கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 22, 2013
பார்வையிட்டோர்: 11,873 
 
 

ஈசிச் சேரில் சாய்ந்தவாறு பேப்பர் படிப்பது போலப் பாவனை பண்ணிக்கொண்டிருந்தார் தமிழரசு. ஆனால் அவர் கவனமெல்லாம் தூணுக்குப் பின் பதுங்கிக் கொண்டு தன் பெரிய கருவண்டுக் கண்களில் பயமும் ஆர்வமும் கலந்து தன்னையே பார்த்துக் கொண்டிருந்த அச்சிறு பெண்ணின் மேல்தான் இருந்தது.

நெல்மணி மூக்கும், கொழுவிய கன்னங்களும், துறுதுறுவென்ற கண்களும், பட்டுப்பாவடை உடுத்திய பாங்கும் அவருக்குத் தன் மகளே சிறு வயதுத் தோற்றத்தில் கண்ணெதிரே வந்து விட்டாற்போல் பிரமை ஏற்பட்டது. சோகை வெளுப்பாக இல்லாமல் சற்றே ரோஜா கலந்து விட்ட பாலின் நிறமும், மென்மையான செம்பட்டை முடியும் மட்டும்தான் அவளின் தந்தையை அடையாளம் காட்டின. சுற்றும் முற்றும் பார்த்து யாரும் இல்லையென்று உறுதிப்படுத்திக் கொண்டு “இங்கே வா!” என்று அழைத்தார். அதற்காகவே காத்திருந்தாற்போல ஓடி வந்து மடியில் விழுந்தாள். “உன் பெயரென்ன?” என்று ஆங்கிலத்தில் வினவினார். ஒரு சின்னச் சிரிப்புடன் “உங்கள் பெயரில் பாதிதான்” என்று சுத்தத் தமிழில் குறும்பு தொனிக்கக் கூறினாள். ஒரு கணம் ஆச்சரியப்பட்டார். “ஆமாம் தாத்தா! ‘தமிழ்’ உங்க பெயரில் பாதிதானே! அதுதான் என் பெயர்” சொல்லி விட்டு ஒரு ‘களுக்’ சிரிப்பு! அது அவரையும் தொற்றிக் கொண்டது. அவரது நினைவுகள் அவர் மகளைச் சுற்றிச் சுழன்றன.

பசுமை நிறைந்த பொன்வயல் கிராமத்திற்கு விரும்பித் தலைமையாசிரியராய் மாற்றல் பெற்று வந்தார் தமிழரசு. அவருக்கு ஏற்கெனவே முன்னோர் விட்டுச் சென்ற சொத்து இருந்தது. அதனால் பெரிய பள்ளியில் வேலை, பள்ளி முடிந்ததும் டியூஷன் மூலம் அதிக வருமானம் என்றெல்லாம் யோசிக்காமல் முழு மனதுடன் கிராமத்திற்கு வர முடிந்தது. பொன்வயல் ஒரு நடுத்தர கிராமம். நகரத்தில் இருக்கும் அடிப்படைத் தேவைகள் இருந்தாலும் மக்கள் மனதில் மாசு படியாமல் இருந்தனர். ‘தமிழ் வாத்தியார்’ என்று அவரை மரியாதையாய் அழைத்து எல்லா உதவிகளையும் செய்தனர். அவரது மனைவி பத்மாவுக்கும் கிராமத்து வாழ்க்கை பிடித்தமானதாகவே இருந்தது. அவ்விருவரும் மனமொத்து வாழ்ந்ததன் பயனாய் வெண்ணிலா பிறந்தாள்.

‘வெண்ணிலா’ பெயருக்கேற்றாற்போல் கண்களுக்கும் கருத்துக்கும் குளுமை தரக்கூடிய அழகும், குணமும் மிகுந்தவள். அவர் தலைமையாசிரியராய் இருந்த பள்ளியில் 10ம் வகுப்பு வரைதான் இருந்தது. அதனால் பள்ளி இறுதி மற்றும் கல்லூரிப் படிப்பிற்கு திருச்சியில் விடுதியில் சேர்த்துப் படிக்க வைத்தார். அப்பாவின் தமிழார்வம் அவளையும் தொற்றிக் கொண்டதில் பட்டப்படிப்பிலும் தமிழை சிறப்புப் பாடமாய் எடுத்துப் படித்தாள். அதில் அவருக்குப் பெருமையும் கூட. ஒவ்வொரு விடுமுறைக்கு வீட்டிற்கு வரும்போதும் அப்பாவும் மகளும் தமிழிலக்கியம், திருப்பாவை, திருவாய்மொழி, புற நானூறு, அக நானூறு, மரபுக்கவிதை, புதுக்கவிதை எதையும் விட்டு வைக்காமல் அலசிக் காய வைத்து விடுவார்கள். தனக்கு வரும் மருமகனும் தமிழார்வம் மிகுந்தவனாக இருக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு இருந்தது. பட்டப் படிப்பு முடிந்ததும் அவளுக்குக் கல்யாணம் செய்து விட வேண்டும் என்று அப்போதே மாப்பிள்ளை தேட ஆரம்பித்திருந்தார்.

அந்த வருடம் கல்லூரியில் கடைசி வருடம். பரீட்சை முடிந்து ஊருக்கு வரும்போது தன்னுடன் பயிலும் ஜோசப் என்ற வெளி நாட்டு மாணவனை உடன் அழைத்து வந்திருந்தாள் வெண்ணிலா. கிராமத்து வாழ்க்கையை சிறிது காலம் அனுபவிக்க வேண்டுமென்பதாலும், தமிழ் மீது இருக்கும் ஆர்வத்தால் அவரைப் பார்த்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொள்ளவேண்டுமென்று ஆசைப்பட்டதாலும் அழைத்து வந்ததாகக் கூறினாள். தமிழ் மீது பற்று வைத்த ஒரு வெளி நாட்டு மாணவனை சந்தித்ததில் அவருக்கும் நிரம்பவே மகிழ்ச்சி! சுமார் ஒரு மாதம் அவர்கள் வீட்டிலேயே தங்கி இருந்து எல்லோர் மனதையும் கவரும் வண்ணம் கண்ணியமாக நடந்து கொண்டான் ஜோசப். அந்த ஒரு மாதத்தில் தமிழ் பற்றி ஆராய்ச்சி நூல் எழுதும் அளவுக்கு நிறைய விஷயங்களைப் பேசித் தீர்த்தனர். தமிழ் மீது ஜோசப்பிற்கு இருந்த காதல் தமிழரசுவைக் கவர்ந்தது.

கடைசியாக ஊருக்குக் கிளம்ப ஒரு வாரம் இருக்கும்போது இருவருமாய் ஒரு நாள் அவர் முன் வந்து தயங்கித் தயங்கி நின்றனர்.

‘என்னம்மா, இன்னும் நீங்க பார்க்காத இடம் ஏதாவது இருக்கா என்ன? எங்கயாவது போகணுமா?’ என்றார்.

‘ஆமாம்பா! அது வந்து….’ தயங்கி இழுத்தாள் மகள். நான் ஜோசப்போட மனைவியா அவரோட நாட்டுக்குப் போக விரும்பறேம்பா!’

‘என்ன?! இதை நான் உங்கிட்ட இருந்து கொஞ்சமும் எதிர் பார்க்கவேயில்லை வெண்ணிலா.’ அழுத்தத்தோடு வந்தது அவர் குரல். ‘உனக்குக் குடுத்த சுதந்திரத்தை நீ பயன்படுத்திய லட்சணம் இதுதானா? உன் மேல நாங்க வைச்ச நம்பிக்கைக்கு இவ்வளவுதான் மதிப்பா? நான் யார் தெரியுமா? தமிழ் மீது பற்றுக் கொண்டு தமிழை வளர்க்கப் பாடு பட்டுக் கொண்டிருக்கும் தமிழாசிரியர். எனக்கு வரப்போகும் மருமகனும் என்னை மாதிரியே இருக்கணும்னு முடிவு பண்ணி இருக்கேன். ஏம்பா ஜோசப்! உன் மேல எவ்வளவு பாசமும் நம்பிக்கையும் வெச்சிருந்தா உங்களை தவறா நினைக்காமல் பழக விட்டிருப்பேன். இப்படி கண்ணியக்குறைவா நடந்துகிட்டியே! இதுதான் உன் பண்பாடா?’ என்று அவனையும் கத்தித் தீர்த்தார்.

‘ஐயா! நீங்க என் மேல் வெச்சிருக்கும் நம்பிக்கை குறையற மாதிரியோ கண்ணியக் குறைவாகவோ நாங்கள் ஒரு நாளும் நடந்துகிட்டதில்லை. தமிழை நான் நேசிக்கற அளவுக்கு வெண்ணிலாவையும் நேசிக்கறேன். அவளோட சேர்ந்த என் வாழ்க்கை முழுமை பெறும், அர்த்தமுள்ளதா இருக்கும்னு நம்பறேன். தயவு செய்து பெரிய மனது பண்ணி எங்களை ஆசிர்வதிக்கணும்’ என்றவாறு மிகுந்த பணிவோடும்,அமைதியோடும் காலில் விழப் போனவனை சற்றும் மதியாமல் வாயில் வந்தபடி ஏசினார்.

முடிவில் ஜோசப்பும் வெண்ணிலாவும் அந்த வீட்டை விட்டு வெளியேறி அந்த ஊர்க்கோவிலிலேயே மாலை மாற்றித் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின் சென்னை சென்று திருமணத்தைப் பதிவு செய்து கொண்டு முதலில் ஜோசப் தன் நாட்டுக்குப் பயணமானான். விசா வரும்வரை ஒரு விடுதியில் தங்கியிருந்த வெண்ணிலாவை விரைவிலேயே தன்னிடம் அழைத்துக் கொண்டான்.

இப்போது ஐந்தாண்டுகளுக்குப் பிறகு இருவரும் தங்கள் நான்கு வயது மகளுடன் மறுபடி அந்தக் கிராமத்துக்குள் காலடி எடுத்து வைத்திருக்கின்றனர். இத்தனை ஆண்டுகளில் அவர்கள் எழுதிய உருக்கமான கடிதங்கள் எல்லாம் படித்துப் பார்க்காமலே குப்பைத் தொட்டிக்குப் போய்க் கொண்டிருந்தன. மனம் பொறுக்காமல் நேரில் சென்று சமாதானப்படுத்தி விடும் முடிவோடு வந்திருந்தனர். ஆனால் தமிழரசுவின் கோபம் இன்னும் தீராமலே இருந்தது. எப்படியாவது அவரது கோபத்தைத் தணித்து மறுபடி உறவைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டுமென்ற முடிவோடு வந்திருந்தத மகளுக்கு, அவளின் தாய் தன் கணவருக்குத் தெரியாமல் உதவிகள் செய்துவந்தார். எதிர் வீட்டிலேயே அவர்களுக்குத்தங்க ஏற்பாடு செய்ததோடு, தினமும் மகளையும், பேத்தியையும் பார்த்துப் பேசி மகிழ்ந்தார். ஜோசப்பும் குணம் மாறாமல் அன்போடும், மரியாதையோடும் இருந்தது அவருக்கு நிம்மதி அளித்தது. அன்று தமிழரசு பள்ளி விஷயமாக டவுன் வரை சென்றிருந்த தைரியத்தில் வெண்ணிலாவும் அவள் தாயும் கோவிலுக்குச் சென்றிருந்தனர். தமிழ் அவள் தந்தையோடு விளையாடிக் கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில் ஜோசப் தூங்கியவுடன் மெதுவாக நழுவி எதிர் வீட்டுக்கு வந்து விட்டாள்.

திடீரென்று கன்னத்தில் ஈரத்தை உணர்ந்து நிகழ்காலத்துக்குத் திரும்பினார் தமிழரசு! குழந்தை தமிழ்தான் அவர் கன்னத்தில் மாறி மாறி முத்தமிட்டுக் கொண்டிருந்தாள். அந்தப் பாசத்தில் தடுமாறிப்போனார். ‘நான் யாருன்னு தெரியுமா உனக்கு?’ மறுபடியும் ஒரு ‘களுக்’! ஓ!! தெரியுமே அம்மாவும் அப்பாவும் எப்பவுமே உங்க போட்டோவும், பாட்டி போட்டோவும் காட்டி உங்களைப் பத்தி சொல்லுவாங்க. அம்மா மேல உங்களுக்கு ரொம்ப ஆசைன்னு சொல்லுவாங்க! ஆனா…. நீங்க அம்மா கிட்டயும் அப்பா கிட்டயும் பேசவே இல்லையே ஆசையா இருந்தா அப்படியா இருப்பாங்க? என்னால எங்க அம்மா அப்பா கிட்ட பேசாம ஒரு நாள் கூட இருக்க முடியாது தெரியுமா?’

குழந்தையின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திகைத்துப் போனார் தமிழரசு. பேச்சை மாற்றும் முயற்சியாக ‘அதென்ன கையில ஆல்பம்?’ என்றார். ‘உங்களுக்கு காட்டத்தான் அப்பா தூங்கினதும் எடுத்துட்டு வந்துட்டேன்’ ஒரு ரகசிய சிரிப்பு சிரித்தாள். இது எங்க அப்பாவுக்கு அவர் எழுதின புக்ஸ் நல்லா இருக்குன்னு பாராட்டி ‘சிறந்த தமிழ்த்தொண்டர்’னு ப்ரைஸ் குடுத்தப்போ எடுத்த போட்டோஸ் . வீடியோ காசட் கூட இருக்கே. அதுல அப்பா உங்களைப் பத்தி தான் நெறய பேசினாங்க. நான் கூடப் போயிருந்தேனே! எவ்ளோ பேர் கை தட்டினாங்க தெரியுமா?’ எந்த நாட்டில் இருந்தாலும் குழந்தையின் குதூகலம் ஒரே மாதிரிதான் போலும். பட படவெனப் பொரிந்தாள். அவர் கையில் ஆல்பத்தையும் திணித்தாள்.

‘பாருங்க தாத்தா! உங்களுக்குதான் எடுத்து வந்தேன்’ என்று ஒவ்வொரு படமாகக் காட்டி அவளுக்குத் தெரிந்த வரை விளக்கிக் கொண்டிருந்தாள். அந்த ஆல்பத்திலேயே அதை எடுத்த தேதி நிகழ்ச்சி எல்லாம் ஒவ்வொரு புகைப்படத்தின் கீழும் எழுதி இருந்ததால் அவருக்கு அதிகம் விளக்கம் தேவைப்படவில்லை. சிறந்த தமிழாராய்ச்சி நூல் எழுதியதற்காகவும் தமிழ்ச் சங்கத்தை நல்ல முறையில் நடத்தி வருவதற்காகவும் ஜோசப்பை ‘சிறந்த தமிழ்த் தொண்டனாய்’ அங்கீகரித்து பட்டமளித்த விழாவின் தொகுப்பு அது. எல்லாவற்றிற்கும் மேலாக ஜோசப்பிற்கு பரிசாகக் கிடைத்த பணத்தில் ‘தமிழரசு ஸ்காலர்ஷிப்’ அமைத்து தமிழாராய்ச்சி மாணவர்களுக்கு உதவி செய்யப்போவதாய் எழுதியிருந்ததைப் படித்ததும் அவருக்கு கண்கள் பனித்தன… தன் பெயரில் ஸ்காலர்ஷிப் ஆரம்பித்ததற்காய் அல்ல! தமிழின் வளர்ச்சிக்கு வெளி நாட்டில் கிடைத்த வரவேற்புக்காய்.

‘தமிழை நாம வளர்க்கறதா சொல்றது பிரமை, ஒரு வித கர்வம். உண்மையில் அது தானே வளர்ந்து செழிக்கும் மத்தவங்களையும் வாழ வைக்கும்’ ஐந்து வருடத்திற்கு முந்தைய வாக்குவாதத்தின்போது மகள் சொன்னது இப்போது அவருக்குப் புரிந்தது!

கோவிலுக்குப்போன தாயும் மகளும் திரும்பி வந்து அவர்களுக்கு முன்னதாகவே தமிழரசு திரும்பிவிட்டதை கவனித்துப் பயந்து போயினர். போதாக்குறைக்கு தமிழின் குரல் வேறு வாசல் கடந்து அவர்களைத் தீண்டியதில் என்ன புயல் வீசுமோ எனப் பயந்து கொண்டே எட்டிப் பார்த்தனர். ஆனால் அவர்கள் கண்டதோ தமிழும் தமிழும் கொஞ்சி விளையாடிய அழகான காட்சி!

– ஜூலை 2007

Print Friendly, PDF & Email

3 thoughts on “தமிழ்

  1. அருமையான கதைகள். குறிப்பாகத் ‘தமிழ்’ அற்புதம். நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *