கதையாசிரியர்:
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 23, 2013
பார்வையிட்டோர்: 24,230 
 
 

வசந்த் ஃபேக்டரிக்கு புறப்படும் நேரம் தடாலென ஒரு சத்தம் கேட்டது. வசந்த் உள்ளே ஓடினான்!

பெட்ரூமில் தாரிணி உறங்கிக் கொண்டிருந்தாள்!

சத்தம் எங்கேயிருந்து?

சமையல் கட்டுக்குள் நுழைய அம்மா கீழே கிடந்தாள்!

“அம்மா என்னாச்சு?’

தவம்

கீழே உட்கார்ந்து உலுக்கினான்! அம்மா மயக்க மடைந்திருந்தாள்! கீழே விழுந்ததில் தலை தரையில் மோதி லேசான ரத்தக் கசிவு! பதறி விட்டான் வசந்த்!
“தாரிணி! சீக்கிரம் எழுந்து வா!’ உலுக்கி எழுப்பினான்!
“ஏன் தொந்தரவு பண்றீங்க? இவன் என்னை ராத்திரி ஒரு மணி வரைக்கும் தூங்கவிடலை! காலைலதான் கொஞ்சம் கண் மூடினேன்!’
“அம்மா மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க தாரிணி!’
“என்னது?’ அவளும் பதறி எழுந்தாள்!
சில நொடிகளில் வசந்த் ஆட்டோவுடன் வந்தான்!
“வீட்டை பூட்டு தாரிணி! குழந்தையை தூக்கிக்கோ!’
“எதுக்கு இத்தனை ஆர்ப்பாட்டம் பண்றீங்க? நான் எதுக்கு? வெறும் மயக்கத்துக்கு நீங்க போனா போதாதா? ஒண்ணரை வயதுக் குழந்தை! ஆஸ்பத்திரிக்கு போனா இன்ஃபெக்ஷன் ஆகாது?’
அம்மாவைத் தாங்கிப் பிடித்து ஆட்டோவில் ஏற்றினான் வசந்த்! உடம்பு ஜில்லிட்டுக் கிடந்தது! கை, கால்கள், துணி போல துவண்டு கிடந்தன! வசந்துக்கு பயமாக இருந்தது. ஆஸ்பத்திரிக்குக் கொண்டு வர ஸ்டச்சரில் போட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தார்கள்!
ஒரு மணி நேரம் கழித்து டாக்டர் வெளியே வந்தார்!
“ரத்த அழுத்தம் உச்சத்துல! அதனால மயக்கம்! அதுமட்டுமில்லை! பாரலைஸ்! வலது பக்கம் விழுந்தாச்சு! பக்கவாதம்!’
“டாக்டர்’ அலறி விட்டான் வசந்த்!
“இத்தனை பிபி இருந்தா, நீங்க கவனிக்க வேண்டாமா? அதுக்கு மருந்து சாப்பிடறாங்களா? ரெஸ்ட் இருக்கா? என்ன டயட்? எத்தனை வயசு அவங்களுக்கு!’
கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனார்!
வசந்த் பதில் பேசாமல் நின்றான்!
உள்ளே லேசாக ஒரு குற்ற உணர்ச்சி குடைந்தது.
“கவனிக்கவில்லைதான்!’
அதற்கு அம்மாவும் ஒரு காரணம்!
எந்த உபாதை இருந்தாலும் சொல்ல மாட்டார்கள்!
கல்யாணமான புதிதில் தாரிணியும் வேலைக்குப் போய்க் கொண்டிருந்தாள்! ஆபீஸுக்குப் போவதால் வீட்டில் ஒரு துரும்பைக் கூட தாரிணி கிள்ளிப் போட மாட்டாள்!
அம்மா அதைக் கண்டுகொள்ளவில்லை! ஒரு வருஷ காலத்தில் தாரிணி உண்டாகிவிட்டாள்!
சிக்கல் – கர்ப்பப்பை பலவீனம் – அதனால் ஓய்வெடுக்க வேண்டும் என்று டாக்டர் சொல்லிவிட, தாரிணியின் அம்மா புலம்பிக் கொட்ட, தாரிணியின் சம்பளத்தில் இந்தக் குடும்பம் வாழ்வது போல பேச்சுவர, வேலையை விடச் சொன்னான் வசந்த்! குழந்தை பிறந்த பிறகு தேடிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தார்கள்!
பிறகென்ன? தாரிணி எப்போதும் பிறந்த வீட்டில்தான்! இங்கு அம்மாவுக்கு கடமைகள் ஓயவில்லை! குழந்தை பிறந்து ஐந்து மாதங்களுக்குப் பிறகு தாரிணி இங்கே வந்தாள்!
