கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 7, 2012
பார்வையிட்டோர்: 11,285 
 
 

“ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து தன் கழுதையின் மேல் சேணங்கட்டி தன் வேலைக்காரர்களில் இரண்டு பேரையும் தன் குமாரன் ஈசாக்கையும் கூட்டிக்கொண்டு தகனபலிக்குக் கட்டைகளையும் பிளந்துகொண்டு தேவன் தனக்குக் குறித்த இடத்திற்குப் புறப்பட்டுப் போனான்.

ஈசாக்கு, ஆபிரகாம் – சாராள் தம்பதியரின் ஏகபுத்திரன். தனது முதிர் வயதில், அதாவது நூறாவது வயதில் ஆண்டவரிடம் கேட்டுப்பெற்ற பிள்ளை. கொடுத்த ஆண்டவரே இப்போது குழந்தையைக் கேட்கிறார்.

வாசித்துப் பாருங்கள், ஆதியாகமம் இருபத்தி இரண்டாம் அதிகாரம் இரண்டாம் வசனம்: ‘அப்பொழுது அவர்: உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார்.’

ஆபிரகாம் மறுப்பாக ஒரு வார்த்தையையோ முகக்குறிப்பையோ காட்டவில்லை. ஆண்டவர் உரைத்தபடியே மோரியா தேசத்திற்குச் செல்கிறான். அவர்கள் மோரியா மலையில் ஏறுகிறார்கள். ஏறிக்கொண்டே இருக்கிறார்கள். மூன்று நாட்கள் கடுமையான அந்தப் பாதையின் வழியே கடந்துசென்று தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும் ஆபிரகாம் தூரத்திலே அந்த இடத்தைக் காண்கிறான்.

‘அப்போது ஆபிரகாம் தன் வேலைக்காரரை நோக்கி நீங்கள் கழுதையை நிறுத்தி இங்கே காத்திருங்கள். நானும் பிள்ளையாண்டானும் அவ்விடமட்டும் போய்த் தொழுது கொண்டு உங்களிடத்துக்குத் திரும்பிவருவோம் என்றான்.

ஆபிரகாம் தகனபலிக்குக் கட்டைகளை எடுத்து, தன் குமாரனாகிய ஈசாக்கின்மேல் வைத்து, தன் கையிலே நெருப்பையும் கத்தியையும் எடுத்துக்கொண்டான். இருவரும் கூடிப்போனார்கள்.’

அப்போது ஈசாக்கு தன் தகப்பனாகிய ஆபிரகாமை நோக்கி, ‘என் தகப்பனே’ என்றான். அதற்கு அவன், ‘என் மகனே’ என்றான். ‘நெருப்பும், கட்டையும் இருக்கிறது. ஆனால் பலிக்குரிய ஆட்டுக்குட்டி எங்கே?’ என்று கேட்டான்.

இந்தக் கேள்வி எந்தத் தகப்பனாய் இருந்தாலும் அவன் இதயத்தை ஈட்டியால் குத்தியதுபோல வலித்திருக்கும். ஆனால் ஆபிரகாம் கூறுகிறான் பாருங்கள், ‘என் மகனே! தேவன் தமக்குத் தகனபலிக்கான ஆட்டுக்குட்டியைப் பார்த்துக்கொள்வார்.’

தகப்பனும் மகனுமாகத் தேவன் சொல்லியிருந்த இடத்திற்கு வந்தார்கள். அங்கே ஆபிரகாம் ஒரு பலி பீடத்தை உண்டாக்கிக் கட்டைகளை அடுக்கி, தன் குமாரனாகிய ஈசாக்கைக் கட்டி பலிபீடத்தின் அடுக்கிய கட்டைகள் மேல் கிடத்தினான்.

ஆபிரகாம் தன் குமாரனை வெட்டும்படிக்குத் தன் கையை நீட்டிக் கத்தியை எடுத்தான். அப்போது. . .”

அதற்குமேல் நேசமணியால் தாங்க முடியவில்லை. கையைத் தடவி ரேடியோவின் குரல் வளையைக் கண்டுபிடித்துத் திருகி நிறுத்தினார். படுத்தநிலையில் கன்னங்களிலிருந்து காதுகள் வழியே தலையணையை நனைத்துக்கொண்டு பாய்ந்த கண்ணீரை அடக்க முடியாமல் விம்மி அழுதார். ரொம்ப நேரங் கழித்தே தன்னிலைக்குத் திரும்பி அடங்கினார்.

அவர் அப்படித்தான். வயது எண்பத்தைந்து ஆனாலும் காலையில் ஐந்து மணிக்கே முழித்துவிடுவார். எழுந்து விளக்கைப்போட வலுவில்லாமல் படுக்கையில் இருளைத் துழாவி ரேடியோவைக் கண்டு பிடித்துத் திருகுவார். வயோதிகம் அவரை முடக்கிப்போட்டிருக்கும் இந்த நாட்களில் ஒரே ஆறுதல் அந்த ரேடியோதான். கண்கள் பார்க்க முடியாமல் பழுதடைந்துபோனாலும் காதுகள் சற்றுக் கேட்கும் நிலையில் இருப்பதால் பொழுது கழிகிறது. அதில் வரும் நிகழ்ச்சிகளோடு ஒன்றித்து அவரும் பேசுவார். கட்டில் ஜன்னலோரம் கிடப்பதால் ரோட் டில் வாற போறவர்கள் அவரை நன்கு காணுவார்கள். தனக்குத்தானே புலம்புகிறார் என்றுதான் கருதுவார்கள். ஆனால் அவர் தனிமை பெரும்பாலும் அந்த ரேடியோவால் தான் விரட்டப்படுகிறது என்பதை யாரும் அறிந்திருக்கமாட்டார்கள்.

கிறிஸ்தவச் செய்தியாளர் ஜோயல் ஜெபசிங்கின் பிரசங்கம் என்றால் அவருக்கு ரொம்பவும் பிடிக்கும். சில நாட்களாக அவர் பழைய ஏற்பாட்டின் செய்திகளைத் தனது பாடுபொருளாகக் கொண்டிருக்கிறார். ஆனால் ஒரு நாளும் அவர் பிரசங்கம் கேட்டு இன்று போல அழுதது இல்லை. ஆபிரகாமின் கதை அவர் விஷயத்தில் தலைகீழாக நடந்துவிட்டது.

அவரது ஏகபுத்திரன் நேசராஜ் தான் பென்ஷன் பற்றின சமயத்தில் இதைப் போலத்தான் தன்னைப் பலியிடுவதற்காக ஒரு மலையில் நடத்திக்கொண்டுபோனான். ஆபிரகாமுக்கு மோரியா மலை என்றால் தனக்கு வாள்வச்சான் பாறை.

கண்ணீர், துடைக்க ஆளில்லாமல் உலர்ந்து போயிற்று. ஒரு நாளில் பத்துத் தடவையாவது அவர் நினைக்காமல் இருக்காத அந்தக் காட்சி இப்போதும் நெஞ்சில் படர்ந்தது. தன்னை மலைக்குக் கொண்டு போகும் ஒரு மாத காலத்திற்கும் முன்பே தன்னிடம் அவன் அந்தத் திட்டத்தையும் அதனால் விளையும் பலனையும் எடுத்துக்கூறிக்கொண்டே இருந்தது இப்போது நினைவுக்கு வந்தது.

“அப்பா, இது ஆர்.எஸ்.எஸ். ஏரியா. நம்மள இஞ்ச வாழவிடமாட்டானுவ. வித்துத் தள்ளீட்டு வேற எங்கயாவது போகலாம்.”

நேசராஜ் தில்லி இந்திரா காந்தி ஆராய்ச்சி மையத்தில் பணிபுரியும் நாடறிந்த மருத்துவ விஞ்ஞானி. அவரை அறியாத வி.வி.ஐ.பி.க்கள் தில்லியில் கிடையாது. அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் விருதுபெற்றவர். ஒருவேளை மகன் தில்லியில் தன்னுடன் வந்து தங்குமாறு அழைக்கிறானோ என்று நினைத்துக் கொண்டார் நேசமணி. அது மகனின் வாயிலிருந்து வெளிப்படும் என்று நம்பினார்.

கதவுக்குப் பின்னால் இதுவரைக்கும் பதுங்கி நின்ற மருமகள் நடந்துகொண்டிருக்கும் நாடகத்தில் தனக்கான பகுதி வந்ததும் ஒன்றும் தெரியாத பாவனையைக் காட்டியவாறு திடீரெனத் தோன்றினாள்.

அவளது வருகையைக் கண்ட நேசமணி கபடம் அறியாத புன்னகையை வெளிப்படுத்தியவாறு அன்புடன் பார்த்தார்.

“டவுன் எனக்கு ஒத்து வருமா?”

“இருபத்திநாலு மணிநேரமும் நம்மாட்டியும் கையுமாத் திரிகிற ஒங்களுக்கு டவுனெல்லாம் ஒத்து வராது. அது நம்ம ஊரைவிடச் சீரழிஞ்சுப்போச்சி. ஒரே குண்டு வெடிப்பும் கொள்ளையும்தான். டில்லியில கெடந்து நான் படுகிறபாடு எனக்குத்தானே தெரியுது.”

மகனின் முகத்தைக் கூர்ந்து பார்த்தவர் அவன் பேசுவதன் பொருள் புரியாமல் திண்டாடிக்கொண்டிருக்கும்போது மருமகள் இரக்கம் பொங்கப் பேசினாள்.

“மாமாவப் பற்றி நீங்க யாருமே கவலப்படண்டாம். அவரக் கவனிக்க எனக்க அப்பாவும் அண்ணனும் இருக்கினும்.”

தொடர்ந்து அவர்கள் பேசிய வார்த்தைகளில் உட்பொதிந்த திட்டம் ஒன்று இருப்பதையோ, அதை நிறைவேற்றத் துடிக்கும் அவர்களின் ஆவலையோ அறியாதவராகப் படுத்திருந்தார். மகனும் மருமகளும் ரொம்பவும் படித்தவர்கள் என்பதால் அவர்கள் என்ன செய்தாலும் அது நன்மைக்குரியதாகத்தான் இருக்கும் என்றும் நினைத்துக்கொண்டார்.

மகன் பெயரில் அவர் உயில் எழுதிவைத்திருக்கும் சொத்துகளை விலைக் கிரயம் செய்வதற்குரிய உரிமையை அவனுக்கு வழங்க வேண்டும் என்றும் மாமனார் வாள் வச்சான் பாறையில் வரதட்சிணையாகக் கொடுத்த ரப்பர் எஸ்டேட்டில் ஒரு வீடு கட்டித் தந்து தகப்பனாரைக் குடியேற்றுவது என்றும் அங்கே அவர் தனது இறுதிக் காலத்தைக் கழிப்பது என்றும் அவர்கள் கூறியதை அவர் அப்படியே ஏற்றுக்கொண்டார்.

ஏற்கனவே இதுபோல விற்ற சொத்துகளின் பணத்தை அவன் என்ன செய்தான் என்பதையோ தற்போது இந்த நிலத்தை விற்றுக் கிடைக்கும் பணத்தை என்ன செய்யப் போகிறான் என்ற கேள்வியையோ எழுப்பாததுடன் அது பற்றிய சின்ன உணர்வுகூட அவரிடம் இல்லாதிருந்தது. பென்ஷனின்போது கிட்டிய ஐம்பதினாயிரம் ரூபாய் பணத்தை எஸ்டேட்டில் அவர் தங்குவதற்கான வீடுகட்டத் தருமாறு கேட்டபோது மனமுவந்து கொடுக்க வும் செய்தார்.

ஆறு மாதங்களுக்கு முன்புதான் வீட்டோடு சேர்ந்து கிடந்த நிலத்தில் நாற்பது சென்ட் பூமியைப் பக்கத்து வீட்டுக்காரனுக்கு அடிமாட்டு விலையில் நேசராஜ் விற்றான். அப்போது கையெழுத்துக் கேட்டபோது எந்த மறுப்பும் சொல்லாமல் அவர் போட்டுக்கொடுத்தார். இப்போதும் நேசராஜ் அவர்களையே நம்பி இருந்தான். இவர்கள் விளையில் ஓலை முடைந்துகொண்டு கிடந்த பெண்மணி கொத்தனுக்குக் கையாளாக வேலைபார்த்த கணவனை வெளிநாடு அனுப்பி இவர்கள் நிலத்தை விலை கொடுத்து வாங்கும் நிலையை அடைந்துவிட்டார்கள். நேற்றுதான் அந்தக் குடும்பத்தைத் தனது மாமனார் வீட்டுக்கு அழைத்து பிரியாணி விருந்து கொடுத்துத் தனது தந்தையாரை அப்புறப்படுத்திய பிறகு மொத்த நிலத்தையும் அவர்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய்க்குப் பேரம்பேசி அட்வான்சாக ஒரு லட்சம் ரூபாயும் வாங்கி வைத்துக்கொண்டான்.

நேசமணி இதொன்றும் அறியாமல் தனக்காக மகன் கட்டிய வீட்டையும் தான் இனிமேல் நிரந்தரமாகத் தங்கப்போகும் இடத்தையும் பார்க்க அன்று புறப்பட்டார். கூட மகனும் உண்டு. எந்த வழித்தடமும் இல்லாமல் பாறையும், கல்லாம் பொற்றையுமாகக் கிடந்த அந்தப் பகுதியில் நடந்து செல்வது வயதான அவருக்கு மிகவும் பிரயாசமாக இருந்தது. மகன் ஒரு கையைப் பிடித்துக் கவனமாக அவரை மலையின் மேல் ஏற்றினாலும் பல இடங்களில் பொடி சறுக்கி விழுந்தார். அவரது கால்கள் இரண்டும் தள்ளம்பாடின. பத்தடி தூரத்திற்கு ஒரு தடவை அவர் பக்கத்திலுள்ள பாறைகளில் அமர்ந்து இரைப்பார். நெஞ்சைப் பிடுங்கி எடுப்பதுபோல வலி எடுக்கும். தாகத்திற்குத் தண்ணீர்கூட அந்தப் பகுதியில் இல்லாததில் துவண்டு போனார். நேசராஜ் வேறு அவரை அதிகநேரம் உட்காரவிடாமல் துரத்திக்கொண்டிருந்தது வேதனையைத் தந்தது.

காலையில் நாலுமணிக்கு எழும்பிப் புறப்பட்டது மதியம் ஒரு மணிக்குப் போலச் சம்பவ இடத்திற்கு அவர்களைக் கொண்டு சேர்த்தது. வீடு என்று மகன் கட்டித்தந்த இடத்தைப் பார்த்தார். பச்சை மண்கட்டையால் கட்டப்பட்டு ஒரு ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் மட்டும் போடப்பட்டிருந்த அது வீடு என்ற தகுதியைப் பெற்றுத் திகழ மறுத்தது.

“வீடு எப்படி? நல்ல ஜோரா இருக்கு. காற்றோட்டமான இடம். அப்பாக்கி குளுகுளுண்ணு இருக்கும்.”

“கறண்டு இல்லியா?”

“பண்டு அப்பா கறண்டு வௌக்கிலயா படிச்சது? ரேஷன்ல இங்க அஞ்சி லிட்டர் மண்ணெண்ணெய் கெடைக்குது. மாமாட்ட சொல்லுகேன், மண்ணெண்ணெய் விளக்கு வாங்கித் தருவாரு.”

“தண்ணி வசதி எப்பிடியோ?”

“ஒரு பர்லாங் தூரம் நடந்தா ஒரு கொளம் வரும். அதில ஊறு தோண்டிதான் எல்லாரும் இங்க தண்ணி எடுக்கினும்.”

“திடீர்ணு ஒரு சாமானம் தேவைப்பட்டா எப்பிடி வாங்குவது? கடை ஒண்ணும் கிடையாதே? ஒரு நோய்நொடி வந்தா ஆஸ்பத்திரிக்குத் தூக்கீட்டுப் போகப் பாதை வசதிகூட இல்லாத்த இடமா இல்லியா இருக்கு.”

“அப்பா அப்பிடி கொஞ்சதூரம் நடந்து தண்ணியெடுத்துட்டு வந்து நாலஞ்சி தடவை ஏறி இறங்கினாபாரும், ஒடம்பு நல்ல ஆரோக்கியமா இருக்கும். ஒரு சோக்கேடு வராதே. சிற்றியில பாக்கணும், எல்லாருக்கும் சின்ன வயசிலே சுகர்! எப்பிடி வந்து? நடக்கிற பழக்கமே இல்ல. ஒங்களுக்கு அப்படி எல்லாம் வராம இருக்கணும்ணுதான் இப்பிடி நல்ல ஒரு எடத்த ஏற்பாடு செய்தது.”

“ராத்திரி வனவிலங்குகளுக்க உபத்திரவம் உண்டு போல இருக்கே?”

“இங்க பாருங்க அப்பா, மனுஷனத் தவிர வேற எந்த விலங்கும் யாரையும் ஒண்ணும் செய்யாது.”

“வாஸ்தவம்தான்.”

“பத்திரம் எல்லாம் ரெடியாத் தான் இருக்கு. அப்பா ஒரு கையெழுத்து மட்டும் போடணும்.”

“அம்மாவுக்க கல்லறை அங்க இல்லியா இருக்கு?”

“அது ஒண்ணும் பிரச்சினை இல்ல. தோண்டி எடுத்து திரும்ப இங்க கொண்டு வந்து அடக்கம் செய்யலாம். நீங்க இறந்தபிறகுகூட அடக்கலாம்.”

“சரி! போகலாமா?”

ஏறியதைவிட இறங்கிச் செல்வது சற்று சிரமத்தைக் குறைப்பதாக இருந்தாலும் நேசமணிக்கு முன்பைவிடப் பயங்கரமாக இருந்தது. இதயம் வலித்து மனசு கனத்ததே காரணம். கீழே விழுந்து விடுவதுபோல ரெண்டு மூன்று தடவை முகங்குப்புறச் சரிந்தார். பல்லைக் கடித்துக்கொண்டு சமாளித்தார். செத்துப்போன அவர் மனைவியின் நினைவு படர்ந்ததும் முகம்சிவந்து அழுகை வந்தது. ‘ஆண்டவரே! பெத்த மகனுக்க முன்னால என்ன அழவச்சி மானங்கெடுக்கப்பிடாது’ என்று மனசில் வேண்டிக்கொண்டார் அவர்.

வயசான காலத்தில் சொகுசான ஒரு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டவரல்ல அவர். புழங்குவதற்குச் சற்று சிரமங்கள் இருந்தாலும் சமாளித்துக் கொள்ளக்கூடியவர்தான். சின்ன வயதில் அவர் வாழ்ந்த வாழ்க்கை இன்று போல அல்ல, எந்த சௌகரியமும் இல்லாததாகத்தான் இருந்தது. ஆனாலும் உள்ளதைக் கொண்டு சந்தோசமாகவே வாழ்ந்தார்கள். அந்த ஊரில் பனை வைத்து ஏறிய ஒரே குடும்பம் அவர் தந்தையினுடையது. பலர் வந்து பசியாறிச் செல்வதைப் பார்த்து வளர்ந்தவர் அவர். தான் பெண்ணெடுத்த குடும்பமும் அதைப் போலத்தான். தன் மனைவியின் தகப்பனார் பஞ்ச காலத்தில் பல இடங்களில் கஞ்சித் தொட்டிகளைத் திறந்தவர். யாருமே இன்னொருவரைத் தனது குடும்பத்தில் வஞ்சித்தது கிடையாது. ஆனால் இன்று தன் மகன் இப்படி ஒரு இருள் வனாந்தரத்தில் தன்னைக்கொண்டுபோய்க் கட்டிப்போடுவதற்குத் தன் மனைவி உயிரோடிருந்தால் விட்டிருப்பாளா என்று நினைத்ததுதான் தாமதம், குலுங்கிக் குலுங்கி அழுதார். மகன் திரும்பிக்கூடப் பார்க்காமல் முன்னே நடந்து சென்றுகொண்டிருக்கிறான். ஒரு ரப்பர் மரத்தின் மூட்டில் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு ஒன்றுக் கிருப்பதைப் போலக் குனிந்திருந்து ஆசை தீருமட்டும் அழுதார். முகத்தைத் துடைத்துக்கொண்டு எழுந்தபோது மகன் தூரத்தில் ஒரு ஆயினி மூட்டில் தனக்காகக் காத்துக்கொண்டு நிற்பது தெரிந்தது.

தன் மனைவி உயிரோடிருந்த காலத்தில் மகனும், இரண்டு பெண் மக்களும் தன்னிடம் மிகுந்த நேசத்துடன் வாழ்ந்துவந்தார்கள். இடையில் இதயநோயால் மனைவியை மருத்துவமனைகளில் வைத்துக் காத்த நேரங்களில் ஒவ்வொரு மக்களும் வெளியூர்களில் அவரவர் படிப்பைக் கவனித்துக்கொண்டிருந்தார்கள். எந்தத் தடங்கலும் இன்றிச் சமயத்துக்குப் பணம் அனுப்பிவைப்பார். இந்தச் சமயத்தில்தான் பெந்தெகோஸ்து பாஸ்டர் ஒருவன் செம்புலிங்கத்தின் மகளை நேச ராஜிற்குச் சம்பந்தம் கொண்டு வந்தான். கையில் செலவுக்குப் பணமில்லாத சூழ்நிலையில் யார் எவரென விசாரிக்கும் சந்தர்ப்பம் இல்லாமற்போக ஒரு மாதத்தில் திருமணமும் நடந்தது. அடுத்த சில நாட்களில் மனைவியும் இறந்து போனாள். அவளைக் குளிப்பாட்டிப் பெட்டியில் வைத்த பின்னால் நாசுவத்தி அவர் கையில் கொண்டு வந்து கொடுத்தது ஒரு பித்தளைத் தாலி. தாயாரின் தங்க நகைகளை விற்றுப் படித்து முன்னுக்குவந்த மகன்தான் இன்று பணத்திற்காக அவளது கல்லறையைத் தோண்டி எடுத்து வேறொரு இடத்தில் அடக்கம் செய்யத் துடிக்கிறான். நேச மணிக்குத் தலைசுற்றி மயக்கம் வந்தது.

நேற்று சாயங்காலம் மூத்தமகள் வீட்டுக்கு வந்தாள். சரியாக விசாரிக்காமல் ஒரு குடிகாரன் கையில் அவளைப் பிடித்துக்கொடுத்ததால் கொஞ்சகாலம் அவனோடு கிடந்து மாரடித்து ஓய்ந்தவளாய்த் தற்போது இராமநாதபுர மாவட்டத்தில் தண்ணீர் இல்லாத ஒரு பிரதேசத்தில் தனது ஒரு மகள், ஒரு பையனுடன் ஆரம்பப் பள்ளி ஆசிரியையாகப் பணிபுரிகிறாள். எப்போதாவது லீவுக்கு வரும்போது தகப்பனாரை வந்து பார்த்துவிட்டுப் போவாள்.

“அப்பா! சொந்த எடத்தையும் விட்டுட்டு எங்கயாக்கும் போவப் போறிய? இப்பிடித்தான் காப்பிக்காடு வஸ்துவ விற்றான். அனந்த மங்கலம் வஸ்துவ விற்றான். அரச குளம் ஏலாயில விற்றான். வெள்ளையம்பலம் வஸ்து இப்ப சென்றுக்கு மூணு லட்சம் போகும். பாவிப்பய ரெண்டாயிரம் ரூவாவச்சி கையளிச்சித் தள்ளினான். ஆட்டக்கடிச்சி, மாட்டக்கடிச்சி இப்ப ஒங்களுக்கு கெடக்க இடம் இல்லாம ஆக்கப் போறான். அப்பா என்ன செய்துற்று இருக்கீரு?”

“செலவுக்குப் பணம் இல்லன்னு சொன்னான்.”

“தெருவில துண்டவிரிச்சிட்டு எரக்கச் சொல்லுங்க. எங்களக் கெட்டிக் குடுத்தா இவன் கெட்டுப் போனான்? என்ன ஒரு குடி காரனுக்குப் பிடிச்சிக்குடுத்தான். தங்கச்சிய ஒரு வேலை இல்லாதவன் கையில கொடுத்தான். அவிய ரெண்டு பேரும் வெளிநாட்டுக்குப் போனதினால தப்பிச்சினும்ணு நெனச்சிக்கிடும். மாமனாருக்குப் பேச்சக்கேட்டு ஆடுகான். கடைசிக் காலத்தில நீங்க கட்ட நீட்டப்போற வஸ்துவ இல்லியா விக்கப் போறான். பணம் இல்லேன்னா மாமனாரு கொடுத்த நெலங்கள விக்கச் சொல்லுங்க. திரும்பத்திரும்ப இஞ்ச வந்து ஏன் கைய வைக்கினும்?”

“மகளே, அடுத்தவியளப் பற்றி நாம் ஒண்ணும் பேசண்டாம். அது நல்லா இல்ல பாரு.”

“ஏன் பேசண்டாம்? சம்பந்தப்பட்டா பேசித்தான் ஆவணும். பேசாம ஒண்ணும் தீராது. அப்பாக்க நெலத்த ஒற்றி வச்சி அண்ணன் பெண்டாட்டி தங்கச்சிக்க என்கேஜ் மென்ட்றுக்கு ஒரு லச்சம் கொண்டு பொய்க் குடுத்தாக்கில நீரு பேசி இருந்தா இப்பிடி ஒரு நெலம ஏற்படுமா? அரகுளம் ஏலாய விற்று மாப்பிளையும், பெண்டாட்டியும் வெளிநாட்டுக்கு டூர் போச்சினுமே, ஒரு வார்த்த பேசினியளா? நீங்க பாடுபட்டுச் சேத்த சொத்துக்கள எல்லாம் நிமிஷத்தில விற்று அவா கைநெறைய வளையங்களா வாரி அணியிறா. அவளுக்க தங்கச்சியோ, தம்பிமாரோ கேட்டா சும்மா கழற்றிக் கொடுக்கிறா. இன்னா பாரும், எனக்கக் கழுத்தில கெடக்கியத. . .”

அவள் இழுத்துக்காட்டியதில் அறுந்து கையோடு வந்த கில்ட் செயின் தரையில் விழுந்தது. அப்பாவியாக வளர்ந்த பெண் வாழ்க்கைச் சூழலில் எந்த அளவுக்கு ஆவேசக்காரியாக மாறிவிட்டாள் என்ற திகைப்பு மாறாமல் அப்படியே உட்கார்ந்திருந்தார்.

அவள் பேசியதிலுள்ள நியாயமும், அர்த்தமும் இப்போதுதான் அவருக்குப் புரிந்தது போல இருக்கிறது. அதிலும் திரும்பிச் செல்லும்போது கடைசியாக அவள் தனக்குத் தந்த எச்சரிக்கையைத் திரும்ப ஒருமுறை நினைத்துப் பார்த்தார்.

“அப்பா, கடைசியா நான் ஒண்ணு சொல்லியேன். நல்லாக் கேட்டுக்கிடணும். ஒங்க எடத்தில இருந்தா யாரக்கண்டும் பயப்படாம இருக்கலாம். சொக்காரளும், அருவக்காரளும் உண்டு. இத விற்றுட்டு அடுத்தவியளுக்க ஒண்டுடியில போறீருண்ணு வச்சிருங்க, ஒருபய மதிச்சமாட்டான். பெறவு குடிச்ச வெள்ளம்கூடக் கெடச்சாது பாத்திடுங்க. இப்ப வீட்டுக்க மின்ன கெணறாவது கெடக்குது.”

“சரியாத்தான் சொன்ன” என்று சத்தமாக அவர் பேசியதைக் கேட்டு மகன் திரும்பிப் பார்த்தான்.

“என்ன அப்பா சொன்னீங்க?”

“ஒண்ணுமில்ல.”

மகள் எவ்வளவு தீர்க்கதரிசனமாகச் சொன்னாள், ‘குடிக்கத் தண்ணி கெடைக்காது’ என்று. அது எவ்வளவு சீக்கிரத்தில் உண்மையாக மாறிவிட்டது. ஒருவேளை அவள் அம்மாதான் மகளின் வடிவில் இருந்து பேசினாளோ?

“அப்பா, எல்லாருக்கும் ஒங்க பென்ஷன் பைசா மேலதான் கண்ணு. ஒங்கமேல இல்ல. செம்புலிங்கம் அவன் எடத்துக்குக் கொண்டு போனான்னா ஒங்க காசில் வெளையாடலாம்ணுதான் திட்டம் போடறான். ஒருக்காலும் சம்மதிக்காதீங்க.”

பஸ் குலுங்கி நின்றபோதுதான் அவர் தன்னுணர்வு பெற்றார். அதற்குள் தொடுவெட்டி வந்துவிட்டது. ஆட்களின் கூட்டத்தில் தட்டுப்படாமல் மெதுவாக எவ்வளவு பவ்வியமாய் மகன் இறங்குகிறான். ஆனால் மனசுக்குள் எத்தனை அதிகம் மாய்மாலங்களை வைத்துக்கொண்டு பிறரை வஞ்சிக்கத் துடிக்கிறான். சொந்த அப்பனும் இப்போது பிறன்தானே. இந்தக் குணம் யார்வழி அவனுக்குள் வந்து புகுந்திருக்க வேண்டும்? டவுன் வாழ்க்கை இவ்வளவு பெரிய சதிச்செயல்களை ஒருவன் மனசில் சுலபமாக ஏற்றிவிடுமா?

நேசராஜ் தகப்பனின் அருகில் வந்தான். அவர் பஸ் படிக்கட்டில் இறங்குவதற்கு உதவிசெய்தான். காலை முதல் சாயங்காலம்வரை எவ்வளவு தூரம் கரடுமுரடான இடங்களில் தன்னை நடத்திக்கொண்டு வந்தான். இப்போது உதவிக்கு வருகிறான். பாவிப்பயலே! என் மனசு படுகிற பாட்டை உன்னால் அறிய முடியவில்லை. கால்கள் வீங்கி இருப்பதையுமா உன் கண்கள் காண மறுக்கின்றன?

பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த சிமென்ட் பெஞ்சில் அமர்ந்த பிறகுதான் சற்று ஆசுவாசம் வந்தது. ஊருக்குச் செல்லும் பேருந்து வந்து நின்ற பிறகும் அசதியால் அவர் எழாமலிருந்தார். நேரம் இருட்டிவிட்டது. பேருந்துகளில் பெருங்கூட்டம். இனிமேல் ஒருமணி நேரம் நின்று பயணம் செய்வதென்பது முடியாத காரியம். சற்று கூட்டம் குறையட்டும் என்று காத்திருந்தார்.

“நான் கேட்ட காரியம் பற்றி அப்பா பதில் எதுவும் சொல்லாமப் போறியளே?”

“நீ இப்ப நம்ம வீட்டுக்குத்தானே வாற?”

“இல்ல அப்பா. இண்ணு மாமா வீட்டில நிக்கப் போறதா ஏற்கனவே சொல்லிட்டேன். நாளை காலை பதினொரு மணிக்கு டில்லிப் போற ராஜதானி எக்ஸ்பிரஸ் ரெயிலப் பிடிக்கணும்.”

“அப்ப செரி!”

“பத்திரம் எல்லாம் ரெடியா இருக்கு. டில்லிக்குப் புறப்படும் முன்பு அப்பா ஒரு கையெழுத்துப் போட்டாப் போதும்.”

“அது பற்றி உனக்கு நான் கடிதம் எழுதுகிறேனே.”

மறுநாள் காலையில் சிறுபிராயத்திலிருந்தே தன்னுடன் பயின்ற கண்ணங்கரை நாயர் வீட்டுக்குச் சென்றார். வாதநோயால் படுத்திருந்த அவருக்கருகில் உட்கார்ந்து வாஞ்சையோடு அவர் கால்களைத் தடவினார். நாயரின் மருமகள் கொடுத்த ஏலக்காய் டீயை ரசித்துக் குடித்தார். சிறிது நேரம் களிப்பும் சிரிப்புமாகப் பழைய காலத்துச் சம்பவங்களையெல்லாம் நினைவுகூர்ந்தவர்கள், அதன்பிறகு சீரியசான பேச்சுகளில் மூழ்கினார்கள்.

நாயர் எப்படித்தான் வழக்கறிஞர் தொழிலைச் செய்தாரோ, தெரியாது. கள்ளம் கபடம் என்பதைச் சிறிதுகூட அறியாதவர். அதுவே தொழிலாக இருந்த உலகத்தில் அவரும் இயங்கினார் என்பதுதான் அபூர்வமான விஷயம். அவரது வீட்டுக் காம்பவுண்ட் சுவரோரமாக நின்றுகொண்டிருந்த தென்னைமரத்தில் ஒருநாள் சிறுவன் ஒருவன் ஏறித் தேங்காய் திருடிக்கொண்டிருந்தான். அப்போதுதான் வெளியே எங்கோ சென்றிருந்த அவர் வீட்டுக்கு வந்தார். அவரைக் கண்டதும் சிறுவன் தேள் கொட்டியது போலத் திடுக்கிட்டான். அவனைக் கண்ட நாயர் வாசற் கதவைத் திறக்க வந்ததையும் மறந்து வெளியே இறங்கி ரோட்டில் இன்னொரு திசையை நோக்கி ஓடினார். என்னவென்று விசாரித்தவர்களிடம், தனது வீட்டுத் தென்னை மரத்தில் சிறுவன் ஒருவன் ஏறியதையும், ஒருவேளை தன்னைக் கண்ட பரபரப்பில் வேகமாக இறங்கினால் கீழே விழுந்து அவனுக்கு அடிபட்டுவிடுமோ என்று அஞ்சி, தான் திரும்ப நடப்பதாகவும் கூறினார்.

வீட்டுக்கு வெளியே வாசல்வரை இறங்கி அவருடன் வழியனுப்ப வந்த நாயர், “நேசமணி, என்ன காரியமானாலும் பயப்படாத. தைரியமாக இரு. எதையும் ஒருகை பாத்துடலாம்” என்று ஊக்கம் தந்தார். அந்தத் தெம்பில் மகனுக்கு ஒரு கடிதத்தை எழுதினார் நேசமணி.

“எனக்கு நீ மட்டும் மகனல்ல, வேற இரண்டு பெண்கள்கூட உண்டு என்பதை ஞாபகத்தில் வச்சிக்க.”

கடிதத்தின் சாராம்சம் இவ்வளவு தான். ஆனால் அது வெளிப்படுத்திய அவரது மனநிலையையோ, செயல்பாடுகளின் நகல் வடிவையோ மகனும் மகளும் உட்பட அவனது மாமனாரின் குடும்பத்தினர் அறியும் பக்குவத்தில் இல்லை. அவர்களிடம் கேலியும் தமாசுமாகவே அவர் கருதப்பட்டார்.

கடிதத்தைக் கையில் வைத்துக்கொண்டு நேசராஜின் மனைவி அவனைக் கேலி பொங்கப் பார்ப்பாள்.

“ஓகோ, அப்ப உங்க தகப்பனாருடன் நீங்க மூணு ஆம்பிள்ளைய, அப்படித்தானே?”

“ரெண்டு ஆம்பிள்ளையளக்கூட இருத்திக் கடைசி காலத்த இனிமே அவரே பாக்கட்டும். நமக்கும் எளுப்பம்.”

கிழவர் ஒன்பது மாதகாலம் தனிமையில் யாருடைய துணையும் இல்லாமல் வாழ்ந்தார். காலையில் ஒரு பாத்திரத்தில் உளுந்தும், அரிசியும் போட்டு அடுப்பில்வைத்துத் தீமூட்டுவார். காலையும் அதுதான், மாலையும் அதுதான், இரவுக்கும் அதுதான். தணுத்துச் சளித்துப்போன கஞ்சியை அமிர்தமாகப் பருகுவார். துணைக்கு அருகில் பிலிப்ஸ் ரேடியோ. அது நிறைய மனிதர்களை அவருக்கு அறி முகம் செய்துவைத்தது. அவர்களில் சிலரை மிகவும் பிடித்தது. சந்திர புஷ்பம் பிரபு, உமா கனகராஜ் போன்றவர்களைத் தனது பிள்ளைகளாகவே நினைத்துக்கொண்டார். அவர்களுடன் உரையாடும் மனிதர்களின் கருத்துகளையும் சுகதுக்கங்களையும் அறிந்துகொள்வதுடன் தானும் சிலநேரங்களில் அவர்களுடன் பேசிக்கொள்வார். மூத்த மகள் லீவில் இரண்டு பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு வந்திருந்தாள். அந்த மூன்று நாட்களும் அவரது நாவுக்கும் வயிற்றுக்கும் செழுமை தான். ஆட்டுரலைக் கழுவித் தோசைக்குப் போட்டாள். தகப்பனுக்குப் பாயாசம் வைத்துக் கொடுத்தாள். அவரது துணிமணிகளையும் உறங்கும் பெட்ஷீட்டையும் நனைத்து உலர்த்தித் தேய்த்துக்கொடுத்தாள். அறைக்குள்ளாக நீர் ஒழுகிச்செல்லும் அங்கணத்தில் கொண்டிருத்தித் தகப்பனின் முகத்தில் சோப்பு தேய்த்தாள். ரேசரைக் கையில் எடுத்த போதுதான் அவருக்கு விஷயம் புரிந்தது. ‘வேண்டாம், தாடி இருக்கட்டு’ என்று தடுத்துப் பார்த்தார். பேரன் அதைக் கையில் வாங்கிச் சவரம் செய்துகொடுத்தான்.

“இப்ப பாருங்க, சுந்தரக்குட்டனா அப்பா மாறி இருக்கு. சும்மா இதென்ன சாமியார் வேஷம்?”

கண்ணாடியில் பார்த்தபோது அவரது முகம் அவருக்குத் தெரியவில்லை. மகளின் முகம்தான் தெரிந்தது. வெளி பறந்த வீடும் விருத்தியாகி எண்ணெய்ப் பசைகளும் புகைக்கரிகளும் மாறிய கோலத்தில் ஒளி பிறந்தது.

மகளின் பையன் தாத்தாவோடு மிகவும் ஒன்றிப்போனான். அவரது படுக்கையில் ஏறி அவன் மோண்டு ஊத்தியதை அவர் மிகவும் ரசித்தார். யாரும் அறியாமல் ஒளித்தொளித்து இடையிடையே போய் தாத்தாவை நுள்ளினான். அப்போதெல்லாம் அவர் வாய்விட்டுச் சிரித்துக்கொண்டார். ஒருதடவை தாயார் கண்டுவிட்டாள். அடிக்கப் போனவளைத் தடுத்து நிறுத்தி, ‘குழந்தையும், தெய்வமும் ஒன்று’ என்று கூறி ஆசிரியைக்கே பாடம் நடத்தினார். ஒருநாள் மகன் தாயாரிடம், ‘தாத்தா ஏன் ரேடியோவப் பாத்து சும்மா பேசிக்கிட்டே இருக்காரு?’ என்று கேட்டான். ‘தாத்தாவுக்குப் பேச யாரும் கிடையாததால் அப்படிப் பழக்கப்பட்டுவிட்டாரு’ என்றாள். ‘யாரும் கிடையாதா?’ என்று பையன் கையை மறித்து மறித்துக் காட்டினான். ‘நான் தாத்தாகூட நிக்கட்டுமா?’ என்று மகன் கேட்டான். ‘நீ தாத்தாவக் கடிச்சுப் போடுவ’ என்று தாயார் கூறினாள். ‘இல்லம்மா. தாத்தாவ நான் கடிச்சவே மாட்டேன். எனக்க முதுகில ஏற்றிக்கிட்டுப் பறந்து போவேன்’ என்றான். கிழவரின் கண்கள் நீரால் தளும்பின.

அன்றிரவு பைபிளை எடுத்து மகளிடம் கொடுத்துப் பல இடங்களைப் படிக்கச் சொல்லிக் கேட்டார். சில இடங்களைத் திரும்பத் திரும்பப் படிக்கக் கூறினார். அவரது கண்கள் மூடியே இருந்தன. பையன் இடையிடையே, ‘தாத்தா உறங்குகிறார்’ என்று கூறினான். அப்போதெல்லாம் அவனைப் பார்த்து மெல்லிய புன்னகையை அவர் தவழவிடுவார். கடைசியில் பாட்டுப் புத்தகத்தை எடுத்துச் சில பாடல்களைப் பாடச் சொன்னார்.

என் நேசர் ஏசுவின் மேல் சாய்ந்தே

துன்ப வனாந்திரத்தில் நடந்திட

இன்பநல் வாழ்வடைந்தேன். . .

கடைசி இரண்டு வரிகளை மேலும் ஒரு தடவை அழுத்தமாகப் பாடும்போது அவர் உள்ளம் உருகியது. பாடுகிறவளின் குரலும் இரக்கத்தைத் தூண்டுவதாக இருந்தது. கண்களை மெதுவாகத் திறந்தவர் மகளை ஒருமுறை பார்த்தார். அவள் புன்னகைத்தவாறு பாடலை நிறுத்தாமல் அவரைப் பார்த்துக்கொண்டே தொடர்ந்தாள்.

நேசர்கொடி என்மேல் பறக்க

நேசம் மரணம்போல் வலிதே.

வெள்ளங்கள் திரண்ட தண்ணீர்களால்

உள்ளங்கள் அணைந்திடாதே.

திடீரென்று அவர் முகம் வேறொரு தோற்றம் கொண்டது. அவள் பாடுவதை நிறுத்தினாள். அருகே சென்று ‘அப்பா!’ என்று அழைத்தாள். மறுகி ஒரு பார்வை மட்டும் அவளைப் பார்த்தார்.

“மகளே! ஒனக்கு மட்டும்தான் என்ன எப்பவாவது ஒருக்கா வந்து பாக்கணும்ணு தோணுதுபோல இருக்கு. எனக்கு யாரும் இல்ல. நீ வரும்போது நான் படுத்துக் கெடந்தா, எனக்க சரீரத்த ஒண்ணு அனுக்கிப் பாக்கணும் மக்கா. . .”

அதற்கு மேல் அவரால் தாள முடியவில்லை. கதறி அழுதார். அவர் அழுகையைக் கட்டுப்படுத்த அவராலேயே இயலவில்லை. மகன் முன்புவைத்து அழுவதைக் கேவலமாக நினைத்தவர், எல்லாவிதமான கூச்சநாச்சங்களையும் கடந்து சென்றுகொண்டிருந்தார். அவர் அழுகை ஏனோ மகளுக்கு வருத்தத்தை ஏற்படுத்தவில்லை. தந்தையார் தன்னை அடித்ததாக ஒரு ஞாபகம் அவளுக்கு ஏற்பட்டதே இல்லை. எல்லாவற்றிற்குமாகச் சேர்த்து வட்டியும் முதலுமாகத் தந்துகொண்டிருக்கிறார் என்பதுபோல நினைத்தாள்.

தகப்பனாரிடம் விடைபெற்றுத் திரும்பும்போதும் மகள் முகத்தை இறுக்கமாகவே வைத்துக்கொண்டாள். பையன் மட்டும் ‘தாத்தாக்க கூடவே இருக்கியேன்’ என்று அழுது அடம்பிடித்தான். பேருந்தில் செல்லும்போது உறக்கத்திலும் ‘தாத்தா’ என்றுதான் அழுதான்.

சரியாக ஒருவாரம் கழித்து மகளிடமிருந்து கடிதம் ஒன்று வந்தது. அதில் எதற்கும் அவர் கவலைப்படத் தேவை இல்லை என்றும், வயோதிகக் காலத்தில் தன்னுடன் யாரும் இல்லை என்கிற நினைப்பை முதலில் விட்டுவிடுமாறும் கேட்டுக்கொண்டாள். அடுத்த பத்தியில் அவருக்காக அவள் செய்ய விரும்பும் சில ஏற்பாடுகள் குறித்துத் தெரிவித்திருந்தாள். அது அவருக்கு ஏற்புடையதுதானா என்பதையும் கூறுமாறு எழுதினாள்.

அதன்படி, தனது இடமாற்றல் சிரமத்திற்குரியது என்பதால் தனது கணவனை முதலில் குமரி மாவட்டத்திற்கு இடம் மாற்றிக்கொண்டு வந்து அவருடன் தங்கவைப்பது. பிறகு தானே எளிதில் இடமாறுதல் பெற்று வந்துவிடுவது. அதன்பிறகு பக்கத்தில் கொஞ்சம் போல நிலம் வாங்கி செட்டில் ஆவது என்றும் அவள் போட்ட திட்டத்தை வாசித்தவர், மகளின் திறமையை மெச்சி உடனே பதில் கடிதமும் போட்டார். அதில், தனது உதவிக்கு மூத்த மகளைக்கூட அனுப்பினால் அவளது படிப்பிற்குரிய செலவைத் தான் ஏற்பதாக எழுதியிருந்தார். இரண்டு நாள் இடைவெளியில் வந்தது திரும்பவும் மகளின் கடிதம்.

இந்தக் காலத்தில் வயதுவந்த பெண்ணைத் தகப்பன் என்றாலும் தாய் இல்லாத நேரத்தில் கூடத் தங்கவைக்கக் கூடாது என்றும் அங்கிருந்து வந்தது முதல் பையன் எப்போதும் தாத்தாவின் நினைவிலேயே இருப்பதால் அவனை அனுப்பிவைக்க விருப்பப்படுவ தாகவும் எழுதப்பட்டிருந்தது. பேரன் வருகிறான் என்பதை அறிந்து மகிழ்ச்சியில் ஆழ்ந்தாலும் கணவன்களைப் பெண்கள் இவ்வளவு மட்டமாக எடைபோடக் கூடாது என்றும் நினைத்துக்கொண்டார்.

மருமகன் ஜான்பாபு குறித்து அவர் செவிவழிச் செய்திகளாக நிறையவே கேள்விப்பட்டிருக்கிறார். நேரில் பார்க்க ஒரு நோஞ்சான் கணக்கில் பாவம் போலவே இருந்தான். ஊரில் பலர் அவனைக் குறிப்பிடும்போது ‘சீக்கிறி’ எனப் பெயரிட்டு அழைத்தார்கள். அது கேட்டு ஒருபுறம் அவருக்கு வருத்தம் இருந்தாலும், மனசில் சிரிப்பு எழாமலும் இல்லை. தன்னைப் பொறுத்தமட்டில் மிகவும் மரியாதையாகத்தான் நடந்து கொள்கிறான் என்பதை நினைத்துப் பார்த்தவர், அதற்கு மேல் என்ன வேண்டும் என்றும் யோசித்தார்.

மூத்த மகளுக்குத் திருமணமான புதிதில் எல்லோருமாகச் சேர்ந்து சர்ச்சுக்குப் போய்விட்டுத் திரும்பும் போது ஒருநாள் ரோட்டோரத்தில் ஒருவன் படங்களைப் போட்டு விற்றுக்கொண்டிருந்தான். அதிகமும் தேசத் தலைவர்களும் சினிமா நடிகர்களுமாக இருந்த அந்தத் திருக்கூட்டத்தில் ஜான்பாபு ஒரு படத்தைக் கையில் எடுத்து வைத்துக்கொண்டு, ‘யார் மாமா இந்தத் தொப்பிக்காரன்?’ என்று கேட்டான். மருமகன் தமாஷ் பண்ணுவதாக முதலில் நினைத்தவர், அவன் கேட்ட விதத்தையும் முகபாவனைகளையும் வைத்துக்கொண்டு, ‘உண்மையிலேயே இவரை உங்களுக்குத் தெரியாதா?’ என்று கேட்டார். ‘தெரியாததினால்தானே உங்களிடம் கேட்கிறேன்’ என்றான். ‘இவர்தான் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்’ என்று கூறினார். ஜான்பாபு வரலாற்றுப் பாடம் நடத்தும் பள்ளி ஆசிரியர் என்பதைத் தெரியாத எவருக்கும் இதில் வியப்பதற்கு எதுவும் இல்லை. நேதாஜி சுபாஷ் சந்திரபோசைத் தெரியாத ஒருவன் வரலாற்று ஆசிரியனாக இருக்க முடியாதா என்று கேட்டாலும் தற்காலத்தில் வியப்பதற்கு எதுவும் இல்லைதான். அவரை அறியாவிட்டால் ஜனங்களுக்கு என்னதான் குறைஞ்சு போச்சு?

நேசமணி தன்னுடன் படித்த கனகராஜை நினைத்துக்கொண்டார். படிப்புக்கும் அவனுக்கும் எட்டாம் பொருத்தம். வாத்தியார் அவனைப் போட்டு அடிக்கிற அடியில் மொத்தப் பள்ளிக்கூடமே கூடிவிடும். ஒருநாள் ஆங்கிலப் பாடம் நடத்தும் தேவசகாயம் ஹெட்மாஸ்டர் அவனிடம், ‘ஆங்கில மொழியில் எத்தனை எழுத்துகள் உண்டு?’ என்று கேட்டார். அவன் உரத்த குரலில் ‘நாப்பத்திநாலு’ என்றான். ‘வேற கூடுதலா எதாவது உண்டா?’ என்று கேட்டார் ஆசிரியர். அவன் மனசுக்குள் வைத்துக் கூட்டிப் பார்த்துவிட்டு, ‘இல்லை’ என்று கூறினான். மொத்த வகுப்பும் சிரிப்பில் அலை மோதியது. ‘நாற்பத்து நாலு எழுத்தையும் எழுதுவியா?’ என்று கேட்டவாறு அவனை வகுப்புக்கு முன்னால் அழைத்து சாக்பீசைக் கையில் தந்தார். அவன் சொன்னது போலவே நாற்பத்து நான்கு எழுத்தையும் ஒன்றுகூடக் குறைக்காமல் எழுதிக் காட்டினான். ஆங்கிலத்திலுள்ள பெரிய எழுத்துகளையும் சின்ன எழுத்துகளையும் கலந்து எழுதியிருந்தான். அந்த அளவுக்கு அறிவாளியான அவன் பள்ளியொன்றில் உடற்கல்வி ஆசிரியராகப் பணி புரிந்து, கூட வேலைபார்த்த வேதியியல் ஆசிரியையை மணம் முடித்து இன்று இரண்டு பென்ஷன் வாங்கிக்கொண்டிருக்கிறான். ஆங்கில மொழியறிவு பெற்ற தன்னால் ஒரு எல்.டி.சி. கிளார்க்காக மட்டுமே முடிந்தது. வெறும் படிப்பிலும் திறமையிலும் மட்டுமா ஒளிந்து கிடக்கிறது வாழ்க்கை?

ஜான்பாபுவின் திருமண ஆலோசனையை நேசராஜின் மாமனார் செம்புலிங்கமே கொண்டுவந்தார். ‘பையனை எல்லோரும் ஒரு தடவை போய்ப் பார்த்துவிட்டு வருவது நல்லதில்லையா?’ எனக் கேட்டதற்குத் தந்தையிடம், ‘மாமா பாத்தாருண்ணா பாத்தது போலத் தான் இருக்கும்’ என்று கூறினான் நேசராஜ். ஜான்பாபுவுக்குத் தனக்கொரு மச்சினன் உண்டு என்பது தெரியுமே தவிர, நேரில் பார்த்தது கிடையாது. கல்யாண மண்டபத்தில் எதிர்மாலையும், சந்தனமும் போட வந்தபோதுதான் அவனை முதன் முதலாகக் கண்டது.

மண்டபம் முழுக்கக் குடிகாரப் பயல்களின் கூட்டமாக இருந்தது. சாப்பிடும் இடத்தில் யாரோ ஒருவரின் இலையில் இருந்த பொரித்த கோழி இறைச்சித் துண்டை மாப்பிளைக் கூட்டத்தான் ஒருவன் எடுத்துத் தின்றுவிட்டு எலும்பை அவர் மேல் எறிந்ததற்காக ஒரு கூட்ட அடி அப்போதுதான் நடந்து முடிந்திருந்தது. மலர் சொரி பாடலுக்குப் பிள்ளைகள் தயாராக முன்னே வந்து நின்றார்கள். எழும்பி நடப்பதற்குச் சீவனற்ற ஒருவன் பெரிய குப்பி கிளாசில் எதையோ கொண்டுவந்து எல்லாரும் பார்த்துக்கொண்டிருக்கக் கொடுத்துவிட்டு, ‘அண்ணன் சர்பத்து கேட்டாரு’ என்று சத்தமாய்ச் சொன்னான். ஜான்பாபுவும் அதை வாங்கி மடக்கென்று குடித்தான். பக்கத்திலிருந்த மணப்பெண்ணுக்கு அது சர்பத் அல்ல என்று மணத்தது.

கல்யாணப் பெண்ணுக்குச் சாப்பாடு இறங்கவில்லை என்று தோழிகள் கிண்டலடித்தனர். ஆனால் அவளோ சுரத்தில்லாமல் இருந்தாள். பெயருக்குக் கையை இலையில் இட்டு விரவினாள். கை கழுவப் போகும் இடத்தில் செம்பு லிங்கம் நின்றுகொண்டிருந்தார். அவள் இரத்தம் முழுக்கத் தலைக்கேறியதுபோலக் கோபம் மூண்டது.

“இந்தத் தெண்டிப்பயல நீருதானா ஓய் எனக்குச் சம்பந்தம் பாத்தீரு?”

“என்ன பேச்சிது மரியாத இல்லாம? கொஞ்சம் பதுக்கப் பேசு பிள்ள. ஆளுவ பாக்கினும்.”

“ஆளுவ நொட்டிச்சினும். தள்ள இல்லாத பெண்ண எங்கெயும் கொண்டு தள்ளீட்டு மருமகனுக்க வகையள எல்லாம் அபகரிச்சப் பாக்குதீரா? வௌங்க மாட்டீரு ஓய் நீரு.”

அவள் திருமணச் சேலையில் கண்ணீரை வழித்துத் துடைத்தாள்.

“சக்கைய சூந்து பாக்கியதுபோல இந்த விஷயத்தில முடியுமா பிள்ள?”

“ஒம்ம மொவளுக்கு சூந்து பாக்காமத்தான் மாப்பிள பாத்தீரோ?”

இவளிடம் பேசி ஜெயிக்க முடியாது. இவள் தங்கச்சிகாரியப் போல அல்ல, அக்காளாக்கும். அக்கா மூதேவிதானே. இனி தங்கச்சி ஸ்ரீதேவியையும் இதுபோல எங்கெயாவது கொண்டு தள்ளீட்டா நம்ம பிளான் சக்சஸ் என்று மனதில் நினைத்தவாறு மெல்ல நழுவிப் போனார் செம்புலிங்கம்.

ஜான்பாபுவுக்குத் தனது மாமனாருடன் தங்க மனசு இல்லை. சென்னைக்கு ஒதுக்குப்புறமான ஆந்திரா பார்டரில் யாருடைய கண்காணிப்புமற்ற ஒரு பிரதேசத்தில் தனது ராஜாங்கத்தை அமைத்துப் பரிவாரங்களுடன் பாக்கெட் சாராயத்தில் சதா மிதந்துகொண்டிருந்த அவன் அந்த வாழ்க்கையை இழப்பதற்குச் சம்மதிக்கவில்லை. ஊருக்கு மாற்றலாகி வந்தால் பணிக்குச் செல்ல வேண்டும். தற்போது தேதி போடாமல் ஒரு லீவு லெட்டர் கொடுத்துவிட்டு ஊர்சுற்றிக்கொண்டு தைரியமாகத் திரியலாம். அதிகாரிகள் வந்தால் தேதி போட்டுவைக்க அங்கு ஆட்கள் உண்டு. இங்கே சில தென்னந் தோப்புகளும் மரிச்சினிக் குழிகளும் தான் உண்டு.

கணவனின் மனநிலையைப் புரிந்துகொண்ட மகள் தனது தந்தைக்காக அவனை வழிக்குக் கொண்டு வரும் முயற்சியில் இறங்கினாள். குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு நேரே மாமியார் வீட்டுக்குச் சென்றாள். சென்னையில் ஒரே குடியும் கூத்தும் என்பதை எடுத்துரைத்தாள். தன் தந்தையாருடன் ஊருக்கு வந்து அவன் தங்கவில்லை என்றால் நாளை காலை பத்து மணிக்கு இரண்டு பிள்ளைகளின் தலையில் மண்ணெண்ணெய் விட்டுத் தீக்குளிக்கப் போவதாகச் சொன்னாள். என்ன நடந்ததோ ஏது நடந்ததோ, உண்மையான லீவை எடுத்துக்கொண்டு மறுநாள் காலை பத்துமணிக்கு முன்பாகவே ஊர் வந்து சேர்ந்தான். அவனைக் குளிக்கவைத்துக் காலை உணவைச் சாப்பிட அளித்தாள். கூட்டாளிகள் எவரையும் அவனுடன் திரிய அனுமதிக்காதவள், வீட்டிலும் ஏற்ற மறுத்தாள். இரண்டு மூன்று தடவை அவனைத் தேடி வந்தவர்கள் அதன்பிறகு வரவே இல்லை.

காலையில் பறவைகளின் ஒலியோடு கலந்து வந்த சில புதிய குரல்களையும் சேர்த்துக் கேட்ட ஜான்பாபு புரண்டு படுத்தான். அவன் கனவில் திராட்சைக் கொடிகளுக்கு நடுவே அம்மணமாகத் தேவதைகள் உலாவினர். இருட்டு சுத்தமாக நீங்கும் முன்பே குடங்களை நரக்கும் ஓசை எரிச்சல்படுத்தக் கனவு கலைந்தது. ஓடிவந்து கிணற்றங் கரையைப் பார்த்தான். அவனால் நம்பவே முடியவில்லை. ஒரு அடி உடுப்பும் போட்டுக்கொண்டு ஊரில் மூக்கு பாய்ச்சிக்கொண்டு திரிந்த பெண்களெல்லாம் சடங்காகித் தாவணியும் போட்டுக்கொண்டு கூட்டமாய் நின்று நீரெடுத்தார்கள். அவர்களின் கும்மாளமும் குலவையாட்டமும் அவனுக்குள் முறுக்கத்தை ஏற்படுத்தியது. அவன் தங்களைப் பார்ப்பது கண்டதும் பெண்கள் கூட்டம் சற்று அமைதியானது போலக் காணப்பட்டது. தனக்கானது அந்த அமைதி என்று நினைத்தபோது அவன் இன்னும் ஆனந்தம் கொண்டு ஒரு பாட்டை முணுமுணுத்தான். வீட்டுக்கு வந்து கட்டிலில் படுத்தபோது அதே பாட்டைக் கிணற்றங்கரையில் யாரோ முணுமுணுப்பது கேட்டது. ‘கள்ளக் குட்டியளே. . .’ என்று மனத்திற்குள் சொல்லிக்கொண்டான்.

ஜான்பாபுவுக்கு இப்போது இந்த ஊரிலும் கொஞ்ச நாள் தனது ராஜாங்கத்தை நடத்தலாம் என்ற ஆசை வந்தது. காலை ஆகாரம் சாப்பிடும்போது மனைவியிடம் தன் மாமனாரின் வயோதிகம் தன்னை மிகவும் பாதித்ததாகவும், அவருடன் கூட இருந்து கவனிப்பது தனக்குக் கிடைத்த பாக்கியம் என்றும் தெரிவித்தான். தங்கள் குடும்ப வாழ்க்கையில் இவ்வாறு தன் கணவன் தன்னிடம் பேசுவதை முதன்முதலாகக் கேட்டபோது அவளால் நம்பவே முடியவில்லை. நேற்று இரவு முழுவதும் உறங்காமல் தன் தகப்பனுக்காக அவள் மிகவும் உருக்கத்தோடு ஜெபம் செய்தாள். ஒரு ராத்திரிக்குள் தன் கணவனிடம் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய ஏசுகிறிஸ்துவுக்கு அவள் ஸ்தோத்திரம் சொன்னாள்.

அடுத்தநாள் மகளுக்குப் பள்ளிக் கூடம் செல்ல வேண்டும். கணவனது வேலைமாற்றல் உத்தரவைப் பெற்றுத்தரும்படி மானாமதுரையில் ஒருவரைச் சந்தித்துவிட்டு ஏர்வாடி திரும்ப நினைத்தாள். அன்று இரவு கணவனை இருத்தி நீண்டநேரம் உபதேசம் செய்தாள். கண்பார்வை தெரியாத தகப்பனுக்கு அருகில் அகலாமல் இருந்து செய்ய வேண்டிய காரியங்களை எடுத்துரைத்தாள். பையனைத் தினந்தோறும் பக்கத்துப் பள்ளியில் கொண்டுபோய் விட்டுக் கூட்டிக் கொண்டுவரும் காரியத்தை முடங்காமல் செய்யக் கேட்டுக்கொண்டாள்.

மருமகனின் அருகாமை நேச மணிக்குச் சற்று இணக்கமாகத்தான் இருந்தது. பால் வந்ததும் காப்பி போடுவான். எரிப்பு தூக்கலாக ஒரு சாம்பார் காய்ச்சி வைப்பான். முட்டை பொரிப்பான். ஆனால் சோறு பொங்கத் தெரியாது. ஒன்றிரண்டு நாட்கள் அரிசியைக் கழுவிப் பானையில் போடக் கற்றுக்கொடுத்தார். பிறகு அதை அப்படியே தாத்தாவிடமிருந்து கற்றுப் பொடியன் செய்தான். பானையைச் சரித்துவைப்பது மட்டும் மருமகனின் வேலையாக இருந்தது.

ஜான்பாபு மீன் பொரிப்பது சுவாரசியமாக இருந்தது. சீனிச் சட்டியில் ஒரு லிட்டர் எண்ணெயையும் அப்படியே கவிழ்ப்பான். மீன் துண்டங்களை அதன்மீது மிதக்கவிடுவான். தூரத்தில் இருந்து பார்ப்பதற்குச் சிதறால் கயத்தில் சதுரமீன்கள் நீந்தி விளையாடிய கதையை நினைவுபடுத்தும். பொரித்தெடுத்த பிறகு மீதி இருக்கும் எண்ணெயை மாமனார் கவனிக்கிறாரா என்று பார்த்துக்கொள்வான். அவர் கவனித்தாலும் பரவாயில்லை. கண்களுக்குத்தான் பார்வை கிடையாதே. சீனிச்சட்டியைத் தூக்கிக் கொண்டு அடிமேல் அடிவைத்து நகர்ந்தபடி சென்று அப்படியே உரக்குண்டில் ஊற்றிவிட்டு நல்ல பிள்ளையாக வீட்டுக்குள் ஏறுவான். நேசமணி எதுவுமே பேசமாட்டார். தனக்கு எதுவும் தெரியாதது மாதிரி தூரப் பார்த்துக்கொண்டிருப்பார்.

அவன் இப்போது தனது பழைய கூட்டுக்கட்டைக் குறைத்திருப்பது அவருக்கு நிம்மதியைத் தந்தது. அதிகமும் வீட்டிலேதான் தங்குகிறான். தேடிவரும் ஒரு சிலரையும் எதாவது சொல்லி விரட்டி விடுகிறான். சற்றுப் பொறுப்புணர்வும் வந்திருக்கிறது. வேலைக்காரர்களை அழைத்து வந்து கிணற்றை இறைத்துத் தூர்வாரினான். இலைதழைகள் விழாமலிருக்க வலை போட்டான். அவன் விஷயத்தில் இவையெல்லாம் நல்ல மாற்றங்களாகத்தான் தெரிகின்றன. இருந்தாலும் அடிக்கடி வீட்டுக்குள்ளே காணாமல் போவதும், கிணற்றங்கரைக்குக் கிழக்கே துணி துவைக்கும் கல்லில் எப்போதும் உட்கார்ந்திருப்பதும் எதற்கென்று அவருக்குப் புரியவில்லை. ஒருவேளை பீடி இழுக்கத் தோன்றும்போது போய் உட்காருவானா இருக்கலாம். அந்தமாதிரிப்பட்ட விஷயங்களில் எதுவும் தான் தலையிடக் கூடாதென்று கருதினார் நேசமணி.

ஒருநாள் மதியம்போல வெளியில் போய்விட்டு வந்தான் ஜான்பாபு. அவனுடன் கூட இரண்டு புதிய மனிதர்களும் வந்தார்கள். பக்கத்து ஊரில் ஏழு சென்ட் பூமி விற்கப் போட்டிருப்பதாகவும், அதில் ஏழெட்டுக் காய்பலன் உள்ள தென்னை மரங்கள் நிற்பதாகவும், தாங்கள் இடமாற்றம் பெற்றுவந்த பிறகு வீடு போட ஏற்றது என்றும் தெரிவித்தான். வாங்க நினைத்தால் வாங்கிப் போடுங்கள் என்று மட்டும் சொன்னார் அப்போதைக்கு.

அன்று இரவு ஜான்பாபு ஆழ்ந்த நித்திரையில் இருக்கும்போது அவனை மாமனார் வந்து தட்டி எழுப்பினார். அவர்கள் வீடு வைக்க இடம் தேடி எங்கும் அலைய வேண்டிய அவசியம் இல்லை என்றும், மகனுக்கு எழுதிவைத்திருந்த உயிலைத் தான் கேன்சல் செய்த விஷயத்தையும் தெரிவித்தார். தன்னை மகன் வாள்வச்சாம் பாறைக்கு அழைத்துச் சென்ற கதையையும் அதற்குப் பின் நடந்த சம்பவங்களையும் விவரித்தார்.

கண்ணங்கரை நாயரின் வீட்டு முற்றத்தில் நேசமணி உட்கார்ந்திருக்கிறார். அவர்கள் இருவரும் பேசுவதை உன்னிப்பாக வாசற்கதவில் சாய்ந்து நின்று கவனித்துக்கொண்டிருக்கிறாள் நாயரின் மனைவி.

“ரெண்டு பெண்குட்டிகளைக் கெட்டிக்குடுத்த இடத்திலயும் பெரிய வசதி இல்லேண்ணு சொல்லுதீரு. எனக்கொரு யோசனை இருக்கு. முடிஞ்சா செய்து பாருமே.”

“சொல்லுங்க.”

“பிளாட்ட கி, ஙி, சி என்று மூணு பாகமா பிரிக்கணும். வீடும், வீட்டடியும் கி – பிரிவு. அது மூத்தவனுக்கு. ஙி – பிரிவு மூத்த மகளுக்கு. சி – பிரிவு கடக்குட்டிக்கு. சரிசமமாச் சேத்து இப்பிடிப் பங்குவச்சி உயிலெழுதி வையும். பழைய உயில் ஆட்டோமெட்டிக்கா கேன்சல் ஆயிடும். எல்லாம் ஒமக்க காலத்துக்குப் பெறகுதான், கேட்டீரா?”

“அப்பிடி செய்தாப் போதும்.”

ஜான்பாபுவுக்குத் தூக்கம் எங்கோ பறந்து போனது. எப்படியாவது கி -பகுதியைப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் அவனுக்குள் அரும்பியது. அதில்தானே கிணறு இருக்கிறது.

“கிணறும் கல்லறைத்தோட்டமும் மூன்று பார்ட்டிக்கும் பொது. நீங்களும் இதுபோல வீடு போட்டு எனக்க மூணு மக்களும் ஒற்றுமையா இதில தங்கணும்ணு உள்ளதுதான் எனக்க ஒரே ஆசை. நீங்க வீடு போட்டு கறண்டு எடுக்கம்ப இஷ்டதானம் எழுதித் தந்துருவேன்.”

“எல்லாம் சரிதான் மாமா, கிணறு பொதுவில இருக்க முடியாது. நாள ஒரு காலத்தில இன்னொரு பிளாட்டிலோடி குழல் இழுக்க முடியுமா? அதுனால கிணறு யாராவது ஒருத்தருக்குத்தான் சொந்தமாக முடியும்.”

அதிகாலையிலேயே சொத்து பாகம் வைத்த விஷயத்தைத் தொலைபேசி வழியாக மனைவிக்குத் தெரிவித்துவிட்டான் ஜான்பாபு. அவளை லீவு போட்டுக்கொண்டு உடனே புறப்பட்டு வருமாறு அழைத்தான்.

மகள் வந்தாள். தந்தையைப் பார்த்ததும் அவள் தாயின் ஞாபகம் வந்தது. குலுங்கிக் குலுங்கி அழுதாள். இப்போது தனது கன்னத்தில் மகள் அறைவதாகக் கருதினார் நேசமணி. என்றோ இதையெல்லாம் தன் பெண்மக்களுக்கு அவர் செய்திருக்க வேண்டும். மகன் பேச்சைக் கேட்டது தவறு.

“அப்பா, விஷயத்தை அண்ணனுக்கு உடனே தெரியப்படுத்தணும்.”

“வேண்டாம். எனக்க காலம் கழிஞ்ச பெறவு அவன் தன்னால அறியட்டு.”

“ஒங்க காலத்துக்குப் பிறகு எங்களுக்குள்ள யுத்தம் நடக்கவா? யானையக் கொடுத்தவன் தொறட்டியக் கொடுக்காத கதைபோல ஆயிடப்பிடாது. ஒடனே அளந்து கல்லு போடணும்.”

“ஓ. . . அதச் செய்யணும்.”

அன்று சாயங்காலம் எல்லோருமாக ஆட்டோவில் ஏறிப் புதுக்கடை வந்தனர். யாருமில்லாத இடத்தில் அமைந்திருந்த காசு போடும் தொலைபேசியிலிருந்து மகனுக்கு போன் செய்தார். விஷயத்தைச் சுருக்கமாகத் தெரிவித்துவிட்டுத் தனது கடைசி ஆசையையும் தெரிவித்தார்.

“எனக்க மூணுமக்களும் ஒற்றுமையா இருக்கணும்.”

“இதெல்லாம் அந்த தொடு வெட்டிகாரனுக்க ஏற்பாடுதானே?”

“ஏன், எனக்குப் புத்தி கெட்டுப் போச்சா?”

“அவன் குடும்பம் மந்திரவாதிக் குடும்பமாக்கும். ஏதோ செய்வின செய்து ஒங்க மனச மாற்றிப் போட்டான்.”

“அது தங்கச்சிக்குச் சம்பந்தம் பாக்கும்ப ஒனக்குத் தெரியாமப் போச்சா? எனக்குப் புத்திக் கோளாறோ, மன மாற்றமோ எதுவுமே இல்ல. மாசாமாசம் ஒண்ணாந்தேதி பேங்கிலபெய்க் கையெழுத்துப் போட்டு பென்ஷன் வாங்கத்தான் செய்யேன்.”

“இனி பெண்மக்கதான் ஒமக்குக் கொள்ளிவைக்கும்.”

“டேய், யோபு சொன்னதப்போல சொல்லுகேன். நான் நிர்வாணியா வந்தேன், நிர்வாணியாப் போகிறேன். ஆனா உயிர் இருக்கம்ப செத்து வாழுற வாழ்க்கையுமில்ல, அடுத்த வியளக் கொன்னு பெழைக்கும் வாழ்க்கையும் எனக்கில்லடா பொன்னுமோனே. . .”

கிழவரின் முகம் சூரியனைப் போல ஒளிர்ந்தது. வலது கையைத் தூக்கி நெஞ்சில் ஒருமுறை தட்டினார். உலகின் சிகரத்தில் நிற்பது போல அவருக்குத் தோன்றியது.

“சனிக்கிழம அளந்து கல்லு போடப் போறேன். உடனே புறப்பட்டு வா!”

“நான் எதுக்கு வரணும்? எல்லாம் எனக்கிட்டக் கேட்டுதான் செய்யுதீரோ? நமக்கு கோர்ட்டில இனி சந்திக்கலாம்.”

“டேய் ராஜி, நான் பழைய ஒன்பதாங்கிளாஸ் மலையாளம். அது ஒனக்க டாக்டர் பட்டத்தவிடப் பெரிசு பாத்துக்க. நுப்பத்திரெண்டு வருஷம் சர்க்கார் உத்தியோகம் பாத்து இருபத்தாறு வருஷம் பென்ஷன் வாங்கி ஜீவிக்கியேன். நீ எந்தச் சட்டத்தில கோர்ட்டுக்குப் போவேண்ணு நான் பாக்கத்தான் போறேன். கருணாநிதி கொண்டுவந்த சட்டம் தெரியுமாடா ஒனக்கு? பாராளுமன்றம் பாசாக்கின சட்டம் தெரியுமாடா ஒனக்கு? அப்பன் வாய் தெறக்காம இருந்தது மகன் பாசத்திலயாக்கும். ஒரு வழிப்போக்கனுட்டப் பேசியதுபோல எனக்கிட்ட நீ பேசப்பிடாது, கேட்டியா?”

எதிர்முனையில் போன் துவண்டது.

தொடர்ந்து அளவுக்காரனைக் கொண்டுவந்து அளந்து கல்போடும் சம்பவமும் நடந்தது. மூத்த மகளின் மாமனாரும் இளைய மகளின் கணவர் குடும்பத்தினரும் சிரித்த முகத்துடன் வந்து நின்றார்கள். அளக்கும்போது கிணறு இரண்டு கண்டக்காரர்களின் எல்லைக் கோட்டுக்கு நடுக்காக வந்தது. அதை முழுக்க அப்படியே மகன் பாகத்தோடு சேர்க்கும்படியாக இளைய மகளின் கணவர் குடும்பத்தினர் கூறினார்கள். அதில் வரும் இழப்பைத் தாங்களும் பகிர்ந்து கொள்வதாகத் தெரிவித்த பிறகும் ஜான்பாபு விடவில்லை. கிணறு முழுவதுமாகத் தங்கள் பகுதிக்கு வரும்படியாக அளந்து அதற்கு ஈடான நிலத்தை வடக்குப்பாகத்தில் தங்கள் பகுதியிலிருந்து எடுத்துக் கொள்ளும்படியாகவும் கேட்டுப் பெற்றுக்கொண்டான்.

காலம் ஒரு சுமட்டுக்காரனின் அடிவைப்பைப் போல மெதுவாய் நகர்ந்தது. இந்த இடைக்காலத்தில் தான் எவ்வளவு காரியங்கள் நடந்து கழிந்தன. யோசனையில் அடங்கக் கூடியவைதானா அவை? உறக்கத்தில் கலைந்த கனவுகளைப் போல அல்லவா இருக்கிறது.

ஜான்பாபுவுக்கு மாற்றல் உத்தரவு வந்துவிட்டது. பைங்குளம் பக்கம் ஒரு பள்ளியில் உத்தியோகம். இங்கேயும் அவன் வேலைக்குப் போவதை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். பள்ளிக்கூடம் நடைபெறும் சமயங்களில் எல்லாம் பாலம்மையின் மாம்பட்டைக் கடையில் அவன் பாடம் நடத்திக்கொண்டிருப்பதைத்தான் பலரும் கண்டார்கள்.

ஒருநாள் இரவு அறைக்குள் உணவைக் கொண்டுசென்றான். எதிரே வராந்தாவில் தூரத்தில் நாற்காலியில் நேசமணி அமர்ந்திருந்தார். இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டிருந்தனர். கட்டிலின் மறுபுறம் குனிந்த ஜான்பாபு பாட்டிலைத் திறந்து கிளாசில் விடுவது எந்த ஒளிவுமறைவுமின்றித் தெளிவாகத் தெரிந்தது. அவன் பாட்டிலைக் கட்டிலுக்குக் கீழேவைத்தான். தூரத்துப் பார்வையில் வெட்ட வெளிச்சமாக இருந்தது அதன் இருப்பு. அவர் பேச்சு திடீரென மாறியது.

“படிச்சவன்கூட மோசமாகத்தான் இருக்கான்.”

“நூறு சதவீதம் கரெக்ட் மாமா.”

“நாட்டில குடிக்காதவனே இல்ல போலிருக்கு”

“இதுக்கு ஒரே வழிதான் இருக்கு. எம்.ஜி.ஆர். சொன்னதுபோலக் குடிக்கிறவன நாடுகடத்தியே தீரணும்.”

அதற்குமேல் அவர் ஒன்றும் பேசவில்லை. பெட்ஷீட்டை இழுத்து மூடிக்கொண்டு உறங்கினார்.

மறுநாள் கிணற்றங்கரையில் அமர்ந்து ஜான்பாபு துணி துவைத்துக்கொண்டிருந்தான். பையன் ஒரு வாளியிலிருந்து நீரை மொண்டு தலையில் விட்டுக் குளித்துக்கொண்டிருந்தான்.

“அப்பா, நான் குளிக்கிறதப் பாருங்க.”

பையன் திரும்பத் திரும்பத் தகப்பனிடம் கூறினான்.

ஆனால் அவன் கேட்கும் மனநிலையில் இல்லை.

“அப்பா, இங்க என்ன பாருங்க அப்பா.”

அவன் இந்த உலகத்தில் இல்லாதது போல இருந்தான். பையன் போடும் சத்தத்தைப் பார்த்து நேசமணி எட்டிப்பார்த்தார். கிணற்று விளிம்பில் ஒரு சேலையை நனைத்து வைத்ததுபோல எதுவோ தெரிந்தது.

“அப்பா நான் குளிக்கியதப் பாக்காம சும்மா சும்மா அந்தப் பெண்ண ஏன் பாக்கிறிய? இஞ்ச என்ன திரும்பிப் பாருங்க அப்பா.”

வேறொரு கோணத்தில் பார்த்தபோதுதான் கிணற்றில் தண்ணீர் எடுக்க வந்த ஒருத்தி தூண்மறைவில் ஒளிந்து நிற்பது தெரிந்தது.

அன்று முழுவதும் எங்கும் போகாமல் குட்டி போட்ட பூனையைப் போல வீட்டைச் சுற்றிச் சுற்றியே நின்றான். நாலு மணிக்குபோல சாயங்காலம் அந்தப் பெண் மறுபடியும் வந்தாள். ஜான்பாபு வீட்டுக்குள் அவளைச் சைகையால் அழைத்தான். அவள் உள்ளே வராமல் ஜன்னலுக்கருகில் வெளியே வந்து நின்றாள்.

“சக்க விக்கவா போட்டிருக்கு?”

“ஒனக்கு வேணுமா?”

“வேண்டாம்.”

“பின்ன கேட்ட?”

“சும்மா.”

“வெட்டினது இருக்கு. தரட்டா?”

“ஒம்ம பெண்டாட்டிக்குக் கொண்டுபெய்க் குடும்.”

“பெண்டாட்டிக்குக் குடுக்க முடியாமதானே இஞ்ச வந்து கெடக்கியேன்.”

“எனக்கு ஒருமாரி வருது.”

“உள்ள வாறியா?”

“வரேல.”

“இன்னா ஒரு சொள தின்னு பாத்துட்டுச் சொல்லு இனிச்சிட்டிருக்காண்ணு?”

அவள் வாயில் பிய்த்து வைத்தான்.

“தாத்தா காணுவாரு, நான் போறேன்.”

“கெழவன் பொட்டக்கண்ணன். கண்ணு தெரியாது.”

“ஐயோ பாவம்.”

அவள் திரும்பியதும் ஜன்னல் வழி கையிட்டுக் கொண்டையைப் பிடித்து இழுத்தான்.

“விடுடா கள்ளா. . .”

“இஞ்ச பாரு.”

அவன் நூறு ரூபாய்த்தாளை எடுத்து நீட்டினான்.

“ஒனக்குத்தான். சிலேடு வேண்டிக்க.”

“வோ! எனக்கு சிலேடும், ஜெம்பரும் இவருதான் வேண்டித் தரணும்.”

அவன் கையிலிருந்த ரூபாய் நோட்டைப் பறித்துக்கொண்டு அவள் ஓடியே போனாள்.

கிழவர் பெருமூச்சுவிட்டார். பென்ஷன் வாங்கிவைத்த பணத்தில் ஐந்நூறு ரூபாய் குறைந்திருந்ததின் காரணம் விளங்கியது. கொஞ்ச நாட்களாக வாங்கி வைக்கும் மசாலை சாமான்கள், அரிசியின் அளவு அதிகமாவதும் காணாமற் போவதும் ஏனென்பதை யூகிக்க முடிந்தது.

அடுத்தநாள் மதியம் உறங்கிக் கிடக்கையில் கொலுசுச் சத்தம் கேட்டு விழித்தார். நேற்று வந்த அதே பெண்தான். படிகளின் வழியே இருவரும் மாடிக்குச் சென்றார்கள். எப்படி இருந்த வீடு இது? தற்போது இங்கே என்ன நடக்கிறது?

அதோ கீழே இறங்கி வருகிறார்கள். கிழவர் கண்களை இறுகமூடி உறங்குவதுபோலக் கிடந்தார். இருவரும் உயரத்தில் நின்று பேசினார்கள்.

“ஒங்கள எனக்க அண்ணனப் போலயாக்கும் நெனச்சிருந்தேன். என்னப் போட்டு என்னெல்லாம் செய்ய வச்சிய. எனக்குச் சங்கடமா இருக்கு.”

“வங்கட மீனு வேண்டித் தின்னு. சங்கடம் தீரும். சவுட்டுக்கொள்ளாமப் போவியா? கெழவனுக்குக் கண்ணுதான் தெரியாதே தவிர பாம்புச் செவியாக்கும்.”

சில நாட்களாக இரவு வீட்டில் தங்குவது இல்லை. வடக்குப்புறக் கதவு திறந்து கிடந்ததை வைத்துக் கண்டுபிடித்தார். அன்று அவன் இல்லாத சமயமாகப் பார்த்து வீட்டுக்கு வந்த விக்கன் வேதமுத்துவின் மகன் நடராஜன் குறிப்பாகச் சில காரியங்களை உணர்த்தினான்.

“மருமகன இங்க விட்டிருக்காதிய. முள்ளுவிளை பார்ட்டி ஓலையும் கழிக்கலும் கொண்டு பெரை கெட்ட வரணும்ணு இருக்குனும்.”

“எங்க பூமியில எதுக்குப் பெரைகட்ட வருனும்?”

“அத மருமகனிட்டக் கேளுங்க.”

அடுத்தநாள் சோறு சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது கேட்டார்.

“ராத்திரி நீங்க எங்க போறிய?”

“வெள்ளையடிச்சப் போறேன்.”

“கண்ணு தெரியுமா?”

“லைட் போட்டா தெரியும்.”

“பள்ளிக்கூடத்தில இருந்து சம்பளம் வருது. பின்னயும் எதுக்கு இப்பிடி வேலைக்குப் போறிய?”

“சும்மா ஒரு சோசியல் ஒர்க் மாமா. காலனி வீடுகள்ல வெள்ளையடிச்சிக் கொடுக்கிறோம்.”

அன்று எங்கோ போய்விட்டு இரவு பிந்திவந்து உறங்கச் சென்றான். சிறிது நேரங்கழித்து, ‘ஐயோ. . . எனக்க உயிரு போவுதே!’ என்று அலவற விளித்தான். ஆட்டோகாரனுக்கு போன் செய்து வரவழைத்து இருவருமாகத் தூக்கிப்போட்டு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போனார்கள். அவரது சட்டையை இறுகப்பற்றிப் பிடித்துக்கொண்டான். ஆட்டோவுக்கு வெளியே அவன் தலை விழும்போது அந்த முதிய தேகமும் அவனோடு சேர்ந்து விழுந்தது. ஒரு பாடுபட்டு டாக்டரிடம் கொண்டு சேர்த்தார்.

விஷயம் இதுதான். பாலம்மையிடமிருந்து வாங்கிய மாம்பட்டைக் கஷாயத்தைப் போதைக்காகக் கள்ளில் கலந்து குடித்ததால் ஏற்பட்ட வயிற்று வேதனை. ஆஸ்பத்திரி பில்லை மாமனார் முடித்துவிட்டு ஆட்டோகாரன் கையில் காசு கொடுத்து ஜான் பாபுவை அவனது தகப்பனாரிடம் கொண்டு விடும்படியாகக் கூறினார். மனசு வெறுத்துப்போய்த் தனக்கு இனிமேல் யாருமே வேண்டாம் என்ற மனநிலையில் அவ்வாறு செய்தார். பகல் முழுதும் அவன் இல்லை. இரவு பதினொரு மணிக்குத் திரும்பவும் தள்ளாடியபடியே வந்து நின்று கதவைத் தட்டினான். அவர் திறக்காததால் அன்றிரவு முழுவதும் வெளித்திண்ணையில் கிடந்து உறங்கினான்.

அவன், இனி விரட்டி அடித்தாலும் போகமாட்டான் என்பதுணர்ந்த கிழவர் அவன் இல்லாத நேரமாகப் பார்த்துக் கதவையும் பூட்டிச் சாவியையும் கையில் எடுத்துக்கொண்டு தன்னுடன் வேலைபார்த்த ஜோதிராஜ் என்ற நண்பரின் வீட்டில் சென்று பத்து நாட்கள் தங்கினார். அவன் தனது தகப்பனார் வீட்டுக்குச் சென்றிருப்பான் என்று திரும்பி வந்தபோது நாலைந்து கூட்டுக்காரர்களுடன் சேர்ந்து தனது விளையில் நின்ற பலாமரம் ஒன்றை அளந்துகொண்டு நின்றான். கிழவர் மனதில் திகில் வந்து சூழ்ந்தது.

சனிக்கிழமை காலையில் மகள் வந்தாள். மிகுந்த கோபத்துடன் காணப்பட்டவர் அவளது முகத்தைப் பார்த்ததும் சாந்தமடைந்தார். எதையும் வெளிப்படுத்தாத மன நிலையில் உணர்ச்சிக் கலவைகளின் கொந்தளிப்பில் எல்லாவற்றையும் தனக்குள்ளாக அடக்கிக்கொண்டார்.

“அப்பா என்ன ஒருமாதிரி இருக்கிய?”

“ஒண்ணும் இல்ல.”

“அப்பா இப்ப கொஞ்சம் வெளுத்திருக்குது. வேளாவேளைக்கு ஆகாரம் கிட்டுது இல்லியா.”

“நீ எனக்கு ஒரு உபகாரம் செய்யணும். போவம்ப ஒனக்க மாப்பிள்ளையும் கூடக் கொண்டு போ. எனக்க காரியத்த நான் பாத்திடுதேன்.”

எவ்வளவுதான் அடக்கிவைக்க நினைத்தாலும் வயசான காலத்தில் அவரையும் மீறி வெளிப்பட்ட வார்த்தைகளின் பொருள் புரியாத மகளுக்குள் கோபாவேசம் மூண்டது.

“கொஞ்சம் பச்ச பிடிச்சி இல்லா. ஒமக்கு இனிமே நாங்க ஒண்ணும் வேண்டாம்ணு காணும்.”

“ஐயோ மகளே, என்ன வார்த்த பேசின? நீங்க ஒண்ணும் வேண்டாம்ணா அப்பா அம்மையையும் பறிகொடுத்துட்டு இத்தற காலம் உயிரோட ஜீவிச்சிட்டு இருக்கியேன். நீங்க இல்லேண்ணா நான் யாருக்காக உயிர் வாழணும்?”

“போட்டு, ஏதோ வெப்றாளத்தில பேசிப்புட்டேன். அப்பாகிட்ட நாங்க எப்பளும் உண்டு.”

“அது போதும் மக்கா!”

அறைக்குத் திரும்பியபோது கதவிடுக்கில் ஜான்பாபு நின்று எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தான். தகப்பனின் வேதனைக்கான காரணத்தைக் கண்டுபிடிக்கத் தெரியாதவளாய் இருந்த மகளிடம் எதாவது பேசப்போய் அவர்களின் குடும்ப வாழ்க்கை அதனால் பாதிக்கப்பட்டுவிடுமோ என்ற தயக்கத்தில் இருந்த நேசமணி, அதற்குப் பிறகு எதுவுமே பேசவில்லை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *