தின/வார இதழ்: தினகரன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 19, 2016
பார்வையிட்டோர்: 13,847 
 

“”அப்பொழுது நீ மகிழ்ச்சியாயிருக்கிறாய் என்று சொல்லு” என்றான் வித்யாசாகர்.

“”ஆமாம்” என்றேன் நான்.

அவன் தன்னுடைய கனத்த வலது கையால் முகத்தை மூடிக்கொண்டான். இடது கண்ணால் என்னை உற்று நோக்கினான். அவன் என்னை அப்படிக் கூர்ந்து பார்க்கும்போதெல்லாம் எனக்கு உடம்பு குறுகுறுத்தது. அவனை நான் கடைசியாகப் பார்த்து பன்னிரண்டு வருஷங்கள் ஆகிவிட்டன.

மகிழ்ச்சி

எங்கள் கல்லூரியில் அவன் மாணவர் தலைவராக இருந்தான். நான் தமிழ் மன்றத்தின் காரியதரிசி.

இப்பொழுது அவன் மாறிப் போயிருந்தான். அவன் தேகத்தில் சதைப்பிடிப்பு கூடியிருந்தது. ஓர் அழகும் அமைதியும் அவனிடம் வந்து சேர்ந்திருந்தன. ஆனால் கண்கள் மட்டும் அப்படியே ஒளி உள்ளவையாக விளங்கின.

அவன் அறையின் பெரிய ஜன்னல்களின் கண்ணாடிக் கதவுகளுக்குப் பின்னால் நகரத்தின் வாகன ஓட்டம் நன்கு புலப்பட்டது.

நான் ஏன் அவனைக் காண வந்தேன். எனக்கே புரியவில்லை. நான் என் அலுவலகம் சம்பந்தப்பட்ட பயிற்சி ஒன்றின் நிமித்தம் டெல்லி வந்திருந்தேன். எனக்கு நேரம் கிடையாது. இந்த வழியாகப் போனபோது அவன் இத்தனை பெரிய செய்தித்தாளின் ஆசிரியராகப் பணியாற்றுவது நினைவுக்கு வரவே, அவனைப் பார்க்கத் தோன்றியது.

என்னை உள்ளே அழைத்தது எது? நாங்கள் மாணவர்களாக இருந்தபொழுது ஏற்பட்ட பந்தமா? அவன் அன்றைக்கே எங்கள் ஆதர்ச தலைவன் என்பது இன்று சமூக அளவில் நிரூபிக்கப்பட்டதால் ஏற்பட்ட பெருமிதமா? அவன் தாத்தா ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி என்பதால் அவனைப் பற்றி எங்களுக்கிருந்த எதிர்பார்ப்பு என்னுள் ஏற்படுத்தியிருந்த மரியாதையா?

நான் உள்ளே நுழைந்து அவனை வணங்கினதும் அவன் நிஜமாகவே மகிழ்ச்சியடைந்தது எனக்குப் புரிந்தது. என் கைகளை நீண்ட நேரம் பற்றி குலுக்கினான். அந்தக் குலுக்கலில் அவை வெள்ளையாய், ரத்தம் சுண்டிப்போய், மரத்துப் போய்விட்டன.

அறைக்குள் பெரிய வலுவான கரடிபோல உலா வந்தான். எங்கள் மாணவப் பருவத்தை நினைவுகூர்ந்தான். நான் டெல்லிக்கு வந்த காரியம் பற்றி விசாரித்தான். தான் பன்னிரண்டு வருடங்களில் ஆற்றிய சாதனைகளை எடுத்துச் சொல்லத் துவங்கினான். அவன் கால் மணி நேரம் பேசிக்கொண்டே போனான். நான் அவனுக்கு எதிரில் இருந்த நாற்காலியில் சாய்ந்தபடியே வினோதமான உணர்ச்சிக்கு ஆளானேன்.

வாழ்க்கையில் இப்படி தாங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு காரியத்திலும் வெற்றி பெறுபவர்கள் எங்கிருந்து உபரி சக்தி பெறுகிறார்கள் என்று நான் எண்ணத் துவங்கினேன்.

வித்யாசாகர் அலுவலக அறையே அவன் வெற்றியைப் பறைசாற்றியது. பத்தடிக்கு பத்தடி பளபள மேஜை. அதன்மீது இரண்டு தொலைபேசிகள். குளிர் பானம் கொண்டு வர அழகான வட இந்திய பெண் காரியதரிசி. தெருவைப் பார்த்தபடி பெரிய ஜன்னல்கள், அலங்கார விளக்குகள், புத்தக அலமாரி. தரையில் நீல நிறத்தில் ரத்தினக் கம்பளம். அவன் மேஜையின் பக்கவாட்டில் இந்த வருடம் மீதி நாட்களில் அவன் பங்கு கொள்ள வேண்டிய உள்நாட்டு, வெளிநாட்டு நிகழ்ச்சி அட்டவணை, அறையிலிருந்த ஒவ்வொரு பொருளின் விலையையும் அவன் சொல்லிக் கொண்டிருந்தான்.

வித்யாசாகரிடம் ஒரு வேகம் உண்டு; எந்த விஷயத்திலும் ஈடுபடக்கூடிய மனப்பக்குவம் உண்டு; உண்டு அல்லது இல்லை என்று பார்த்துவிடக்கூடிய தீவிரம் உண்டு. அவன் இப்பொழுது நாடறிந்த எழுத்தாளன்; பத்திரிகை ஆசிரியன். அவன் எழுதிய இரண்டு நூல்களும் லட்சக்கணக்கில் விற்பனை ஆகியிருந்தன. நான் அவற்றைப் படித்திருந்தேன். அவை நன்றாகவே இருந்தன.

வித்யாசாகர் பேசியபடியே என்னை கூர்ந்து ஆராய்ந்தான். என்னுடைய சுமாரான ஆடைகள் பற்றி எனக்கே கூச்சம் ஏற்பட்டது.

“”நீ மகிழ்ச்சியாயிருக்கிறாய் என்று சொல்லும்போது முன்னைக்கு இப்போது பரவாயில்லை என்கிறாய். என்னுடைய முதல் புத்தகம் வெளிவந்தபோது என் நிலை என்ன தெரியுமா?”

அவன் என் பதிலுக்கு காத்திராமல் மேலே பேசிக்கொண்டே போனான்.

“”பிரசுரகர்த்தரிடமிருந்து பதில் வரும்வரை எனக்கு உற்சாகமாய் இருந்தது; புத்தகம் ஏற்கப்படுமா இல்லையா என்ற குழப்பமிருந்தது; இத்தனையும் மீறி நான் எழுதியதைப் பற்றி ஒரு சந்தோஷம் உள்ளூர இருந்தது. புத்தகம் அச்சடித்து கடைகளில் விற்றபோதோ எனக்கு எந்தவிதமான உணர்ச்சியுமில்லை. ஒரு வெறுமைதான் மிஞ்சியது”.

வித்யாசாகர் துவண்டுபோய் படுக்கையில் சுருண்டு படுத்திருக்கும் காட்சியை என்னால் நினைத்தே பார்க்க முடியவில்லை. நான் இந்த விஷயத்தில் அவனை முழுவதும் நம்பவில்லை.

அதற்குள் தொலைபேசி மணி அடித்தது. வித்யாசாகர் எடுத்துப் பேசினான். அடுத்த நாள் காலை பத்து மணிக்கு யாரையோ சந்திக்க வருவதாகச் சொன்னான்.

பிறகு தன் கையிலிருந்த “பைப்’பை பற்ற வைத்தவாறே என்னைக் கேட்டான்.

“”உனக்கு டாக்டர் பாலகிருஷ்ணனை ஞாபகமிருக்கிறதா?”

“”ஆஹா, ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றவர்தானே? நன்றாக நினைவிருக்கிறது. நீதான் அவர் வீட்டுக்கு அடிக்கடி போவாய்”.

“”ஆமாம். அவருடைய மூன்றாவது பையன் சுந்தர், நம்மோடுதானே படித்தான்? அவனும் நானும் சேர்ந்து படிப்போம். உனக்குதான் சேர்ந்து படிக்கிற பழக்கமே பிடிக்காது. நீ என்னுடன் அவர் வீட்டுக்கு வர மறுத்துவிடுவாய். அவருக்குப் பிறந்தது ஆறும் பிள்ளைகள். வீட்டிலே ஒரு பெண் குழந்தை வளர வேண்டுமென்று அவர் தன்னுடைய தூரத்து உறவில் அனாதையான ஒரு பெண்ணை வளர்த்து வந்தார். அவள் பெயர் மீனாட்சி. அவளைப் பற்றித்தான் நான் சொல்ல வந்தேன். ஏனென்றால் அவளை முக்கிய பாத்திரமாக வைத்து நான் இப்பொழுது ஒரு புத்தகம் எழுதிக் கொண்டிருக்கிறேன். நீ அவளைப் பார்த்திருக்கிறாயோ, இல்லையோ?”

“”நான் அவளை இப்பொழுது பார்த்ததில்லை. உன்னிடம் சிகரெட் இருக்குமா?” நான் சம்பந்தமில்லாமல் அவனைக் கேட்டேன்.

“”ஓ யெஸ்” என்றபடி அவன் மேஜை அறையிலிருந்து ஒரு சிகரெட் பெட்டியை எடுத்து வெளியே போட்டான். அது ராத்மன்ஸ் கிங் சைஸ் பாக்கெட். நான் அவன் மேஜை மீதிருந்த ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டேன்.

“”நான் எப்பொழுதும் பெண்களைப் பற்றி எழுதுவதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு”. வித்யாசாகர் என்னுடைய சிகரெட் இரவல் குறுக்கீட்டை லட்சியம் செய்யாமல் மேலே பேசிக் கொண்டே போனான்.

“”நான் கொஞ்சம் முரடன். என்னிடம் அன்பு காட்டினவர்கள், பிரேமை கொண்டவர்கள். மென்மையாய்ப் பழகினவர்கள் பெண்கள். அந்தப் பெண்கள் வரிசையிலே முதல் பெண் மீனாட்சி. அவள் சிரிப்பது ஒருவிதமான சோகத்தை வெளிப்படுத்துவதாக இருக்கும். அவள் ரொம்ப மென்மையானவள்; அமைதியானவள். அவளோடு பேசுவதே கஷ்டம் என்றுதான் நான் ஆரம்பத்தில் நினைத்தேன்”.

என் சிகரெட் மெல்ல எரிந்து கொண்டிருந்தது. நான் ஒருமுறை மூச்சைப் பிடித்து இழுத்து அது அணையாதபடி காப்பாற்றினேன்.

“”ஆனால் ஆச்சரியப்படத்தக்க விதத்தில் டாக்டர் பாலகிருஷ்ணன் நாங்கள் பழகுவதற்கு வசதி செய்து கொடுத்தார். அவள் அப்போது பத்தாவது வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். ஆங்கிலத்தில் அவள் ரொம்பக் குறைவான மதிப்பெண்கள் பெறுவாள். நான் எம்.ஏ. படித்துக் கொண்டிருந்ததினால் என்னை அவளுக்கு ஆங்கிலப் பாடம் மட்டும் சொல்லிக் கொடுக்கச் சொன்னார் டாக்டர். என் தாத்தா உச்ச நீதிமன்ற நீதிபதி என்றதும், நான் நல்ல பரம்பரையில் வந்தவன்; வயசுப் பெண்ணிடம் வம்பு செய்ய மாட்டேன் என்று அவர் நினைத்திருக்கிறார். அவர் பையன்களோ அந்தப் பெண்ணை அலட்சியம் செய்தார்கள். அவர்களில் யாருக்கும் அவளைப் பிடிக்காது. அவளிடத்தில் அந்த வீட்டில் அன்பு காட்டினவர் டாக்டர் ஒருவர்தான். எனவே அந்தப் பெண் அன்புக்கு ஏங்கியிருந்திருக்கிறது. எனக்கு அவளிடம் நெருங்கிப் பழக வாய்ப்பு தந்தது ஆங்கிலப் பாடம். உனக்கு ஞாபகமிருக்கும். டாக்டர் வீட்டில் மூன்று மாடிகளும், நாற்பதுக்கு மேற்பட்ட அறைகளும் உண்டு. டாக்டர் எப்பொழுதும் கீழே நோயாளிகளோடு காரியமாயிருப்பார். அவர் பையன்களோ எப்போதும் வெளியே சுற்றுகிற பேர்வழிகள். நானும் மீனாட்சியும் தனித்துவிடப்பட்டோம்!”

வித்யாசாகர் கையிலிருந்த பைப் அணைந்தது. அவன் அதைக் கீழே வைத்துவிட்டு என்னை ஒருமுறை உற்றுப் பார்த்தான். நான் சிகரெட் சாம்பலை அதற்குண்டான கண்ணாடிக் கிண்ணத்தில் தட்டினேன்.

“”ஒரு வயசுப் பெண்ணை நீ அடைய விரும்பினால் உன் உடம்பு உஷ்ணத்தை அவளுக்கு நீ காட்டினால் போதும். நான் பாடம் சொல்லித் தரும்போது மீனாட்சியின் கைகளைப் பற்றிக்கொள்வேன். விரல்களை ஒவ்வொன்றாக தடவிக் கொடுப்பேன். மிகவும் பக்கத்தில் நெருங்கி உட்காருவேன். கதவு அருகில் வரும்போது வேண்டுமென்றே இடிப்பேன். உன் வேகம் அவளையும் பற்ற வேண்டும். வார்த்தைகளே தேவையில்லை. நீ நெருங்க வேண்டும். அதுதான் முக்கியம்”.

நான் ஜன்னல் வழியே தெருவில் விரைந்தோடும் வாகனங்களைப் பார்த்தபடி இருந்தேன். வித்யாசாகர் பேச்சு மட்டும் என் மனதில் பதிவாகிக் கொண்டிருந்தது.

“”மீனாட்சி என்னை ஒதுக்கவில்லை; என்னிடமிருந்து ஓடவில்லை. அது எனக்கு தெரிந்ததும் ஒருநாள் அவளிடம் ஒரு கடிதம் தந்தேன். உனக்கு சம்மதமா என்று ஒரே ஒரு கேள்வி மட்டும் அதில் கேட்டிருந்தேன். சம்மதமில்லையென்றால் இந்தக் கடிதத்தைக் கிழித்துப் போட்டுவிடு; சம்மதமென்றால் என்னிடமே திருப்பித் தந்துவிடு” என்று மட்டும் சொன்னேன்.

வித்யாசாகர் இப்பொழுது மீண்டும் எழுந்து அறையின் குறுக்கே நடமாடினான். எனக்கும் எழுந்துவிட வேண்டும்போல் இருந்தது. ஆனால் நான் கட்டுப்பட்டதுபோல அப்படியே உட்கார்ந்திருந்தேன்.

“”அந்த நிமிஷம் என் பரபரப்பை உணர்வாயா நீ? நான் அவளிடம் சொல்லிவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டேன். அவளை நேரே பார்க்கும் துணிவு இல்லை எனக்கு. நான் நடுங்கிக் கொண்டிருந்தேன். திடீரென்று என் கைகளில் காகிதத் தூள்கள் பறந்து வந்து விழுந்ததை உணர்ந்தேன்”.

இங்கு வித்யாசாகர் ஒரு நிமிடம் நிறுத்தினான். பிறகு சொன்னான்:

“”நான் அந்த காகிதத் துண்டுகளை அப்படியே விழுங்கினேன்”.

எதிரே மேஜை மேலிருந்த ஒரு கண்ணாடி பேப்பர் வெயிட்டை கைகளில் பற்றியபடியே நான் கேட்டேன்.

“”அப்புறம்?”

“”அப்புறம் என்ன? அந்த உற்சாகம், அந்த மகிழ்ச்சி வடிந்துவிட்டது. முதல் காதலில் வெற்றி அடைவதைவிட தோல்வி காண்பதுதான் மேலானதோ என்று இப்போது தோன்றுகிறது. மீனாட்சி ரொம்ப சாதாரணமான அன்புக்கு ஏங்கிய ஒரு சிறு பெண் என்று இப்போது நினைக்கிறேன். எங்கள் தொடர்பு சில மாதங்களே நீடித்தன. நல்லவேளையாக அவள் பரீட்சை பாஸ் செய்துவிட்டாள்”

நான் கடிகாரத்தைப் பார்த்தேன்.

“”உனக்கு அவசரமா? நான் உன்னை என் காரில் எங்கேயாவது கொண்டு விடட்டுமா?” என்று கேட்டான் வித்யாசாகர்.

“”வேண்டாம். நீ உன் வேலைகளை கவனி. நான் என் வழியைப் பார்த்துக் கொள்கிறேன்” என்று நான் எழுந்தேன்.

வித்யாசாகர் எழுந்து வந்து என் அருகில் நின்றபடி சொன்னான்:

“”அடுத்த முறை டெல்லி வரும்போது சாவகாசமாக வா. நாம் இப்பொழுது பேசினது எனக்குப் பிடித்திருந்தது. உனக்கு எப்படியோ? நீ பழைய ஆட்கள் வேறு யாரையாவது பார்த்தாயோ? நான் சுந்தரை ஒருதரம் நாக்பூரில் பார்த்தேன். அங்கு அவன் பாங்க் மானேஜராக இருக்கிறான். பன்னிரண்டு வருடங்கள் நம்மை எப்படியெல்லாம் பிரித்து விட்டன? ஆமாம். மீனாட்சி என்ன ஆனாள்? உனக்கு ஏதாவது தெரியுமா?”

“”அவள் இப்பொழுது சென்னையில்தான் இருக்கிறாள்”.

“”சென்னையிலா? நீ அவளை அடிக்கடி பார்க்கிறாயா?”

“”நிறையப் பார்க்கிறேன்”

“”அப்படியா?” வித்யாசாகர் ஆச்சரியப்பட்டான்.

“”அவளுக்குத் திருமணம் ஆகிவிட்டது” இதை நான் இப்பொழுது சொன்னது சரிதான். ஆனாலும் முன்னாலேயே இடைமறித்தும் சொல்லியிருக்கலாம்.

“”அப்படியா? யார் அவள் கணவன்? தெரியுமா உனக்கு?”

“”நான்தான்” என்றேன் நான்.

வித்யாசாகரின் உறுதியான தாடை நரம்புகள் திடீரென தளர்ந்து தொங்கின.

“”ஆம், எங்களுக்குத் திருமணமாகி பத்து வருடங்களாகின்றன. டாக்டர் பாலகிருஷ்ணன்தான் நடத்தி வைத்தார். நீ பத்திரிகை பயிற்சிக்காக டெல்லி சென்றுவிட்டபடியால் உன்னை அழைக்க முடியவில்லை. எங்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள். நான் அவளுடன் மிக சந்தோஷமான வாழ்க்கை நடத்துகிறேன்”

“”அப்படியா?” என்ற வித்யாசாகர் என் முகத்தை நேரடியாகப் பார்க்காமல் தலையைக் குனிந்து கொண்டான்.

“”நாம் பிறகு சந்திப்போம்” என்றபடி நான் அவன் காபின் கதவுக்குப் பக்கத்தில் போய் நின்னேன். வித்யாசாகரின் காரியதரிசி கதவைத் திறந்தபடி உள்ளே நுழைந்தாள்.

“”வெளிவரப்போகும் உன் மூன்றாவது புத்தகத்துக்கு முன்கூட்டியே என் வாழ்த்துக்கள்” என்றபடி நான் வெளியே நடந்தேன்.

– ஐராவதம் (பெப்ரவரி 2014)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *