பத்திராதிபன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 23, 2024
பார்வையிட்டோர்: 861 
 
 

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

எனக்குச் சிறிதும் பிடிக்காதவைகளில் முதன்மையானது நான் எழுதும் கதை,கட்டுரை, நாடகம் முதலியவைகளைப் படிப்பவர்கள் அவைகளில் குற்றங் கண்டுபிடித்துக் குறை கூறுவதுதான். நமது அறிவை வளர்த்துக் கொள்வதற்கான அறிவுரை என்று அதனை ஏற்று, தவறைத் திருத்திக் கொள்ளும் மனப் பண்பு இன்னும் எனக்கு வரவில்லை. பத்து மாதம் சுமந்து பெற்ற தாய்ப் பாசத்தை நான் என் சிருஷ்டிகளிடம் கொண்டிருந்தேன். அவைகளைக் குறை கூறுவது என் நெஞ்சில் முள் தைப்பது போலிருக்கும். ஆனால் அதைவிட மோசமான சம்பவம் ஒன்று அன்று நிகழ்ந்துவிட்டது.

இரவு மெயிலில் நான் கோலாலம்பூருக்குப் போய்க் கொண்டிருந்தேன். எனக்குப் பின்புறமுள்ள ஆசனத்தில் இருவர் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தது அந்த ரயில் ஓட்டத்திலும் என் காதுகளில் தெளிவாக விழுந்தது. அவர்கள் சம்பாஷணை எங்கெங்கோ சுற்றிக் கடைசியாக பத்திரிகைத் தொழிலுக்கு வந்து அதைச் சுற்றிச் சுற்றி தட்டாமாலை ஆடியது. புதிதாக வெளி வந்த ஒரு தமிழ்ப் பத்திரிகையின் தரத்தைக் கண்டு ஒரு கனவான் வயிறெரிந்தார். அப்படிப்பட்ட வாய்ப்பு தமக்குக் கிடைக்கவில்லையே என்ற பொறாமை, குன்றின் மேலிட்ட தீபம் போல் துலக்கமாகத் தெரிந்தது. அந்தப் பத்திரிகையை எப்படி ஒழித்துக் கட்டுவது என்று ஆயாசத்துடன் தம் நண்பரை யோசனை கேட்டார். அதற்கு அவர் நண்பர் சொன்ன பதில்தான் என்னைத் தூக்கி வாரிப் போட்டது.

“இதற்கு ஏன் இவ்வளவு யோசிக்கிறீர்கள்? சிங்கப்பூரில் (என் பெயரைக் குறிப்பிட்டு) அவர் இருக்கிறார். அவரை விட்டு அந்தப் பத்திரிகைக்கு ஏதாவது விஷயதானம் செய்யச் சொல்லுங்கள். அவருடைய எழுத்தைப் பிரசுரித்த அந்தப் பத்திரிகை அந்த இதழோடோ அல்லது அடுத்த இதழோடோ செத்துப் போகிறதா இல்லையா வென்று பாருங்கள்” என்றார்.

‘அப்படியா! எனக்கு இது தெரியாதே! சுலபமான வழியாக இருக்கிறதே!”

“என்றும் சிரஞ்சீவியாக வாழுமென்று நம்பியிருந்த ‘பாரதி’ ‘பாரதியாரின் கவிதா மண்டலம்’ முதலிய தமிழ் நாட்டுப் பெரிய பெரிய பத்திரிகைகளெல்லாம் அவர் பேனா முனை பட்ட மாத்திரத்தில் மாண்டு மடிந்து போயின; இந்த அற்பப் பத்திரிகை எம் மாத்திரம்? நான் சொன்னபடி செய்யுங்கள்” என்று தமது கட்சிக்கு ஆதாரம் காட்டிப் பேசினார் அந்த நண்பர்

நேயர்களே, இந்த வார்த்தைகள் எனக்கு எப்படி இருக்கும்? உண்மையில் நான் எழுதிய பல புதிய பத்திரிகைகள் எதிர்பாராதபடி செத்துத்தான் போய்விட்டன. அதற்கு என் எழுத்துக்கள் தானா காரணம்? இந்த மனிதரின் மனோபாவத்தைப் போல் இன்னும் எத்தனைப் பேர் கொண்டிருக்கிறார்களோ? இவர்களுடைய தப்பபிப்ராயத்தை எப்படிப்

போக்குவது?

ஆம். இந்த விஷமப் பிரசாரத்தை முளையிலேயே கிள்ளி எறிவதற்கு நாமே ஒரு தமிழ்ப் பத்திரிகை ஆரம்பித்துத் தொடர்ந்து நடத்தி வருவது தான் சிறந்த வழி. இந்த எண்ணம் தோன்றிய அதே சமயத்தில் என்னுடைய பொருளாதார நெருக்கடி என்னை அச்சுறுத்தியது. தரித்திர நாராயணனின் பேரருளைப் பரிபூரணமாகப் பெற்ற அடியேன் எவ்வாறு பொருளைத் தேடிப் பத்திரிகை யானைக்குத் தீனி போடுவது? உடனே என் அரிய நண்பர் ஒருவர் நீண்ட நாட்களுக்கு முன்னர் கூறிய அரிய யோசனை ஞாபகத்திற்கு வந்தது. அவர் குதிரைப் பந்தய விளையாட்டுக் கிளப்பின் அங்கத்தினர். என்னையும் அந்தக் கிளப்பில் ஓர் அங்கத்தினராக்கி, குதிரைப் பந்தயச் சீட்டு ஒன்று எடுத்து என்னுடைய அதிர்ஷ்டத்தைப் பரிசோதிக்க வேண்டுமென்பதே அவர் தெரிவித்த யோசனை.

காலதாமதம் செய்யாமல் அந்தக் கிளப்பில் சேர்ந்து ஒரு வெள்ளிக்குப் பந்தயச் சீட்டு ஒன்று எடுத்தேன். அதை மேலுங் கீழுமாகப் புரட்டிப் பார்த்தேன். எண்களை பலமுறை படித்தேன். சோபாவில் படுத்திருந்த என் மூளை இப்போது நன்றாக வேலை செய்யத் தொடங்கியது.

ஆகா! இந்தக் குதிரைப் பந்தயம் மனிதரின் வாழ்க்கையை எவ்வளவு துரிதமாக மாற்றி விடுகிறது! குதிரைப் பந்தயத்தால் கெட்டவர் கோடாணு கோடி. ஆனால், குதிரைப் பந்தய பிரைஸ் விழுந்துவிட்ட ஏழையின் நிலைமையோ? என்னைப் போன்ற ஏழைகள் சிலர் குதிரைப் பந்தயப் பிரைஸ் அடித்துவிட்டது என்று கேட்ட அந்த வினாடியே அளவு மீறிய மகிழ்ச்சிப் பரவசத்தால், ‘ஆ!’ வென்று ஏங்கி அப்படியே தம் உயிரை விட்டு விட்டதாகச் சொல்லுகிறார்கள். நமக்கும் அந்தக் கதிதானோ?..சே! அவ்வாறெல்லாம் அசட்டுத் தனமாக உயிரைப் போக்கிக் கொள்ளக்

கூடாது.

இவ்வாறு சிந்தனைக் கடலுள் ஆழ்ந்திருக்கும்போது குதிரைப் பந்தய நண்பர் ஓட்டம் ஓட்டமாக ஓடி வந்தார். அவருடைய முகத்தில் காணப்பட்ட பெரு வியப்பே வந்த செய்தியைப் பறை சாற்றியது. ஆம். எனக்கு நாற்பதினாயிரம் வெள்ளி கொண்ட முதல் பிரைஸ் அடித்து விட்டது! நூற்று இருபத்து ஏழாவது தடவையாக என்னுடைய பந்தயச் சீட்டையும், நண்பர் கையிலிருந்த தினசரிப் பத்திரிகையில் அழகாகப் பொறித்திருந்த எண்ணையும் சரி பார்த்து ஐயத்தைப் போக்கிக் கொண்டேன். இதற்கிடையில் என் கையிலிருந்த மேற்படி அதிர்ஷ்ட சீட்டை ஆனந்த மிகுதியால் ஆயிரத்தோரு தடவை முத்தமிட்டிருப் பேனென்று சொல்லலாம்.

அடுத்த சில நாட்களிலேயே பிரபல கணவான்களின் நல்லாசியுடன் என்னுடைய பத்திரிகை நிலையம் தோன்றிற்று. அதற்கு மறுநாளே ‘அணுக்குண்டு’ என்ற எனது பத்திரிகை வெளியாயிற்று.

பத்திரிகை ஆரம்பித்த இரண்டு வாரங்களுக்குள்ளேயே பொது மக்களிடமிருந்தும் சக பத்திரிகைகளிடமிருந்தும் என்னுடைய பத்திரிகைக்கு மதிப்புரைகள்? (அல்லது நீங்கள் வேறு எவ்விதமாக வைத்துக்கொண்டாலும் சரி) வந்து குவிந்து கொண்டேயிருந்தன.

இதற்கிடையில் நான் பத்திரிகைத் தொழிலில் மிகவும் தேர்ச்சி பெற்று விட்டேனென்று சொல்லலாம். தடியனை ‘சதைப் பற்று மிகுந்துள்ளவன்’ என்றும், முட்டாளை, ‘அறியாமை வசப்பட்டவன்’ என்றும், அந்தக் காரியம் முடியும் என்பதற்கு ‘அந்தக் காரியம் நிறைவேறுவதற்குரிய வழி திறந்து விடப்பட்டிருக்கிறது’ என்றும் விளக்கெண்ணெய் நடையில் எழுதக் கற்றுக்கொண்டேன். அப்படியிருந்தும், இந்தப் பொல்லாத பொது மக்கள் என்னுடைய எழுத்தில் குற்றங் கண்டு பிடித்துத் தூற்றி வந்தார்கள்.

இவ்வாறாக, ஆறு மாதங்கள் கழிந்தன. இதற்குள் பேங்கில் போட்டிருந்த தொகையும் சிறுகச் சிறுகக் குறைந்து 200 வெள்ளிக்கு வந்துவிட்டது. என்னுடைய பத்திரிகை ஸ்தாபனம் திவாலாகும் சமயம். இப்பொழுதுதான் இடிமேலிடி இடித்தது போல் சம்பவங்கள் சந்தித்தன.

உள்ளுர்ப் பத்திரிகையொன்றில் சில காலத்திற்கு முன்பு சிறுகதைகள் எழுதி வந்தேன். அவைகளெல்லாம் வெறும் பொழுது போக்குக் கதைகள் என்றே எண்ணி வந்தேன். ஆனால் இவ்வாறு நேரும் என்று எதிர் பார்த்தேனா?

ஒரு நாள் எனது பத்திரிகாலயத்தில் ஆண்களும், பெண்களுமாக ஒரு கும்பல் காணப்பட்டது. அவர்கள் எல்லாருடைய முகங்களும் என்னையே முறைத்துப் பார்த்தது எனக்குச் சிறிது அச்சத்தையும், வியப்பையும் அளித்தது. பிறகு மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு, தொந்தியும் தொப்பையுமாக இருந்த ஒருவரையணுகி, “அய்யா, என்ன விசேஷம்? எதற்காக இங்கே கூட்டம் போட்டிருக்கிறீர்கள்? நான் உங்கள் எல்லாரையும் எங்கோ பார்த்த ஞாபகமிருக்கிறது. ஆனால், திட்டமாகச் சொல்ல முடியவில்லை” என்றேன்.

இதைக் கேட்ட அந்த மனிதர் கடகட வென்று நகைத்து, “ஏன் பொய் சொல்லுகிறீர்? என்னை நன்றாகப் பாரும். நீர் எழுதினீரே ‘கிராமபோன் சண்டை’ என்ற சிறுகதை. அந்தக் கதையின் கதாநாயகனான தம்புசாமி பாகவதரே நான். என்னை ஏனய்யா அவ்வாறு தூற்றி எழுதியிருக்கிறீர்? உமக்கு நான் என்ன செய்தேன்? அது இருக்கட்டும். உமக்குச் சங்கீத ஞானம் உண்டா? சுருதி சுத்தமாகப் பாட முடியுமா? எங்கே பார்க்கலாம். ஓர் இராக ஆலாபனை செய்யும். உம்முடைய வண்டவாளத்தை நான் பார்க்கிறேன்” என்று சரமாரியாகக் கேள்விகளை விடுக்க ஆரம்பித்தார்.

அவருக்கு அருகிலிருந்த மற்றொரு மனிதர், “அய்யா, கதாசிரியரே, நான் யார் தெரியுமா? நான் யார் தெரியுமா? நன்றாய்ப் பாரும். நன்றாய்ப் பாரும். உம்முடைய இரத்தந்தோய்ந்த பேனா வழியாக வந்த பக்கிரி சாமியென்ற கொலை பாதகனே நான். நீதி நெறி பிறழாத என்னைக் கொலைபாதகன் என்று எழுதிய உம்மை இப்பொழுதே கொல்லப் போகிறேன்” என்று கர்ஜித்தார்.

“அய்யா, நாவலாசிரியர் என்று சொல்லிக் கொள்ளுகிறவரே, நீர் அக்காள் தங்கையுடன் பிறந்திருக்கிறீரா? உமக்குப் பெண்கள் மானத்தின் மதிப்புத் தெரியுமா? ஒரு பெண்ணின் அந்தரங்க நடவடிக்கைகளைப் பற்றி எழுதுவதற்கு முன் அப்படி எழுத யாரிடம் சுதந்திரம் பெற்றீர்? ‘இதுதான் வாழ்க்கை!’ என்ற உம்முடைய கதையில் மல்லிகா என்ற என்னை நீர் படுத்தியிருக்கும் பாட்டை நினைக்கும் போது-அய்யோ” என்று ஒப்பாரி வைத்து அழத் தொடங்கி விட்டார்.

என்ன செய்வதென்று தெரியாமல் ‘பேந்தப் பேந்த’ விழித்தேன். பிறகு அவர்களில் ஒருவர் முன் வந்து, “அய்யா, இப்படி மவுனம் சாதித்தே எல்லாரையும் ஏமாற்றுவதுபோல் எங்களையும் ஏமாற்றி விடலாமென்று மனப்பால் குடிக்க வேண்டாம்.

நீர் எங்களை இழிவுபடுத்தியதற்கு உம்முடைய பத்திரிகையில் உம்மையே இழிவுபடுத்திக் கொள்ளும் வகையில் ஒரு கதை எழுதி வெளியிட வேண்டும். அதற்கு ஆதாரமாக இப்பொழுதே ஓர் உடன் படிக்கைப் பத்திரமும் எங்களுக்குத் தயாரித்துக் கொடுக்க வேண்டும்” என்று வற்புறுத்தினார். வேறு வழியின்றி நானும் அதற்குச் சம்மதித்தேன்.

அதே நிமிஷத்தில், “சார், இந்தக் ‘கால’த்தில் வெளியிட்ட ‘தலையாட்டித் தம்பிரான்கள்’ என்ற கட்டுரையில் ‘தலை போன தம்பிரான்கள்’ என்றிருக்கிறதாம்!” என்று என் பத்திரிகை காரியாலயத் திலுள்ள ஒருவர் ஓர் அச்சுப் பிழையைக் காண்பித்தார். மற்றொருவர், நான் எழுதிய தலையங்கமொன்றில் தன்னையும் தன் சகாக்களையும் தாக்கியிருப்பதாக, ‘எண்பத்து மூவர் திருக்கூட்டம்’ கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்களாம்! என்ற திடுக்கிடும் செய்தியைத் தெரிவித்தார். “சார், சார்! தங்கள் பத்திரிகை, ‘குடிகேடன்’ பத்திரிகை விஷயங்களில் சிலவற்றை அனுமதியின்றி எடுத்தாண்டிருக்கிறதாம். அதற்காக அந்த ஆசிரியர் தங்கள் மீது வழக்குத் தொடரப் போகிறாராம்!” என்றார் வேறொருவர். இடையிடையே, “ஆசிரியர், ஆசிரியர், துரிதமாக ‘மேட்டர்’ கொடுங்கள். ‘பிரிண்டாக’ வேண்டும்” என்ற கூப்பாடு.

அட சனியனே! இந்தப் பத்திரிகைத் தொழில் யாருக்கு வேண்டும்? “அய்யோ! என்னைத் துன்புறுத்தாதீர்கள். நான் பத்திராதிபனல்ல” என்று என் தலையில் அடித்துக்கொண்டு கதறி அழுதேன்.

நல்ல வேளை சார்! குதிரைப் பந்தயச் சீட்டை வாங்கிக்கொண்டு சிறு துக்கத்தில் ஆழ்ந்ததின் பயன் இத்தகைய பயங்கரக் கனவாக முடிந்தது; பிழைத்தேன்.

– கவிஞர் ந.பழநிவேலுவின் படைப்புக் களஞ்சியம் (தொகுதி 2), முதற் பதிப்பு: பெப்ரவரி 1999, ப.பாலகிருட்டிணன், சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *