சொந்த வீடு!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 1, 2022
பார்வையிட்டோர்: 2,370 
 

படித்து முடித்த ராகவனுக்கு வேலை கிடைத்ததில், குடும்ப வாழ்வின் அவசியத்தேவைகளுக்கான நிலை பூர்த்தியடைந்ததில் மகிழ்ச்சியடைந்தனர் அவனது பெற்றோர்.

ராகவன் கிராமத்து சூழ்நிலையில் வளர்ந்தாலும்,வானம் பார்த்த பூமியில் மழை பெய்யும் போது ஆடிப்பட்டம் விதைக்கும் நிலக்கடலை,சோளம்,கம்பு,எள்ளு,

கொள்ளு,உளுந்து,துவரை என மானாவாரி விவசாயத்தை நம்பியே இருந்தது அவனது குடும்பம்.

ஆடியில் விதைத்தாலும் சில சமயம் ஐப்பசியில் மழை பொய்த்து விட்டால்,விதைத்த விதைகளைக்கூட திரும்ப எடுக்க இயலாமல், அடுத்த பட்டத்துக்கு விதைக்க வியாபாரியிடம் மூன்று மடங்கு விலை அதிகம் கொடுத்து வாங்கி விதைத்து,பின் விளைந்தவுடன் வேறு வியாபாரி, விளைந்த தானியத்தை அதிக விலைக்கு கேட்டாலும் விற்க முடியாது.

விதை கடன் கொடுத்த வியாபாரிக்குத்தான் விளைந்த தானியத்தை விற்க வேண்டுமென்பது கிராமத்தில் எழுதாத சட்டமாக அனைவராலும் கடைப்பிடிக்கப்பட்டது.

அடி மாட்டு விலைக்கு வியாபாரி மூன்று மடங்கு குறைத்து பெற்றுச்செல்வதை உற்று நோக்கும் போது, கல்வி கற்றுக்கொண்டு பெற்றோரை இந்த நிலையிலிருந்து விடுவிக்க வேண்டுமென நினைப்பான் ராகவன்.

நினைத்ததை நினைத்தபடி வேலை வாங்கி,சாதித்தும் விட்டபோது அவன் மனம் மகிழ்ச்சிக்கடலில் மூழ்கியதில் ஆச்சரியமில்லை.

வேலை கிடைத்ததால் உறவுப்பெண் ரம்யாவை பெற்றோர் சம்மதத்துடன்,உறவுகள் ஆசீர்வதிக்க, உள்ளூர் மண்டபத்தில் திருமணம் செய்தான். திருமணத்துக்கு வந்தவர்கள் ‘பையனோட முயற்ச்சியால குடும்பம் வெளிச்சமாயிடுச்சு. பெரிய பணக்காரங்க கல்யாணமாட்டா ஆடம்பரமா இல்லாட்டியும் விருந்துல அசத்திட்டீங்க’ என அப்பாவிடம் உறவுகள் பேசியது மேலும் மகிழ்ச்சியைக்கூட்டியது.

வேலை பார்க்கும் நிறுவனம் உள்ள நகரத்தில் வாடகை வீட்டில் குடியேறியவன், பெற்றோரையும் உடனழைத்துச்சென்று அவர்களுக்கென தனியறையில் இருந்திடச்சொன்ன போது பெற்றோருக்கு எல்லையில்லா மகிழ்ச்சி ஏற்பட்டது.

வார விடுமுறை தவிர அலுவலக நாட்களில் விடுமுறை எடுக்காமல் வேலை செய்து, வாங்கும் சம்பளத்தில் சேமித்ததில் பத்து லட்சம் இருந்த போது, மனைவி ரம்யா தனது சம்பள சேமிப்பு ஐந்து லட்சம் கொடுக்க, நகரத்திலேயே வீடு கட்டிக்கொள்ள இடம் வாங்கி விடலாமென மனைவியின் யோசனையை விட நச்சரிப்பால் ரியல் எஸ்டேட் அலுவலகத்தை அணுகினான்.

“நாங்க சைட் பிரிச்சு அப்ரூவல் வாங்கிடுவோம். விற்பனைன்னு போகும் போது விளம்பரம் கொடுத்தாலும் மக்கள் வர்றதில்லை. அதனால பத்து புரோக்கர்கர்கள் கிட்ட ஒரு ரேட் முடிவு பண்ணி,பத்து, பத்து சைட்டா ஒப்படைச்சிடுவோம். முன்ன மாதிரி எந்த புரோக்கரும் ரெண்டு பர்சன்ட் கமிசனுக்கு இப்ப வர்றதில்லை. மொத்தமா எடுத்துட்டு முடிஞ்சவரை அவங்க திறமையப்பொறுத்து,வாங்கறவங்க அவசரத்தப்பொறுத்து லாபம் பார்த்திடுவாங்க. நீங்க அவங்க சொல்லற விலைக்கு வாங்கிக்கனம்” என்ற ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் வேலையிலிருந்தவர் இடைத்தரகரின் அலைபேசி எண்களைக்கொடுக்க, வாங்கி வந்து அலைபேசியில் பேசினான் ராகவன்.

“பத்து சைட்ல ஒன்னு மட்டும் தான் இருக்கு. அது மேற்கு பார்த்த சைட். குத்து வாயுமூலைல இருக்கு . மற்றதெல்லாம் புக்காயிடுச்சு. நேர்ல வாங்க சைட்ட பார்த்துட்டு முடிவு பண்ணலாம்” என்றார் சைட் புரோக்கர் அண்ணாசாமி.

“ஏங்க, எதுவோ ஒன்னு இப்பவே பேசி முடிச்சிடலாம். இப்படித்தான் எங்க ஆபீஸ்ல வேலை பார்க்கிற காரிகா மேற்கு பார்த்துன்னு போன வருசம் வாங்கம விட்டுட்டு, இப்ப நாலு கைமாறி,நாலு மடங்கு அதிக விலைக்கு இந்த வருசம் வாங்கியிருக்கா. மேற்கு பார்த்த இடத்துல வடக்கு பார்த்து கட்டிக்கலாம். குத்து இருந்தா சின்னதா ஒரு விநாயகர் சிலை வச்சுக்கலாம்னு அவதான் சொன்னா” என்ற மனைவியின் பேச்சைத்தட்ட முடியாமல், தமது ஆக்டிவா ஸ்கூட்டரின் சுவிட்சைத்தட்டினான் ராகவன்.

நேரில் சென்று பார்த்த போது மேற்கு பார்த்த இடத்துக்கு மேற்கு பகுதியில் உள்ளூர் சுடுகாடு இருப்பது தெரிந்ததால் அதை வேண்டாம் என்று புறப்பட்டவர்களுக்கு, அடுத்த வீதியில் கிழக்கு பார்த்த ஓர் இடத்தில் பங்களா போன்ற மாடி வீட்டருகே இருந்த இடம் ரம்யாவுக்கு பிடித்துப்போக, “ஏங்க இந்த இடம் கிடைக்குங்களா…? விலை அதிகம்னாலும் பரவாயில்லை. ” என ராகவன் கேட்க,புரோக்கர் அண்ணா என்கிற அண்ணாசாமி சற்று யோசித்த படி, சற்று தூரம் சென்று‌ செல்போனில் பேசிவிட்டு வந்தவர், ” இத ஒருத்தர் அட்வான்ஸ் கொடுத்து இன்னும் கிரையம் பண்ணாம வச்சிருக்கார்.

செண்ட்டுக்கு இரண்டு லட்சம் அதிகமா கேட்கிறார். அதாவது மேற்கு பார்த்தது எங்களோட விலை ஐந்து லட்சம். இது கிழக்கு பார்த்து இருக்கிறதால ஏழு. வாங்கியவர் ஒன்பது சொல்லறார். இன்னும் ரெண்டு மாசம் போச்சுன்னா பதினைஞ்சுக்கும் இங்கே கிடைக்காது. இப்பவே மெயின் ரோடு பேஸ் பதினஞ்சுக்கு முடிச்சிட்டாங்க ” என்ற போது ராகவனும்,அவன் மனைவியும் அதிர்ச்சியின் எல்லைக்கே போனார்கள்.

“என்னங்க இது,ரொம்ப விலை அதிகமா இருக்குது? என்னோட ஆபீஸ்ல வேலை பார்க்கிற காரிகா மேற்கு பார்த்து போன வருசம் ஒரு லட்சம் சொன்னத இந்த வருசம் நாலுக்கு முடிச்சிருக்கா. அதே விலைன்னா அஞ்சு செண்ட் இருபதுக்கு வாங்கிடலாம். வீட்ல பதினைஞ்சு போக பாக்கி லோன் வாங்கிடலாம்னு நினைச்சேன். ஆனா அந்த இடம் நமக்கு புடிக்கலே. அதையே இப்ப அஞ்சுங்கறார். இத ஏழுக்கு வாங்கினவர் ஒன்பது சொல்லறதா சொல்லறார். இந்த விலைக்கு இடம் வாங்கினா,வீடு எப்படி கட்டறது? பத்து வருசம் நாம வேலைக்கு போயி கஷ்டப்பட்டு சேமிக்கிறதை ஒரு நாள்ல பறிக்கப்பார்க்கிறாங்க.” என பேசிய ரம்யாவின் கண்களில் கண்ணீர் துளி எட்டிப்பார்த்தது.

“சார் யோசிச்சு சொல்லுங்க. எங்களுக்கு இந்த இடம் ரொம்ப பிடிச்சுப்போச்சு. சரியான விலை சொன்னா அடுத்த வாரமே கிரையம் பண்ணிக்கிறோம்.”என்று புரோக்கரிடம் கெஞ்சியவாறு கேட்டான் ராகவன்.

“சரி தம்பி. உங்களோட மனைவியப்பார்த்தா என்னோட பொண்ணு ஜாடையிலேயே இருக்கறதால,என்னோட பொண்ணுக்குன்னு நினைச்சு, வாங்கின விலை ஏழுக்கே முடிச்சிடலாம். வாங்கி வச்சிருக்கிறது வேறு யாருமில்லை. என்னோட மனைவிதான். அவ பேர்லதான் அக்ரிமெண்ட் இருக்கு. ஒருவாரத்துல எழுதலேன்னா மூணு லட்சம் அட்வான்ஸ் போயிடும். ஒரு வாரத்துல மொத்தம் முப்பத்தஞ்ச ரெடி பண்ணுங்க “என புரோக்கர் சொன்ன போது , ‘எதற்க்கு இப்படி ஏற்றி இறக்குகிறார்கள்? இன்னும் இருபது லட்சத்துக்கு எங்கே போவது?அவ்வளவு கடன் வாங்கினால் முழு சம்பளமும் வட்டிக்கே போயிடுமே?’ என ராகவன் ஆழ்ந்து கணக்கு போட்டான்.

“ஏனுங்க எனக்கு ஒரு யோசன தோணுது”

“என்ன?”

“ஊர்ல,காட்ல உங்கப்பா பேர்ல இருக்கிற பூமி ஒரு ஏக்கரை வித்து இந்த சைட்டை வாங்கிடலாங்க. அந்த பூமில விதைச்சாலும் நஷ்டம்னு தானே விதைக்காமையே விட்டுட்டோம். ஒரு வீட்டை சொந்தமாக்கிட்டம்னா போதுங்க. வேலைக்கு போய் வீட்டு வாடகை கொடுக்கிறத மிச்சம் பண்ணி குழந்தைகள் ரெண்டு பேரையும் நல்ல ஸ்கூல்ல சேர்த்தி படிக்க வச்சிடலாங்க.” என மனைவியின் யோசனையை செயல் படுத்த மறுநாள் அலுவலகத்துக்கு விடுமுறை எடுத்துக்கொண்டு, தன் தந்தையை அழைத்துக்கொண்டு பிறந்த சொந்த கிராமத்து ஊருக்கு கணவன் ராகவன் கிளம்பிய போது, தனது லட்சியம் நிறைவேறப்போவதை மனதில் உறுதி செய்து மகிழ்ந்தாள் ரம்யா.

“வாங்க. பார்த்தே பல வருசம் ஆயிடுச்சு. பையனுக்கு வேலை கிடைச்சதும் ஆளே மாறி போயிட்டீங்க. ” என பேசிய பூர்வீக கிராமத்தின் பக்கத்து வீட்டு பரமானந்தன் மனைவியை அழைத்து காஃபி போடச்சொன்னார்.

“பையனுக்கும்,மருமகளுக்கும் வேலையும், சம்பளமும் தேவல. குழந்தைகள் ரெண்டு பேருன்னு குறையில்லை. இருந்தாலும் டவுன்ல இருக்கிறதுக்கு சொந்தமா வீடு இருந்துட்டா சந்தோசமா இருக்கும்னு மருமக ஆசப்படறா. அதுக்கு சம்பத்துல குடும்ப செலவு போக சேமிச்ச பணம் பத்துல. நம்ம பூமிய வித்துக்கொடுத்திடலான்னு யோசன வந்ததால உங்க கிட்ட சொன்னா முடிச்சுக்கொடுப்பீங்கன்னுதான் உங்களப்பார்க்க வந்தோம்” என பேசினார் ராகவனின் தந்தை ராமசாமி.

“அதுக்கென்ன முடிச்சிட்டா போகுது. எவ்வளவு தேவைப்படுது?”

“இருபது தேவைப்படுது” என்றான் ராகவன்.

“இருபது வருசத்துக்கு முன்ன பையனுக்கு படிக்க பணம் வேணும்னு ஒரு ஏக்கராவே, அதாவது நூறு செண்ட் எனக்கு ஐம்பதாயிரத்துக்கு அதுவும் ரெண்டு வருசம் அக்ரிமெண்ட் போட்டுக்கொடுத்தீங்க. அக்ரி மெண்ட் டைம் முடியறதுக்குள்ளே பத்தாயிரமும்,ஐயாயிரமும் கொடுத்து அதே அக்ரி மெண்ல வரவு வச்சு,கடைசில எழுதும் போது மிச்சமிருந்த ஐயாயிம் கொடுக்கிறதுக்கு பதிலா ஒரு மாடு வேணும்னு கேட்டீங்கன்னு கொடுத்தேன். அந்தக்காலமெல்லாம் இப்ப மலையேறிப்போச்சு‌ .இப்ப நூறு மடங்கு அதிகமா,அதாவது ஐம்பது லட்சத்துக்கு நிற்க்காம உங்க சொத்து வித்துப்போகும். வித்துட்டு இடம் வாங்கறது போக,வீட்டையும் கொஞ்சமா லோன் போட்டு கட்டிப்போடுங்க “. என்றவர் வீட்டின் உள்ளே சென்று ஒரு மஞ்சள் நிற பையை எடுத்து வந்தார்.

“உங்க நல்ல நேரம். நேத்துத்தான் ஒரு பூமி வித்து ஐம்பது வந்தது. இத அப்படியே கொண்டு போங்க. பத்து ரூபா பேப்பர்ல அக்ரிமெண்ட் மூணு மாசத்துக்கு போட்டுக்கலாம். நாங்கூப்பிடும்போது வந்து அப்பாவ கையெழுத்து போடச்சொன்னீங்கன்னா போதும் “என்ற போது,அதற்க்கு சம்மதித்து பணத்தைப்பெற்றுக்கொண்டு,தந்தை கையெழுத்திட,ராகவன் சாட்சி எனுமிடத்தில் கையெழுத்துப்போட்டான்.

வந்த வேலை இவ்வளவு சுலபமாக முடிந்து,உடனே முழு தொகையும் கிடைக்குமென ராகவன் கற்பனையிலும் எண்ணிப்பார்க்கவில்லை.

வீடு கட்ட இடம் வாங்கி கிரையம் செய்து ஒரு வாஸ்து நாளில் வீடு ஆரம்பித்து, கட்டி முடித்து புண்ணியர்ச்சனை செய்து, குடி புகுந்த பின்,

காட்டு பூமி அக்ரிமெண்ட் டைம் முடிந்து ஆறுமாதம் கடந்த நிலையில், ஒரு நாள் கிரையம் செய்ய பரமானந்தத்திடமிருந்து அலைபேசியில் அழைப்பு வர, பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு தந்தையை அழைத்துச்சென்றான் ராகவன்.

அப்போது தங்களிடம் பூமி வாங்கிய பரமானந்தம் ஆடிகாரில் வந்து இறங்கியவர் ” வாங்க தம்பி. எங்கே அக்ரிமெண்ட் டைம் முடிஞ்சதால வராம இருந்திடுவீங்களோன்னு பயந்துட்டே வந்தேன். இன்னும் பழைய மாதிரியே சொன்ன சொல்லு மாறாம இருக்கறீங்க” என்றவர் தன்னிடமிருந்த பத்திரத்தை நீட்ட,இவர்களும் அவர் மீது உள்ள அதீத நம்பிக்கையில் பத்திரத்தை படித்துப்பார்க்காமலேயே கையெழுத்தும், சாட்சியும் போட, மூலப்பத்திரத்தையும்,ஆதார் எண்ணையும்,புகைப்படத்தையும் பெற்றுக்கொண்டு,கார் ஓட்டுனரை அழைத்து இவர்களை காரில் அழைத்துச்சென்று ஹோட்டலில் சாப்பிட வைத்து அழைத்து வரச்சொல்லிவிட்டு, பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு எதிரே இருந்த பத்திர எழுத்தர் அலுவலகத்துக்குள் சென்றார், முன்பு தானிய வியாபாரியாக இருந்து, தற்போது பூமி புரோக்கர் அவதாரமெடுத்துள்ள பரமானந்தம்.

ஹோட்டலுக்கு சென்று உணவருந்திவிட்டு பத்திரப்பதிவு அலுவலகம் வந்த ராகவனும் அவனது தந்தை ராமசாமியும் பதிவாளர் முன் கையெழுத்திட்டு,புகைப்படம் எடுத்தவுடன்,பரமானந்தம் கையெடுத்து கும்பிட்டு இவர்களை அனுப்பி விட்டு ஆடிக்காரில் ஆனந்தமாக புறப்பட்டார்.

அப்போது கல்லூரி நண்பன் கந்தனை அங்கே கண்டவுடன் பூரிப்படைந்த ராகவன் கைகுழுக்கிய போது ” நான் ரியல் எஸ்டேட் தான் பண்ணிட்டிருக்கிறேன். இங்க வந்து பத்திரத்தை படிச்சிட்டு போட்டோவைப்பார்த்தப்பதான் பூமி உங்களோடதுன்னு தெரிஞ்சுட்டேன். பாட்னர் பேருக்கு கிரையம் பண்ணினதால உள்ள வராம வெளிலயே இருந்துட்டேன். கிரையம் முடிஞ்சதும் நீங்க வெளில வந்ததும் பார்த்து பேசிடலான்னுதான் இங்கே காத்திட்டிருந்தேன். ரெண்டு கோடிக்கு முடிச்சிருக்கோம். புரோக்கர் பரந்தாமன் உங்களுக்கு ஒன்னே முக்கால் கொடுத்திருப்பாருன்னு நினைக்கிறேன்.” என்பதைக்கேட்ட போது ராகவனின் தந்தைக்கு மயக்கம் வர, தண்ணீர் முகத்தில் தெளித்து சரி செய்தனர்.

அலுவலகத்திலேயே முடங்கிவிட்ட தனக்கு உலக நடைமுறை தெரியாமல் ஏமாந்ததை எண்ணி வருந்தினான் ராகவன்.

“டவுன்ல கந்தன் ரியல் எஸ்டேட் என்னோடது தான். வீட்டு இடம் வேணும்னா சொல்லுங்க. கிழக்கு பார்த்த இடம் புரோக்கர் விலை ஏழுவரைக்கும் இருக்கும். உங்களுக்குன்னா புரோக்கருக்கு கொடுத்த மூணுக்கே கொடுக்கச்சொல்லறேன்” என்று கந்தன் சொன்ன போது, தான் வீடு கட்டி குடியிருப்பது கந்தன் கூறும் இடமென்பதையறிந்து, வாங்கியதிலும் அதிக விலை கொடுத்து,விற்றதிலும் குறைந்த விலை பெற்றதை நினைத்து, நிற்பது பாதையென்பதையும் மறந்து, மனச்சோர்வில் கீழே அமர்ந்து, மனவேதனையின் எல்லைக்கே சென்று கண்ணீர் சிந்தினான் ராகவன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *