தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 10,251 
 

ஓர் ஊரில் பால்காரர் ஒருவர் இருந்தார். அவர் பாலில் சரிக்குச் சரி தண்ணீர் கலந்து வீடுகளுக்கு ஊற்றுவார். பால் வாங்குபவர்கள் அனைவரும் அவரைத் திட்டுவார்கள்.

“ஏங்க, பால்ல இவ்வளவு தண்ணி கலக்குறீங்க’ என்று அவனது மனைவி கேட்பாள்.

“நீ வேற, விவரம் தெரியாம பேசாத… தவிடு, பொட்டு எல்லாம் என்ன வெலை விக்குது தெரியுமா?’ என்று கூறி அவளை அடக்கி விடுவார்.

ஒவ்வொரு மாதமும் 5-ஆம் தேதி பணம் வசூல் செய்து விடுவார். அவ்வாறு ஒருமுறை வசூல் செய்துவிட்டு களைப்போடு ஊருக்குத் திரும்பினார். வழியில் ஓர் ஆறு. அந்த ஆற்றங்கரையில் ஒரு மரத்தடியில் அமர்ந்தார். அது ஓர் ஆலமரம். அதில் ஒரு குரங்கு இருந்தது.

பால்காரர் அதை கவனிக்காமல் உட்கார்ந்து, கொண்டு வந்து பணமூட்டையைப் பிரித்தார். வசூல் பணத்தை எண்ணிக் கொண்டிருந்தார். பாதியை எண்ணித் தனது மேல் சட்டையில் போட்டுக் கொண்டார்.

மீதியை எண்ண ஆரம்பித்தார். அப்போது அவருக்குத் தெரிந்த ஒருவர் அவ்வழியே வந்தார். பால்காரரை என்ன இவ்வளவு தூரம் என்று விசாரித்தார். அந்தச் சமயம் பார்த்து அந்தக் குரங்கு கீழே இறங்கி வந்து அவரின் பணமூட்டையை எடுத்துக் கொண்டு மரத்தின் உச்சிக்குப் போய்விட்டது.

அதிர்ந்து போன பால்காரர் மரத்தில் ஏறினார்.

ஆனால் குரங்கு மரக்கிளையின் உச்சிக்குச் சென்று, அந்தப் பணமூட்டையை ஆற்றுக்குள் வீசிவிட்டது. சுழித்துக் கொண்டு ஓடிய ஆற்றோடு பணமூட்டையும் அடித்துச் செல்லப்பட்டது.

சுளையாகப் பணத்தைக் கோட்டைவிட்ட பால்காரர் ஏமாந்துபோய் வீடு திரும்பினார்.

முகம் வாடி வந்த கணவரிடம் “என்ன நடந்தது?’ என்று அவரது மனைவி விசாரித்தார். உடனே அவர் நடந்ததைக் கூறி வருந்தினார். “பாதிப் பணமே மிஞ்சியது’ என்றார்.

அதற்கு அவருடைய மனைவி, “தண்ணிக்காசு, தண்ணியோடு போச்சு! பால்காசு நம்மோடு வந்துச்சு!’ என்றாள்.

பொட்டில் அடித்தாற்போலிருந்தது பால்காரருக்கு!

இனிமேல் நேர்வழியில் நடப்பேன் என்று உறுதி எடுத்துக் கொண்டார்.

– கா.முருகேஸ்வரி, கோவை. (ஜனவரி 2013)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *