தை பிறந்தால்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 15, 2023
பார்வையிட்டோர்: 7,138 
 
 

“அம்மா…அம்மா…தம்பி பேப்பர் எடுத்துட்டுப் போயிட்டாரா…இங்க இருக்கா…இருந்தா கொடுங்க நான் கொஞ்சம் படித்துவிட்டு தருகிறேன்” என்ற படியே வந்து நின்றான் சேகர்.

அரசு வேலையில் இருக்கும் பாலுவும், அம்மாவும் அந்த கிராமத்தில் குடி இருந்தனர். கட்டாயம் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை இட மாற்றம்தான். சிட்டி-ல இடம் பார்த்து வீடும் கட்டி கொண்டு இருக்கிறான். கல்யாணத்திற்கு பார்த்துக்கொண்டு இருப்பதால் கூடிய விரைவில் குடி போக உத்தேசம்.

அம்மா அந்த தெருவில் இருந்த எல்லோருக்கும் ஃபிரெண்ட் . ஏதேனும் ஒரு சாக்கு வைத்துக்கொண்டு தினமும் ஒருவர் மாற்றி ஒருவர் வந்து பேசிக்கொண்டு இருந்து விட்டு போவார்கள். இந்த சேகரும் அப்படித்தான். தினமும் வந்து செய்தித்தாள் வாங்கி கொண்டு போவான். ஒரு மணி நேரத்திற்கு பிறகு திரும்பி வருவான்.

சேகர் பட்டப்படிப்பு முடித்தவன்தான். வசதியான குடும்பம். அப்பா, அண்ணன் எல்லோரும் விவசாயம், மில் வேலை என்று பொறுப்பாக இருக்க இவன் மட்டும் வயல் வேலைகளுக்கு போகாமல், நான் படித்த படிப்புக்கு வேற வேலைக்குதான் போவேன் என்று பிடிவாதமாக சுற்றி கொண்டு இருக்கிறான்.

சொந்தம் விட்டு போகாமல் மாமன் தன் பெண்ணையும் கல்யாணம் செய்து கொடுத்து விட்டார். இதோ கல்யாணம் ஆகியும் ஆறு மாதம் ஆகி விட்டது. வீட்டின் செல்ல பிள்ளையாக இருப்பவனை யாரும் எதுவும் சொல்வதில்லை. உட்கார்ந்து சாப்பிட நமக்குதான் சொத்து இருக்கிறதே என்ற அலட்சியம்.

அம்மாவும் அவ்வப்போது “ஏன்பா? வேலைக்கு ட்ரை பண்றியா இல்லையா ?” என்று கேட்டுக்கொண்டே தான் இருப்பாள். பதிலுக்கு ஏதேனும் சொல்லி மழுப்புவான் அவன்.

அன்று பொங்கல் பண்டிகை. மதியம் போல் வந்தான் சேகர். வாப்பா – என்று அன்போடு அழைத்த அம்மா “எங்க வீட்டு பொங்கல், வடை கொஞ்சம் சாப்பிடு” என்று உபசரித்தாள்.

“உங்க வீட்டில புதிதாக அறுவடை செய்த நெல், அரிசி வைத்து பொங்கல் பூஜை செய்தார்களா ? ஊருக்கெல்லாம் பொங்கல் ஒரு விதம் என்றால் , உழவர்களுக்கு அது இரட்டிப்பு கொண்டாட்டம் ஆயிற்றே. ஆமா.. உனக்கு விவசாயம் பற்றி என்ன தெரியும் ? உன் கிட்ட போய் கேட்கிறேன் ” என்று அலட்சியமாக சிரித்தாள் அம்மா.

“அப்படி இல்ல. அப்பாவும் அண்ணனும் தான் வயல், தோப்பு, துரவு, மில் எல்லாம் பார்த்துக்கறாங்க. நான் செய்ய என்ன இருக்கு ?”

“திருவிழா பார்க்க போகும்போது அப்பா தன் தோள்களில் உன்னை உயரத்தில் சுமந்து வேடிக்கை காண்பித்திருப்பார். ஆனால் திருவிழா முடிந்தவுடன் தோளை விட்டு இறங்கி விட வேண்டும். ரொம்ப நேரம் சுமந்து கொண்டே இருக்க முடியாது. அவர் கைபிடித்து நடந்து வரவேண்டும். அது போல அவர் தூக்கி சுமந்த காலம் முடிந்து அவருக்கு நீ கை கொடுக்கும் காலம் வந்தாச்சு. நடக்க கற்றுக்கொள்”.

