எதிர்வீடு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 1, 2022
பார்வையிட்டோர்: 2,204 
 

அதிகாலை நேரம் . இருள் நீங்கி வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாகப் படர்ந்து கொண்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை, கொஞ்ச நேரம் தூங்கலாம் என்று பார்த்தால் வேதகோஷ்டிகளின் இனிமையான சப்தம் என்னை எழுப்பி விட்டது. என் கணவர் பக்கத்தில் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்தார். இடியே விழுந்தாலும் கலையாத கும்பகர்ணன் தூக்கம். நான் அவருக்கு நேர் எதிர் . சிறு ஓசை கேட்டாலும் எழுந்து விடுவேன்.

வாசல் கதவைத் திறந்து பார்த்தேன். எதிர்வீட்டில் நான்கு சாஸ்திரிகள் வேத பாராயணம் செய்து கொண்டிருந்தார்கள். வாசலில் பெரிய செம்மண் கோலம் போடப்பட்டிருந்தது. வீட்டைப் புதியதாக வாங்கியவர்கள் அதைப் புதுப்பித்து ஹோமம் செய்கிறார்கள். அன்று எதிர்வீடு மிகவும் கோலாகலமாயிருந்தது.

நாங்கள் குடியிருக்கும் ‘அபிநயா ஃபிளாட்ஸ்” கோடம்பாக்கத்தில் இருக்கிறது. கீழே நான்கு வீடுகள். முதல் மாடியில் நான்கு, இரண்டாவது மாடியில் நான்கு ஆக மொத்தம் பன்னிரண்டு வீடுகள். குடியிருப்புக்குள் நுழைந்ததும் இடது பக்கம் இரண்டு திண்ணைகள். காலை பத்து மணிக்கு அந்தத் திண்ணையில் குடியிருப்பிலுள்ள வேலைக்குப் போகாத பெண்கள் அமர்ந்து அரட்டைக் கச்சேரி நடத்துவார்கள். வயதான முதியவர்கள் மாலை நேரத்தில் அந்தத் திண்ணையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள். நான் கீழே குடியிருக்கிறேன். முதல் மாடியில் பட்டாபி சாஸ்திரிகள் அவர் மனைவி பத்மா, குழந்தை காஞ்சனா ஆக மூன்று பேர் கொண்ட குடும்பம். என் எதிர் வீடு ரொம்ப நாளாய் பூட்டியிருந்தது. போன மாதம்தான் விற்றுப் போனது.

அபிநயா ஃபிளாட்சில் உள்ளவர்கள் எல்லோரும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அன்பும் பண்பும் நிறைந்த மாந்தர்கள். ஒருவருக்கு ஒருவர் வலிய வந்து உதவி செய்வார்கள்.

நான் கதவை மூடிக்கொண்டு வீட்டுக்குள் வந்தேன். சிறிது நேரத்தில் என் கணவரும் எழுந்து பல் துலக்கிவிட்டு தேநீர் பருக வந்தார்.

“இன்று காலை எதிர்வீட்டில் பூஜை நடந்தது. வீட்டை வாங்கியவர்கள் குடி வரப் போகிறார்கள்”

“நல்ல செய்தி. ஆறு மாசத்துக்கு மேல் பூட்டியிருந்த வீட்டில் இனி ஆள் நடமாட்டம் இருக்குமென்று சொல். வருகிறவர்கள் நல்ல குடும்பமாய் இருக்க வேண்டும்”.

“ஆமாம். ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொள்ளலாம். எனக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது.”

”இன்று என்ன சமையல்?”

“ஞாயிற்றுக் கிழமை என்ன சமையல் செய்வேன் என்பது உங்களுக்குத் தெரியாதா? உங்களுக்குப் பிடித்த வெங்காய சாம்பாரும் உருளைக்கிழங்கு வறுவலும்தான்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது, ‘உள்ளே வரலாமா?’ என்று புன்னகையுடன் கேட்டுக் கொண்டே ஒரு நடுத்தர வயதுடைய அழகான பெண்மணி உள்ளே வந்தார். சிவப்பு கலர் பார்டர் வைத்த பச்சைப் புடவையும் அதற்குப் பொருத்தமாக அணிந்திருந்த பச்சை வண்ண ரவிக்கையும் அவர் அழகுக்கு அழகு செய்தன. காதிலும் கழுத்திலும் தங்க நகைகள் மின்னின.

“நாங்கள் எதிர்வீட்டை வாங்கியிருக்கிறோம். இப்போதுதான் பூஜை முடிந்தது. எங்கள் வீட்டில்தான் நீங்கள் எல்லாரும் உணவு உட்கொள்ள வேண்டும். இன்னும் அரைமணி நேரத்தில் போட்டுவிடுவார்கள். வீட்டில் சமையல் செய்யாதீர்கள் என்று சொல்லிப் போகவே வந்தேன்.”அன்புக் கட்டளையிட்டார். நான் என் கணவரைப் பார்த்தேன். அவர் கண்களில் சம்மதம் தெரிந்தது. நானும் தலையை அசைத்தேன். அந்தப் பெண்மணியை எனக்கு மிகவும் பிடித்துப்போய் விட்டது.

“சரி வருகிறோம். நீங்கள் அன்பாக அழைக்கும்போது மறுக்க முடியுமா? என் பெயர் ராதா. இவர் என் கணவர். பெயர் ராமன். ஒரு தனியார் நிறுவனத்தில் பணி செய்கிறார். என்னுடைய ஒரே பையன் அமெரிக்காவில் இருக்கிறான். வருடம் ஒரு முறை வருவான். நான் வீட்டிலிருக்கும் இல்லத்தரசி. எப்போதும் ஏதாவது கதைப் புத்தகம் படித்துக்கொண்டிருப்பேன். உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் தயங்காமல் கேளுங்கள். என்னால் முடிந்த உதவியைச் செய்கிறேன்” என்றேன்.

“தேங்ஸ்” என்று சிரித்துக்கொண்டே சொன்ன அந்தப் பெண், “என் பெயர் சித்ரா. என் கணவர் பெயர் ராஜன். அவர் தனியார் வங்கியில் பணி செய்கிறார். எங்களுக்கும் ஒரே பையன். அவனுக்கு பத்து வயது. அவன் பெயர் மாதவன். கே கே நகரில் ஒரு பள்ளியில் படிக்கிறான். அவனைப் பற்றி அப்புறம் சொல்லுகிறேன்” என்றாள்.

என் கணவர் சிரித்துக்கொண்டே, “எதிர் வீட்டில் யாரும் இல்லையே என்று கவலைப் பட்டேன். ராதா உங்களுக்கு நல்ல தோழியாக இருப்பாள்” என்றார்.

“இலை போட்டாகிவிட்டது. எல்லாரும் சாப்பிட வாங்கோ” என்று எதிர் வீட்டிலிருந்து ஒரு மாமா உரக்கக் கத்தினார். சித்ரா எங்கள் வீட்டை விட்டு அவசரமாய்க் கிளம்பினார். அன்று எதிர் வீட்டில்தான் நானும் என் கணவரும் அறுசுவை உணவு திருப்தியாக உட்கொண்டோம்.

மாலை நேரத்தில் எதிர் வீட்டில் சாமான்கள் வந்திறங்கின. சித்ராவும் அவள் கணவரும் அதை எடுத்து வைக்க வேண்டிய இடத்தில் வைத்து வீட்டை அழகு படுத்தினார்கள். இரண்டு நாட்கள் கழித்து மாடி வீட்டில் உள்ள பத்மா என்னிடம் வலிய வந்து பேசிக் கொண்டிருந்தாள். அவள் சுபாவமே அதுதான், ஏதாவது வேலையிருந்தால் தானே வந்து பேசுவாள். இல்லாவிட்டால் கண்டுகொள்ள மாட்டாள். சில சமயம் மனம் காயம்படும்படி பேசி விடுவாள். மற்றபடி அவள் நல்லவள்தான். அப்போது சித்ராவும் என் வீட்டுக்குள் வந்தாள்.. நான் பத்மாவை சித்ராவுக்கு அறிமுகம் செய்து வைத்தேன். என் பெயர் பத்மா. என் கணவர் பட்டாபி சாஸ்திரிகள் நன்கு வேதம் படித்தவர். வைதீகம் தான் அவர் தொழில் என்று பத்மா தன்னைப் பற்றிக் கூறினாள். அந்தச் சமயம் பட்டாபி சாஸ்திரிகள் மோட்டார் பைக்கில் வந்தார். அவர் பைக்கை நிறுத்திவிட்டு எங்கள் அருகில் வந்தார். பத்மா தன் கணவரை சித்ராவுக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.

கம்பீரமான குரலில் ”வணக்கம்” சொன்ன பட்டாபி சாஸ்திரிகளைப் பார்த்து சித்ரா இருகரம் கூப்பி வணங்கினாள். அடுத்த நாள் சித்ராவின் வீட்டுக்குப் போயிருந்தேன். சன்னலுக்குத் திரைச்சீலை போட்டு வீடு அழகுடன் காட்சியளித்தது. மாதவன் கையில் ஒரு புத்தகம் வைத்து அமர்ந்திருந்தான். பால் வடியும் முகம் நான் அவனைப் பார்த்தேன். அவன் கண்கள் என்னை நேராகப் பார்க்கவில்லை.

‘உன் பெயர் என்ன? என்ன படிக்கிறாய்”?

அவன் பேசாமல் சிரித்தான்.

“என் கூட பேச மாட்டாயா?”

“மாதவன் பேச மாட்டான். அவனுக்குப் பேச்சு வராது” என்ற சித்ரா, “அவன் சின்ன வயதிலிருந்தே ஆட்டிசம்’ என்னும் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறான். அவனுக்கு நாம் பேசுவது கேட்கும். ஆனால் பேசமாட்டான். இரண்டு வயது வரை எதுவும் பேசாததால் டாக்டரிடம் காண்பித்தோம் . அவர் அவனுக்கு ‘ஆட்டிசம்’ என்று சொல்லிவிட்டார். அவன் உலகமே வேறு. அவனைப் போன்ற ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் படிக்கும் ஒரு பள்ளியில் படிக்கிறான். ஏதாவது ஒரு புத்தகத்தைக் கையில் வைத்திருப்பான். சிறிது நேரம் கழித்து அதைக் கிழித்து விடுவான். திடீரென்று வேகமாய் ஓடுவான். நாங்கள் அவனைப் புரிந்துகொண்டு அன்பை ஊட்டி வளர்க்கிறோம்.’ என்று மென்மையாகச் சொன்னாள்.

அவன் சிறப்புக் குழந்தை என்று அறிந்ததும் எனக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது.

“உங்களுக்கு மாதவன் பேச முடியாமல் இருக்கிறானே என்று குறையாக இல்லையா? அவன் எப்போது பேசுவான்”?

“என்ன செய்ய முடியும். ஆரம்பத்தில் துன்பமாக இருந்தாலும் யோசித்துப் பார்த்ததில் பிரச்சனையைக் கண்டு வருந்துவதைவிட எங்களைச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்டோம். அவனுடன் வெகுநேரம் செலவழிக்கிறோம். நன்றாகப் பேசும் குழந்தைகளைப் பார்த்து மனம் சஞ்சலப்படாமல் இருக்கப் பழகி கொண்டோம். அவன் கடவுளுடைய பரிசு கடவுள் கொடுத்ததை ஏற்றுக் கொண்டோம். மாதவன் மேல் பிரத்யோகமாகக் கவனம் செலுத்துகிறோம். தினந்தோறும் மாலை ஒரு டீச்சர் வந்து வந்து ஐந்து மணியிலிருந்து ஏழு மணிவரை பாடம் அவனுக்குப் கற்றுக்கொடுத்துவிட்டுப் போகிறார். டாக்டரிடம் மாதம் ஒருமுறை காண்பித்து அவர் சொல்லியபடி மருந்து கொடுக்கிறோம். பெற்றவர்கள்தானே பெற்ற குழந்தையைச் சுமக்க வேண்டும். அவன் எங்களுக்குச் சுமையாய்த் தெரியவில்லை.

என் கணவர் ராஜன் அவருக்குத் தெரிந்த தஞ்சாவூர் ஜோசியரிடம் அவன் ஜாதகத்தைக் காண்பித்திருக்கிறார். அவர் ஒரு வருடத்துக்குள் விடுவான் என்று எழுதிக் கொடுத்திருக்கிறார். மாதவன் கூடிய விரைவில் பேசுவான் என்னும் நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. நம்பிக்கைதானே வாழ்க்கை சிரித்துக் கொண்டே கூறினாள்.

“உங்கள் நம்பிக்கை கூடிய விரைவில் உண்மையாகிவிடும். நான் சீர்டி சாய்பாபாவிடம் பிரார்த்தனை செய்கிறேன், பாபாவின் அருள் அவனுக்குக் கண்டிப்பாய் இருக்கும்” என்று சொல்லி மாதவனைப் பார்த்தேன். அவன் எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தான்.

அபிநயா குடியிருப்பில் தினந்தோறும் காலை பத்து மணி அளவில் கணவர்கள் வேலைக்குப் போனதும் சில பெண்கள் ஒன்று கூடி அரட்டைப் பேச்சு. நான் அந்தக் கும்பலில் சேர மாட்டேன். சித்ராவும் அதில் சேரமாட்டாள். அவளுக்கு ராஜேஷ் குமார் நாவல் என்றால் மிகவும் பிடிக்கும். என்பதால் எப்போதும் அவருடைய ஏதாவது நாவலைப் ஒரு படித்துக்கொண்டிருப்பாள். வித்தியாசமாயிருந்த அவளை எனக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. நாளடையில் எங்கள் நட்பு வலுப்பெற்றது. அந்நியர்களாயிருந்த நாங்கள் அன்யோன்யமாய் ஆகிவிட்டோம். உடன்பிறவாச் சகோதரிகளாகப் பழகினோம். சித்ரா என்னை ‘அக்கா’ என்று அழைக்க ஆரம்பித்தாள். நானும் எனக்குத் தெரிந்தவர்களிடம் அவள் “என் தங்கை போல” என்று அறிமுகம் செய்தேன். நான் எப்போது வேண்டுமானாலும் அவள் வீட்டுக்குள் நுழைவேன். அவள் எப்போது வீட்டுக்குள் வேண்டுமானாலும் என் உரிமையோடு நுழைவாள். எதிர் வீடு, என் வீடு என்ற பாகுபாடு எங்களுக்குள் மறைந்துவிட்டது. மாதவனும் என்னிடம் நன்றாகப் பழகினான். ஒரு நாள் நான் சித்ராவின் வீட்டுக்குள் சென்றபோது மாதவன் என்னைப் பார்த்து கர்ஜித்தான். என் கையைப் பிடித்து சமையல் அறைக்கு அழைத்துச் சென்றான். சாப்பிடும் தட்டைக் காண்பித்தான். அவனுக்குப் பசி என்பதைப் புரிந்துகொண்டு தட்டில் கொஞ்சம் உணவை வைத்து அவனுக்கு ஊட்டினேன். மருந்து வாங்கப் போயிருந்த சித்ரா வீட்டுக்குள் நுழையும்போது சாப்பிட்டுக் கொண்டிருந்த மாதவனைப் பார்த்து முகம் மலர்ந்தாள். மாதவனுக்கு உணவு கொடுக்க வேண்டுமே என்று அவசரம் அவசரமாக வந்தேன். நல்ல வேளை, நீங்கள் அவனுக்கு மாதவன் புத்திசாலி என்ற அவள் முகத்தில் பெருமிதம் தெரிந்தது. என் கையைப் பிடித்துக் கொண்டு, “ரொம்ப நன்றி அக்கா. மாதவன் உங்களிடம் வித்தியாசம் பார்க்காமல் பழகுகிறான். அவன் வேறு யாரிடமும் இதுபோல் இருந்ததில்லை” உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்கச் சொன்னாள்.

“அசடே! எதற்கு கண் கலங்குறே. மாதவன் என் பிள்ளை மாதிரி.”

மாதவன் எப்போது வேண்டுமானாலும் என் வீட்டுக்குள் நுழைவான். நான் அவனுக்குப் பிஸ்கட் தருவேன்.

நான் சமையலறையில் வேலையாக இருந்தால் என் கை மணிக்கட்டைப் பிடித்து பிஸ்கட் வேண்டுமென்பதைத் தெரியப்படுத்துவான். அவனுடன் உட்கார்ந்து கற்றுத் தருவேன். அவனுக்குக் பாடம் கற்றுக்கொடுக்கும்போது வாழ்க்கை என்னும் பள்ளியில் நிறையக் கற்றுக்கொண்டேன்.

ஒரு நாள் காலை நான் பூசையிலிருக்கும்போது சித்ரா மாதவனுடன் வந்தாள். புத்துணர்ச்சியுடன் காணப்பட்டாள். நெற்றி வகிட்டில் சிந்துரம் வைத்துப் பவித்திரமாய் தோன்றினாள்.

“கோவிலுக்குப் போகிறாயா ?” என்று கேட்டேன்

”ஆஸ்பிட்டல் போகிறேன். பட்டாபி சாஸ்திரிகள் ஒரு கல்யாணம் செய்து வைக்கப் போயிருந்தபோது ஒரு டாக்டரைப் பார்த்தாராம். அவர் லண்டனில் ஆடிசம் நோயைப் பற்றிச் சிறப்புப் பயிற்சி பெற்றவர். அண்ணா நகரில் ஆஸ்பத்திரி வைத்திருக்கிறார். அவரிடம் காண்பிக்க மாதவனை அழைத்துக்கொண்டு போகிறேன்”.

“ரொம்ப நல்லது, பட்டாபி சாஸ்திரிக்கு நல்ல குணம். அவருடைய உயர்ந்த பண்பை பாராட்ட வேண்டும். மாதவனுக்கு நல்ல நேரம் பிறந்து விட்டது .உடனே போ. உன் வீட்டைப் பார்த்துக்கொள்கிறேன்” என்றேன்.

அன்று மாலை சித்ரா ஆஸ்பத்திரியிலிருந்து திரும்பி வரவில்லை. டாக்டர் மாதவனுக்கு அறுவை சிகிச்சை செய்திருக்கிறார். அவன் வீட்டுக்கு வர வர இரண்டு நாள் ஆகுமென்று வாட்ச்மேன் சொன்னார்.

அடுத்த நாள் காலை நான் கடவுளை வழிப்பட்டுக் கொண்டிருக்கும்போது மாதவனின் அப்பாராஜனிடமிருந்து போன் வந்தது. ‘அறுவை சிகிச்சை முடிந்துவிட்டது உடனே ஆஸ்பத்திரிக்கு வாங்க’ என்பதைத் தவிர வேறெதுவும் அவர் சொல்லவில்லை.

மாதவனுக்கு ஏதாவது ஆகியிருக்கும் என்று என் மனசில் கலக்கம். உடனே ஆட்டோ பிடித்து அண்ணா நகரை அடைந்தேன். இரண்டாம் மாடியில்

மாதவன் இருக்கும் அறைக்குள் நுழைந்தேன். மாதவன் கட்டிலில் படுத்திருந்தான். அவன் பக்கத்தில் அமர்ந்திருந்த சித்ராவின் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்து கொண்டிருந்தது. ராஜன் என்னைப் பார்த்து ‘வாங்க சித்ரா’ என்றார். சித்ராவைப் பார்த்து எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. மாதவனுக்கு ஏதாவது என்ற கேள்விக்குறியுடன் ராஜனைப் பார்த்தேன்.

அற்புதம் நிகழ்ந்துவிட்டது. ‘அம்மா’ என்று குழந்தை பேசிவிட்டான்”.

“மாதவன் பேசிவிட்டானா? கடவுளுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும். அதுசரி, சித்ரா ஏன் கலங்கியிருக்கிறாள்?” என்று மாதவனைப் பார்த்துக்கொண்டே கேட்டேன்.

அவன் விழிகள் என்னை நேருக்கு நேராகப் பார்த்து, “நான் பேசிவிட்டேன். அம்மா பேசாமல் அழுகிறாள்” என்றான் மழலைக்குரலில்.

“கண்ணா நீ நல்லாயிட்டே” என்று மகிழ்ச்சியுடன் மாதவன் கன்னத்தைத் தடவி முத்தமிட்டேன். “மிகுந்த சந்தோஷத்தால் கண்ணீர் விடுகிறாயா சித்ரா? உன் மனவேதனைக்கு விடிவுகாலம் பிறந்துவிட்டது என்றேன்.

மாதவன், சித்ராவின் கழுத்தை இறுக்கக் கட்டிக் கொண்டு,”அம்மா பேசிவிடு. இல்லாவிட்டால் உன்னுடன் பேச மாட்டேன்” என்றான்.

“மாதவா, உங்கூட பேசிண்டே இருப்பேனடா, என் செல்லமே!” சித்ரா உச்சி மோந்து அவன் நெற்றியில் இதழ் பதித்தாள். அளவு கடந்த மகிழ்ச்சியால் எனக்கும் பேச வரவில்லை. என் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் ஆறாகப் பெருகியது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *