பரமன் சேர்வையும் வால் மார்ட்டும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 6,609 
 
 

பீடியை ஆழ இழுத்து ரசித்துப் புகைத்துக் கொண்டிருந்தார் பரமன் சேர்வை. தாமிரபரணிப் பாசன விவசாயி. அதனால் அந்த எழுபது வயதிலும் நல்ல ஆரோக்கியம் . உழைத்து உழைத்து உரமேறிய தேகம்.

“ஹா.. இந்தப் பீடி இல்லாடா மனுஷன் செத்துப் போவான். இந்தவயசுலயும் வகுரு என்ன பசி பசிக்கி? சோறாக்க எப்படியும் இன்னும் அரை மணியாகும். அப்புறம் டிராக்டர் ஓட்டப் போயிருக்கற மகன் வரணும். சாப்பிட ஒரு மணியாயிரும். அது வர இந்தப் பீடி தான்” என்று யோசித்துக் கொண்டிருந்தார்.

பரமன் சேர்வை ஒரு நல்ல விவசாயி. அவருடைய ஐயா வைத்து விட்டுப் போன பத்து ஏக்கரை பதினைந்து ஏக்கராக மாற்றி விட்ட புத்திசாலி. என்ன பருவத்தில் என்ன பயிரிட்டால் விலை கிடைக்கும்? என்று தெரிந்தவர். விளைந்த தானியங்களை கிட்டங்கிகளில் சேமித்து வைத்து நல்ல விலை வந்ததும் விற்கத் தெரிந்த சாமர்த்தியசாலி. அதனால் தான் அவரால் விவசாயத்தை நல்லபடியாக செய்ய முடிந்தது.

கிழவருக்கு இரண்டே குழந்தைகள் தான். ஒரு பெண் திருநெல்வேலியில் கட்டிக் கொடுத்து விட்டார். மாப்பிள்ளை சங்கர் சிமிண்ட் ஃபேக்டரியில் நல்ல வேலையில் இருக்கிறார். பிறகு மகன். பெயர் மாணிக்கம். அவனும் பத்து வரை படித்து விட்டு விவசாயத்துக்கே வந்து விட்டான். காலாகாலத்தில் ஒரு நல்ல பெண்ணாகப் பார்த்து கட்டி வைத்து விட்டார். அவ்வளவு தான் கடமை முடிந்த திருப்தி அவருக்கு. இப்போதெல்லாம் அவர் விவாசாய வேலைகளில் நேரிடையாகத் தலையிட்டுக் கொள்வதில்லை. எல்லாம் மாணிக்கம் தான். பின்னே? அவனும் தொழில் கற்று பதினைந்து ஏக்கரை இருபதாக ஆக்க வேண்டாமா?

அவர்கள் நிலத்தில் அன்று சேற்றுழவு. அதனால் தான் டிராக்டர் வாடகைக்கு எடுத்து உழப் போயிருக்கிறான் மாணிக்கம்.

“மாமா! மாமோவ்”

உள்ளேயிருந்து மருமகள் பூவாறு குரல் கொடுத்தாள்.

“என்ன புள்ள?”

“சோறாக்கி முடிச்சுட்டேன். கொளம்புக்குத் தாளிக்க கடுகு இல்ல. நீங்க போயி உங்க சேக்காளி சம்முவ நாடார் கடையில கடுகும் கொஞ்சம் எண்ணெயும் வாங்கி வாருங்க. இன்னிக்கு அப்பளம் பொரிக்கேன்.”

சொன்னதும் நாக்கில் எச்சில் ஊறியது கிழவருக்கு. சமையலறையிலிருந்து வரும் வாசத்தில்லேயே அன்று புளிக்குழம்பும் கருவாடும் என்று ஊகித்து விட்டார். புளிக்குழம்புக்கும் பொரித்த அப்பளமும் , வறுத்த கருவாடும் எப்படி இருக்கும் தெரியுமா? நினைக்க நினைக்கவே பசி அதிகமானது.

“மாமா! நீங்க பாட்ல பேசிக்கிட்டு நின்னுராதீய வெரசா வாங்க. ஞாபகமா சிட்டையை எடுத்துப் போங்க!” என்றாள் மருமகள்.

“சரி சரி” என்று கூறியபடி சிட்டையை எடுத்துக் கொண்டு விரைந்தார்.

சிட்டை என்பது கணக்கு நோட்டுப் புத்த்கம் சிறியதாக இருக்கும். அவ்வப் போது பணம் புரட்ட முடியாதவர்கள் அதில் எழுதி வைத்து சாமான் வாங்கி வருவார்கள். பணம் வந்ததும் திருப்பிக் கொடுத்து விடுவார்கள். இது எல்லாக் கிராமங்களிலும் இருக்கும் ஒரு நடைமுறை.

இரண்டு தெரு கடந்து முக்குத் திரும்பியதும் தெரியும் சம்முக நாடார் கடை. இருவரும் அஞ்சாம் வகுப்பு வரை ஒரே பள்ளியில் படித்தவர்கள். அதற்குப் பிறகு இருவருமே பரம்பரைத் தொழிலுக்கு வந்து விட்டனர். பரமனுக்கு நாடாரோடு நாட்டு நடப்புகளை அலசுவது என்றால் கொள்ளை ஆசை. இருவரும் செய்தித்தாள் படித்து அவ்வப் போது பேசிக் கொள்வார்கள்.

மதிய நேரம் என்பதால் கடையில் கூட்டமில்லை.

“சம்முவம்! காக்கிலோ நல்லெண்ணெயும் , நூறு கடுகும் குடும்வே”

“என்ன எண்ணெயெல்லாம் வாங்குதீரு? இன்னிக்கு என்ன விருந்தா வீட்டுல?”

“நீரொண்ணு! மருமகா அப்பளம் பொரிக்கேன்னா அதான். ”

“அப்பளமும் தரட்டுமா?”

“அவா சொல்லலியே? இருந்தாலும் குடும். இல்லென்னா வீட்டுக்குப் போனதும் இன்னொருக்கா அனுப்புவா”

எல்லாவற்றையும் பையில் போட்டுக் கொடுத்தார்.

“சம்முவம்! இந்தா சிட்டை! எழுதிக்கோ! இந்த அறுப்பு முடிஞ்சதும் தந்திருதேன். ”

“அது வளக்கம் தானே! இன்னா எளித்திட்டேன். நேத்து ஒம்ம பேரன் கடைக்கு வந்து ரெண்டு முறுக்கு தின்னான். அதையும் சேத்து எளுதிட்டேன். அப்புறம் என்னா? இந்த பூவுக்கு என்ன பயிரு போடுதீரு?”

“துவரை போடப் போறதா மாணிக்கம் சொன்னான். பருப்புக்கு இப்பம் கிராக்கியில்லா? சரி வரட்டுமா?”

“என்ன ஒடனே கிளம்புறீரு?”

“மருமக வெரசா வாங்கன்னிச்சு. அதுக்கு வேலை இருக்குல்ல” என்றவர் வெயிலுக்கு அந்தப் பையையே குடையாகப் பிடித்தபடி நடக்கத் துவங்கினார்.

மகன் வந்திருந்தான்.

மருமகள் அவசர அவசரமாக பையைப் பிடுங்கிக் கொண்டு உள்ளே போனாள்.

“எப்பா! கேட்டியா? நமக்கெல்லாம் நல்ல காலம் வரப் போகுது!”

“என்னல குடுகுடுப்பைக்காரன் மாரி சொல்லுத?”

“இல்லப்பா! நம்ம இந்திய அரசாங்கம் வெளிநாட்டுக் கம்பெனிகளுக்கு இங்க கடை நடத்த அநுமதி கொடுத்திருக்கு. அதனால பெரிய பெரிய வெளி நாட்டுக் கம்பெனியெல்லாம் நம்ம ஊருக்கு வரப் போறாஹ. இங்க கடை நடத்தப் போறாஹ.”

பகீர் என்றது பரமன் சேர்வைக்கு. எதுக்கு திரும்பவும் வெள்ளைக்காரனை உள்ள விடணும்? என்று நினைத்துக் கொண்டார்.

“அதனால உனக்கென்னல?”

“என்ன இப்படிக் கேட்டுட்ட? நம்மளை மாதிரி விவசாயிங்க கிட்டருந்து அவங்க நேரடியா கொள்முதல் பண்ணுவாஹ. விலையும் அதிகம் கொடுப்பாஹ. நாம வெச்சது தான் விலை. நடுவுல ஏஜெண்டே கிடையாது. இப்ப மூடை 100 ரூவான்னா நாம 1000 ரூவா சொன்னாக்கூட அவன் வாங்கிக்கிடுவான்”

என்னவோ தெரியவில்லை இவரால் உற்சாகப் பட முடியவில்லை.

“நான் ஒம்மட்ட வந்து சொன்னேன் பாரும் என்னிய அடிக்கணும். சீக்கிரம் வாரும் சாப்பிட்டுட்டு வெளிய போகணும். வேலை நிறைய இருக்கு.”

அன்று மருமகள் செய்திருந்த எல்லாமே முதியவருக்குப் பிடித்தது தான் ஆனால் அவரால் ரசித்துச் சாப்பிட முடியவில்லை. “இவன் என்னவோ சொல்லுதான். எதுக்கும் நம்ம சம்முவத்துக்கிட்ட கேக்கணும். அவரு தான் கொஞ்சம் வெவரம் தெரிஞ்ச மனுஷன்.”

சாப்பிட்டு விட்டு பீடி பத்த வைக்க சம்முவ நாடார் கடைக்குப் போனார். முகமெல்லாம் வாடியிருந்தது கடைக்காரருக்கு.

“யோவ் சம்முவம்! என் மகன் என்னமோ சொல்லுதானேய்யா? அது என்னது? இதனால் நமக்கு நல்லதா ? கெட்டதா? எனக்கு ஒண்ணும் புரியல! அதான் ஒம்ம கிட்ட வந்தேன்”

“ம்ஹூஹூம்! ஒமக்கும் தெரிஞ்சு போச்சா? இந்த கவருமெண்டு எல்லாருக்கும் கதவைத் தொறந்து விட்டுட்டான். இப்ப வெளி நாட்டுக்காரன் எவன் வேணா வந்து இங்க கடை ஆரம்பிக்கலாம். என் யாவாரம் அடிபடப் போகுது பரமா. என் யாவாரம் மட்டுமில்ல என்னிய மாதிரி சின்னக் கடை வெச்சுருக்கவன் கதி எல்லாம் இனி அதோ கதி தான். என் காலத்துக்கப்பறம் என் மகன் செல்வராசு என்ன ஆவானோன்னு தான் பயமாயிருக்கு.”

மீண்டும் பகீரென்றது சேர்வைக்கு.

“அப்பம் இது என்னைய மாதிரி விவசாயிங்களுக்கு நல்லதுங்கீறா?”

விரக்தியாகச் சிரித்தார் அவர்.

“கோட்டிக் காரரா இருக்கீறே! அவன் கடை போடுதது தனக்கு லாபம் பாக்கவா இல்ல ஒமக்கு தொண்டூழியம் செய்யவா? மொதல்ல நிறையக் காசு கொடுப்பான். அப்புறம் அவனைத் தவிர வேற எவனுக்கும் நீங்க மகசூலை விக்க முடியாத மாதிரி நிலைமையை உண்டு பண்ணுவான். பெறகு அவன் வெச்சது தான் வெல. நீரும் தலையில துண்டைப் போட்டுக்கிட்டுப் போக வேண்டியது தான். ஒம்ம நெலத்துல வெள்ளைக்காரன் தான் அப்புறம் விவசாயம் பாப்பான். நீரு விரலைச் சூப்பிக்கிட்டு போக வேண்டியது தான்.”

பரமனுக்கு ஏனோ ஒட்டகம் கூடாரம் கதை ஞபகத்துக்கு வந்தது. “கிட்டத்தட்ட 300 வருஷத்துக்கு முன்ன இப்படித்தானே யாவாரம் பாக்கேன்னு வெள்ளைக் காரன் நொளஞ்சான். அப்புறம் நாட்டையே பிடிச்சான். இப்பம் திருப்பியும் அது நடக்குமோ? அது இந்தக் கவருமெண்டுக்குத் தெரியாதா? இப்பிடியா கொண்டு ஜனங்களை அடகு வெப்பான்?”

தன் சிந்தனையைக் கேட்டே விட்டார் சம்முவத்திடம்.

“அவனவன் கோடிக் கோடியா லஞ்சப் பணத்தை வாங்கிக்கிட்டு இதுக்கு அநுமதி குடுக்கான். இதுல அவன் ஒம்மையும் , என்னையுமா நெனச்சுப் பாக்கான்?”

சரியென்றே தோன்றியது.

நாட்கள் உருண்டன.

அந்த வெளிநாட்டு நிறுவனம் விவசாயிகளிடம் நேரடி சந்திப்பு நடத்தியது. அதற்கு போய் வந்த மாணிக்கத்திடமும் , மற்ற விவசாயிகளிடமும் ஏகப்பட்ட மாற்றம். எல்லோருக்கும் மதிய உணவு. இது தவிர ஒரு ஸ்வீட் பாக்ஸ் , ஒரு பெரிய கோக்கோ கோலா பாட்டில்.

கோலாவை தம்ளரில் ஊற்றி கிழவருக்கும் கொடுத்தாள் மருமகள்.

“எனக்கு வேண்டாம்ளா! இதப் பாத்தா பாவப்பட்ட ஜனங்களோட ரத்தம் மாதிரி தெரியுது எனக்கு” என்று கூறி மறுத்து விட்டார். மாணிக்கம் பேச்சை நிறுத்தவேயில்லை.

“எம்புட்டு பெரிய பெரிய மனுசங்க வந்திருந்தாஹ தெரியுமா? எல்லாம் பெரிய படிப்பு படிச்சவுஹ! அவுஹ படிப்புக்கும் அந்தஸ்துக்கும் நம்ம கிட்டயெல்லாம் பேசணும்னே அவசியம் கிடையாது. ஆனா நல்லாப் பளகுறாஹ! கையெல்லாம் கொடுத்தாஹ! நம்ம ஊருல சென்னையில போயி படிச்சுட்டு வந்தவனுவோ நம்மை மதிக்க மாட்டானுவோ! ஆனா இவுஹ சோறு போட்டு , கலர் குடுத்து இனிப்புக் குடுத்து கௌரவப் படுத்தினாஹ! ”

“இவ்வளவு செஞ்சவன் எதையாவது கேட்றுப்பானே? ”

“பெருசா ஒண்ணும் கேக்கல்ல! நம்ம வயக்காடுல வெளயிற தானியத்தையெல்லாம் அவனுக்கே விக்கணும்னு ஒப்பந்தம் போடணும்னான். அதுக்கு யோசிக்க ஒரு வாரம் டயமும் குடுத்திருக்கான். நம்ம பண்ணையாரு நூறு ஏக்கர் வெச்சிருக்கவரு அவுரே அவனுக்குத்தான் குடுக்கப் போறேன்னு சொல்லுதாரு.”

“நீ என்ன முடிவு பண்ணியிருக்க?” குரல் நடுங்கியது முதியவருக்கு.

“இதுல முடிவு பண்ண என்ன இருக்கு? நல்ல வெலை கெடைக்கில்லா? அவங்கிட்ட ஒப்பந்தம் போட்டுர வேண்டியது தான்”

நெஞ்சு விலுக்கென்று அதிர்ந்து அடங்கியது .

“ஏல! ஆக்கங்கெட்ட கூவ! புத்தி இருக்கால ஒனக்கு? அவம் ஒன்னை அடிமையாக்கீடுவாம்ல! சொன்னாக் கேளு. நாம அவன் கிட்ட ஒப்பந்தம் போட வேண்டாம்.எப்பமும் போல ஏஜெண்ட்டுக்கிட்டயே விப்போம். ”

மருமகள் சீறிக் கொண்டு வந்தாள்.

“ஏன் ஒமக்கு புத்தி இப்படிப் போகுது? நாலு காசு பாத்து நாங்களும் நல்லாயிருக்கணும்னு ஒமக்குத் தோணலியா? நாங்களும் ஃபிரிட்ஜ் ஏசின்னு அனுபவிக்கணும்னு நீரு நினைக்க மாட்டீரா? நீரு இப்படி கஷ்டப்பட்டதுனால நாங்களும் கஷ்டப்பட்டுக்கிட்டே இருக்கணுமா?

“அப்பிடியில்ல புள்ள! இவன் ஒப்பந்தம் போட்டாம்னா அதுல நிறைய விஷயம் இருக்கும். எல்லாத்தையும் யோசிச்சுததான் செய்யணும். அவன் மொதல்ல நிறையக் காசு குடுப்பான். அப்புறமா கொஞ்சம் கொஞ்சமா வேற யார்கிட்டயும் விக்க முடியாதபடி செஞ்சு நம்மை ஓட்டாண்டி ஆக்கிடுவான்னு நம்ம சம்முவ நாடார் சொல்லுதார்”

“அவரு சொல்லுவாரு. ஏன்னா அவருக்குத்தான் ஆபத்து. அவன் சகட்டுமேனிக்கு கடை திறந்திடுவான். அதுவும் ஒவ்வொரு கடையும் எப்படி இருக்கும் தெரியுமா? குளுகுளுன்னு லைட்டெல்லாம் போட்டு , கண்ணாடியா வெச்சு அவ்ளோ அளகாயிருக்கும். நாமளே நமக்கு வேண்டிய சாமான எடுத்துக்கிடலாம். பொட்டலம் போடறதெல்லாம் கெடையாது. எல்லாரும் அங்க போயி வாங்குவாஹளா? இல்ல எலி ஓடிக்கிட்டு இருக்கற சின்னக் கடையில வாங்குவாஹளா?”

“ஏல! கோட்டிக்காரா! தீ பக்கத்து வீட்டுக்குத்தானே வந்துருக்குன்னு நீ ஒறங்குவியால? அடுத்து அந்தத் தீ ஒன் வீட்டை பிடிக்க எத்தனை நேரமாகும்? நம்ம கையில அறுப்புக் காலத்துல தான் துட்டு நடமாடும். மத்த நேரத்துல கடன் சொல்லி , சிட்டையில எளுதி சாமான் தாரது நம்ம நாடார் தானேல! அந்தக் கடைகள்லாம் இல்லென்னா கொறச்ச சம்பளக்காரங்க எப்படி சாமான் வாங்கி சோறாக்கி சாப்பிடுவாஹ?”

“ஆமா! இவுரு பெரிய காந்தி! மத்தவுஹளைப் பத்திக் கவலைப் படுதாரு. போமையா ஒம்ம சோலியப் பாத்துக்கிட்டு.”

புறந்தள்ளப்பட்டார் பரமன் சேர்வை.

அவர்கள் ஊருக்கு வெள்ளைக்காரன் கம்பெனி வந்து வருஷம் ரெண்டு ஓடிப்போச்சு. இந்த ரெண்டு வருடத்தில் பலருடைய வாழ்க்கை முறையில் மலையளவு மாற்றம்.

மாணிக்கத்தின் வீட்டில் ஏசி ஓடுகிறது. ஒரு பைக் நிற்கிறது. இந்த அறுவடையில் டிராக்டர் வேறு வாங்கப் போகிறானாம். மனைவியின் கைகளில் , காதில் கழுத்தில் நகை மின்னுகிறது. இப்போதெல்லாம் மாணிக்கம் பைக்கில் போய் பக்கத்து டவுனில் இருக்கும் வால்மார்ட் என்ற பெரிய கடைக்குப் போய் மொத்தமாக சாமான் வாங்கி வந்து விடுகிறான். கூட அவன் மனைவியும் போவதுண்டு.

ஒவ்வொரு முறை வரும் போதும் “இது வாங்குனேன் இது ஃப்ரீ , இதுக்கு இது ஃப்ரீன்னு ” பெருமையாச் சொன்னான்.

“ஏல! யாவாரம் செய்யிறவன் எதுக்குலே ஃப்ரீயாக் குடுக்கான்? அதோட விலையையும் சேத்து மூலப் போருள்ள ஏத்தியிருப்பான். இப்பம் இதை வெச்சு நீ என்ன செய்யப் போற? ஏன் இப்படி தேவை இல்லாததை எல்லாம் வாங்கியாற?” என்று கேட்டால் “ஒம்ம சோலியப் பாருங்க” என்ற பதில் தான் வரும்.

பரமன் சேர்வை கத்திக் கத்தி ஓய்ந்து போனார். அவரை யாரும் சட்டை செய்வதேயில்லை.

பாவம் சம்முக நாடார். வியாபாரம் கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி அடியோடு தேய்ந்தது. பணம் கொடுத்தாலும் பண்டம் கிடைப்பதில்லை. எல்லாம் அந்த வெள்ளைக்கார கம்பெனிகளே வாங்கி விட்டன. அந்தக் கவலையிலேயே சம்முக நாடார் போய்ச்சேர்ந்து விட்டார். அவர் மகனும் வீட்டையும் கடையையும் வந்த விலைக்கு விற்று விட்டு பிழைப்புத் தேடி சென்னை சென்று விட்டான்.

இதெல்லாம் கிழவருக்கு மிகவும் கவலையூட்டியது.

கொஞ்ச நாட்களிலேயே அவர் பயந்தது நடக்க ஆரம்பித்தது.

ஒப்பந்தங்களில் நிபந்தனைகள் மிகக் கடுமையாக மாறின. அவன் குறித்த அளவு , அவன் சொன்ன தானியம் தான் விளைவிக்க வேண்டும். அதிலும் அவன் எதிர்பார்க்கும் தரம் இருக்க வேண்டும் . இல்லையென்றால் அவற்றைக் கழித்துக் கட்டி விடுவார்கள். பணம் கிடைக்காது.

ஒரு முறை மாணிக்கத்தின் விளைச்சல் பொய்த்தது. அவனால் ஒப்பந்தப்படி தானியம் சப்ளை செய்ய முடியவில்லை. அந்த முறை ஆர்டர் முழுவதும் கேன்சலாகி ஏகப்பட்ட நஷ்டம். மீண்டும் விதை போட டிராக்டரையும் , பைக்கையும் விற்க வேண்டியதாயிற்று.

பரமன் சேர்வை ஒரு பார்வையாளராகப் பார்த்துக் கொண்டிருந்தார்.

மற்றொரு முறை தரம் சரியில்லையென்று தானியங்கள் கழிக்கப்பட்டன. ஒரு முறை ஒரு வாரம் லேட்டாக ஆனதால் ஆர்டர் கேன்சலானது. ஒவ்வொரு முறையும் பெரு நஷ்டம். கொஞ்சம் கொஞ்சமாக பதினைந்து ஏக்கர் சுருங்கி ஐந்து ஏக்கர் ஆனது. அந்த நிறுவனமே அந்த விளை நிலங்களை வாங்கி விட்டது.

சம்முக நாடார் இறந்து வருடம் மூன்று ஓடி விட்டது.

மாணிக்கம் இப்போது விவசாயி இல்லை. அவனுடைய ஐந்து ஏக்கரையும் அந்த நிறுவனம் விழுங்கி ஏப்பம் விட்டு விட்டது. வீட்டை விற்றாயிற்று. இன்னும் ஒரு மாதத்தில் காலி செய்து கொடுக்க வேண்டும். தலைமுறைகளாகப் புழங்கிய வீட்டை விட்டுப் போக அவருக்கு மனம் வரவேயில்லை. தான் வாழ்ந்த வாழ்வு , சந்தோஷமாக செய்த தொழில் , சம்முக நாடாருடனான் நட்பு , ஐந்து ஏக்கர் நிலம் வாங்கிய போது அவர் ஐயா முகத்தில் தெரிந்த சந்தோஷம். எல்லாம் கை விட்டுப் போன நிலை . இப்படி ஒவ்வொன்றாக நினைத்துப் பார்த்தவருக்கு நெஞ்சில் சுரீரென்று வலித்தது.

கையில் எதையோ கெட்டியாகப் பிடித்தபடி வீட்டு வாசல் திண்ணையில் படுத்தவர் தான் பிறகு எழுந்திருக்கவேயில்லை. மாணிக்கம் வந்து கையை அழுத்தி விலக்கிப் பார்த்த போது அதில் சம்முவ நாடார் கடை பழைய சிட்டை இருந்தது.

– நவம்பர் 2012(செம்மலர்)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *