(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
நான்காவது தடவையாக என் கணவர் என்னைக் கேட்டார். “பெண் நன்றாக இருக்கிறாள் என்றா சொல்லுகிறாய்?” என்று. “ஆமாம்” என்று என் அபிப்பிராயத்தை ஊர்ஜிதப்படுத்தினேன். “எந்த விதத்தில்?” என்று மறுபடியும் கேட்டார் அவர். நாங்கள் பெண்ணைப் பார்த்துவிட்டுத் திரும்பி வந்துகொண்டிருந்தோம்.
மாநிறம்,எடுப்பான மூக்கு, நீண்ட விழிகள். அவைகள் துறுதுறுவென்று பெண்ணின் புத்திசாலித்தனத்தைக் காட்டின. காதில் எல்லோரையும் போல் ஜிமிக்கி சுடர்விட்டது. பெண்ணைப் பார்க்கிறவர்கள் மொத்தத்தில் நன்றாக இருக்கிறாள் என்றுதான் அபிப்பிராயப்படுவார்கள்.
என் மைத்துனருக்கு வந்திருந்த ஜாதகங்களில் இந்தப் பெண்ணின் ஜாதகம் நன்றாகப் பொருந்தி இருப்பதாகவும், எங்கள் இருவரையும் போய்ப் பார்த்துவிட்டு வரும்படியும் என் மைத்துனர் நாகராஜன் எழுதியிருந்தார். நாகராஜன் நல்ல அழகு. அவரை மணப்பவள் அதிருஷ்டசாலி என்றுதான் சொல்லவேண்டும். வீட்டில் நாகராஜன், நான், என் கணவர் எல்லோரும் சேர்ந்து இருக்கும்போது வேடிக்கைக்காக அவர் வாயை நான் கிளறுவது வழக்கம். “உங்களுக்கு மனைவி எப்படிக் கிடைத்தால் தேவலை?” என்று கேட்பேன். உடனே அவர் புன்னகையோடு ஆரம்பிப்பார்.
“சிவப்பாக, அழகாக, படித்த, சங்கீதம் நன்றாகத் தெரிந்த, குடும்பத்துக்கு ஏற்ற பெண்ணாகக் கர்வமில்லாமல் நிதான புத்தியோடு…”
“சர்வ லக்ஷணமும் பொருந்திய கன்னிகை என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிடலாமே?” என்பேன்.
ஒவ்வொரு யுவனும் யுவதியும் விவாகத்துக்கு முன்பு இவ்வித மனக்கோட்டைகள் தாம் கட்டுகிறார்கள். எப்படி இருந்தபோதிலும், நாங்கள் அன்று பார்த்த பெண்ணுக்கு இத்தனை லட்சணங்களும் பரிபூரணமாக அமைந்திருந்தன என்று நானும் சொல்லமாட்டேன்.
“நாகராஜன் சொல்லுகிற மாதிரி இருப்பதாக எனக்குத் தோன்றவில்லையே?” என்றார் என் கணவர்.
“ஆமாம், எல்லாம் பொருந்தியிருப்பது கொஞ்சம் கஷ்டந்தான். பெண் புத்திசாலிதான். நான்காவது பாரம் படித்திருக்கிறாளாம். என் மைத்துனருக்குப் பாட்டு என்றால் உயிர் ‘நீ நன்றாகப் பாடுவாயா?’ என்று கேட்டேன். ‘ஓகோ என்றெல்லாம் பாடத் தெரியாது. சுமாராகத்தான் பாடுவேன்’ என்று விமலா சொல்லி விட்டாள்” என்றேன்.
“அது யார் விமலா?” என்றார்.
“பெண்ணின் பெயர்?”
“உனக்கும் எனக்குமே அபிப்பிராய பேதம் ஏற்பட்டிருக்கிறதே என்றுதான் பார்க்கிறேன்.”
“நமக்குள் அநேக விஷயத்தில் அபிப்பிராய பேதம் ஏற்படுவது வழக்கந்தானே?”
ரிக்ஷாக்காரன் எங்கள் சம்பாஷணையைக் கவனித்துக் கேட்டு வந்திருக்கிறான்போல் இருக்கிறது.
“பொம்பளைங்க மனசுக்கும் நம்ப மனசுக்கும் வித்தியாசம் இருக்குதுங்க சாமி!” என்று பேச்சை ஆரம்பித்தான். நாங்கள் பேச்சை நிறுத்தினோம்.
“ஆமாம், சாமி! அம்மா சொல்றாங்களே அது மெய்தானுங்க” என்றான் ரிக்ஷாக்காரன்.
“பாருங்க, வீட்டிலே எம் பெண்ஜாதி இருக்குதுங்களே, துப்புக் கெட்ட பொம்பளங்கோ. வேர்வையைச் சொட்டி வண்டி இழுத்து ஒரு ரூபா சம்பாதிச்சிக்கிட்டுப் போய்க் கொடுத்தாப்பத்துத் தினுசுக் கண்ணாடி வளையலும், பித்தளை மோதிரமும் வாங்கிப் போட்டுக்கினு வெட்டித் தண்ணிச்சோறு போடுதுங்க. பொம்பளை என்னவோ அளகாத்தான் இருக்குது. அப்படியே பாத்துக்கினு இருக்கலாம்! ஆனா வவுறு நெறையுங்களா?” என்றான்.
“அவன் சொல்லுவது உண்மைதான். விமலாவின் தாயாரும் இதையேதான் என்னிடம் கூறினாள்.”
“நாங்கள் சம்சாரிகள், எங்கள் பெண்கள் குடும்பத்துக்கு ஏற்ற மாதிரியில் இருப்பார்கள்” என்று.
“அவன் கிடக்கிறான். என்னவோ உளறுகிறான். நாகராஜனுக்கு என்ன எழுத?” என்று கேட்டார் என் கணவர்.
“என்ன எழுதுவது? உங்கள் அபிப்பிராயத்தையும் என் அபிப்பிராயத்தையும் எழுதுங்கள். இந்த விஷயங்களில் நம்மைவிட உங்கள் தம்பியின் சம்மதந்தான் முக்கியம்” என்றேன்.
என்னைப் பார்க்க வந்தபோதுகூட என் மாமியார் இவரிடம் இப்படித்தான் சொன்னாளாம். “பெண் என்னவோ சுமாராகத்தான் இருக்கிறாள். படித்திருக்கிறாள்; பாட்டு ஒன்றும் அவ்வளவு சுகமில்லை. உனக்குப் பிடித்தால் சரி”.
“என்ன பிரமாதம்? ஒரு மாதம்; கல்யாணம் ஆனவுடன் நம் வீட்டில் கொண்டுவந்து வைத்துக்கொண்டு எல்லாம் கற்றுக் கொடேன்” என்று இவர் பதில் சொன்னாராம்.
“என்னை அழகில் சிறந்தவள் என்றா பண்ணிக் கொண்டீர்கள்?” என்று கேட்டேன் நான்.
“சிறந்தவளோ இல்லையோ, என் மனசுக்குப் பிடித்தது. அவ்வளவுதான்” என்றார்.
“அப்படியானால் உங்கள் தம்பி மனத்துக்கு விமலாவைப் பிடிக்காது என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?”
“விமலாவுக்கு நீ வக்காலத்து வாங்கி வந்திருக்கிறாயா என்ன?”
“இல்லை, ஒரே அடியாகப் பெண் நாகராஜன் மனசுக்குத் தகுந்த மாதிரி இல்லை என்று சாதிக்கிறீர்களே?” என்றேன்.
பெண்ணைப் பார்த்துவிட்டு வந்த மறுதினமே நாகராஜனுக்குக் கடிதம் எழுதப்பட்டது. நாகராஜனிடமிருந்து பதில் வரத் தாமதமாகவே பெண்ணைப் பெற்றவர்கள் பெண்ணையே அழைத்துக்கொண்டு அவனிடம் போய் விட்டார்கள். அவர்கள் கவலை அவர்களுக்கு!
‘ஊரிலிருந்து கடுதாசி வந்ததா?’ என்று தினம் ஆபீஸிலிருந்து வந்ததும் என்னைக் கேட்பார். எங்களுக் குள் ஒரு பந்தயம்! நாகராஜன் பெண் நன்றாக இருப்பதாக எழுதுவார் என்று நான் சாதித்தேன். பெண் சுமார் தான் என்று மழுப்பிவிடுவான் என்று என் கணவர் சாதித்தார். அதற்காகப் பந்தயம் வேறு போட்டுக்கொண்டோம்!
கடைசியாகக் கடிதம் வந்தது.
“மன்னியின் உத்தேசப்படி பெண்ணைப் பார்த்தால் அழகில்லை என்று சொல்ல முடியாது. உன் வார்த்தைப்படி பார்த்தால் பெண் சுமாராகத்தான் தோன்றுகிறது. பெண்ணை நான் சரியாகக் கவனிக்கவில்லை! இன்னொரு தரம் பார்க்கவேண்டும் என்றால் அவர்களுக்குக் கோபம் வராதா?” என்று கேட்டிருந்தார்.
யார் பந்தயத்தில் தோற்றது என்று எங்களுக்கு புரியவில்லை.
“என்ன யோசனை எழுதப் போகிறீர்கள்?” என்று கேட்டேன் நான்.
”எனக்கு ஒன்றும் புரியவில்லையே?” என்றார் என் கணவர்.
“இன்னொரு தரம் பார்த்துவிடட்டுமே; இதில் என்ன முழுகிப் போகிறது?”
கடைசியில் நாகராஜனுக்கு எப்படியோ விமலாவைப் பிடித்துவிட்டது.
கல்யாணத்தன்று மத்தியான்னங்கூட, “உன் அபிப்பிராயத்துக்கு இணங்கித்தான் நான் கல்யாணம் செய்து கொண்டேன். இப்பொழுதே இங்கே விட்டு விட்டுப் போனார்களானால் பள்ளிக்கூடத்தில் சேர்த்து மேலே படிக்க வைக்கலாம். பாட்டும் சொல்லித்தரலாம். கேட்டுப் பாரேன், மன்னி” என்றார் பேச்சில் ஸ்வாரஸ்யம் இல்லாமல்.
“இப்பொழுது இப்படித்தான் சொல்லுவீர்கள். பழகப் பழக விமலாவின் பேரில் உயிராக இருக்கப் போகிறீர்கள் ” என்றேன்.
“அதெல்லாம் ஒன்றும் இல்லை. படிப்பும் பாட்டும் இல்லாமல் அவள் பொம்மைமாதிரி இருந்தால் எனக்குப் பிடித்துவிடுமா?” என்றார்.
மூன்று வருஷங்கள் கழித்து மறுபடி என் மைத்துனரையும் விமலாவையும் ஒரு பெண் குழந்தையுடன் பார்க்க நேரிட்டது.
“பள்ளிக்கூடத்தில் சேர்ந்து எத்தனை வகுப்பு வரையில் வாசித்தாய்?” என்று கேட்டேன் விமலாவை.
விமலா கலீரென்று சிரித்துவிட்டு, “வீட்டுக்கு வரும் பத்திரிகைகளையே வாசிக்க ஒழியவில்லையே! பள்ளிக் கூடந்தான் இல்லாமல் குறைவாக இருக்கிறது” என்றாள். “அவள் சோம்பேறி, மன்னி” என்றார் நாகராஜன்.
“ஆமாம்; வீட்டு வேலைதான் எனக்குச் சரியாக இருக்கிறதே. உங்கள் துணிமணிகளையாவது சரியாக வைத்துக்கொள்கிறீர்களா?” என்று அவனையே மடக்கினாள் விமலா.
“பாட்டும் அவ்வளவுதானா போகட்டும், ரஜனிக்காவது பாட்டுச் சொல்லி வையுங்கள்” என்றேன்.
“அவள் எங்கே பாடுகிறது? ரஜனிதான் முகாரி பாட ஆரம்பித்துவிடுகிறாளே?” என்று மனைவிக்காகப் பரிந்து பேசினார் நாகராஜன்.
மற்ற விஷயங்கள் எப்படி இருந்தாலும் பொதுவாக எல்லா நற்குணங்களும் விமலாவிடம் இருந்தன.
இவை போதாவா ஒரு பெண்ணுக்கு?
– நவராத்திரிப் பரிசு, முதற் பதிப்பு: 1947 , கலைமகள் காரியாலயம், சென்னை.