கல்லும் கரையும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 21, 2022
பார்வையிட்டோர்: 773 
 

சே! இப்படி பண்ணிவிட்டோமே… என்று பாலனுக்கு வருத்தமாயிருந்தது. அவனுடைய கண்களில் குழிவிழுந்து அழுக்காயிருந்தான். முகம் சோர்ந்து போயிருநதது. வயிறு ஒட்டி கபகபத்தது.

சட்டையில் வியர்வை நாறிற்று. தலையெல்லாம் எண்ணெயில்லாமல், வாரப்படாமல் அரித்தது.

அவனுக்கு பதினைந்து வயது. பத்தாங்க கிளாஸில் சமர்த்தாய்ப் படித்துக் கொண்டு வீட்டில் சொகுசாயிருந்தவனுக்கு இது தேவை தானா என வெறுப்பு வந்தது.

பாலன் நன்றாக படிப்பான். வீட்டில் பாசமான தாய்! படுத்த படுக்கைகளைக் கூட அவனை மடித்து வைக்க விடாமல் பொத்தி பொத்தி வளர்த்து வந்தாள். அன்பு செலுத்த அக்காவும் தங்கையும் உண்டு.

அப்பாவுக்குக் கௌரவமான உத்யோகம். எல்லாவற்றையும் உதறி எறிந்துவிட்டு நண்பன் ரவியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு வீட்டை விட்டு வந்து நான்கு நாட்களாயிற்று.

ரவி அத்தனை நல்லவனில்லை. சரியாய் படிக்க மாட்டான். கிளாஸிற்கு வருவதே அபூர்வம். வந்தால் வாத்தியாரிடம் அடிபடுவான். வராவிட்டாலோ வீட்டில் அடி!

அவன் அவ்வப்போது பாலனுக்கு துர்போதனைகளை ஏவுவான். “வா சினிமா போகலாம்” என்பான்.

“ம்கூம்.தப்பு!”

“எது தப்பு…? சினிமாவா…? யார் சொன்னது? நிறையப் பார்க்கணும். அப்போதான் மூளை வளரும். விசாலமாகும். இந்தக் கிராமத்தில் இருந்துக் கொண்டு நம்மால் ஊட்டியை அனுபவிக்க முடியுமா? கொடைக்கானல் போக முடியுமா… இல்லை மெட்ராஸ்தான் கைக்கு எட்டுமா…?”

“மாஸ்டருக்கு தெரிஞ்சால் திட்டுவார்.”

“தெரிஞ்சால்தானே? எப்படித் தெரியும்…? நீ சினிமா ஃபீல்டுக்கு போகணுமா வேணாமா…?”

“போகணும்.”

“அப்போ படிப்பை நிறுத்து!”

“ஏன்?”

“படிப்புக்கும் சினி ஃபீல்டுக்கும் சம்பந்தமில்லை. அது வேறு உலகம். அங்கே படிப்பு வேணாம். திறமை போதும். கொஞ்சம் உழைக்கணும். அப்புறம் லக்.”

“எனக்குப் புரியலை”

“புரிய வைக்கிறேன். கமலை பார்! ரஜினி! பாக்யராஜ், பாரதிராஜா! இளையராஜா, பாண்டியராஜனெல்லாம் என்னத்தை படிச்சாங்க? விஜயகாந்த் என்ன பட்டம் வாங்கினார்? என்னுடன் வா. உன்னைப் பெரிய ஆளாக்கிக் காட்டறேன்!”

“இல்லை. நான் படித்து கலைக்டராகணும்!”

“போடா ஃபூல்! கலைக்டருக்கு போட்டாப் போட்டி! ராத்திரி பகலா கஷ்டப்பட்டு படித்து ஜெயிச்சாலும அவங்களுக்கு என்ன பவர் இருக்கு? ஆட்சிக்கும் மந்திரிக்கும் சலாமடிக்கணும். இல்லேன்னா தூக்கி எறிஞ்சிருவான். நடிகன்னா பணத்துக்குப் பணம். புகழுக்குப் புகழ்! ரசகர்கள், கார், பங்களா! சுலபமா சம்பாதிக்கலாம். நடிகைங்களோட கட்டிப் புடிச்சு டூயட் பாடலாம்!”

“எனக்கு குழப்பமாயிருக்கு.”

“என்னுடன் வா. சீக்கிரமே தெளிவாயிரும்!”

“ம்கூம். அப்பா அம்மா எம்மேல கொள்ளைப் ப்ரியம் வச்சிருக்காங்க. வருத்தப்படுவாங்க.”

“ஒரு லட்சியத்தை நோக்கிப் போகும்போது இதெல்லாம் சகஜம். சொந்த பந்தங்களையும் பாசத்தையும் விட்டுக்கொடுத்து நான் ஆகணும். அப்போதான் வாழ்க்கையில் முன்னேற முடியும்!”

ரவி பேச்சில் கெட்டிக்காரன். வாயாலேயே வானத்தை வளைப்பவன். முதலில் கெடுதலாய் தெரிந்த அவனது

பேச்சுக்கள் போகப் போக இனித்தன. அவன் சொல்வதெல்லாம் நிஜம் என தோன்றிற்று.

சினிமாவோடு ஒப்பிட்டபோது படிப்பு பாரமாய் தெரிந்தது. வகுப்பு சுமையாயிற்று. வாத்தியார்கள் விரோதியாயினர், பரீட்சை கசந்தது. யதார்த்தம் மறந்தது. கரைப்பார் கரைத்ததில் கல்லும் கரைந்தது. அதன் பிறது-

மனது வேண்டாத மாதிரியெல்லாம் சிந்திக்க ஆரம்பித்தது.

வீட்டில் சுதந்திரமில்லை. சுயமாட்டய எதையும் செய்யவிடுவதில்லை. என் திறமையை மதிப்பதில்லை. பாசம் கொட்டுகீறேன் என்று கட்டிப் போட்டிருக்கிறார்கள்.

நான் என்ன சின்னப் பையனா? எனக்கும் (பூனை) மீசையிருக்கிறது. கடைக்குக் கூட அனுப்புவதில்லை. தாயே போகிறாள். தனியாய் சினிமா விடுவதில்லை. கேட்டால் குடும்பத்துடன் போவோம் வா! எல்லாப் படங்களையும் குடும்பத்துடன் பார்க்க முடீயுமா…?

பார்க்க முடியாத படங்கள் வேண்டாம். உன்னைக் கெடுத்து விடும் என உபதேசம். அவற்றை நினைத்தால் எரிச்சலாய் வந்தது. எத்தனை கட்டுப்பாடுகள்!

வெளியே சாப்பிடாதே! வெயிலில் சுற்றாதே! உடம்புக்கு வந்திரும். ஆமாம், வெயிலில் சுற்றுகிறவர்களுக்கெல்லாம் உடம்புக்கு வந்துவிடுகிறதா என்ன…? வேண்டா பயமுறுத்தல்கள்!

பசங்கள் மதுரை பழனின் ஊர்சுத்தி பார்க்கப் போறாங்கம்மா -நானும் போறேன் என்றால் அதற்கம் அனுமதி கிடையாது.

“வேணாம். பசங்களோடு சேர்ந்தால் கெட்டுப் போவாய். ஸ்கூலில் டூர் போனால் போ. இல்லாட்டி நாங்க அழைச்சுப் போகிறோம்!”

அடக்குமுறை. பையனின் மேல் அவநம்பிக்கை. நீ அப்பாவி! உனக்கு உலகம் தெரியாது என்று அடக்கி அடக்கியே அவனை ஒன்றும் தெரியதவனாக்கிவிடும் கோழைத்தனம்.

அவனுக்கு நல்லது செய்வதாய் நினைத்து நினைத்தே சோம்பேறியாக்கிவிடும் பெற்றோர்களின் லிஸ்டில் பாலனின் பெற்றோரும் இருந்தனர்.

அவனவன் காரியங்களை அவனவனே செய்துட்க கொள்ள அனுமதிக்க வேண்டும். அவன் பாவம் – விளையாடட்டும். படிக்கட்டும் என்கிற பச்சாதாபம்.

எதுபாவம்! ஹாஸ்டலில் தங்கிப் படிப்பவர்கள் தங்கள் காரியங்களைத் தாங்களே செய்துக் கொள்வதில்லையே…? அவர்கள் மட்டும் நன்றாய் படிக்காமலா இருக்கிறார்கள்…? குதர்க்கமான கேள்விகள் எழுந்தன.

நண்பனின் போதனையில் நல்ல விஷயங்கள் கூட மோசமாய் தோன்றிற்று. அதிக பாசமே சலிப்பைத் தந்தது. நான் வளர்ந்து விட்டேன். உங்களின் ஒத்தாசையில்லாமலேயே என்னால் வளரமுடியும். பெரியாளாக முடியும் என்கிற வீம்பு வந்தது.

ஒரு ராத்திரியில் கையில் கிடைத்த ஐநூறு ரூபாயுடன், போட்டிருந்த உடையுடனேயே ரவியுடன் சேர்ந்துக் கொண்டு வீட்டை விட்டு ஓடிவந்துவிட்டான்.

அவர்கள் அதுவரையில் சினிமாவில் மட்டுமே பார்த்திருநத ஊட்டியை, நேரில் பார்த்தனர். பெங்கங்ளூர், மைசூர், ஏர்காடு, கோவை எனச் சுற்றினர்.

முதுல் நாள் சந்தோஷமாக் கழிந்தது. கையில் காசு தீர்ந்ததும் மூன்றாம் நாள் வீட்டு நினைவு எடுத்தது. நான்காம் நாள் சாப்பாட்டுப் பிரச்சனை. ரவி அவனை ஹோட்டல் ஒன்றில் சேர்த்து விட்டு விட்டு நழுவிக் கொண்டான்.

ஹோட்டலில் மானம் போயிற்று, தொட்டதிற்கெல்லாம் அடித்தனர். குற்றம் சுமத்தினர். பாழய்ப் போன வயிற்றுக்காக எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ள வேண்டியிருந்தது.

சொகுசு ஹோட்டல்தான். அங்கே வருபவர்களெல்லாம் மாமனிதர்கள்தான். ஆனால் அவர்களுக்கு மனிதனை மனிதனாக நடத்தும் பாங்கு துளியும் தெரியவில்லை.

அவர்களின் உதாசீனம் மானத்தை கிள்ளிற்று. அடித்து நொறுக்கலாமா என்கிற ஆவேசத்தை கிளப்பிற்று. அவர்களின் மேல் ஆவேசப்பட்டு என்ன பிரயோஜனம்?

தவறு நம்மேல், எல்லாவற்றையும் முன்பே யோசித்திருக்க வேண்டும். படிப்பு ஏறாதவர்களும், படிக்க முடீயாதவர்களும், வீட்டை விட்டு ஓடிவருகறார்கள். ஹோட்டலை பிழைப்பிற்று நாடுகிறார்கள்.

நமக்கென்ன தலையெழுத்து! எனக்கு எதில் குறை? படிப்பில்லையா…? வசதியில்லையா…? இல்லை வீட்டினர்தான் அன்பு செலுத்தவில்லையா…?

ரவியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு வந்தது திமிர்! பேதமை!

அம்மா! நான் தப்பு செய்துவிட்டேன்! அப்பா… என்னை மன்னிப்பீர்களா…? அவனக்கு அக்காவின் சோகமும் ஞாபகத்திற்கு வந்தது. அண்ணா… அண்ணா என உருகும் தங்கை!

பையனின் கை நோகுமே எனத் துணிகள் துவைத்து தவந்து, சலவை பண்ணி, நோட்டு புத்கங்களை அடுக்கி தந்து, ஷு பாலிஷ் போட்டு, அவனுக்குப் பிடிக்கும் பிடிக்கும் என பிடித்தவற்றையாய் சமைத்து ஊட்டாத குறையாய் பரிமாறும் தாய்! அவளின் அருமை நமக்கு புரியவில்லையே!

வீட்டில் அன்பில்லை – வசதியில்லையென்றாலாவது பரவாயில்லை. மனதைத் தேற்றிக் கொள்ளலாம். ஆனால் என் வீட்டில் எதில் குறை வைத்தார்கள்? நான் ஏன் இந்த முடீவுக்கு வந்தேன்!

இனி எப்படி திரும்பிப் போவேன்? வீட்டினர்கள் முகத்தில் எப்படி விழிப்பேன்? ஸ்கூலிலும் வெளியேவும் அப்பாவுக்கு எத்தனை அவமானம்! அவற்றையெல்லாம் அவர் எப்படி தாங்கிக் கொள்வார்…?

அப்பாவும் அம்மாவும் என் மேல் கோபமாய் இருப்பார்களா… நான் திருமபிப் போனால் ஏற்றுக் கொள்வார்களா…? பாலன் நினைத்து நினைத்து வருந்த ஆரம்பித்தான்.

அதேசமயம் –

ஊரில் அவனைவிட அதிகமாய் பெற்றோர் உருகிக் கொண்டிருந்தனர். தாயும் சகோதரிகளும் சாப்பிடவில்லை. தந்தை நடைபிணமாயிருந்தார்.

ஸ்கூலில் விசாரித்து, அவனது போக்கிடம் தெரியாமல் சங்கடப்பட்டார். “அவன் பசிதாங்கமாட்டானே! அவனுக்கு உலகம் தெரியாதே. எங்கேப் போய் கஷ்டப்படுகிறானோ” என தாய் கவலைப்பட்து. போனதுதான் போனானே… இன்னும் கொஞ்சம் பணம் எடுத்துப போயிருக்கக்கூடாதா… எனப் புலம்பிற்று.

தாயின் நச்சரிப்புத் தாங்காமல் தந்தை அவனை எப்படியும் தேடிக் கண்டு பிடித்து விடுவதெனப் புறப்பட்டார். அவனை எங்கே என்று தேடுவது! எந்த நகரத்தில் போய் அலைவது? கடலில் கடுகைத் தேட முடியுமா?

பசங்களிடம் விசாரித்தால் அவனது சினிமா ஆசை புரிந்தது. ‘கெட்டும் பட்டணம் சேர்‘ என்பார்கள். அவன் பட்டணத்திற்குத்தபன் போயிருப்பான்!

சினிமா ஆசையில் ஸ்டூடியோக்களில்தான் ரவுண்டடிப்பான் என மூன்று நாட்கள் சுற்றிப் பார்த்தா. எந்த் தகவலும் இல்லை. பொது இடங்கள், ஹோட்டல்கள், லாட்ஜ், பீச், ஸ்டேஷன், ம்கூம் பலனில்லை.

போலீஸில் தெரிவிக்க, ஊரில் F.I.R. போட்டு வாருங்கள் என்றனர். “பாலா. நீ எங்கே இருக்கிறாய்?… எங்கிருந்தாலும் வந்துவிடு” எனப் பேப்பரிலும் டி.வி.யிலும் கொடுக்கலாமா… அவனது படத்தை வெளியிடலாமா…?

“வேண்டாம். அவனைப் பற்றி பேப்பரில் வந்தால் வெளியே அசிங்கமாகும். அவனது மனநிலை பாதிக்கும். அடுத்தவர்களின் முன்னிலையிலும் அவமானமாகும். திரும்ப வந்து பழைய வாழ்வை தொடருவதிற்கும் அவனுக்குச் சங்கடமாகும்.” பெரியவர் ஒருவர் தேற்றினார்.

“கவலைப்படாதீங்கள். நன்றாகப் படிப்பவன். நல்ல அன்பைப் பெற்றுக் கொண்டிருந்தவனுக்கு ஒரு வாரத்திற்கு மேல் வெளியே தாக்கு பிடிக்க முடியாது. கூடிய சீக்கிரமே தவறை உணர்ந்து திரும்பி விடுவான். அவன் திரும்புவது முக்கியமல்ல. அதன்பிறகு அப்படி நடந்ததுக்காக கடித்ந்துக கொள்ளாமல் இருப்பது தான் முக்கியம். பழை ரணம் எப்போதும் மனதில் வடுவாயிருக்கும். அவற்றைச் சாந்தமாய் ஆற்ற வேண்டும் கோபப்படக் கூடாது!”

“இல்லை. அவன் மேல் துளியும் கோபமில்லை. அவன் வந்தால் போதும்!” தாயும் தந்தையும் உருகினர்.

ஒருவாரம் ஓடிப்போயிற்று. அதற்கு மேலும் பாலனுக்குத் தாங்க முடியவில்லை. பேப்பரில் தன்னைப் பற்றி செய்திகனை எதிர்பார்த்து, ஏங்கி கடைசியில் “அன்புள்ள அப்பா-அம்மா என்னை மன்னித்துவிடுங்கள். நான் உங்களுக்கு ஒரு கறை. இப்பவிம் நான்…” என எழுத ஆரம்பித்தான்.

– வானத்ததை தொட்டவன் (மினனூல் வெளியீடு: http://www.freetamilebooks.com)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *