நீங்களே சொல்லுங்கள்…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 10, 2012
பார்வையிட்டோர்: 12,051 
 
 

“வாங்க அத்தே” என்று நான் வாய் மூடும் முன்னரே…

“ஏண்டி மீனா இப்படி நீ செய்வியா. நம்ம சாதி சனத்துக்கு அடுக்குமா இந்தக் குறும்பு.? நாம என்ன அறுத்துக் கட்டுற சாதியா?

மின்சார அடுப்பில் சோளப் பொரிகள் துள்ளிக் குதிப்பது போலச் சொற்கள் ஒன்றையொன்று முந்திக் கொண்டு என் முகத்தில் வந்து விழுகின்றன.

“என்ன செய்யறது அத்தே வேறு வழியில்லே”

“ஏன் நாங்களெல்லாம் இல்லியா, ஓர் உதவி ஒத்தாசைக்குத்தானே நாங்க இருக்கோம்!”

நான் அமைதி காக்கிறேன். உதடுகள் ஒட்டிக் கொண்டு விட்டன. முன்னர் ஓர் உதவி கேட்டுப் போய் முகத்திலடித்தாற் போலப் பேசியனுப்பிய நிகழ்ச்சி நிழலாடுகிறது.

“வந்ததுதான் வந்தீங்க. மத்தியானம் இருந்து உண்டுட்டுப் போகலாம்.”

“நான் என்ன தலைவாழை இலை போட்டுச் சாப்பிடவா வந்தேன். அந்தச் சிவப்பி சொன்னா. என்னாலே நம்பவே முடியல. எதுக்கும் உன்னையே கேட்டுடலாமேன்னு வந்தேன். ஆனா நீ செய்தது அழிச்சாட்டியும் போட்டது போட்டபடியே கிடக்குது நான் வரேன்”

“வாங்க அத்தே” என்று நான் சொன்னதை வாங்கியும் வாங்காமலும் எங்கள் சின்ன மாமியார் புறப்பட்டுச் செல்ல அந்த நேரம் பார்த்து என் மகன் தேனப்பன் வர,

“பாத்தியாடி இவனை. அப்பத்தா வான்னாவது சொல்றானா பாரு. இந்தக் காலத்துப் பசங்களே இப்படித்தான். அரும்பு ஏற ஏறக் குறும்பு ஏறிப்போச்சு” என்று படிகளில் இறங்கிப் போவதைப் பார்த்துக் கொண்டே இருந்தவன்;

“எதுக்குத்தா இப்படி வாராதது வந்துட்டுப் போகுது”

“ஒண்ணுமில்லடா சும்மாதான் வந்தாக”

“அப்பச்சி அப்படி முடியாமக் கிடக்கையிலே கூட எட்டிப் பாராதவுக இப்ப ஏன் அள்ளித் தெளிச்சாப்லே வந்துட்டுப் போகனும்.”

“நீ வா சாப்பிடுவா”

செத்துப்போன என் சொந்த அத்தையுடன் கூடப் பிறந்தவர்தான் வந்து போனவர். கூடப் பிறந்தே குடலையறுக்கறா என்று என் அத்தை சொல்லிச் சொல்லி மாய்வார்கள்.

நன்றாக வாழ்ந்த குடும்பம் எங்கள் குடும்பம் பர்மாவிற்குக் கொண்டு விற்கப்போய் ஆடிக்குத் தை ஒரு வருடம் என்று கணக்கெழுதித் “திரைகடலோடியும் திரவியம்” தேடிய குடும்பம்தான்.

குதிரை பிடிக்கவும் சமக்காளம் மடிக்கவும் கூப்பிட்ட குரலுக்கு என்னன்னு கேட்கவும் ஆளும் அம்பும் நிலமும் நீச்சும் பெட்டியடிக் கணக்குப் பிள்ளைகளும் இருந்த சுற்றுக்கட்டு வீடு. பர்மா அடைபட்டுப் போன பின் என் மாமனாரும் தேனப்பனின் அப்பச்சியும் எங்கள் பங்காளிகளைப் போல வட்டிக்குக் கொடுத்து வாங்கும் தங்கள் குலத் தொழிலையே செய்தாலும் அதன் நீக்குப் போக்குத் தெரிந்து நீச்சலடித்து ஈடு கொடுக்க முடியவில்லை. கறாராகப் பேசி வட்டிக்கு வட்டி, கிட்டி போட்டு வாங்கத் தெரியவில்லை. ஈவும் இரக்கமும் எங்களை வறுமைப்பட வைத்து விட்டது.

என் அத்தை கட்டுக்கழுத்தியாகப் போன பின்னர் என் மாமனாரும் காடுதலை வரை விரித்த நடைமாற்றிப் பேரன்மார்கள் அதில் நெய்ப்பந்தம் பிடிக்கச் சென்று விட்டார்கள். அதன் பின்னர் இருப்பதை வைத்து எப்படியோ காலத்தை ஓட்டினோம். இப்போது வந்து போன என் சின்ன மாமியார் அப்போதெல்லாம் எட்டிப் பார்ப்பதே இல்லை. கைப்பண்டம், கருணைக் கிழங்கு, கடிச்ச பாக்கிலே கால் பாக்கு கொடுக்காத ஈகைக் குணம், எங்காவது பார்த்தால் கூட அடுத்த சந்தில் நுழைந்து போய்விடுவார்கள். இவருக்கும் அந்த சிவப்பி ஆச்சிக்கும் ஊர் வம்பளப்பதே வேலை. ஏதாவது துரும்பு கிடைத்து விட்டால் போதும் என்ன ஏது என்று தோண்டித் துருவி எடுப்பது வரை தூக்கமே வராது அவர்களுக்கு. இருவருமே அறுத்தவர்கள். வெள்ளைச்சேலைக்குள் புகுந்து கொண்டவர்கள். நெற்றிப் பொட்டை மறைத்து நீற்றைப் பூசியிருக்கும். கழுத்தில் இரட்டை வடம் சங்கிலிகள் வளைத்துக் கொள்ள இருவருமே ஊரை வளைத்து வளைத்து வாயில் போட்டு மென்று மென்று அசை போட்டுக் கொண்டே இருப்பார்கள்.

தேனப்பன் அப்பச்சி ஒரு நாள் நெஞ்சு வலிக்குது என்றார்கள். உள்ளூர் மருத்துவரிடம் சென்றோம். திருச்சிக்குக் கொண்டு போகச் சொல்லி விட்டார்.

கையில் காதில் ஏதுமில்லை, யாரிடம் கேட்டாலும் ஏதோ சாக்குப் போக்குச் சொல்வார்களே தவிர உள்ளன்போடு உதவக்கூடிய சுற்றமும் இல்லை; மற்றவரும் இல்லை. இருந்தது “அது” மட்டுந்தான். மஞ்சளை முடித்து மாட்டிக் கொண்டு அதைக் கழற்றி விற்றதினால்தான் “அவுகளை”க் காப்பாற்ற முடிந்தது. “அதை” விற்றதுக்குத்தான் இந்த அங்கலாய்ப்பு.

கொண்டவன் செத்துப் போனாலும் ஊர் கூடித்தான் “அதை”க் கழற்றும். அவ்வாறான “கட்டுப்பெட்டி”ச் சமுதாயத்தில் நானே கழற்றி விட்டதுதான், அவர்கள் வாய்க்கு அவல். நான் அன்று கழற்றியிருக்கா விட்டால் ஊர் கூடிக் கழற்றிப் போட்டு ஒப்பாரி வைத்திருக்கும். ஒருவரின் இழப்பை விட அவர்களுக்குச் சடங்குகள்தான் உயிர்.

கண்ணகியும் கோவலனும் என் மக்கள் என்று கவுந்தியடிகள் சொன்ன போது ஏளனமாய்ச் சிரித்த வம்புடையார் நடுவே எப்படி வாழ்வது, கற்றும் முற்றும் சொல்லம்புகளே சூழ இருதலைக் கொள்ளி எறும்பாக எப்படியோ வாழக் கற்றுக்கொண்டு விட்டேன். இருந்தாலும் அடுத்தடுத்து காட்டும் பளிங்காகச் சில வேளை என் முகம் காட்டிக் கொடுத்துவிடும்.

இருளாகிய சடங்கு விலக எழுந்து வந்த பெரியார் போல இளநிலா வானில் உலா வர தேனப்பன் அப்பச்சி இல்லம் வந்து சேர இரவுப் பணிகள் தொடங்கி முடிகின்றன.

யாரிடம் மறைத்தாலும் அவுகளிடம் மட்டும் எதையும் மறைக்க முடியாமல் நான் திண்டாடிப் போவதுண்டு. அப்படியொரு “பாரதி”ப் பார்வை.

“என்ன இன்று என்னமோ நடந்திருக்கிறதே”

“ஒண்ணுமில்லே”

பெண்கள் ஒண்ணுமில்லே என்றாலே ஏதோ ஒன்று இருக்குது என்றுதான் பொருள். இதை நான் சொல்லவில்லை ஆத்தா, பரணிக்கோர் சயங்கொண்டார்தான் சொல்கிறார்.

“போதுமே உங்கள் புலமைப் புளுகு”

கண்ணை மூடிக் கொஞ்ச நேரம்.

“ஓ அதற்குத்தானா? எத்தனை முறை உனக்குச் சொவது, பயிருக்காகத்தான் வேலியே தவிர வேலிக்காகப் பயிர் இல்லை, வேலி இருந்து பயிர் இல்லாவிட்டால் என்ன பயன்? வேலி பயிர் வளர்ச்சிக்குத் தடையாக இருந்தால் வெட்டியெறிய வேண்டியதுதான். அதைத்தானே நீ செய்தாய்.”

“என்ன இருந்தாலும் நீங்க கட்டிய…”

“ஏன் அப்படி இழுக்கிறாய்? கட்டியவனைக் காக்க அவன் கட்டியதைக் கழற்றுவதில் என்ன தவறு? இன்னும் சொல்லப் போனால் நான் கட்டியதே இல்லை அது. நம் குலப்படி வாழ்வாங்கு வாழ்ந்த முதியவர் ஒருவர்தான் உன் கழுத்தில் எனக்காகக் கட்டினார். உனக்கு நினைவில்லையா?”

என் நினைவலைகள் என் “திருப்பூட்டு” நிகழ்ச்சிக்குத் திரும்புகின்றன. குதிரையில் தலைப்பாகையுடன் ஒரு முகம் தெரிகிறது. இறங்கி வருவதும் தெரிகிறது. சற்றுத் தள்ளி அமர்ந்திருப்பதும் தெரிகிறது.

யார் கட்டியிருந்தால் என்ன?

உறவுக்காகக் கட்டிய “அதை” அந்த உறவுக்கான உயிரைக் காக்கக் கழற்றியிருக்கிறேன். அதுவா தவறு? நீங்களே சொல்லுங்கள்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *