(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
எங்கள் வேலைக்காரச் சிறுமி ஓடிவிட்டாள்.
நான் சிறுவனாயிருந்தபோது நடந்த மறக்க முடியாத சம்பவங்களில் இதுவும் ஒன்று. இப்படி அவள் அடிக்கடி ஓடினாள். அவளுக்கு அது பழகிவிட்டது. எங்களுக்கும் பழகிக்கொண்டே வந்தது.
எங்கள் தகப்பனார் எங்களிலும் பார்க்க ஏழ்மையான ஒரு கிராமத்துக்குப் போய், எங்களிலும் பார்க்க ஏழ்மை யான ஒரு வீட்டில் அவளைப் பிடித்து வந்திருந்தார். இங்கிலீஸ்காரன் எங்களை ஆண்டு கொண்டிருந்த அந்தக் காலத்திலேயே அவளுக்கு விலையாக ஆறாம் ஜோர்ஜ் மன்னர் படம் போட்ட ரூபாத் தாள்களில் அறுபது எண்ணிக் கொடுத்திருந்தார். மாதம் இரண்டு ரூபா வீதம் சம்பளம் பிடிப்பதாக ஏற்பாடு. இவள் மூன்றாவது தடவையாக இப்படி ஓடியபோது அந்தக் காசு அரை வாசிகூடக் கழிந்திருக்கவில்லை .
ஐயா வழக்கம் போல தனது படைகளை ஏவிவிட் டார். சின்ன மாமா பெரிய கடைப்பக்கம் புறப்பட்டார். அவரிடம் ஒரு மோட்டார் சைக்கிள் இருந்தது. இடி முழக்கத் துண்டுகளைக் கட்டியிழுப்பது போல சத்தம் போட்டுக்கொண்டே வருவார். இப்படியான ஒரு காரி யத்துக்காகவே காத்திருந்தவர் போல அதில் கம்பீரமாக ஏறி, தேவைக்கு அதிகமான வேகத்தில் வெளிக்கிட்டார். இன்னும் மற்றவர்கள் அவரவர் தகுதிக்கும் ஆற்றலுக்கும் ஏற்றவகையில் திசைமானியில் இருக்கும் அத்தனை திசைகளிலும் கிளம்பினார்கள். சீதையைத் தேடி வானர சேனை புறப்பட்டது மாதிரி இருந்தது.
அம்மாவின் கையிலே பிறந்து மூன்று மாதமேயான குழந்தை ஒரு ராட்சதத்தனமான கறுத்த புழு போல நெளிந்து கொண்டிருந்தது. பேர் என்னவோ தில்லை நாயகி என்று வைத்திருந்தார்கள். அதற்குக் காரணம் இருந்தது. தில்லை அம்பலப் பிள்ளையாருக்கு நேர்ந்து பிறந்த பிள்ளை . பிரசவம் சுகமாயிருந்தால் வெள்ளியில் தொட்டிலும் பிள்ளையும் செய்து தருவதாகப் பிரார்த்தனை. அந்த நேர்த்திக் கடனைத்தான் இன்னும் இரண்டு நாளில் சென்று நாங்கள் நிறைவேற்றுவதாக இருந்தோம்.
அதற்கு, பதின்மூன்று வயது கூட தாண்டாத இந்த வேலைக்காரி யால் ஆபத்து வந்திருந்தது. அவளைச் சுற்றித்தான் எங்களுடைய வீடு சுழன்று கொண்டிருந்தது. அம்மாவின் வேலைகள், ஐயாவின் ஆணைகள், சின்ன மாமியின் மேற்பார்வைகள், என்னுடைய ஆக்கினைகள் என்று பலதை அவள் சமாளித்தாள். அபார ஞாபக சக்தி அவளுக்கு. எது தொலைந்தாலும் அவள் தான் எடுத்துத் தந்தாள்; எடுத்ததைத் தொலையாமல் பாதுகாத்தாள். வீட்டைப் பெருக்கினாள்; தண்ணீர் இறைத்தாள்; உணவு சமைத்து, துணி துவைத்து, பாத்திரம் கழுவினாள். இன்னும் நேரம் எஞ்சியிருந்தால் அடுப்படியில், நெருப்புத் தணல் அணைந்து போன விறகு அடுப்புக்குப் பக்கத்தில், படுத்துக் கொண்டாள்.
எனக்குப் பெரிய சங்கடம் இருந்தது. இவளை எப்படியாவது பிடித்து வராவிட்டால் எங்கள் கோயில் பயணம் தள்ளி வைக்கப் பட்டுவிடும். இந்தச் செய்தியை ஐயா ஏற்கனவே அறிவித்திருந்தார். இது எனக்குப் பெரிய அசௌகரியத்தை பள்ளிக்கூடத்தில் ஏற்படுத்தும்.
என்னுடைய தம்பி கவலைகளுக்கு அப்பாற்பட்டவன். இரண்டு மார்பிள்களை வைத்து விளையாடிக்கொண்டிருந்தான். அதில் ஒரு மார்பிள் அபூர்வமாக இருந்தது. ஆகாய நீலத்தில், வெள்ளைப் பூ வைத்து. அவற்றை உருட்டியும், எறிந்து பிடித்தும் விளையாடினான். அந்த மார்பிள்களை நான் அபகரிப்பதற்குப் பலமுறை முயன்று தோல்வியுற்றிருந்தேன். எனக்கு எரிச்சலாக வந்தது.
அண்ணா வா , மார்பிள் விளையாடுவோம்’ என்றான். இவனுக்கு அது விளையாட வராது. ஆனாலும் ஆசைப்படுவதை நிறுத்த மாட்டான்.
‘நீ சின்னவன். உனக்கு மார்பிள் ஏன்? அண்ணாவுக்குத் தா, நல்ல பிள்ளை’ என்றேன்.
அவன் காதுகளைப் பொத்தியபடி ‘ஐயோ அண்ணா! அதை மட்டும் கேட்காதே, அதை மட்டும் கேட்காதே’ என்று கெஞ்சினான். பரோபகார சிந்தை அந்தச் சமயம் என்னிடம் வழிந்து ஓடியபடியால் நான் அவனைப் போகட்டும் என்று விட்டுவிட்டேன்.
அம்மா காலை மடித்து, தலையிலே கை வைத்தபடி உட்கார்ந்திருந் தாள். பக்கத்திலே ஒரு தடுக்கில் கறுப்புப் புழு கிடந்தது. அதற்கு அருகில் போனால் வேப்பெண்ணெய் மணம் வரும். அம்மாவின் சமீபமாகப் போக இது நல்ல சமயம் அல்ல என்று எனக்குத் தோன்றியது. என் கவலை முழுக்க பொன்னியில் இருந்தது. ஒருவரும் அறியாமல் தில்லை அம்பலப் பிள்ளையாருக்கு அவள் விரைவில் பிடிபடவேண்டும் என்று என் கணக்கில் ஒரு நேர்த்திக்கடன் வைத்தேன்.
என் பிரார்த்தனைகள் தவறாமல் பலித்த காலம் அது. அன்றிரவே பொன்னியைப் பிடித்துவிட்டார்கள். சின்ன மாமாதான் இதைச் சாதித்தார். பெரிய கடை தெருக்களில் அலைந்து கொண்டிருந்தா ளாம். கையிலே காசு இல்லாமல் அவள் அவ்வளவு தூரத்தையும் எப்படி நடந்து கடந்தாள் என்பதை வியந்து வியந்து பேசினார்கள்.
அம்மாவுக்கு உள்ளூர சரியான சந்தோசம். ஆனால் அதை வெளியே காட்டவில்லை. பொன்னியைத் திட்டியபடியே இருந்தாள். அவள் ஒரு வார்த்தை பேசவில்லை. சூடாக்கிய உலோகம் போல அவள் தேகத்திலிருந்து ஒரு விதமான நெடி வந்துகொண்டிருந்தது. தலை மயிர் அவிழ்ந்து குலைய, முழங்கால்கள் கண்களை மறைக்க, கைகளைக் கட்டி குறுகிப்போய் உட்கார்ந்திருந்தாள். அவளிடம் உயிர் இருப்பது இருபது விநாடிக்கு ஒருமுறை வந்த கேவலில் மட்டும் தெரிந்தது.
எப்படி ஓடினாள் “யார் சொல்லிப் போனாள்” எவர் ஆசை காட்டியது என்றெல்லாம் துருவினார்கள். அவள் வாய் திறக்க வில்லை .
“பசிக்குதா சாப்பிடுவியா?” என்று அம்மா கேட்டதற்கு மட்டும் தலையை ஆட்டினாள். அம்மா போட்டுக் கொடுக்க சாப்பிட்டாள். ஒரு பெரிய வெண்கல கும்பா நிறைய சோறும் கறியும் போட்டுப் பிசைந்து பிசைந்து உண்டாள். அவ்வளவு உணவையும் ஒரே அமர்வில், ஒரே தரத்தில் ஒருவர் சாப்பிட்டதைத் தன் சீவியத்தில் தான் பார்க்கவில்லை என்று அம்மா வாய்விட்டு சொன்னாள். நானும் அப்படித்தான் நினைத்தேன்.
ஐயா சாப்பிட்டபின் சுருட்டு புகைத்தபடி சின்ன மாமாவிடம் பேசினார். அடுத்து வரும் திங்கட்கிழமை தில்லை அம்பலப் பிளை யார் கோவிலுக்குப் போவதாக முடிவு செய்யப்பட்டது. சின்னத்தம்பி யின் காருக்குச் சொல்லும்படியும் ஐயா நினைவூட்டினார். திங்கட் கிழமை பள்ளிக்கு மட்டம் போடலாம் என்பதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. அதற்குப்பின் வந்த பல இரவுகள் எனக்குத் தூக்கமின்றிக் கழிந்தன.
எல்லோரும் இவ்வளவு சீக்கிரம் எழுந்து விடுவார்கள் என்று எனக்குத் தெரியாது. நான் விழித்தபோது நடுச்சாமம் போல இருந்தது. தம்பியைப் பார்த்தால் அவன் எனக்கு முன்பாகவே எழுந்து, குளித்து வெளிக்கிட்டுத் தயாராக இருந்தான். இவனை விடக்கூடாது என்று பட்டது.
மெதுவாக அவனுடைய பழைய சட்டையில் தேடிப் பார்த்தேன். மார்பிள்களை ஞாபகமாக எடுத்துவிட்டான். அவனுடைய புதுச் சட்டையில் அவை கர்ண கடூரமாகக் கிலுங்கி ஒலி செய்து கொண்டு இருந்தன.
அன்பொழுக ‘தம்பீ!’ என்று கூப்பிட்டேன். நான் கேட்கப் போவதை எப்படியோ முன்கூட்டியே உணர்ந்து, ‘ஐயோ அண்ணா!’ என்று அவன் காதுகளைப் பொத்தினான்.
அம்மாவிடம் ஒரு பிரயோசனமும் இல்லை. அங்கே கறுப்புப் புழுவுக்குப் பாலாபிஷேகம் நடந்துகொண்டிருந்தது. என்னைக் கண்டதும் ‘பழிகாரா, இன்னும் நீ உடுக்கவில்லையா? கார் வரப் போகுது. ஓடு , ஓடு’ என்றாள்.
பொன்னியைச் சுற்றி பல பாத்திரங்களும் சாமான்களும் இருந்தன. வெண்கல அண்டா, சருவச்சட்டி, புதுப்பானை, அரிசி, சர்க்கரை, பருப்பு என்று. ஓர் உலோபி காசு எண்ணுவதுபோல அவள் அவற்றைத் திருப்பித் திருப்பி எண்ணிக்கொண்டிருந்தாள். அவள் கூட பச்சைத் தாவணியும், வேறு யாருக்கோ அளவெடுத்து தைத்தது போல கைவேலை செய்யப்பட்ட மேலாடையும் அணிந்திருந்தாள். நாடா வைத்து இடையிலே இறுக்கிக் கட்டிய சீத்தைப் பாவாடை, கஞ்சி போட்டு மொடமொடவென்று, அவள் உதவி இல்லாமல் தனியாக நிற்கும் வல்லமை கொண்டதாகப் பட்டது. கரும்பழுப்பு நிறத்தில் அவள் முகம் இயல்பைவிட ஆழமாக மினுமினுத்தது. என்னைக் கண்டதும் அண்டரண்டப்பட்சி செட்டை விரிப்பது போல கைகளை அகட்டி வீசி வீசி துரத்தினாள். அவளுடைய கணக்கைப் பிறகு தீர்க்கலாம் என்று குறித்து வைத்துக்கொண்டேன்.
அந்தக் காலத்தில் எங்கள் ஊரில் வாடகைக்கு இரண்டு கார்கள் கிடைக்கும். சின்னத்தம்பியின் காருக்கு ஐயா சொன்னதில் எனக்குப் பரம சந்தோஷம். அது ஒஸ்டின் செவன் பெட்டி வடிவக் கார். பல மாதங்களாக அதன் மகிமைகளை எங்கள் ஊர் பேசிக் கொண்டிருந்தது. ஆனால் அதைப் பார்க்கும் பாக்கியம் எனக்கு முதன் முதல் அப்போதுதான் கிடைக்கப்போகிறது.
கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டு படலைக்கு ஓடினேன். எனக்கு முன்பாகவே அங்கே காரைச் சுற்றிக் கூட்டம் சேர்ந்துவிட்டது. சின்னத்தம்பி மிகுந்த மதிப்புக் கொடுக்கக்கூடிய ஒரு விளிம்பு வைத்த தொப்பியை அணிந்திருந்தார். என்னுடைய எதிர்பார்ப்புக்கு ஒத்துவராததாக ஒரு வேடிக்கைத்தன்மையுடன் அது இருந்தாலும், ஒரு ஒஸ்டின் செவன் பெட்டி வடிவக்கார் சாரதிக்கு அது பொருத்த மானதாகவே காணப்பட்டது. கழுத்திலே தலை இருக்கும் வரை அவர் அதைக் கழற்றுவதில்லை என்று பேசிக்கொண்டார்கள். அவர் குளிக்கும் போதும், சயனிக்கும் போதும் என்ன சாகசம் செய்து அதைக் காப்பாற்றுவாரோ தெரியாது. நான் பார்த்தபோது வெளியே நின்று காரிலே சாய்ந்து பீடி பிடித்துக் கொண்டிருந்தார். நான் எப்பொழுதாவது கார் ஓட்டினால் அப்படி ஒரு தொப்பி அணிந்து, சாய்ந்து நின்று பீடி குடிக்க வேண்டும் என்று உடனேயே தீர்மானம் செய்தேன்.
காரைப் பார்த்ததும் எனக்கு மெய்சிலிர்த்தது. கோபத்துடன் உறுமியபடி ஆயத்தமாக எழுந்த ஒரு பெண் சிங்கம் போல அது நின்றது. முன்புறம் நிமிர்ந்து வளைந்த மட்கார்டுகளில் இரண்டு பெரிய லைட்டுகள் ஒளியைப் பாய்ச்சத் தயாராக இருந்தன. கால் வைத்து ஏறுவதற்கு ஏதுவாக இரண்டு கரையிலும் வுட்போர்ட் இருந்தது. சுருட்டி விடும் எஞ்சின் மூடிகள். கவனக் குறைவாகப் படைத்தது போல ஹோர்ன் என்னும் ஒலிப்பான் பந்து போல உருண்டை வடிவில் காருக்கு வெளியே இருந்தது, ஒரு தனி உறுப்பாக மினுங்கும் கறுப்பு வர்ணத்தைப் புழுதி மூடியதால் வெண்சாம்பல் நிறமாக மாறிய கார், பெற்றோலும் புழுதியும் கலந்த ஒரு அபூர்வ மணம் சூழ நின்றது.
கால் பெருவிரல்களை ஊன்றி உள்ளுக்கு எட்டிப் பார்த்தேன். சாணிக் கலரில் அகலமான இருக்கைகள். மற்றவர்களும் அப்படியே பார்க்க முயற்சித்தபோது அவர்களை விரட்டினேன். கார் பின் கண்ணாடியில் படிந்திருந்த தூசியில் யாரோ வதனி’ என்று சிறு விரலினால் எழுதியிருந்தார்கள். வதனி என்னுடன் ஒரே வகுப்பில் படிப்பவள். அவளுடனான என் சினேகிதத்தை மிகவும் ரகஸ்யமாக அதுவரைப் பாதுகாத்து வைத்திருந்தேன். அப்படியும் அது வெளியே தெரிந்துவிட்டது. எழுதியவன் யார் என்பதை அன்று முழுவதும் யோசித்தும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.
சாரதியைத் தவிர்த்து அந்தக் காரில் ஒன்பது பேர் பிரயாணம் செய்வதாக இருந்தோம். முன் சீட்டில் மூன்று, பின் சீட்டில் ஐந்து, வுட்போர்ட்டில் சின்ன மாமா என்பது கணக்கு. நான் காருக்குள் ஏற வந்தபோது எல்லோரும் ஏற்கனவே இடம் பிடித்துவிட்டார்கள். பேராசைக்காரர்கள். அம்மா, சின்ன மாமி , மணி, பொன்னி , தம்பி.
அந்தக் காருக்கு சன்னல் கண்ணாடிகள் இல்லை; சுருட்டி விடும் கன்வஸ் திரைகள்தான். சன்னல் பக்கத்தில் பொன்னி இருந்தாள். அவளின் மடியில் தம்பி இருந்து குற்ற உணர்வோடு என்னைப் பார்த்தான். இவன் எப்படி என்னுடைய சன்னல் கரையை எடுக்கலாம். அப்பாவின் காதுக்குக் கேட்காமல் இறங்கடா’ என்றேன். பொன்னி அவனை இறுக்கிப் பிடித்திருந்தாள். அண்ணா என்று விசும்ப ஆரம்பித்தான். இறங்கடா, படுவா!’
நீண்ட விவாதங்களுக்குப் பிறகு ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. அண்ணா , போகும் போது நீ இரு; திரும்பி வரும்போது என்னை விடு’ என்றான். அப்படியே நான் ஏறிக்கொண்டேன். அப்பாவும் முன் சீட்டில் அமர்ந்தார்.
இதற்காகவே காத்திருந்தது போல சின்னத்தம்பி பானா வடிவத் துக்குக் கைப்பிடிகள் வைத்தது போல காணப்பட்ட ஒரு இரும்புத் தண்டை காரின் முன் துளையில் நுழைத்து இரு கைகளாலும் பிடித்துத் தன் பலம் கொண்ட மட்டும் சுழற்றினார். கார் இரண்டு பக்கமும் அசைந்து குலுங்கியது. பொன்னி வாயை அகலத் திறந்தாள். தம்பி கிக்கீ என்று சிரித்தான். மூன்றாவது குலுக்கலின் போது கார் தன் இயல்பான ரீங்கார ஒலியை எழுப்பிக்கொண்டு ஸ்டார்ட் ஆகியது. டிரைவர் கம்பியை வைத்துவிட்டு உள்ளே ஏறினார். சின்ன மாமாவும் வுட்போர்ட்டில் தொற்றினார். கார் புறப்பட்டது.
உலகம் எல்லாம் எனக்குப் பக்கத்தால் உருண்டு ஓடுவதை நான் கண்டேன். எனக்கும் பொன்னிக்கும் இடையில் தலையைக் கொடுத்து தம்பியும் எட்டிப்பார்த்தான். ஒப்பந்தத்தை மீறுகிறான். ஒரு குட்டு வைத்தேன். உலகம் நேரானது.
அப்பா முன் சீட்டில் இருந்து சுருட்டைப் பற்ற வைத்தார். வுட்போர்டில் நின்றபடி ஒரு கை உள்ளே பிடிக்க, மறுகை வெளியே தொங்க , சின்ன மாமா சிகை கலைய, அங்கவஸ்திரம் மிதக்க ஒரு தேவதூதன்போல பறந்து வந்தார். அந்தத் தருணத்தில் எனக்குச் சின்ன மாமாவிடம் இருந்த மதிப்பு பன்மடங்கு பெருகியது.
காரைக் கண்டதும் கட்டை வண்டிகள் எல்லாம் ஓரத்தில் நின்றன. சைக்கிள்காரர்கள் குதித்து இறங்கி வழி விட்டனர். மூட்டை சுமப்பவர்களும், பாதசாரிகளும் வேலிக்கரைகளில் மரியாதை செய்து ஒதுங்கினார்கள். இன்னும் பலர் வாயை ஆவென்று வைத்துக்கொண்டு, காரின் திசையை அது போய் பல நிமிடங்கள் சென்றபின்னும், பார்த்தபடி நின்றார்கள். டிரைவர் பல சமயங்களில் பாதசாரிகளின் வேகத்தை ஊக்குவிக்கும் முகமாக பந்து போல உருண்டிருக்கும் ஒலிப்பானை அமுக்கி ஓசை உண்டாக்கினார்.
கோயில் வந்தபோது எனக்குப் பெரிய ஏமாற்றம் காத்திருந்தது. அது ஒரு சிறிய கோயில். ஒரு குருக்களும், ஒரு மாடும், ஒரு சொறி நாயும், இரண்டு பிச்சைக்காரர்களும்தான் அதன் சொந்தக்காரர் கள். பூஜை நேரம் இன்னும் ஆட்கள் வருவார்கள் என்று சொல்லி எங்களை உற்சாகப்படுத்தினார்கள்.
அம்மாவுக்குக் கறுப்புப் புழுவுடன் நேரம் போனது. அதனால் சின்ன மாமியும், பொன்னியும் தான் கோயில் வேலைகளைக் கவனித் தார்கள். பொங்கிப் படைத்து, வடை மாலை சாத்த மதியம் ஆகி விட்டது. பூஜை சமயம் இன்னும் சில கிராமத்து ஆட்கள் வந்து சேர்ந்து கொண்டார்கள். அந்த இடத்துக்கு முற்றிலும் பொருந்தாத வகையில் சரிகை வைத்த மஞ்சள் பட்டுப் பாவாடையும், அரக்கு கலர் மேற்சட்டையும் அணிந்தபடி ஒரு சிறுமியும் வந்தாள். கொலுசுக் கால்கள் சப்திக்க இங்குமங்கும் ஓடினாள். அவளுடைய அம்மா வைத்த அதே அளவு மல்லிகை பந்தலை அவளும் தலையிலே சூடியிருந்தாள்.
பெற்றோர் பார்க்காத சமயத்தில் அவள் கோயில் நாயிடம் விளையாட நெருங்கினாள். அது உர்ர் என்று அதிருப்தியாக உறுமியது. சிறிது பின் வாங்குவதும் அணுகுவதுமாக இருந்தாள். அவளுடைய கெண்டைக் கால்களை நாயினுடைய கூரிய பற்கள் சந்திக்கும் தருணத்துக்காக நான் ஆவலுடன் காத்திருந்தேன். அந்தக் குட்டி சந்தோஷமும் அவளுடைய தகப்பன் திடீரென்று நாயை விரட்டியதால் கெட்டுப்போனது. கோயில் தளிசையை மட்டுமே தின்று வளர்ந்த அது, தன்னுடைய விசுவாசத்தை நிலைநாட்ட சிறிது கூட பிரயாசை எடுக்காமல் மெதுவாக எழும்பிப் போனது எனக்கு மீளாத ஏமாற்றத்தைக் கொடுத்தது.
ஐயாவும் அம்மாவும் அர்ச்சனை தட்டில் வைத்து, சுத்த வெள்ளி யில் ஆசாரியிடம் சொல்லி செய்த தொட்டிலையும் பிள்ளையையும் குருக்களிடம் கொடுத்தார்கள். நானும் தம்பியும் முறை வைத்துக் கொண்டு கோயில் மணியை அடித்தோம். பூஜை முடிந்ததும், மண்டபத்திலேயே வாழை இலை பரப்பி பொங்கல், வடை என்று பரிமாறினார்கள். பொங்கல் விழுந்ததும் வாழை இலையின் நிறம் கறுப்பாக மாறியது. ஓரத்தில் ஆரம்பித்துப் பொங்கலை ஊதி ஊதி திருப்தியாகச் சாப்பிட்டோம். வெய்யில் ஆறியவுடன் திரும்பலாம் என்று ஐயா யோசனை கூறினார்.
அம்மா முகத்தில் இப்போதுதான் பல நாட்களுக்குப் பிறகு சந் தோஷம் தெரிந்தது. மடத்தின் குளிர்ச்சியான திண்ணையில் காலை நீட்டி உட்கார்ந்து வெற்றிலை போட்டாள். சின்ன மாமி பக்கத்தில் இருந்தாள். வெற்றிலை போட்ட அம்மாவின் வாய் சிவப்பாக இருந்தது. என்னைப் பார்த்ததும் என்னடா பழிகாரா, வா’ என்று அன்பாகக் கூப்பிட்டாள். ஆமை தலையை நீட்டுவது போல அம்மா ஒருவித தந்திரம் செய்து தன் கழுத்து நீளத்தைக் கூட்டவும், குறைக்க வும் செய்வாள். அன்று நீளமாகிய கழுத்து அலங்காரமாக ஆடியது. அவசரம் காட்டாத புன்னகை ஒன்று அவளிடம் அப்போது தோன்றி யது. அது விரிந்து ஒரு முடிவை அடைய முன் நான் மடத்தை விட்டு கீழே இறங்கிவிட்டேன்.
ஆலமரத்தின் கீழே சின்ன மாமா ஒரு மூன்று பரிமாண தேசப் படம் போல கால்களை மடித்து, கைகளை விரித்துப் படுத்திருந்தார். அவருக்குப் பக்கத்தில் இருந்து ஐயா சுருட்டுப் பிடித்தார். அவருடைய கண்கள் மேலே போய் சொருகியிருந்தன. தேசிக்காய் துவாரங்கள் போல அவர் மூக்கில் பல சிறு துவாரங்கள் தென்பட்டன. ஒரு நாகத்தின் பிளவுபட்ட நாக்கு போல மூக்கிலிருந்து மெல்லிய நீலப் புகை இரு பக்கமும் பிரிந்து வந்து கொண்டிருந்தது.
முகத்தை அப்பாவித்தனமாக மாற்றிக்கொண்டு பொன்னியிடம் போனேன். அவள் பாவாடையைத் தொடை மட்டும் இழுத்துச் சுருக்கிக்கொண்டு குந்தியிருந்தாள். அவள் முகம் உப்பி அசைந்தது. தூரத்தில் இருந்து பார்த்தபோது ஒரு ராட்சத் தவளை கால்களை அகட்டி வைத்து இளைப்பாறுவது போல காணப்பட்டாள். ஆனால் நெருங்கியபோது அவள் வாய் முணுமுணுப்பது தெரிந்தது. சத்தம் வந்தது. ஆனால் வார்த்தை தெரியவில்லை. இன்னும் உற்றுக் கேட்டால் அது அவள் அடிக்கடி பாடும் அந்தக் காலத்தில் பிர பலமான ஒரு நாடகத்தில் வரும் பாட்டு.
காதுமணி களவெடுத்தேன்.
காது மணி களவெடுத்தேன்.
கருணை புரியும் எங்கள் மருதடி பிள்ளையாரே,
காதுமணி களவெடுத்தேன்.
முன்னையும் ஒருநாள் மூக்குத்தி எடுத்தேன்,
முத்தாம்பி பெண்டிலின்ரை மூக்கையும் கடித்தேன்.
காதுமணி களவெடுத்தேன்.
இதையே திருப்பித் திருப்பிப் பாடினாள். அலுக்காமல் வேலை முடியும் வரை பாடினாள்.
குழந்தைகளைக் குளிப்பாட்டுவதுபோல ஒருவித வாஞ்சையுடன் பாத்திரங்களை ஒவ்வொன்றாக அலம்பினாள். அவளுடைய நகங்கள் பிறைச்சந்திர வடிவமாக எதிர்த்திசையில் தேய்ந்து போய் இருந்தன. என்னைக் கண்டதும் புதிதாக ஒரு கோபம் கிடைத்தது போல முகத்தை உம்மென்று நீட்டினாள். முழங்கால் மூட்டில் ஏற்பட்ட பாவாடை நீக்கலுக்குள் நான் பார்த்துவிடாமல் இருக்க தன்னுடைய பின்பக்கம் என்னுடைய முகத்துக்கு நேராக வரும்படி பிரயத்தன மாகத் திருப்பி வைத்தாள்.
‘பொன்னி, இனி எப்ப நீ டவுனுக்கு ஓடப்போறாய்?’
அவள் திரும்பினாள். அந்தப் பார்வை சீறி என்னைத் தொடுமுன் நான் எங்கள் இடைவெளியை அகலமாக்கினேன்.
மகரந்தத் தூள்களைக் குவித்தது போல மணல் பரவிக் கிடந்தது. கால்களை வைத்தபோது விரல்கள் எல்லாம் புதைந்தன. சூரிய ஒளியில் மினுங்கி மினுங்கி ஒளிவிட்டன. வீரம் மீண்ட சொறிநாய் நீர்ப்பறவை ஒன்றைத் துரத்தியது. அது எம்பி உயர்ந்து வானத்தைத் துடைத்துத் துடைத்துப் பறந்தது. எலும்பிலிருந்து தசைகளைத் தொங்க விட்ட ஒரு பிச்சைக்காரன் இடது கையைத் தாமரை மலர்போல விரித்து, அதிலே வாழை இலையை வைத்து, தனது மதிய போசனத்தை வலது கையால் தின்றான்.
அந்த அருமையான பகல் பொழுது இப்படி வீணாவதை என் னால் பொறுக்க முடியவில்லை. கோயில் திண்ணையில் தம்பி மார்பிள் உருட்டி விளையாடிக்கொண்டிருந்தான். கிட்டப்போய், கைகளைப் பின்னே கட்டிக்கொண்டு வா என்றேன். ஏதோ புதையல் எடுக்கக் கூப்பிட்டது போல சடாரென்று மார்பிள்களை எடுத்துப் பையிலே வைத்துக்கொண்டு புறப்பட்டான்.
அவன் கண்கள் ஆவலாகப் பரபரத்தன.
‘அண்ணா, எங்கை போறம், சொல்லு அண்ணா?’
‘அருமையான இடம்.’
‘ஐயோ ! அருமையான இடம்.’
கால் சட்டைக்குள் மார்பிள்கள் கிலுங் கிலுங் என்று சத்தம் போட அவசரமாக நடந்து வந்தான். அவன் அணிந்திருந்த நீல வார்ச்சட்டை காற்றிலே பாய்மரம் போல விரிந்தது. சிவப்பான கொழுத்த கன்னங்கள். கறுத்த பெரிய பொட்டு. ஏதோ பெரிதாகச் சாதிக்கப் போவது போல விரைந்தான்.
திடீரென்று நான் நின்றேன். அதட்டும் குரலில் ‘சொல்லுவியா?’ என்றேன்.
‘மாட்டன்.’
‘சொல்லுவியா?’
‘மாட்டன்.’
எதற்கும் பாதுகாப்பாக இருக்கட்டும் என்று அவனுடைய தலை யிலே ஒரு குட்டு வைத்தேன். அவன் ஆஆ’ என்று அழத் தொடங்கி னான். ‘சரி, சரி , சனியன், திரும்பிப் போ’ என்றேன். ‘இல்லை அண்ணா, இல்லை’ என்று கெஞ்சினான். அவன் குரல் உருக்கமாக இருந்தது.
தலையைக் கீழே போட்டுக்கொண்டு கொஞ்ச தூரம் ஆழமாக யோசித்தபடி நடந்தான். பிறகு இஞ்சை பார்’ என்று சிரித்தபடி நின்றான். விரித்த அவன் கைகளில் இரண்டு மார்பிள்கள் இருந்தன. அதை என்னிடம் முழுக்கையையும் நீட்டிக் கொடுத்தான்.
‘உண்மை யாகவா?’ என்றேன்.
‘மெய் மெய். உனக்குத்தான், வைத்திரு’ என்றான்.
‘பிறகு திருப்பிக் கேட்க மாட்டாயே?’
‘மாட்டன்’ என்று உறுதி கூறினான்.
கர்ணன் போர் உக்கிரத்தில் கவச குண்டலங்களைக் கழற்றித் தானம் செய்தது போல இவனும் தந்தான். இன்னும் சரியாக ஒரு நிமிடத்தில் இவன் இறந்துவிடுவான் என்பது தெரியாமல் நான் அந்த மார்பிள்களை வாங்கி என்னுடைய பக்கட்டில் பத்திரமாக வைத்துக்கொண்டேன்.
குளம் வந்ததும் நான் கால்களை நனைத்தேன். அவன் எட்டி யிருந்து பார்க்கலாம் என்று அனுமதித்தேன். அவனும் அப்படியே செய்தான்.
‘கிட்ட வராதே.’
‘வர மாட்டன்.’
‘அண்ணா , நீ நீந்துவியா?’ என்றான் திடீரென்று. உலகத்தில் உள்ள சகல கலைகளிலும் நான் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று அவன் நினைத்தான். அந்தக் கேள்விக்கு நான் நேராகப் பதில் சொல்லவில்லை. இந்தக் குளம் ஆழம் காணாது’ என்றேன். ‘கிட்ட வராதே.’
‘கொஞ்சம் காலை வைக்கிறன், அண்ணா!’
அப்படித்தான் அவன் காலை நனைத்தான். சதித்தனமாகக் குளத்தில் இறங்கிவிட்ட பெருமை கண்களில் தெரிந்தது.
‘அண்ணா, என்னைப் பார். என்னைப் பார்’ என்றான்.
எனக்குக் கோபம் வந்தது. இவன் அளவுக்கு அதிகமாகக் குளத்தை அனுபவிப்பதை நான் விரும்பவில்லை. இவன் செய்வதிலும் பார்க்கக் கூடுதலான ஒரு யுக்தியை நான் செய்து கொண்டே இருக்கவேண்டும்.
‘இதோ!’ என்றேன்.
அப்போது என் கண்முன்னே கணுக்கால் வெள்ளத்தில் அவன் சரிந்து கொண்டிருந்தான். கனவிலே நடப்பதுபோல ஈர்க்கப்பட்டு அதையே பார்த்தேன். அவன் அப்படித் தத்தளித்தபோது எட்டிக் கைகளைக் கொடுத்திருந்தாலோ, சத்தம் எழுப்பியிருந்தாலோ போதும். நான் செய்யவில்லை. விறைத்துப்போய் ஒரு நிமிடம் வரைக்கும் அசையாமல் அங்கே தோன்றிய நீர்ச்சுழலைப் பார்த்தவாறு நின்றேன். ஒரு மந்திரம் போல அவன் சிரித்தபடி கைகொட்டி எழும்புவான் என்ற நினைப்பு எனக்குள் இருந்தது.
அதற்குப் பிறகுதான் ஓவென்று கத்திக்கொண்டு அம்மாவிடம் ஓடியதாக ஞாபகம். தம்பியை மல்லாக்காகத் தூக்கிக்கொண்டு ஐயாவும், அம்மாவும், சின்ன மாமியும் காரிலே ஏறி ஆஸ்பத்திரிக்கு ஓடினார்கள். சின்ன மாமா எங்களை எல்லாம் திரட்டி, சாமான்களை மூட்டை கட்டி தலையிலே சுமத்தி, பஸ்ஸிலே கூட்டிக்கொண்டு ஊர் திரும்பினார்.
நாங்கள் வீடு திரும்பி சில மணி நேரத்திலேயே காரும் வந்து சேர்ந்தது. ஊர் சனம் எல்லாம் எங்கள் வீட்டை எப்படியோ நிறைத்துவிட்டார்கள். முதலில் ஐயா இறங்கினார். பதப்படுத்திய பலா மரத்தில் கடைந்தெடுத்த வீணையைப் பக்குவமாக ஒருவர் தூக்குவது போலத் தம்பியைப் பக்கவாட்டில் இரண்டு கைகளிலும் ஏந்தியபடி அவர் நடந்து வந்து நடு அறையில், நடுக் கட்டிலில் கிடத்தினார். திடீரென்று அந்த அறையில் இருந்த காற்றை யாரோ அகற்றிவிட்டார்கள். நான் வெளியே ஓடிவந்து மூச்சு விட்டேன்.
என்னுடைய ஐயா, அம்மா நல்லவர்கள். கடைசி வரைக்கும் என்ன நடந்ததென்று என்னைக் கேட்டுத் துளைக்கவில்லை. அதனால் அந்த மரணத்துக்கான காரணத்தைச் சொல்லும் வாய்ப்பை நான் இழந்துவிட்டேன்.
தன்பாட்டுக்கு மார்பிள்களுடன் விளையாடிக்கொண்டிருந்த வனை ஆசைக் காட்டிக் குளத்துக்குக் கூட்டிக்கொண்டு போனதையோ, கணுக்கால் அளவு தண்ணீரில் அவன் அமிழ்ந்தபோது கைகளை எட்டி நீட்டாததையோ , வட்டவட்ட குமிழிகள் எழும்பியபோது புதினமாகப் பார்த்தவாறு நின்றதையோ நான் ஒருவருக்கும் கூறவில்லை.
சுருட்டி விடும் கன்வஸ் திரைகள் கொண்ட, ஒஸ்டின் செவன் பெட்டி வடிவக் கார் சன்னல் கரை இருக்கையை, திரும்பி வரும் போது தருவதாக அவனுக்குக் கொடுத்த வாக்கை நான் காப்பாற்ற முடியாததையும் சொல்லவில்லை.
– மஹாராஜாவின் ரயில் வண்டி, முதற் பதிப்பு: டிசம்பர் 2001, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்.
– அ.முத்துலிங்கம் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 2003, தமிழினி, சென்னை.