நெஞ்சம் வலிப்பது போன்று இருந்தது. கல் போன்ற பாரம் நெஞ்சை அழுத்துவது போல் இருந்தது. எட்டு வருட வாழ்க்கை ஒரு நொடியில் மாறிப்போகும் என்று கனவிலும் நினைக்கவில்லை. மனத்திலும் சுமை, கையிலும் சுமை. எப்படி தாங்கப்போகிறேன் கடவுளே!
கடவுள்! என்ன மாதிரியான கடவுள் இவர். எல்லா இன்பங்களையும் ஒரு சேரக்கொடுத்து சுகமான ஒரு மனநிலையில் மிதந்து கொண்டிருக்கும் போது அதைத் தட்டி பறித்து எடுத்துப்போகிற கடவுள்,என்ன கடவுள்?
நேற்றுக் காலை வரை எல்லாம் நன்றாகவே போய்க்கொண்டிருந்தது. நன்றாகக் கூட இல்லை. மிக நன்றாக. சுதா எனக்குக் கிடைப்பாள் என்று நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. சுதா என் தூரத்துச் சொந்தம். நல்ல அழகி. வீட்டு விசேஷங்களில் மட்டும் எப்போதாவது பார்த்ததுண்டு.
காதல் எல்லாம் இல்லை. மனதின் ஓரத்தில் இவள் என் மனைவியாகக் கிடைத்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் மட்டும் அவளை பார்க்கும் போதெல்லாம் தோன்றும்.
ஆனால், நான் என் கவனத்தை என் முன்னேற்றத்தில் மட்டும் செலுத்தி வந்தேன். நன்குப் படித்து நல்ல வேலையில் சேர்ந்த பொழுது அம்மா தான் போய் பெண் கேட்டாள். என் மனதைப் புரிந்திருப்பாள் போல. எல்லாம் சுகமாய் முடிந்தது இன்னமுமே விளங்காத ஆச்சரியம்.
அழகான ராணியுடன் ஒரு வருடத்திலே அழகிய இளவரசியும் கிடைத்ததால் ராஜ வாழ்க்கை. இதற்கிடையில் சுதாவுக்கு அரசுப் பள்ளியில் ஆசிரியை வேலை கிடைக்க, சந்தோஷம் இரட்டிப்பானது. அம்மா எங்கள் இளவரசியைப் பார்த்துக்கொள்ள சுதா வேலைக்குப்போனாள். அரசாங்க வேலை என்பதால் வேண்டாம் என்று சொல்ல யாருக்கும் மனமில்லை. அவளுடைய கனவு என்பதால் நானும் தடுக்கவில்லை.
திடீரென்று ஒரு நாள் விளம்பரத்தில் வருவது போல் புளிப்பாக ஏதாவது வேண்டும் என்று சொல்லி இனிப்பான செய்தியைச் சொன்னாள் சுதா.அழகான இடைவெளியில் உதித்திருந்ததால் எல்லாருக்கும் சந்தோஷம். இன்பாவிற்கும் ஒரு துணை வேண்டுமில்லையா? இன்பா குட்டியும் அம்மாவின் வயிற்றை அடிக்கடி தடவிப் பார்த்துச் சந்தோஷப்படுவாள்.
“அப்பா நம்ம பாப்பாவுக்கு பொம்மை வாங்கலாமா?” என்பாள் தினமும் ஸ்கூல் விட்டு வரும் போது, “பாப்பா பிறந்த பிறகு வாங்கிக்கலாம்” என்றால் “இப்பவே வாங்கலாம்பா” என்று கொஞ்சுவாள்.
இதோ அப்படி வாங்கிய ஒரு பொம்மையைத் தான் கட்டிக்கொண்டு படுத்திருக்கிறாள். சாப்பிடவில்லை எதுவும். அழுது அழுது தூங்கியேவிட்டாள். மறுபடி எழுந்து அழுவாள் என்ன செய்வது?
முந்தா நாள் தான் சுதா சொன்னாள். “என்னவோ போல இருக்குங்க. இன்னும் இரண்டு நாள் கழித்துத் தான் செக்கப்புக்கு வரச்சொன்னாங்க. ஆறாம் மாசத்தில் செக்கப்புக்குப் போன போது அடுத்த மாசம் பதினெட்டாம் தேதி வாங்க எல்லாம் சரியாயிருக்குன்னாங்க. ஆனா இரண்டு நாளா உடம்பு என்னவோ படுத்துதுங்க” என்றாள்.
“கர்ப்பம்னா அப்படி இப்படி இருக்கத்தானே செய்யும் சுதா”
“இல்லைங்க இன்பா வயித்தில் இருந்தப்போ இப்படி இல்லை” என்றாள்.
“அப்ப நீ சின்ன பொண்ணு. முதல் பிரசவம். உடம்பு அப்ப தெம்பாய் இருந்திருக்கும்” என்று ஏதேதோ சமாதானம் சொல்லி அவளை அமைதிப்படுத்தினேன். அவளை சமாதனப்படுத்துவதன் நோக்கம் மறுபடி மறுபடி லீவ் எடுக்க முடியாது என்பதால் தான். சுதாவுக்குப் பிரச்னை இல்லை. அரசாங்க வேலை. என் வேலை அப்படியில்லையே.
“ஈவினிங் வரும் போது அம்மாவை பார்த்துட்டு வரலாங்க” என்றாள்.
போனோம். அவங்க அம்மாவிடம் ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்தாள். காலைக் காட்டிக்கொண்டிருந்தாள்.
அதற்கு அத்தை “முழுகாம இருக்கும் போது கால் வீக்கம் சகஜம்தான்மா. போன தடவை கூட இப்படி தானே இருந்தது” என்று பேசுவது கேட்டது.
“இல்லைம்மா போனவாட்டி இவ்வளவு இல்லை” சுதா அம்மாவிடம் வாதாடிக் கொண்டிருந்தாள்.
“அம்மா கையால இன்னிக்குச் சாப்பிட்டுப் போ, கால் வீக்கம் எல்லாம் சரியாப் போகும். நீங்க இங்க சாப்பிட்டு எவ்வளவு நாள் ஆச்சு. எங்க…வர்றதே இல்லை. நீ வா குட்டி”. என்று இன்பாவை தூக்கிக்கொண்டு அத்தை உள்ளே போனாங்க.
சாப்பிட்டுக் கிளம்பினோம். கிளம்பும் போது அத்தை சுதாவைப் பார்த்து “காலைல சரியா போயிடும்மா. இல்லைன்னா வீட்டுக்குப் போய் மாமிகிட்ட கேளும்மா என்ன பண்றதுன்னு? பார்த்துகங்க மாப்பிள்ளை. கண்டிப்பா செக்கப்புக்கு நாளன்னைக்கு கூட்டிப் போயிடுங்க” என்றாள்.
வீட்டுக்கு வந்தவள் அசந்து தூங்கிப் போனாள். காலையில் லேட்டா தான் எழுந்தாள். அவள் உருவத்தைப் பார்க்க எனக்கே பயமா இருந்தது. உடம்பெல்லாம் வீங்கினா மாதிரி. அம்மாவிடம் நான் தான் கேட்டேன். “என்னம்மா சுதாவுக்கு உடம்பெல்லாம் வீக்கமா இருக்கே” என்றேன்.
“அது ஒண்ணுமில்லடா. நீர் கோர்த்துட்டு இருக்கும். முருங்கை ஈர்க்கு ரசம் இல்லைன்னா பார்லி தண்ணீ குடிச்சா நீர் வடிஞ்சுடும். அவளை இன்னிக்கு லீவு போடச்சொல்லு” என்றார்.
“இல்ல மாமி இன்னிக்கு எக்ஸாம் டியூட்டி இருக்கு” என்றவள் பார்லி தண்ணியைக் குடித்துக்கொண்டிருக்கும் போதே நான் கிளம்பினேன். “சுதா எனக்கு லேட்டாயிடுச்சு. நீ வேற இன்னும் கிளம்பலை. ஆட்டோவில் போயிடுறியா?” எனக்கேட்டேன்.
சரியென்று தலையாட்டினாள். ஆனால் கண் மட்டும் என்னவோ பேச நினைப்பது போல் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுக்கு என் அருகாமை தேவைப்படுகிறது என்று மட்டும் புரிந்தது. இப்படி அவள் என்னை தொல்லை செய்பவள் இல்லை. இப்பவும் கண்கள் மட்டும் தான் கெஞ்சின. வாய் திறந்து ஒரு வார்த்தை கேட்கவில்லை அவள். ஆனால் என்ன செய்வது கடமை என்னை அழைத்தது. லீவ் போட்டிருக்கலாம். நாளை வேறு லீவ் எடுக்க வேண்டும்.லீவ் எடுத்தால் சம்பளம் பிடிப்பார்கள். எதற்கு? மனதைக் கல்லாக்கி புன்சிரிப்பொன்றை அவளை நோக்கி வீசிவிட்டுக் கிளம்பினேன்.
ஆபிஸுக்குப் போன பிறகு லஞ்ச் முடித்து சீட்டுக்கு வந்தேன். கொஞ்ச நேரத்துக்கெல்லாம் போன். சாந்தா தான் பேசுனாங்க. சுதாவின் பள்ளி தலைமை ஆசிரியை.
“மிஸ்டர் கல்யாண் கொஞ்சம் சீக்கிரம் கிளம்பி ஸ்கூலுக்கு வரமுடியுமா?”
“ஏன் மேடம்?”
“சுதாவுக்கு ரொம்ப முடியலை. கை கால் எல்லாம் வெட்டி வெட்டி இழுக்குது. பக்கத்திலே இருக்கிற கிளினிக்குக் கூட்டிப் போயிருக்காங்க.ப்ளீஸ் சார். கொஞ்சம் சீக்கிரம் வாங்க” “ம்” என்ற சொல்லிக்கொண்டிருக்கும் போதே இணைப்புத் துண்டிக்கப்பட்டது.
ஆபிஸில் எம்டியிடம் சொல்லிவிட்டு போட்டது போட்டபடி கிளம்புவதற்குள் ஒரு ஐந்து நிமிடம் ஆகிவிட்டது. பதற்றத்தில் ஒன்றும் புரியவில்லை. வண்டியைக் கிளப்புவதற்குள் மறுபடி போன். “சார்” இது மோகனாவின் குரல். சுதாவின் நெருங்கிய தோழி. குரலில் பதற்றம் தெரிந்தது.
அந்த குரலின் பதற்றத்தில் என் நெஞ்சு துடிப்பு இன்னும் அதிகரித்தது.”சார் சீக்கிரம் வாங்க சார்.சுதாவை பார்க்க எனக்கு பயமா இருக்கு. ஃபிரஷர் ஜாஸ்தி ஆயிட்டு காக்கா வலிப்பு வந்திருக்கு. கவர்ன்மெண்ட் ஆஸ்பிட்டல் கூட்டிப் போக சொல்லிட்டாங்க. அங்க தான் போயிட்டிருக்கோம். அங்க வந்திருங்க சார் என்றாள்”. “சரி” என்று சொல்வதற்குள் குரல் கம்மியது.
நல்ல வேளை அரசாங்க ஆஸ்பத்திரி பக்கம் தான். வண்டியை ஃபுல் ஸ்பீடு எடுத்தேன். அப்போது தான் சுதாவை ஸ்டெரச்சரில் படுக்க வைத்துக்கொண்டிருந்தார்கள். ஓடினேன். சுதாவிடம் எந்த அசைவும் இல்லை. அவசரச் சிகிச்சைப் பிரிவுக்குத் தூக்கிக்கொண்டு ஓடினார்கள். என்னிடம் என்னென்னவோ பேப்பரில் கையெழுத்து வாங்கினார்கள்.
மோகனா அழுது கொண்டிருந்தாள். என் முகம் வெளிறிப்போனதைப் பார்த்து கூட வந்திருந்த டீச்சர்கள் கிட்ட வந்தாங்க. “மயக்கம் ஆயிட்டாங்க. பயப்படாதீங்க. அதான் ஆஸ்பிட்டல்ல சேர்த்திட்டோம் இல்ல” என்றார் ஒரு டீச்சர் அப்பாவியாய்.
“என்ன நடந்தது?” என்று கேட்டேன். “காலையில் சோர்வா இருந்தா சார். ஏன்னு கேட்டதற்கு காலையில் கஞ்சி சாப்பிட்டதால பசி அதிகமா எடுக்கிறது.அதனால் தான் என்று சொன்னா சார்.
லஞ்சுக்கு சாப்பிட போனப்ப வேகவேகமா சாப்பிட்டா. என்கிட்ட இருந்தும் கொஞ்சம் சாதம் வாங்கி சாப்பிட்டா. வயிறு ஃபுல்லா இருக்கு. ஒண்ணும் முடியலைன்னு சொல்லிட்டிருந்தா. எக்ஸாம் ட்யூட்டி ஆனாலும் அவளால நிக்க முடியலைன்னு எச்.எம் அவளை உட்கார்ந்துக்க சொன்னாங்க. எனக்குப் பக்கத்து ரூமில் தான் ட்யூட்டி. எக்ஸாம் ஆரம்பிச்சது.பக்கத்து ரூமிலிருந்து ஒரு சத்தம். ஓடிப்போனோம். திடீரென்று ஒரு மாதிரி கத்துனா. திரும்பி பார்த்தா கண்ணை மூடிட்டு வாயெல்லாம் ஒரு பக்கம் இழுத்துக்கிட்டு சாய்ஞ்சு விழப்போனா. பிடிக்கப்போகும் போது கை காலெல்லாம் வெட்டி வெட்டி இழுத்துக்குச்சு சார். நான் டிராயர் சாவியெல்லாம் கொடுத்துப் பார்த்தேன். அப்பவும் நிக்கல.
அதுக்கப்புறம் தான் பக்கத்துல இருந்த டாக்டரிடம் அழைச்சிட்டுப் போனோம். அவர் பார்த்துட்டு பிரஷர் அதிகமாயிருககு. கஷ்டமான கேஸ். உடனடியா அரசாங்க ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போங்க. என்றார். அதுக்குள்ள மூச்சுத்திணறல் மாதிரி வந்தது. அப்புறம் தான் இங்க கூட்டிட்டு வந்தோம். வர வழியிலே மயக்கமாகிட்டா சார்”. என்றாள்.
அவள் சொல்லி முடிப்பதற்குள் எனக்கு கை கால் நடுங்க ஆரம்பித்துவிட்டது. கண்களில் பயம் வந்து அப்பிக்கொண்டது. ஆளுக்கொரு மூலையில் தலையைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தோம்.
“அந்தப்பொண்ணுக்குச் சொந்தக்காரங்களை டாக்டர் கூப்பிடுறார்”. என்று சொன்னவுடன் அனைவரும் எழுந்து ஒடினோம். “இல்ல இல்ல யாராவது ஒருத்தர் இரண்டு பேர் வாங்க” என்றாள் அந்த நர்ஸ். “இவர் தான் அவங்க ஹஸ்பண்ட்” எனக்கூட்டத்தில் இருந்த யாரோ சொல்ல என்னை மட்டும் உள்ளே அழைத்துப் போனாள் அந்த நர்ஸ்.பின்னாடியே மோகனாவும் கூடவே வந்துவிட்டாள்.
டாக்டர் சொன்னார். “பிரஷர் ரொம்ப ஜாஸ்தியா இருந்திருக்கு. கர்ப்ப காலத்தில பிரஷர் ரொம்ப ஆபத்தான விஷயம். அதனால தான் அவங்களுக்கு காக்கா வலிப்பு வந்திருக்கு. காக்கா வலிப்பு வந்த சமயத்தில் இவங்க சாப்பிட்டிருந்த சாப்பாடு இவங்களோட மூச்சுக் குழாயை அடைச்சு… அதனால வர வழியிலே மூச்சுத்திணறல் ஏற்பட்டு இவங்க இறந்து போயிருக்காங்க” என்று டாக்டர் சொல்லி முடிக்கும் முன் மோகனா தான் கத்தினாள்.
“அய்யய்யோ… சுதா இப்படி பண்ணிட்டியே” என்ற அவள் அலறலில் வெளியே நின்றிருந்த அவள் பள்ளி ஸ்டாஃப் எல்லாம் ஓடி வந்து…
“ம்… எல்லாமே முடிஞ்சி போச்சி. அவங்க மூச்சுக்குழாய் முழுவதும் சோறு அடைச்சிக்கிட்டுக்கிடந்தது” என்று நாஸ் யாரிடமோ சொல்லிக்கொண்டிருந்தது கேட்டது. சுதாவின் இழப்பும், அதற்கு தானும் ஒரு காரணமாகிப் போனோமே என்று குற்ற உணர்ச்சியும் என்னை தாக்க, இடையில்…
“மாப்பிள்ளை உங்களை நம்பித்தானே மாப்பிள்ளை என் பொண்ணை அனுப்பிச்சேன். இப்படி விட்டுட்டீங்களே”
“அய்யோ… என்கிட்ட ஓடிவந்து சொன்ன குழந்தை வார்த்தையைக் காது கொடுத்து கேட்காம ஏதேதோ சமாதானம் சொல்லி அனுப்பிட்டேனே” என்ற எதைஎதையோ சொல்லி அழுதுகொண்டிருந்த அத்தையின் வார்த்தைகளும் என்னைக் குத்தி குடைய எல்லா சடங்குகளையும் அழக்கூட முடியாமல் வெறும் சடங்காகவே செய்து கொண்டிருந்தேன்.
“டேய்.. அழுதுடுறா” அம்மா சொல்லிக்கொண்டே இருந்தாள். “மச்சான் மனசை விட்டு சொல்லி அழுதுடுறா” என்றார்கள் நண்பர்கள். பாரமாய் நெஞ்சை அழுத்திய அந்த துக்கம் கண்ணீராய் கரைய மறுத்தது.
அம்மாவுக்கு என்னாச்சு என்று புரியாமல் நேற்று முழுவதும் அழுது அழுது சுருண்டுப் படுத்துக்கொண்டிருந்த இன்பா காலையில் எழுந்ததிலிருந்து மறுபடி அழ ஆரம்பித்திருந்தாள்.
யார் யாரோ என்னன்னமோ சொல்லியும் சமாதானம் ஆகவே இல்லை. எதுவும் சாப்பிடவும் இல்லை. அம்மா அவளிடம் கெஞ்சிக்கொண்டிருந்தாள்.
எழுந்தேன். போனவள் அவள் நினைவுகளையும் என்னைவிட்டுப் பிரித்து எடுத்துச்சென்றிருந்தால் இந்த துயரம் இருந்திருக்காது என்று எண்ணியபடி நெஞ்சின் பாரத்தோடு இந்த பாரத்தையும் தோள்களில் சுமந்து கொண்டு வெளியே வந்தேன். ரோட்டில் நடந்துகொண்டிருக்கும் போது அவள் அழுகை குறைந்தது. ஏதோ ஒரு அரவணைப்பை உணர்ந்திருக்க வேண்டும். கொஞ்சதூரம் சென்றவுடன் அவள் ரெகுராய் பொம்மைக்கேட்கும் பொம்மை கடை வந்தது. என்னவோ இடற, “பொம்மை வேணுமாடா? என்றேன்.
“வேணாம்பா, பாப்பா தான் இல்லையே”… என்றாள். எப்படிப்புரிந்தது இவளுக்கு என யோசித்துக்கொண்டிருக்கும் போதே விசும்பலுடன் “எனக்கு அம்மாதான்பா வேணும்” என்றாள்.
என்னுள் ஏதோ உடைந்து சிதற அவளை அணைத்தபடி நான் அலறிய அலறலில் எரிமலையின் சீற்றம் தெருவெங்கும் நிறைந்திருந்தது.
– இந்த கதை கல்கியில் 2014 மே மாதம் வெளிவந்தது.