காந்திமதியின் கோபம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 30, 2023
பார்வையிட்டோர்: 2,441 
 
 

முப்பத்து மூன்று வருட தாம்பத்ய வாழ்க்கையில் காந்திமதிக்கு இப்பொழுதெல்லாம் அடிக்கடி கணவன் மேல் கோபம் வருகிறது. தானாக எதுவும் செய்யத் தெரியாமல், எல்லா வேலைக்கும் பிறரை நம்பிக்கொண்டும், எல்லோரையும் நம்பிவிடும் குணமும் அவளை மிகுந்த கோபத்துக்குள்ளாக்கு கின்றன. அதுவும் இந்த இரண்டு மாதங்களாகத்தான். ஏன் இப்படி இருக்கிறாள்? என்று கணவன் முதல் அக்கம் பக்கம் வரைக்கும் இதேதான் பேச்சு. உடல் நிலை சரியில்ல என்று அடிக்கடி டவுனுக்கு போகவும் வரவும் இருக்கிறாள்.

அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டு நிற்கும் மாரப்பனை ஒரு வித அசூயையுடன் பார்த்தாள் காந்திமதி ! ஏய்யா இப்படி இருக்கே, ஆட்டை வித்து காசை கொண்டு வந்து கொடுப்பேன்னு நினைச்சேன், பூவாயிட்டே கொடுத்துட்டேன்னு சொல்றியே ? நீ என்ன மனுசந்தானா? ஒரு முறை சொன்னா கேக்காதா?

மாரப்பன் எதுவும் பேசாமல் அப்படியே மலங்க மலங்க நின்றார். இந்தாளுக்குத்தான் புத்தி இல்லையின்னா, இந்த பூவாயிக்காவது புத்தி இருந்திருக்கோனும், அப்பன் காச கொள்ளையடிக்கறதுக்குன்னே புறந்திருக்காளுங்க, மனசுக்குள் பொங்கும் கோப அலைகளை வார்த்தைகளாக வெடித்து கொட்டிக்கொண்டிருந்தாள் காந்திமதி !

மாரப்பன், பசிக்குது காந்திமதி, சீக்கிரம் சோறு கொண்டா, இவள் கத்தி கொண்டிருப்பதையோ, அல்லது ஆட்டை வித்த நாலாயிரம் ரூபாயை சுளையாய் புள்ளை கிட்டே கொடுத்துட்டு, சம்சாரத்துகிட்டே வெறும் கையை வீசிட்டு வந்து நிக்கறமே, என்பதை கூட நினைக்காமல் “பசிக்குது” என்று சொன்ன புருசனை பரிதாபமாய் பார்த்தாள் காந்திமதி !, உன்னைய நினைச்சா எனக்கு மனசு கஷ்டமாய் இருக்குய்யா. கண்களில் துளிர்த்து வந்த கண்ணீரை முந்தானையால்

துடைத்துக்கொண்டே சரி வா..அந்த பாவி மக அப்பன் கிட்டே இருந்து சுளையா நாலாயிரம் ரூபாயை பறிச்சுகிட்டாளே, அப்பனுக்கு ஒரு வாய் சோறு போட்டு அணுப்பனும்னு தோணலை பாரு அவளுக்கு ! வாய் முணு முணுக்க,சட்டென்று மாரப்பன், ஏன் புள்ளை அவ சாப்பிட்டு போன்னுதான் சொன்னா, நாந்தான் வேணாமுன்னு சொல்லிட்டு வந்துட்டேன், சும்மா சும்மா அதை வையாதே !.

சட்டென்று கோபமான காந்திமதி ஆமா உன் புள்ளைய சொன்ன உடனே உனக்கு ரோசம் பொத்து கிட்டு வந்துடுச்சாக்கும், அப்படி பேசறவன், உன் ஆத்தாகிட்ட கேட்டுட்டு அப்புறம் அந்த பணத்தை அவ கேட்டிருக்கணும்? இதுக்கு ஒண்ணும் குறைச்சலில்ல.. முணங்கியவாறு தட்டில் போட்ட சோற்றையும் குழம்பையும் மாரப்பன் முன்னால் வைத்தாள். வேகு வேகுவென்று சாப்பிடுவதையும் கண் கலங்க பார்த்து கொண்டிருந்தாள்.

காந்திமதி..காந்திமதி..பக்கத்து வீட்டு ராசக்கா கூப்பிடும் சத்தம் கேட்டு குடிசையில் இருந்து வெளியே வந்த காந்திமதி ! வா..ராசக்கா..இழுத்தாள். ஏன் உன் புருசனை வஞ்சிக்கிட்டு இருக்கே, நானும் அப்பத்தால இருந்து பாக்கறேன், பரிவாய் கேட்டாள்,

இப்பவெல்லாம் உன் புருசனை ரொம்ப பேசறே, குற்றம் சாட்டினாள்.

ஆமா நீ ஒண்ணுக்கா, அந்த ஆளுக்கு புத்தி சொல்லுவியா, இப்படி இருக்கானேன்னு, தானே ஒரு சோத்தை வடிச்சுக்கறதுக்கு கூட துப்பில்லைன்னு கவலையில இருக்கேன், காலையில மேப்புக்கு விடாம புடிச்சு வச்சிருந்த இரண்டு ஆட்டை கொண்டு போய் சந்தையில வித்துட்டு வான்னா, இந்த ஆளு கொண்டு போய் வித்துட்டு, அப்படியே “புள்ளைய” பாத்துட்டு வர்றேன்னு அவ வீட்டுக்கு போயி ஒரு வாய் சோறு தண்ணி கூட போடாம, கையில வச்சிருந்த பணத்தையும் வாங்கிட்டு அனுப்பிச்சிருக்கா. .இவளெல்லாம்..வசவாய் ஒரு வார்த்தையை வீசியவள், அப்பனும், ஆத்தாளும் சோத்துக்கு என்ன பண்ணுவாங்கன்னு நினைச்சாளா?

ராசக்கா ஏ காந்திமதி என்ன பெத்த புள்ளைய இந்த வசவு வசவுறே, அவளை கட்டி கொடுத்து அப்படி பாங்கா பாத்து பாத்து அனுப்பிச்சு, பத்து வருசம் ஓடிடுச்சுன்னா, அவ வேத்தாளாயிடுவாளா?

என் வயித்தெறிச்சலை கொட்டிக்காதக்கா, கடைசியா இருந்த இரண்டு ஆட்டையும் வித்துட்டேன், வச்சிருந்த இரண்டு ஏக்கராவையும் ஆளுக்கொண்ணுன்னு, அண்ணனும் தங்கச்சியும் பிரிச்சு வாங்கி எவனுக்கோ வித்துட்டு போயிட்டாங்க, கண்கள் கலங்க சொன்னவள்..அதற்கு மேல் பேசமுடியாமல்……உள்ளே போனாள்.

ஏன் இப்படி ஆடு, மாடு, கோழி எல்லாத்தையும் வித்து தொலைச்சுட்டு இருக்கே? போ, புலம்பிக்கொண்டே அங்கிருந்து நகர்ந்தாள் ராசக்கா.

ஒரு வாரம் ஓடியிருந்தது, காந்திமதிக்கு திடீரென அன்றைய இரவில் வாந்தி, மயக்கமாய் இருக்க மாரியப்பன், என்னவோ ஏதோவென்று பயந்து ராசக்காவை கூப்பிட்டார், அக்கம் பக்கம் ஓடி வந்து பார்ப்பதற்குள் வாழ்க்கையை முடித்திருந்தாள்…

இழவு வீடு..நெஞ்சில் அடித்துக்கொண்டு வந்த மகளும், மகனும், அந்த மூன்று நாட்கள், தங்கியிருந்து, காந்திமதியை எரித்து முடித்து உறவுகளை வைத்து காரியங்களை முடித்தார்கள். இந்த மூன்று நாட்களும், திண்ணையில் வெறித்து உட்கார்ந்திருந்த மாரப்பனுக்கு நேரத்திற்கு பசிக்க, சாப்பாடும், கொண்டு வந்து கொடுத்து கொண்டிருந்தார்கள். அவரை பொருத்தவரை காந்திமதி இப்பொழுது இல்லை, பரவாயில்லை, மகள் பூவாயி இருக்கிறாள், நேரத்துக்கு சாப்பாடு போடுவாள், அதுவே மனதுக்கு தெம்பாய் இருந்தது.

நான்காம் நாள் காலையில் மகன் கிளம்பினான், எனக்கு லீவு முடிஞ்சிடுச்சு.

பூவாயி திடீருன்னு கிளம்பிட்டியின்னா, இங்கிருக்கறதை யார் பார்த்துக்கறது?

ஏன் நீ இருக்கியில்லை, நான் கிளம்பணும், சொல்லிக்கொண்டே அப்பனை பார்த்து உடமபை பார்த்துக்க, கிளம்பி விட்டான்.

மகள் எனக்கும் தோட்ட வேலையே கிடக்கு, இரண்டு மூணு நாள் கழிச்சு திரும்ப வாரேன். தானும் கிளம்ப ஆயத்தமானாள்.

மாரப்பன் திண்ணையில் உட்கார்ந்து இவர்களின் வாதங்களை பார்த்துக் கொண்டிருந்தவர், மகள் தன்னை கூட்டி போவாள் என்று தயாராய் இருந்தார்.

சரி நா..வாறேப்போ, வேளா வேலைக்கு சாப்பிடு, உடம்பை பார்த்துக்க..மகள் தன்னிடம் வந்து சொல்லவும் அப்படியே அவள் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தவர்,அப்ப மகள் நம்மை கூப்பிட்டு போக மாட்டாளா?

ஏக்கமாய் அவர்கள் போவதை பார்த்துக்கொண்டிருந்தவர், அப்ப இனிமேல் என்னைய யார் கவனிச்சுக்குவா? கண்கள் கலங்க ஆரம்பித்தன. காந்திமதி மனதில் நிழலாடினாள்.

என்ன மாரயப்பா உன் புள்ளையும், பையனும் போறதை பார்த்துக்கிட்டு இருக்கறயா? ராசக்காவின் வீட்டுக்காரர் பேசிக்கொண்டே வந்தவர், இவங்க இப்படித்தான் செய்வாங்கன்னு காந்திமதி எதிர்பார்த்தா. அதனாலதான் உன்னைய அடிக்கடி கடிஞ்சு பேசிகிட்டே இருந்தா. இன்னும் உலகம் புரியாம இருக்கறயே அப்படீன்னு,அவ வருத்தப்படாத நாள் இல்லை.

சரி வா சாப்பிட போகலாம், காந்திமதிக்கு முன்னமே தெரிஞ்சிருக்குது, தனக்கு சீக்கிரம் சாவு வருமுன்னு. அதனாலதான் உன்னால எதையும் பாத்துக்க முடியாதுன்னு ஆடு, மாடு, கோழி எல்லாத்தையும் வித்து, எப்படியும் பெத்ததுங்க, உன்னைய நட்டாத்துல விட்டுட்டு போயிடும்னு தெரிஞ்சு உன் பேர்ல பணத்தை கொண்டு போய் பேங்குல போட சொல்லி என் கிட்டே சொல்லி ஏற்பாடு பண்ணிட்டா. நீ இருக்கற வரைக்கும் இந்த வீட்டையும் புடுங்க முடியாம எழுதி வச்சுட்டா.

.உனக்கு சோத்துக்கு வழியும் பண்ணிட்டுத்தான் போய் சேர்ந்திருக்கா, மாசா மாசம் வட்டி வரும், வாங்கி சூதானமா வச்சுக்க. இல்லைன்னா அதையும் லவட்டிகிட்டு போயிடுவாங்க, உன் வாரிசுக.

என்ன ஒரு கஷ்டம் இனிமே நீ தனியா சமைச்சு புழங்கிக்கணும், சோத்தை மட்டும் வடிச்சு, வை, ராசக்காவை வச்சு மத்த்தெல்லாம் செஞ்சிக்கலாம். இப்ப வா சாப்பிட போலாம்.

காந்திமதி அவளின் இறுதி காலம் தெரிந்துதான் தன் கணவனை அப்படி பேசிக்கொண்டே இருந்தாளோ? .

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *