(1946ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“வேலுப்பிள்ளை, நாடி நல்லாய் விழுந்து போச்சு. வயதுமோ பின்னிட்ட வயது; இன்னும் இரண்டு மணித்தியாலத்திற்குள் எல்லாம் முடிந்து போய்விடும். மனதைத் தேற்றிக்கொள்.”
இந்தக் கொடிய தீர்ப்பைத் தன் இளம் வயதிற்கு உரிய யோசனை யின்மையோடு அநியாயமாக வீசிவிட்டு, அதன் விளைவைப் பார்க்க விரும்பாதவன் போல் வைத்தியன் சால்வையை உதறித் தோளிற் போட்டுக்கொண்டு வீட்டு வாசலைக் கடந்து வேகமாக நடந்தான்.
வேலுப்பிள்ளை அசந்துபோய்த் திண்ணையிற் சாய்ந்தான் …… மனத்தின் உந்துதல் இல்லாமலே அவனுடைய கை அருகில் கிடந்த காம்புச் சத்தகத்தை எடுத்து யந்திரம் போலப் பனை ஓலைச் சட்டங்களை வார ஆரம்பித்தது. உள்ளே அவள் – அவனுடைய மனைவி வாங்குக் கட்டிலின் மேல், உடலின் பலம் எல்லாம் குன்றி, முகம் களையிழந்து, கண்கள் பஞ்சாடிக்கிடந்தாள். எந்தக் கஷ்டமான வேலையாயினும் பின்வாங்காமல், நாற்பது ஆண்டுகளுக்கு மேல் பம்பரம் போலச் சுழன்று கொடுத்த அவளுடைய ‘வரிச்சுத் ‘ தேகம் இன்று அசந்துபோய்க் கிடந்தது. அவளுடைய பிராணன் கொஞ்சம் கொஞ்சமாகப் போய்க் கொண்டிருந்தது. அதை அறிந்து கொள்வதற்கு வைத்தியன் தேவையில்லை. வேலுப்பிள்ளையின் வீட்டில், அவனுடைய பாதுகாவலின் கீழ் அவன் மனைவியினுடைய உயிரை யமன் கொஞ்சம் கொஞ்சமாக இழுத்துக் கொண்டிருந்தான். யமனுடைய சோரத்தை அறிந்தும் அவனைத் தடுத்து நிறுத்த முடியவில்லை…
அவளுடைய மக்களும் அறுவர் வாங்குக் கட்டிலைச் சுற்றி வளைத்துக் கொண்டு செயலற்று நின்றனர். அவளுக்கு – ஈன்று வளர்த்த அன்னைக்கு – சாவதற்கு உதவி செய்யத்தான் அவர்களால் முடிந்தது. ஒருத்தி நெஞ்சைத் தடவி விட்டாள், இன்னொருத்தி வாயில் பால் வார்த்தாள்…யார் இருந்து என்ன?
அடுத்த வீட்டு அன்னமுத்து வண்ணான் கொண்டு வந்தபடி ஒரு சேலை உடுத்து, கழுத்தில் புதிதாக மினுக்கிய அட்டியலும் கையில் காப்புகளும், எண்ணைய் தேய்த்து வாரி முடித்த கொண்டை முதுகில் புரள அசைந்து அசைந்து வந்தாள். வேலுப்பிள்ளைக்கு அவளைக் காண ஆத்திரமாக வந்தது. சாகமுன்னுக்கே செத்தவீடு கொண்டாட வாறாள் இந்தத் தேவடியாள்!’
“அம்மான், மாமிக்கு எப்படி?”
“அப்பிடித்தான் போய்ப்பார்” என்று அலுத்து விட்டு, வேலுப்பிள்ளை தன் புடலங்காய் போன்ற கால்களை மடக்கி நாடியின் கீழ் வைத்துக் கொண்டு மறுபடி தன்னுள் ஆழ்ந்தான்…
திடீரென்று நாற்பது வருடங்களுக்கு முன் தெய்வானை மணப் பெண்ணாய் முதல் முதல் ‘தாறு பாய்ச்சிச் சேலை உடுத்து மருளும் கருவிழிகளால் அவனையும் நிலத்தையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டு, நாணிக் கோணி நின்ற காட்சி அவனுக்கு ஞாபகம் வந்தது. அன்று முதல் இன்று வரை அவன் அவளாய், அவள் அவனாய் ஒன்று பட்டு, உழைப்பு நிறைந்த ஒரு கஷ்ட ஜீவனத்தின் ஒவ்வொரு அலுவலிலும் சமபங்கு எடுத்துக் கொண்டு வாழ்ந்த வாழ்வு!
காதல் என்ற வார்த்தை அவர்களுக்குத் தெரியாது. விவாகரத்து, கர்ப்பத்தடை முதலியனவற்றைப் பற்றி அவர்கள் கேள்விப்பட்டதே இல்லை… ஆனால் வாழ்க்கை , கொடிய வறுமையிலும் செம்மையாய், பிணக்குகள் தடி அடிச்சண்டைகளுக்கிடையிலும் ஆழ்ந்த அனுதாபமும் அன்பும் கொண்டதாய், பூவுலக மோட்சமாய்ப் பரிமளித்தது… நாற்பது வருஷம் – நாற்பது நாள்!
“அப்பு, ஆச்சிக்கு ஒருமாதிரிக்கிடக்கு, வந்து பாரெணை” என்று அவனுடைய இளைய மகள் பர்வதம் வாசலில் வந்து சொன்னாள்.
“ஐயோ! வந்திட்டுது, முடியப்போகுது” என்று நினைத்துக் கொண்டு வேலுப்பிள்ளை எழுந்து உள்ளே போனான். தெய்வானையின் கால்கள் நேராக நீட்டப்பட்டு, கைகள் மார்பின் மேல் பொருத்தப் பட்டிருந்தன, சாவுக்கு ஆயத்தமாய். “அன்னமுத்தியின் வேலை” என்று அவன் நினைத்தான். செயலற்றுக் கிடக்கும் மனைவியின் உடலை உற்றுப் பார்த்தான்….மூச்சு வேகமாக வந்து கொண்டிருந்தது. கழுத்துக் குழியிலே ஏதோ படபடத்தது. ‘ஐயோ ஐயோ’ என்று அவன் உள்ளம் செயலற்று அலறியது. மறுகணம் ‘தெய்வீ தெய்வீ’ என்று கெஞ்சியது…
தெய்வானையின் கண்கள் பாதி மூடியபடி கூரையில் பதிந்திருந்தன. அந்தகாரமான இருட்கடலின் மத்தியில் எப்பொழுதோ இறந்துபோன அவளுடைய தாயின் முகம் சொல்லொணா இளமையும் அழகும் கொண்டு புன்னகை புரிந்தது. அந்த இருட்கடலைத் தாண்டி அந்த முகத்தைப் பிடித்துவிட வேண்டுமென்று தெய்வானை தவித்தாள். அவளுடைய ஒடுங்கும் சிந்தையில் ஏதோ அர்த்தமற்ற வார்த்தைகள் இடைவிடாது ஒலித்துக் கொண்டிருந்தன. ”ஆச்சி பூச்சி அம்பட்ட வளவில் முள்ளுச்சூப்பி… ஆச்சி பூச்சி”
மூவுலகும் கொள்ளாத ஒரு கருணை தேங்கி நின்ற அன்னயிைன் முகம் தன்னுடன் ஒரு ஒளி வட்டத்தையும் கொண்டு இருட்கடலைத் தாண்டித் தெய்வானையை நோக்கி வந்துகொண்டிருந்தது. “…ஆச்சி பூச்சி அம்பட்ட வளவு….”
வேலுப்பிள்ளை தனக்குத் தெரிந்த ஒரு திருவாசகத்தைப் பாட ஆரம்பித்தான். மனிதர் சாகும் தறுவாயில் தேவாரம் திருவாசகம் பாடவேண்டும் என்பது அவனுக்கு ஞாபகம் வந்தது.
“அம்மையே அப்பா”… அவனுடைய குரலிலே சிந்த முடியாத ஒரு கண்ணீர்க் கடல் தேங்கி நின்றது.
தெய்வானைக்குத் தன்னை மறந்த ஒரு ஆனந்தம். “ஆச்சி” பூச்சி….! இதோ அன்னை மிக அருகில் வந்துவிட்டாள். இருட்கடல் மறைந்து முழுவதும் ஒளிக்கடலாயது.
“ஆச்சி ஆச்சி என்ரை ஆச்சி” அன்னையின் கண்கள் தெய்வானையை அகன்று மருட்டி அழைத்தன…இதோ…
“ஆச்சி!”
“என்ரை ராசாத்தி போட்டியோ!” என்று வேலுப்பிள்ளை புரண்டழுதான். “ஆச்சி ஆச்சி” என்று மக்கள் கதறினர். அன்னமுத்து தான் மனப்பாடம் செய்து வைத்திருந்த ஒப்பாரி வரிசைகளைக் கண்ணீர் இல்லாமல் ராகத்துடன் எடுத்துவிட்டாள்.
தெய்வானைக்கு அறிவு தெளிந்த பொழுது திடீரென்று விலங்குகள் தெறித்து, சிறைச்சாலைக் கதவுகள் தகர்ந்து விடுதலை கிடைத்து விட்டது போல் தெரிந்தது. ஆ! என்ன விடுதலை! அவள். தான் நினைத்தபடி மனோ வேகமாக எங்கும் போக முடிந்தது. அவளுடைய உடல் காற்றாகிவிட்டதோ? அல்லது உடலே இல்லையா? அவளுக்கு இரவு பகல் தெரியவில்லை . அவளுக்குக் குன்றாத இளமையும், வற்றாத ஊக்கமும், எதையும் கிரகித்து அறிந்து கொள்ளும் அகன்ற மனமும் வாய்த்து விட்டது போலத் தெரிந்தது. தன்னுள்ளே ஒரு எல்லையற்ற ஆனந்த சுதந்தர உணர்ச்சி ததும்பி வழிந்து கொண்டிருந்தது…
எண்ணரிய யோசனை தூரத்திற்கு அப்பால், பூவுலகில் இருந்து ஒரு தீனமான குரல் அவளுடைய இன்பத்தினிடையில் வந்து புகுந்து அவளுடைய நிம்மதியை குலைத்தது. “தெய்வீ தெய்வீ ” என்று அலறும் அந்தக் குரலில் நிறைந்திருந்த நம்பிக்கை இழந்த ஏக்கம் அவளுக்கு பூலோக வாசனையை ஊட்டி பிரிவுத்தாக்கத்தைத் தோற்றுவித்தது. தன்னுடைய கணவன் துணையிழந்து நாதியற்றுக் கலங்குகிறான். தன்னை நினைத்து ஏங்குகின்றான் என்பது அவளுடைய பரந்த மனதில் தெளிவாகப்பட்டது. ஓடிப்போய் அவனை அணைத்துக் கொள்ள வேண்டும் என்று அவள் உள்ளம் துடித்தது. ஆனால் அவளால் அவனை அணுக முடியவில்லை . அவன் மனித உடற் பிணிப்பிலே கட்டுண்டு கிடந்தான்…
கனவுகளில் மட்டும் அவன் தன்னை அறிந்து கொள்ளும்படி செய்ய முடிந்தது. ஆனால் அவைகளினால் அவளுடைய தாகம் அடங்கவில்லை . வைக்கோல் அடைத்த உயிரற்ற கன்றின் உடலைக் கண்டு இரங்கும் பசுப்போல் ஒரு ஊமைத்துயரம் அவளை வாட்டியது. அவன் என்று தன்னுடன் வருவான் என்பதே அவளுக்குச் சதா ஆவல். அவனது துணை இன்றி எந்த இன்பமும் நில்லாது என்று அவள் கண்டுகொண்டாள்.
தெய்வானை இறந்த தினத்தில் இருந்து வேலுப்பிள்ளை வாழ்விலே பிடிப்பை இழந்து விட்டான் . “தெய்வீ தெய்வீ” என்று உள்ளுர எந்நேரமும் அலறிக் கொண்டிருந்தான். அவளுடன் தான் வாழ்ந்த வாழ்க்கையை முதலில் இருந்து நினைத்து, நினைத்து ஏங்குவதே அவனுக்குத் தொழிலாய்ப் போய் விட்டது. ” தெய்வி தெய்வி.” இடையிடையே அவளைக் கனவிற்கண்டு படிப்படியாக அவன் ஏக்கம் அதிகரித்தது.
“அப்பு என்னோடை வந்து கொஞ்ச நாளைக்கு இரென். எனக்கும் துணையாய் இருக்கும். உனக்கும் பிராக்காய் இருக்கும்” என்று அவனுடைய இரண்டாவது மகள் வள்ளியம்மை அழைத்தாள். இடம் மாறினால் ஒருவேளை அவனுடைய ஏக்கம் குறையலாம் என்று அவள் நினைத்தாள்.
“வேண்டாம் மேளே, நான் இங்கினைதான் கிடக்கப் போறேன்” என்று அவன் மறுத்துவிட்டான். நாளடைவில் அவன் எதிலும் பற்று அற்று ஒரு நடைப்பிணம் ஆகிவிட்டான்…மூன்று மாத காலத்திற்குள் அவனுடைய அறுபது வயது தொண்ணூறு வயதாகியது…
“கிழவன் படுக்கையாய் விழுந்திட்டுது அதுகும் போகப் போகுது போலை” என்று அன்னமுத்து தன் கணவனுக்குச் சோறு பரிமாறிக் கொண்டே சொன்னாள்.
“ஓமாக்கும் என்ன இருந்தாலும் கிழவனும் கிழவியும் நல்ல ஒற்றுமையாய் இருந்தவை…” என்று பொன்னம்பலம் இழுத்தான்.
வேலுப்பிள்ளை பிரக்ஞை இல்லாமல் அதே வாங்குக்கட்டிலிற் கிடந்தான். அவனுடைய மக்கள் அறுவரும் மீண்டும் வந்து கூடினர். “வாத ஜன்னி – தள்ளாத வயது இன்றோ நாளையோ” என்று வைத்தியன் கையை விரித்துவிட்டான். அன்னமுத்து கழற்றி வைத்திருந்த அட்டியலை மினுக்கி அணிந்து கொண்டு வந்து சேர்ந்தாள்.
கனவோ உண்மையோ என்று சொல்ல முடியாதபடி தெய்வானையின் உருவம் அவ்வளவு தெளிவாக வேலுப்பிள்ளையின் கண்ணெதிரில் மின்னிக் கொண்டிருந்தது. தன் உடலை அவனுக்கு முதல் அர்ப்பணம் செய்த பொழுது அவள் முகத்திலும் உடலிலும் காணப்பட்ட சோக – நாண – மகிழ்ச்சி இப்பொழுது காணப்பட்டது. கைகளை நீட்டி அவளை அப்படியே அணைத்துக் கொள்ள வேண்டும் போல் வேலுப்பிள்ளைக்குத் தோன்றியது. அவனுடைய இடக்கைச் சுட்டுவிரல் மட்டும் மெதுவாக ஒரு லயத்திற்கு அசைந்து கொண்டிருந்தது. உடலில் வேறெவ்வித அசைவும் இல்லை.
அவனுடைய இளைய மகன் ராமலிங்கம் திருவாசகம் பாடினான். வள்ளியம்மை திருநீற்றை அள்ளி வேலுப்பிள்ளையின் நெற்றியில் பூசினாள்.
சட்டென்று வேலுப்பிள்ளையின் கண்ணெதிரில் கோரமான இருள் சூழ்ந்தது. தெய்வானையைக் காணவில்லை…அவன் வாய்விட்டு அலறினான்.
“தெய்வீ.!” என்று ஒரே பாய்ச்சலில் இருட் கடலைத் தாண்டிவிட்டான்!
அவனுடைய பெண் மக்கள் “அப்பூ ஊ! அப்பூ ஊ!” என்று அலறினர். அன்னமுத்து சாவதானமாகப் பிணத்தின் கால்களை நீட்டிப் பெருவிரல்களைச் சேர்த்துக் கட்டிவிட்டு, “கண்டியிலே காத்தடிக்க, கைவிளக்கு நூந்தல்லோ ஒ ஒ ஒ!” என்று ஆரம்பித்தாள்.
– மறுமலர்ச்சி – சித்திரை 1946.
– மறுமலர்ச்சிக்கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 1997, ஈழத்து இலக்கியப் புனைகதைத் துறையின் மறுமலர்ச்சிக் காலகட்டத்துச் சிறுகதைகள் இருபத்தியைந்து 1946 – 1948, தொகுப்பாசிரியர்: செங்கை ஆழியான் சு. குணராசா, வெளியீடு: கல்வி, பண்பாட்டு அலுவல்கள், விளையாட்டுத்துறை அனமச்சு, திருகோணமலை
– ஈழத்துச் சிறுகதைக் களஞ்சியம், முதற் பதிப்பு: நவம்பர் 2019, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வடக்கு மாகாணம்.