தீபாவளிப் பரிசு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 13, 2014
பார்வையிட்டோர்: 9,108 
 
 

மும்பை நகரமே வெளிச்சத்தில் நனைந்துக்கிடந்தது. வரப்போகும் தீபாவளிக்கு இது வெறும் ஒத்திகைதான் என்று அங்கங்கே வெடிக்கும் வெடிச்சத்தங்கள் பறைச்சாற்றிக்கொண்டிருந்தன.

ஸ்டேஷனில் யார்க்கையில் பார்த்தாலும் தீபாவளிப்பரிசுப் பெட்டிகள். அவரவர் உத்தியோகத்துக்கு ஏற்ப பரிசுகளின் ரகங்களும் தரங்களும் வேறுபட்டது. தொழிற்சாலைகளுக்கு கடன் வழங்கும் வங்கியில் கடைநிலை ஊழியர்கள் கூட மாலையில் வீடு திரும்பும்போது மீராரோட், பயந்தர், கல்யாண், தாராவி, செம்பூர் என்று தன் வீடுகளுக்கு டாக்சியில் பரிசுப்பொருட்களை அள்ளிப்போடுக்கொண்டு போனார்கள். வங்கியில் அதிகாரியாக இருக்கும் அவளுக்கு வருகின்ற பரிசுகளுக்கு கேட்கவா வேண்டும் ? கல்யாணி மட்டும் அவளுக்கு வருகின்ற எல்லாப் பரிசுகளையும் எடுத்துச் செல்வதானால் ஒரு டெம்போதான் பார்க்க வேண்டும்.

கல்யாணிக்கு தெரியும் எல்லா கஸ்டமர்களைப் பற்றியும். அதில் அவள் செலக்ட் செய்து சிலப் பரிசுகளை மட்டும்தான் எடுத்துச் செல்வாள். பிஸ்கட், டிரை புரூட்ஸ் மாதிரி அயிட்டங்களை எல்லாம் தன் டிபார்ட்மெண்டில் எல்லோருக்கும் தாராளமாக வினியோகம் செய்துவிடுவாள். அதனால் அவளுக்கு ‘கல்யாணி மேடம் ரொம்ப நல்லவுங்க ‘ என்று பெயர் இருந்தது.

அன்று கல்யாணிக்கு வந்திருந்த பரிசுகள் பெரும்பாலும் துணிவியாபாரிகளிடமிருந்தும், பெரிய பெரிய்ய ஷோ ரூம்களிலிருந்தும், ரெய்மண்ட், விமல்ம் கார்டன், நல்லி, ரூப்சங்கம், கலாநிகேதன், லஷ்மி சில்ஸ், மபட்லால் வகையாறாக்களின் வண்ண வண்ண தாள்களில் கண்ணைப்பறிக்கும் பரிசுகள்… பெண்களுக்கு துணிகளும் நகைகளும் எவ்வளவு இருந்தாலும் போதும் என்கிற எண்ணம் வருவதே இல்லைதானே. கல்யாணி மட்டும் என்ன விதிவிலக்கா.. ?

கல்யாணி தன் பரிசுப்பெட்டிகளுடன் வி.டி. ஸ்டேசனுக்கு டாக்ஸியில் வந்தாள். செம்பூரில் இருக்கும் அவள் இல்லத்திற்குப் போகவேண்டும். ஹார்பர் லைனில் வண்டி இன்னும் வரவில்லை.

ஸ்டேசனின் நுழைவாயிலில் தூண்களுடன் நின்று கொண்டு போகிற வருகிற ஆண்களிடம் கண்களால் ரேட் பேசி அழைக்கும் அந்தப் பெண்களின் கூட்டம் அன்று அதிகமாகவே காணப்பட்டது. தீபாவளிக்குப் போனஸ் என்றால் அந்தப் போனஸ் அவர்களுக்கும்தான் என்கிற மாதிரி அதிகப்படியான் சிரிப்புடனும் அலங்காரத்துடனும் அந்தப் பெண்கள் இரண்டு மூன்று பேராக நின்று கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் கல்யாணிக்கு வயிற்றைக் குமட்டும். அவர்கள் வாடைக்காற்று கூடப் படக்கூடாது. அவர்களின் பார்வைப் பட்டாலே பாவம் என்று கல்யாணி ஒதுங்கி ஓடுவாள். அதுவும் அவர்களில் யாராவது தமிழில் பேசிவிட்டால் அவ்வளவுதான். அவளையே யாரோ இழுத்துவந்து நடுரோட்டில் நிறுத்தி நிர்வாணப்படுத்தி கெடுத்துவிட்ட மாதிரி அவளுடைய மனசும் உடம்பும் பதறும்.. கதறும்.. இரவு தூக்கம் கெடும்.

மூன்றாவது பிளாட்பாரத்தில் வண்டி வருமா ? ஐந்தாவது பிளாட்பாரத்தில் வருமா ? இண்டிகேட்டர் வெறுமையாக இருந்தது. அவள் இரண்டுக்கும் நடுவில் நான்காவது பிளாட்பாரமருகில் நின்று கொண்டாள்.

ரயில்வே போலீஸ் ஒரு பைத்தியத்தை இரண்டாம் நம்பர் பிளாட்பாரத்திலிருந்து விரட்டிக் கொண்டு வந்தார்.வி.டி. யில் அந்தப் பைத்தியத்தைத் தெரியாதவர்கள் இருக்கவே முடியாது.யாருக்கும் எந்த தொந்தரவும் செய்வதில்லை. யாராவது ஏதாவது கொடுத்தால் மட்டுமே வாங்கிச் சாப்பிடும். ஒவ்வொரு பிளாட்பாரத்திற்கும் போய் வந்துக்கொண்டிருக்கும்..பெண் அவள்.. சோகத்தை இழந்த விழிகள், கிழிந்து தொங்கும் ஆடைகள்.. அதில் எட்டிப்பார்க்கும் பருவத்தின் முடிச்சுகள்.. அவளை நின்று பார்க்க நேரமில்லாமல் ஓடுவது போல தோற்றம். .. காட்டி எட்டிப்பார்க்கும் சிலரின் விழிகள்.. அய்யோ பாவம் என்று கொஞ்சம் இரக்கம் எட்டிப் பார்த்தவர்களுக்கு அவளை அடுத்தமுறைப் பார்க்க மனசு தடை உத்தரவே போடும். கல்யாணி தன் பார்வையை திருப்பினாள்.

‘ இன்னும் ஏன் இண்டிகேட்டர் போடலை. இந்த ரயில்வே நிர்வாகமே இப்படித்தான். எல்லாம் தனியுடமை ஆக்கவேண்டும்.. அப்பொதான் சரியாகும் ‘ என்று சலித்துக்கொண்டாள்.

ஸ்டேசனின் முன்னாலிருக்கும் காபி, டா மெஷின் அருகில் ஒருவன் காபி குடித்துக்கொண்டே தூண்களின் அருகில் நிற்கும் பெண்களிடம் கண்களால் பேசிக் கொண்டிருந்தான்.அந்தப் பெண்களில் ஒருத்தி அவனை சோக்கி வந்தாள்.அவன் எக்ஸ்டாராவாக இரண்டு ச்சாய் வாங்கினான். அவனை நோக்கிவந்த அந்தப் பெண்ணிடம் இரண்டு கப் சாய்களையும் நீட்டி எதோ சொன்னான் இந்தியில்.

அவளும் சிரித்துக்கொண்டே அதில் ஒரு கப் சாயை அந்தப் பைத்தியக்காரிக்குக் கொடுத்தாள். என்ன நினைத்தாளோ தெரியவில்லை.. சட்டென்று தன் துப்பட்டாவை எடுத்து அந்தப் பைத்தியக்காரியின் உடம்பில் போர்த்திவிட்டாள். துப்பட்டா இல்லாமல் அவளுடைய திமிறிய மார்பில் மும்பையின் வெளிச்சம் மங்கிப்போனது.

அவளும் அவனும் தீபாவளிக் கொண்டாட சேர்ந்து போனார்கள்.

கல்யாணி தன் தீபாவளிப் பரிசுப்பொருட்களுடன் முதல் வகுப்பில் சன்னலோரமாக உட்கார்ந்து கொண்டு இந்தியா டுடே படித்துக்கொண்டிருந்தாள்.

– அக்டோபர் 2003

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *