ஒருத்திக்கே சொந்தம்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 1, 2023
பார்வையிட்டோர்: 5,037 
 

(1980ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம்-6 | அத்தியாயம்-7 | அத்தியாயம்-8

காலையில் சோர்வுடனேயே எழுந்து, குளித்துவிட்டு, ஷூட்டிங்குக்குப் புறப்பட்டான். 

அன்று முழுவதும் அவன் கவனம் வேலையில் இல்லை. எப்படியோ ஒரு விதமாகப் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு, மாலையில் ஆஸ்பத்திரிக்குச் சென்றான். டாக்டர் கோபாலைச் சந்தித்தான். கிருஷ்ணசாமியின் உடல்நிலை கவலைக்கிடமாய் இருப்பதாக டாக்டர் கூறினார். பத்மினி தனது வீட்டில் ஜானகி அம்மாளுடைய பாதுகாப்பில் பத்திரமாக இருப்பதாகச் சொன்னார். கிருஷ்ணசாமியின் அறைக்குச் சென்று ரவி பார்த்தான். அவர் உறங்கிக் கொண்டிருந்தார். அவரை எழுப்ப விரும்பாமல் வீட்டுக்குச் சென்று விட்டான். 

சாந்தா அவனைப் புன்னகையோடு வரவேற்றாள். அன்று முழுவதும் அவள் தீர்க்கமாக யோசித்திருந்தாள். ஒரே ஒரு நாள் சற்றுத் தாமதமாக ரவி வீடு திரும்பியதற்காகத் தான் அவ்வளவு ரகளை செய்திருக்கக் கூடாது என்று நினைத்தாள். உண்மை எதுவாக இருந்தாலும், நேற்றைய விஷயம் நேற்றோடு போகட்டும். மறுபடியும் அந்தப் பிரசினையைக் கிளப்ப வேண்டாமென்ற முடிவுக்கு வந்தாள், அவசரப்பட்டு, ஏதேதோ கற்பனை செய்து பைத்தியம் மாதிரி இவ்வளவு நல்ல கணவரைச் சந்தேகப்படக் கூடாதென்று தன்னைத் தானே கண்டித்துக் கொண்டு, மனத்தைப் பக்குவப்படுத்திக் கொண்டாள். சாந்தாவுக்கும் ரவி மீது அலாதி பிரியம். அவன் ஒரு வினாடி அவளிடம் முகத்தைக் கோணிக் கொண்டாலும் அவளால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியாது. சாந்தா சிரித்த முகத்தோடு அவனை வரவேற்றதும், ரவிக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. 

”என்ன? இன்னிக்கு அலங்காரமெல்லாம் ரொம்ப ஜோரா இருக்கே? என் மேலே கோபம் எல்லாம் தீர்ந்து போச்சா?” என்று கேலி செய்தான். 

“அதெல்லாம் ஒண்ணுமில்லே,” என்றாள் வெட்கத்துடன் 

“என்ன ஒண்ணுமில்லேங்கறே? மல்லிகைப் பூ வச்சுட்டிருக்கே. பட்டுப்புடவை கட்டிட்டிருக்கே, என்ன விஷயம்?” 

“போய்க் குளிச்சுட்டு வாங்க, சொல்றேன்.”

சிரித்துக் கொண்டே ரவி குளிக்கச் சென்றான். குளித்த பிறகு வெளியே வந்து பார்த்தால், அவனுடைய அறையில் பலவிதமான பலகாரங்களையும், இனிப்பு வகைகளையும் சாந்தா மேஜை மீது பரிமாறிக் கொண்டிருந்தாள். 

“ஏய், என்ன இதெல்லாம்?” 

“டிஃபன். அவ்வளவுதான்”. 

“அவ்வளவுதானா? பார்த்தா என்னமோ கல்யாண விருந்து மாதிரி இல்லே இருக்கு? என்ன விசேஷம்?” 

‘ஒண்ணுமில்லே. உங்களுக்குப் பிடிச்சதையெல்லாம் பண்ணி வைச்சேன்”. 

ரவியின் கண்களில் கனிவு பிறந்தது. பாவம், சாந்தா! அவள் ஒரு வெகுளி. அவளுக்குத்தான் அவன் மீது எவ்வளவு அன்பு!

“வா சாந்தா, என் பக்கத்திலே வந்து உட்காரு” என்று அழைத்தான். 

வந்து உட்கார்ந்தாள். 

“இந்த அதிரசத்தைச் சாப்பிடுங்கள். உங்களுக்கு ரொம்பப் பிடிக்குமே,” என்றாள். 

“நீ ஊட்டி விடு,” என்றான். 

“போங்க, என்ன இது… குழந்தை மாதிரி!” என்றாள். ஆனால் உள்ளுக்குள்ளே ஒரே மகிழ்ச்சி வெள்ளம். 

“நீ ஊட்டி விடலேன்னா நான் சாப்பிட மாட்டேன்!” 

“சரி, இந்தாங்க!” ஓர் அதிரசத்தை எடுத்து சாந்தா அவனுக்கு ஊட்டி விட்டாள். 

அதில் ஒரு கடி கடித்து. ரவி மீதியைச் சாந்தாவின் வாயினுள் திணித்து விட்டான். நாணத்தோடு சாந்தா அதைச் சாப்பிட்டாள். 

ஸ்ரீதர் அப்போது உள்ளே ஓடி வந்தான். அவனுக்கு வயது மூன்று. “அப்பா, அப்பா! எனக்கு!” என்றான். 

“அடடே, ஸ்ரீ கண்ணா! வா வா!” என்று குழந்தையைத் தன் மடிமேல் தூக்கி வைத்துக் கொண்டு ரவி அவனுக்கும் பலகாரம் ஊட்டி விட ஆரம்பித்தான். 

“பாருங்களேன் அவனை, தூங்க வைச்சுட்டு இப்பத்தான் வந்தேன். அதுக்குள்ளே என் பின்னாலேயே ஓடி வந்துட்டான்,” என்றாள் சாந்தா. 

“பரவாயில்லை. கொஞ்ச நேரம் இருக்கட்டும்.” 

“எப்போ பார்த்தாலும், தூங்கு தூங்குன்னு சொல்லிட்டே இருந்தா, நான் எப்போதான் அப்பாவை பார்க்கிறது?” என்று கேட்டான் ஸ்ரீதர். 

“சுண்டைக்காய் மாதிரி இருந்துகொண்டு என்ன பேச்சுப் பேசறான் பாருங்களேன்!’ என்றாள் சாந்தா. 

“உன் பிள்ளையாச்சே! கேக்கணுமா!” என்று ரவி கிண்டல் செய்தான். 

“ஆமாமாம். நான் அவ்வளவு பெரிய வாயாடியாக்கும்! பாருங்க, அதுக்கு மேலே அவனுக்கு ஸ்வீட் கொடுக்காதீங்க. அவனுக்கு ஒத்துக்காது. ஸ்ரீ குட்டி! அப்பாவுக்கு குட் நைட் கிஸ் கொடு. சமத்தா போய்த் தூங்கலாம் வா,” என்றாள் சாந்தா. 

“என்ன தூங்கலாம் வான்னு சொல்றே? நீ அப்பா கூடத் தானே தூங்கப் போறே? என் கூடவா தூங்கப் போறே?” என்று மழலை மொழியில் கேட்டான் ஸ்ரீதர். 

“சும்மாயிருடா போக்கிரி! இந்த வயசுலேயே என்ன குறும்பு பார்த்தீங்களா?” என்றாள் சாந்தா. 

ஸ்ரீதர் ரவியின் கன்னத்தில் முத்தமிட்டு, “குட் நைட் பா,” என்றான். 

ரவியும் குழந்தையின் இரு கன்னங்களிலும்  முத்தமிட்டான். ”குட் நைட் கண்ணா.” 

சாந்தா குழந்தையைத் தூக்கிச் சென்று, அவனுடைய தனி அறையில் படுக்க வைத்துத் தூங்க வைத்தாள். பிறகு, அவனைக் கவனித்துக் கொள்ள ஆயாவிடம் சொல்லிவிட்டு ரவியுடைய அறைக்கு மீண்டும் வந்தாள். 

“தூங்கிட்டானா?” 

“உம்”. 

“கதவைச் சாத்திட்டு இங்கே வா.” 

கதவைத் தாழ் போட்டுவிட்டுச் சாந்தா வந்து அவனருகில் அமர்ந்தாள். ரவி அவளைக் கிட்டே இழுத்துக் கொண்டு, நெஞ்சோடு அணைத்துக் கொண்டான். சாந்தா அவன் மார்பில் தனது முகத்தைப் புதைத்துக் கொண்டு, கண்களை மூடிக் கொண்டாள். ‘நான் இவரைப் பத்திச் சந்தேகப்பட்டதெல்லாம் தப்பு. என் மேலே எவ்வளவு பிரியமாக இருக்கிறார்!’ என்று நினைத்துக் கொண்டாள். 

ஏதோ சாந்தா இப்போது நல்ல மூடிலே இருக்கிறாள்; இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக் கொண்டு பத்மினியைப் பற்றி மெதுவாக அவளுக்கு இப்போதே சொல்லி விடலாமா என்று ரவி யோசித்துக் கொண்டிருந்தான். அப்போது சொல்லி வைத்தாற்போல் சாந்தா, ”என்னங்க, நாம எப்பவும் இப்படியே இருக்கணும். நம்ம ரெண்டு பேருக்கும் நடுவிலே காத்து நுழைஞ்சாக்கூட என்னாலே தாங்கிக்க முடியாது,” என்றாள். 

ரவி அப்படியே மௌனமாக இருந்து விட்டான்.இப்படிச் சொல்லும் சாந்தாவிடம் எப்படி பத்மினியைப் பற்றிப் பேசுவது? 

எதுவும் சொல்ல முடியாமல் ரவி தவித்தான் ‘கடவுளே! கள்ளங்கபடமில்லாமல் என்னையே தெய்வமா நினைக்கிற சாந்தாகிட்டே நான் எப்படி பத்மினி விஷயத்தை உடைக்கப் போறேன்? எனக்கு ஒண்ணுமே புரியலையே!’ என்று அவன் வேதனைப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், கட்டில் பக்கத்தில் பெட்ஸைட் டேபிளில் இருந்த அவனுடைய பிரைவேட் போன் மணி அடித்தது.சட்டென்று ரவி போனை எடுத்தான். 

“ஹலோ?” 

”ரவி? நான் கோபு பேசறேன்”. 

“என்ன விஷயம்?” 

“கிருஷ்ணசாமிக்கு ரொம்ப ஸீரியஸா இருக்கு. இதுதான் கடைசி ஸ்டேஜ் மாதிரி எனக்குத் தெரியுது. நீ உடனேயே வந்தா தேவலை.” 

“இதோ, பத்தே நிமிஷத்திலே வந்துடறேன்!” அவசரம் அவசரமாக ரவி எழுந்து டிரெஸ் பண்ணிக் கொள்ள ஆரம்பித்தான். 

சாந்தா எழுந்து உட்கார்ந்தாள். “யாருடைய போன்?”

“அதெல்லாம் அப்புறம் சொல்றேன்.” 

“இந்த நேரத்திலே எங்கே?” 

“சாந்தா. இப்ப பேசறதுக்கு எனக்கு நேரமில்லை.நான் அவசரமா வெளியே போயாகணும். நான் வந்து சாவகாசமா உனக்கு எல்லாத்தையும் சொல்றேன்.” 

ரவி வேகமாகப் புறப்பட்டுச் சென்றான். 

அவர்களுக்குத் திருமணம் நடந்த நாள் முதலே, படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பிய பிறகு, இரவு நேரத்தில் சாந்தாவைத் தனியாக விட்டுவிட்டு, அவளிடம் காரணம் என்னவென்று கூடக் கூறாமல், ஒரு முறை கூட ரவி இப்படி வீட்டை விட்டு வெளியே போனது கிடையாது. இதுதான் முதன் முறை. 

கார் ஸ்டார்ட் ஆகி வெளியே போகிற சத்தம் சாந்தா காதில் விழுந்தது. ஒரு நிமிஷம் அப்படியே சிலை மாதிரி உட்கார்ந்தாள்.’நான் சந்தேகப்பட்டது சரியாப் போச்சு. யாரோ அந்தப் பாவி, தெரியலையே! அவருக்கு என்ன சொக்குப் பொடி போட்டிருக்காளோ தெரியலையே! இப்பத்தான் என்கிட்டே கொஞ்சிட்டிருந்தார். அவகிட்டேயிருந்து ஒரே ஒரு போன் கால்! உடனே என்னை உதறித் தள்ளிட்டு அவகிட்டே போயிட்டாரு! யார் அந்த..? அவ நாசமாப் போக!’ என்று உள்ளுக்குள் எரிந்தாள். 

திடீரென்று புயலில் சாய்க்கப்பட்ட கொடி போல் துவண்டு கட்டிலின் மேல் விழுந்தாள். தலையணையில் முகத்தைப் புதைத்துக் கொண்டு விம்மி விம்மி அழ ஆரம்பித்தாள். 


ஆஸ்பத்திரியில், கிருஷ்ணசாமி கொஞ்சம் கொஞ்சமாக நினைவை இழந்து கொண்டிருந்தார். டாக்டர் கோபால், ஜானகி அம்மாள், இருவரும் பத்மினியை அழைத்து வந்து அவர் பக்கத்தில் உட்கார வைத்திருந்தார்கள். அப்போது ரவி வேகமாக அறைக்குள்ளே நுழைந்தான். 

கிருஷ்ணசாமி அவனைப் பார்த்தார். அவர் பேசும் சக்தியை இழந்து விட்டிருந்தார். ரவி அவர் அருகில் போய் நின்றான். அவனுடன் கிருஷ்ணசாமியின் கண்கள் உரையாடின. ‘நீ எனக்குக் கொடுத்த வாக்கை காப்பாற்றுவாயா?’ என்று கெஞ்சின. 

‘நிச்சயமாகக் காப்பாற்றுவேன்,’ என்பது போல் முக பாவனையாலேயே ரவி அவருக்கு உறுதி அளித்தான். 

பத்மினி அழுது கொண்டிருந்தாள். கடைசியாக மீதம் இருந்த துளி சக்தியை அடித்தளத்திலிருந்து வரவழைத்துக் கொண்டு, கிருஷ்ணசாமி பத்மினியின் வலது கரத்தைப் பற்றிக் கொண்டு, பத்மினியின் கையை ரவியின் கையோடு இணைத்தார். 

பத்மினிக்கு அது யாருடைய கை என்று புரியவில்லை. டாக்டர் கோபால் அல்லது ஜானகி அம்மாள் தனக்குத் தைரியம் ஊட்டுகிறார்கள் என்று நினைத்தாள். அந்தக் கடைசி செய்கையோடு கிருஷ்ணசாமி தனது சக்தி முழுவதையும் இழந்து விட்டார். பின்னுக்குச் சாய்ந்தார். அவருடைய கைகள் பத்மினி – ரவி இருவரின் இணைந்த கைகளை விட்டு வலுவிழந்து விழுந்துவிட்டன. அவர் உடலிலிருந்து உயிர் பிரிந்தது. 

ஜானகி அம்மாள் பத்மினியின் தோள் மீது தனது கையை வைத்தார். “பத்மினி, எல்லாம் முடிஞ்சு போச்சும்மா. இனி இங்கே உட்கார்ந்து பிரயோஜனமில்லை. கடைசி முறையா உங்க அப்பா காலைத் தொட்டு நமஸ்காரம் பண்ணிட்டு என்கூட வாம்மா,” என்றார். 

”என்ன, அப்பா போயிட்டாரா? டாக்டர், உண்மையைச் சொல்லுங்க. அப்பா போயிட்டாரா?” என்று கதறினாள் பத்மினி. 

“ஆமாம் பத்மினி. எனக்குத் தெரிஞ்ச வரை அவருக்கு ட்ரீட்மென்ட் கொடுத்தேன். ஆனா, என்னாலே இதுக்கு மேலே ஒண்ணும் செய்ய முடியலைம்மா. அவர் போயிட்டாரு.” என்றார் டாக்டர் கோபால் வேதனையுடன். 

கண்ணிழந்த பத்மினி, கைகளை முன்னே நீட்டித் தந்தையின் முகத்தைத் தழுவினாள். ‘அப்பா, என்னை விட்டுட்டுப் போயிட்டிங்களே அப்பா! என்னைத் தனியா விட்டுட்டுப் போயிட்டீங்களே!” கிருஷ்ணசாமியின் நெஞ்சு மீது பத்மினி தனது தலையை வைத்துக் கதறிக் கதறி அழுதாள். 

ரவியின் கண்களிலும் கண்ணீர் துளும்பியது. மௌனமாகவே இருந்து விட்டான். 

“ஐயோ, நானும் போயிருந்தா நன்றாய் இருந்திருக்குமே! அப்பா, என்னையும் ஏன் உங்க கூடவே அழைச்சிட்டுப் போகலை? நான் தனியா எப்படி வாழப் போறேன்? என்ன பண்ணப் போறேன்? எனக்கு யார் இருக்காங்க?” என்று அழுது கொண்டிருந்தாள் பத்மினி. 

டாக்டர் கோபால், பத்மினியின் தலைமீது கை வைத்தார். ஆறுதல் கூறும் வகையில் அவள் தலையை வருடி விட்டார். 

“அழாதே, பத்மினி. அழுது என்ன பயன்?” என்றார். 

பத்மினி அவர் கையைப் பிடித்துக் கொண்டாள். “டாக்டர், உங்களைக் கெஞ்சிக் கேக்கறேன். எனக்கு ஒரு துளி விஷம் கொடுத்துடுங்க. இந்த அர்த்தமில்லாத வாழ்க்கையை இத்தோட முடிச்சுக்கறேன்”, என்று அவரிடம் மன்றாடினாள். 

”சேச்சே! பத்மினி, இதெல்லாம் என்ன பேச்சு? நீ ஏன் சாகணும்?” என்றார் டாக்டர் கோபால். 

“இல்லை டாக்டர், நான் ஏன் வாழணும்னு கேளுங்க. எனக்கு வாழ்க்கையிலே இனி என்ன மிச்சம் இருக்கு? நான் என்னைக்கோ இந்த உலகத்தை வெறுத்துட்டுச் சாகணும்னு முயற்சி பண்ணினேன். அப்போ எல்லாருமாச் சேர்ந்து என்னைத் தடுத்து நிறுத்திட்டாங்க. சாக விடலை. இத்தனை வருஷமா வேறு வழியில்லாம ஒரு நடை பிணம் மாதிரி வாழ்ந்து வந்தேன்- அப்பாவுக்காக. இப்போ அவரும் போயிட்டார். இனி நான் எதுக்காக வாழணும்? எனக்கு மட்டும் கண் இருந்தா, நேராப் போய் ஏதாவது குளத்திலோ, கிணத்திலோ குதிச்சுத் தற்கொலை பண்ணிக்குவேன். ஆனா, அதுக்குக்கூட எனக்கு வழி தெரியலையே! நான் ஒரு குருடி. வாழவும் வழி தெரியலை, சாகவும் வழி தெரியலை”, என்று அழுதாள் பத்மினி. 

”பத்மினி, உனக்கு யாருமே இல்லேன்னு நீ ஏன் நினைக்கிறே? நாங்க இருக்கோம்மா. நீ எங்க கூடவே இருக்கலாம்”, என்றார் ஜானகி அம்மாள். 

“அதெப்படீம்மா? கண்ணில்லாத ஒரு அனாதையை நீங்க எத்தனை நாளைக்குத்தான் உங்க வீட்டிலே வச்சுக்க முடியும்? எதுக்காக வச்சுக்கணும்? நான் யாருக்கும்.சுமையா இருக்க விரும்பலை.” என்றாள் பத்மினி. 

”அப்படிச் சொல்லாதேம்மா. நாங்க ஒரு நாளும் உன்னைச் சுமையா நினைக்கவே மாட்டோம். எனக்குக் கடவுள் ஒரு மகனைத்தான் கொடுத்தார். எனக்கு ஒரு பெண் பிறக்கலையேன்னு நான் எத்தனையோ காலம் வருத்தப்பட்டதுண்டு. இப்போ கடவுளாப் பார்த்து எனக்கு ஒரு மகளை அனுப்பி வைச்சு இருக்கார்னு நினைச்சுக்கறேன்,” என்றார் ஜானகி அம்மாள். 

“ஆமாம், பத்மினி. இன்னிலேந்து நீ என் தங்கை. என்னை உன் கூடப் பிறந்த அண்ணனா நினைச்சுக்கோ,” என்று டாக்டர் கோபாலும் கூறினார். 

“வாம்மா. உனக்கு ஒரு குறையும் இல்லாம என் குழந்தை மாதிரி உன்னைப் பார்த்துக்கறேன். இனிமே தற்கொலை, அது இதுன்னு நீ பேசவே கூடாது.” என்று ஜானகி அம்மாள் அன்போடு கூறினார். 

“அம்மா!” பத்மினிக்கு அதற்கு மேல் வார்த்தைகள் வரவில்லை. ஜானகி அம்மாளைக் கட்டிக் கொண்டு சிறு குழந்தை போல அழுதாள். 

ஜானகி அம்மாள் பத்மினியை அழைத்துச் சென்று அவளுடைய கைகளைக் கிருஷ்ணசாமியின் பாதங்கள் மீது வைத்தார். தகப்பனாரின் பாதங்களைத் தொட்டு இறுதி முறையாக பத்மினி நமஸ்காரம் செய்தாள். ஜானகி அம்மாள் அவளை மெதுவாக அந்த அறையிலிருந்து தனது இல்லத்திற்கு அழைத்துக் கொண்டு போய் விட்டார். 

டாக்டர் கோபாலும் ரவியும் ஆபீஸ் ரூமுக்குச் சென்றனர். டாக்டர் கோபால் கதவைச் சாத்திவிட்டுக் களைப்போடு தனது நாற்காலியில் அமர்ந்தார். 

“உட்காரு ரவி.’ 

ரவி மிகவும் சஞ்சலமான தோற்றத்தோடு சோர்ந்து காணப்பட்டான். “கோபு…” என்று சற்றுத் தயக்கத்தோடு ஏதோ சொல்ல முற்பட்டு, அத்தோடு நிறுத்தி விட்டான். 

“சொல்லு ரவி.” 

“இப்பவே நீ எனக்காக எவ்வளவோ பண்ணியிருக்கே, பண்ணிக்கிட்டும் இருக்கே. திரும்பத் திரும்ப உனக்குச் சிரமம் கொடுக்க எனக்கு என்னவோ போல இருக்கு..” என்றான் ரவி. 

“என்ன இது,நான்ஸென்ஸ் ரவி! நமக்குள்ளே என்ன ஃபார்மாலிட்டீஸ்? என்ன விஷயம்? தயங்காமச் சொல்லு.” 

“வேற ஒண்ணுமில்லை கோபு….. கிருஷ்ணசாமியோட இறுதிக் காரியங்களைக் கவனிக்க வேறே யாருமில்லை. நியாயப்படி அதை நான்தான் செய்து முடிக்கணும். ஆனா…. என் கஷ்டம் உனக்குப் புரியும்னு நினைக்கிறேன். அன்ஃபார்ச்சுனேட்லி, நான் இங்கே எல்லாருக்கும் நல்லா தெரிஞ்சவன்.கிருஷ்ணசாமியோட கடைசிக் காரியங்களைக் கவனிக்க நான் போனா, என் பின்னாலேயே ஒரு கூட்டமும் வரும். சுடுகாட்டிலேயும் கூட்டம் சூழ்ந்துக்கும். பத்திரிகை நிருபர்கள் வருவாங்க. செத்தவர் யார். ரவிகுமாருக்கு என்ன உறவு. இவன் ஏன் அவருக்காகக் கடைசிச் சடங்குகளைச் செய்யணும்- அப்படி. இப்படீன்னு ஆயிரம் கேள்விகளை எழுப்பி, பத்திரிகைகளிலே அமக்களப் படுத்திடுவாங்க. அனாவசியமாத் தேவையில்லாத பப்ளிசிடி வந்திடும். வீணான சர்ச்சைகளுக்கு நானே இடம் கொடுத்த மாதிரி ஆயிடும். எங்க அப்பா உயிரோடு இருக்கிறபோது. சாந்தாவோட அப்பாவும் உயிரோட இருக்கிறபோது நான் யாருக்காக இதைச் செய்யறேன்னு கண்டு பிடிக்கக் குடைஞ்சு குடைஞ்சு தெரிஞ்சுக்க ட்ரை பண்ணுவாங்க. அதனாலே…..” 

“அவ்வளவுதானே ரவி? அதைப் பத்திக் கவலையை விடு. எல்லாத்தையும் நான் கவனிச்சுக்கறேன்,” என்று உறுதி அளித்தார் டாக்டர் கோபால். 

“கோபு, ஐ’ம் ரியலி சாரி ஃபார் தி டிரபிள் ஐ’ம் கிவிங் யூ” 

”நோ. நோ. இதிலே என்ன டிரபிள்? நீ எப்படி அங்கே போக முடியும்? நீ சாதாரண மனுஷனா இருந்தா அது வேறே விஷயம். ஆனா, நீ ஒரு ஃபேமஸ் ஃபிலிம் ஸ்டார். நீ சொன்ன மாதிரி, நீ அங்கே போனா வீணான குழப்பம்தான் ஏற்படும். டோன்ட் ஒர்ரி ரவி, ஐ வில் ஸீ டூ த மேட்டர்.” 

“தாங்க்ஸ் கோபு.” 

“தட்ஸ் ஆல் ரைட்..” 

உதவியாளர்களை அழைத்து டாக்டர் கோபால், கிருஷ்ணசாமியின் உடல் தகனத்திற்கான ஏற்பாடுகளை உடனே கவனிக்கச் சொன்னார். 

உதவியாளர்கள் சென்றுவிட்டனர். ரவியும் டாக்டர் கோபாலும் தனியே இருந்தனர். 

“என்ன ரவி, இனி மேற்கொண்டு என்ன செய்யப் போறே?” 

“முதல்லே பத்மினிக்குக் கண் பார்வை திரும்பும்படி செய்யணும். ஏன் கோபு, ஆபரேஷன் செஞ்சா அவளுக்கு மறுபடியும் பார்வை வருமா?” 

“அதைப்பத்தி இப்போ ஒண்ணும் சொல்ல முடியாது ரவி. கண் நோய் பத்தி எனக்கு அதிகமாத் தெரியாது. என்னுடைய ஃபீல்டு இருதய நோய். நான் ஒரு பெரிய கண் ஸ்பெஷலிஸ்ட்டை வரச் சொல்லி, பத்மினியைப் பார்க்கச் சொல்றேன். அவர் என்ன சொல்றார்னு பார்க்கலாம்.” 

“கோபு,எவ்வளவு பணம் செலவானாலும் எனக்கு அதைப் பத்திக் கவலையில்லை. இந்தியாவிலேயே இருக்கிற பெஸ்ட் கண் டாக்டர்களை வரவழைச்சு பத்மினியைப் பார்க்கச் சொல்லு. பாம்பே, டில்லி, கல்கத்தா – எங்கேருந்து வேணும்னாலும் நீ பெரிய கண் ஸ்பெஷலிஸ்டுகளை வரச் சொல்லு! நான் செலவை ஏத்துக்கறேன். எப்படியாவது பத்மினிக்கு மறுபடியும் கண் பார்வை கிடைச்சா சரி!”

“டோண்ட் வொர்ரி, ரவி. நான் உடனேயே அதுக்கு ஏற்பாடு பண்றேன். ஐ வில் டூ மை பெஸ்ட்.” 

“தாங்க்ஸ் கோபு. நீ இல்லைன்னா, நான் என்ன பண்ணியிருப்பேனோ! இந்த நன்றிக் கடனை எப்படித் தீர்க்கப் போறேன்! உனக்கும் உங்க அம்மாவுக்கும் எப்படி நன்றி சொல்றதுன்னே எனக்குத் தெரியலை!” 

“போதும், போதும். எத்தனை தடவைதான் தாங்க்ஸ் சொல்லப் போறே? பத்மினிக்குக் கண் பார்வை திரும்பக் கிடைச்சு, நீயும் அவளும் சந்தோஷமா, நிம்மதியா வாழ்க்கை நடத்தணும். அதுதான் என் ஆசை. இவ்வளவு ஆழமான காதலுக்கு, வெற்றி கிடைச்சே தீரணும். அதுக்கு என்னாலே முடிஞ்ச உதவியை நான் கண்டிப்பாச் செய்வேன். ஆமா, சாந்தாகிட்டே இந்த விஷயத்தைப் பத்தி ஏதாவது சொன்னியா?” 

“இல்லே. கோபு.சொல்லலாம்னு ஆரம்பிச்சேன், ஆனா வார்த்தை வரலை. இந்த ஸப்ஜெக்டை அவகிட்டே எப்படி ஓபன் பண்றதுன்னே இன்னும் புரியலை.”

”சொல்லித்தானே ஆகணும்?” 

“வாஸ்தவம்தான். எப்படியும் இதுக்குச் சீக்கிரம் ஒரு முடிவு கட்டணும்,” என்றான் ரவி. 

“பத்மினிகிட்டேயும் இன்னும் உன்னைப் பத்திச் சொல்லலை. அவகிட்டே நீ பேசினா நல்லதுன்னு நினைக்கிறேன். இன்னும் எத்தனை நாள்தான் இப்படியே இருக்கப் போறே? அவ மனசையும் தெரிஞ்சுக்க வேண்டாமா?” என்று டாக்டர் கோபால் கேட்டார். 

“இப்போ வேண்டாம் கோபு. முதல்லே அவ கண்ணுக்கு ட்ரீட்மெண்ட் நடக்கட்டும். அதுதான் முக்கியம். ப்ளீஸ், நான் சொல்றதைக் கேளு. இந்த ஆபரேஷனுக்குக்கூட நீயே பொறுப்பு ஏத்துக்கிட்டதா அவ நினைக்கட்டும். நான்தான் அவளுக்கு உதவி செய்யறேன்னு தெரிஞ்சா, அதை ஏத்துக்க அவ சம்மதிப்பாளோ இல்லையோ, அதுக்குள்ளே நான் அவளுக்காக ஒரு தனி வீடு பார்த்து ஏற்பாடு பண்றேன். இன்னும் கொஞ்ச நாட்களுக்கு அவளுக்கு என்னைப் பத்தித் தெரியாமலே இருக்கட்டும்,” என்றான் ரவி.

“சரி.உன் இஷ்டப்படியே நடக்கட்டும்.”

”குட் நைட், கோபு”. 

“குட் நைட் ரவி, ஆல் தி பெஸ்ட்” 


ரவி வீடு திரும்பும் போது, அதிகாலை மூன்று மணி ஆகிவிட்டது. 

சாந்தா இன்னும் விழித்துக் கொண்டுதான் இருந்தாள். கார், வீட்டுக் காம்பவுண்டுக்குள் வரும் சத்தம் கேட்டது.ரவி மாடிப்படிகளில் ஏறி வரும் ஓசை கேட்டது. அவள் அவர்களுடைய பெரிய டபிள் பெட்டில் மறு பக்கம் திரும்பிக் கொண்டு தூங்குவது போல் நடித்தாள். 

எங்கே தன்னோடு சண்டை போடச் சாந்தா தயாராக வரிந்து கொண்டு காத்திருக்கப் போகிறாளோ என்று பயந்து கொண்டே ரவி அறையினுள் நுழைந்தான். இரண்டு நாட்களாக ஒரே அலைச்சல், உறக்கம் இல்லை; ஓயாத படப்பிடிப்பு: மூளையை வாட்டி எடுக்கும் மனப் போராட்டம், உள்ளத்தையே உலுக்கிச் சித்திரவதை செய்யும் உணர்ச்சிக் கொந்தளிப்பு. இத்தனையும் ஒன்றாகச் சேர்ந்து அவனைக் கசக்கிப் பிழிந்து எடுத்துவிட்டன. அவனால் தெளிவாகச் சிந்திக்க முடியவில்லை, அடி கூட எடுத்து வைப்பது சிரமமாகத் தோன்றியது. இந்நிலையில் சாந்தாவோடு வாதாடுவதற்கு அவனிடம் சக்தியில்லை. 

கட்டில் அருகே வந்து நின்றான், பார்த்தான். சாந்தா நன்றாகத் தூங்குவது போல் தெரிந்தது. அப்பாடா! இப்போதைக்குத் தப்பித்தோம் என்று ஒரு பெருமூச்சோடு, ரவி வெட்டி வீழ்த்திய மரம் போல் கட்டிலின் மீது சாய்ந்தான். ஓய்வுக்காக ஏங்கிய அவனுடைய உடலும், மனமும் சகிப்புத் தன்மையின் எல்லையைக் கடந்துவிட்டன. தலையணையை அவன் தலை தொட்ட மறு நிமிஷமே ரவி தூங்கி விட்டான். 

அவன் பக்கத்தில் படுத்திருந்த சாந்தா, அப்படியே விடியும் வரை கண்களிலிருந்து நீர் வழிந்தோட மௌனமாக உறங்காமல் விழித்திருந்தாள்.

– தொடரும்…

– ஒருத்திக்கே சொந்தம், முதற் பதிப்பு: ஜூன் 1980, மாலைமதி,, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *