் பற்றிதான் . மூன்றாம் நாள் ஆசாரி பாம்படங்களை காகிதத்தில் பொதிந்து கொண்டு வந்தார் . காகிதத்தைப் பிரித்து பாம்படங்களைக் காட்டியதும் ஆச்சியின் உற்சாகம் உச்சத்தை அடைந்து விட்டது .
“ என்னம்மா மின்னுது பாரேன் ! ஏ அப்பா ! தங்கம் நயம்தான் . என்னமா ஜொலிக்குது ! “
பழைய பித்தளைப் பாம்படங்களை கழற்றி விட்டு ஆச்சியின் காதுகளில் தங்கப் பாம்படங்களை மாட்டி விட்டாள் லட்சுமி . கண்ணாடியைக் கொண்டு வந்து காட்டினாள் . பாட்டி மின்னும் பாம்படங்களை கண்ணாடியில் பார்த்து பூரித்துப் போனாள் . காதுகளையும் பாம்படங்களையும் மாறி மாறி தடவி விட்டுக் கொண்டாள் .
ஆச்சி பக்கத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் போய் தங்கப் பாம்படங்களை காட்டி வரப் போய் விட்டாள் . ஊரிலேயே முதல் தங்கப் பாம்படங்கள் என்ற பெருமையோடு .
அன்று இரவு முத்தையாவும் பழநியும் வேலையை முடித்துக் கொண்டு வீட்டிற்குள் நுழையும் போதே ஆச்சியின் குரல் கேட்டது . கூட இரண்டு மூன்று பெண்கள் நின்று கொண்டிருந்தார்கள் . பக்கத்தில் லட்சுமியும் நின்றாள் .
முத்தையாவைக் கண்டதும் ஆச்சியின் குரலில் சோகமும் , எரிச்சலும் அதிகமாயின .
“ முத்தையா ! கேட்டியாலே அநியாயத்தை . நீ ஆசையா வாங்கிப் போட்ட பாம்படத்தை எந்த சண்டாளப் பாவியோ அவுத்துட்டுப் போயிட்டாம்ல . அம்மன் அவனைச் சும்மா விட மாட்டா . அவன் கை புளுத்துப் போகும் . காலு மடங்கிப் போகும் . “
வடக்குத் தெருவில் இருந்த சொந்தக்காரர்களிடம் பாம்படத்தைக் காட்டுவதற்காக போய் விட்டுத் திரும்பும் போது பனையன் மடம் அருகில் ஆச்சியை யாரோ ஒருவன் வழிமறித்து மிரட்டி பாம்படங்களை கழற்றிக் கொண்டு ஓடி விட்டிருக்கிறான் .
ஆச்சியின் புலம்பல் அதிகமானது .
“ சரி ஆச்சி விடு , போனது போனதுதான் . நல்ல வேளை காதோட சேர்த்து பிய்க்காம விட்டானே . நாளைக்கு நம்ம ஆளுங்களை விட்டுத் தேடச் சொல்லுவோம் . திருட்டுப் பய அகப்படாமலா போயிடப் போறான்?”
கட்டிலில் வந்து படுத்தான் முத்தையா . பாம்படம் போனதை விட ஆச்சியின் வருத்தம்தான் முத்தையாவை அதிகமாக பாதித்திருந்தது .
கட்டிலில் படுத்ததும் தூக்கம் வரவில்லை . உள்ளே ஆச்சியின் குரல் கேட்டுக் கொண்டிருந்தது . திருடனை பலவிதமாக திட்டிக் கொண்டிருந்தாள் .
முத்தையாவின் எண்ணங்கள் வேறு திசையில் ஓடின . எழுந்து உட்கார்ந்தான் . பக்கத்தில் கீழே பாய் விரித்து சாய்ந்திருந்த பழநியும் எழுந்து உட்கார்ந்தான் .
“ அண்ணாச்சி ! ஆச்சி பாம்படத்தை திருடினது யாரா இருக்கும் ? “
“ தெரியலடா பழநி ! ஆனா ஒண்ணு கவனிச்சியா . இந்த வருஷம் நல்ல வெளைச்சல் . அதனால நம்ப பொருளாதார நெலைமை ஆச்சிக்குத் தங்கத்துல பாம்படம் செஞ்சு போடற அளவுக்கு உயர்ந்திருக்கு . இந்த வருட வருமானத்தில் அது ஒரு சின்ன செலவுதான் . ஆனா அந்த அரைக்காப் பவுன் பாம்படத்தைத் திருடித்தான் சாப்பிடனும்கற அளவுக்கு நாட்டில சில பேரோட பொருளாதார நிலைமை மோசமா இருக்கு பார்த்தியா ? “
“ அது எப்படி அண்ணாச்சி ? திருடறவன் உடலை வருத்தி உழைக்கச் சோம்பேறித்தனம் பட்டு திமிறிலதான திருடறான் . “
“ திருடறது தப்புதாண்டா பழநி . ஆனா இப்படி ஒரு கிழவியோட அரைக்காப் பவுன் பாம்படத்தை ஒருத்தன் திருடுறான்னா அவனோட சந்தர்ப்ப சூழ்நிலைங்க ரொம்ப மோசமாத்தான் இருக்கணும் . வேற வழியில்லாமத்தான் தப்பு பண்றான்ணு தோணுது . உழைச்சு சாப்பிட வாய்ப்பே கெடைக்காதவனா இருக்கலாம் . இப்படி சின்னத் திருட்டில ஆரம்பிச்சு பெரிய திருட்டுக்குப் போகும் போது வேணும்னா அது அவனோட தப்புங்கலாம் . திமிருங்கலாம் . ஆனா இது … “
முத்தையா பேச்சைத் தொடர்ந்து சிந்தனையில் ஆழ்ந்து போனான் . ஒரு பெருமூச்சு வெளிவந்தது . ஆச்சியின் குரல்தான் மெளனத்தை கலைத்தது .
“ முத்தையா ! நாளைக்கு அம்மன் கோவில் பூசாரிகிட்ட மைபோட்டுப் பார்க்கணும்ல . “
சற்றுமுன் பழநியிடம் பேசியவை ஞாபகம் வந்தது . ஆச்சியிடம் அதையெல்லாம் சொன்னால் புரியாது . அவளைச் சமாதானப் படுத்த ஒரே ஒரு வழிதான் தோன்றியது .
“ சரி ஆச்சி . பாத்துடுவோம் . அது கெடைச்சதுன்னா பார்ப்போம் . இல்லாட்டி ஆசாரிகிட்ட சொல்லி புதுசா வேற ஒரு ஜோடி செஞ்சிடுவோம்.”
கொஞ்ச நேரத்தில் ஆச்சி தூங்கி விட்டாள் .
– அக்டோபர் 06 – 12 , 1989 தேதியிட்ட பாக்யா வார இதழில் வெளி வந்த சிறுகதை .
வட்டார வழக்கில் கதை சுவாரசியமாகப் போகிறது. பகைவனுக்கும் அருளும் கதாநாயகன் உயர்ந்து நிற்கிறார்.