என்னங்க.. நான் ஒண்ணு சொல்லட்டுமா..ப்ரீத்தி கொஞ்சினாள்.
ஹும் சொல்லு – இது ராகுல்..
குழந்தைய வளத்து கொடுக்கத்தான் இப்போ உங்க அக்கா வீட்டோட இருக்காங்களே.. நம்ம இன்னொரு குழந்தைக்கு ப்ளான் பண்ணா என்ன.. கீர்த்தனாவுக்கும் வயசு 5 முடியப் போவுது.
கரெக்ட் தான் நீ சொல்றது. அக்கா எவ்வளவு பொறுப்பா பாத்துக்கிறா இல்ல கீத்துவ. இவ இங்க இருக்கிறதனால தான் போட்டது போட்ட இடத்தில வெச்சிட்டு நம்ம ரெண்டு பேரும் ஹேப்பியா வேலைக்கு போய்ட்டு வறோம்.
உனக்கு ஒண்ணு தெரியுமா அந்த ஆள் எங்க அக்காவ விட்டுட்டு ஓடின பிறகு வீட்டோட வந்தவளுககு இன்னொரு கல்யாணம் பண்ணி வைடான்னு எங்கம்மா எவ்வளவு சொல்லியும் நான் purpose ஆ பார்க்காம இருக்கிறதுக்கு காரணம் இன்னுமா புரியல உனக்கு.
சத்தமா பேசாதீங்க, அவங்க காதுல விழுந்திடப் போகுது.
விழுந்திட்டா மட்டும் என்ன ஆயிடும். இத்தனை வயசுக்கப்பறம் என்ன போக்கிடம் எங்க அக்காவுக்கு. நம்ம கிட்ட இருக்குறது தான் safe அவங்களுக்கு. நமக்கும் பெரிய ஒத்தாசை. சம்பளமே இல்லாம பொறுப்பா இப்பிடி ஒரு ஆள் கிடைக்குமா டார்லிங்…
தம்பி ராகுலின் மனதில் இவ்வளவு அழுக்கா.. இவையணைத்தையும் கேட்ட கங்காவின் மனம் வெம்பியது. அன்றிரவு தூக்கமே வராமல் புரண்டாள்..
மறுநாள் காலை.
என்னங்க எந்திரிங்க. வாசல்ல கோலம் போடல. காஃபிக்கு டிகாக்ஷன் அடிக்கல. டிஃபன் எதுவும் ரெடியானா மாதிரி தெரியில. உங்க அக்காவையும் காணோமே. எங்கங்க போயிருப்பாங்க இவ்வளோ காலங்கார்த்தால.
இரு இரு. பதறாத. இங்கதான் பக்கத்துல எங்கேயாவது மளிகை கடைக்கு போயிருப்பாங்க.
நேரம் ஆனது. கங்கா இன்னும வரவிலலை. இப்போது பதட்டம் ராகுலை தொற்றிக் கொண்டது.
என்னங்க, நம்ம பேசியதை எல்லாம் கேட்டிருப்பாங்களோ..நான் சீக்கிரம் போகணும் ஆபீஸுக்கு இன்னிக்கி. கீர்தனாவ ரெடி பண்ணனும் ஸ்கூலுக்கு. எனக்கு ஒண்ணும் புரியல. கொஞ்சமாவது அறிவிருக்கா அவங்களுக்கு.
வெயிட். நான் போய் பார்த்துட்டு வரேன். சட்டைய எடு.
எங்கு தேடியும் கிடைக்கவில்லை. ஒரு வாரம் ஓடியது. கடைசியில் போலீசில் புகார் கொடுக்க சென்றனர்.
ஏம்ப்பா இப்படியா ட்ரீட் பண்ணுவ கூட பொறந்தவள. ஒண்ணும் ஆயிருக்காது. கண்டு பிடிச்சிடலாம. கான்ஸ்டபிள் நம்ம இடத்தை சுற்றி இருக்கும் லேடீஸ் ஹாஸ்டல் எல்லாம் போய் தேடி பாருங்க. By the bye உங்க அக்காவுக்கு குழந்தைய பராமறிக்கிறது ரொம்ப பிடிக்கும்னு சொன்னீங்க இல்ல. குழத்தைகள் காப்பகம் எங்கெல்லாம் இருக்கோ அங்கேயும் தேடுங்க. Mr.ராகுல் நீங்க கான்ஸ்டபிள் கூட போங்க. Don’t worry. வந்துருவாங்க. Human values ஏ தெரியல. நீங்கள்ளாம் எப்படி H.R. ல பெரிய போஸ்ட்ல இருக்கீங்களோ..
இன்ஸ்பெக்டர் சொன்ன படியே கடைசியில் ஒரு குழந்தைகள் காப்பகத்தில் அக்கா கங்காவை பார்த்தான் ராகுல்.
அக்கா ப்ளீஸ் வாங்க்க்கா. நீங்க இல்லாம ஒண்ணுமே நடக்காதுக்கா அங்க.
விரக்தியாக பார்த்தாள். நடந்ததற்கு மன்னிப்பு கேட்டு வருந்தி அழைக்காமல் இப்பவும் அங்க ஒரு வேலையும் நடக்காது. அதற்காக நான் வரணும்னு நினைக்கிற சுயநலத்தை எண்ணி மனதிற்குள் வைராக்கியத்தை வரவழைத்துக் கொண்டாள்..
உன் குழந்தையை இங்க கொண்டு வந்து விடு. பத்தோட பதினொண்ணா பாத்துக்கிறோம். பொறக்கப்போற குழந்தையையும் பார்த்துப்போம் நாங்க. இங்க எனக்கு சம்பளமும் தராங்க. மனசுக்கும் நிம்மதியா இருக்கு இந்த சூழ்நிலை. என் டைம் வேஸ்ட் பண்ணாத கிளம்பு. எனக்கு நிறைய வேலை இருக்கு.