“மாமனார் வீட்டில் இருந்து பொங்கல் சீர் வந்து இருக்குமே. பண்டிகை முடிந்த பின் உன் பெண்டாட்டியை அழைத்துக்கொண்டு அங்கு ஒரு முறை போய் விட்டு வா. அவளுக்கும் கொஞ்சம் சந்தோஷமா இருக்கும். போகும்போது அங்கே உள்ளவங்களுக்கு பதில் மரியாதையாக ஏதும் வாங்கி கொண்டு போ. பாவம், நீ என்ன செய்வாய். உங்க அப்பா காசு கொடுத்தாதானே எல்லாம்…”

“வீட்டில் உன் பொண்டாட்டி எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்கிறாள். நான் கூட ஒரு முறை ஏன் இவ்வளவு கஷ்டப்படுகிறாய் என்றேன்? அதற்கு அவள் என்ன சொன்னாள் தெரியுமா? “அவர் வீட்டில் அவர் உரிமையுடன், வேலை செய்யாமல் சாப்பிடலாம். ஆனால் நான் இந்த வீட்டில் சாப்பிடும் சாப்பாட்டிற்கு உழைத்தே தீருவேன் ” என்கிறாள். “ரொம்ப ரோஷக்காரிதான்”. உரிமையுடன் உலா வரும் நீ கடமையை பற்றி நினைத்தும் பார்க்கவில்லை;

அவள் நிலைமையை நீ கொஞ்சம் யோசி; மில்லுக்காரர் பையன் என்பது உனக்கு அடையாளமாக இருக்கலாம்.அனால் மில்லுக்காரர் வீட்டு மருமகள் என்பதை விட உன் மனைவி என்பதில்தான் அவளுக்கு கௌரவம் இருக்கு. அதை நீ புரிந்து கொள்ள வேண்டும். உன் பொண்டாட்டிக்கு ஒரு முழம் பூ வாங்கி கொடுக்க கூட உன்கிட்ட காசு இருக்கா ? “உத்தியோகம் புருஷ லட்சணம்” என்பது ஆண்களுக்கு அழகு என்று இல்லை ; உத்தியோகம் பார்த்தால்தான் ஒரு பெண்ணுக்கு புருஷனாக இருக்கவே தகுதி உண்டு” என்பதற்கு சொன்னது.

இந்த காலத்தில்தான் பெண்களே வேலைக்கு போகிறார்களே. உன் பொண்டாட்டி வேலைக்கு போக ரெடிதான் . ஆனால் நீ சும்மா இருக்கும்போது அவள் வேலை பார்த்தால் உனக்கு அவமானம் இல்லையா? வருங்காலத்தில் உனக்கும் பிள்ளைகள் என்று குடும்பம் பெருகும். இதுவரை வீட்டின் செல்லப்பிள்ளையாக இருந்து விட்டாய் ஆனால் எப்படிப்பட்ட கணவனாக, எப்படிப்பட்ட தகப்பனாக இருக்க வேண்டும் என்பதை யோசிக்கும் காலம் வந்து விட்டது .

எங்க வீடு கிட்டத்தட்ட கட்டி முடித்தாகி விட்டதுப்பா. அடுத்த வாரத்தில் அங்கு குடி போக முடிவு செய்து விட்டோம். பாலு அட்ரஸ் தருவான்; முடிந்தபோது அங்கு வா. பாவம் இனி நீதான் பேப்பர் படிக்க கஷ்டப்படுவாய். ஆமா….. அப்பப்போ பேப்பர் பார்த்து நீயென்ன வேலைக்கு அப்ளை பண்ணப்போகிறாயா ? சும்மா பொழுதைப் போக்கத்தானே படிக்கிறாய் இல்லாட்டா என்ன இப்போ ?

ஊருக்கு போகும் முன் உன்னிடம் சொல்ல தோன்றியது எல்லாம் சொல்லி விட்டேன். என்னை தப்பாக நினைக்காதே என்று முடித்தாள் அம்மா.

சிறிது நேரம் அமர்ந்து இருந்த சேகர் “நான் வரேன்”என்று கூறி விட்டு கிளம்பினான்.

அம்மா பேசியதை எல்லாம் கேட்டு கொண்டு உள்ளிருந்து வந்த பாலு “ஏன்மா கையில சக்கரை பொங்கலை கொடுத்து விட்டு இப்படி காரமா பேசியது நியாயமா,பாவம் அவன்” என்று வருத்தப்பட்டான். “சக்கரைப்பொங்கல் மட்டுமே என்றால் திகட்டிவிடும். அதுதான் இப்படி” சிரித்தாள் அம்மா.

“ஏதோ…. இது நாள் வரை ரொம்ப மரியாதையாக பிரியமாக பேசிக்கொண்டு இருந்தான். இப்போ உன்னை திட்டிக்கொண்டுதான் போயிருப்பான். ட்ரான்ஸ்பர் ஆகிப்போகும்போது தேவையா இது” என்று அலுத்துக்கொண்டான் பாலு.

“என்னை திட்டினாலும் பரவாயில்லை; அவன் கொஞ்சமே, கொஞ்சம் யோசித்தாலும் போதும். மாற்றம் வரும் அவன் பெண்டாட்டியை நினைத்துதான் நான் அப்படி பேசினேன் பாவம்டா அந்த பொண்ணு” அம்மா வருத்தப்பட்டாள்.

அடுத்த இரு வாரங்களில் அவர்கள் வீட்டை காலி செய்து விட்டு புதிதாக கட்டிய வீட்டிற்கு சென்று விட்டார்கள்.

***

நான்கைந்து மாதங்களுக்கு பிறகு ஒரு நாள் இரவு ஒன்பது மணி இருக்கும். வீட்டின் கதவு தட்டப்பட்டது. கதவை திறந்தால் சேகரும் அவன் மனைவியும் நின்று கொண்டு இருந்தனர். “உள்ளே வாங்க” என்று வரவேற்றான் பாலு.

“அம்மா….. நான் இப்போது சென்னையில் ஒரு மோட்டார் பாக்டரியில் வேலை செய்கிறேன். உன் ஆசைப்படி வெளியில் கொஞ்ச வருடங்கள் வேலை பார்த்து விட்டு வா” என்று அப்பாவும் சொல்லி விட்டார்.

“முதல் மாத சம்பளத்தை வாங்கிக்கொண்டு நேரே உங்களை பார்த்து, என் வணக்கத்தையும் நன்றியையும் சொல்லி விட்டு போக வந்தேன்” என்று கூறிய சேகர் பூ, பழங்கள், இனிப்பு என்று ஒரு பையை அம்மாவின் கையில் கொடுத்து விட்டு மனைவியுடன் சேர்ந்து அம்மாவின் காலில் விழுந்து வணங்கினான்.

“என்ன திடீர்னு ஒரு ஞானோதயம் என்று நினைப்பீங்க. நீங்க ஊரை விட்டு வந்துட்டாலும் நீங்க சொன்ன வார்த்தைகள் என் மனதில் ஒலித்துக்கொண்டே இருந்தன. கொஞ்ச காலமே பழகியிருந்தாலும் என் மீதும் என் மனைவி மீதும் அக்கறை கொண்டு நீங்க சொன்ன அறிவுரை என் கண்களை திறந்து விட்டது ”.

“எங்கே …. என்னை தப்பாக நினைத்துவிட்டாயோ என்று இருந்தேன். நல்லபடியாக புரிந்து கொண்டு ஏற்றுக்கொண்டாய். இப்ப கொஞ்சம் நிம்மதி. ஆனாலும் அன்னிக்கு நான் கொஞ்சம் அதிகமாக உரிமை எடுத்துக்கொண்டு ரொம்ப திட்டி விட்டேனோ”

“இல்லம்மா. எங்க வீட்டில பாசத்திலும், செல்லத்திலும் என் போக்கிலே விட்டு இருந்தார்கள். இவளும் பயந்து பேசாமல் இருந்தாள். எனக்குள் ஒரு சுய அலசலை ஏற்படுத்தி, என்னை கொஞ்சம் மாற்றி யோசிக்க வைத்ததே சாட்டையடி போல நீங்கள் சொன்ன வார்த்தைகள்தான். சரியான நேரத்தில் எனக்கு அறிவுரை கூறிய நீங்கள்தான் எனக்கு ஒரு வழிகாட்டி. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். இந்த தை பிறந்த போது என் வாழ்க்கைக்கும் ஒரு புதிய வழியை காண்பித்தது நீங்கள்தான்”. “உங்கள் வார்த்தைகள் படியே நடக்க ஆரம்பித்து இருக்கிறேன்” என்று சிரித்தான் சேகர்.

“இப்பவே பத்து மணியாகி விட்டது. இன்னும் வீடு போய் சேர ரொம்ப நேரமாகும்” பேசிக்கொண்டே சூடாக சமைத்த அம்மா அவர்களை சாப்பிட வைத்தாள். அவசரத்தில் பண்ணியது. வற்றல் குழம்பும் பொறித்த வடகமும்தான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி சாப்பிடுங்கோ…

“இந்த ராத்திரி வேளையில் நீங்க மெனக்கெட்டு செய்து போடுவது தேவாம்ருதம் சந்தோஷமாக சாப்பிடுவோம்” என்றான் சேகர்.

ஆனாலும் “அந்த சக்கரை பொங்கல் ருசி” தனிதான் இல்லையா – சிரித்தான் பாலு.

அம்மாவிடம் வந்த சேகரின் மனைவி “என் மனதை புரிந்து கொண்டு என் சார்பாக பேசிய உங்களை நான் என்றும் மறக்கவே மாட்டேன்” கண்களில் ஆனந்த கண்ணீருடன் கூறினாள். இருவரும் விடை பெற்று கிளம்பினர்.

“என்னம்மா, அன்னிக்கு அவ்வளவு திட்டினாய். இன்னிக்கு ஏக உபசாரம்தான் போல இருக்கு” என்றான் பாலு.

“ஆமாண்டா. அன்றைக்கு அவன் நிலைமைக்கு அந்த திட்டும் சரிதான். இன்றைக்கு இந்த நேரத்திற்கு இந்த உபசாரமும் சரிதான். அன்னிக்கு சர்க்கரைப்பொங்கல் காரமா இருந்தாலும் இன்னிக்கு வத்தக்குழம்பு இனித்தது பார்த்தியா” என்றாள் அம்மா .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *