குண வாழக்கை… பண வாழ்க்கை…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 5, 2017
பார்வையிட்டோர்: 6,683 
 
 

வெளியே சென்றுவிட்டு வீட்டிற்குள் நுழைந்து அமர்ந்திருந்த கணவனைப் பார்த்த வைதேகிக்கு அதிர்ச்சியாக இருந்தது.

வெளியே சென்றுவிட்டு வந்தால் ஆள் ஒரு நாளும் இப்படி முகம் வாடி அமர்ந்ததே இல்லை. எங்கு சென்று வந்தாலும் முகம் மலர்ச்சியாக இருக்கும். மாலை நேரம் மெடிக்கல் ஷாப்பில் இருக்கும் மூத்த மகனுக்கு மாலை டீ பட்சணம் கொண்டு சென்று கொடுத்துவிட்டு வந்தால் தெளிந்த முகமாக இருக்கும்.

அப்படி சென்ற இவருக்கு இன்றைக்கு என்ன நடந்தது ? என்று உள்ளுக்குள் கேள்வி எழ……

“சந்துரு….!” அன்பாய் அழைத்து சென்று அவர் அருகில் அமர்ந்தாள்.

“…………………..”

“என்ன ஒரு மாதிரியாய் உம்முன்னு உட்கார்ந்திருக்கீங்க ?”

“ஒ…..ஒன்னுமில்லே….”

“விசயத்தைச் சொல்லுங்க ? ”

“போகும் போது வழியில நண்பர் ரகுராமனைப் பார்த்தேன்.”

ரகுராமன் இவர் ஆத்மார்த்தமான உயிர் நண்பர். ஒரே ஊர், சிறு வயதிலிருந்தே ஒரே பள்ளியில் படித்து வேலையிலும் ஒரே கம்பெனியில் வேலைசெய்து அவர் மூத்தவர் என்பதால் இரண்டாண்டுகளுக்கு முன் ஓய்வு. இவருக்கு ஆறு மாதங்களுக்கு முன் ஓய்வு. இருவருக்கும் இரண்டிரண்டு ஆண் பிள்ளைகள். இவரும் வசதி, பொருளாதாரத்தில் குறைவில்லை. – மன ஓட்டத்தை நிறுத்திய வைதேகி…..

“என்ன சொன்னார் ? ” கேட்டாள்.

“ஓ….ஒன்னும் சொ…..ல்லலை….”

“எதுக்கு மென்று முழுங்குறீங்க ? ”

“வ…வந்து…அவர் பழைய காரை வித்திட்டுப் புதுக்கார் வாங்கி இருக்கார். பையன்கள் இருவரும் குடும்பம் குடித்தனத்தோடு வெளிநாட்டில் இருக்கும் போது புருசன், பொண்சாதி ரெண்டு பேருக்கும் அவசியமா எதுக்குப் புதுக்கார் ? கேட்டவுடன்.” நிறுத்தினார்.

“அதுக்கு அவர் என்ன சொன்னார் ? ”

“பையன்கள் வெளிநாட்டில் லட்சம் லட்சமாய்ச் சம்பாதிக்கிறானுங்க. இருமல்ன்னு சொன்னால் ஒன்னுக்குப் பத்தாய்ப் பணம் அனுப்புறானுங்க. பணம் வேணும்ன்னா கொட்டறானுங்க. மேலும், அப்பா! வாயைக் கட்டி, வயித்தைக் கட்டி எங்களுக்காகப் பைசா பணமோ, சொத்தோ சேர்க்க வேணாம். எங்க சம்பாத்தியத்தையே நாங்க செலவு செய்ய முடியாத நிலையில இருக்கோம். அதனால்… உங்க ஓய்வூத்தைத் தாராளமாய்ச் செலவு செய்யுங்க. பணம் வேணும்ன்னாலும் கேளுங்க கொடுக்கிறோம். சொல்றானுங்க. அவனுங்க சொல்றதும் நியாயம்தானே. அதனால் பார்த்தேன். எதுக்குப் பழசை அனுபவிக்கனும்ன்னு புதுசு வாங்கி இருக்கேன். நல்லா இருக்கா பார் காட்டினார். நல்லா இருக்கு.” நிறுத்தினார்.

“சந்தோசம்தானே ! இதுல என்ன குத்தம் குறை ? ”

“குத்தம் குறை இல்லே. அவரும் நிறைவாய் இருக்கார். நாமும் நிறைவாய் இருக்கோம். ஆனா…..அவர் பையன்கள் வெளி நாட்ல உட்கார்ந்து லட்சம் லட்சமாய்ச் சம்பாதிக்கிறானுங்க. நம்ம புள்ளைங்க…..? ஒன்னு மெடிக்கல் ஷாப் வைச்சி உட்கார்ந்திருக்கான். அடுத்தவன் உள்ளூர் கல்லூரியில் விரிவுரையாளராய் இருக்கான்.”

“இவுங்களும் நிறைவாய்த்தானே சம்பாதிக்கிறாங்க ?”

“இருந்தாலும் அவர் புள்ளைங்களை ஒப்பிடும்போது நம்ம புள்ளைங்க சாதாரணம்தானே..!” சொல்லி தலை கவிழ்ந்தார்.

வைதேகிக்குப் புரிந்தது.

“ஓ….. உங்களுக்கு அந்த வருத்தமா ?” கேட்டு கணவனைக் கூர்ந்து பார்த்தாள்.

சந்துரு குனிந்த தலை நிமிரவில்லை.

“அந்த புள்ளைங்க லட்சம் லட்சமாய்ச் சம்பாதிச்சி, அவுங்க புருசன் பொண்டாட்டி நிறைய வாய்ப்பு வசதிகளோடு நம்ம மாதிரி சொந்த வீட்ல இருந்தாலும் முதியோர் இல்லத்தில் இருக்கிறாப்போலத்தான் அனாதையாய் இருக்காங்க. நாம அப்படி இல்லே. புள்ளைங்க, மருமகள்கள், பேரன் பேத்திகளோடு கூட்டுக் குடும்பமாய் சந்தோசமாய் இருக்கோம். இப்போ நமக்குத் தலைவலின்னா புள்ளைங்க தைலம் தேய்ச்சி விடும். உடம்புக்கு ஒன்னுன்னா….ஒட்டு மொத்தக் குடும்பமுமே துடிச்சி நம்மைக் காப்பாத்தும். ஆனா…அவுங்களுக்கு அந்தக் குடுப்பினை இல்லே. எதுவும் தானாத்தான் செய்துக்கனும். விழுந்தாலும் தானாத்தான் எழுந்திரிக்கனும். செத்தாலும் மத்தவங்க சேதி சொல்லித்தான் அந்தப் புள்ளைகளுக்குத் தெரிவிக்கனும். அதுங்க வந்து எடுக்கிறவரை பிணம் குளிர்பதனப் பெட்டியில காத்திருக்கனும். அவுங்க சொந்த நாட்டு அகதி. புள்ளைங்க கைவிட்ட அநாதைகள். நாம வாழறது குண வாழ்க்கை நிறை. அவுங்க வாழ்றது பண வாழ்க்கை…குறை ! புரிஞ்சிக்கோங்க.” சொல்லி கணவன் முகத்தை நிமிர்த்தினாள்.

தெளிவான சந்துரு, “வைதேகி! உன் தெளிவு எனக்கில்லே. கொஞ்சம் குழம்பிட்டேன். மன்னிச்சிக்கோ.” சொல்லி மனைவி கையை நிறைவாய்ப் பற்றினார்.

என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *