கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 15, 2023
பார்வையிட்டோர்: 3,882 
 
 

(2005ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7-8

அத்தியாயம்-5

சங்குப் பறையனும் நானாண்டே
சாதியில் உயர்ந்தவனும் நானாண்டே
முந்திப் பிறந்தவனும் நானாண்டே
முதல்நூல் தரித்தவனும் நானாண்டே. 
-பாரதியார் 

சின்னராசு துணிப்பையில் நீட்டின அரிசியை அவசரமாய்க் களைந்து உலையில் போட்டாள் மாரியம்மா. 

“நீ நகருத்தே நா முடிக்கேன் சோலிய. பட்டினி வேற கெறங்கிக் கிடக்கே நீ..” 

எரவாணத்திலிருந்த ஒன்றிரண்டு விறகு தெ குச்சியை வைத்து நிமிஷமாய் அடுப்பு மூட்டினாள். 

“இப்படிப் புகையுதே.. நெஞ்சுக்குழி வெந்து போல…” 

“ஆ…மா…மா.. நெஞ்சுப் புகைச்சலும் இருக் இதுங்களையெல்லாம் சொமந்த வவுத்தை கொள்ளியால சுட்டுக்கலாம் போல.” 

“ப்ச….நீ வேற பொத்திக்கிட்டு கிட அதி நாமுச்சூடும் பெத்ததுங்களைக் கரிச்சிட்டு. வாங்கி மூணு வருஷமானது. வவுத்துல தங்கபார்த்தான். இல்லியேன்னு நெதைக்கும் கண்ணால் அளுவி முத்து முத்தாப் புள்ளங்களைக் கருமாதி பேசற…”

புகைந்த விறகுக் கட்டையை வாயால் ஊதி பற்ற வைத்தாள் மாரியம்மா. 

“ஆமா? தாத்தா எங்க? திண்ணைல காங்கல்ல? காவல் காத்துட்டுக் கெடக்குமே.?” 

“க்கும். வருது வாயில.. இன்னிக்கோ நாளைக்கோன்னு தொங்கிட்டிருக்கிற கெழத்துக்குக் கேடு காலம். ஒரு மாரியா வருது. ஒருவா சீமை ஊத்திக்கணும். காசு குடுன்னு புடுங்கிச்சு.நாஎன்ன கள்ள நோட்டா அடிக்கேன்? கை விரிச்சேன். குருட்டுக் கிழத்துக்குக் கோவம் பொத்துக்கிச்சு. தட்டுத் தடலிப் போயி கள்ளச் சாராயம் ஊத்திட்டு வரும் ராவிருட்டுக்கு வந்தாத்தான் என்னவாம்? ஒருவாய்க் கஞ்சி மிச்சம்..” 

நிதர்சனம் நிஷ்டூரமாய்ப் பேச வைத்தது முனியம்மாவை.

“கண்ணுதான் அவிஞ்சு போச்சு. நாக்கு போதை கேக்குது…காரசாரமா உப்பு ஒரைப்பா கருவாடு வேணுமாம்…” 

சொல்லுவதற்குள் முனியம்மாவுக்கும் மூச்சு இரைத்தது.

வறுமையும், வியாதியும் தந்த தவிர்க்க முடியாத இரைப்பு.

“பளனிய சாராயக் கஸம்மாலம் புடிச்சுக்காம.பாத்துக்க”

‘உம்’ கொட்டி, ஊது குழலால் கங்குகளை ஊதினாள் மாரியம்மா.

“ஈரமாத்தான் இருக்கு சட்டுன்னு புடிக்கமாட்டேங்குது..” 

“எனக்கு வார வரத்துல.. மசானத்துச் சிதை நெருப்புல போயி சோறு பொங்கிரலாமான்னு வருது மாரி..வயிறு எக்கி ஊதி, கண்ணு கரிச்சு நாசமாப் போறன். அரை வவுத்துக் கஞ்சிக்கு இந்தப்பாடு. பொட்டைப் பொறப்பு. நாய விட சீரழிப்பாயிருச்சு…” 

சர்ரென்று மூக்கைச் சிந்தி உதறினாள். மாரியின் புறங்கையில் சொத்தென்று விழுந்தது.. 

“ப்ச…இந்தா தள்ளி ஒதறுவியாம்…”

புடவையால் துடைத்தாள் மாரியம்மா. 

சின்னராசு என்ன செய்ய? ஏது செய்ய?- புரியாமல் கால் மாற்றி நின்று பார்த்தான்.

முனியம்மா. கோபத்தில் மகனைக் கண்டு கொள்ளவே யில்லை. தோளுக்கு மேல் வளர்ந்த மகனால் பைசா பிரஜோனம் கூட இல்லையே என்கிற ஆதங்கம். கோபம். என் வலியும் வேதனையும் கண்ணீரும் குறையாமல் அப்படியே தானே இருக்கிறது என்கிற எரிச்சல். 

சின்னராசு நின்றான். உட்கார்ந்தான். சுருண்டிருந்த தம்பி தங்கையோடு ஒருக்களித்துப் படுத்துக் கொண்டான். தலை நீட்டமுடியாமல் அலுமினியப் பானையும் நான்கைந்து வறட்டிகளும் இருந்தன. 

வயிறு பசியில் கூவியது. கேட்பதற்கும் வெட்கமாய் இருந்தது. 

சின்னப்பொண்ணு கேட்ட போதே டீ குடித்திருக்கலாம் வயிற்றில் கூப்பாடு கொஞ்சம் மட்டாயிருக்கும். 

ப்ச்… என்னத்தப் பண்ண? 

சீக்கிரமாய் வேறு வேலை தேடிக் கொள்ள வேண்டும். மாசம் ரூபாயாச்சும் சம்பாதித்தால் தான் ரெண்டு வேளைச் சோறாவது கண்ணில் பார்க்க முடியும். 

இவனின் வயசொத்த இளைஞர்கள்… காக்காய்ப் பலகாரம், ஜல்லாத் துணி, வாய்க்கரிசி துட்டு என்று நிம்மதியாய்ப் பரம்பரை வேலையில் இறங்கிவிட்டார்கள். இவனுக்கு மட்டும் மனசு ஒப்ப மாட்டேனென்கிறது. 

“என்னலே பொஸ்தவத்தைக் கட்டிட்டு மாரடிக்க? கடாசு அந்த கஸ்மாலத்த…” 

  • என்றார்கள். 

“படிச்சவனுஞ் செரி.படிக்காதவனுஞ் செரி.. நம்மட்டத் தா வரணும்லே… நினைப்பு வச்சுக்கோ.” 

-என்றார்கள். 

“அண்ணே.நாத்தமல்லாம் பளகிடும். இல்லேன்னா பசிக்குப் பளகணு வவுத்து நெருப்பை விட மசான நெருப்பு காந்தலா இல்ல..வாண்ணே…”  

என்றார்கள். 

ம்ஹீம், மசிந்ததில்லையே சின்னராசு. 

புத்தகமும் கையுமாய்த்தான். அலைந்தான். கார்ப்பரேஷ பள்ளிக்கூடத்துக்கு வார் அறுந்த டிராயரும் சளி ஒழுகும் மூக்குமா ஓடுவான். மண்டையில் எதுவுமே ஏறாமல் சண்டித்தனம் செய்தது. கறுப்பு, கறுப்பாய் மொக்கை மொக்கையாய் எழுத்துக்கள் அர்த்தம் புரியாம கிண்டலடித்தன. எட்டாவதுக்கு மேல் எத்தனை தரம் தான் கோட் அடிக்க பாடமும் பிடிக்கவில்லை. அப்பன் வேலையும் பிடிக்கவில்லை இதோ இந்த நிமிஷம் வரைக்கும் ஒன்றிலும் உருப்படவில்லை. 

எட்டாவது பெயிலுக்கு என்ன வேலை கிடைத்து விடும்? போன இடமெல்லாம் பியூனாய் நிற்கச் சொன்னார்கள். டேபிள் துடைக்கச் சொன்னார்கள். டீ வாங்கி வரச் சொன்னார்கள். சொடக்குப் போட்டுக் கூப்பிட்டார்கள். அவ்வளவு தான். ரோஷம் பொத்துக் கொள்ள ஓடியே வந்து விடுவான். பத்தும் பத்தாதற்குக் கழனிவேலையும் விட்டுவைக்கவில்லை. ஊருக்குக் கூட ஒரு நடை போய் விட்டு வந்தாயிற்று பிரயோசனமில்லை, 

“அண்ணே எழுந்திரு இந்தா ஒரு வாய் உருட்டிப் போடு.மீனு குழம்பு இருக்கு..” 

மாரியம்மா எல்லோரையும் உலுக்கி எழுப்பினாள். 

பசி.பசி… சின்னராசுவுக்குப் பசி குலையைப் பிடுங்கியது. ஆனாலும் மனசின் மூலையில் லேசான வீம்பு. 

அம்மாக்காரி இன்னமும் முகம் கொடுத்துப் பேசக்காணோமே. 

“என்னாத்த நீ? ரெண்டு மாசம் களிச்சுப் புள்ளை ஊரு திரும்பிருக்கு. ஒத்த வார்த்தை பேசினாங்காட்டி முத்து உதுந்துடுமா? புள்ள என்ன பங்காளியா? பகையாளியா? என்னதான் கோவம்னாலும் பெத்ததுக்குச் சோறு போடாம இருப்பியா? கூப்பிடுத்தே. ஒரு வாய் திங்கச் சொல்லு பாரு – அண்ணே சோத்துல கைவைக்க ரோசிச்சு பேய் முளி முளிக்குது..”

“என்னா செருப்புக்கு நாம் பேசோணும்? என்னாடி புடுங்கல் இது ? அசலான் ஊடா இது? அவன் வூடு.திங்க வேண்டியதான? பெரிசாக் கிழிச்சுப் போடறேன்னு ஊர் நாட்டுல போனான். மோட்டாங்காட்டுல ஒளைச்சுப் பவுனா அள்ளியாறேன்னு. அல்லாருக்கும் ஒடம்பு மடங்கி வேலையாகுமா வனக்காட்டுல? இந்தா. போன மச்சான் திரும்பி வந்தாச்சு. சுடுகாட்டுல வேலை பண்ணுலேன்னா.. வயக்காட்டுல ஒழ ஒழக்கப் போயிட்டான்.. கட்டைல போறவன்…” 

கன்னாபின்னாவென்று கத்தியபடி மீன் குழம்பைக் குழிவாய்ச் சோற்றில் ஊற்றி பெரிய பெரிய கவளமாய் உருட்டி வைத்தாள். 

“..த்தே…எளுந்திரிங்கடா..ரவுசு பண்ணிக்கிட்டு.. “

  • இடது கையால் பசங்களை அடித்து எழுப்பினாள். 

தம்பிகளும் தங்கையும் கிறக்கமாய் எழுந்து அலங்கமலங்க விழித்தார்கள். 

“ஹை அண்னே எம்புட்டு நாளாச்சு பாத்து.” 

ராணி.கண்மலர்ந்து சிரித்தாள்.

சம்பத்து..சுரேசு ரெண்டும் சின்னராசுவிடம் அவ்வளவாய் ஓட்டமாட்டார்கள். முனியம்மாவுக்கும் அவர்களிடம் செல்லம் ஜாஸ்தி. ஏதோ வருமானம்… அஞ்சு பத்தென்று அவ்வப்போது கிடைக்கிறதே என்கிற பாசம். 

“வளி தெரிஞ்சுதாங்காட்டியும்..” 

விட்டேத்தியாய்க் கேட்டார்கள். 

“ம்….எல்லாம் வளி தெரிஞ்சு தான் வந்திருக்காவுக. கும்பி காஞ்சா குச்சுக்குள்ளத்தான் வந்தாகணும் இல்லேன்னா- அரியாசனம் புடுங்கப் போற மாதிரில்ல போறவுக உங்க அண்ணாத்..” 

அம்மா சொன்னதில் கேலியாய் சிரித்தார்கள் தம்பிமார்கள். 

தன்னைவிட இளையவர்கள்…அவர்கள் வாயில் விழுந்து வர வேண்டியிருக்கிறதே என்கிற ரோஷம் சின்னராசுவுக்கு… 

பெரிய கவளங்களை எடுத்து சுரேசு, சம்பத்து. ராணியின் கையில் வைத்தாள் முனியம்மா. 

“ராவாப் பொளுதாக் கஞ்சிதான்…இன்னிக்குக் கட்டைல போன மவராசன் புண்ணியத்துல வரட்டுன்னு அரிசிச்சோறு. பொட்டச்சி. எம்புத்திக்கு எட்டினவுட்டு கோளி வளக்கேன். ஆடு வளக்கேன். இவனுக்கு ரோசமிருந்தா.சோலி செஞ்சு பத்து இருவது கொண்டாரனும். உக்கார வச்சுப் பன்னீரு தெளிக்கலாம். வெத்துவேட்டுப் பயலுக்கு இன்னிம் மருவாதி கேக்குதா? ஏன் அப்பன் சோலிக்கு என்னா கொறச்சல்? புடிக்கலையா? இரண்டு ஆடு வள… ரெண்டு கோளி வள… குழாயும் சட்டையும் மாட்டிக்கினு ஆப்பிஸு தான் போகணம்னுனா முடியுமா.?அதுக்கொரு பவுசு வேணாமா?” 

தூவானமாய் முனியம்மா புலம்பித் தீர்த்தாள். 

இவள் உருட்டிப் போடப் போட சம்பத்தும் சுரேசும் அவுக் அவுக் அவுக்கென்று தின்றார்கள். 

“ஒரு துண்டாச்சும் தலை குடும்மா.”

“எனக்கு நடுவு வேணும்..” 

“இந்தாங்கலே. நல்லாத் துன்னு வளர்ற பசங்க.” 

மீன் துண்டைத் தந்தாள். 

“எல்லாம் மாரி புண்ணியம். மணக்குது குழம்பு..”

இன்னமும் ஒரு உருண்டைச் சோறு உள்ளே இறங்காமல் அலைந்தபடி இருந்தான் சின்னராசு… 

“வாயில என்னட்டி கொளுக்கட்டையா? கைல குமிச்சு வச்சு அளகு பாக்க? ம்? முழுங்குட்டி…” 

ராணியின் குமட்டில் குத்தினாள் முனியம்மா. 

பன்னிரண்டு வயசு ராணிக்குச் சட்டெனக் கண்ணீர் பொங்கியது. பேச முடியாமல் தெத்தித் தெத்தித் சொன்னது. 

“அண்ணே துன்னாத்தான் எஞ்சோறு ஏறங்கும்…”

“அட பாரு மாரி.. அய்வ வருது தங்கச்சிக்கு. அஞ்சுபைசாக்கு வக்கில்லாத அண்ணங்காரன் வண்டி வண்டியாச் சீரு பண்ணுவான்னு பாசம் பொத்துக்கினு வருது..” 

“ப்ச என்னத்தே? ஒடம்பொறப்பு பாசம் காசைவச்சா வருது? காமாலையாப் பேசாத..” 

கண்ணீரோடு ராணி, கையிலிருந்த சோற்று உருண்டையை சின்னராசுவின் வாயில் திணித்தாள். 

“துண்ணுண்ணே ஒன் வயிறு பசிக்கப்ப..எனக்குச் சோறு தொண்டைக் குழி தாண்டுமா..?” 

சோற்றை முழுங்க முடியாமல் தவித்தான் சின்னராசு. ‘ஒத்தைக் கொத்த தங்கச்சி. இதுக்கு ஒரு நாளாச்சும் ரிப்பனு வளையலு, கண்மை, நைலக்ஸு பாவாடை எதாச்சும் வாங்கிக் குடுத்திருப்பனா? நெசமாலுமே பொசக்கெட்ட சென்மம் நானு’ நினைப்பு தொண்டையை அடைத்தது. 

“ஏட்டி ராணி கொஞ்சம் கஞ்சி கொண்டா..இங்கனயே குந்திக்கறேன்.”

வெளியிலிருந்து இருசப்பன் கூவினான் 

“இந்தா. அடுத்தது வந்தாச்சி… பொட்டைப் புள்ளைன்னா உசிரு.. குதி குதிராப் பவுனு சேத்து வச்சிருக்கு அப்பாரு… கொண்டு போய்க் குடு”

ஒரு வட்டிலில் சோறும் மீன்குழம்பும் போட்டாள் முனியம்மா.

“இன்னிச் சோறு. மாரியோட குழம்பு- அவளை நினைச்சுட்டு துள்னுவியாம்.” 

வாசலை நோக்கிக் கூவினாள். 

துறுதுறுங்கும் 

“அட்ரா சக்கை அப்ப தலையும் நடுவும் போடு… வாய் துறுதுறுங்குது. மாரியோட மீன் குழம்புக்கு இன்னம் ரெண்டு பிடி உள்ள போவும்..” 

நாக்கைச் சப்புக் கொட்டினான் இருசப்பன். 

ஆவிபறந்த சோற்றை..பாவாடை வீசிற எடுத்துப் போனாள் ராணி, பார்த்த மாரியம்மா சிரித்தாள், 

“அத்தே… இந்தா… உனக்கு அடுத்த செலவு வந்துட்டு.”

“என்னட்டி சொல்லுத? இருந்தால் செலவளிக்க..?” 

“உண்டியலு ரொம்பற வரைக்கும் பொட்டைப்புள்ளை காத்திட்டிருக்குமா? அந்தாபாரு.ராணி தெரண்டுட்டா..” 

“அடி ஆத்தீ.கஞ்சிக்கு காசில்ல.திடுதிடுப்னு கொமரியாயிட்டாளே…”

ஒரு சேரக் கூவினார்கள். அப்பனும் ஆத்தாளும். சந்தோஷப்படவா? வருத்தப்படவா? எனத் தெரியாத கலவை உணர்வில் உறைந்தான் சின்னராசு. 

அத்தியாயம்-6

வெள்ளானை வேண்டும்
விருது பதினெட்டும் வேண்டும்
வெண்கல டமுக்கும் வேண்டும்
அடிக்கப் பெருங்கணிப்பும் வேண்டும்
கொள்ளிக்காசு கொடக்காசு
ஒரு முழம் சீலையும் வேண்டும் 
-நாட்டுப்புறப் பாடல் 

“வச்சிருக்கிறது ஒத்தைக்கொத்த பொட்டப்புள்ள. அதுக்கு ஒரு சடங்கு களிக்க ஆயிரம் ரோசனை மாமாக்கு எடுத்துப் பண்ணலேன்னா என்னத்துக்கு தாத்தா? அப்பன்? ஆயி? ஒண்ணுக்கு மூணு அண்ணங்காரனுவ? ம்? நாண்டுக்கிட்டுச் சாவலாம்..” 

மாரியம்மாதான் பாடு பேசினாள். பெரிசாய்ச் சடங்கு கழித்தால், செலவாகும் என்று இருசப்பன் சொன்னதுக்குத் தான் இந்தப் பொசபொசப்பு.. 

முனியம்மாவுக்கு உள்ளுக்குள் நப்பாசைதான் “சடங்குன்னு பத்திரிகை வச்சாலாவது… நாலுபேரு வரப் போக இருப்பா.. இனிம..ராணி கல்லாணத்துக்குப் பண்ட பாத்திரம்னு சேக்கணுமே.சடங்கு கழிச்சாத்தான் ரெண்டு சருவச் சட்டி நாலு புடவை பத்து நூறு மொய்ப்பணம்னு வந்து சேரும். செலவுக்கு பயந்து திரட்டு சுத்த வேணாம்னா ஒண்ணுமத்துத்தான் போவும்…பொட்டைன்னாலே செலவாளித்தான்.சடங்கு விசேசம்னு ஒண்ணாடி ஒண்ணா வருந்தேன்” 

மழைக்காலத் தவளையாய்க் கத்தித் தீர்த்தாள்.

“செலவாயிடும். கடனுஉடனு வேணாம்னு ஒடுக்கிட்டு உக்கார்றவன்லாம் அப்பனாங்காட்டியும்? இவ்ளோ ரோசனை பன்னண்டு வருஷத்துக்கு முன்னாடி ராவிருட்டுல நாயாச் சுத்தி வந்தப்ப இருந்திருக்கணும்… அப்ப சொகம் இப்ப சொமைன்னா நல்லாவாருக்கு.? 

வாய் ஓயாமல் சொலவடை – நாள் முழுசம் முசுமுசுவென்று பொங்கினாள் முனியம்மா. 

வேறொன்றுமில்லை. சடங்கு வீட்டுக்காரியாய் நல்லதாய்ச் சீலைக்கட்டிக் கதம்பப் பூவு வைத்து வாய் மணக்க வெற்றிலை போட்டு, வருபவர்களை ‘வந்தீகளா.? வழிதெரிந்ததா? வாங்க’ என்று வரவேற்றுச் சந்தோஷப்பட ஆசை. 

“ஏழையும் பாழையுமா இருக்கற எடத்துல ஆயிரம் ரூவாக் கடன் வாங்கிப் பளபளப்பா மினுக்கறது தப்பா? எப்பவுந்தேன் இருக்கே பட்டினியும் பஞ்சப்பாட்டும். சாமி குடுக்கற நல்லதுக்குக் கூட சிரிப்பும் கும்மாளியும் வேணாம்னா.. நாம மனுசப் பொறப்பா? சவமா? நெத்தைக்கும் சவத்தோட செத்துப் பொழைச்சி…சவங்கணக்கா கெடக்கணுமா? நாமளுந்தேன் உப்பு உறைப்பா ஒரு நா திங்கலாமே.” 

இப்படி அப்படி பேசிப்பேசி இருசப்பனை ஒத்துக் கொள்ள வைத்தாயிற்று. அப்புறமென்ன? 

வீட்டில் விசேஷமென்றால் வீட்டின் முகமே மாறிவிடுமே அவரவர் ஏதோ வேலையை இழுத்துப் போட்டு சுறுசுறுப்பானார்கள். 

சின்னராசுவுக்குத் தங்கச்சியைப் பார்க்கப் பார்க்கப் பாசம் பொங்கியது. கண் கலங்கியது. 

“நேத்து வரைக்கும் பாவாடை சட்டையில சிலுசிலுன்னு பள்ளியோடம் ஓடினவளா இவ? சொடக்குப் போட்ட மாரியில்லா அடக்க ஒடுக்கமாயிட்டா. ஆனாலும் என்னைப் பாக்கறப்ப மட்டும் அண்ணேன்னு உசிரு கண்ணுல ஆடுது. இந்தப் புள்ளைக்கு உடம்பொறப்பா நா ஏதாச்சும் பண்ணனுமே.. ஒண்ணுத்துக்கும் பிரயோசனமில்லாம நா இருக்கவா?” ராவாய் பகலாய் யோசனை. 

சுரேசும் சம்பத்தும் சேர்த்து வைத்திருந்த அஞ்சு பத்தெல்லாம் சேர்த்துப் பொறுக்கி எண்ணிப்பார்த்து, கொலுசு வாங்கவா? சீலை வாங்கவா? என்றெல்லாம் யோசித்துக் கடைசியில் நைலக்ஸ் புடவை வாங்கித் தருவதாய்ப் பேச்சு. 

“உன் கல்யாணத்துக்குப் பாரு புள்ள..ரெண்டு பவுனுல தாட்டியா செயினு பண்ணிப் போடுதோம். நாங்க என்ன வேலை வெட்டி இல்லாத தண்டச் சோத்துக் களவாணியா? ஒனக்குப் பண்ற சீரைப் பாக்கறவன்லாம் ஆயாரேன்னு அசந்துடுவானுக…”

உலக்கைக்கு அந்தப் பக்கத்திலிருந்த ராணியிடம் சொன்னார்கள். 

“புது-ஜவுளி..மாலை பூவு பழம் பலகாரம் பிரியாணி…நோட்டீஸ்ன்னு செலவு முழுங்கடிச்சிடும்… ஒட்ட ஒட்டக் கணக்குப் பார்த்தாக்கூட ரெண்டாயிரம் கிட்ட வந்திடும்..பரவாயில்ல.வற்ற மொய்ப் பணத்துல சமாளிச்சுடலாம்.. சுத்துப்பத்துல இருக்கிற அம்பது ஊட்டு ஜனங்களையும் அழைக்கோணும்…”

அப்பனும் அம்மையுமாய் உட்கார்ந்து பேசித் தீர்த்தார்கள். கூடவே மாரியம்மாவும் தன் பங்குக்கு எதையாவது சொல்லுவாள். 

இருசப்பன்….கந்துவட்டிக்காரனைத் தேடிப் போனான். 

“அத்தே. நாந்தேன் மொத பார்த்தேன். நல்ல சமாச்சாரம் சொன்னேன். எனக்கொரு சீலை எடுத்தா. மாட்டேன்னு ரவுசு பண்ணாத.’ 

உத்தரவாதமாய்ச் சொல்லி விட்டாள் மாரியம்மா.. 

“அடேய்..எம் பேத்தி பெரிய மனுசியாயிருக்கா..மருவாதியா நடுவூட்டுல உக்காத்தி வச்சு ஒருத்தன் சேதி சொன்னானா? நாய்களா..நா இருக்கிறது தெரியாம கண்ணு அவிஞ்சு போச்சா என்ன.? நா கட்டைல போயிட்டேனா..?” 

“இந்தாப்பு…சும்மாக்கிட உன்ற கண்ணுதான் அவிஞ்சிருக்கு… நல்ல விஷயம் பேசறப்ப வாயடிக்கிறியே..நீ தான் நாசமாப் போவ… ஓம் பேத்தி மஞ்சக்குளிக்கன்னிக்கு ஒருவா சாராயம் ஊத்தறேன்ன.. முளுங்கிட்டு மூலைல கெடப்பியா. சம்பந்தி மருவாதி கேக்குதாக்கும்? நடுவூட்டுல உக்காத்தி வக்கோணுமா? கொஞ்ச நாள்ல நடுவூட்டுல உக்காத்தி வச்சிக் காரியம் பண்ணத்தான் போறன். மருவாதி பண்ணணுமாம் மருவாதி…” 

சுள்ளென்றான் இருசப்பன். 

“தாத்தா நீயும் நானுந்தான் வேண்டாப் பொறப்பாயிட்டம் வீணா வாய் குடுக்காத. சும்மாக் கெட” 

சாயுபு கடையில் கடன் சொல்லி வாங்கி வந்திருந்த ரத்தப் பொரியலைத் தாத்தாவிடம் நீட்டினான் சின்னராசு.

முதல் பேரன் என்று தாத்தாவுக்கு சின்னராசுவிடம் தனிப் பிரியம் தான், அவர் ஆளாய் பலமாய் நன்றாயிருந்தவரைக்கும் பேரனைத் தரையில் விட்டதேயில்லை. கிடைத்த கொள்ளிக் காசுக்கெல்லாம் பேரனுக்குக் கால்சட்டை, சொக்காய், பொறை, பஞ்சுமிட்டாய், ரப்பர்பந்து, என்று வாங்கித் தந்திருக்கிறார். சாம்பல் அடித்துக் கண்பார்வை போனப்புறம் தான் நடமாட்டம் கஷ்டமாகியிருக்கிறது. ராவாய்ப் பகலாய் உழைத்த கட்டையை மூலையில் முடங்கச் சொன்னால் முடியுமா? தட்டுத்தடுமாறித் தடவிப் பார்த்துப் பெட்டிக்கடை, சாராயக்கடை இப்படிப் போய் வருகிறார். 

“சின்ராசு எனக்கொரு ஆசைகுதியாட்டம் போடுது. உங்கப்பன்கிட்ட சொல்லுதியா.?” 

“என்ன சொல்லுத தாத்தா? நானா?” 

“ம் நாஞ்சொன்னா நாயாப் பாயறான்… உங்கம்மாக்காரியும் ஒத்து ஊதறா. எனக்கு ஸிலுக்கு வேட்டி எடுத்துத் தரச் சொல்லுடா. எம் பேத்தி சடங்கு வேட்டின்னு சந்தோஷமாய்க் கட்டிப்பேன்.. கட்டைல போறவனுக்கு ஒரு மொழத்துண்டு போறும்னு விட்டுடாம…” 

“வக்கிருந்தா நானே எடுத்துத்தாறேன் தாத்தா…”

“நீ எடுத்துத்தாடா கோடித்துணி… எங்கட்டை விரலைக் கட்டித் தூக்கிப் போறப்ப நீ எடுத்தா… இப்ப எனக்குச் சடங்கு வேட்டி வேணும்டா. இந்த வேட்டியைப் பாரு.மாத்துவேட்டியே இல்லாமக் கட்டிக் கிளிஞ்சே போச்சு…” வயசை மறந்து கெஞ்சினார் தாத்தா..கட்டியிருந்..வேட்டியைக் கழற்றி உதறினார். உள்ளேயிருந்த கோவணம்.நார்நாராய்க் கிழிந்திருந்தது. வேட்டி. கோவணம் மேல் துண்டு தாத்தா உடம்பு எல்லாமே பீழைநாற்றம்…கற்றாழை நாற்றம்.. தண்ணீர் பட்டு எத்தனை நாளாயிற்றோ? 

கண்ணில்லாத அந்தக் கிழம் படும் அவஸ்தையில் நெஞ்சுக்குழி எரிந்தது சின்னராசுவுக்கு.. 

‘என்னத்தப் பண்ண? மூட்டை தூக்கவ? டேபிளு தொடைக்கலாமா? சொடக்குப் போட்டுச் சுண்டிக் கூப்டாலும் பரவாயில்லைன்னு பிளாஸ்க் தூக்கிப் போற பியூனுவேலைக்குப் போலாமா? எனக்கு எத்தினி சொக்கா வாங்கிக் குடுத்திருக்கு தாத்தா, அதுக்கொரு வேட்டி வாங்க வளி இல்லையே… ராணிக்கு வேற சபைல ஏதாச்சும் பண்ணனும்… என்னத்த ஒழைக்க? எப்படிச் சம்பாரிக்க’ 

புரியவில்லை சின்னராசுக்கு. 


தினம் தினம்.. காலையில் ரெண்டு பச்சை முட்டை உடைத்து ராணியின் வாயில் ஊற்றி முழுங்க வைத்தாள் முனியம்மா. கூடவே ஒரு குப்பி நல்லெண்ணெயும் முழுங்க வேண்டியிருந்தது. குமட்டினாலும் வாயே திறக்காமல் முழுங்கி வைத்தாள் ராணி கேட்ட மாரியிடம் “குடிக்கலேன்னா அம்மா குமட்டுல குத்தும்… உசிருபோற மாரி வலிக்கும்… அதுக்கு இது தேவலதான்..” என்றாள். 

குடிசையின் மூலையில் உலக்கைக்கு அந்தப்புறம் பல்லாங்குழியும், தாயமும், ஏழுகல்லும் ஆடியபடி உட்கார்ந்திருந்தாள் ராணி. அக்கம்பத்து வீட்டுச் சின்னப்பெண்கள் இவளை, தேவதை மாதிரி கண்ணகலப் பார்த்து மயங்கி மயங்கி நின்றதுகள்.. 

“என்னட்டி பார்வை? நீங்களும் ஒரு நா இப்படி ஒலக்கைக்கு அந்தப்புறம் உக்கார வேண்டியவுகதான்.. பாக்காளுக பார்வை. எம்பொண்ணை முளுங்கிப்புடறமாதிரி.. கொள்ளிக் கண்ணுப் பேய்ங்க.. நாசமாத்தான் போவீக…” 

காலடி மண்ணெடுத்துக் கரித்துக் கொட்டுவாள் முனியம்மா. 

மாரியும் அவளுமாய் மெஷினுக்குப் போய்ப் புட்டுமாவு திரித்து வந்தார்கள். உளுந்துக்களி, வெல்லப்புட்டு என்று பண்ணி ஊர் அழைத்தாள் முனியம்மா..அவள் நிதமும் நினைத்து ஏங்கினபடிக்கு முந்தானையில் முடிந்து ஆயிரம் ரூபாய்க்கு ஜவுளி. மாரியம்மாவின் ரெண்டு கை முழுக்கப் பழம்..கறிகாய் மற்ற ஜாமான்கள். 

காத்திரமாய் பார்டர் போட்ட காக்காப்பொன் சரிகை ஊசிப்புடவை, ரவிக்கை, பாசிமணி, கண்ணாடி வளையல், ஸ்டிக்கர்பொட்டு, கண்மை, மாலையென்று சகலமும் போட்டு உட்கார்த்தி வைத்த போது அம்சமாய்த்தான். இருந்தது. புதிதாய் ஏதோ சோபை ராணியின் முகத்தில். கூடவே யாரையும் கண் நிமிர்ந்து பார்க்க விடாமல் வெட்கம். 

சம்பத்தும் சுரேசும் தன்னொத்த பசங்களோடு வீட்டுக்கு வரும் வயசுப் பெண்டுகளைக் கிண்டலடிப்பதும் விசிலடிப்பதும் போக வர இனிப்பு வகைகளைக் குத்தாய் அள்ளி வாயில் போட்டுக் குதப்பினார்கள். சந்தடி சாக்கில் சின்னான் பெட்டிக்கடையில் ‘பெஷல் சிகரெட் குடு’ என்று வாங்கிக் கஞ்சாவைப் புகைத்தார்கள், 

தாழாங்குப்பத்தின் அத்தனை வீட்டுக்காரர்களும் வந்து விட்டார்கள். பெரிய தனக்காரி மாதிரி முனியம்மா. செக்கச் செவேலென் புடவை கட்டிக் கதம்பம் வைத்து கை காது கழுத்தில் கவரிங் அட்டிகையும் வளவியுமாய்
ராணியின் பக்கத்தில் நின்று கொண்டாள். 

பந்தியில் மேல்வேலையிலிருந்த மாரியம்மாவைக் கூப்பிட்டு விட்டாள் முனியம்மா. 

“என்னத்தே? செவப்புரெட்டுல சூரியனாச் சொலிக்கற? சமைஞ்சது ஓம்பொண்ணா? நீயான்னு கொளம்புதே…” 

“அட நீ வேற புள்ள..இந்தாளை இன்னங் காங்கலியே? நேத்து பொளுது சாயப் போனவரு. விசேஷம்னுட்டுத் தெரியுமில்ல? காங்கல்ல? எப்பவுமே பொறுப்பத்துப் போன ஜென்மம். இந்தாளக் கட்டிக்கிட்டு நா எப்பத் தாலியறுக்க? இவளுக்கு எப்பப் புட்டு சுத்த?” 

நல்லநாளில் கட்டினவன் கூட இல்லாதது குறையாய், வெப்பமாய் வெடித்தது. 

“ப்ச நல்ல பொளுதில நல்ல வார்த்தைய காணமே. விசேஷம் நடக்கட்டும். வந்த சனம் பிரியாணிக்குக் காஞ்ச வவுத்தோட காத்திட்டிருக்கு. இந்தா வந்தேன்னு மாமா திடீர்னு வந்துடுவாரு…” 

இதோ அதோ என்று ராணிக்குப் புட்டு சுற்றி முடித்தார்கள். அத்தனை பேரும் மொய்ப் பணம் ஒதி விட்டார்கள். பண்ட பாத்திரங்கள் தந்தார்கள். முந்தானையைப் பை மாதிரி வயிற்றில் செருகி மொய்ப் பணத்தையெல்லாம் வாங்கிக் கொண்டாள் முனியம்மா. பை நிரம்ப நிரம்பச் சந்தோஷம். மட்டன் பிரியாணி வாசனை ஊரைத் தூக்கியது. 

தாத்தாவுக்குக் கட்டுப்படுத்தமுடியாமல் வாய் ஊறியது. 

“ஏட்டி மாரி…எனக்கு ஒரு வா குடுட்டி. பசி வயத்துக்காரனை விட்டுட்டு புளி ஏப்பக் காரனுக்குப் பந்தி வைக்கீக? அடுக்குமாட்டி ஒங்களுக்கு? பேத்தி சடங்குப் பிரியாணிக்கிக் கையேந்த வைக்கீகளே..என்னாடி வெனையாய்ப் போச்சுது…” 

தாத்தாவின் கூப்பாடு ஊர் முழுக்கக் கேட்டது. 

“ஒன் மருமவப் பொண்ணுங்களைக் கூப்புடல்லியா?” 

“சின்னுவுக்கு நோட்டீசு வைக்கலியாட்டி முனியம்மா?”

“என்னதான் கோவன்னாலும் ஒடம் பொறப்பு குடும்பம் நம்ம குடும்பம் தான?” 

வந்தவர்கள் விசாரிப்பு மேல் விசாரிப்பு 

“நீ என்னடி அண்ணாவி? கெழக்கால பாடைல போறப்பக்கூட நா அவுகளைச் சேக்கமாட்டேன்.. வந்தவ. மொய்யெழுதிட்டுப் பிரியாணி துன்னுட்டுப் போவியா.. எகத்தாளம் படிக்காதீங்கட்டி.” 

முனியம்மாவின் சாடைப் பேச்சைக் கேட்ட சின்னராசுவுக்கு சின்னப் பொண்ணுவின் முகம் மனசில் வந்து வருத்தமாக்கியது.

– தொடரும்…

– தகனம் (நாவல்), முதற் பதிப்பு: 2005, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை. 

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *