[வி]சித்திரமான வாழ்க்கை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 5, 2023
பார்வையிட்டோர்: 1,859 
 
 

(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கீதாவிற்கு மனம் கனத்து போயிருந்தது. கணவன் ரகு அலுவலகத்திலிருந்து வரும் நேரம் காபி போட்டு வைக்கலாமா என்று யோசித்தவாறு சமையலறைக்குள் நுழைந்த போது காலிங் பெல் கூப்பிட்டது.

வாசலைத் திறந்ததும் கணவன் ரகு உள்ளே வந்து பெட்டியைத் திறந்து ஒரு விலையுயர்ந்த சேலையை எடுத்து கீதாவிடம் நீட்டி எப்படி இருக்கிறது பிடித்திருக்கிறதா? என்று கேட்டான்.

ம்.. ஓகே என்றாள் சிரத்தையில்லாமல். “காபி குடிக்கிறீர்களா ?” என்று கேட்டாள் தொடர்ந்து,

என்ன ஒரு மாதிரியிருக்கிறாய் உடம்புக்கு சுகமில்லையா?

ம்கூம் மனதிற்கு தான் சரியில்லை. இன்னும் ஒரு வாரத்திற்குள் பிரியப் போகிறோம்.

இருவருமேமனம் ஒத்துப் போய் தானே விவாகரத்திற்கு அப்ளை பண்ணினோம்.

மனம் திறந்து சொல்லுங்கள் ரகு. இந்த வாழ்க்கை உங்களுக்கு பிடிக்கவில்லையா?

கீதா இதைப்பற்றி நாம் நிறையப் பேசியாகிவிட்டது. இன்னும் ரணங்களைத் திரும்பவும் கிளறிப் பார்க்க வேண்டுமா?

அப்புறம் ஏன் எனக்குப் புதிதாகச் சேலை வாங்கி வந்தீர்கள்? என்னோடு இருக்கும்வரையில் நீ கண்டிப்பாக மகிழச்சியாக இருக்க வேண்டும். என்று நினைத்த ஒரே காரணம் தான்.

அப்படியானால் இவ்வளவு நாளும் என்னோடு சண்டையிட்டு இந்த வாழ்வில் கண்டிப்பாக சேர்ந்து வாழ முடியாது என வாழ்க்கையின் எல்லைக்கு வர வைத்த நாட்களில் ஏன் என்னை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியவில்லை.

உன்னோடு நான் விவாதம் பண்ண விரும்பவில்லை. பதினைந்து வருடம் நடத்திய நம் தாம்பத்தியத்தில் எல்லா விஷயங்களிலும் சுக துக்கங்களிலும் என்னோடு பகிர்ந்து கொண்ட நீ நமக்கொரு குழந்தை இல்லை என்ற போது, குத்திக் காட்டுவதாக சொன்னவள் நீ தான் கீதா.

பின்னே..நாம் இன்னொரு குழந்தையை தத்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னவர் நீங்கள் தானே?

இதிலே என்ன தவறு.

நமக்குக் குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்று டாக்டர் சொல்லிவிட்டார். அதிலும் குறை உன்னிடமே என்று சொல்லிவிட்டார் டாக்டர்.

பாருங்கள் திரும்பவும் என்னைக் குத்திக் குதறுவதிலே குறியாக இருக்கிறீர்கள் நீங்கள் ?

தீ என்று சொன்னால் சுடுவதில்லை என் அன்பு மனைவியே. குழந்தை பாக்கியம் இல்லை என்று தெரிந்த பிறகும் ஒரு அனாதைக் குழந்தையையோ உறவில் ஒரு குழந்தையையோ நாம் தத்து எடுத்துக் கொள்வதில் ஏதும் தவறில்லை.

கோபத்துடன் எழுந்து சமையலறைக்குள் சென்ற கீதா ஸ்டவ்வை வேகமா அடித்துப் பாலைத் தூக்கி அடுப்பில் வேகமாக வைக்க பால் சிந்தியது.

சமையலறைக்குள் வந்த ரகு “என் மேலுள்ள கோபத்தை ஏன் அங்கே காட்டுகிறாய் கீதா” என்றான்.

நாம் எத்தனையோ முறை பேசிப் பேசிச் சலித்துப் போன விஷயம் ரகு இந்த குழந்தை விஷயம். எனக்கு நீ குழந்தை உனக்கு நான் குழந்தை என்று நமக்குள் மகிழ்ந்த நாட்களில் இருந்து ஏன் இன்னொரு குழந்தையை தத்து எடுக்க வேண்டும் என்று சொல்லி என் கோபத்தைத் திரும்பத் திரும்பத் தூண்டுகிறீர்கள்.

அந்தப் பிரச்சினையினாலேயே நம் வாழ்க்கை விவகாரத்து வரை போய், நாம் பிரியப்போகிறோம்.இன்னும் உங்கள் அக்கா மகளைத் தத்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறீர்கள். இதிலிருந்து நாம் பிரிவதில் உங்களுக்குள் ஆனந்தம் இருக்கிறது. என்று தான் தெரிகிறது. பரவாயில்லை. இன்னொரு குழந்தை இந்த வீட்டுக்கு தத்துப் பிள்ளையாக்குவதை விட நான் இந்த வீட்டிலிருந்து கிளம்பிப் போய் விடுவதே நல்லது என்று காபி பவுடரையும் சர்க்கரையையும் கலந்தாள்.

நான் ஒன்றும் என் அக்கா மகளைத்தான் தத்து எடுக்க வேண்டும் என்று சொல்லவில்லையே அகல்யாவை உனக்குப் பிடிக்கவில்லை என்றால் வேறுயாராவது ஒரு குழந்தையை தத்து எடுத்துக் கொள்வோம் என்றவாறு லுங்கிக்கு மாறினான் ரகு.

“அதாவது கண்டிப்பாக தங்களுக்கு ஒரு தத்துப் பிள்ளை வேண்டும் அப்படித்தானே”

கோபத்துடன் காபியை நீட்டினாள்.

திரும்பத் திரும்ப பழைய இடத்திற்கே போகிறாய் விக்ரமாதித்தனின் வேதாளம் முருங்கை மரத்திற்கே திரும்புவது போல்.

கீதா நீ காபி எடுத்துக் கொள், வா உட்கார் என்று அவளை அழைத்துக் கொண்டு ஹாலில் சோபாவிற்கு வந்தான். கீதா காபியை பாயில் வைத்து விட்டு, “ரகு என்னை இந்த வீட்டை விட்டு விரட்டி விடுவீர்களா ? உங்களுக்கு நான் சொல்வது ஏன் புரியவில்லை. நம் வீட்டிற்கு இன்னொரு குழந்தை வந்தால் என் மீது உங்கள் அன்பு குறைந்து விடுமே என்று தானே நமக்கு தத்துக் குழந்தை வேண்டாம் என்று மறுக்கிறேன்.ஏன் உங்களுக்குப்புரியவில்லை” என்றாள் அவன் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.

சீ! இது ஒரு காரணம் கீதா. இன்னொரு குழந்தை வருவதால் எனக்கு உன் மேல் அன்பு குறையும் என்று எவ்வாறு முடிவு கட்டினாய் அசடே!

என்னை அவ்வளவுதான் புரிந்து கொண்டிருக்கிறாய் கீதா நீ, நான் இந்த வீட்டில் தத்து குழந்தை எடுத்துவர நீ அனுமதித்தால் எனக்குத் தான் உன் மீது அன்பு அதிகரிக்கும், தவிர குறையாது தெரியுமா? காபியை எடுத்துக் குடிக்க ஆரம்பித்தான் ரகு.

சூடாக இருந்த காபியை ஒரு வாய் உறிஞ்சிவிட்டு திரும்பவும் டீபாயில் வைத்த கீதா “நீங்கள் ஏன் ரகு இவ்வளவு சொன்னபிறகும் ஒரு குழந்தை வேண்டும் என்று இவ்வளவு அடம்பிடிக்கிறீர்கள், நீங்கள் வருத்தப்பட்டாலும் பரவாயில்லை. என்னைப் பிரிவதற்கு தயாராக விவாகரத்திற்கு தயாராக இருக்கிறீர்கள் ஒரு குழந்தைக்காக என்னைப் பிரிய எப்படி முனைந்தீர்கள்?” என்றால் சூடாக.

இப்போதும் சொல்கிறேன். நான் சிறுபிள்ளையாக இருக்கும் போது எனக்கு எதிர்த்த வீட்டிலிருந்த ராஜரத்தினம் என்பவர் கடைசி காலத்தில் குழந்தை இல்லாத காரணத்தால் எத்தனை. கஷ்டப்பட்டார் என்பது எனக்குத்தான் தெரியும்.

ஏன்பக்கத்துவீட்டு நாராயணன் மாமா எவ்வளவு பணம் சம்பாதித்தும் கவனிக்க குழந்தைகள் இல்லாததால் எவ்வளவு அவதிப்படுகிறார் என்பது புரிகிறதா? திரும்பவும் காபி கப்பை கையில் எடுத்துக் கொண்டான் ரகு.

காபியை குடித்து முடித்த கீதா “குழந்தைகள் இருந்தும் கடைசிக் காலத்தில் கவனிக்காமல், கவனிக்க ஆளில்லாமல் எத்தனை பேர் கஷ்டப்படுகிறார்கள் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும் என நினைக்கிறேன்” என்றாள்.

விவாதத்திற்காக எதுவும் சொல்வதில் பிரயோஜனமில்லை கீதா.நாம் வளர்க்கும் விதத்தில் குழந்தைகள் வளர்கிறார்கள். என் அப்பா அம்மாவை நாம் கடைசிக்காலத்தில் கவனித்துக் கொள்ளவில்லையா என்று எழுந்தான் ரகு.

“என்னைப் பிரிந்தாலும் பரவாயில்லை, உங்களுக்குக் குழந்தை வேண்டும். அப்படித்தானே” என்றவாறு சோபாவிலிருந்து கீதாவும் எழுந்தாள்.

சிரித்துக் கொண்டே “எனக்கு என் அன்பு மனைவி கீதாவைவிட இந்த உலகில் எதுவும் பெரிய விஷயமில்லை அன்பு மனைவியே விவாகரத்து வரைப் போனாலாவது நீ ஒரு குழந்தையை நம் வீட்டிஹ்கு வர வைப்பாய் என்று நினைத்தேன். இனி உன் விருப்பம். ஆனால் நமக்குள் எப்போதும் பிரிவு என்பதில்லை” என்றான் ரகு.

ஆனந்தக் கண்ணீர் வடித்த கீதா “நாம் நாளைக்கே அகல்யாவை தத்தெடுத்து கொள்ளலாம்” என்றாள் ரகுவின் கைகளைப் பிடித்து கொண்டு.

– 30 அக்டோபர் 2004, தமிழ் போஸ்ட்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *