சென்னையிலுள்ள தலைமை அலுவலகத்தில் அனைத்துக் கிளை மேலாளர் கூட்டத்தை எம்.டி கூட்டியிருந்தார். அப்போதுதான் நவநீதனும் மகாலிங்கமும் தவிர்க்க முடியாமல் சந்திக்க வேண்டியதாகிவிட்டது. இருவரும் சில வருடங்களுக்கு முன்பு ஓசூர் கிளையில் ஒன்றாகப் பணிபுரிந்தவர்கள். பதவி உயர்வு பெற்றபோது, வெவ்வேறு ஊர்களுக்கு மாற்றப்பட்டார்கள். இருப்பினும் தொடர்ந்து போன் மூலம் நட்பைத் தொடர்ந்தார்கள்.
ஆறு மாதங்களுக்கு முன்பு நவநீதனின் மகளுக்குத் திருமணம் நடந்தது. ‘அவசியம் குடும்பத்துடன் வர வேண்டும்’ என்று வற்புறுத்திச் சொல்லி, திருமண அழைப்பிதழையும் மகாலிங்கத்துக்கு அனுப்பியிருந்தார் நவநீதன். மகாலிங்கமும் ‘‘நிச்சயம் வருவேன்’’ என்று சொல்லியிருந்தார். ஆனால், வரவில்லை!
அந்தக் கோபத்தில் மகாலிங்கத்திடம் அதன்பிறகு பேசவே நவநீதனுக்குப் பிடிக்கவில்லை. இப்போதும் மகாலிங்கத்தைப் பார்க்க விரும்பாமல், முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டார் நவநீதன்.
மகாலிங்கம்தான் அவரை நெருங்கினார். ‘‘நவநீதா! உன் கோபம் எனக்குப் புரியுது… ஆனா, உன் பொண்ணு கல்யாணத்துக்கு முதல் நாள் என் அம்மா தவறிட்டாங்க. எப்படி என்னால வர முடியும்? நல்ல காரியம் நடக்கறப்ப இந்த விஷயத்தைச் சொல்லி, உன் சந்தோஷத்தைக் கெடுக்கவும் நான் விரும்பல’’ என்றார். இதைப் புரிந்து கொள்ளாமல் இத்தனை காலம் ஒரு நல்ல நட்பை இழந்ததை எண்ணிக் கலங்கினார் நவநீதன்.
– 09 Apr 2012