“குழந்தை ஒரு மாதிரி செட்டில் ஆகற வரைக்கும் நான் வேலைக்கு போகலீங்க!’
இதோ குழந்தைக்கு ஒண்ணரை வயசு!
“கைக்குழந்தைக்காரி’ என்ற சலுகையை கையில் எடுத்துக் கொண்டு ஒரு வேலை கூட செய்வதில்லை.
ஆஸ்பத்திரியில நாலைந்து நாட்கள் இருந்துவிட்டு டிஸ்சார்ஜ் கொடுத்து விட்டார்கள்! வலது பக்கமே ஒட்டுமொத்தமாக விழுந்து விட்டது? வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டான்! தனியாக இயங்க முடியாது? எல்லாமே படுக்கையில்தான்!
அம்மா அழுது தீர்த்தாள்!
“அம்மா அழாதேம்மா!’
வலது பக்கம் விழுந்து விட்டதால, வாயும் கோணி, பேச்சு குழறியது.
“மத்தவங்களை சார்ந்து வாழற மாதிரி, தெய்வம் என்னை தண்டிச்சிடுச்சே. நான் என்ன பாவம்டா தம்பி செய்சேன்?’
உடைந்து அழுதாள்!
“ஒரு பாவமும் செய்யலை. உனக்குச் செய்யற கடமை எங்களுக்கு உண்டு! நீ இத்தனை நாள் உழைக்கலியா? நாங்க செய்யறோம்மா!’
டில்லியில் இருந்த அக்கா தமயா விவரம் கேள்விப்பட்டு உடனே விமானத்தில் வந்து இறங்கினாள்! அழுது தீர்த்தாள்! கூடவே நாலு நாட்கள் இருந்தாள்! அந்த நாலு நாட்களில் அம்மாவுக்கு மல, மூத்திரம் எடுத்து குளிப்பாட்டி, சாப்பாடு தந்து எல்லாம் செய்தாள்! ஐந்தாவது நாள் புறப்பட்டு விட்டாள்!
சின்னவள் ஹரிணி பெங்களூருவில் இருந்தாள்! வேலைக்குப் போகும் பெண்! ஒரே ஒரு நாள் வந்துவிட்டு தப்பித்தால் போதும் என்று ஓடி விட்டாள்.
பழையபடி இவர்கள்தான்!
சம்பந்தியம்மா வந்தாள்!
“இதப்பாருடி! உன்னால முடியாது! சமையல், வீட்டு வேலைகள், நோயாளி மாமியார் எல்லாத்தையும் கவனிச்சா, நீ செத்துப் போயிடுவே!’
இத்தனைக்கும் தாரிணி இந்த நிமிஷம் வரை எதுவும் செய்யவில்லை!
“மாப்ளை! ஒரு நர்ஸை வீட்டோட நியமிக்கப் பாருங்க! நீங்க ஆம்பளை! இதையெல்லாம் செய்ய முடியுமா? அவளால முடியாது’
வசந்த் எதுவும் பேசவில்லை.
நண்பர்களிடம் விசாரித்தான்.
“வேலைக்குப் போற மனைவியா இருந்தா கஷ்டம்! வீட்டோட இருக்கற மனைவி செய்யக் கூடாதா வசந்த்?’
“அவ கைக்குழந்தைக்காரிடா!’
“இதெல்லாம் சாக்குடா! குழந்தை எப்பவும் தொந்தரவு பண்ணுமா! உங்கம்மா உங்களை எல்லாம் ஆளாக்கலையா? அத்தனை வேலைகளையும் பாக்கலியா?’
நியாயமான கேள்விதான்!
வசந்த் வீட்டுக்கு வந்தான்!
அம்மா அடக்க முடியாமல் – வேறு வழியில்லாமல் படுக்கையில போக, தாரிணி அதைக் கண்டு கொள்ளாமல் குழந்தையைத் திட்ட, அது அழ, வீடு ரணகளமாக இருந்தது.
“எனக்கே முடியலீங்க! இவனையும் கவனிச்சிட்டு, சமையலயும் பார்க்க வேண்டியிருக்கு! வேலைக்காரி மட்டம் போட்டுட்டா! நானும் மனுஷிதானே? இதுல உங்கம்மா வேற புடுங்கறாங்க! நான் செஞ்ச பாவம்!’
வசந்த் அம்மாவிடம் வந்தான்!
தூக்கி எடுத்து, சுத்தம் செய்து, பெட்ஷீட்டை மாற்றி, அதைத் தோய்த்து, அம்மாவை சுத்தமாக படுக்க வைத்தான்!
“என்னை மன்னிச்சிடுப்பா!’
“எதுக்கும்மா?’
“அடக்க முடியலைப்பா!’
“பரவாயில்லைம்மா! நான் உன்னை ஒண்ணும் சொல்லலியே!’
“நீ ஒரு ஆம்பளப் பையன்! என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கு! உன்னை அப்படியா வளர்த்தேன்?’
“பரவாயில்லைமா!’
தாரிணிக்கு உடம்புக்கு முடியவில்லை என்ற சாக்கை வைத்து அடுத்த நாளே குழந்தையுடன் பிறந்த வீட்டுக்குப் போய் விட்டாள்!
“என்னடி இது? ஒரே மாசத்துல இப்பிடி இளைச்சிட்டே? உன் மாமியாருக்கு செஞ்சு செஞ்சு இப்பிடி ஆயிட்டியா?’
அப்பா குறுக்கே வந்தார்!
“தப்பு சகுந்தலா! அந்தம்மா நேத்து வரைக்கும் உழைச்சவங்க! பாவம்!’
“கொஞ்சம் வாயை மூடிட்டு இருக்கீங்களா? நாம – நம்ம புள்ளைக்குத்தான் ஆதரவா இருக்கணும்!’
அந்த வாரக் கடைசியில் தாரிணி வந்துவிட்டாள்!
அது ஞாயிறு!
“வசந்த்! பழைய ஆல்பங்கள் பெட்டில இருக்கும்! அதை எடு!’
வசந்த் எடுத்தான்! அம்மாவை தாங்கிப் பிடித்து உட்கார வைத்தான்! வசந்த் பிறந்த பிறகு அப்பா ஏராளமான புகைப் படங்களை எடுத்திருந்தார்! கொஞ்சம் வித்தியாசமான படங்கள்!
வசந்தை அம்மா குளிப்பாட்டும் படம்! பாலூட்டும் படம், அவனது மல, மூத்திரம், ஜுரம் வந்தபோது அவன் வாந்தியெடுத்ததை அம்மா கையில் ஏந்திய படம்! நெற்றியில் ஐஸ் நனைத்துப் போட்டது! கண் மூடாமல் அவனுடன் இருந்தது! மடியில் போட்டு தாலாட்டியது என எல்லாம் இருந்தது.
“இதெல்லாம் எதுக்கும்மா?’
“நானும் உங்கப்பாகிட்ட ஒரு நாள் கேட்டேன்டா’
“என்ன சொன்னார்?’
“மேக்கப் போட்டுக்கிட்டு, நல்லா உடுத்திட்டு, சிரிச்சிகிட்டு இருக்கும்போது மட்டும் எடுக்கற போட்டோக்களில் உயிர் இருக்காது லட்சுமி! ஒரு குழந்தையை ஆளாக்க தாய் படற பாட்டை பதிவு செய்யும்போது, அதுல வாழ்க்கையே இருக்குடி! இப்ப பார்க்கும்போது இது புரியாது! உன் பிள்ளை வளர்ந்த பிறகு என்னிக்காவது ஒரு நாள் பார்க்கும்போது இதோட அர்த்தம் அவனுக்குப் புரியும்’ அம்மா சொல்லி முடித்ததும் வசந்த் அழுது விட்டான்! அவனுக்குப் புரிந்தது!
“இதையெல்லாம் ஒரு பிள்ளைக்கு தாய் செய்யும்போது, அவள் முகத்தில் ஒரு சுருக்கம் கூட இல்லை! அந்த முகத்தில் தெரிவது பரவசம் மட்டும்தான்!’ அதையே பிள்ளை தாய்க்குச் செய்யும்போது சந்தோஷம் இல்லை! பாரமாக இருக்கிறது!
தாய்க்கு சுவையாக இருப்பது, பிள்ளைக்கு மட்டும் எப்படி சுமையாகிறது?
ஒரு சில புகைப்படங்களில் அப்பா வாழ்க்கையின் அர்த்தத்தை சொல்லிவிட்டார்!
குழந்தை உள்ளே அழுகிறது!
பதறிப் போய் தாரிணி அழுகிறாள்!
“நாளை தாரிணிக்கு பிரச்னை வரும்போது அவனுக்கு இதே பதட்டம் இருக்குமா?’
“இன்று தாரிணி தாயாக மட்டும்தான் இருக்கிறாள்!’
“கணவனை இப்படியெல்லாம் ஆளாக்கிய ஒரு தாயின் சங்கடத்தைப் புரிந்து கொள்ளவில்லை.’
“ஒரு தாய் – தான் மட்டும் தாயாக இருந்தால் போதாது!’
“தன்னை தாயாக்கியவன் யாரால் இந்த பூமிக்கு வந்தான் என்பதை அவள் புரிந்து கொள்ளும்போதுதான் அவள் நிஜமான தாய்!’
“இங்கே நிஜமான தாய்மார் எத்தனை பேர்?’

– அக்டோபர் 2013

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *