பாட்டாளி வர்க்கம்..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 28, 2020
பார்வையிட்டோர்: 5,318 
 
 

நான் சின்ன வயசுல இருந்தது ஒரு சிமெண்ட் ஃபேக்டரியோட குடியிருப்புல..! அப்பாவுக்கு அங்க தான் வேலை..! எல்கேஜி முதல் பளளி இறுதியாண்டுவரை அங்கேயேதான் படிப்பு.!

வீட்ல நான் தான் ஒரே ஆம்பளப் பையன் ஆரம்ப நாட்கள்ல.. ஏன்னா அண்ணன் மெட்ராஸ்ல பாட்டி வீட்ல இருந்தான்..! ஆறாவதுல இருந்துதான் எங்க வீட்டுக்கு வந்தான்..!

என் அப்பா அம்மாவுக்கு எல்லா வீட்டு வேலைக்கும் நான்தான் எடுபிடி..! வீட்ல பெரிய தோட்டம் உண்டு.. கனகாம்பரம் ல இரு்து.. டிசம்பர் குண்டு மல்லி..சென்ட்டு மல்லி னு ஒரு பூந்தோட்டமே இருக்கும்.. மாமரத்துல நாலு வகை ..ரெண்டு கொய்யா மரம்.. புளிய மரம்..ரெண்டு தென்ன மரம்.( சின்ன சைஸ்தான்) கோனப்புளியாங்கா மரம் .. முருங்க மரம்னு பெரிய தோட்டம் அது..!

அம்மா வுக்கு முருங்க மரததுல ஏறி முருங்கக்கா பறிக்கர்துல இருந்து.. தென்ன மரத்துல நெஞ்சு எறிய எறிய ஏறி செவ்வெறும்பு கடிக்க தேங்கா பறிக்கரது.. கொய்யாக்காய்.. மாங்காய் பறிக்கர்து னு எல்லா வேலையும் நாமதான் செய்யணும்..!

அதே மாதிரி அப்பாவுக்கு தோட்ட வேலைல கூட மாட ஒத்தாசையும் நான்தான்.. செடி கொடிக்கெல்லாம் தண்ணி வெக்கரது.. மம்பட்டில வாய்க்கா மாத்தி உடரது.. முருங்க மத்துல கம்பளி பூச்சி ய நெருப்பு வெச்சு எரிக்கர்து.. டிவி ஆன்ட்டன்னா திருப்பி உடரது, ஃபேன் மாட்ரது..எலக்ட்ரிகல் வேலை னு எல்லா வேலையும் எங்கப்பா செஞ்சா கூடவே சேர்ந்து வேல செய்வேன்.!

அப்பெல்லாம் கம்பனிக்குள்ள இருந்து லாரி லாரியா வேஸ்ட் மண்ணு கொட்டுவாங்க.. அதுக்குள்ள இரும்பு குண்டு பால்ரஸ் லாம் இருக்கும்.. அத கம்பிய வெச்சு நோண்டி எடுத்து ஐஸ்கார பன்னீர் கிட்ட போட்டா குச்சி ஐஸ் தருவாப்டி… கடைசி லைன் சையதுதான் எனக்கு காம்படிசன்..!

பத்மா அம்மா வீட்ல கடலக் கொட்ட உடைப்போம்.. படி பத்து காசு… ரெண்டு கை.. வாய்ல னு கட கடன்னு உடைச்சு போடுவோம்.. என்ன நகம்லாம் கடலப் தொப்ப குத்தி வலிக்கும்..!

அத விட சூப்பர் வேல எதுன்னா.. வேப்பங் கொட்ட பொறுக்கர்து… ஏகப்பட்ட வேப்ப மரம் இருக்கு அந்தக் காலனில .. மஞ்சப் பைய எடுத்துகிட்டு மரத்துக்கு மரம் தரையில காக்கா தின்னு போட்ட வேப்பங்கொட்ட கொத்து கொத்தா காக்காவோட கக்காவோட காஞ்சு போய் கெடக்கும்.. அதெல்லாம் உதுத்து உதுத்து எடுத்து பைல சேர்ப்போம்..

கையெல்லம் கப்பி வாடை அடிக்கும்….அதெல்லாம் பாத்தா பைசா கெடைக்குமா..?

வாரமானா சங்ககிரி ஆயில் மில்லுல போட்டா படி ஒரு ரூபா போவும்..

என்ன…! இன்ஜினியரிங் முடிச்ச அப்புறம்தான் வேல கெடைக்காம கஷ்டப் பட்டேன்!

வேப்பங் கொட்டையே பொறுக்கியிருக்கலாமோ..? ஆயில் மில்லு ஓனராயிருக்கலாம்..!

இதுதான் எங்க ஆண்டு விடுமுறை பார்ட் டைம் ஜாப்.. பத்து இருபது ரூபா சேத்துருவோம்ல?!

ஸ்கூல் தொறந்த உடனே காசக் கொண்டு போய் க்ராஃப்ட் சார்ட்ட குடுத்து சஞ்சாயிகால போட்டு, பாஸ் புக் என்ட்ரி போட்டுட்டு அதப் பாக்கும் போது ஒரு சந்தோசம் வரும் பாருங்க….அடடடா.. !!

வேப்பங்கொட்ட மட்டும்ல.. எங்க காலனி பூரா பாதானி மரம் நெறைய இருக்கும்… நூத்துக்கணக்குல லீவு நாள்ல சதா சர்வ காலமும் அது மேல ஏறி பழம் பறிப்பது , இல்லன்னா கல்ல எடுத்து அடிச்சு பறிக்கர்து தான் எங்க வேலை.. எனக்கும் அக்காவிற்கும் பல்லெல்லாம் கறையானதே இந்த பாதாங்காய் தின்னுதான்.!

என்னத் தேடணும்னா எங்கப்பா தரையில தேடினத விட மரத்து மேல தேடினது தான் அதிகம்.!

நானும் எங்கக்காவும் பாதாம் பழம் பொறுக்குவாம்..வீட்ல வந்து மேல இருக்கிற தோல தின்னுட்டு கொட்டைய வெயில்ல காய வெப்போம் டெய்லி காலைல எடுத்து மாடில வெயில்ல வெச்சிட்டு சாயந்திரம் பையில அள்ளி வெச்சிருவோம்.ஒரு மாசம் ஆகும்போது எங்கம்மா அதையெல்லாம் உடைச்சு தர சொல்லுவாங்க.. நாங்களும் சுத்தியல்..இல்லன்னா ஒரு பெரிய கூழாங்கல்லு வெச்சிருப்போம் .அதுல எல்லா பாதாங் கொட்டையையும் உடைச்சு உள்ள இருக்கிற பருப்ப எடுத்து அம்மா கிட்ட குடுப்போய்.. நாலஞ்சு டம்ளர் வரும் .. எங்கம்மா அதையெல்லாம் வெச்சு பாயசம் மாதிரி பாதாங் கீர் பண்ணிக் குடுப்பாங்க..! வீட்ல இதுக்குன்னே எவர் சில்வர்ல கப் அன்டு சாசர் வெச்சிருந்தோம் யாராவது வீட்டுக்கு வந்தா அதுல தான் காப்பி குடுக்கர்து வழக்கம்..!

அந்த கப்புல சுட சுட அந்த பாதாங் கீரை குடிப்பது எவ்ளோ பெருமையா இருக்கும் தெரியுமா..? கஷ்டப்பட்டு வேலிலயும். பள்ளத்துலயும் குனிஞ்சு குனிஞ்சு பொறுக்கின பாதாங்காயாச்சே..?!

எனக்கெல்லாம் காலேஜ் வரும்போதுதான் பாதாம் பருப்புனா இது இல்ல.. அது வேற ஒரு ஐட்டம்னே தெரியும்..!

அதே மாதிரி எங்கம்மா வாரா வாரம் பக்கத்துல டவுனுக்கு சந்தைக்கு போவாங்க .அஞ்சாறு கிலோ மீட்டர் போகணும்.! யைில ஒயர் கூடைய எடுத்துகிட்டு பூப் போட்ட குட்டி லேடீஸ் ஹேன்ட் கர்ச்சீப வெச்சிகிட்டு எங்கம்மா என்ன கூட்டிகிட்டு போவாங்க.. எங்கம்மாவோட எதிர் வீட்டு ஆன்ட்டீலாம் வருவாங்க..ஒரு வார சந்தை காய்கறி வாங்குற பட்ஜெட்டே பத்து ரூபா தான் .!

போக வர கம்பெனி பஸ்லயே போவோம்.. ஃப்ரீதான்..! கம்பேனி பஸ் ஸு டவுன்ல இருந்து டெய்லி வேலைக்கு ஆளுகள கூட்டிட்டு வர்ர பஸ் அது.! வெளி டவுன் பஸ்லயோ,ரூட் பஸ்லயோ போய்ட்டு வர்ர அப்பா காசு தர மாட்டார்.. ஆளுக்கு அம்பது பைசாதான்,ஆனா இருக்காது..!

நான் வர மாட்டேன்னு சொன்னா அம்மா வந்தா உனக்கு ஐஸ் வாங்கித் தர்ரேன்னு சொல்லி நைஸா பேசி கூட்டிட்டு போயிருவாங்க.. பின்ன பையத் தூக்க ஆள் வேணுமே..!

பஸ் ஸு டவுன்ல எங்கள எறக்கி விட்ட எடத்துல இருந்து ஒரு கிலோமீட்டர் நடக்கணும் சந்தப் பேட்டைக்கு.. போற வழியிலயே சரவணா ஐஸ் பேக்ட்ரி இருக்கும்.. எங்ம்மா போகும் போது வாங்கித் தரமாட்டாங்க..திரும்ப வரும்போதுதான் மிச்சக் காசுல குச்சி ஐஸ் வாங்கித் தருவாங்க சைக்கிள் கார பன்னீர்கிட்ட பதினஞ்சு பைசா ஐஸ், இங்க அஞ்சு பைசாவுக்கே கிடைக்கும் . ரோஸ்மில்க் ஐஸ், சேமியா ஐஸ் தான் வாங்கித் தருவாங்க அம்மா . பால் ஐஸ் வெல அதிகம்ல..?! முக்கோண ஐஸ்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்.!

திரும்ப அதே பஸ்ஸூ அடுத்த ட்ரிப்பு வரும்போது நாங்க நடந்து வந்து ஏறிடுவோம்!

வீட்டுக்கு வந்த அப்புறம் அப்பா வெய்ட் பண்ணுவார். அம்மா லிஸ்ட்டு எழுதி கணக்கு குடுப்பாங்க..! அதுல கணக்குல இடிக்கும்போது அப்பா கேக்குற கேள்வியும்… “யோசிச்சு பாரு அந்த காய்காறிகிட்ட சில்ர வாங்கினியா? இந்த கடையில எவ்ளவு நோட்டு குடுத்த.?” னு அப்பா கேட்க கேட்க. அம்மா மண்டைய குடைஞ்சுகிட்டு யோசிப்பாங்க..! கடைசில கணக்கு கரெக்டா டேலி ஆனாத்தான் அம்மாவுக்கு தூக்கமே வரும்.. அவ்ளோ சீக்கிரம் ஏமாற மாட்டாங்க அம்மா.!

அந்த லிஸ்ட்ல பாஸ்கர் ஐஸ் னு அஞ்சு பைசா கணக்கு வந்த உடனே அக்கா முகத்துல நெருப்பு வெடிக்கும்.! “அவனுக்கு மட்டும் ஐஸா..?”ன்னு.! “அவன் ந்தான்டி என்கூட அவ்ளவு தூரம் வந்தான் .!! அதான் ஐஸ் வாங்கிக் குடுத்தேன்”னு அம்மா சொல்லும்போது தின்ன ஐஸை விட அதிகமா இனிக்கும்..!

நானும் பாட்டாளி வர்க்கம்தான்.! சின்ன வயசிலயே.!

என்போன்ற அனைவருக்கும் “உழைப்பாளர் தின வாழ்த்துகள் ..!”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *