அழகிய ஊர் எங்கே?

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 11, 2014
பார்வையிட்டோர்: 10,403 
 

அன்று மும்பையில் கன மழை. மாலை 6மணி. அலுவலக விஷயமாக மும்பை சென்ற நானும் எனது அலுவலக சீனியர் நண்பரும், இரவு 9:40 க்கு சென்னை செல்லும் விமானத்தை பிடிப்பதற்காக மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்திற்கு டாக்சியில் போய் கொண்டிருந்தோம். பொதுவாக உள்நாட்டு விமான பயணத்திற்கு, ஒரு மணி நேரம் முன்பாக செக்கின் (CHECK-IN) செய்தால் போதுமானதாக இருக்கும். அன்றைக்கு நாள் முழுதும் மழை இருந்ததனால், மும்பை ட்ராஃபிக்கில் மாட்டி, நேரமாகி விடும் என்று சீக்கிரமே விமான நிலையம் சென்று, அங்கு காத்திருக்கலாம் என்று நாங்கள் இருவரும் பேசி முடிவு செய்து கொண்டோம்.

மும்பையில் ரோட்டில் அத்தனை டிராஃபிக். மழை நேரங்கள் என்றால் கேட்கவே வேண்டாம். ரோட்டில் போனால் தான் பிரச்சினை, லோக்கல் ரயிலில் போகலாம் என்றால், அதற்கு என்றே தனியாக பயிற்சி எடுத்தவர்கள் மட்டுமே மும்பை ரயில்களில் போகமுடியும் போன்று, அத்தனை நெரிசல்! என்ன ஊர் இது?, எங்கு பாத்தாலும் கூட்டம், ஓட்டம்.. எப்படிதான் இங்கெல்லாம் வாழ்க்கை நடத்துகின்றனரோ என்றும், நம் சென்னையைப் பற்றி இன்னும் பெருமையாக பேசிக்கொண்டும், நானும் நண்பரும் விமான நிலையத்தை அடைந்தோம்.

மூன்று மணிநேர காத்திருப்பிற்கு பின் ஃப்லைட்டில் போய் அமர்ந்தோம். நண்பருக்கு ஜன்னலருகில் உள்ள சீட் கிடைத்தது, எனக்கு நடு சீட் ஒதுக்கப்பட்டிருந்தது, என் வலப்புறத்தில் உள்ள ஐல் (AISLE) சீட்டில் யார் வருகிறார்கள் என்று பார்த்தேன் (ஐல் ஸீட் என்பது நடந்து போகும் பாதையை ஒட்டி இருக்கும் சீட்) அப்போது ஐல் சீட்டில் வந்து நிதானமாய் அமர்ந்தார், அந்த 70 வயது மாமி.

ஒரு சிறிய அறிமுக புன்னகையுடன், தன்னை பிரேமா மாமி என்று அறிமுகப்படுத்தி கொண்டார். நானும் எனது பெயரை தெரிவித்து, நண்பரின் பெயரையும் கூறி, அவரையும் அறிமுக படுத்திவைத்தேன். பிரேமா மாமியுடன் சிறிது நேர உரையாடினோம். அந்த உரையாடலில் இருந்து..

மாமி: “நாங்க ஒரு பத்து பேர், என் பேரன் கல்யாணத்திற்காக சென்னை தாம்பரத்திற்கு போகிறோம். நீங்க சென்னைக்கு போறேளா, அல்லது சென்னையில் இறங்கியவுடன் அங்கிருந்து தமிழ்நாட்டில் வேறு ஏதேனும் ஊருக்கு போறேளா?”.

நான்: சென்னைக்கு தான் மாமி நாங்கள் இருவரும் போறோம்.

மாமி: இங்க மும்பையில் ஒரு வாரமாக நல்ல மழை. உங்க ஊரில எப்படி?

நான்: {“என்னது உங்க ஊரா?, என்னடா ஒரு தமிழ் பேசுபவராய் இருந்துவிட்டு உங்க ஊர் என்று பிரிக்கிறாரே?” என்று சற்று திடுக்கிட்டு } “எங்க ஊரில் இப்போது மழை இல்லை மாமி, கூடிய சீக்கிரம் வரும்” என்றேன்.

மாமி: “உங்க ஊருக்கு போவதென்றால் பயமாக இருக்கு, ஒரே கசகசவென்று புழுக்கமா இருக்குமே? மழை எல்லாம் அங்கே கொஞ்சம் குறைவு தான், மரங்கள் அவ்வளவா இல்லையே, எங்க ஊரில் பாருங்கோ, நிறைய மரங்கள் இருக்கும், நிறைய மழை. நல்ல விவசாயம் பண்றோமே?”

நான்: { சற்று பொறுக்க முடியாமல் } “என்ன மாமி, உங்க ஊரு, உங்க ஊருனு சொல்றீங்க, தமிழ்நாடு உங்க ஊரு இல்லையா?”.

மாமி: “நாங்க மும்பை வந்து 60 வருடங்கள் ஆகி விட்டதுப்பா. இப்போ நேக்கு மும்பை தான் எல்லாமே, என்னை பொருத்தவரை, மும்பையை போல ஒரு வசதி வேறு எந்த இடத்திலும் கிடைக்காது, மும்பையை விட்டு என்னால வேறு ஓரிடத்தில் ஜாகை பண்ணுவதை நினைத்தும் பார்க்கமுடியாது”

என் பக்கத்தில் அமர்ந்திருந்த நண்பருக்கும் என்னை போன்றே கோபம் வர, “எங்க ஊரில் இல்லாத வசதி அப்படி என்ன மாமி இங்குள்ளது?” என்றார்.

மாமி: ரொம்ப கூலாக, “நிறைய இருக்கு, சொல்றேன், இரண்டு பேரும் கேட்டுக்குங்கோ. மொதல்ல உங்க ஊருல சில ஆட்டோக்காரா பண்ற அழிச்சாட்டியம் இருக்கே… உலகத்தில் யார் சென்னைக்கு வந்தாலும் அத பாத்து கண்டிப்பா பயப்பட்ரா. எங்க ஊரில் அது மாதிரி எல்லாம் கிடையாது. ஆட்டோவோ, டாக்சியோ சரியான பாதை, சரியான மீட்டர் கட்டணம். வெளி ஊரிலிருந்து வந்திருக்கும் பயணி என்றெல்லாம் பார்க்கமாட்டா. ரூல்ஸ்னா ரூல்ஸ்தான். பஸ்ஸுக்கு காத்திருக்கும் பயணிகள் க்யூவில் நின்று பஸ் வந்தவுடன் ஒவ்வொருவராக ஏறுவா. ரோட்ரூல்ஸ மதிப்போம்.

இன்னொன்னு, ஒரு கல்யாணம் கச்சேரி போனா, மனுஷாள மனுஷா மதிப்பா. உங்க சென்னையில் பொது இடங்களில், பல பேருக்கு ஒழுங்கா மரியாதை கொடுத்துக் கூட பேச தெரில. கல்யாணத்திற்கு போகும் போது பாருங்கோ, எல்லாரும் கையிலும், கழுத்திலும் உள்ள நகைகளை தான் பாப்பா. முக்கியமாக எங்க ஊரில் ஊனமுற்றோர், பெரியவர்கள் என்றால், நிறைய மரியாதையுடன் உதவி செய்வா, பேருந்திலோ, ரயிலிலோ எல்லாரும் எழுந்து இடம் தருவா” என்றார்.

பேச்சு தொடர்ந்தது. விமானத்தில் பயணிகள் பலர் தூங்கி இருந்தனர். விமானம் விண்ணில் நல்ல உயரத்தை தொட்டிருந்தது. அத்தனை உயரத்தில் இருந்து பார்க்கையில், எல்லா ஊருமே ஒன்று தானே? எல்லைகள் எல்லாம், பூமியில் இருக்கும்போது, நம் மனத்தில் உள்ளவை தானே? இருந்தாலும் நம் சென்னையை பற்றி இப்படி வாட்டி வதைக்கிறாரே என்று கோபம் வெகுவாக வந்தது. மும்பை பற்றி மாமி சொன்ன நல்ல விஷயங்கள் ஏதும் என்னுள் ஏறவில்லை.

நான்: “என்ன மாமி, பெரிய ஊர்!? எவ்வளோ ட்ராஃபிக் மும்பையில்? கொஞ்சமாவது பாதுகாப்பு இருக்கா? தீவிரவாதிகள் அச்சுறுத்தல் எத்தனை இருக்கு? தமிழகம் அமைதி பூங்காவாச்சே?!”.

மாமி: “எங்கதாம்பா தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இல்ல? இப்போ சமீபத்தில் உங்க சென்னையில் குண்டு வச்சு ரயிலில் ஒரு பொண்ணு சாகலயா? எங்க ஊரில் நாங்க ரொம்ப பாதுகாப்பாகவே தான் ஃபீல் பண்றோம். மும்பையில எல்லா இடத்திற்கும் பெண்கள் தனியாகவே போய் வருவார்கள். ஒரு பிரச்சினையும் இல்லை” ரொம்ப ரிலாக்ஸ்டாகவே, மும்பைக்கு வக்காலத்து வாங்கினார் மாமி.

நான்: “மாமி, மும்பையில் கலாச்சாரம் கொஞ்சம் குறைவாக தான் இருக்கிறது, மால்களில் (MALLS), பொது இடங்களில் வரும் பெண்கள் எப்படி எல்லாம் ஆடைகள் அணிகின்றனர்?”

மாமி: “அப்படி இல்லப்பா, மும்பை என்பது நிறைய நாடுகள், நிறைய மாநிலங்களில் இருந்து வரும் மக்கள் சங்கமித்துள்ள இடம், அதனால் அப்படி உடை உடுத்தினால் வித்தியாசமாக தெரியாது, ஆனா பல நூற்றாண்டுகளாய் பாரம்பரியத்திற்கு பெயர் போன சென்னையில், பிள்ளைகள் நாகரீகம் என்ற பெயரில் போடும் உடை, அந்த கலாச்சாரத்தில் ரொம்ப வித்தியாசமாக இருக்கிறது, அதுவும் இப்போ பெண்கள் போடும் லெக்கின்ஸ்.. என்னத்த சொல்ல? கேள்வியுடன் முடித்தார்.

என்னடா இவர் எந்த பந்து போட்டாலும் பவுண்ட்ரி அடிக்கிறாரே என்றுநான்நினைக்கையில், இப்போ பாருங்க என்று என்னிடம் கண்ணை காண்பித்துவிட்டு எனது நண்பர் “மாமி, எங்க ஊரில் எவ்வளோ புனித ஸ்தலங்கள் இருக்கு! எத்தனை ஆழ்வார்கள்? எத்தனை சித்தர்கள்? எத்தனை பூண்ணிய ஆத்மாக்கள், கடைசியில் ராமேஸ்வரம் வந்துதானே ஆக வேண்டும்?” மிக அருமையாக ஒரு கூக்லீ பந்தைப் போட்டார்.

மாமி: சற்றும் சளைக்காமல், “என்ன அப்படி சொல்லிட்டேள்?, நாங்களும் அடிக்கடி காசி, ரிஷிகேஷ், ஹரித்வார் எல்லாம் போறமே, உங்களுக்கு அதெல்லாம் எத்தனை தூரம் வரும்? இங்கேயும் துளசிதாஸ், சூர்தாஸ் என எத்தனயோ மஹாபுருஷர்கள் இருந்துள்ளார்கள்..” என்றார்.

அதற்கடுத்தும் வரிசையாய் சாப்பாடு, வாழ்க்கை முறை, என எத்தனை பௌண்சர்களை நாங்கள் போட்டாலும், எல்லாத்திற்கும் பதில் கொடுத்து சிக்ஸர் சிக்ஸராய் அடித்து தள்ளினார் மாமி.

இன்னும் சிறிது நேரத்தில் விமானம் சென்னையை அடையும் என்று பணிப்பெண்கள் அறிவித்தனர். விமானமும் தாய் மண்ணிற்கு வந்து சேர்ந்தது. “வருகிறோம் மாமி”, என நானும் நண்பரும் மாமியுடன் விடை பெற்று கொண்டோம்.

வீட்டிற்கு செல்லும் வழியில், என்னுள் சில கேள்விகள். கொஞ்சம்ப டித்தால் சொந்த கிராமத்தை விட்டு வெளியேறுவது, சற்று அதிகம் படித்தால் நாட்டை விட்டே வெளியேறுவது, இப்படி புலம் பெயர்ந்து செல்லும் பலரும், தற்போது இருக்கும் இடமே சிறந்தது என்று இருந்து விடுகின்றோம். அதைவிட முக்கியமான விஷயம், புலம் பெயர்ந்து சில வருடங்கள் வளர்ந்த நாட்டிலோ, நகரத்திலோ செட்டிலானவுடன் பழைய ஊரை பிடிக்கவில்லை என்றும், அதில் உள்ள சில குறைகளை சுட்டியும் காட்டுகின்றோம்.

உதாரணத்திற்கு மும்பையிலிருந்து அமெரிக்கா போன்ற வளர்ந்த நாட்டிற்கு செல்லும் பலர், அமெரிக்கா தான் சிறந்தது என்றும் அதை விட்டு மும்பையோ, இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களிற்கோ திரும்ப வர இயலாது என்றும் சொல்வதைக் கேட்கின்றோம்.

ஒருவேளை இன்னும் பல வருடங்களில் செவ்வாய் போன்ற வேற்று கிரஹத்தில் மனிதன் குடியேறலாம் என்ற சூழ்நிலை வந்துவிட்டால், அமெரிக்காவும் சரி இல்லை என்று மனிதர்கள் செவ்வாய் கிரஹம் செல்ல ஆரம்பித்து விடுவார்களோ? இதற்கு முற்று புள்ளியே கிடையாதா?

மன நிறைவும், மகிழ்ச்சியும், மும்பையிலோ, அமெரிக்காவிலோ, செவ்வாயிலோ அல்ல, நம் மனத்திலும், நாம் வாழும் இடத்திலும், சக மனிதர்களிடம் அன்பு பாராட்டி பழகுவதிலும் தான் இருக்கிறது; ஒரு வேலை மாமி சொன்னது போன்று, அந்த சில குறைகள் நம் சென்னையில் இருக்கலாம். அதை உணர்ந்து, முழு ஈடுபாட்டுடன் அந்த குறைகளை களைய முயற்ச்சிப்போம், நம்மிடம் இருக்கும் நல்ல விஷயங்களை இன்னும் அதிக படுத்திக்கொள்வோம்

வளர்ந்த நாடுகளுக்கும், நகரங்களுக்கும் சென்று நிரந்தரமாக செட்டிலான சிலர், தாங்கள் நடந்து வந்த பாதையை மறக்காமல், சொந்த ஊருக்கும் அந்த மக்களுக்கும் தங்களால் முடிந்த உதவியை செய்வதை இன்றுக் கூட காணமுடிகிறது. அந்த ஊரைக் குறை சொல்லாமல், தன்னால் முடிந்தளவு, அந்த ஊரை, அம்மக்களை முன்னேற்றலாம் என சுயநலமற்ற சிந்தனை உள்ளோர்களை இன்றும் பார்க்க முடிகிறது.

நாம் வாழ்ந்த, வாழும் இடத்தை, வரும் தலைமுறைக்கு ஒரு அழகிய இடமாய் உருவாக்குவதிலும், விட்டு செல்வதிலும் நம் அனைவருக்கும் பெரும் பங்குள்ளது என்று தெளிவாக புரிந்தது.

Print Friendly, PDF & Email

1 thought on “அழகிய ஊர் எங்கே?

  1. எமது கதையை வெளியிட்டமைக்கு சிறுகதைகள் டீமிற்கு நன்றி..

    மேலும் எமது மற்ற கதைகளையும், பகிர்வுகளையும் காண, எமது வெப்சைட்டிற்கு வருகை தருமாறு வாசகர்களை கோருகிறேன்..

    நன்றி,
    விமல் தியாகராஜன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *